ஒரு ரவுடியின் குடும்பம்

எனக்கு தூக்கம் சரியாக இல்லையென முந்தைய இரவு, 'விடியற்காலை 5.30 மணிக்கு எழுந்துக்ககூடாது, ஜிம் போகக்கூடாது' என அதட்டி மிரட்டி தூங்க கட்டளையிட்டிருந்தார் வூட்டுக்காரர்.

ஒருநாள் அவருக்கும், அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்காட்ட நல்லாவே தூங்கினேன். எழுந்த போது மணி காலை 8.30, கூடவே கனவில் கண்ட ரவுடியின் குடும்பமும் எழுந்து வந்தது.

இந்தமாதிரியான கனவு எனக்கு எப்படி ஏன் வந்தது என பிடிபடல. சினிமா எதும் பார்க்கல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பார்த்து மாதக்கணக்காகிறது.  ஆகவே அந்த பாதிப்புகளும் இல்லை. கனவிலிருந்து வெளிவந்தபிறகு இதை எழுதும் இந்த நொடி வரை அங்கு நான் ஏன் இருந்தேன், என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளுக்கு விடையில்லை.

எப்போதும் போல கனவை மறக்கும் முன், குடுகுடுவென அவரிடம் சொல்ல ஓடினேன். வாழ்க்கைப்பட்டவர் தலையெழுத்து கேட்டுத்தானே ஆகனும். கனவை சொல்ல ஆரம்பிக்கும் முன்னமே 'அங்கே நான் எப்படி போனேன், எதுக்கு போனேன்னு கேக்கப்பிடாது..ஏன்னா எனக்கும் தெரியாது..' ன்னு கன்டிஷன் போட்டுவிட்டு ஆரம்பித்தேன்.

கனவுக்குள் செல்வோம். பிஜிஎம் சேர்த்துக்கொண்டு படிக்க ஆரம்பிங்க...

பகலா இரவா ன்னு தெரியாத ஒரு சூழல், பெரிய வீடு... உள்ளே இருக்கிறேன்.  என்னை சுற்றி அழகான ஒரு குடும்பம்.

'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது'

இந்த பாடலில் வரும் அஜித் போல, அங்கிருப்போருக்கு நானிருப்பது ஒரு பொருட்டாகவே இல்லை, நானும் அவர்களை கவனிக்கிறேனே ஒழிய எதும் பேசவில்லை.  பெரிய குடும்பம். குடும்பத்தலைவர் தமிழ் திரைப்படங்களில்
காட்டுவது போல ஒரு ரவுடியாக இருந்து பெரிய அரசியல் வாதியாக மாறியிருக்கலாம், அல்லது வெறும் ரவுடியாகவும் இருக்கலாம்.. அச்சு அசலாக அமைச்சர் ஜெயக்குமார் சாயல், அதே வயது. கொஞ்சம் உயரம் அதிகம், அதே தலை, சொட்டை பளபளன்னு மின்னுது. இந்த மின்னவதை மட்டும் நீங்க நினைவில் வச்சிக்கனும், கடைசியில் திரும்ப வரும். 

அவருடைய மனைவி நல்ல லட்சணம். அந்த வயதிலும்  சுறுசுறுப்பாக  சிரித்த முகத்தோடு வளம் வருகிறார்,  இரண்டு அழகான மகள்கள்,  ஒருவர் மருத்துவர், திருமணம் ஆகி அவருடைய குழுந்தைகளுடன் அதே வீட்டில் இருக்கிறார். ஒரு அறையில் க்ளீனிக் வைத்து, சன்னல் வழியாகவே அக்கம் பக்கம் இருக்கும் ஏழைகளுக்கு இலவசமாக மருந்து மாத்திரை கொடுத்து சேவை செய்துவருகிறார்.  இன்னொரு மகள் கல்லூரியில் படிப்பதாக கருதுகிறேன். அதுபோலவே அவருக்கு வளர்ந்த திருமணமான மகன்களும் இருப்பதாக யூகிக்கிறேன்,அவர்களை பார்க்கவில்லை. பேரக்குழந்தைகளும் அவ்வப்போது வீட்டில் ஓடி ஆடி விளையாடுகின்றனர்.

இவர்களை தவிர வீட்டினுள் இவருக்கு பாதுகாப்பாக முடிக்களைந்து, தொப்பையோடு, கட்டுமஸ்தான மொட்டை தலை உட்பட மூன்று அடியாட்கள் இருக்கின்றனர்.

நம்ம சொட்டத்தலை, அடியாட்கள்  இருக்கும் தெம்பில் சோபாவில் ரிலாக்ஸ் ஆக உக்காந்து வடிவேலு காமெடி பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்.  வெளியில் ஏதோ சத்தம் கேட்க, சன்னல் அருகில் சென்று பார்க்கிறேன், இரண்டு வெள்ளை நிற போலேரோ வேகமாக வருகிறது, உள்ளிருப்போர் கண்ணாடியை இறக்கிவிட்டு பெரிய பெரிய கத்தி, கம்புகளை சுற்றிவாரே கத்திக்கொண்டு வருகின்றனர்.

அடியாள் ஒருவரும் என்னோடு சேர்ந்து சன்னல் வழியே ப்பார்க்கிறார். என்னன்னு நான் கேக்க, எனக்கு பதில் சொல்ல நேரமில்லாமல், 'கதவு, சன்னல் எல்லாம் சாத்துங்க ' ன்னு கத்திக்கொண்டே  நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த சன்னல் சேர்த்து ஒவ்வொன்றாக சாத்துகிறார். நம்ம சொட்டத்தலையும் விபரீதம் தெரிந்து அவர் பங்குக்கு ஓடி சென்று சன்னல்களை சாத்துகிறார்.  மருத்துவம் பார்க்கும் பெண் அறைக்கு அடியாள் ஓட , பின்னால் நானும் பரபரக்க செல்கிறேன். முன்னமே அங்கே ஒரு சுருட்டை முடி அடியாள் நிற்கிறான். ஆனால் மருந்துக்கொடுக்கும் சன்னலை மூடவில்லை. உள்ளே சென்றவன் மூட முயல, டாக்டரம்மா 'ஏய்..என்ன செய்யற...வெளியில் பேஷன்ட் நிக்கறாங்க நீ பாட்டுக்கும் மூடற.. போ இங்கிருந்து ' என கருமமே கண்ணாக நிமிர்ந்துக்கூட பார்க்காமல் கத்த, உள்ளே போனவன் அதே வேகத்தில் வெளியே போயிடறான்.

எனக்கு மட்டும் பதட்டம் அதிகமாகி... என்ன இந்தம்மா ஆபத்தை விலைக்கு வாங்க காத்திருக்கே... இதுக்கு என்ன ஆகுமோன்னு நினைக்கும் போதே இரண்டு குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடியவாரே உள்ளே வந்து ஒரு ரவுண்டுப்போட்டு கட்டிலில் எகிறி குதித்து வெளியே ஓடுகின்றனர். என் கவனமோ அந்த அறைக்குள்ளேயே இருக்கும்  அடியாளிடம் சென்றது..'அடேய் பத்தரமாய் அந்தம்மாவை பாத்துக்குவியா?? ' என்பது ப்போல கண்ணாலேயே கேட்க... அவனும் புரிந்து லேசாய் பெருமையாய் 'அதுக்குத்தானே என்னை இங்கவே நிக்க வச்சி இருக்காங்க ' வென கண்ணாலேயே பதில் சொல்றான்.

அந்தம்மா சன்னல் அருகில் அமைக்கப்பட்டுள்ள டேபிலில் உக்காந்து சீட்டில் மருந்து விபரங்கள் எழுதி, மருந்தும் எடுத்துக்கொடுத்துட்டு இருக்கு.. அதுக்கு வேற்று சிந்தினையோ சிதறலோயில்லை. (எல்லாரும் நம்மை மாதிரியேவா இருப்பாங்க??)

