ஐயா... இந்த உடம்பை பிரச்சனையில்லாம வைத்துக்கொள்ள என்ன பாடுபடவேண்டி இருக்கு. வயசான காலத்தில் அக்காடான்னு ரெஸ்டு எடுக்காம, தியானம்,டப்பாங்குத்து டான்ஸ், நீச்சல் குளம்'ன்னு தினம் ஒரு மணி நேரமாவது உடற்பயற்சி செய்து உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்தாலும், ஒரே ஒரு தரம் சென்னை ஆட்டோ வில் போக முடிவு செய்து "ரேட்" கேட்டால் எகுறுது பாருங்க நம்ம பிபி ....ஆஹா... தினமும் செய்த உடற்பயிற்சியின் ரிசல்ட் எல்லாம் "கோவிந்தா கோவிந்தா...வெங்கடரமணா கோவிந்தா" தான்...

நம்மளுக்கு பிபி எகுறுகிற விஷயம் தெரிந்ததால், சரி ஆட்டோ பக்கமே போகக்கூடாதுன்னு 99%, ஆட்டோவை அழைக்காமல் பார்த்துக்கொண்டாலும், ஏதோ அவசரத்திற்கு வேறு வழியே இல்லை என்று அழைத்தால், பிரச்சனை ஆரம்பம் என்றே அர்த்தம். 

ஒருநாள் அப்படித்தான் 2 மணி நேரம் பஸ்'ஸிற்காக காத்திருந்து, வராமல், சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலை பிடிக்க முடியாமல் போகும் என்ற நிலை வந்த போது, வேளச்சேரி ஸ்டேஷன் சென்று, ரயிலில் சென்றுவிடலாம் என ஆட்டோவை அழைத்தேன்.

"ரயில்வே ஸ்டேஷன் போகனும்"

"..ம்ம் உட்காரும்மா..."

"எவ்வளோங்க?"

"50 ரூ குடும்மா"

"என்னாது 50ரூபாயாஆஆஆ?" (புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ன்னு ஏறுது பிபி)

(மனசாட்சி : கவி..டோர் க்ளோஸ்!! கூல்ல்.. ஒரு 50 ரூபாய்க்கு ஆத்திரப்பட்டு, கோபப்பட்டு, பிபி அதிகமாகி, மண்டைய போட்டுடாத. .உன்னைய நம்பி ஒரு புள்ள, ஒரு வூட்டுக்காரு இருக்காரு அதை எல்லாம் யோசிச்சி.. பொறுமையா நிதானமா நியாத்தை கேளு...)

"சரி நமக்கு இல்லாத பொறுமையை நிதானத்தை வரவைத்து.. "என்னங்க இது.. 50ரூ ன்னு சொல்றீங்க? இங்க இருந்து 30ரூ தான் அதுவும் நீங்க ஷார்ட் ரூட் ல தான் போவீங்கன்னு தெரியும்.. கொஞ்சம் நியாயம் தர்மமா கேளுங்க..."

"உட்காரும்மா... போயிட்டு சும்மாதானம்மா வரனும்.. அதான் 50ரூ. .சரி.. வேணும்னா 40 ரூ கொடு.. அவ்வளவு தான் குறைக்க முடியும்.."

ஏறி உள்ளே அமர்ந்து.. "ஆனா உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லைங்க.. எப்படிங்க.. இப்படி எல்லாம் உங்களால ரேட் கேக்க முடியுது..? "

ஆட்டோ டிரைவர் வேகமாக கீழே இறங்குகிறார். "இந்தாம்மா இறங்கு நீ முதல்ல... என்ன காலங்காத்தல வந்து உக்காந்து மனசாட்சி அது இது ன்னு பேசற. .உன் சவாரியே எனக்கு வேணாம். .முதல்ல இறங்கு நீனு.."

ஆஹா இருக்கிற ஒரே ஆட்டோவையும் விட்டுட்டா என்ன செய்ய... ?! "ஏங்க இறங்கனும்.. அதான் 40ரூ தரேன் னு சொல்லித்தானே உக்காந்தேன்... 40 ரூ கொடுக்கறதுக்கு இது க்கூட பேசாட்டி எப்படிங்க..? நீங்க மட்டும் ரேட் டை உங்க இஷ்டத்துக்கு ஏத்துவீங்க...நாங்க எதுவுமே சொல்லக்கூடாதாங்க..?."

"யம்மா தாயே நீ 50 ரூ கொடுத்தாலும் உனக்கு ஆட்டோ வராது. .இறங்கு.."

