பயணக்குறிப்புகள் -சபரிமலை-அச்சன்கோயில்-ஆலப்புழா-2


முதல் பதிவு - பயணக்குறிப்புகள் -சபரிமலை-அச்சன்கோயில்-ஆலப்புழா 


'ஐடி ப்ரூஃவ் காட்டுங்க'

ஆதார் & மருத்துவக்கோப்புகளை காட்டினோம்,

 'இருங்க, பெரிய ஆபிசர் ட்ட பேசிட்டு வரேன்னு' போனார்,பார்த்துக்கொண்டே இருந்தோம். வெகு நேரம் பேசினார்.

திரும்ப வரும்போது, கூடவே ஜீப்பிலிருந்த பெரிய போலிஸ், ட்ரைவர் சீட்டில் இருந்த போலிஸ், எங்கிருந்தோ ஒரு  நடுத்தர வயது யுனீஃபார்ம் போட்ட போலீஸம்மா, எங்கள் பின்பக்கமிருந்து இரண்டு போலீஸ் என 6 பேர்  ஒரே சமயத்தில் எங்களை ரவுண்டு கட்டினர்.

மஃப்ட்டி பெண் போலீஸ் மலையாளத்தில் பேச ஆரம்பித்தார்

 'மேடம்........ 50 வயது ஆனால் தான் போகமுடியும், நீங்க இப்ப போகமுடியாது, சார் வரைக்கும் போயிட்டு வரட்டும், நீங்க இங்கவே இருங்க'....

உடனே பெரிய போலீஸ், 'இங்கப்பாருங்கம்மா, உங்களை அனுப்புவதில் எங்களுக்கு ஒரு பிரச்சனையுமில்லை, நடு வழியில் மலையாள சாமிகள் பிரச்சனை செய்வாங்க, ரொம்ப சிரமம் ஆயிடும், உங்களால மேலயும் போகமுடியாது, கீழவும் திரும்ப வரமுடியாது. '

நடுவில் இன்னொரு போலிஸ், 'நீங்க எங்கிருந்து வரீங்க' என்றார். 'சென்னை 'னு சொன்னதும், 'தமிழா 'ன்னு தமிழில் பேச ஆரம்பித்தார்.

 'மேல ஏறவிடாமல் தடுப்பாங்க, உங்களை கல்லால் அடிப்பாங்க, கட்டையால் அடிப்பாங்க, கோஷம் போடுவாங்க.. எங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது, முடியுமென்றாலும், பிரச்சனையாகும், மீடியா வேற ரெடியா காத்துக்கிட்டு படம் பிடிப்பாங்க, உங்களுக்குதான் கஷ்டம் 'என்றார்,

அந்த நடுத்தர வயது போலீஸ்ம்மா, அவங்க பங்குக்கு பயமுறித்தினார்.

திரும்பவும் பெரிய போலீஸ் '50 வயசு ஆனவுடன் வாங்க.., யாரும் உங்களைத் தடுக்க முடியாது.. நீங்க போயிட்டு வரலாம்' சொல்லிவிட்டு மென்மையாக சிரித்தார்.

'மேல பிரச்சனை செய்வாங்கன்னு சொல்றீங்களே அவங்க, ஐடி கார்ட் கேட்பாங்களா?? என்றேன்.

மஃப்ட்டியும், தமிழும் 'கேட்பாங்க' என்றனர்.

'அப்ப சரி அவங்கக்கிட்ட என் மருத்துவ ரெக்கார்ட் காமிக்கிறேன், அப்ப போக சொல்லி விட்ருவாங்கில்ல'  என்றேன்.

உடனே பெரிய போலீஸ் முகம் மாறியது. 'நீங்க என்னசொன்னாலும் விடமாட்டாங்கம்மா, புரிஞ்சிக்கோங்க.. 50 வயசானவுடனே வாங்க, யாரும் உங்களை தடுக்க முடியாது. தைரியமா போலாம்.' என்று வராத சிரிப்பை வரவழித்து சிரித்தார்.