 அந்தம்மா வேலை செய்வதை பார்த்தவாரே வெளியில் வரேன். பளீச் சொட்டை & மற்ற இரண்டு அடியாட்களின் முகத்திலும் ஒரு நிம்மதி தெரிய.. சரி வந்தவங்க போயிட்டாங்க போலவே ன்னு ஒரு அடியாளிடம் கேட்க.. 'தட்டிப்பாத்துட்டு போயிட்டானுங்க.. இனிமே பயமில்ல..இன்னைய கோட்டா ஓவர்.. இனி வரமாட்டானுங்க.. '

ஓ' ன்னு வியப்போடு பார்க்கும் போதே... பளீச் சொட்டை கதவை திறந்துட்டு வெளியில் போறாரு. 'எங்கையா போறார்' ன்னு கேட்க முன்ன.. சன்னல் வழியா பார்க்கிறேன். அம்மாடி எவ்ளாம் பெரிய குளம்.?? குளம்னு சொல்லமுடியாது ஜெனிவா ஏரி கணக்கா இருக்கு. அங்கங்க சின்ன சின்ன படகுகள்,  இவர் வீட்டு வாசலில் ஒரு பக்கமா படிக்கட்டுகள் நேராக இந்த ஏரிக்கு படித்துரைப்போல அமைந்திருக்கு..  நெருக்கமா படகுகளும் கட்டப்பட்டு இருக்கு.  இதையெல்லாம் நான் கவனித்துவிட்டு நம்ம பளீச் சொட்டை எங்கன்னு தேடும் போது கண்ணுக்கு எட்டிய தொலைவில் உல்லாசமாக நீந்தி மிதந்து குளிச்சிட்டு இருக்கார்.

அடக்கடவுளே  இத்தனை ஆபத்து இருக்கப்ப , இந்த ஆளு என்ன இப்படி
குளிச்சிட்டு இருக்காரு?? ன்னு நினைச்சபடியே  ரூம்'மில் லுக் விட்ட மாதிரியே இங்க இருக்க அடியாளை லுக் விட.. அவர் என்னை கவனிக்காமல் சன்னல் வழியே பார்க்கும் போதே அவர் முகத்தில் கலவரம் தெரிய.. நானும் திரும்பி பார்க்கிறேன்.

குளத்தில் ஆங்காங்கே தண்ணீருக்குள்ளிருந்து அருவாளோடு ஆட்கள் வெளிவர சொட்டை பாஞ்சி வருசையாய் நிறுத்தி வைத்த படகில் படுத்து தன்னை மறைத்துக்கொள்ள...  எதிராளிங்க.. தள்ளியிருந்த படகிலிருந்து எழுந்து நின்று சொட்டையை தேட.. நம்ம சொட்டை படுத்தவாரே பிரண்டு பிரண்டு நெருக்கமான நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் மாறிக்கொண்டே வருகிறார். அவரோடு முன்னும் பின்னுமாக 4-5 பேர் ஒரே மாதிரி உருண்டு வருகிறார்கள்.  [ஏது ஆட்கள்னு சின்னப்புள்ளத்தனமா கேட்கப்பிடாது. உள்ளவே 3 பேர் இருக்காங்களே வெளிய இருக்க மாட்டாங்களா? கனவு கண்ட எனக்கே இந்தக்கேள்வி வரல. சும்மா உக்காந்து படிக்கற உங்களுக்கு வரலாமா?]

இப்படி படகுகளில் அமைச்சர் ஜெயகுமார் வயதுக்காரர் உருண்டால் என்னாகும்?... அதே..கடைசி படகுக்கு முதல் படகில் கழுத்து சுளுக்கி..வலி தாங்காமல் கழத்தை பிடிச்சிக்கிட்டு லேசா நிமிரும் போதுதான்.. அவரோட அந்த மின்னும் சொட்டைத்தலை பளீச் பளீச் ன்னு லைட்டு மாதிரி மின்ன..[நோட் பண்ண சொன்னேனில்ல இதுக்கு தான், எனக்குமே அப்பதான் அவர் எங்க இருக்கார்னு தெரிஞ்சிது.. ஹிஹி...] ..மின்னலில் சொட்ட எங்க இருக்கார்ன்னு தெரியவர... எதிராளிங்க பாய்ந்து தாக்க ஆரம்பிக்க.. இவரை காப்பாற்ற அடியாட்கள் முன்னே பாய்ந்து அடிவாங்க..  சொட்ட சொட்ட நனைந்த சொட்டை சந்தில் புகுந்து துண்டக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிவர.. ஒருவித பதட்டத்தோடு வாய்ப்பொலந்து பார்த்துக்கிட்டு இருந்த அடியாளை..'யோவ்..அந்த ஆளு ஓடிவராரு ப்பாரு ஓடு ஓடு கதவை திற... அவனுங்கக்கிட்ட சிக்கிட போறாருன்னு நான் கத்த...  அவன் ஓடி கதவை திறக்க.. ஜஸ்ட் மிஸ்ஸிங் ல..சொட்டை தப்பிச்சி உள்ளே வந்து குனிந்து முட்டியை பிடிச்சிட்டு மூச்சு வாங்குகிறார்.

இப்பதான் அடியாளிடம் நான் கேக்கறேன். 'ஆமா.. வீட்டுக்குள்ள வந்துட்டா விட்டுடுவாங்களா...கதவ சன்னல உடைச்சிட்டு உள்ள வரமாட்டாங்களா??'

அடியாள்... தெனாவட்டாய் சிரித்தபடி 'முடியாதே.. நம்ம வீட்டுக்கு மேல் ஏ ஜி ச்ர்ச் இருக்கே.. கட்டடத்தில் கை வைக்கவே மாட்டாங்க.. மத கலவரமாகிடுமில்ல .'... ன்னு சொல்ல...

'என்னது ஏ ஜி ச்ர்ச் ஆ'..ன்னு அண்ணாந்து மேல பார்க்க..எனக்கு தெரிஞ்சது என்னவோ..அந்தவீட்டின் சீலிங் தான்.... 

சீலீங் பார்த்துட்டே முழிச்சிட்டேன்...

**************

வூட்டுக்கார்... 'செமயா இருக்குடி..எழுதி வை.. அப்படியே டெவலப் செய்து பெருசாக்கு.... ஆமா நீ ஏன் அங்க போன.. ? ..அந்த வீட்டுல உனக்கென்ன வேல?'" ... நான் பதில் சொல்லாமல் முறைக்க...  'ஓ.... நீ..இந்த கதைப்பார்த்து சொல்ல போய் இருக்க போல..' ன்னு அவரே முடிச்சிட்டார்.

கவுதம் மேனன் படத்தில், ஹீரோ ஒருபக்கம் பின்னாடி கதை சொல்லிட்டே இருப்பாரே..அதுமாதிரின்னு வச்சிக்கலாம்.. ஆனா நானு இந்த கதைக்கு சம்பந்தமேயில்லாத ஒரு ஆள்.  இந்த ஏ ஜி ச்ர்ச் எல்லாம் என் வாழ்க்கையில் ஒருதரம் கூட சொன்னது இல்ல. ச்ர்ச் னு தெரியுமே தவிர ஏஜி ச்ர்ச் எல்லாம் வேற லெவல்.

பீட்டர் தாத்ஸ் ;  I always get  long dreams. It is always contain a solid story with different characters, clear tone, body languages, silent speeches, with people faces, dialogs , dress colour etc., - Kavitha

பயணக்குறிப்புகள் - சிக்கிம்

பொதுவாக, டார்ஜிலிங், சிம்லா, மனாலி சுற்றுலா செல்ல காட்டும் முனைப்பு யாருக்கும் 'சிக்கிம்' செல்ல இருக்காது. ஆனால், சிக்கிம் தான் முக்கியமாக பார்க்கவேண்டிய  ஒரு சுற்றுலா இடம்.
 
மேற்கு வங்கத்திற்கு அருகில் இருப்பதால் , அநேகமாக பெங்காலிகள் தான் அதிகம் அங்கே சுற்றுலா செல்கிறார்கள். சிக்கிம் மக்கள் பெங்காலி, ஹிந்தி & நேபால மொழியும் பேசுகின்றனர். விக்கியில் மற்ற தகவல்களை தெரிந்துக்கொள்ளவும்.  