"நான் இறங்க மாட்டேன்,....நீங்க கேக்கறதுக்கு எல்லாம் தலையாட்டிட்டு போகனும்னு எழுதி இருக்கா என்னா..? நானும் பேசினேன் நீங்களும் பேசினீங்க சரியா போச்சி ...சீக்கிரம் போங்க. .எனக்கு ட்ரையின்க்கு டைம் ஆச்சி..:

"காலங்காத்தல.. மாட்டுது பாரு நமக்குன்னு"

"ஹல்லோ நான் என்ன காலண்டரா மாட்டி வைக்க..?"

"ஆத்தா விட்ரு..நான் உன்கிட்ட பேசல, நீ என்கிட்ட பேசவேணாம்"

அத்தோடு இது முடிந்தது என்றாலும், எப்போது நான் ஆட்டோ பிடிக்க சென்றாலும் பிரச்சனைதான், சண்டை போடாமல் வருவதே இல்லை. எனக்கு தெரிந்தவரை, கேரளா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான்,  மகராஷ்டிரா மாநிலங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் கண்ணியமாக நடந்துக்கொள்கிறார்கள், எத்தனை மீட்டர் காட்டுகிறதோ அதை தான் கேட்பார்கள். மீதம் இருந்தால் கொடுத்துவிடுவார்கள். மும்பையில் மீட்டர் கூட இல்லை, வெறும் 5 ரூ கொடுத்தால் போதும், 4 கிமி வரை சென்று விடலாம். இங்கு ஒரு கிமி சென்றாலே 30ரூ, அதிலிருந்து ஒரு 5 அடி தள்ளி போங்கன்னு சொன்னால் 35 ரூ ன்னு சொல்லி, நம்மை எரிச்சல் செய்வார்கள்.

ஒரு முறை குஜராத்தில் மீட்டருக்கு போக மிச்சம் 40 காசு இருந்தது... அந்த ஆட்டோ ஓட்டுனர் அதை எனக்கு கொடுக்க பாக்கெட்டில் தேட, நான் பரவாயில்லை விடுங்க என்று சொல்ல. .அவர்.. "ருக், பெஹன்ஜி, ஹம்கா தேஸ் மதராஸ் நையி ஹே.....சுட்டி லோ... " வென்று கையில் காசை கடுப்பாக திணித்துவிட்டு சென்றார்.

இதே கதை கேரளாவிலும் நடந்திருக்கிறது. அங்கே 25 பைசா.. (2004 ல்), இல்லையென்றால் பரவாயில்லை என்று சொல்ல,"உங்க காசு எங்களுக்கு எதுக்கு.. இது சென்னையில்லை.. அடுத்தவன் வயத்தில அடிச்சி பொழைக்க" ன்னு சொல்லிவிட்டு சென்றார்.

மற்ற மாநிலங்களில் கண்ணியமாக நேர்மையாக ஆட்டோ ஓட்டுனர்கள் இருக்கும் போது, இங்கு மட்டும் இவர்கள் இப்படி அராஜகம் செய்து பிழைப்பதன் காரணம் என்ன? வேற என்ன "நாம் தான் காரணம்."

அங்கெல்லாம் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாமலோ, அதிக பணம் வசூலித்தோ ஆட்டோ ஓட்டவிட முடியாது. பொதுமக்களே முதலில் விட மாட்டார்கள். அரசாங்கம் வந்து தலையிட்டு பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்ற நிலை இல்லை. சுயநலமாக அந்த நேரத்தில் நம் வேலை நடந்தால் போதும் என்று யாரும் நினைப்பதில்லை. பணம் இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் ஆட்டோ ஓட்டனர்களிடம் ஒரே மாதிரியாக நடந்துக்கொள்ளுகிறார்கள். இங்கே ஆட்டோ க்காரர் என்ன கேட்டாலும், ஏறி உட்கார்ந்துவிடும், அதிகம் சம்பாதிக்கும், மேல் தட்டு மக்களால் மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். கழுத்தில் ஐடி கார்ட் ஐ மாட்டியிருப்பதை பார்த்தே ஆட்டோஓட்டுனர்கள், அதிகமாக கேட்பது வழக்கமாகிவிட்டது. ஒரு முறை பணம் பார்த்து பழகியவர்கள் மற்ற சாமானியர்களிடமும் அப்படி எதிர்ப்பார்ப்பது சரியில்லை. இவர்களும் அலுவலக வேலை தொடங்கும் முன்/ முடிந்த பிறகும், ஏன் இந்த ஐடி கார்டை மாட்டிக்கொண்டு திரிகிறார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

நிற்க, இதற்கான ஒரு ஒழுங்கு முறையை செய்ய பொதுமக்களாகிய நாமே கடைப்பட்டு இருக்கிறோம்.

1. அந்தந்த குடியிருப்பு பகுதிகளில் ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை, அந்த பகுதி மக்கள் சந்தித்து, நியாயமான ஒரு கட்டணத்தை வாங்கும்படி, பேசி முடிவு செய்து, அதை அமல்படுத்தலாம்.