இப்படியே இவங்களோடு பேசிக்கிட்டு இருப்பதில் பிரயோசனமில்ல, மேல போயிட்டு திரும்ப வந்து, நாங்க வீடு திரும்பனும், நேரமில்லன்னு மனசுல நினைச்சிக்கிட்டு,

'இத்தனை பிரச்சனையோடு சாமி ப்பார்க்கனும்னு இல்லீங்க, கோயிலுக்கு வரதே அமைதிக்காகவும், நிம்மதிக்காகவும், இதுல இதெல்லாம் தேவையில்லாத வேல, அவர் போயிட்டு வரட்டும், நான் எங்கே காத்திருக்கனும்? " என்றேன்.

'இந்த மண்டபத்திலேயே உக்காருங்க, எங்க கூடவே வேணும்னாலும் உக்காந்துக்கோங்க' என்றார் பெண் மஃப்ட்டி.

'அவர் சென்று வர எவ்வளவு நேரமாகும்?? ' என்றேன்

'3-4 மணி நேரம் ஆகும்... .'. என்றார் பெரிய போலிஸ்

என்னை அனுப்பாவிட்டால், என்ன செய்வதென, தோளில் மாட்டும் சின்னப்பையில், அவருக்கு ஒரு மாற்று உடை, சாக்லெட், பிஸ்கேட், தண்ணீர், சின்ன டவல், கொடை வைத்து எடுத்து வந்திருந்தேன்.. அதை அவரிடம் கொடுத்து, 'நீங்க கிளம்புங்க' னு அனுப்பியபோது காலை மணி 10.30.

மற்ற பைகளை எடுத்துக்கொண்டு மஃப்ட்டி போலிஸ் பின்னாடி நடந்தேன்.  அவர்கள்  எல்லோரும் அமர்ந்திருந்த பெஞ்சின் அருகில் இருந்த நாற்காலியில் அமர சொல்லி கைக்காட்டினார். மறுத்துவிட்டு, காலியாக இருந்த ஒரு தூணின் அருகில், துணியை விரித்துப்போட்டு அமர்ந்துக்கொண்டேன்.

**********

முதல் போலிஸ் அம்மாவிலிருந்து கடைசியாக என்னிடம் பேசிய போலிஸ் அதிகாரிகள் வரை, எங்களிடம்  எப்படி நடந்துக்கொண்டார்கள்  என்பதே இங்கு பதியப்பட வேண்டிய விசயம்

நீதிமன்ற உத்தரவு, அதை தொடர்ந்த பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தரிசனத்திற்கு வருகின்ற பெண்களிடம் எப்படி பேச வேண்டும் என நன்றாகவே பயிற்சிக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கூட, அதிர்ந்து பேசவில்லை, புன்னகையோடு, சத்தமில்லாமல், பக்குவமாக பேசினர்.


"Way of approach" னு சொல்லுவோமே அதை உணர முடிந்தது. போலிஸ்  அதிகாரம், அவர்கள் சொல்வதை கேட்டே ஆகவேண்டும் என்ற தொனி  இல்லை.

தவிர, நம்மிடம் பேசி, நாம் எப்படிப்பட்டவர், பெண் புரட்சியாளரா? புரட்சி செய்ய வந்திருக்கிறோமா?? நம்மால் அங்கு பிரச்சனை ஏற்பட வாய்பிருக்கிறதா? மீடியாவை அழைத்து விடுவோமா?? போன்றவற்றை கிரகித்து, அப்படியான அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடாமல், சாதுரியமாக பேசுகின்றனர். 

யாரும் அறியாமல் மஃப்ட்டியில், ரகசியமாக காதோடு பேசுவதுக்கூட, அங்கிருக்கும் பக்தர்களும், கேரள சாமி/ஆசாமிகளின் கவனம் எங்கள் மீது திரும்பாமல் இருக்கவே என ஊகித்தேன். .

அங்கிருந்து புறம்படும் வரை, போலீஸ் என்மேல் ஒரு கண் வைத்திருந்தினர். அது மட்டும் ஏன்னு என்னால் ஊகிக்க முடியல...