சிக்கிம் சுற்றலா மற்ற இடங்களை போல இல்லாமல், எந்த இடமெல்லாம் போகலாம்,  எவ்வளவு செலவாகும் போன்ற தகவல்களை தெரிந்துக்கொண்டு செல்வது நல்லது. இந்த பயணக்குறிப்பை அதற்காகவே பதிவிடுகிறேன்.  குறிப்பாக தங்கும் விடுதி தவிர, மற்றவை அங்கு போய் புக் செய்துக்கொள்வது நல்லது. பேக்கேஜ்' ஜில் செல்வது அதிக செலவு.

சிக்கிமில் சுற்றிப்பார்க்க மொத்தம் 5 நாட்கள் தேவைப்படும்.  விமானம் மூலம் பாக்தோக்ரா வரை சென்று அங்கிருந்து காங்டாக் கிற்கு காரில் செல்லலாம். ரூ 3500/- ரூ 5000/- வரை வாங்குகிறார்கள். காங்டாக் சிக்கிமின் தலைநகரம். அங்கிருந்து தான் மற்ற இடங்களுக்கு
செல்வது எளிது. விமான நிலையத்திலிருந்து யாருடனாவது சேர்ந்து சென்றால் செலவு குறையும். பேரூந்திலும் செல்லலாம், ஆனால் சிலிகுரியிலிருந்து தான் நேரடி பேரூந்து இயங்குகிறது. ரயிலில் சென்றால் நியூ ஜல்பாய்குரி வரை சென்று அங்கிருந்து காரிலோ, பேரூந்திலோ காங்டாக் செல்லலாம்.   காங்டாக் கில் தங்க இங்கிருந்து புக் செய்து செல்வது நல்லது. ஒரு நாளைக்கு 1000-2000 ரூ வரை நல்ல அறைகள் கிடைக்கும்.

இங்கு சுற்றுளா செல்ல ஜீப் புகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. 8 பேர் செல்லக்கூடிய இடத்தில் 10 பேரை ஏற்றி செல்கின்றனர். அதிகமாக Bolero, Innova  வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. தனி வண்டியில் செல்ல வேண்டுமானால் அதிகமான பணம் கேட்கிறார்கள். 4500 ரூ வாங்குமிடத்தில் 12-15 ரூ ஒரு நபருக்கு கேட்கிறார்கள்.  

1. காங்டாக்; சுற்றியுள்ள இடங்களை பார்க்க ஒரு நாள் தேவைப்படும். ஒரு ஆளுக்கு ரூ 1000 

2.  லாச்சங்***, லாச்சன்** செல்ல 2 இரவு 3 பகல் தேவைப்படும். இதற்கு ஒரு ஆளுக்கு ரூ 4500/- தங்குமிடம், சாப்பாடு அடக்கம்.  ஒரு வண்டிக்கு 10 பேர், அதனால், புத்திசாலித்தனமாக, என்ன வண்டி, தனி இருக்கை கிடைக்குமா போன்ற தகவல்கள் விசாரித்து செல்வது நலம். இடநெருக்கம், 3 நாள் மோசமான மலை சாலைகளில் பயணம் சிரமத்தை தரும். அதே சமயம் மலை சாலைகளின் இயற்கை எழில் இவற்றை மறக்க செய்யும்.

**லாச்சனிலிருந்து தங் 'பள்ளத்தாக்கும், அதைத்தாண்டி 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் குருதோங்மார் ஏரியும் வாழ்நாளில் பார்க்கவேண்டிய இடங்கள். குருதோங்மார் ஏரியில் ஆக்சிஜன் அளவு 3% மட்டுமே இருப்பதால், இரத்த அழத்தம், இருதய பிரச்சனை, மைக்ரேனி தலைவலி, வெர்டிகோ தலைசுற்றல் இருப்போர் இங்கு சென்று வருவது சிரமம். போர்ட்டபுல் ஆக்சிஜன் கையில் எடுத்துச்செல்வது நல்லது. இஞ்சி துண்டுகளை பொடியாக நறுக்கி அதை மென்று சாற்றை விழுங்கிபடி செல்லலாம். தலைச்சுற்றல் மயக்கம் வாந்தி போன்றவை கட்டுக்குள் இருக்கும். 

குருதோங்மார் ஏரியில் வெர்ட்டிகோ தலைசுற்றல் காரணமாக நினைவு தப்பி மயக்க மடைந்த எனக்கு, தகுந்த நேரத்தில் ஆக்சிஜன் கொடுத்து முதலுதவி செய்து என்னை நினைவுக்கு க்கொண்டு வந்தனர் நம் ராணுவ வீரர்கள். கண் விழித்து, என்னால் தனியாக நடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தப்பின்னரே அனுப்பி வைத்தனர்.  படுக்கையின் இரண்டு பக்கமும் இரு வீரர்கள் நின்று என்னை கவனித்தது மறக்க முடியாத நிகழ்வு.  என்னுடன் வந்த 25-27 வயதுடைய ஒரு பையனுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது, நான் மயக்கமுற்றதால் எனக்கு முதலுதவி உடனே கொடுக்கப்பட்டது. எனக்கு நினைவு வந்ததும், அந்த பையன் என் எதிரில் உட்கார்ந்திருப்பதை ப்பார்த்து, வீரர்களிடம், கையைக்காட்டி அந்த பையனை கவனிக்கும்படி சகை செய்தேன். இருவருமே ஒரே நேரத்தில்... ' முதல்ல உன்னைப்பாரு, அவனை நாங்கள்  பார்த்துக்கொள்கிறோம், உனக்கே முடியலையாம்,இதுல அவனை கவனிக்க சொல்றியா' என்று என்னை மென்மையாக கடிந்துக்கொண்டு, ஒருவர் அந்த பையனை இன்னொரு படுக்கைக்கைக்கு அழைத்து சென்றார், ஒருவர் என்னைவிட்டு விலகவேயில்லை.  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

வாழ்நாளில் ஒருதரமாவது இங்கு சென்று, அதன் அழகை ரசிப்பது வரம். இது புனித ஏரியாக கருதுப்படுவதால், இங்கே வழிபாடுகளும் நடைபெறுகின்றன. என் கணவர் கீழே இறங்கி சென்று கற்கள் அடுக்கி, பணம் வைத்து, ஏரி நீரை தலையல் தெளித்துக்கொண்டு, எங்களுக்கும் ஒரு பாட்டலில் எடுத்து வந்திருந்தார், இவர் வர கால தாமதமான நேரத்தில் தான் நான் மயங்கியும் போனேன்.

*** லாச்சாங்கிலிருந்து யும்தாங் பள்ளத்தாக்கின் வழியாக 15 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் zero point க்கு அழைத்து செல்கிறார்கள். இதற்கு தனியாக ரூ300/- ஏனென்றால் இது பல
நேரங்களில் மூடி இருப்பதால், நாம் செல்லும் போது திறந்திருந்தால் மட்டுமே செல்லமுடியும். இது கிட்டத்தட்ட டார்ஜிலிங், சிம்லா போன்றதொரு பனிமலை பகுதி, இங்கும் அதிக குளிர் காரணமாக வெகு நேரம் இருக்க முடியாது. தவிர, மேற்சொன்ன உடல் உபாதை இருப்பவர்கள் செல்வது சிரமமே. 

3. நாதுலா - இது சீனாவின் எல்லையொட்டிய பகுதி, நம்முடைய எல்லையில் இருந்து சீனாவில் எல்லையை மதில் சுவரை எட்டிப்பார்ப்பது போல பார்க்க முடிகிறது. இதுவும் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது.  இங்கு செல்லும் போது 3a. ச்சாங்கு ஏரி, இங்கு அலங்கரிக்கப்பட்ட காட்டு எருதுவை பார்க்கலாம், பணம் கொடுத்து அதன் மேல் சிறிது தூரம் பயணம் செய்யலாம். 3b. பாபர் மந்திர்  & உலகின் மிக உயரத்தில் ஆர்கானிக் முறையில் கட்டப்பட்ட மிகப்பெரிய சிவன் சிலை அமைந்துள்ளது.  

