ஏதோ நினைவுகள்... இது நான் இல்லை !! :(

(துபாய்) ராஜா வின் இந்த கவிதையை படித்தவுடன் என்னவோ எதிர்கவிதை எழுதவேண்டும் என்று தோன்றியது.

மண்டப்பத்தில் யாரும் எழுதி கொடுக்காட்டியும், எப்போதும் எழுதும் கவிதை போல் இது இல்லாததால்,

"இது நானே தான் எழுதினேன் ஆனால் இது நான் இல்லை " ன்னு சத்தம் போட்டு கத்தனும் போல இருக்கு... :((((

(துபாய்) ராஜா..... இனிமே இப்படி எல்லாம் கவிதை எழுதுவதை நிறுத்திடுவார் என்ற நம்பிக்கையில்........ ....



அடர்மழை நாளொன்றில்
குளிரோடும்
சிறுது சிலிர்போடும்
ஒரு பயணம்

மழை நீர் துளிகள்
போல் துள்ளும்
என் உள்ளத்தில் உன்முகம்
கண்டு மகிழ்கிறேன்

இருட்டும் மழைமேகம்
போல இடையறாது
உன்னையே துறத்தும்
என் நினைவுகள்

கார்மேகம் கலைந்தாலும்
நான் கண்ட
கனவுகள் கலையாது....

அடாது பெய்யும்
மழைபோல் விடாது
தொடரும் உன்
நினைவுகள்....

மழைநீர் வடிந்தாலும்
உன் நினைவுகள்
வடியாது...

வெள்ளநீர்
விலகினாலும்
உன்னை விலகாது
என் நினைவுகள்...

அணில் குட்டி அனிதா : .........அய்யய்யோஒ.ஓஓ.. என்னால முடியலயேஏஏஏஏஏஏஏஏ!! ... கவி..ய யாராச்ச்சும் மிரட்டி .. அதட்டி... ஏதாச்சும் செய்து எழுதவிடாம செய்ங்களேன்... ... :(((((

பீட்டர் தாத்ஸ் :- None but blockheads copy each other.

கொஞ்சம் புலம்பல், கொஞ்சம் அழுவாச்சி கொஞ்சம் டெஸ்ட் !!

இதற்கு முன் உள்ள பதிவுகள் எல்லாவற்றிக்கும் சேர்த்து.. இதில் பின்னூட்டம் போடுவீங்களாம்.. என்னவோ அடிக்கடி என்னோட ப்ளாக் பிரச்சனை கொடுக்குது, இல்ல.. பிரச்சனைய சரி செய்யும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லன்னு சொல்லிக்கலாம்.. சரி நமக்கு தான் இல்லையே வேற யாரிடமும் கேட்டு சரி செய்யலாம் ன்னா நேரம் இல்லைன்னு சொல்லி நான் ரொம்ப பிஸி ன்னு சொல்லி எஸ் ஆக விரும்பல.. இருக்கிற நேரத்தை சரிவர திட்டமிட்டு பயன்படுத்திக்க மாட்டேங்கறேன்.. கிடைக்கிற நேரத்தில் தூங்கறேன்....

இன்னும் என்னையும் என் நேரத்தையும் சரிவர திட்டமிட வேண்டும். அதுவரை மக்கா கொஞ்சம் பொறுத்துக்கோங்க...

எனக்கு நானே திட்டமிடல் பற்றி ஒரு பதிவு போடனும்னு நினைக்கிறேன்...

இது பின்னூட்டம் வருதான்னு பார்க்க டெஸ்ட் போஸ்ட்டூஊஊஊஊ !! :(

எங்க வீட்டு சமையல் : மீன்/கோழி/நண்டு/முட்டை குழம்பு

ஒவ்வொரு ஊருக்கு ஒரு சமையல் அல்லது ருசி தனிபெயர் பெற்றதாக இருக்கும். காரைக்குடி ஆச்சி சமையல், குழிஅப்பம், அசைவ உணவுகள் ரொம்பவே பிரசித்தி பெற்றவை. முல்ஸ்ஊர் பிரியாணி (அட அதாங்க ஆம்பூர் பிரியாணி), கன்யாகுமரி, நாகர்கோயில் பக்கம் சாம்பாரில் கூட தேங்காய் அரைத்துவிடுவார்கள், சேலம் பக்கம் சாம்பார், குழம்பு எதுவாக இருந்தாலும் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிது சேர்பார்கள்.

இப்படி எந்த வகையிலும் தனிப்பட்ட முறையில் பிரசத்தி பெறாத ஊர் விழுப்புரம். சுற்றபுரங்களில் நிறைய கிராமங்கள் இருப்பதால், காய்கரி, கீரை வகைகள், தயிர் போன்றவை நன்றாக கிடைக்கும். அதனால் எங்கள் வீட்டு சமையலில் என்ன தனிப்பட்ட முறையில் ஸ்பெஷல் என்று சொல்ல தெரியவில்லை, இதுவரையில் சாப்பிட்ட அசல் ஊர் நண்பர்கள் சமையல் ருசி நன்றாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய ஆயா தான் சமையல் எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்கள். அம்மா வீட்டில் சுத்த சைவம் (கவி -சைவம் அசைவம் இரண்டுக்கும் பிறந்த கிராஸ்), அப்படி சுத்தமான சைவ அம்மாவை அசைவமாக்கிய பெருமை ஆயாவை சேரும் என்பதை விடவும் அவர்களின் சமையல் ருசி, யாரையுமே எதையும் விட்டுவைக்காமல் சாப்பிட செய்துவிடும். :). ஆயா சொல்லிக்கொடுத்த சமையலிலிருந்து சில அசைவ உணவுகள் செய்முறையை எழுதிவைக்க நினைக்கிறேன்.