**********

மண்டபத்தில், என்னைப்போல அமர்ந்திருந்த இரண்டு தெலுங்கு பெண்கள் என்னிடம் வயதைக்கேட்டனர்,   கேட்ட மாத்திரத்தில், சிரித்துக்கொண்டே ' 50 வயசானாதான் விடுவாங்க, எங்க கூட வந்தவங்க மேல போயிருங்காங்க, அவங்களுக்காக தான் காத்திருக்கோம் .' னு சொல்லிவிட்டு, என் பதிலை எதிர்ப்பார்த்தனர்.

புன்னகையை பதிலாக்கிவிட்டு, பைகளை ஒன்றோடு ஒன்றுபிணைந்து, மேலே என் துப்பட்டாவை சுற்றி, கையை அதுமேல் வைத்துக்கொண்டு, தூணில் சாய்ந்து தூங்கிப்போனேன். தூங்கலாம்அல்லது வேடிக்கை ப்பார்க்கலாம் இதைத்தவிர, தனியாக அங்கே வேறேதும்  செய்வதற்கில்லை.

ஒரு தாத்தா சாமி 60+  இருக்கும்,  நடக்க முடியாமல் சாய்ந்து சாய்ந்து நடந்து வந்தவர், பேச்சுக்கொடுத்தார்.

'அம்மா, என் பையை கொஞ்சம் பார்த்துக்கறீங்களா ? ராத்திரி தங்க ரூம் பார்த்துட்டு வரேன்'

'சரி.. போயிட்டு வாங்க ...'

கொஞ்ச நேரம் கழித்து வந்தார். 'எல்லா இடத்திலும் விசாரிச்சிட்டேன், ரூம் எதுமே கிடைக்கல. உங்கள முதல்ல பார்த்தப்ப மலையாளம்னு நினைச்சேன், நீங்க பதில் சொன்னப்பிறகு தான் தமிழ்னு தெரிஞ்சிக்கிட்டேன் ...'

'ஓ அப்படியா... கீழ ரூம் இருந்ததே..பம்பை ஆறு பக்கத்தில்..... விசாரிச்சீங்களா... '

அது டாய்லட் 'டோட சேர்ந்திருக்கு... அங்க தங்க முடியாது ஒரே நாத்தம்... னு முகம் சுளித்தார்.

'நீங்க சுவாமி பார்த்துட்டீங்களா..'

'காலையில் 4.30 க்கு போயிட்டு 10.30 வந்துட்டேன்...'

'ஹும், விடிய காத்தாலன்னா ஈசியா ஏறமுடியும்....'

'உங்களை எல்லாம் அனுப்ப மாட்டாங்க... என்ன ஒரு 40 வயசு இருக்குமா உங்களுக்கு.?.. நீங்கெல்லாம் மேல ஏறினா.. ஏறும் போதே மென்சஸ் வந்துடுமே... அதான் விடமாட்டாங்க. இந்த சாமிக்கிட்ட அப்படியெல்லாம் விளையாடக்கூடாது.

..............  ( இந்த கிழத்துக்கிட்ட உசாரா பேசனும், வயசானவர்னு பாவம் பாக்கக்கூடாதுன்னு முடிவு செய்துக்கிட்டேன்)

அப்புறம் ராத்திரிக்கு என்ன நாஷ்டா... ??

ஞே.... !!  (ராத்திரியா? யோவ் தாத்தா.. நான் மதியமே சாப்பிடல..இதுல ராத்திரிக்கா?) 'என்னோட ஹஸ்பென்ட் மலைக்கு போயிருக்கார், இப்ப வந்துடுவார், நாங்க ராத்திரி தங்க மாட்டோம்.'

'யாரு அந்த பால்ட் ஹெட் ஆ ?'


(ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...) இல்லீங்க..தலையில் முடி இருக்கும்..'