நம் ராணுவ வீரர்கள் மேற் சொன்ன தங், யும்தாங், நாதுலா பகுதிகளில் கடும் குளிர் மற்றும்,
ஆக்சிஜன் பற்றாகுறையான இடத்திலிருந்து இரவு பகல் பாராமல் தொடர்ந்து எல்லை கண்காணிப்பு & பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 
 
4.  நம்ச்சி ;- இது ஒருநாள் பயணம். ஒருவருக்கு ரூ 1000. 4a. Samdruptse Hill, 4b. ச்சார்தம் இரண்டும் இரண்டு மலை உச்சியில் எதிர் எதிர் திசையில் அமைந்துள்ளது.

இவற்றைதவிர 5. ரவான்ங்லா, 6. பெல்லிங் போன்ற இடங்களும் பார்க்க வேண்டியவை நேரமின்மை & சரியான திட்டமில்லாமல் சென்றதால் போக முடியவில்லை. 

உணவு ; மோமோஸ்  எப்போதும் கிடைக்கும். சாதம், பருப்பு, காய்கறியோடு சிக்கன், மட்டன் , முட்டை உணவுகள், நூடுல்ஸ் கிடைக்கும்.  காங்டாக்கில் எம் ஜி ரோடு கடைகள்,  இங்கு எல்லா வகையான உணவு விடுதிகள்  இருக்கின்றன.  தங்கும் விடுதிகளும் எம் ஜி ரோடு அருகில் புக் செய்தால் எல்லா இடங்களுக்கும் செல்ல வசதியாக இருக்கும்.

அதிக குளிர்/பனி படர்ந்த மலைகளில் பிரயாணம் செய்வதால், அதற்கு தகுந்த உடைகள் மிக அவசியம். குளிருக்கான ஆடைகள் காங்டாக் கில் வாங்கலாம், மற்ற இடங்களில் விலை அதிகமாக இருக்கிறது. 

சிறந்த மாதம் ; நவம்பர் - ஜனவரி

Photos courtesy : Thx Google 

பயணக்குறிப்புகள் -சபரிமலை-அச்சன்கோயில்-ஆலப்புழா-2


முதல் பதிவு - பயணக்குறிப்புகள் -சபரிமலை-அச்சன்கோயில்-ஆலப்புழா 


'ஐடி ப்ரூஃவ் காட்டுங்க'

ஆதார் & மருத்துவக்கோப்புகளை காட்டினோம்,

 'இருங்க, பெரிய ஆபிசர் ட்ட பேசிட்டு வரேன்னு' போனார்,பார்த்துக்கொண்டே இருந்தோம். வெகு நேரம் பேசினார்.

திரும்ப வரும்போது, கூடவே ஜீப்பிலிருந்த பெரிய போலிஸ், ட்ரைவர் சீட்டில் இருந்த போலிஸ், எங்கிருந்தோ ஒரு  நடுத்தர வயது யுனீஃபார்ம் போட்ட போலீஸம்மா, எங்கள் பின்பக்கமிருந்து இரண்டு போலீஸ் என 6 பேர்  ஒரே சமயத்தில் எங்களை ரவுண்டு கட்டினர்.

மஃப்ட்டி பெண் போலீஸ் மலையாளத்தில் பேச ஆரம்பித்தார்

 'மேடம்........ 50 வயது ஆனால் தான் போகமுடியும், நீங்க இப்ப போகமுடியாது, சார் வரைக்கும் போயிட்டு வரட்டும், நீங்க இங்கவே இருங்க'....

உடனே பெரிய போலீஸ், 'இங்கப்பாருங்கம்மா, உங்களை அனுப்புவதில் எங்களுக்கு ஒரு பிரச்சனையுமில்லை, நடு வழியில் மலையாள சாமிகள் பிரச்சனை செய்வாங்க, ரொம்ப சிரமம் ஆயிடும், உங்களால மேலயும் போகமுடியாது, கீழவும் திரும்ப வரமுடியாது. '

நடுவில் இன்னொரு போலிஸ், 'நீங்க எங்கிருந்து வரீங்க' என்றார். 'சென்னை 'னு சொன்னதும், 'தமிழா 'ன்னு தமிழில் பேச ஆரம்பித்தார்.

 'மேல ஏறவிடாமல் தடுப்பாங்க, உங்களை கல்லால் அடிப்பாங்க, கட்டையால் அடிப்பாங்க, கோஷம் போடுவாங்க.. எங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது, முடியுமென்றாலும், பிரச்சனையாகும், மீடியா வேற ரெடியா காத்துக்கிட்டு படம் பிடிப்பாங்க, உங்களுக்குதான் கஷ்டம் 'என்றார்,

அந்த நடுத்தர வயது போலீஸ்ம்மா, அவங்க பங்குக்கு பயமுறித்தினார்.

திரும்பவும் பெரிய போலீஸ் '50 வயசு ஆனவுடன் வாங்க.., யாரும் உங்களைத் தடுக்க முடியாது.. நீங்க போயிட்டு வரலாம்' சொல்லிவிட்டு மென்மையாக சிரித்தார்.

'மேல பிரச்சனை செய்வாங்கன்னு சொல்றீங்களே அவங்க, ஐடி கார்ட் கேட்பாங்களா?? என்றேன்.

மஃப்ட்டியும், தமிழும் 'கேட்பாங்க' என்றனர்.

'அப்ப சரி அவங்கக்கிட்ட என் மருத்துவ ரெக்கார்ட் காமிக்கிறேன், அப்ப போக சொல்லி விட்ருவாங்கில்ல'  என்றேன்.

உடனே பெரிய போலீஸ் முகம் மாறியது. 'நீங்க என்னசொன்னாலும் விடமாட்டாங்கம்மா, புரிஞ்சிக்கோங்க.. 50 வயசானவுடனே வாங்க, யாரும் உங்களை தடுக்க முடியாது. தைரியமா போலாம்.' என்று வராத சிரிப்பை வரவழித்து சிரித்தார்.

இப்படியே இவங்களோடு பேசிக்கிட்டு இருப்பதில் பிரயோசனமில்ல, மேல போயிட்டு திரும்ப வந்து, நாங்க வீடு திரும்பனும், நேரமில்லன்னு மனசுல நினைச்சிக்கிட்டு,

'இத்தனை பிரச்சனையோடு சாமி ப்பார்க்கனும்னு இல்லீங்க, கோயிலுக்கு வரதே அமைதிக்காகவும், நிம்மதிக்காகவும், இதுல இதெல்லாம் தேவையில்லாத வேல, அவர் போயிட்டு வரட்டும், நான் எங்கே காத்திருக்கனும்? " என்றேன்.

'இந்த மண்டபத்திலேயே உக்காருங்க, எங்க கூடவே வேணும்னாலும் உக்காந்துக்கோங்க' என்றார் பெண் மஃப்ட்டி.

'அவர் சென்று வர எவ்வளவு நேரமாகும்?? ' என்றேன்

'3-4 மணி நேரம் ஆகும்... .'. என்றார் பெரிய போலிஸ்

என்னை அனுப்பாவிட்டால், என்ன செய்வதென, தோளில் மாட்டும் சின்னப்பையில், அவருக்கு ஒரு மாற்று உடை, சாக்லெட், பிஸ்கேட், தண்ணீர், சின்ன டவல், கொடை வைத்து எடுத்து வந்திருந்தேன்.. அதை அவரிடம் கொடுத்து, 'நீங்க கிளம்புங்க' னு அனுப்பியபோது காலை மணி 10.30.