மீன் குழம்பு :

தேவையான பொருட்கள் :

மீன் - 1/2 கிலோ (குழம்பு மீன்)
புளி - 1 1/2 எலுமிச்சை பழம் அளவு (மீடியம் சைஸ் எலுமிச்சை)
தக்காளி - 2 (மீடியம் சைஸ், நாட்டு தக்காளி )
வெங்காயம் - சின்ன வெங்காயம் ஒரு பெரிய கைப்பிடி (அ) பெரியவெங்காயம் பெரியது ஒன்று
பூண்டு - 10
மிளகு - 10 (எண்ணெய்யில் லேசாக வருத்து அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும், பச்சையாகவும் அரைத்துக்கொள்ளலாம்)
மஞ்சல் பொடி - சிறிது
மிளகாய் பொடி - 4 டேபிள் ஸ்பூன் (இது தனியா +மிளகாய் சேர்ந்த தூள்) தேவைக்கேற்ப நீங்கள் காரத்தை குறைத்தும் கூட்டியும் கொள்ளலாம்
எண்ணெய் - தாளிக்க
உப்பு
வடகம் - 3/4 ஸ்பூன் (இது கடுகு, சீரகம்,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், இடிந்த சின்ன வெங்காயம் & பூண்டு + விளக்கெண்ணெய் சேர்த்து வருடத்திற்கு தாளிக்க தயார் செய்து வைத்துக்கொள்ளுவோம், இதற்கு தனியாக ஒரு செய்முறை உள்ளது, இது இல்லாதவர்கள் வெறும் கடுகு, சீரகம், வெந்தயம், உளந்து சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்)

செய்முறை : வெங்காயம் , பூண்டை தனித்தனியாக நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி வடகம் போடவும், இது இல்லாதவர்கள் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் (வெந்தயம் மட்டும் கொஞ்சம் அதிகமாக) போட்டு தாளிக்கவும். சிவக்கும் போது, நசுக்கிய பூண்டை போட்டு வதக்கவும். பூண்டு வாசனை வர சிவந்தவுடன், நசுக்கிய வெங்காயத்தை போடவும். நன்றாக வதங்கி லேசாக சிவக்கும் போது, பொடியாக நறுக்கிய தக்காளி, கருவேப்பிலை இலை சேர்த்து நன்கு வதங்கியவுடன், கரைத்து வடிக்கட்டிய புளித்தண்ணீரை விட்டு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், மிளகு விழுது, உப்பு சேர்த்து மூடிவிடவும்.

குழம்பை இப்படி கூட்டி அடுப்பில் வைத்துவிட்டு, மீனை சுத்தம் செய்ய செல்லலாம். மீனை கழுவி சுத்தம் செய்வதற்குள் குழம்பு கொதித்துவிடும். குழம்பு மிளகாய் தூள் வெடுப்பு (வாசம்) போகும் வரை நன்றாக கொதிக்க வேண்டும். நன்கு கொதித்தவுடன், கழுவிய மீன்களை போட்டு, 3-4 நிமிடங்களுக்குள் இறக்கிவிடவேண்டும். மீன் சட்டென்று வெந்துவிடும், அதிக நேரம் வைத்தால் மீன் குழைந்துவிடும். இறக்கியவுடன் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி போட்டுவிடவும்.

மீன் குழம்பு ரெடி. :). மீன் குழம்பை சட்டியில் செய்தால் தனி ருசி.
***************************
நண்டு குழம்பு :

நண்டு சளிக்கு ரொம்பவே நல்லது. மார் சளி விடாது இருந்தால், ஆயா நண்டு குழம்பு வைத்துக்கொடுப்பார்கள். அதுவும் வயல் நண்டு. இது கருப்பு & சாம்பல் சேர்ந்த நிறத்தில் குட்டி குட்டியாக இருக்கும். இதை வயலில் வேலை செய்யும் பெண்களிடம் சொல்லி வாங்குவார்கள். உயிருடன் பிடித்து வந்து தருவார்கள், உயிருடன் இருப்பதால் சள சள வென அந்த பையில் சத்தம் கேட்கும் :). நண்டை சுத்தம் செய்து, அம்மியில் வைத்து ஒரு நசுக்கு நசுக்கி சமைக்க தயார் செய்து க்கொள்வார்கள். கடல் நண்டை நசுக்க மாட்டார்கள். இரண்டுக்கும் இது தான் சமைக்கும் போது உள்ள வித்தியாசம்.

