செப்டம்பர் மாதம் இங்கு வந்தோம். டிசம்பர் 20 தேதி ஆகுது. சென்னையிலேயே ரொம்ப வெளியில் எல்லாம் போகமாட்டேன்..  இங்க சொல்லவே வேணாம். மொழி தெரியாது..  கடைக்கு எப்பவும் வூட்டுக்கார் கைய பிடிச்சிட்டு போயிட்டு, அவரோட வாயாலேயே பேசி..தேவையானதை வாங்கிட்டு வந்துடுவேன்.

இதுல வூட்டுக்கார் உதவி இல்லாமல் தத்து பித்துன்னு எதையோ பேசி சேர்ந்து, தொடர்ந்து போயிட்டும் வரது டான்ஸ் க்ளாஸ் மட்டும் தான். ஜிம்'மும் வூட்டுக்கார் தான் சேர்த்துவிட்டாரு.. ஆனா அங்கவும்.. கடகடன்னு என்னிடம் பெங்காலில் பேசுவோரிடம் திரு திரு'ன்னு முழுச்சி.. "மவளுங்களா..நானும் இப்படி தமிழ் பேசினா ஒரு மண்ணும் உங்களுக்கு புரியாது" ன்னு மனசுக்குள்ள செம கடுப்பா சொல்லிக்கிட்டு, வெளியில் சிரிச்சிக்கிட்டே "முஜே பெங்காலி மாலும் நய்,ஹிந்தி பி குச் குச் மாலும், அங்ரேஜி சல்தா.. .மே யூ ப்ளீஸ் டாக் இன் இங்லீஷ்  " னு சொல்லின்னா போதும்.. அப்படியே தெறிச்சி ஓடிடுவாளுங்க !! ம்ம்ம்ம் அது! அந்த பயம் இருக்கனும் !!! யார்கிட்ட' ன்னு எஸ் ஆகி ....என் வேலைய நான் பாத்துட்டு வந்துடுவேன்.

இப்படியான தினப்படி வாழ்க்கையில், சுற்றி நடப்பவற்றை, அவர்களின் வாழ்க்கைமுறை, வரலாறுன்னு பார்க்கும் போது ..இந்தியாவில் "பெங்காலி" கள் தான் எல்லாவற்றிலும் முதன்மையானவர்கள், சிறந்தவர்கள்னு எண்ண வைக்கிறது. எந்த புதிய விசயத்தையும் இவர்கள் தான் ஆரம்பிக்கிறார்கள் அறிமுகம் செய்கிறார்கள் என்றும் தெரிகிறது. 

ஆங்கிலம் மட்டுமே இவர்களுக்கு வேற்று மொழியில்லை. ஹிந்தியும் இவர்களுக்கு பிடிப்பதில்லை.  தாய்மொழி ஒன்றை வைத்துக்கொண்டு பல விசயங்களை இவர்களால் சாதிக்க முடிகிறது என்பது இவர்களின் வலிமை.

அந்தமான் சிறையை எத்தனைப்பேர் பார்த்திருக்கிறீர்கள்..?! அங்கு சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர்களில் அதிகபட்சமானோர் பெங்காலை சேர்ந்தோர். நாட்டுக்காக எத்தனை துன்பத்தை அனுபவித்திருப்பார்கள் என்று சொல்லவேண்டியதேயில்லை. இப்போதும் சென்னை தவிர்த்து கல்கொத்தாவிற்கும் அந்தமானுக்கும் தினசரி விமானப்போக்குவரத்து உள்ளது.  இந்த சிறையில் இந்திய கைதிகள்  பெயர் பட்டியலில் மிக பொறுமையாக நான் தமிழர்களின் பெயர்களை தேடியதில் மூவரின் பெயர் கிடைத்தது. யார்னு கேக்கப்பிடாது. ஃபோட்டோ எடுக்கல.. பெயரும் நினைவில்லை.   3 பேர் மட்டும்னு தலையில் நல்லா பதிஞ்சியிருக்கு..!!

கவிதைகள், கலை, கலாச்சாரம், கல்வி,
கடவுள் என எல்லாவற்றிலும் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள்.  ரவீ(பி)ந்தரநாத் தாகூர், நேதாஜி, விவேகானந்தர் போன்றோர் சில உன்னத எடுத்துக்காட்டுகள்.  எத்தனை நாகரீகம் வந்துவிட்ட போதிலும், பொருளாதாரத்தில் அனைத்து நிலையிலுள்ள மக்களும் அவர்களின் சொந்தக் கலாச்சாரத்தை தொலைக்காமல் இருக்கிறார்கள், தொடர்கிறார்கள் என்பது அழுத்தமாக பதியப்பட வேண்டிய விசயம். !

இப்படியான இந்த பூமியில் -

புனித நதியான கங்கை
- பெங்காலின் பல பகுதிகளில் வளைந்து நெளிந்து "வருடம் முழுக்க வற்றாமல்" கரைக்கு கரைத்தொட்டு ஓடிக்கொண்டிருந்துக்கிறது. 1.5 -2 கிமி தொலைவு அகலமுடையதாக (மனக்கணக்கு) இடத்திற்கு இடம் இந்த அகலம் கூடும் குறையும்.  இந்த நதியைப்பார்க்க பார்க்க பார்க்க  ஆனந்தம்.. "யப்பாஆ...எவ்ளோ தண்ணீ.." ன்னு என்னை பிரம்மிக்க வைக்கிறது. ஒவ்வொரு முறை இந்நதியை பார்க்கும் போதெல்லாம்...இந்த இரண்டு கண்கள் போதவில்லை இதை ரசிக்க...இன்னும் கூடுதலாக கண்கள்  இருந்தால் என்ன என நினைக்கிறேன்.  

ஒரு நாட்டுக்கு தேவையான முக்கிய மூலதனத்தில் "நீர்" முதன்மை.. அந்த நீர் ஆதாரத்தை கையில் வைத்துக்கொண்டு ...எப்போதும் "வேலையில்லா பிரச்சனை", "வறுமை" என பேசி வருவதோடு, வேலைக்காக கூலிகளாக வேற்று மாநிலத்தை தேடி செல்கின்றனர்.

இப்படி வளமான ஒரு பூமியின், இவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் "கம்யூனிசம்"  என்றால்................

அணில் குட்டி : எப்படி முடிச்சியிருக்காங்க பாத்தீங்களா? எப்பவும் எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி சீன்...!! .. ஆனா அம்மணிக்கு கம்யூனிசம் பத்தி ஒன்னும் தெரியாது..அதான்.. அப்ரப்ட்டா அப்படியே நிறுத்தியிருக்காங்க...

பீட்டர் தாத்ஸ் : “The river is everywhere.” ― Hermann Hesse, Siddhartha  

Gangai : My clicks
Rest images : Courtesy Google : Thx.