மற்ற பைகளை எடுத்துக்கொண்டு மஃப்ட்டி போலிஸ் பின்னாடி நடந்தேன்.  அவர்கள்  எல்லோரும் அமர்ந்திருந்த பெஞ்சின் அருகில் இருந்த நாற்காலியில் அமர சொல்லி கைக்காட்டினார். மறுத்துவிட்டு, காலியாக இருந்த ஒரு தூணின் அருகில், துணியை விரித்துப்போட்டு அமர்ந்துக்கொண்டேன்.

**********

முதல் போலிஸ் அம்மாவிலிருந்து கடைசியாக என்னிடம் பேசிய போலிஸ் அதிகாரிகள் வரை, எங்களிடம்  எப்படி நடந்துக்கொண்டார்கள்  என்பதே இங்கு பதியப்பட வேண்டிய விசயம்

நீதிமன்ற உத்தரவு, அதை தொடர்ந்த பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தரிசனத்திற்கு வருகின்ற பெண்களிடம் எப்படி பேச வேண்டும் என நன்றாகவே பயிற்சிக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கூட, அதிர்ந்து பேசவில்லை, புன்னகையோடு, சத்தமில்லாமல், பக்குவமாக பேசினர்.


"Way of approach" னு சொல்லுவோமே அதை உணர முடிந்தது. போலிஸ்  அதிகாரம், அவர்கள் சொல்வதை கேட்டே ஆகவேண்டும் என்ற தொனி  இல்லை.

தவிர, நம்மிடம் பேசி, நாம் எப்படிப்பட்டவர், பெண் புரட்சியாளரா? புரட்சி செய்ய வந்திருக்கிறோமா?? நம்மால் அங்கு பிரச்சனை ஏற்பட வாய்பிருக்கிறதா? மீடியாவை அழைத்து விடுவோமா?? போன்றவற்றை கிரகித்து, அப்படியான அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடாமல், சாதுரியமாக பேசுகின்றனர். 

யாரும் அறியாமல் மஃப்ட்டியில், ரகசியமாக காதோடு பேசுவதுக்கூட, அங்கிருக்கும் பக்தர்களும், கேரள சாமி/ஆசாமிகளின் கவனம் எங்கள் மீது திரும்பாமல் இருக்கவே என ஊகித்தேன். .

அங்கிருந்து புறம்படும் வரை, போலீஸ் என்மேல் ஒரு கண் வைத்திருந்தினர். அது மட்டும் ஏன்னு என்னால் ஊகிக்க முடியல...

**********

மண்டபத்தில், என்னைப்போல அமர்ந்திருந்த இரண்டு தெலுங்கு பெண்கள் என்னிடம் வயதைக்கேட்டனர்,   கேட்ட மாத்திரத்தில், சிரித்துக்கொண்டே ' 50 வயசானாதான் விடுவாங்க, எங்க கூட வந்தவங்க மேல போயிருங்காங்க, அவங்களுக்காக தான் காத்திருக்கோம் .' னு சொல்லிவிட்டு, என் பதிலை எதிர்ப்பார்த்தனர்.

புன்னகையை பதிலாக்கிவிட்டு, பைகளை ஒன்றோடு ஒன்றுபிணைந்து, மேலே என் துப்பட்டாவை சுற்றி, கையை அதுமேல் வைத்துக்கொண்டு, தூணில் சாய்ந்து தூங்கிப்போனேன். தூங்கலாம்அல்லது வேடிக்கை ப்பார்க்கலாம் இதைத்தவிர, தனியாக அங்கே வேறேதும்  செய்வதற்கில்லை.

ஒரு தாத்தா சாமி 60+  இருக்கும்,  நடக்க முடியாமல் சாய்ந்து சாய்ந்து நடந்து வந்தவர், பேச்சுக்கொடுத்தார்.

'அம்மா, என் பையை கொஞ்சம் பார்த்துக்கறீங்களா ? ராத்திரி தங்க ரூம் பார்த்துட்டு வரேன்'

'சரி.. போயிட்டு வாங்க ...'

கொஞ்ச நேரம் கழித்து வந்தார். 'எல்லா இடத்திலும் விசாரிச்சிட்டேன், ரூம் எதுமே கிடைக்கல. உங்கள முதல்ல பார்த்தப்ப மலையாளம்னு நினைச்சேன், நீங்க பதில் சொன்னப்பிறகு தான் தமிழ்னு தெரிஞ்சிக்கிட்டேன் ...'

'ஓ அப்படியா... கீழ ரூம் இருந்ததே..பம்பை ஆறு பக்கத்தில்..... விசாரிச்சீங்களா... '

அது டாய்லட் 'டோட சேர்ந்திருக்கு... அங்க தங்க முடியாது ஒரே நாத்தம்... னு முகம் சுளித்தார்.

'நீங்க சுவாமி பார்த்துட்டீங்களா..'

'காலையில் 4.30 க்கு போயிட்டு 10.30 வந்துட்டேன்...'

'ஹும், விடிய காத்தாலன்னா ஈசியா ஏறமுடியும்....'

'உங்களை எல்லாம் அனுப்ப மாட்டாங்க... என்ன ஒரு 40 வயசு இருக்குமா உங்களுக்கு.?.. நீங்கெல்லாம் மேல ஏறினா.. ஏறும் போதே மென்சஸ் வந்துடுமே... அதான் விடமாட்டாங்க. இந்த சாமிக்கிட்ட அப்படியெல்லாம் விளையாடக்கூடாது.

..............  ( இந்த கிழத்துக்கிட்ட உசாரா பேசனும், வயசானவர்னு பாவம் பாக்கக்கூடாதுன்னு முடிவு செய்துக்கிட்டேன்)

அப்புறம் ராத்திரிக்கு என்ன நாஷ்டா... ??

ஞே.... !!  (ராத்திரியா? யோவ் தாத்தா.. நான் மதியமே சாப்பிடல..இதுல ராத்திரிக்கா?) 'என்னோட ஹஸ்பென்ட் மலைக்கு போயிருக்கார், இப்ப வந்துடுவார், நாங்க ராத்திரி தங்க மாட்டோம்.'

'யாரு அந்த பால்ட் ஹெட் ஆ ?'


(ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...) இல்லீங்க..தலையில் முடி இருக்கும்..'

'ராத்திரியெல்லாம் திரும்ப மாட்டார், இப்பதான் என் கூட வந்தவங்க ஃபோன் செய்தாங்க, ஓணம் பூஜையாம், சாமிய பாக்க முடியலையாம், எப்ப திறப்பாங்கன்னு தெரியலையாம். விடிய விடிய பூஜை நடக்கும், அவரு வரமாட்டாரு....'

லேசாக நெஞ்சை பிசைய ஆரம்பிச்சது.. இந்த கிழம் சொல்றது உண்மையா?  ஃபோனும் சிக்னல் கிடைக்கல, இந்தாள் ஃபோன் மட்டும் எப்படி சிக்னல் கிடைக்குதுன்னு தெரியல, போலிஸ் கூட வாக்கி டாக்கி தான் வச்சி இருக்காங்க.  ராத்திரியாகிடுமோ??? இப்பவே மண்டப்பத்தில் கூட்டம் கம்மி ஆகிட்டே வருது, போக போக எப்படி இங்க உக்காந்துட்டு இருக்கறது.. ன்னு உள்ள  இருக்க கலவரத்தை வெளியில் காட்டாமல்,

'என்ன ஆனாலும் வந்துடுவாரு, ராத்திரி அங்க தங்கமாட்டாரு '

'ராத்திரி இங்க தனியா உக்காந்திருந்தா.. சேஃப் கிடையாது.. ரேப் பண்ணிடுவாங்க '

 ஷ்ஷ்ஷ்.. இந்தாளோட...  'ஒஹோ?' 

என்னோட இந்த ரியாக்‌ஷனை கிழவன் எதிர்ப்பார்க்கல.

எதிர்ப்பார்த்தது என்னவோ... '..அய்யயோ ரேப் பண்ணிடுவாங்களா?   எப்படி இங்க தனியா உக்காந்து இருக்கறது,  எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா....  'நீங்க ரூம் எடுத்தா, என் ஹஸ்பன்ட் வரும் வர உங்களோட  நானும்  ரூம் ல வந்து இருக்கவா?, நாம இரண்டு பேரும் ஒன்னா நாஷ்டா சாப்பிடலாம்.. ஹி ஹி.ஹி...' 

