கங்கை vs கவிதா

"அதிகாலை பனி" மேடம், "அமுதம் கங்கை" என்ற பெயரில் எழுதறாங்க. அவங்க ஜி+ ல் எழுதிய சில கவிதைகளுக்கு அவர்களின் சம்மத்தோடு எழுதிய எதிர்கவிதைகள்.


*******************
மனதின் குதிரையை நிறுத்த
உடலை வருத்திக் கொண்டேன்.
அளவற்ற உடல் தளர்வில்
முன்னிலும் வேகமாய்த் துயர்க் குதிரை.

                           
மனம் அறுத்துவிட்ட குதிரையாய் பறந்தது
வளைந்தும் குதித்தும் அதே வேகத்தில் நான்-
அதுத் தொட்டவைகளின் உத்வேகத்தில்
முன்னிலும் வேகமாய் மகிழ்க் குதிரை


*********************
புண்ணியம் செய்தேன்
சிரசில் இருந்து பாதம் வரை
ஒற்றைத் தொழல்தான்.

                              
பாவம் செய்தேன்
விரல் நுனியில் நின்று எட்டிப்பார்த்தும்
எஞ்சியது "ஜருகண்டி ஜருகண்டி"


******************

அமைதியான குளிர் இரவில் நைட் குயின் மணக்கும் வீதி . 
அமைதியாய் மனம்.

நடுங்கும் குளிர் இரவில் மருதாணி பூக்கள் மயக்கும் வீதி 
அலைப்பாயும் மனம்

********************

பொருந்தாத் துயரம்.

பயணத்தில் வீட்டையும்
வீட்டில் பயணத்திற்கும் .


பிடிப்பின் வெளிப்பாடு

பயணத்தில் வீட்டையும்
வீட்டில் பயணத்திற்கும்..


*********************

ஆவலோடு காத்திருக்கிறேன் ;
அழுகைக்கு முன் கணம் கூட காணோம்.


ஆவலோடு காத்திருக்கிறேன் ;
அழுகைக்கு முன் கணம் கண்டுக்கொண்டேன்.


ஆவலும் ஆசையே
அழுகைக்கும் ஆசைக்கும் தொடர்பினை கண்டேன்


**********************

தினம் தோலுரித்து மேலுயர்த்துகிறது
தொடர்பற்றிருக்கும் பேரன்பு.

தினம் ஆத்மாவை அரவணைக்கிறது
தொடர்பற்றிருந்தாலும் பேரன்பு


***********************

**********************
அமுதூறும் என் உலகு.

சுயத்திற்கும் விருப்பத்திற்கும்
ஆடிக் கொண்டிருந்த
தீர்மானத்தின் தோல்விகள் .
நானே நகர்த்தாமலும்
தானாய் நிகழாமலும்
காத்திருப்பின் தடை.
எப்போது நிகழ்ந்தது நிகழ்ந்ததா .
பிறந்த குழந்தை போல் மெத்தென்றானேன் .



அமுதூறும் என் உலகு

சுயத்திற்கும் விருப்பத்திற்கும்
ஆடிக்கொண்டிருந்த
தீர்மானத்தின் வெற்றிகள்
நானே நகர்த்தியும்
தானாய் நிகழவைத்தும்
காத்திருக்காத வாழ்க்கையின் வேகம்
இப்போது நிகழ்ந்தது நிகழ்த்தியதே
நிகழ்த்திய பெருமையில் திளைத்திருக்கிறேன்


********************

காரணம் கண்டு பிடித்து வெறுக்கலாம்
இருப்பவர்களைப் பற்றியும்
இல்லாது போய்விட்டதற்காகவும் .
அற்புதங்கள் நிகழ்ந்துவிட நீ நான் எல்லோரும் காத்திருக்கும்
வெறுமையின் வாசனை.


காரணம் கண்டு பிடிக்காமல் விரும்பலாம்
இருப்பவர்களைப் பற்றியும்
இல்லாது போய்விட்டதற்காகவும்
அற்புதங்கள் நிகழ்ந்துவிட நீ நான் எல்லோரும் காத்திருக்கும்
நிறைவின் வாசனை


*************************

வஸ்திரக் காப்பு நடக்கிறது
திரை விலகக் காத்திருக்கிறேன்.
என்னுள் சாமி வெற்றுக் கல்.


வெற்றுக்கல் ஆண்டவனாகினும் ஈர்ப்பதில்லை!
திரை விலகக்காத்திருந்து தரிசிப்போம்
வெளியலங்கார கவர்ச்சியோடு...