தேவையான பொருட்கள்.:-

நண்டு - 4 (கடல் நண்டாக இருந்தால், வயல் நண்டு 7-10)
வெங்காயம் - சின்ன வெங்காயம் கை அளவு
பூண்டு - 10
தேங்காய் - அரை மூடியில் பாதி
தக்காளி- 2 (நாட்டு)
மிளகு - 20
வடகம் - 3/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - சிறிது
உப்பு

செய்முறை : வெங்காயம், பூண்டு தனித்தனியாக நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மிளகை வறுத்து விழுதாக்கிக்கொள்ள வேண்டும். வாணல் வைத்து, வடகம் வாசனை வர தாளித்து, முதலில் பூண்டு, பின் வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கி தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி, மிளகாய் தூள், மிளகு விழுது, உப்பு சேர்த்து நன்கு மிளகாய் வெடுப்பு (வாசனை) போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும் கொதித்தவுடன் சுத்தம் செய்த நண்டை போட்டு கொதிக்கவிடவும். நண்டு வெந்தவுடன், தேங்காயை அரைத்து ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, அதில் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி போட்டுவிடவும்.

நண்டு குழம்பு ரெடி. !
********************************
கோழி குழம்பு

தேவையான பொருட்கள் :

கோழி - 1/2 கிலோ
பூண்டு - 8
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
வெங்காயம் - பெரியது ஒன்று அல்லது சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி
தக்காளி - 2 (நாட்டு)
பச்சை மிளகாய் - 1 (அ) 2
மிளகாய் பொடி - 3 ஸ்பூன்
மிளகு - 6 (தேவைப்பட்டால், யாருக்காவது வீட்டில் சளி பிடித்திருந்தால் மட்டுமே இதை நான் சேர்ப்பது வழக்கம்)
மஞ்சள் பொடி - சிறிது
உருளை கிழங்கு - 3 (மீடியம் சைஸ்)
சோம்பு - 1 ஸ்பூன்
லவங்கம் - 3
பட்டை - சிறிது
பட்டை இலை - சிறிது
எண்ணெய்,
உப்பு

செய்முறை : இஞ்சி, பூண்டு, சோம்பு, லவங்கம் 2, மிளகு சேர்த்து நன்கு வெண்ணெய் போல் அரைத்துக்கொள்ளவும். வெங்காயம் நசுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். வாணல் வைத்து, லவங்கம் 1, பட்டை, பட்டை இலை போட்டு சிவந்தவுடன் அரைத்த இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன், நசுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, பின் தக்காளி, நீட்டில் நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கி, உருளைக்கிழங்கை தோல் நீக்கி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி , மஞ்சள் பொடி சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு வதக்கவும்.

இது வதங்கும் சமயம் கோழியை சுத்தம் செய்து விடலாம். சுத்தம் செய்த கோழியை இதனுடன் சேர்த்து வதக்கவும். கோழி வதங்கியவுடன் குக்கரில் கொட்டி, லேசாக தண்ணீர் தெளித்து, மிளகாய் தூள், உப்பு சேர்த்து மூடிவிடவும். இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி, அதிலுள்ள 4-5 துண்டுகள் உருளைக்கிழங்கை மட்டும் கரண்டியால் மசித்துவிடவும். இப்படி செய்வதால் குழம்பு கெட்டியாக இருக்கும். தேங்காய் அரைத்து விட வேண்டியது இல்லை.

கொத்திமல்லி தழை தூவி இறக்கிவிடவும். கோழி குழம்பு ரெடி.
************************************
முட்டை குழம்பு :

இதற்கு மீன் குழம்புக்கு சொன்ன அத்தனை பொருட்களும் தேவை. மிளகு கிடையாது, தேங்காய் அரை மூடியில் பாதி தேவை, முட்டை - 4.

மிளகை தவிர்த்து மீன் குழம்பிற்கு சொன்னதை போன்று செய்து குழம்பு நன்கு கொதித்தவுடன், தேங்காய் அரைத்து ஊற்றிவிடவும். ஒரு கொதி வந்தவுடன், முட்டையை உடைத்து (வாணலில் வேறு வேறு இடத்தில்) ஊற்றி 2-3 நிமிடங்கள் கொதித்தவுடன் கரண்டியால் கிண்டாமல் இறக்கிவிடவும்.

கொத்தமல்லி தழை தூவிவிடவும்.

முட்டை குழம்பு ரெடி!
*******************************
அணில் குட்டி அனிதா:
என்ன அம்மணி தீடீர்னு சமையல் பக்கம் இறங்கிட்ட்டாங்க...?!!... அவங்க ஆயா நல்லாத்தான் சமைப்பாங்க. .இவிங்க சமையலை பத்தி.. இவிங்க புள்ளக்கிட்டயும் இவிங்க ஹப்பி கிட்டயும் கேட்டாத்தான் தெரியும்... !!

பீட்டர் தாத்ஸ் :-
Cooking is like love. It should be entered into with abandon or not at all.





அப்பன் என்றும் அம்மை என்றும்..