அந்த கிழவனின் நல்ல நேரம், அதற்கு மேல் பேசமுடியாமல்,  மேலேருந்து அந்தாளோட வந்தக்கூட்டம் நீயும் வந்துடுன்னு பிரஷர் கொடுக்க, வேற வழியில்லாமல், முட்டி வலியால், மலை ஏற முடியாமல், டோலி க்கு 5000 ரூ பேசி, மூட்டை முடிச்சை த்தூக்கிக்கிட்டு போய் சேர்ந்தார்.

ஒருத்தனுக்கு ஏன்ச்சே நடக்க முடியலையாம்......

இந்த கிழம் மட்டும் தமிழா இல்லாட்டி, நேரா போலிஸ் கிட்ட தான் போயிருப்பேன். இவனையெல்லாம்  தாத்தா ன்னு கூப்பிட்டு பாசத்தைக்காட்ட வீட்டுல பேரக்குழந்தைகள் இருக்கும், நாசமா போனவன்..

தனியா ஒரு பெண் இருந்தால்,  இப்படி பேசி செட் ஆகுமான்னு பாக்கத்தான் ஆண்கள்  நினைக்கிறார்கள்.  இதற்கு வயது வித்தியாசமே இல்லை. சின்னப்பசங்க க்கூட கொஞ்சம் பயப்படுவாங்க..ஆனா இந்த கிழங்க இருக்கே.... இத்தனைக்கும் யாரோடும் நான் பேசல,  தூங்கினேன், முழிச்சிட்டு இருந்த நேரம் வேடிக்கைப்பார்த்துட்டு இருந்தேன்... ஹூம்... எங்க இருந்தாலும், இப்படியான ஆட்களை சமாளிக்க தான் தைரியம் தேவைப்படுகிறது.

மதியம் 2.45 இருக்கும், என் கணவர் திரும்பி வந்தார்...


தொடரும்.....

பயணக்குறிப்புகள் -சபரிமலை-அச்சன்கோயில்-ஆலப்புழா

சபரிமலைக்கு போகனும் என்பது சிறுவயது ஆசை.  காரணம் அப்பா, 48 நாள் விரதமிருந்து 7 முறைக்கு மேல் சென்றுவந்தவர், ஒவ்வொரு வருடமும் அவரின் விரத நாட்களில் அவரோடு கோயிலுக்கு செல்வதும், இருமுடிக் கட்டுவதிலிருந்து,  அவரை கோயிலுக்கு அனுப்பும் வரை கூடவே இருந்ததும், அப்பாவிடம் சபரிமலை கதை கேட்டதாலும், இந்த ஆசை வளர்ந்திருந்தது. ஆனால் பெண்கள் அனுமதி இல்லாதது, அங்கு செல்ல வாய்ப்பில்லாமல் இருந்தது. எனக்கிருந்த இந்த ஆசை என் கணவருக்கு தெரியும். 

இப்பதான், பெண்கள் செல்ல அனுமதி இருக்கே, தவிர கருப்பை நீக்கியாச்சி, இதையும் சொல்லி போய்விடலாம் என்று கிளம்பினோம். பொதுவாக எனக்கு கூட்டமிகு கோயில்கள் நெருச்சலில் அடிச்சி புடிச்சி போக பிடிப்பதில்லை. அத்திவரதரை பார்க்காமல் விட்டதற்கு இதே கூட்டம் தான் காரணம். ஓணம் பண்டிகையை அடுத்து கோயில் 5 நாட்கள் திறந்திருக்கும் என்பதை அறிந்து, கிளம்பினோம்.  தேக்கடி செல்லும் போதே  இரவு 10 மணி ஆகிவிட்டதால், அங்கு அறை எடுத்து தங்கிவிட்டு, விடியற்காலை 5 மணிக்கு சபரிமலை நோக்கிப் புறப்பட்டோம்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும், ஏற்ற இறக்கத்தோடு
வளைந்து  நெளியும் சாலைகளும் சொல்லில் அடங்கா அழகு, காரின் சன்னலை திறந்து சில்லென்ற இயற்கைக்காற்றை ரசித்தவாரே சென்றோம். 'நிலக்கல்' அடையும் போது காலை 8 மணி இருக்கும், காவல்துறை தடுத்து நிறுத்தியது. பம்பை வரை செல்ல அனுமதி இல்லை, இங்கேயே காரை நிறுத்தி பேரூந்தில் செல்லுங்கள் என அறிவுருத்தினர். 

காரை நிறுத்திவிட்டு, பெண்களுக்கான கழிவறைத்தேடி ஓய்ந்துப்போனோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெண்கள் யாரும் கண்ணில் படவில்லை. நான் மட்டும் தனியாக அனைவரும் கவனிக்கும் படி நடமாடினேன் என்றெஏ சொல்லவேண்டும். எங்களின் பிரச்சனையை கண்டுக்கொண்ட தமிழ் சாமிகள் சிலர், ஆண்கள் செல்லும் கழிப்பறையை உபயோகித்துக்கொள்ளுங்கள், வேறு வழியில்லை என சொல்லியதில், என் கணவரை கழிவறை வாசலில் நிற்க வைத்துவிட்டு சென்று வந்தேன். அசுத்தம், அசிங்கம், நாற்றம். ஓவ்வேக் ..வகை.....வேற வழியில்லை.

காலை உணவு அப்பம் , சோயா குழம்பு, கடலை குழும்பு ன்னு ஆளுக்கு ஒன்றாக சாப்பிட்டு முடித்து, பேரூந்து நிறுத்தம் தேடி வந்து, பேரூந்தில் அமர்ந்தோம்.  ஒரு போலீஸ் அம்மா எங்க பின்னாடியே ஏறி வந்து, சத்தமில்லாமல் ரகசியமாக புன்னகையோடு ஹிந்தியில் பேச ஆரம்பிச்சாங்க.  'மலைக்கு ப்போறீங்களா?' இந்த கேள்வி எனக்கு மிக அபத்தமாக ப்பட்டது. 'ஆமா'ன்னு பதில் சொல்லிக்கிட்டே,  மருத்துவ குறிப்புகளை எடுத்து காட்டினோம்.அடுத்து  'வயசு என்ன?' ன்னு கேட்கவும், ஆதார் கார்டை காட்டினோம். 'இருங்க எங்க பெரிய ஆபிசர் 'ட்ட கேட்டுட்டு வரேன்'னு சொல்லிட்டு போனாங்க. பக்கத்தில் ஜீப்பில் இருந்த பெரிய ஆபிசரிடம் என்னவோ பேசிவிட்டு திரும்ப வந்து, போக சொல்லிட்டாரு, பம்பையில் செக்கிங் நடக்கும் அவங்க பாத்துப்பாங்கன்னு சொல்லிட்டு, இறங்கிட்டாங்க. 

பம்பையில் இறங்கியவுடன், டோலியில் தூக்கி செல்லும் ஆட்கள் வந்து கேட்க ஆரம்பித்தனர், டோலி தூக்குபவர்கள் அத்தனைப்பேரும் 'தமிழர்கள் ' என்பது குறிப்பிடத்தக்கது. தேவஸ்தானத்தில் லைசன்ஸ் பெற்று இந்த வேலையை செய்வதாக சொன்னார்கள்.  ஒரு டொலிக்கு தூக்குபவர் 4 பேர், 5000 ரூபாய் கேட்கிறார்கள். மிக சிரமமான வேலைதான்.  தமிழர்கள் கேரளாவில் செருப்பு தைப்பதும், இப்படி சுமைத்தூக்கும் வேலைசெய்வதும், மும்பையில் கூலிக்கு வேலை செய்வதும் பார்க்கும் போது எனக்கு மிகுந்த அவமானமாக இருக்கும், இதே வேலையை ஏன் இவர்கள் தமிழ்நாட்டிலேயே செய்யக்கூடாதுன்னு தோணும். எதுக்கும் பிரயோசனம் இல்லாத என் ஆதங்கத்தையும் கோவத்தையும் தூக்கி அப்படிக்கா வச்சிட்டு, பிரயாணத்தை பார்ப்போம்.