***********************

வாழ்விளக்கை அணைத்து எரிகிறது
குழி மாடத்து விளக்கு.


வாழ்விளக்கை அனுபவித்து பூரித்து எரிகிறது
சட்டிவானம்


**********************

தனிமை.

இன்னும் ஒன்றுமற்றுப் போவதை கற்றுக் கொள்கிறோம்
நானும் என் துக்கமும்.
நானும் இல்லாது கற்றுக் கொள்வதும் இல்லாதாகும் நாளுக்காய்
என்னை இறுகக் கட்டிக் கொண்டிருக்கிறது துக்கம்.


தனிமை

இன்னும் மனிதத்தையும் உலகத்தையும் கற்றுக் கொள்கிறோம்
நானும் என் உள்ளமும்
நானும் இருக்கும்போது இல்லாததென்று ஏதுமில்லாத நாட்களில்
என்னை நானே இறுகக்கட்டி கொள்வதில் சந்தோஷம் !


***********************

எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு
எதுவும் மீதமிருப்பதில்லை.


எதையும் எளிமையாய் எடுத்துக் கொள்பவர்களுக்கு
சாதிக்க ஏதுமிருப்பதில்லை.


************************

பரிசுப்பொருளாக செருப்பா??

எங்கள் மூவரின் பிறந்தநாள், நவீனின் / எங்களின் தேர்வு முடிவுகள்,  திருமணநாள், இன்னும் எந்த நல்ல நிகழ்வுகளாக இருந்தாலும் அவரின் சட்டைப்பை தான் காலியாகும். என்னுடைய சம்பாதித்தியம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இப்படியான விசயங்களுக்கு ஒரு பைசா இங்கிருந்து நகராது.

அவரின் பிறந்தநாளுக்கு முன் தினம், நானும் நவீனும் ஒன்றாகவே கடைக்கு செல்வோம். அவன் அவருக்காக என்ன வாங்கினாலும் அது என் செலவு.  பரிசுப்பொருட்களோடு, "அம்மா உன் புருஷன் சந்தோஷப்படுவார்னு சொல்லிட்டு"  கேக், சாக்லெட் தவறாமல் வாங்குவான், அதுவும் என் செலவே. அதிகபட்சமாக என் செலவு இத்தோடு முடியும்.

ஆனால் பிறந்தநாளன்று வெளியில் உணவருந்தச் செல்லும் போதெல்லாம், அவரின் மாறாத ஒரே டயலாக் : "உங்களுக்கும் நான் தான் செலவு செய்ய வேண்டியிருக்கு, எனக்கும் நானே செலவு செய்துக்க வேண்டியிருக்கு".

இதற்கு, இந்தப்பக்கம் எங்கக்கிட்டயிருந்து பெருசா எதும் ரியாக்ஷன் வராது. அவர் எவ்ளோ ஃப்லீங்ஸ்ஸோட இந்த டயலாக்கை டெலிவரி செய்தாலும் எங்களின் ஸ்டேம்ப் பேட் ரியாக்ஷன். "நக்கல் சிரிப்புதான்". இதையெல்லாம் முன்னேற்பாடாக பேசி வைத்துக்கொண்டு செய்வதல்ல... அவர் இப்படி பேச ஆரம்பித்தாவே, எனக்கும் நவீனுக்கும் அடிவயிற்றிலிருந்து சிரிப்பு தானாவே பொங்கி பொங்கி பெருக்கெடுக்கும். இந்த கொடுமையைப் பார்த்து அவர் இன்னும் நொந்து நூடல்ஸ் ஆவார்னு தெரிஞ்சாலுமே கூட, தானாவே வருவதை எப்படி கன்ட்ரோல் செய்யமுடியும் சொல்லுங்க?.

இதைக்கூட  தொலையட்டும்னு விடுவார், ஆனா அவர் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும், நவீனும் நானும் வீட்டில் என்ன இல்லையோ அல்லது வீட்டிற்கு தேவைப்படும் பொருளை பரிசுப்பொருளாக அவருக்கு கொடுத்து, அப்படியே வாங்கி, வீட்டிற்கு பயன்படுத்துவோம். (என்னா வில்லத்தனம்?)  கடைக்கு செல்லும் போது, நவீன் அவருக்கு என்ன வாங்கலாம்னு தேடிக்கிட்டு இருக்கும் போது, வீட்டில் இல்லாத பொருளை எதையாது சொல்லி, அவனுக்கு ஐடியா கொடுப்பேன். அவனும் எதுக்கு என்னன்னு விசாரிச்சிட்டு, சரி."எப்படியும் உன் புருஷனுக்கு வேற என்ன வாங்கிக்கொடுத்தாலும் ஆயிரத்து எட்டு கேள்வி கேட்டு கொடச்சல் கொடுப்பாரு, அதனால..இப்படி எதையாச்சும் வாங்கிக்கொடுத்தா..வாயத்தொறக்காம பேசாம இருப்பார்னு" முடிவெடுத்து வாங்கிடுவான்.