Get this widget | Track details | eSnips Social DNA

ஓ…………ஓ…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு,

அது புத்தன் என்றும் சித்தன் என்றும்

பித்தன் என்றும் ஆவெதென்ன

சக்கையாக போகும் கரும்பு

ஞானபெண்ணே சக்கையாக போகும் கரும்பு

பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்

எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பன்….என்றும்…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு

குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா

சுத்தம் என்று யாருமில்லை பாவமூட்டை தானடா

சிவனை கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா

புத்திக்கெட்ட மூடர்கென்றும் ஞான பார்வை ஏதடா

ஆதி முதல் அந்தம் உன் சொந்தம் என் பந்தம் நீ உள்ளவரை தான்

வந்து வந்து கூடும் கூத்தாடும் விட்டோடும் ஒர் சந்தைகடை தான்

இதில் நீ என்ன நான் என்ன வந்தாலும் சென்றாலும் என்னாச்சி விட்டுதள்ளு

அப்பன்….என்றும்…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்

ஆடி தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும்

ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா

ஆட நானும் மாட்டேன் என்று ஓடி போன தாரடா

தட்டி கெட்டு ஓடும் தள்ளாடும் என்னாளும் உன் உள்ள குரங்கு

கட்டுபட கூடும் எப்போதும் நீ போடு மெய் ஞானவிலங்கு

மனம் வாடாமல் வாடாமல் மெய்ஞானம் உண்டாக

அஞ்ஞானம் அற்று விழும்..

அப்பன்….என்றும்…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு

அது புத்தன் என்றும் சித்தன் என்றும்

பித்தன் என்றும் ஆவெதென்ன

சக்கையாக போகும் கரும்பு

ஞானபெண்ணே சக்கையாக போகும் கரும்பு

பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்

எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பன்….என்றும்…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு


எழுத வந்தாலும் வந்தேன்.....

பதிவெழுத வந்த கதையை எழுத சொல்லி.. தம்பி கோபிநாத் அழைத்து இருக்கிறார். பெரிய கதை ஒன்றும் இல்லை. எப்போதும் எல்லாவற்றிலும் வேகம் போலவே இதுவும் நடந்தது.

எனக்கு ப்ளாக் என்ற ஒன்று இருப்பது தெரிந்ததே என்னுடைய ஆன்(ண்)லைன் நண்பரால், அவர் அப்போது (2006) அமெரிக்காவில் இருந்தார், இப்போது இங்கத்தான் இருக்கிறார். (ரொம்ப முக்கியம் மா? ன்னு கேப்பாரு.. அதை எல்லாம் நாம கண்டுக்கக்கூடாது, சொல்லனும்னு நினைக்கறதை சொல்லிடனும் :) ) என்னைப்பற்றி தெரியாமல், தெரியாத்தனமாக அவருடைய ப்ளாக் யூஆர்எல் எனக்கு அனுப்பி வைத்து இருந்தார், இது அவரைப்பற்றி நான் தெரிந்துக்கொள்ள.

அவரை பற்றி தெரிந்துக்கொண்டேனோ இல்லையோ.......கொஞ்ச நாளில் நாமும் ஏன் இப்படி எழுதி தள்ளக்கூடாது என்று முடிவு செய்து நானே ப்ளாக் எல்லாம் கிரியேட் செய்துவிட்டு, அவரிடம் எனக்கு கூட எழுத ஆசை என்றேன். அவரும், "நீங்களும் எழுதுங்க, ஒரு ப்ளாக் கிரியேட் செய்துக்கோங்க" ன்னு சொன்னார், சொல்லி முடிக்கும் முன், "கிரியேட் செய்துட்டேனே.. இன்ட்ரோ க்கு உங்க பேரை போட பர்மிஷன் வேணும் னு" கேட்டேன். நிச்சயமாக நான் ப்ளாக் கிரியேட் செய்திருப்பேன் என்று அவர் எதிர் பார்த்திருக்கவில்லை தான். ஆனாலும், "என் பெயரை போடவேண்டாம்" என்று கண்டிஷன் போடவே.. அவருடைய பெயரை குறிப்பிடாமல் எழுதத்தொடங்கினேன்.

இன்னமும், இந்த பதிவு எழுதும் வரையிலும் எனக்கு பர்மிஷன் கிடைக்கவில்லை :(, அதே கண்டிஷனில் தான் வண்டி ஓடி க்கொண்டு இருக்கிறது. இப்பவும் அவரு யார் ன்னு சொல்ல முடியல, சொன்னால் எனக்கு இருக்கும் ஆபத்தை விடவும் அவருக்கு ஆபத்து அதிகம். அவருக்கு ஆபத்து அதிகமானால் அது அப்படியே இந்த பக்கம் திரும்பும் அபாயம் இருப்பதால்.. போனாபோகிறது என்று அவரை யாருன்னு தெரியாமையே விட்டுடுவோம். இதையும் தாண்டி யாருக்காவது கண்டுபிடுக்கனும் னு நினைத்தால், கண்டுபிடிங்க.. ஆட்டோ அனுப்புங்க.. ஹி ஹி..எனக்கு இல்ல அவருக்கு.. :))

முதன் முதலாக .. எங்கிருந்தோ சொய்ய்ய்யினூ நடுவில் வந்து குதித்தார் நம்ம பாலா (பாரதி), என்னுடைய பளாக் டெம்லேட் சரி செய்தது, அழகாக்கி கொடுத்தது, தமிழ்மணத்தில் என்னை சேர்த்துவிட்டது, தமிழில் திருத்தங்கள் என்று ஏகப்பட்ட உதவி செய்து இருக்கிறார். அப்பவெல்லாம் இதை அவர் முழு நேர வேலையாக வைத்திருந்தார் என்றே நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல, நிறைய புது வரவுகளுக்கு உதவியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். ரொம்பவே நல்லவர்.