'ராத்திரியெல்லாம் திரும்ப மாட்டார், இப்பதான் என் கூட வந்தவங்க ஃபோன் செய்தாங்க, ஓணம் பூஜையாம், சாமிய பாக்க முடியலையாம், எப்ப திறப்பாங்கன்னு தெரியலையாம். விடிய விடிய பூஜை நடக்கும், அவரு வரமாட்டாரு....'

லேசாக நெஞ்சை பிசைய ஆரம்பிச்சது.. இந்த கிழம் சொல்றது உண்மையா?  ஃபோனும் சிக்னல் கிடைக்கல, இந்தாள் ஃபோன் மட்டும் எப்படி சிக்னல் கிடைக்குதுன்னு தெரியல, போலிஸ் கூட வாக்கி டாக்கி தான் வச்சி இருக்காங்க.  ராத்திரியாகிடுமோ??? இப்பவே மண்டப்பத்தில் கூட்டம் கம்மி ஆகிட்டே வருது, போக போக எப்படி இங்க உக்காந்துட்டு இருக்கறது.. ன்னு உள்ள  இருக்க கலவரத்தை வெளியில் காட்டாமல்,

'என்ன ஆனாலும் வந்துடுவாரு, ராத்திரி அங்க தங்கமாட்டாரு '

'ராத்திரி இங்க தனியா உக்காந்திருந்தா.. சேஃப் கிடையாது.. ரேப் பண்ணிடுவாங்க '

 ஷ்ஷ்ஷ்.. இந்தாளோட...  'ஒஹோ?' 

என்னோட இந்த ரியாக்‌ஷனை கிழவன் எதிர்ப்பார்க்கல.

எதிர்ப்பார்த்தது என்னவோ... '..அய்யயோ ரேப் பண்ணிடுவாங்களா?   எப்படி இங்க தனியா உக்காந்து இருக்கறது,  எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா....  'நீங்க ரூம் எடுத்தா, என் ஹஸ்பன்ட் வரும் வர உங்களோட  நானும்  ரூம் ல வந்து இருக்கவா?, நாம இரண்டு பேரும் ஒன்னா நாஷ்டா சாப்பிடலாம்.. ஹி ஹி.ஹி...' 

அந்த கிழவனின் நல்ல நேரம், அதற்கு மேல் பேசமுடியாமல்,  மேலேருந்து அந்தாளோட வந்தக்கூட்டம் நீயும் வந்துடுன்னு பிரஷர் கொடுக்க, வேற வழியில்லாமல், முட்டி வலியால், மலை ஏற முடியாமல், டோலி க்கு 5000 ரூ பேசி, மூட்டை முடிச்சை த்தூக்கிக்கிட்டு போய் சேர்ந்தார்.

ஒருத்தனுக்கு ஏன்ச்சே நடக்க முடியலையாம்......

இந்த கிழம் மட்டும் தமிழா இல்லாட்டி, நேரா போலிஸ் கிட்ட தான் போயிருப்பேன். இவனையெல்லாம்  தாத்தா ன்னு கூப்பிட்டு பாசத்தைக்காட்ட வீட்டுல பேரக்குழந்தைகள் இருக்கும், நாசமா போனவன்..

தனியா ஒரு பெண் இருந்தால்,  இப்படி பேசி செட் ஆகுமான்னு பாக்கத்தான் ஆண்கள்  நினைக்கிறார்கள்.  இதற்கு வயது வித்தியாசமே இல்லை. சின்னப்பசங்க க்கூட கொஞ்சம் பயப்படுவாங்க..ஆனா இந்த கிழங்க இருக்கே.... இத்தனைக்கும் யாரோடும் நான் பேசல,  தூங்கினேன், முழிச்சிட்டு இருந்த நேரம் வேடிக்கைப்பார்த்துட்டு இருந்தேன்... ஹூம்... எங்க இருந்தாலும், இப்படியான ஆட்களை சமாளிக்க தான் தைரியம் தேவைப்படுகிறது.

மதியம் 2.45 இருக்கும், என் கணவர் திரும்பி வந்தார்...


தொடரும்.....