ஒரு சமயம் "அஷ்ட விநாயகர் படம்" பூஜை அறைக்கு வேண்டுமென்று வாங்க நினைத்ததை அவரின் பிறந்தநாள் பரிசாக கொடுக்க, "ஞே" என்ற முழுத்தவாறே வாங்கி எதும் சொல்லாமல் என்னிடமே திருப்பிக்கொடுத்துவிட்டார்.

அப்புறம் ஒரு முறை ஒரு மாதிரி கன்னாப்பின்னான்னு கிஃப்ட் பாக்கெட் இருப்பதைப்பார்த்து ரொம்பவே ஆர்வத்தோடு பிரித்தார். பிரித்தவர் கையில் கிடைத்தது என்னவோ டார்ச் லைட். என்னைப்பார்த்து "இது எதுக்குடி எனக்கு?" ...ஹிஹி..அது உங்களுக்கு இல்லப்பா... வீட்டில் பெரிய டார்ச் லைட் இல்ல..அதான் வாங்கினோம். " வேற என்ன பதிலை எதிர்பார்க்கறீங்க..எப்பவும் போல  "ஞே" தான்..

வீட்டில் உள்ள பலப் பொருட்களை, ஃபாஸ்ட் ஃபார்வேர்டில் ஒரு சுற்றுச் சுற்றிவந்தால், அநேகமாக ஞாபகமறதியில் விட்டுப்போன அனைத்துப்பொருட்களும் அவரின் பிறந்தநாளுக்கு வாங்கியதாகவே இருக்கும்.

இதில் மாத மளிகைப் பட்டியலில் வரும் சில பொருட்கள் கூட அவரின் பிறந்தநாள் பரிசாக மாறியிருக்கும். அதில் ரூம் ஃப்ரஷ்னர், அவருக்கு டியூடரன்ட், அலுமினிய ஹேங்கர்ஸ் போன்றவைகளும் அடங்கும். (ஏய்ய்.ஏய்...யாரது துப்பறது..? )

இப்படியாக வந்த ஒருநாள் தான் காதலர் தினம்!  காலையிலேயே கேட்டேன். .  "...ப்பா ரொம்ப நாளா செருப்பு????? வாங்கனும்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே... காதலர் தினத்துக்கு உங்களுக்கு செருப்பு வாங்கித்தரட்டாப்பா? "  (சீனை சரியா கிரகிக்கனும்.. அப்பாவியாக முகத்தை வச்சிக்கிட்டு, கண்ணைச்  சிமிட்டி சிமிட்டி.... கேட்டேன், போங்க ...போயி திரும்ப ஒருதரம் நான் சொன்னமாதிரி சீனை ப்படிச்சிட்டு வாங்க)

ஒன்னும் பதில் இல்ல...அப்படியே என்னையே சலனமின்றி பாத்துக்கிட்டே இருந்தாரு....அந்தப்பார்வையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் புதைந்துக்கிடந்தன. "நான் என்னடி பாவம் பண்ணேன்? உன்னை கல்யாணம் செய்துக்கிட்டு இவ்ளோ நாளா உன்னோட குடும்பம் நடத்தறேனே அது தப்பா? ல ஆரம்பிச்சி ..................................... .............. ......... ......... ........... எல்லாம் என் தலையெழுத்துன்னு" முடிக்கிறவரை ஒரு 2 மணிநேர புலம்பல் அவர் பார்வையில் நீண்டது.

நீங்களே சொல்லுங்க ? ஒரு சமயம் இல்லன்னாலும் ஒரு சமயம் யாரா இருந்தாலுமே பார்க்கப் பாவமாத்தானே இருக்கும். எனக்கும் அப்படிதான், அவரைப்பார்த்தாவே ரொம்ப பாவமா இருந்தது. :( அதே மனைநிலையோடு, "இவருக்கு நம்மோட காதலை எப்படியும் வெளிப்படுத்தியே ஆகனும்னு" ஆவேசத்தோட கடைக்குப்போனேன். 