சுவாரசியமான விபரம் வேற என்ன இருக்கு பதிவெழுதவந்துன்னு பார்த்தால், ம்ம்ம்ம்.. பிரச்சனைகள் நிறையவே பார்த்துவிட்டேன். பொதுவாக என்னை நேரில் பார்த்து பேசி பழகும் நண்பர்களிடம் சந்தித்திராத புதுவிதமான ஒரு பிரச்சனையை ப்ளாகர் நண்பர்களிடம் சந்தித்தேன்.

அதற்கு காரணம் என் எழுத்தின் தாக்கம், அதனால் மட்டுமே நான் வேறு விதமாக இங்கே பார்க்கப்படுகிறேன் என்பதை சமீபத்தில் மிக தெளிவாக நண்பர் ஒருவரால் புரிந்துக்கொண்டேன். இப்படி எல்லாம் பேசுவார்கள், என்னைப்பற்றிய அப்படி ஒரு எண்ணம் அவர்களிடம் இருக்கிறது என்பதை கூட என் எழுத்து எனக்கு காட்டிக்கொடுத்து இருக்கிறது எனலாம். அது அவர்கள் தவறு அல்ல என் எழுத்தின் தவறு.

நானும் என் எண்ணங்களும் மட்டுமே எழுத்தாகிறோம் என்றால் ஏன் ப்ளாகர் அல்லாத நண்பர்களிடம் எந்த பிரச்சனையும் இதுவரையில் நான் சந்தித்தது இல்லை என்று கேட்டுக்கொள்கிறேன். சண்டைக்கோழி என்ற பெயர் வைத்திருப்பதாகவும் கேள்விபட்டேன் :). வைத்தவர்களுக்கு நன்றி. என் செல்லப்பெயர்கள் லிஸ்ட் டில் (ம்ம்ம்..லிஸ்ட் போடும் அளவிற்கு எனக்கு செல்ல பெயர்கள் உண்டு) இதையும் சேர்த்துவிட்டேன்.

பல நேரங்களில் எழுதவே பிடிக்காத வெறுமையை கூட ஏற்படுத்தி இருக்கிறது, 3 முறை வெளியில் சென்று திரும்ப வந்து இருக்கிறேன். எல்லாம் தனிநபர் (கவிதா என்ற தனிநபர்) சம்பந்தப்பட்டது என்று வைத்துக்கொள்ளலாம். வேறு யாரையும் குற்றம் சொல்வதற்கு முன், என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி ஏன் நீ எழுதவந்தாய்? கேட்டுக்கொண்டு நானே அதற்கு விடையும் சொல்லிக்கொண்டு, திரும்பவும் இது போல் என்னால் முடிந்த அளவு எழுதி தள்ளிக்கொண்டு தான் இருக்கிறேன்.. .என் அறிவுக்கும், மனதுக்கும் முடிவு இது தான் என்று தெரிந்திருந்தும் முடிவுகள் இல்லாது தொடருகிறது....

நிற்க, எல்லாவற்றையும் மறக்கசெய்யும் பல நல்ல விஷயங்களும் நடந்திருக்கிறது. எப்போது உதவி என்று கேட்டாலும் எப்படியும் யாராவது செய்துவிடுவார்கள், முகம் தெரியாதவர்களுக்காக கேட்ட போதும் என்னை நம்பி நம் மக்கள் உதவியிருக்கிறார்கள். அதை எப்போதும் மறப்பதற்கு இல்லை. மறந்துவிட்டால் நான் மனுஷியும் இல்லை.

தவிர்த்து, எனக்காக கேட்ட போதும், (அ) ஏதோ ஒரு விதத்தில் ப்ளாக் சம்பந்தமாக உதவி செய்து கொடுத்த நல்லவர்கள் இருக்கிறார்கள். முதலில் *பாலா(பாரதி), பொன்ஸ், சிவகுமார்ஜி, சிந்தாநதி, சீனு, (நாகை)சிவா, ஜொள்ஸ், கொத்ஸ், கைப்ஸ், தேவ், சந்தோஷ், ஹே ராம், ஜியா,அருள், உஷா, மைஃபிரண்டு, முல்ஸ், காயத்'திரி, ஜம்ஸ், ரவி, லக்கி, துர்கா, சிபி, ரங்கன், கோபி, சென்ஷி, கல்வெட்டு, புருனோ,மங்கை,டுபுக்கு, முத்து,செல்லா, தெகா, ஆயில்யன், வெயிலான், மதுரா(தமிழச்சி), சிங்கு & கடைசியாக ராஜா.* ப்ளாக் விஷயமாக அதிகமாக நான் உயிரை வாங்கியது சீனு தான். :). He is an intellectual, weird & highly stupid guy.

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு


என்று வள்ளுவர் சொன்னதை நினைவில் எப்போதும் நிறுத்தி, யார் எந்த உதவி செய்திருந்தாலும் அதை எளிதில் மறக்காமல் இருக்க என்னை தயார் படுத்தி இருக்கிறேன். இப்பவும் இனியும் அப்படியே இருக்க எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொண்டும், உதவிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லாவற்றிக்கும் அப்பார்ப்பட்டு, என்ன கொடுமையை நான் எழுதினாலும் அதை படிக்க வரும் மக்கள் தான் நிஜமான நல்லவர்கள், பொறுமை சாலிகள் அதிலும் பாராட்டி விட்டு வேறு செல்வார்கள். :) அப்படி செய்யும் போது எல்ல்லாம்.. எவ்வளவு நல்லவங்களா இருக்காங்கப்பா என்று நினைப்பதுண்டு.