பயணக்குறிப்புகள் -சபரிமலை-அச்சன்கோயில்-ஆலப்புழா

சபரிமலைக்கு போகனும் என்பது சிறுவயது ஆசை.  காரணம் அப்பா, 48 நாள் விரதமிருந்து 7 முறைக்கு மேல் சென்றுவந்தவர், ஒவ்வொரு வருடமும் அவரின் விரத நாட்களில் அவரோடு கோயிலுக்கு செல்வதும், இருமுடிக் கட்டுவதிலிருந்து,  அவரை கோயிலுக்கு அனுப்பும் வரை கூடவே இருந்ததும், அப்பாவிடம் சபரிமலை கதை கேட்டதாலும், இந்த ஆசை வளர்ந்திருந்தது. ஆனால் பெண்கள் அனுமதி இல்லாதது, அங்கு செல்ல வாய்ப்பில்லாமல் இருந்தது. எனக்கிருந்த இந்த ஆசை என் கணவருக்கு தெரியும். 

இப்பதான், பெண்கள் செல்ல அனுமதி இருக்கே, தவிர கருப்பை நீக்கியாச்சி, இதையும் சொல்லி போய்விடலாம் என்று கிளம்பினோம். பொதுவாக எனக்கு கூட்டமிகு கோயில்கள் நெருச்சலில் அடிச்சி புடிச்சி போக பிடிப்பதில்லை. அத்திவரதரை பார்க்காமல் விட்டதற்கு இதே கூட்டம் தான் காரணம். ஓணம் பண்டிகையை அடுத்து கோயில் 5 நாட்கள் திறந்திருக்கும் என்பதை அறிந்து, கிளம்பினோம்.  தேக்கடி செல்லும் போதே  இரவு 10 மணி ஆகிவிட்டதால், அங்கு அறை எடுத்து தங்கிவிட்டு, விடியற்காலை 5 மணிக்கு சபரிமலை நோக்கிப் புறப்பட்டோம்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும், ஏற்ற இறக்கத்தோடு
வளைந்து  நெளியும் சாலைகளும் சொல்லில் அடங்கா அழகு, காரின் சன்னலை திறந்து சில்லென்ற இயற்கைக்காற்றை ரசித்தவாரே சென்றோம். 'நிலக்கல்' அடையும் போது காலை 8 மணி இருக்கும், காவல்துறை தடுத்து நிறுத்தியது. பம்பை வரை செல்ல அனுமதி இல்லை, இங்கேயே காரை நிறுத்தி பேரூந்தில் செல்லுங்கள் என அறிவுருத்தினர். 

காரை நிறுத்திவிட்டு, பெண்களுக்கான கழிவறைத்தேடி ஓய்ந்துப்போனோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெண்கள் யாரும் கண்ணில் படவில்லை. நான் மட்டும் தனியாக அனைவரும் கவனிக்கும் படி நடமாடினேன் என்றெஏ சொல்லவேண்டும். எங்களின் பிரச்சனையை கண்டுக்கொண்ட தமிழ் சாமிகள் சிலர், ஆண்கள் செல்லும் கழிப்பறையை உபயோகித்துக்கொள்ளுங்கள், வேறு வழியில்லை என சொல்லியதில், என் கணவரை கழிவறை வாசலில் நிற்க வைத்துவிட்டு சென்று வந்தேன். அசுத்தம், அசிங்கம், நாற்றம். ஓவ்வேக் ..வகை.....வேற வழியில்லை.