ஆனா, கடைக்குள் நுழைஞ்சவுடனே ரொம்ப அவமானமா போச்சி. ....இப்படி ஒரு அவமானம் எனக்கு ஏற்படும்னு நான் கனவில் கூட நினைச்சிப் பார்க்கல. அவ்ளோ பெரிய கடையில், காதலர்தினத்திற்கு கார்ட் வாங்கும் இடத்தில் ஒரு பெண் கூட இல்லை, ஒரே ஆண்கள் கூட்டம்!  அவங்க நடுவில் நுழைந்து, கார்ட்டுகளை எடுக்கும் போது, அத்தனை ஆண்களும் என்னயே ஒரு மாதிரியாக பார்த்ததே என் அவமானத்திற்கு காரணமாப்போச்சி. "..ச்சே... காதலர் தினத்திற்கு அவரு தான் கார்டு கொடுக்கனுமோ..நாம வாங்கக்கூடாதோனு அநியாயத்திற்கு சந்தேகமும் வந்துப்போச்சி." இருந்தாலும் அவமானத்தை எல்லாம் சகச்சிக்கிட்டு, நிதானமாக கார்டுகளை படித்து, ஒன்றைத்தேர்ந்தெடுத்து கவுண்டரில் வந்து நிற்கிறேன்.

நான் வாசித்து வைத்தவிட்டு வந்த கார்டை இன்னொருத்தர் எடுத்துவந்து என் எதிரில் என்னைப்பார்த்தவாரே பில் போட கொடுத்தார். சட்டேன்று பார்வையை வேறு இடத்திற்கு திருப்பிக்கொண்டு கவனிக்கிறேன், பில் போட வந்த அத்தனை ஆண்களும் திரும்ப திரும்ப என்னையே கவனித்துக்கொண்டிருந்தனர்.  "ஏன்யா...உங்களுக்கெல்லாம், புருஷனுக்கு ஒரு லவ் கார்டு வாங்கிக்கொடுக்கறது அவ்ளோப்பெரிய அதிசயநிகழ்வா? எதுக்குய்யா இப்படிப்பார்க்கறீங்க" ன்னு கேக்க நினைச்சேன் ஆனாக்கேட்கல..

இதனால் தாங்கள் சொல்ல வரும் நியதி ??

இருங்க ..நானே ரொம்ப அவமானப்பட்டதில் என்னா செய்யறதுன்னு தெரியாம இருக்கேன்...  ...இப்பதான் யோசிக்கிறேன்

ஆங்...நியதி என்னென்னா? பெண்கள் காதலர் தினத்திற்கு கார்ட் வாங்க போவது நல்ல யோசனையில்லை. ஆர்வகோளாரில் அப்படியேதும் நடந்தால், இப்படியான அவமானத்தைக் கண்டிப்பாக சந்திக்க நேரிடும், தவிர,  நிச்சயம் உங்களை கவனிக்கும் அத்தனை ஆண்களது வீட்டிலும், அவர் மனைவியோடு/ காதலியோடு நடத்தும் சண்டைக்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள்.

அடுத்த நியதி எனக்கு:-  எப்பவும் போல வீட்டுப்பொருட்களையே பரிசாகக்கொடுத்து, இப்படியான அவமானங்களிலிருந்து தப்பிக்கனும்.. கடைசியா, ஆரம்பிச்ச இடத்திற்கே வந்துட்டேனா?   :)

அணில்குட்டி : கிர்ர்ர்.... இதெல்லாம் ஒரு பொழுப்பு.......?! இவங்க கார்ட் கொடுத்தாங்க..அவரு என்ன வாங்கிக்கொடுத்தாருன்னு சொன்னாங்களா பாத்தீங்களா? அம்மணி உஷாரோ உஷாரு......!!!

பீட்டர் தாத்ஸ் : The greatest gift that you can give to others is the gift of unconditional love and acceptance.

ஃபீனிக்ஸ் மால் வேளச்சேரிக்கு பெருமையா? பிரச்சனையா?