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... !!! ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. !! அம்மணி மாதிரி நானும் இன்னைக்கு மூட் அவுட் ல இருக்கேன்.. சோ அப்புறம் வச்சிக்கலாம் கச்சேரிய..... !!

பீட்டர் தாத்ஸ் :“Memories are the treasures that we keep locked deep within the storehouse of our souls, to keep our hearts warm when we are lonely.”

* யாருடைய பெயரையாவது விட்டு இருந்தால், தயவு செய்து தவறாக எடுக்க வேண்டாம் , என்னவோ இந்த பதிவு எழுதும் போது நினைவுகள் ஒன்றும் சரியாக இல்லை, அதனால... மன்னிச்சி விட்டுடுங்க.ப்பா....

பப்பு vs கவிதா


















பப்பு : போதும்..

கவி : என்ன போதும்...

பப்பு : எல்லாமே போதும்..

கவி: என்ன எல்லாமே போதும்..

பப்பு: ப்ப்ப்போதூஊஊஊம் !! (கோவமாக)

கவி: என்ன போதும்.. ஓ சிப்ஸ் சாப்பிடறேனே அது போதுமா?

பப்பு: ஆமா..!! (செம கடுப்பாக)

கவி: அப்ப நான் வீட்டுக்கு போறேன்.. (நானும் செம கடுப்பாக)

பப்பு: (இது வரை பேசியது எதுவுமே குரல் மட்டும் தான் வந்தது என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, விளையாடிக்கொண்டு இருந்தாள், இப்போது வேகமாக என்னை பார்த்து..) ஏன்ன்ன்ன்?

கவி: நீந்தான் எல்லாமே போதும் னு சொன்னியே. .அதான் வீட்டுக்கு போறேன்.

பப்பு : வேணாம் வேணாம். .நீ சாப்பிட்டுக்கோ .... நாம விளையாடலாம்...

கவி: ம்ம்ம்..அப்ப சரி நான் எல்லாத்தையும் சாப்பிட்டுக்கவா?

பப்பு: (கொஞ்சம் யோசனை, பின் இரண்டு கையையும் குவித்து காட்டி) இவ்வளவு ஆச்சிக்கு வச்சிட்டு மிச்சம் எல்லாம் சாப்புடு..

ஆச்சி : ஹி ஹி ஹி ஹி.. (ஒரே சந்தோஷமாம்ம்ம்ம்!! )

************************


பப்பு : நீ வரத்துக்கு முன்ன அந்த புலி உன்னை கடிச்சிருச்சி...

















கவி: டேய், நான் வராதப்ப புலி என்னை எப்படி கடிக்கும்?

பப்பு: ஆமா கடிச்சிச்சீஈஈஈஈஈஈ..!! (I shd agree with her...it seems..)

கவி : ஆமா..நான் இருந்தாலும் இல்லாட்டியும் புலி எப்பவுமே என்னை கடிச்சிக் கொதறிக்கிட்டே இருக்கு.. !! :(((((

பப்பு : :)))))))))))))))))

அணில் குட்டி அனிதா : ம்ம்.. நல்ல வேளை, இரண்டு பேரும் சேர்ந்து கேரட் காயகொழம்பு வச்சாங்க அத சொல்லலியே.. ஆயா கேட்டுட்டு, இவிங்க இரண்டு பேரையும் டிவி க்கு சமையல் செய்யற ப்ரோக்ராம் கு அனுப்பலாம் னு சொல்லி... .................ஹி ஹி.. :))))))) உங்களுக்கு இதுக்கு மேல புரிஞ்சிடும்..

பீட்டர் தாத்ஸ் :The world is as many times new as there are children in our lives.



இவர்களும் மனிதர்கள்.......

மனநிலை சரியில்லாமல் வாழ்கையை இழந்தவர்களா? இல்லை வாழ்கையை இழந்ததால் மனநிலை சரியில்லாமல் இருக்கிறார்களா? என்பது விடைதெரியாத கேள்வி. தெருவோருத்தில், கிழிந்த ஆடைகளுடன், சிலருக்கு ஆடைகள் கூட இருக்காது, தான் என்ன செய்கிறோம், எங்கிருக்கிறோம், எப்படி இருக்கிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் மனம் போன போக்கில், கால் போன போக்கில் அல்லது ஏதோ ஒரு இடத்தில் தன்னை இழந்து கிடக்கும் இந்த தெருவோருத்து மனிதர்களும் நம்மில் ஒருவர் தானே.