காலை உணவு அப்பம் , சோயா குழம்பு, கடலை குழும்பு ன்னு ஆளுக்கு ஒன்றாக சாப்பிட்டு முடித்து, பேரூந்து நிறுத்தம் தேடி வந்து, பேரூந்தில் அமர்ந்தோம்.  ஒரு போலீஸ் அம்மா எங்க பின்னாடியே ஏறி வந்து, சத்தமில்லாமல் ரகசியமாக புன்னகையோடு ஹிந்தியில் பேச ஆரம்பிச்சாங்க.  'மலைக்கு ப்போறீங்களா?' இந்த கேள்வி எனக்கு மிக அபத்தமாக ப்பட்டது. 'ஆமா'ன்னு பதில் சொல்லிக்கிட்டே,  மருத்துவ குறிப்புகளை எடுத்து காட்டினோம்.அடுத்து  'வயசு என்ன?' ன்னு கேட்கவும், ஆதார் கார்டை காட்டினோம். 'இருங்க எங்க பெரிய ஆபிசர் 'ட்ட கேட்டுட்டு வரேன்'னு சொல்லிட்டு போனாங்க. பக்கத்தில் ஜீப்பில் இருந்த பெரிய ஆபிசரிடம் என்னவோ பேசிவிட்டு திரும்ப வந்து, போக சொல்லிட்டாரு, பம்பையில் செக்கிங் நடக்கும் அவங்க பாத்துப்பாங்கன்னு சொல்லிட்டு, இறங்கிட்டாங்க. 

பம்பையில் இறங்கியவுடன், டோலியில் தூக்கி செல்லும் ஆட்கள் வந்து கேட்க ஆரம்பித்தனர், டோலி தூக்குபவர்கள் அத்தனைப்பேரும் 'தமிழர்கள் ' என்பது குறிப்பிடத்தக்கது. தேவஸ்தானத்தில் லைசன்ஸ் பெற்று இந்த வேலையை செய்வதாக சொன்னார்கள்.  ஒரு டொலிக்கு தூக்குபவர் 4 பேர், 5000 ரூபாய் கேட்கிறார்கள். மிக சிரமமான வேலைதான்.  தமிழர்கள் கேரளாவில் செருப்பு தைப்பதும், இப்படி சுமைத்தூக்கும் வேலைசெய்வதும், மும்பையில் கூலிக்கு வேலை செய்வதும் பார்க்கும் போது எனக்கு மிகுந்த அவமானமாக இருக்கும், இதே வேலையை ஏன் இவர்கள் தமிழ்நாட்டிலேயே செய்யக்கூடாதுன்னு தோணும். எதுக்கும் பிரயோசனம் இல்லாத என் ஆதங்கத்தையும் கோவத்தையும் தூக்கி அப்படிக்கா வச்சிட்டு, பிரயாணத்தை பார்ப்போம்.

முதலில் என்னை அனுமதிப்பார்களா எனப்பார்க்கலாம், அப்படியே அனுமதித்தாலும் நடந்து தான் போவோம், அதனால் டோலி தேவையில்லை என மறுத்துவிட்டு, பம்பை ஆற்றை நோக்கி நடந்தோம்.  சற்று தூரத்தில், மஃப்ட்டியில் இருந்த பெண் போலிஸ்  என்னை நெருங்கி என்னுடன் நடந்தவாரே, எதற்கு வந்திருக்கிறேன் என ரகசியமாக, சத்தமில்லாமல் கேட்க, உடனே ஆதார் கார்ட்டையும், மருத்துவ ரெக்கார்ட் களையும் காட்டினோம், ஃபோட்டோ எடுத்து, வாட்சப் பில் பெரிய ஆபிசருக்கு அனுப்பி, பதில் வந்ததும், 'நீங்கள்  செல்ல அனுமதியில்ல, அவர் மட்டும் செல்லட்டும், நீங்க கணபதி கோயில்ல உட்கார்ந்திருங்க' ன்னு சொல்லவும், திரும்ப நாங்க எத்தனை கேட்டும் அதே பதிலே வந்ததால், சரிங்க'ன்னு சொல்லிட்டு ஆற்றுக்கு வந்தோம்.