திருமணத்திற்கு பின், சென்னைக்கு வீடு தேடி வந்த போது, என் கணவர் காண்பித்த இடங்கள் ஐ.ஐ.டி' சுற்றியுள்ள கோட்டூர்புரம், கோட்டூர், தரமணி, மத்தியகைலாஷ்'க்கும் ஐஐடிக்கும் இடைப்பட்ட இடம்,  கடைசியாக வேளச்சேரி. ஈ-காக்கைக்கூட இல்லாமல், மிக அமைதியாக, ஏரித்தண்ணீர் அங்கங்கே தேங்கியிருக்க, வேளச்சேரி என் கண்களுக்கு மிகவும் குளர்ச்சியாகவும் அமைதியாகவும் தெரிந்ததால், இங்கு வந்துவிடலாமென வந்(தேன்)தோம்.

அமைதி ஏரி'யாக இருந்த வேளச்சேரி, 2002 லிருந்து தொடர்ந்து அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை கண்டுவருகிறது. அதில் ஒரு பக்கம் பெருமையும், மறுப்பக்கம் எல்லாவித செளகரியங்களும் கிடைக்கப்பெற்ற ஒரு இடத்தில் இருப்பதின் சந்தோஷமும் எனக்கு எப்போதும் உண்டு. குறிப்பாக பறக்கும் ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எந்த தாமதமுமின்றி 40 நிமிடங்களுக்குள் சென்றுவிட முடிகிறது. சைதாப்பேட்டை, கிண்டி, அடையார், திருவான்மயூர், மீனம்பாக்கம், தாம்பரம் என வேளச்சேரியிலிருந்து மிக விரைவாக சென்றடையக்கூடிய சென்னையின் முக்கிய இடங்கள் உள்ளன. சமீப காலங்களில் போத்தீஸ், தங்கமாளிகை தவிர, வேளச்சேரியில் அனைத்து முக்கிய, பிரபலமான கடைகள், உணவுவிடுதிகள் வந்துவிட்டன.

இங்கு, இரண்டு மில்லியன் சதுர அடி இடத்தில் மிக பெரிய வணிக வளாகம் வரப்போவது தெரிந்ததிலிருந்து எனக்கு பெருமையை விட, போக்குவரத்தை நினைத்து அதிக பயமே இருந்தது. காரணம், பல வருடங்களாகவே அலுவலக நேரங்களில் குருநானக் கல்லூரியிலிருந்து, செக்போஸ்ட் வரையில் போக்குவரத்து நெரிசலில் மண்டை காய்ந்து போயிருக்கிறேன். அந்த சாலை மிகவும் குறுகிய சாலை என்பது இன்னுமொரு மைனஸ். இரண்டு சக்கர வாகனம் கூட எப்படி வேண்டுமானலும் வளைந்து நெளிந்து புகுந்து சென்றுவிட முடியாது. அப்படியொரு சாலையில் இந்த வணிக வளாகம் வருவது எனக்கு அத்தனை எதிர்பார்ப்பை தரவில்லை. அது கட்ட ஆரம்பித்த நாளிலிருந்தே இதே புலம்பல் தான். 

சில ஆண்டுகளுக்கு முன், கனடாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வேலைப்பார்த்தேன், அவர்கள் விமானங்களுக்குள் குளிரூட்ட பயன்படுத்தப்படும் மென்பொருளைத் தயாரிக்கும் வேலை செய்து வந்தனர். கனடாவிலிருந்து வரும் நிறுவனத்தின் முதல்வர் "A380 Aircraft " பற்றி விளக்கமளித்தார். இது பயணிகளுக்கான மிகப்பெரிய விமானம். 400 லிருந்து 800 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய வசதிக்கொண்டது. இதை இந்தியா தனக்காக வாங்க வெளிநாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருந்தது. எத்தனை விமானங்கள் என்ற தகவல் எனக்கு அறியவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தம் குறித்தே அந்த முதல்வர் அன்று எங்களிடம் பேசினார். அதாவது எந்த வித முன்யோசனையும் திட்டமுமின்றி, இந்தியா இப்படியான ஒப்பந்தங்களை செய்கிறது. இத்தனை பெரிய விமானங்களை வாங்கி நிறுத்தவும், பயன்படுத்தவும் (Runway) போதிய வசதி வாய்ந்த விமான நிலையங்கள் இந்தியாவில் இல்லை. அதில் பயணம் செய்யும் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு சென்று/வர ஓய்வெடுக்க தேவையான வசதிகளும் இங்கில்லை. ஆனால், எந்த அடிப்படைத் திட்டங்களின்றி, இந்தியா முதலில் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துவிட்டது என்று முடித்தார்.

