பெண்ணியம், ஆணாதிக்கம் என்ற இந்த இரண்டையும் யாராவது மிக சரியாக விளக்க முடியுமா?

பெண் - என்பவள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை தான் பெண்ணியம் என்கிறார்களோ பெண்ணியம் பேசுபவர்கள். அதில் சில உதாரணங்கள்

1. பெண் தான் சமைக்க வேண்டுமா?
2. பெண் தான் உணவு பரிமாற வேண்டுமா?
4. பெண் தான் வீட்டு வேலைகள் எல்லாம் செய்ய வேண்டுமா?
5. பெண் என்ன குழந்தைகள் மட்டும் பெற்று தரும் இயந்திரமா?
6. பெண் தான் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டுமா?
7. பெண் திருமணம் ஆனால் ஆண் சொல்கிற படி தான் கேட்க வேண்டுமா?
8. ஆணுக்கு நிகராக/அதிகமாகவே நாங்களும் சம்பாதிக்கவில்லையா? ஏன் இந்த பாகுபாடு?
9. உடைகள் இப்படித்தான் இருக்க வேண்டுமா?
10. உணவு முறைகள், உடலழகு இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சொல்ல நாங்கள் என்ன அடிமை பதுமைகளா?

இப்படி நீண்டு கொண்டே போகும் பட்டியலில் அடுத்து...தொடர்வது..

அய்யோஓஓஓ........
ஆம்பளை உட்காந்துட்டான்
ஆம்பளை எழுந்துக்கறான்
ஆம்பளை தூங்கறான்
ஆம்பளை படுத்துக்கறான்
ஆம்பளை சாப்பிட்டு தொலைக்கிறான், குடிக்கிறான், தம்மடிக்கிறான்
ஆம்பளைக்கு கற்புன்னா என்னான்னே தெரியல
ஆம்பளை மேல சட்டையில்லாமல் சுத்தறான்
ஆம்பளை டவுசர் இல்லாம கூட வெளியில போறான்..

சரி.. சரி.. ஏன் இப்படி மூச்சுவிடாமல் குறைச்சொல்லிக்கிட்டு?! மேற்கண்டவற்றை பெண்ணும் செய்துவிட்டால், பிரச்சனை முடிவு பெறுமே. இதுல காமெடி என்னவென்றால், ஆம்பளையிடம் இத்தனை குறையை மட்டும் காணுபவர்கள், அவன் இதை எல்லாம் செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தால், நல்ல பலன் கிடைக்கும் என்பதை மறந்து போகிறார்கள். அதில் முழுமையாக அவர்கள் மறந்து போவது

"பெண்ணியம் என்பது ஆண்களை எதிர்ப்பது அல்ல".

பெண் தனக்கானவற்றை தன் காலில் நின்று செய்துக்கொள்வதும், தன்னால் தனியாக எதையும் சாதிக்க முடியும், தன் சுதந்திரம் என்பது ஒரு ஆணால் தரப்படவதோ, பெறப்படுவதோ இல்லை, தான் எப்படி இருக்க வேண்டும் என்பதும் ஒரு ஆண் நிர்ணயிப்பது இல்லை, ஆணுடன் தன்னை சமமாக நினைத்துக்கொள்வதும் இல்லை என்பதுவுமே.


மாமியார், மருமகள், நாத்தனார் பிரச்சனைகள் - இதில் ஆண்கள் எங்கிருந்து வருகிறார்கள்.? ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணுக்கு எதிரி. மாமியார் பிரச்சனையிலும் கூட பல ஆண்களை பார்த்திருக்கிறேன், மனைவியின் பக்கமும் பேச முடியாமல், அம்மாவின் பக்கமும் பேசமுடியாமல் நடுவில் தலையில் துண்டு போட்டு அமர்ந்து இருப்பார்கள்.,

அடுத்து எத்தனை வீட்டில் பெண்கள் கணவரின் தாயாரையும், தமக்கையையும் தன் வீட்டு பெண்களை போல் பார்க்கிறார்கள்? நடத்துக்கிறார்கள்? இவை எல்லாம் தொங்கும் விடை தெரியா கேள்விகள்.