சக மனிதனை இப்படி தெருவோரங்களில் பார்க்கும் போது நெஞ்சம் சோர்ந்து போகாமல் இருப்பதில்லை. ஹால்டா சிக்னலை (ஒரு வழி பாதையாக்கி விட்டார்கள்), வலதுபுறமாக கடக்கும் போது, அந்த நடைபாதையில் ஒரு மனிதர், தன்னை முழுவதுமாக உணராத நிலையில் கிடந்தார். நல்ல வெயில், ஆடை இல்லை.. ஏதோ ஒன்று ஆடை என்று எங்கோ ஓர் இடத்தில் கிழிசலாக கிடந்தது, ஆனால் அது அவரின் மானத்தை மறைக்கவில்லை என்பதை உணராத நிலையில் கிடந்தார். அவரால் எழுந்து நடக்கமுடியவில்லையா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் படுத்தநிலையில் அவர் கழித்திருந்த சிறுநீர்,மலத்தின் மேலேயே கிடந்தார். தன்னால் தனக்கு எதுவும் உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. குடிகாரரும் இல்லை. மனநிலை பாதிக்கப்பட்டு, தன்னை இழந்த ஒருவர் என்று புரிந்தது. பக்கத்தில் எதையோ தன் சொத்தாக நினைத்து கட்டி வைத்திருக்கும் ஒரு சின்ன அழுக்கு மூட்டை அதற்கு சாட்சியம்.

இவரை தொலைவில் இருந்தே பார்த்துவிட்ட எனக்கு, அவரை அந்த கோலத்தில் வேடிக்கை பார்த்துவிட்டு சென்றுவிட முடியவில்லை நின்று உதவி செய்யும் அளவிலும் அவர் கிடக்கவில்லை. வேளச்சேரியில் இருந்து இடது புறம் திரும்பி சிறிது நேரத்தில் கவனித்தேன், அந்த போக்குவரத்து நெரிசலில் மேற்சொன்னவற்றை சிந்தித்தவாறு அவரையும் தாண்டிதான் விட்டேன். வெயிலுக்கு ஒரு மேல் சட்டை, தலையை சுற்றி ஹெல்மெட்டிற்காக போட்டுக்கொள்ளும் துப்பட்டா என்று நல்ல பாதுகாப்போடு சென்றுக்கொண்டு இருந்தேன். அவரை கடந்துவிட்டாலும், அப்படியே விட்டுவிட்டு அதற்கு மேல் செல்ல முடியவில்லை. வண்டியை நிறுத்தி, சட்டையை கழட்டிக்கொண்டு அவரை நோக்கி நடந்தேன், அதற்குள் அங்கு கடக்கும் வாகனங்களில் வந்தோர் அத்தனை பேரும் என்னை கவனிக்க ஆரம்பித்தனர், ஆண்கள் சிலர் மெனக்கெட்டு வண்டியை நிறுத்தி,"கிட்ட போகாதீங்க மேடம் ஏதாவது செய்துவிட போறான், கார்ப்பரேஷன் வாரிட்டு போயிடுவான்," "He is not a normal person, leave it, No use of helping him" , அனைவருமே எதற்கு இந்த பெண்ணிற்கு இந்த வேலை என்பதை போன்று பார்த்தார்கள், அவர்கள் அப்படி சொல்ல காரணமாக நான் நினைத்தது, அந்த மனிதர் முழு நிர்வாணமாக இருந்ததே.

பொது இடத்தில், நடைபாதையில், நடுத்தர வயதுடைய ஒரு ஆண் நிர்வாணமாக தன்னை உணராதவராக, மனநிலை பாதிக்கப்பட்டு, மலம் சிறுநீர் தான் கழித்திருக்கிறோம் என்றும் தெரியாமல் அதன் மேலேயே கிடக்கும் போது, அவரிடம் செல்ல யாருமே தயங்குவார்கள், பயப்படுவார்கள் தான். ஒரு பெண்ணாக எனக்கு ரொம்பவே அதிகமாகவே அந்த மனநிலை இருந்தாலும், அவரை அப்படியே விட்டு செல்ல முடியவில்லை. எத்தனை பேர் அந்த இடத்தை கடக்கிறார்கள், எத்தனை பேர் இப்படி அவரை வேடிக்கை பார்ப்பார்கள் என்ற எண்ணமே எனக்கு வந்தது. அவரிடம் நெருங்க ரொம்பவே தயக்கம் என்று சொல்வதை விடவும், நிறைய கண்கள் அப்படி ஒரு ஆணை நான் நெருங்குவதை பார்ப்பது வேறு ஒரு விதமான சொல்ல தெரியாத ஒரு மனநிலையை எனக்கு தந்தது, ஆனாலும் என் கால்கள் அவரை நோக்கி நடக்கின்றன. வேறு எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் நினைக்காமல் அவருக்கு அந்த சட்டையை போர்த்திவிட்டு வந்துவிட வேண்டும், அவர் இப்படி கிடக்க க்கூடாது, பிறகு தன்னார்வ நிறுவனத்தை தொடர்பு கொண்டு, அவருக்கு உதவி செய்துவிடலாம் என்று நினைத்தேன்.

சிலர் வண்டியை நிறுத்திவிட்டு கவனிக்க ஆரம்பித்துவிட்டனர் (இதை எல்லாம் நம் மக்கள் சரியாக செய்துவிடுவார்கள்). அவரிடம் நெருங்கிய நிலையில், அப்போது இடதுபுறத்தில் பெரிய கட்டிடம் எழுப்பிக்கொண்டு இருந்தார்கள், அதில் இருந்த வாட்ச்மென், என்னை கவனித்து ஓடி வந்து, "கொடும்மா நான் போடறேன், எப்படி கிடக்கிறான் பாரு, நீ கிட்ட போகவேண்டாம்" என்றார். எதுவும் பேசாமல் சட்டையை அவரிடம் கொடுத்துவிட்டு, அவர் போர்த்துவார் என்ற நம்பிக்கையில் எல்லோரும் நின்று என்னையே கவனிப்பது பிடிக்காமல் வேகமாக வந்துவிட்டேன். அடுத்தடுத்த நாட்களில் அந்த மனிதர் அங்கு இல்லை என்பது மனதுக்கு இதமாக இருந்தது.