இன்று ஃபீனிக்ஸ் மால் சென்றபோது, இதையே தான் உணர்ந்தேன். மும்பையை சேர்ந்த Phoenix Mills என்ற நிறுவனமே இந்த வணிக வளாகத்தை இங்கே கட்டியிருக்கிறது. உள்ளே நுழையும் போதே தலையை குனிந்தபடி வண்டியோட்டி செல்லவேண்டியிருந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தின் மேல் கூரை அந்தளவு கீழிறங்கி இருந்தது. மேற்கூரை என்னவோ உயரத்தில் தான் இருக்கிறது. அதற்கு கீழே ஏகப்பட்ட தண்ணீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் செல்லக்கூடிய குழாய்கள் என மேற்கூரை நிறைக்கப்பட்டு கீழே இறங்கி வந்துவிட்டது. கண்டிப்பாக இதில் தலையிடித்து மண்டை உடையக்கூடிய அபாயம் அதிகமாகவே உள்ளது. அது யாருக்கு எப்போது நடக்குமென்பதே இப்போதைய கேள்வி.

இத்தனைப்பெரிய வளாகத்தை கட்டியவர்கள், எப்படி இவற்றை திட்டமிடாமல் செய்தனர் என்பது எனக்கு புரியவில்லை. சாதாரணமாக உயரம் 5.10- 6 அடி இருக்கும் ஒரு மனிதர் தலை நிமிர்ந்து நிச்சயம் நடக்க இயலாது. வண்டியில் நிமிர்ந்து உட்கார்ந்தும் வண்டி ஓட்டமுடியாது. இதில் நடந்து செல்லும் போதும் "Mind your head" என்ற பலகையை கண்டு உட்சபட்ச கடுப்பிற்கு ஆளானேன். ஏனென்றால் அது குழாய்கள் இணைப்புகள் ஏதுமில்லாத வெறும் கட்டிடத்தின் மேற்கூரையே. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஒர் இடத்தில் இப்படி ஒரு மோசமான ஆபாயகரமான கட்டிட அமைப்பு, இதற்கு அரசு எப்படி அனுமதி அளித்தது எனத்தெரியவில்லை.

அடுத்து போக்குவரத்திற்கு வருவோம். 40% முடிக்கப்பட்டிருக்கும் வணிகவளாகம் திறக்கப்பட்டு, எந்தவித போக்குவரத்து வசதியும் செய்யப்படாமல், அதே குறுகலான பாதையில் எல்லா வண்டிகளும் செல்ல அனுமதிப்பட்டு இருக்கின்றன. இது மொத்த வேளச்சேரியின் மிக முக்கிய சாலைகளில் ஒன்று. இவ்விடத்தை கடந்தால் மட்டுமே வேளச்சேரியை விட்டு வெளியேற முடியும் அல்லது உள்ளேயும் வரமுடியும். இச்சாலையில் காலையிலிருந்து நல்லிரவு வரை போக்குவரத்து நெரிசல் இப்போதே தாங்கமுடியவில்லை. இத்தனைப்பெரிய வளாகத்தை கட்டுபவர்கள் போக்குவரத்திற்கு என்னமாதிரியான திட்டமிட்டனர் என்பதும் புரியாத புதிரே. எதிர்காலத்தில், விஜயநகரில் கூட போக்குவரத்து வசதிக்காக மேம்பாலம் அமைக்க போதுமான இடவசதிகள் உள்ளன. இங்கு அதுவும் முடியாதக்காரியம்.

இப்பொழுதே இந்த நிலையென்றால், இன்னமும் சத்யம் சினிமாவின் திரையரங்குகள் திறக்கப்பட்டால்..?!! 
பல வருடங்களாக வசித்துவந்த, பழகிவிட்ட ஓரிடம்  தீடீரென மாசுப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். இந்த வளாகத்தினால் ஏற்படும் போக்குவரத்தில் வேளச்சேரி ஸ்தம்பிக்க போவதென்னவோ உறுதி.  

எது எப்படியோ, வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் ஒரு மிகப்பெரிய மால்..... வெயில் கொளுத்தும் நாட்களில், சில்லென்று நேரத்தைக் கழிக்க இங்கே சென்றுவிடத் திட்டமிட்டிருக்கேன்.

மிக சாதாரண கட்டிட அமைப்பு என்பதாலோ என்னவோ, மும்பை மால்'களை போன்று ஃபீனிக்ஸ் என்னை கவரவில்லை.

அணில் குட்டி : போனமா...வந்தமான்னு இல்லாம என்னா நோண்டு வேல..?! அய்யோ பாவம் ...வேற யாரு ?!!  அம்மணியின் வூட்டுக்கார் தான்.. :(((((. 