பெண்ணிற்கு தேவையானவற்றை அறிந்து செய்பவன், அல்லது செய்ய விடுபவன் ஆணாக இருக்கிறான். இவற்றில் எது நடக்காவிட்டாலும் பெண் அடிமைத்தனம் என்று நாம் பேச ஆரம்பித்துவிடுவோமோ?

பெண் என்பவள் எப்படி ஆணால் ஆதிக்கம் செய்ய படுகிறாளோ அதே போன்று, ஆணும் பெண்ணால் ஆதிக்கம் செய்ய படுகிறான் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இதை திருமணம் முடித்த அத்தனை ஆண்களும் (அந்த அனுபவம் இல்லாத மிக சிலரை தவிர்த்து) ஒற்றுக்கொள்வார்கள். ஆண் என்பவன் தனக்கு பெண்ணால் ஏற்படும் பிரச்சனைகளை வெளியில் சொல்லுவதில்லை, வெளியில் சொல்லாமல் இருக்க அவன் தரப்பில் இருந்து பல காரணங்கள், அதில் முதலில் வருவது

1.சமூகத்தின் பார்வையில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாவான்.
2.ஆண் பெண்ணிடம் அடங்கி போகிறான் / அவள் சொல்படி நடக்கிறான் என்பதை நம் சமூகம் மிக எளிதாக எடுத்துக்கொள்ளாது.
3. ஆண்கள் பொதுவாக சொந்த பிரச்சனைகளை வெளியில் கொட்டிவிடுவது இல்லை. குறிப்பாக மனைவியை பற்றி பேச விரும்புவதில்லை. முடிந்த அளவு தானே சமாளிக்கிறார்கள்.

பெண்ணை எந்த அளவிலும், அதாவது வலிமையுடனோ, வளைந்து கொடுத்தோ சமாளிக்கும் திறமை அவர்களுக்கு எந்த காலத்திலும் இருக்கிறது. எத்தனை வலியவனும், வீட்டில் உள்ள பெண்ணிடம் வளைந்து கொடுத்து போவதால் மட்டுமே வாழ்க்கை சக்கரம் ஒரளவு பிரச்சனை இன்றி நகர்கிறது. கொடுக்காத பட்சத்தில் தான் அது மணமுறிவில் வந்து முடிகிறது. இதில் பெண்ணிற்கு இடமே இல்லை எனலாம். ஏனென்றால் விவாகரத்து வருகின்ற பட்சத்தில் ஆண் என்பவன் வளைந்து கொடுக்கவில்லை என்றே வைத்துக்கொள்ளலாம். அதில் ஆண் நல்லவன் கெட்டவன் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு பெண் நினைத்தால் நல்லவனை கெட்டவன் ஆக்கலாம், கெட்டவனை நல்லவனாக ஆக்க முடியும். அது தான் பெண்ணிற்குண்டான தனித்தன்மை, இதை இழந்தவர்கள் காலம் பூராவும் ஆணை நோக்கி கைக்காட்டி "காரணம் அவனே" என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம். அவர்கள் வாழ்நாள் முழுதும் கையை மடக்க வாய்ப்பே இல்லாமல் போகும்.

இவற்றை தாண்டி, ஒரு சில உண்மையான காரணங்கள் - குழந்தைகள் இல்லாமல் இருப்பது, தாம்பத்யத்தில் பிரச்சனை, வரதட்சணை. ஆனால் 100 க்கு 80 பேர் ஆண் /பெண் என்ற ஈகோ வில் பிரச்சனைகளை சந்திப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆணையும் தனியாக விசாரித்து பார்த்தால் தான், அவர்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களை, மனதளவில், ஏன் உடலளவிலும் பெருகிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளமுடியும். எனக்கு தெரிந்து, இரண்டு பிரச்சனைகளையும் எனக்கு நெருங்கியவர்களிடம் நேரிடியாக பார்த்து இருக்கிறேன்.