3. வெகு தொலைவு செல்லவேண்டி வரும் போது மீட்டர் போட்டே ஆகவேண்டும் என்பதை வலியுறத்தவேண்டும். இல்லையென்றால் ஆட்டோவில் ஏறுவதை புறக்கணிக்க வேண்டும்.

4. கேஸ் ஆட்டோ புதிதாக வந்துள்ளது. இதற்கு அன்றாட செலவு குறைவாக உள்ளதால், கட்டணம் குறைவாக வசூலிக்க முடியும். எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் இதற்கான வசதி இருப்பதாக தெரியவில்லை. எல்லா பெட்ரோல் நிலையங்களும் இந்த வசதியை கொண்டு வருவதின் மூலம், பெட்ரோல் ஆட்டோக்கள் கேஸ்' ஆட்டோக்களாக மாற வாய்ப்பிருக்கிறது.

5. ஷேர் ஆட்டோ முறையை எல்லா இடங்களில் அனுமதிக்க ஆட்டோக்காரர்கள் ஒத்துழைக்க்க வேண்டும். எங்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு முறை வீட்டிலிருந்து பஸ் நிறுத்தம் செல்ல 30-35 ரூ வசூலிக்கப்படுகிறது. இதுவே ஷேர் ஆட்டோவாக இருந்தால், குறைந்தது 5 ரூ- 10 ரூ க்குள் வேலை முடியும். 4-5 பேரை ஒரு சவாரிக்கு ஏற்றினால், ஆட்டோக்காரரும் நஷ்டம் என்று சொல்ல முடியாது. மேலும் குறைந்த கட்டணம் என்று தெரிந்தால், அதிகமானோர் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.

6. டீசல் ஆட்டோவிலும் கட்டணம் குறைவாக வாங்கமுடியும், ஆனால் அதிக அளவில் டீசல் ஆட்டோக்கள் இல்லை. என்ஜின் சீக்கிரம் பழுதாகிவிடுகிறது, அதனால் டீசல் ஆட்டோ நஷ்டம் என்ற காரணம் சொல்லப்பட்டது.  இதை ப்பற்றி அதிகம் எனக்கு தெரியவில்லை. தெரிந்துக்கொள்ள இன்னும் முயற்சிக்கவில்லை. டீசல் ஆட்டோக்கள் அதிகமாக சத்தம் வேறு போடும்.

மேற்கண்ட தகவல்களை எங்கள் குடியிருப்பு பகுதி சங்கத்தலைவரிடம் அவருக்கு பழக்கப்பட்டவர் மூலம் சொல்லியும் இருக்கிறேன். காத்திருந்து தான் என்ன பலன் கிடைக்கிறது என்பதை பார்க்கவேண்டும்.

பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்களில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருக்கும் ஒற்றுமை பொது மக்களாகிய நமக்கும் இருக்கவேண்டும். ஏன் இவ்வளவு கட்டணம் என்று ஆட்டோ ஓட்டனர்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, நம்மை ஒதிக்கிவிட்டு, அதைவிட அதிகம் கொடுத்து அதே ஆட்டோவில் ஏறி அமர்ந்து நம்மை பணம் இல்லாத " பரதேசி " யை பார்ப்பது போன்று ஏளனப்பார்வை ஒன்றை நம்மீது வீசிவிட்டு செல்பவர்கள் இருக்கும் வரை என்னத்தான் செய்வது.. ?! :(

அணில் குட்டி அனிதா : நீங்க ஒரு ஆட்டோ வாங்கி, மெயின்டெயின் செய்து பாருங்க, அப்புறம் இப்படி ஒரு போஸ்ட் போடுவீங்களான்னு பாக்கலாம்... அம்மணி.....ஆட்டோ இல்லன்னா.. பஸ், பஸ் இல்லன்னா ட்ரையின், ட்ரையின் இல்லனா ஏரோப்ளேன்.. அதுவும் இல்லன்னா நடராஜா சர்வீஸ்.. ... நீங்க கடைசிவரை நடராஜா சர்வீஸ் தான்... உங்கள மாதிரி ஆளுங்களுக்கு அது தான் சரி.... :)))) லெஸ் டென்சன் மோர் நடை.. ஓக்கே.. !!

பீட்டர் தாத்ஸ் : “The best advertisement for us is people telling people. If organizers have a successful event and they tell their friends, co-workers, neighbors, etc. about this, then we are able to increase the use of the facility.”

*நன்றி : முத்துலட்சுமி ஹிந்தி வார்த்தைகள் சரிப்பார்த்துக்கொடுத்தார். :)

படம் : நன்றி கூகுல்.
.