பீட்டர் தாத்ஸ் : Study lends a kind of enchantment to all our surroundings

திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,

விஸ்வரூபம் பார்த்துவிட்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேன் என்று நினைத்தேன். ஆனால், விஸ்வரூபம் வெளியீட்டில் நடந்த சம்பவங்களால், முன்னதாகவே எழுதுகிறேன். 

சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் பெரிதுபடுத்தி சொல்லும் வசனம் "சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் போடுகிறேன்". பொதுவாக எந்த தொழில் செய்பவரும் அப்படிதானே செய்கிறார்கள். இதில் சினிமாத்துறையில் இருப்பவர்கள் மட்டும் இதை பிரத்யேகமாக அழுத்தி சொல்லி பெரிதுபடுத்த காரணமென்ன?

விஸ்வரூபம்'  பிரச்சனைகளின் கடந்த நாட்களில் உங்களால் முன்னிருத்தப்பட்ட ஒரு விசயம், "என் மொத்த சொத்தையும் முடக்கியுள்ளேன், அது என் கையை விட்டு போய்விடும்" என்பதே. 'விஸ்வரூபம்' தமிழ்நாட்டை தவிர, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் & இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் எந்த பிரச்சனையுமின்றி வெளியிடப்பட்டு, நல்ல வசூலோடு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. அங்கு வரும் லாபத்தைக்கொண்டு, ஒரு திறமையான வியாபாரியான உங்களால் தமிழகத்தில் உள்ள இக்காட்டான சூழ்நிலையை தற்காலிகமாக சமாளிக்கமுடியும் அல்லது தள்ளிவைக்க முடியும். நீங்கள் மனிதனுக்கு "எதுவும் சாத்தியம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாதவர் இல்லை

95 கோடிகள் செலவில், இப்படி ஒரு கதைக் கருவைக்கொண்டு (நடுவில் நீங்கள் மருதநாயகம் படம் எடுக்க முயற்சி செய்ததும், முதலீடு உட்பட பலப்பிரச்சனைகள் கருதி முடக்கியதும் அறிவோம்) இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்தமாக ஒரு சினிமாவை இயக்கி, வெளியிட காரணம் என்ன? "சினிமாவினுள், வெகு ஆண்டுகளாக உங்களின் உள்ளார்ந்த தேடலின் முடிவு அல்லது மிச்சம்" என்று சொல்லலாமா? இந்த தேடலும் மிச்சமும் யார் சம்பந்தப்பட்டது.?! கமல்ஹாசன் என்ற தனிமனிதன் சம்பந்தப்பட்டது. இதில் கிடைக்கும் லாபம், நஷ்டம், அனுபவம், கல்வி, தொழிநுட்பம், வெற்றி, தோல்வி, பெருமை, பதக்கங்கள் எல்லாமே அந்த தனிமனிதனையும், அந்த மனிதனின் தேடலின் நிறைவை பூர்த்தி செய்வதுமாகவே தானே இருக்கும்?

இப்படியிருக்க, இதில் எங்கிருந்து சமுதாயமும், நாடும், மொழியும், மக்களும் வருவர்?. எங்கிருந்தாலும் சரி நீங்கள் "விழுந்தால் விதையாக விழுவேன் மரமாக வளர்வேன் அதில் பல சுதந்திர பறவைகள் வந்து அமரும் மரமாக நானிருப்பேன்" என்றீர். ஆனால் இத்தனை வருடங்களாக உங்களின் படங்களுக்கு காசுக்கொடுத்து பார்த்து ரசித்த, உங்களின் திறமையை கைத்தட்டி இன்று வரை ஊக்குவித்த, நீங்கள் இந்தளவு வளர்ந்து ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை தயாரிக்கும் அளவு பணத்தளவில் உங்களை உயர்த்திய உங்களின் "பேக்கு" ரசிகர்களுக்கு உங்களின் கைமாறு தான் என்ன?. நாட்டை விட்டு ஓடிவிடுவதா?