விடிய விடிய கணவனை தூங்கவிடாமல், அல்லது தூங்குபவனை எழுப்பி சண்டைபோடும் பெண்களை நேரடியாக பார்த்து இருக்கிறேன். ஒரு நாளே இப்படி என்றால், ஆண்டு முழுதும் எப்படி இவளை இவன் சகித்துக்கொள்கிறான் என்ற கேள்விகள் எனக்கு எழாமல் இல்லை, அதுவும் வீட்டில் மூன்றாவது ஒரு ஆள் இருக்கும் போதே இப்படி. தனியாக இருந்தால் ?! அவனை கண்டு பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை.

ஒரே மகனாக இருந்தாலும், மனைவியின் சொல்லிற்கு கட்டுபட்டு, பெற்றோரை கவனிக்க முடியாமல், அதை பெண்களை போன்று புலம்பித்தள்ள முடியாமல் தவிக்கும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள். ஏன் மனைவிக்கு தெரியாமல் பெற்றோருக்கு பணம், குணம் இரண்டையும் செலவு செய்யும் பரிதாப நிலையில் கூட இருக்கிறார்கள்.

பெண்ணின் பிரச்சனைகள் ஏதோ ஒரு விதத்தில் வெளியில் வந்துவிடும், ஆனால் ஆணின் பிரச்சனைகள் வெளியில் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அதை சமூகம் அக்கறையோடு பார்ப்பதில்லை. "என்னை போல் ஒருவன்" திரைப்படத்தில், மனைவி அடித்துவிட்டாள் என்று புகார் கொடுக்க வரும் ஒரு ஆணை, அந்த போலிஸ் அதிகாரியே கிண்டல் செய்து புகாரை ஏற்றுக்கொள்ளாமல் வெளியில் அனுப்புவது தான் இன்றைய யதார்த்தம்.

ஆக, பெண் ணின் பிரச்சனைகள் பார்க்கப்படும் அளவிற்கு ஆண்கள் பிரச்சனைகள் பார்க்கப்படுவதில்லை. இது இன்று நேற்று இல்லை நாளையும் அப்படியே. நம் குடும்ப அமைப்பு ஒன்று தான், நாம் நம் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க உதவுவதாக நம்புகிறேன். நாளை நல்லதொரு மனிதனை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு பெண்ணிற்கும் உள்ளது. தந்தை சொல்வதை விடவும், ஒரு தாய் சொல்வதை தான் குழந்தை நம்புகிறது, செய்கிறது. அதனால் குழந்தை வளர்ப்பு முதற்கொண்டு எல்லாவிதத்திலும் பெண்ணிற்கான பொறுப்பு அதிகம். அவளே முதல். அவளே முடிவும்.

ஆணிற்கு பொறுப்பே இல்லை என்று சொல்லிவிட முடியாது. பெண்ணை காட்டிலும் ஆணிற்கு பொறுப்புகள் அதிகம். அதை அவன் வெளிக்காட்டி க்கொள்வதில்லை. இது என் வேலையா நான் தான் செய்ய வேண்டுமா என்று கேட்பதில்லை, நான் தான் செய்ய வேண்டும் என்று செய்கிறான். உதாரணம், வேலைக்கு செல்வது. மிஷின் தனமாக ஆயுட்காலத்தில் 25 வயது முதல் 60 வயது வரை, அதற்கு மேலும் விடாமல் வேலை. நடுவில் பெண்களுக்கு இருப்பதை போன்று மகப்பேறு விடுமுறை, குழந்தை வளர்ப்பு அப்படி இப்படி என்று எதுவும் இல்லை. குடும்பத்திற்கு தேவையான பொருளை ஈட்டவே அவனுக்கு சரியாக இருக்கிறது. ஒரே மாதிரி வேலையை,செக்குமாடு போன்று வாழ்நாள் முழுதும் செய்கிறார்கள். அதை அவர்களால் விட்டுவிடவும் முடியாது. ஏதோ ஒரு காரணத்திற்காக அப்படி விட்டுவிடக்கூடிய சூழல் வந்தால் அந்த ஆணை இந்த சமுதாயம் ஒரு மனிதனாக கூட மதிப்பதில்லை :) என்பது யதார்த்தம்.