முதலில் என்னை அனுமதிப்பார்களா எனப்பார்க்கலாம், அப்படியே அனுமதித்தாலும் நடந்து தான் போவோம், அதனால் டோலி தேவையில்லை என மறுத்துவிட்டு, பம்பை ஆற்றை நோக்கி நடந்தோம்.  சற்று தூரத்தில், மஃப்ட்டியில் இருந்த பெண் போலிஸ்  என்னை நெருங்கி என்னுடன் நடந்தவாரே, எதற்கு வந்திருக்கிறேன் என ரகசியமாக, சத்தமில்லாமல் கேட்க, உடனே ஆதார் கார்ட்டையும், மருத்துவ ரெக்கார்ட் களையும் காட்டினோம், ஃபோட்டோ எடுத்து, வாட்சப் பில் பெரிய ஆபிசருக்கு அனுப்பி, பதில் வந்ததும், 'நீங்கள்  செல்ல அனுமதியில்ல, அவர் மட்டும் செல்லட்டும், நீங்க கணபதி கோயில்ல உட்கார்ந்திருங்க' ன்னு சொல்லவும், திரும்ப நாங்க எத்தனை கேட்டும் அதே பதிலே வந்ததால், சரிங்க'ன்னு சொல்லிட்டு ஆற்றுக்கு வந்தோம்.

பம்பை, ஒரே குப்பை, மூழ்கி எழுந்தால் குப்பையும் துணியும் தலையில் மாட்டியிருக்கும், சில நேரம் மலம் கூட மிதந்து வரும்னு அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் தற்போது அப்படியில்லை. சமீபத்தில் வந்த வெள்ளத்தில் எல்லா அழுக்கும், அசிங்கங்களும் அடித்து செல்லப்பட்டு,  சுத்தமாக கண்ணாடி மாதிரி தண்ணீர் மின்னியது.  உள்ளேயிருக்கும் குழாங்கற்களும், மணலும் பளீச்சின்னு தெரிய, நீரோட்டம் வேகமாக இருந்தது. கால் வைத்ததும், சில்லுன்னு உடல் நடுங்க ஆரம்பிச்சித்து. நான்  படியில் அமர்ந்து மெது மெதுவாக ஒவ்வொரு படியாக கீழே இறங்கி உட்கார்ந்து குளிக்க ஆரம்பித்தேன். என் கணவரோ தண்ணீரின் வேகத்தில் நிற்க முடியாமல், நீரோட்டத்தோடு நகர ஆரம்பித்தார். அவ்வப்போது அவரை இழுத்து ப்பிடித்து, 'பிடிச்சிக்கிட்டு குளிங்க'ன்னு அவர் கையை வலுக்கட்டாயமாக இழுத்துப்பிடித்துக்கொண்டே நானும் குளித்தேன். அவரோ என் கையை விடுவிச்சி, நின்ற இடத்தில் குதிப்பதும், உட்காருவதும், நீரோட்டதோடு ஓடி திரும்ப நான் இழுப்பதுமாக குளித்தார்.  இருவருக்குமே எழுந்துவர மனசேயில்ல. அப்படியோரு நீரோட்டம். நேரம் அப்படியே நிற்குமா.. மேலே சென்று திரும்ப வேண்டுமே... 

மனசில்லாமல் எழுந்து, துணி மாற்றி, கணபதிகோயிலை சென்று அடையும் போது மணி 10 ஆகியிருந்தது, களைப்பு ஏற்பட்டால் சாப்பிட பிஸ்கெட் சாக்லேட் வாங்கிக்கொண்டு, வேக வேகமாக மலையேற செல்லும் பாதை நோக்கி சென்றோம்,  மஃப்ட்டி போலீஸ் அம்மா என்னை பின் தொடர்ந்து வந்து வழிமறித்தார்....


தொடரும் .......

ராஜிவ் காந்தி (OMR) & சென்னை ஒன் சாலை கதைகள்

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு செல்லும் வழக்கம், OMR வெறிச்சோடி கிடக்கும். சோழிங்கநல்லூர் தாண்டி சாலையின் இருபுறமும் மாந்தோப்புகள் இருக்கும். இரவில் பயணம் செய்ய பயமாக இருக்கும், சாலை விளக்குகள் எங்கோ ஒன்றிரண்டு இருக்கும். கடைகள் எதும் கண்ணில் படாது..

ஐடி கம்பெனிகளால்,வேளச்சேரி குடியிருப்பு & அதை ஒட்டிய தேவைகளுக்காக அசுர வளர்ச்சியை அதிவிரைவில் அடைந்ததோ, அதே காரணங்களுக்காக, கடந்த 10-15 ஆண்டுகளில் OMR உம், அதை சுற்றியுள்ள பகுதிகளும் அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

சென்னையில் உள்ள 70% மக்கள் இங்கே தான் வேலைக்கு வருகிறார்கள் போல, அலுவலகம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் நெஞ்சை அடைக்கிறது.  வாகனங்கள் விடும் புகையில், தலைசுற்றல் மயக்கம், அதைவிட மணிக்கணக்கில் நிற்பது ஆயாசமாக இருக்கிறது. ஒவ்வொரு சிக்னலிலும் தப்பித்தோம் பிழைத்தோம்னு ஓட வேண்டியிருக்கு. தலையெழுத்து + தலைவேதனை.

கிட்டத்தட்ட 1.5 மாதம் இவ்வழியே தினம் காலையும் மாலையும் செல்ல வேண்டியக்கட்டாயத்தில் இருந்தேன்.  வழி நெடுக ஐடி மக்கள் அடிக்கும் கூத்தையும், கால் தடுக்கினால் ஒரு உணவு விடுதியின் வாசலில் நிற்குமளவிற்கு, குறிப்பாக அசைவ உணவு விடுதிகளும், நடைப்பாதை கையேந்தி பவன்களும்.... இரவில் 9-10 ஆனாலும் பெண்கள் கையேந்திபவன்களில் உணவருந்தும் காட்சி கண்கொள்ளவில்லை. இருந்துட்டுப்போட்டும், அவர்களின் பாதுகாப்பு அவர்களின் கையில். பெரிதாக இதைப்பற்றி எல்லாம் கவலைக்கொள்ள ஓன்றுமில்லை. இவர்கள் நிற்கும் தைரியத்தில், நானும் ஒருநாள் இரவு கைந்யேந்தி பவனில் நின்று சாப்பிட்டேன். கவனித்தது, வேலை முடிந்து வீட்டுக்கு/விடுதிக்கு போகும் இரவு நேரங்களில் கூட அந்த ஐடி கார்ட் ஐ கழுத்தில் நாய் செய்யின் போல மாட்டிக்கொண்டு இருப்பதில் இவர்களுக்கு என்ன பெருமையோ...???? யாமறியோம் பராபரமே !!!

இந்த பதிவை எழுதக்காரணமே சென்னை ஒன் சாலையில் தினம் நான் பார்த்த அந்தப்பெண் தான்.  பாலியல் தொழிலாளி, இரவு 8 மணிக்கு மேல், அற்புதமாக தன்னை அலகரித்துக்கொண்டு, தலைநிறைய பூ,  உதட்டு சாயம், தொப்புள் தெரிய புடவை, ஒருப்பக்கமாக ரவிக்கை த்தெரிய இழுத்து விட்ட புடவை, கோயில் சிலையைப்போல அன்றாடம் சாலையோரம் வாகனங்கள் வரும் திசைநோக்கி நிற்பது, எனக்கு கொல்கத்தாவில் 'சோனாகஞ்ச்'ல் பார்த்த பெண்கள் தான் நினைவுக்கு வந்தனர். இப்படி அப்பட்டமாக நிற்பது அதும்  சென்னையில்???  எதைக்குறிக்கிறது/???. ஐடி துறை வளர்ச்சியின் பலன்களாக எடுத்துக்கொள்ளலாமா.????