பம்பை, ஒரே குப்பை, மூழ்கி எழுந்தால் குப்பையும் துணியும் தலையில் மாட்டியிருக்கும், சில நேரம் மலம் கூட மிதந்து வரும்னு அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் தற்போது அப்படியில்லை. சமீபத்தில் வந்த வெள்ளத்தில் எல்லா அழுக்கும், அசிங்கங்களும் அடித்து செல்லப்பட்டு,  சுத்தமாக கண்ணாடி மாதிரி தண்ணீர் மின்னியது.  உள்ளேயிருக்கும் குழாங்கற்களும், மணலும் பளீச்சின்னு தெரிய, நீரோட்டம் வேகமாக இருந்தது. கால் வைத்ததும், சில்லுன்னு உடல் நடுங்க ஆரம்பிச்சித்து. நான்  படியில் அமர்ந்து மெது மெதுவாக ஒவ்வொரு படியாக கீழே இறங்கி உட்கார்ந்து குளிக்க ஆரம்பித்தேன். என் கணவரோ தண்ணீரின் வேகத்தில் நிற்க முடியாமல், நீரோட்டத்தோடு நகர ஆரம்பித்தார். அவ்வப்போது அவரை இழுத்து ப்பிடித்து, 'பிடிச்சிக்கிட்டு குளிங்க'ன்னு அவர் கையை வலுக்கட்டாயமாக இழுத்துப்பிடித்துக்கொண்டே நானும் குளித்தேன். அவரோ என் கையை விடுவிச்சி, நின்ற இடத்தில் குதிப்பதும், உட்காருவதும், நீரோட்டதோடு ஓடி திரும்ப நான் இழுப்பதுமாக குளித்தார்.  இருவருக்குமே எழுந்துவர மனசேயில்ல. அப்படியோரு நீரோட்டம். நேரம் அப்படியே நிற்குமா.. மேலே சென்று திரும்ப வேண்டுமே... 

மனசில்லாமல் எழுந்து, துணி மாற்றி, கணபதிகோயிலை சென்று அடையும் போது மணி 10 ஆகியிருந்தது, களைப்பு ஏற்பட்டால் சாப்பிட பிஸ்கெட் சாக்லேட் வாங்கிக்கொண்டு, வேக வேகமாக மலையேற செல்லும் பாதை நோக்கி சென்றோம்,  மஃப்ட்டி போலீஸ் அம்மா என்னை பின் தொடர்ந்து வந்து வழிமறித்தார்....


தொடரும் .......

ராஜிவ் காந்தி (OMR) & சென்னை ஒன் சாலை கதைகள்

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு செல்லும் வழக்கம், OMR வெறிச்சோடி கிடக்கும். சோழிங்கநல்லூர் தாண்டி சாலையின் இருபுறமும் மாந்தோப்புகள் இருக்கும். இரவில் பயணம் செய்ய பயமாக இருக்கும், சாலை விளக்குகள் எங்கோ ஒன்றிரண்டு இருக்கும். கடைகள் எதும் கண்ணில் படாது..

ஐடி கம்பெனிகளால்,வேளச்சேரி குடியிருப்பு & அதை ஒட்டிய தேவைகளுக்காக அசுர வளர்ச்சியை அதிவிரைவில் அடைந்ததோ, அதே காரணங்களுக்காக, கடந்த 10-15 ஆண்டுகளில் OMR உம், அதை சுற்றியுள்ள பகுதிகளும் அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

சென்னையில் உள்ள 70% மக்கள் இங்கே தான் வேலைக்கு வருகிறார்கள் போல, அலுவலகம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் நெஞ்சை அடைக்கிறது.  வாகனங்கள் விடும் புகையில், தலைசுற்றல் மயக்கம், அதைவிட மணிக்கணக்கில் நிற்பது ஆயாசமாக இருக்கிறது. ஒவ்வொரு சிக்னலிலும் தப்பித்தோம் பிழைத்தோம்னு ஓட வேண்டியிருக்கு. தலையெழுத்து + தலைவேதனை.