பெண்ணின் புலம்பல்கள் பெண்ணியமாகிறது, ஆணின் அமைதி ஆணாதிக்கமாகிறது என்று தான் என் புரிதலாக இருக்கிறது. ஆண் விட்டுக்கொடுக்கும் வீட்டில் பெண் ஆடுகிறாள், பெண் விட்டுக்கொடுக்கும் வீட்டில் ஆண் ஆடுகிறான் என்றும் வைத்துக்கொள்ளலாம் :).

ஒரு சின்ன எடுத்துக்காட்டு. நேற்றைக்கு நீச்சல் குளத்தில் தண்ணீரில் மூச்சு திணறி உள்ளே சென்ற பெண்ணை, காப்பாற்ற சென்ற பெண்ணையும் அவள் உள்ளே இழுத்து செல்ல, சுற்றி இருந்த பெண்கள் அத்தனை பேரும் என்னையும் சேர்த்து செய்வதறியாது தவிக்க, லைஃப் கார்ட் (ஆண்) எங்கிருந்தோ சத்தம் கேட்டு ஓடி வந்து அதே வேகத்தில் குதித்து இருவரையும் காப்பற்றினார். அது அவருடைய வேலை என்பதை காட்டிலும், இரண்டு பெண்களையும் ஒரு சேர இழுந்து வந்த போட்டது அந்த ஆணின் ஆதிக்கமே... .... அவனின் ஆதிக்கம் அங்கே இல்லையென்றால் இரண்டு உயிர்கள் நேற்று போயிருக்கும். பெண்ணால் சட்டென்று முடியாத பல விஷயங்கள் ஆணால் முடியும். அதே சமயம் பெண்ணால் செய்ய முடியும் பலவை ஆணால் செய்யவே இயலாது. தாய்மையும், மனவலிமையும் அதற்கு எடுத்துக்காட்டுகள்.

மங்குனி அமைச்சர் எழுதியிருக்கும் "பெண்களே கவனம்" என்ற பதிவில் "நான் பெண் என்பதால் என்னை இப்படி உடுத்த சொல்லுவாயா? என் இஷ்டத்திற்கு மார்பு தெரிய நான் உடுத்துவேன், என்னை அப்படி உடுத்தக்கூடாது என்று சொல்லும் நீ மார்பு தெரியாமல் உடுத்துவாயா? என்று கேட்டால் - கண்டிப்பாக நஷ்டம் அவருக்கு இல்லை. :)

ஆதிக்கம் என்று பார்க்க போனால் இரண்டு பக்கத்திலிருந்தும் சின்ன விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை இருந்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆண்களின் ஆதிக்கம் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது. பெண்களின் ஆதிக்கம் அவர்களின் இயல்பு என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதில் பெண்ணியம் பேசியும் ஆணாதிக்கவாதி என பறைசாற்றிக்கொண்டும் அவரவர் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாமல், இருவரும் அவரவர் வேலையை ஆண் பெண் ஈகோ இல்லாமல் செய்து வந்தாலே பிரச்சனை வராது...

அணில் குட்டி அனிதா : கவி.. இப்ப உங்களுக்கு என்ன தான் பிரச்சனை??.... I think something wrong with this woman..yaar.... should ignore this lady .. oveakkkkkkk எப்பப்பாத்தாலும் நைய நைய நையான்னு கிட்டு... உங்களுக்கு எப்படி இருக்கனுமோ இருந்துட்டு போங்களேன்... ஏன் சும்மா.. .எழுதி எழுதி சீன் போட்டுக்கிட்டு இருக்கீங்க? லூசாப்பா நீங்க????

பீட்டர் தாத்ஸ் : “Woman was taken out of man; not out of his head to top him, nor out of his feet to be trampled underfoot; but out of his side to be equal to him, under his arm to be protected, and near his heart to be loved”

.