இவர் ஒருத்தர் தானா என்றால் இல்லை , தொடர்ந்து சிறு இடைவெளியில் மரத்துக்கு மரம் 3-4 பேர் நிற்கின்றனர். என் கவனத்தை ஈர்த்தவர் இவரே. காரணம் அழகு....கொள்ளை அழகு, தமிழ் பெண்ணாக இருக்க வாய்ப்புகள் குறைவு. நடிகை ரித்விக்கா , 'டார்ச்லைட்' படத்தில் பாலியல் தொழிலாளியாக, இரவில் இப்படிதான் சாலையோரம் ஆட்களை எதிர்நோக்கி நிற்பார். ஆனால், இதுவோ சென்னையின் முக்கியப்பகுதி, மக்கள் அதிகமுள்ள,  1000க்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இடம், இங்கே இரவு 8 மணிக்கே நிற்பது.......  காவல்துறை என்ன செய்கிறது ?. இதன் தேவையை உணர்ந்து, இங்கு வருமானமும் அதிகம் வருவதால் தான் பெண்கள் இவ்விடத்தை தேர்வு செய்திருக்கின்றனர் எனப்புரிகிறது.

கொல்கத்தா, மும்பை, டெல்லி போல சென்னையும் மாறி வருகிறதா... ?? கூட அழைத்து செல்ல முடியாதோர், அங்கேயே இருட்டில் வைத்து நடத்தும் கசா முசாக்களும் கண்ணில் பட்டது.  ஐடி யில் வேலை செய்பவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நினைத்துப்பார்த்தால்..... 

என்னமோ நல்லாயிருங்க.. உங்க சம்பாத்யமும், அதில் நீங்கள் ஆடும் ஆட்டமும்......

எங்க வீட்டு சமையல் ; நெய் காய்ச்சும் முறை

வீட்டில் பாலாடையை சேர்த்து வைத்து, நெய் எப்படி காய்ச்சலாம்னு பார்க்கலாம்.  முன்னதாக,  என்னுடைய சின்ன வயசில், எங்க வீட்டுக்கு தயிர் கொண்டு வரும் தயிர்காரம்மா லட்சுமி பத்தி சொல்லனும்.

லட்சுமிம்மா ,மூங்கிலால் பின்ன கூடையில், ஒரு பெரிய பானை வைத்து, அது ஆடாமல் இருக்க கூடைக்கும் பானைக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை வைக்கோல் வைத்து சுத்தி, கச்சிதமா எடுத்துட்டு வரும். கிராமத்து கட்டு புடவை, ஒரு பெரிய மூக்குத்தி, பெரிய பெரிய கம்மல் , அதோட கருப்பு நிறத்துக்கு பள பளன்னு மின்னும். தினம் தயிர் அந்தம்மாக்கிட்ட தான் ஆயா வாங்குவாங்க.

எங்க வீடு முதல் மாடி, கூடையை தூக்கிக்கிட்டு குரல் கொடுத்துட்டே மேல வந்து நின்னுடும். கூட்டுக்குடும்பம், யாராவது இருப்பாங்க. கூடையை இறக்கி விட்ருவாங்க. அப்பா , தாத்தா வை தவிர யார் வேணாலும் இந்த வேலை செய்வாங்க. அது என்னவோ,  அவங்க இரண்டு பேரும் இதெல்லாம் செய்து நான் பார்த்ததில்லை. இப்பவா இருந்தா கேட்டு இருப்பேன். 'நீங்க என்ன பெரிய இதுவா??? ன்னு. அப்ப கேக்கவே தோணியதில்ல.

எனக்கு தயிர் வாங்கறதுல அலாதிப்பிரியம், அதுக்கு காரணமிருக்கு, தயிர் வாங்கினப்பிறகு கொஞ்சமா கரண்டியில் எடுத்து என் வாயில ஊத்தும். ;) தயிர்காரம்மா சத்தம் கேட்டா போதும், சொம்பை எடுத்துட்டு குடுகுடுன்னு ஓடுவேன். அந்த பெரிய தயிர் பானைக்கு மேல , வெண்ணெய் இருக்கும் குட்டி பானை ஒன்னோ இரண்டோ எடுத்துட்டு வரும். யாராவது நெய் வேணும்னு கேட்டால், அவங்க வீட்டிலேயே வெண்ணெய்யைக் காய்ச்சி கொடுத்துட்டு போகும்.

இப்படி எங்க வீட்டில காய்ச்சும் போதும் நான் அங்க ஆஜர் ஆகிடுவேன். இது எதுக்குன்னா , நெய்யில் வாசனைக்கு போடற முருங்கைக் கீரையை சாப்பிடத்தான்.   தயிர்காரம்மா, விறகு அடுப்பில் வாணல் வைத்து காய்ச்சும், காய்ச்சிட்டு அளக்கும் போது , ஆயாவிற்கும் தயிர்காரம்மாவுக்கும் சண்டை வந்துடும். ஆயா, நெய் சூடா இருக்கப்ப அளக்க விடமாட்டாங்க. தயிர்காரம்மா அடுப்பிலிருந்து இறக்கியவுடனே அளக்கும். சூடா இருக்கப்ப அளந்தால் நமக்கு அளவு குறையும், இப்ப 200 மிலி நெய்ன்னு வைங்க, சூடு குறையும் போது 190-195 மிலி தான் இருக்கும்.  இதுக்கு தான் சண்டை நடக்கும். எப்படியோ ஒரு ஆழாக்கு நெய் வாங்க, எவ்ளோ வேலைப்பாப்பாங்க.


1 லிட்டர் பாலில் ஒரு வாரத்திற்கு பாலாடையை சேர்த்து வைத்தால், இந்த கப் அளவிற்கு கிடைக்கும். தயிர் மேல படியும் பாலாடையையும்  (லேசா மஞ்சளா படிஞ்சிருக்கும்) இதுக்கூடவே எடுத்து வைக்கலாம்.

1.பாலாடையை கப்பிலிருந்து மிக்ஸியின் பெரிய ஜாடியில் கொட்டி, அத்துடன் ஐஸ் க்யூப்ஸ் ஐ கொட்டி, தண்ணீரை முக்கால் ஜாடிக்கு ஊற்றிக்கனும். இந்த ஒரு கப் ஐ நான் பாதி பாதியா தான் எடுத்து செய்திருக்கேன்.
 

 2. மிக்ஸியை 30 வினாடி 1 ல் வைத்து சுற்றவும்.  பிறகு , 3 ல் 1 நிமிடம் தொடர்ந்து ஓட்டினால் வெண்ணெய் திரண்டு வரும். ஒருவேளை வரலைன்னா, 3 ல் வைத்து சுற்றிக்கொண்டே இருக்கவும், கண்டிப்பாக வெண்ணெய் திரண்டு வரும்
 3. ஜல்லிக்கரண்டியால் வடிகட்டி எடுத்து கணமான அடி இருக்கும் பாத்திரத்தில் கொட்டி இளந்தீயில் வைத்து வெண்ணெய்யை காய்ச்சனும். 4. படத்தில் இருக்கும் பதம் வந்ததும், கொழுந்தாக முருங்கைக்கீரை +  1/4 உப்பு பொட்டு பொரிந்தவுடன்,  கலக்கி கொதித்தவுடன் இறக்கி சூடு குறைந்தவுடன். பாட்டில் அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைக்கவும் 👇
 ப்ளாசிடிக் குடுவைகளை தவிர்க்கவும்.
 வண்டலில் சாதம் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.  அல்லது அன்று செய்த சமையல் சாம்பார் , குழம்பு அப்படி எதும் இருந்தால் இந்த பாத்திரத்தில் கொட்டி கலக்கி எடுத்துவைத்துக்கொள்ளலாம். வண்டலை வீணாக்க வேண்டியதில்லை.