அடையார் டெர்மெனஸ் எதிரில் எஸ்.பி.ஐ வங்கி கிளை உள்ளது அதன் அருகில் ஒரு பெண் இப்படித்தான் அமர்ந்திருப்பார், அவரின் கைகளில் எப்போதும் அவரின் சொத்து குவியல் மூட்டை ஒன்று இருக்கும். கிழந்த ஆடை, அழுக்கு, தெருவே கதி. எங்கு சாப்பிடுகிறார், எங்கு தூங்குகிறார் என்று தெரியாது. அலுவலகத்தில் இருக்கும் போது, மழை பெய்தால் என் அருகில் இருக்கும் ஜன்னலை திருந்து வைத்து ரசிக்க முற்படும் நேரங்களில் எல்லாம், இந்த அம்மா எங்கே இருப்பார்கள் என்றே யோசிப்பேன். சில நாட்கள் கவனித்து, Banyan க்கு போன் செய்து அவரை பற்றி சொல்லி அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களும் வந்து அழைத்து சென்று விட்டார்கள். அவர்கள் வரும் போது நான் அங்கு இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார்கள், ஆனால் அவர்கள் வரும் போது என்னை அழைக்கவில்லை. எப்படியோ அந்த அம்மாவை பிறகு நான் அங்கு பார்க்கவில்லை. அடுத்து டி.டி.கே சாலையில் ஒருவர். இவருக்காக ஆண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்திற்கு போன் செய்து அழைத்தபோது, அவர்கள் அலுவலகத்தில் "ஏம்மா நீயே ஒரு ஆட்டோ வைத்து கொண்டு வந்து விட்டுடேன் " என்றார்கள். தனியாக அதுவும் மனநிலை சரியில்லாத ஒரு ஆணை எப்படி பேசி, தூக்கி, எடுத்து ஆட்டோவில் உட்காரவைத்து அழைத்து செல்வது. என்னால் முடியுமா? என்ற கேள்வி எழும்பி, அவர்களிடம் என் நிலைமையை எடுத்து சொன்னேன். சரி அட்ரஸ் கொடுங்கள், முயற்சி செய்யறோம், ஆனால் அழைத்து செல்வோம் என்று உத்திரவாதம் எல்லாம் தரமுடியாது என்றார்கள். அவர்கள் வெகு நாட்கள் அழைத்து செல்லவில்லை தான். அவர் அந்த இடத்திலேயே தான் இருந்தார்.

சில விஷயங்கள் முயன்றும் சரியாக உதவ முடியவில்லையே என்ற குற்ற உணர்வு எழாமல் இல்லை.

மேற்கண்டது போன்ற சக மனிதனை நீங்களும் கண்டிப்பாக நம் தெருக்களில் பார்க்கத்தான் செய்வீர்கள், அவர்களை ஒதுக்கி செல்லாமல், தயவுசெய்து அவர்களை பாதுகாக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தொலைபேசியில் அழைத்து சொல்லுங்கள். சில வருடங்கள் முன்பே மெயிலின் மூலம் எல்லோருக்கும் இதற்கான தொடர்பு தொலைபேசி நம்பர்கள் அனுப்பி இருந்தேன். உங்களின் ஒன்று அல்லது இரண்டு தொலைபேசி அழைப்புகள் ஒரு மனிதனுக்கு மறுவாழ்வு அளிக்க உதவும். தயவு செய்யுங்கள்....

For Men

Anbagam
Ph : 044-2501 5165
http://www.anbaham.org/

Scarf
44 - 2615 3971
44 - 2615 1
073
http://www.scarfindia.org

For Women

18/55, Nelson Manickam Rd
Chennai, Chennai, Tamil Nadu 600094
044 42233666
www.thebanyan.org

இரு தினங்களுக்கு முன் ஒருவரை பார்க்க நேர்ந்தது. இப்படிப்பட்டவர்களை பார்க்காமல் இருக்க போவதும் இல்லை... :((((((((

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்..... மக்கா அம்மணி ய என்ன செய்யறது சென்னை யில் மட்டும் தான் இப்படி மக்கள் இருக்காங்கன்னு அவங்க கூப்பிடற 2 நம்பரை மட்டும் கொடுத்துட்டுட்டாங்க.. நம்ம கவி க்கு அவ்வளவு தான் அறிவு விடுங்க விடுங்க..!!

நீங்க என்ன செய்வீங்களாம், கூகுல் ல "Rehabitation Centre, Chennai" அப்படின்னு டைப் செய்து சென்னை க்கு பதிலா நீங்க எங்க இருக்கீங்களோ அந்த ஊர் பேரை போட்டு தேடுங்க. .உங்க ஊர்ல இருக்க சென்டர் நம்பர் எல்லாம் கிடைக்கும்.. அதுக்கு போனை போடுங்க... சரியா...

பீட்டர்தாத்ஸ் : “Never give succor to the mentally ill; it is a bottomless pit.” - Is it True?