பிரச்சனை வருகிறது, உடனே நான் நாட்டைவிட்டு போவேன், இங்கிருக்க எனக்கு வழியில்லை என்று சொல்லும் நீங்கள், என் உடலையும் உயிரையும் இப்பூமிக்கே அற்பணித்திருக்கிறேன் என்ற மாறுபட்ட இரண்டு கருத்தக்களை ஒரே நேரத்தில் சொல்லியிருக்கிறீர். செய்வதறியாத குழப்பமான, மன அழுத்தமான நேரத்தில் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு கோவப்பட்டு பேசியவை என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை, அச்சூழ்நிலையிலும் பல விசயங்களை மிக அழுத்தம் திருத்தமாக நிதானம் தவறாமல் பேசியிருக்கின்றீர். குறிப்பாக உங்களின் இஸ்லாமிய சகோதரர்கள் பாதிக்கப்படாதவாறு பேசியிருக்கிறீர். இதே இடத்தில் திரு.ரஜினியோ வேறு யாரோ இருந்தால், எப்படி பேசியிருப்பார் என்று அனைவரும் அறிந்ததே.

ஆனால், உங்களின் பேச்சும், மிகச்சிரமப்பட்டு வரவழைத்த அந்நேரத்து நிதானமும், உங்களின் முதிர்ச்சியையும், வாழ்க்கையில், சினிமாவில், சமுதாயத்தில் உங்களின் அனுபவத்தை நிச்சயம் வெளிக்காட்டியது.

இப்படியிருக்க, உங்களின் சுயதொழிலான சினிமாவினால், அதில் ஏற்படும் பிரச்சனைகளினால், உங்களின் ரசிகர்களும், அவர்களை சார்ந்தவர்களும் இத்தனை மன அழுத்தத்திற்கும், வருத்தத்திற்கும் ஆளாக்கும் படியாக உங்களின் பேச்சு அமைந்தது மிகுந்த வருத்தத்தையும் கலக்கத்தையும் எனக்கும் ஏற்படுத்தியது என்பதை இங்கு சொல்லிக்கொள்கிறேன்.

வேறு எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் இதுப்போன்ற பிரச்சனைகள் வரும், சிலர் பிச்சைக்காரர்களாக கூட ஆகியிருக்கின்றனர். உங்கள் சினிமாத்துறையை சார்ந்த சிலரும் மிக மோசமான நிலைமைக்கு சென்றிருக்கின்றனர், அவர்கள் சினிமாத்துறையினாராலேயே கைவிடப்பட்டும் இருக்கின்றனர். அதில் நீங்களே சொல்லி வருத்தப்பட்ட ஒரு மாபெரும் நடிகை, நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா. நீங்கள் வாழும் இக்காலத்திலேயே எத்தனையோ தயாரிப்பாளர்கள் இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கின்றனர். இப்படியாக பாதிக்கப்பட்ட யாருமே பிழைப்பைத்தேடியோ, அசிங்கப்பட்டோ, அவமானப்பட்டோ தப்பித்து நாட்டைவிட்டு ஓடுகிறேன் என்று சொல்லிவிட்டு ஓடிவிடவில்லையே ?

"விழுந்தால் இம்மண்ணில் விதையாக விழுவேன் மரமாக வளர்வேன்" என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் இன்னமும் பெருமைப்பட்டிருப்போம். ஏனென்றால் உங்களின் ஒவ்வொரு காசும், தமிழ் மக்களின் காசு. உங்களின் ஒவ்வொரு வளர்ச்சியும் உங்களின் உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்ததாக இருந்தாலும் அதை ஊக்கப்படுத்தியது தமிழ்மக்கள். நீங்கள் கற்றவை பெற்றவை எல்லாமும் இந்த மண் கொடுத்ததே.  நீங்கள் வீழும் போது பார்க்க பொறுக்காத இம்மக்கள் உங்களுக்கு பணம் அனுப்ப ஆரம்பித்துவிட்டனர்  இது தான் நாங்கள்....அந்த நாங்களில் நீங்களும் இருந்தீர்கள் என்றால், இனி ....வேறு இடம் தேடுவேன் என்று சொல்லமாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு இக்கடிதத்தை முடிக்கிறேன்.

இவள் -
உங்களின் படங்களை ரசித்துப்பார்க்கும் ஒரு ரசிகை

இதற்கு முன்னர்  உங்களின் திரைப்படம் பார்த்து எழுதிய இரண்டு கடிதம், லெட்டர் இல்ல கடுதாசின்னு கூட சொல்லலாம்.

http://kavithavinpaarvaiyil.blogspot.in/2009/09/blog-post_22.html
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2008/09/blog-post_28.html

அணில் குட்டி : ஸ்ஸப்பாஆஆஆ.....

பீட்டர் தாத்ஸ் : There are some things he can do that others can but there are many things Kamal can do that no other actor can - Maniratnam