கிட்டத்தட்ட 1.5 மாதம் இவ்வழியே தினம் காலையும் மாலையும் செல்ல வேண்டியக்கட்டாயத்தில் இருந்தேன்.  வழி நெடுக ஐடி மக்கள் அடிக்கும் கூத்தையும், கால் தடுக்கினால் ஒரு உணவு விடுதியின் வாசலில் நிற்குமளவிற்கு, குறிப்பாக அசைவ உணவு விடுதிகளும், நடைப்பாதை கையேந்தி பவன்களும்.... இரவில் 9-10 ஆனாலும் பெண்கள் கையேந்திபவன்களில் உணவருந்தும் காட்சி கண்கொள்ளவில்லை. இருந்துட்டுப்போட்டும், அவர்களின் பாதுகாப்பு அவர்களின் கையில். பெரிதாக இதைப்பற்றி எல்லாம் கவலைக்கொள்ள ஓன்றுமில்லை. இவர்கள் நிற்கும் தைரியத்தில், நானும் ஒருநாள் இரவு கைந்யேந்தி பவனில் நின்று சாப்பிட்டேன். கவனித்தது, வேலை முடிந்து வீட்டுக்கு/விடுதிக்கு போகும் இரவு நேரங்களில் கூட அந்த ஐடி கார்ட் ஐ கழுத்தில் நாய் செய்யின் போல மாட்டிக்கொண்டு இருப்பதில் இவர்களுக்கு என்ன பெருமையோ...???? யாமறியோம் பராபரமே !!!

இந்த பதிவை எழுதக்காரணமே சென்னை ஒன் சாலையில் தினம் நான் பார்த்த அந்தப்பெண் தான்.  பாலியல் தொழிலாளி, இரவு 8 மணிக்கு மேல், அற்புதமாக தன்னை அலகரித்துக்கொண்டு, தலைநிறைய பூ,  உதட்டு சாயம், தொப்புள் தெரிய புடவை, ஒருப்பக்கமாக ரவிக்கை த்தெரிய இழுத்து விட்ட புடவை, கோயில் சிலையைப்போல அன்றாடம் சாலையோரம் வாகனங்கள் வரும் திசைநோக்கி நிற்பது, எனக்கு கொல்கத்தாவில் 'சோனாகஞ்ச்'ல் பார்த்த பெண்கள் தான் நினைவுக்கு வந்தனர். இப்படி அப்பட்டமாக நிற்பது அதும்  சென்னையில்???  எதைக்குறிக்கிறது/???. ஐடி துறை வளர்ச்சியின் பலன்களாக எடுத்துக்கொள்ளலாமா.????

இவர் ஒருத்தர் தானா என்றால் இல்லை , தொடர்ந்து சிறு இடைவெளியில் மரத்துக்கு மரம் 3-4 பேர் நிற்கின்றனர். என் கவனத்தை ஈர்த்தவர் இவரே. காரணம் அழகு....கொள்ளை அழகு, தமிழ் பெண்ணாக இருக்க வாய்ப்புகள் குறைவு. நடிகை ரித்விக்கா , 'டார்ச்லைட்' படத்தில் பாலியல் தொழிலாளியாக, இரவில் இப்படிதான் சாலையோரம் ஆட்களை எதிர்நோக்கி நிற்பார். ஆனால், இதுவோ சென்னையின் முக்கியப்பகுதி, மக்கள் அதிகமுள்ள,  1000க்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இடம், இங்கே இரவு 8 மணிக்கே நிற்பது.......  காவல்துறை என்ன செய்கிறது ?. இதன் தேவையை உணர்ந்து, இங்கு வருமானமும் அதிகம் வருவதால் தான் பெண்கள் இவ்விடத்தை தேர்வு செய்திருக்கின்றனர் எனப்புரிகிறது.

கொல்கத்தா, மும்பை, டெல்லி போல சென்னையும் மாறி வருகிறதா... ?? கூட அழைத்து செல்ல முடியாதோர், அங்கேயே இருட்டில் வைத்து நடத்தும் கசா முசாக்களும் கண்ணில் பட்டது.  ஐடி யில் வேலை செய்பவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நினைத்துப்பார்த்தால்..... 

என்னமோ நல்லாயிருங்க.. உங்க சம்பாத்யமும், அதில் நீங்கள் ஆடும் ஆட்டமும்......