உங்களின் ஒரு ரூபாய்........

உங்களின் ஒரு ரூபாய் கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு சொந்தமாகும்..

கூட்டம் நிறைந்த இடங்களில், சமுதாய தன்னார்வ பெண்கள், ஆண்கள் உண்டியல் ஏந்தி பணம் கேட்பதை பார்த்திருப்பீர்கள்...அவர்களை தயவுசெய்து உதாசினப்படுத்தாதீர்கள்.. உங்களின் ஒரு ரூபாய் கூட அவர்களுக்கு உதவும்..எத்தனையோ செலவுகளுக்கு இடையில் இது போல் என்றாவது ஒரு நாள் நாம் அடுத்தவர்களுக்கு செய்யும் சிறிய உதவி.யை எந்த காரணம் கொண்டும் ஒதுக்காதீர்கள்.. கோயில் உண்டியிலிலும், பிச்சைக்காரர்களுக்கும் போடும் பணத்தில் கொஞ்சம் இப்படியும் கொடுக்கலாமே?!

(மனித நேயம் கொண்டு, ஆயிர கணக்கில் உதவி செய்பவர்கள் இருக்கிறார்கள், இது அவர்களை பற்றிய பதிவு இல்லை)

தீபாவளி, பொங்கல் போன்ற விஷேஷங்களுக்கு, பணம் திரட்டி குழந்தைகள் காப்பகங்களுக்கு வழங்குவது வழக்கம். என்னை நம்பாமல் பணம் கொடுத்தவர்களுக்கு, காப்பகத்தில் கேட்டு ரசீதை scan செய்து இமெயிலில் அனுப்பி விடுவேன். அப்போது தானே அடுத்த வருடம் நம்பிக்கையோடு பணம் கொடுப்பார்கள். அதில் நான் வசூல் செய்கிறேன் என்று தெரிந்தவுடன், என்னிடம் என்ன சொல்லி திருப்பி அனுப்பலாம் (என் மனம் நோகாமல்) என்று யோசிப்பவர்கள் உண்டு..இதில் பெண்கள் அதிகம், சிரித்து கொண்டே என் வீட்டு அருகில் ஒரு இல்லம் இருக்கிறது அங்கே நேற்று தான் கொடுத்தேன் என்பார்கள். சிலர், சில்லரை இல்லை அப்புறம் தருகிறேன் என்பார்கள்.. சிலர் வேலையாய் இருக்கிறேன் நீங்க போங்க நான் வந்து தருகிறேன் என்பார்கள். இன்னும் சிலர், எல்லோரிடமும் வாங்குங்க, round off செய்ய எவ்வளவு வேண்டுமோ அவ்வளவும் நான் தருகிறேன் என்பார்கள், ஆனால் கடைசியில் அவரிடம் நான் செல்லும் போது, Money off என்பார்கள். தட்டிகழிக்க எத்தனை வழி இருக்கிறது ?!..

நூற்று கணக்கில் யாரும் கொடுக்க வேண்டாம் சிலரிடம் 5 ரூபாயை கூட வாங்கி இருக்கிறேன்.. நண்பர் ஒருவர்..என்னை பார்த்ததும் “எவ்வளவு வேண்டும்னு சொல்லுங்க கொடுக்கிறென்” என்றார். இத்தனை என்று கேட்டு வாங்கும் பழக்கம் இல்லாததால், அவரின் புகை பழக்கத்தை மனதில் கொண்டு, நீங்கள் 1 நாள் புகைப்பிடிப்பதை நிறுத்தி அதற்காக செலவாகும் பணத்தை கொடுங்கள் என்றேன். அவர் புகைக்காமல் இருந்தாரா என தெரியாது, ஆனால் அவர் எனக்கு கொடுத்த தொகை 27 ரூபாய்.

உங்களின் தேவைகளை குறைக்க வேண்டாம்..செளகரியத்தை குறைக்க வேண்டாம்.. ஏதோ உங்களால் முடிந்ததை இல்லை எனாமல் கொடுங்கள். கொடுக்கும் சிறிய தொகையினால் நாம் எதையும் இழக்க போவது இல்லை. நான் கூட என் தேவைகளுக்காக நிறைய செலவழிக்கிறேன்..என் தேவைகள் மட்டுமல்ல, என் குடும்ப தேவைகள் எல்லாம் செய்த பிறகு தான் உதவுவதற்கு பொருள் ஒதுக்குகிறேன். அதுவும் வருடத்திற்கு ஒன்று (அ) இரண்டு முறை.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி ஏக்க கண்களுடன் எவராவது உதவ மாட்டாரா என பார்க்கும் பச்சிளம் குழந்தைகளை மனதில் கொள்ளுங்கள்.. தட்டு தடுமாறும் வயதில், உழைக்க இயலாத வயதானவர்களை நினைத்து பாருங்கள்.

“ஏழைகள் எங்கும் இருக்கிறார்கள், ஆதரவற்றவர்கள் இல்லாத இடம் இல்லை, அவர்களது விதி” என்று மதியுடன் பேசி விவாதம் செய்பவர்களுக்கு பதில்.. என் ”புன்னகை” மட்டுமே. சக மனிதனின் உணர்வுகளையும், கஷ்டங்களையும் உணர முடியாத மனித நேயம் இல்லாத மனிதர்களிடம் பேசியோ, விவாதித்தோ என்ன பயன்..!

அணில் குட்டி அனிதா:- அம்மனி கர்ணனுக்கு கூட பிறக்காத sister ங்க.. (இதுல “யாரவது ஏதாவது கேட்டா நான் left hand ல இருக்கறத right hand க்கு மாத்தாம குடுத்துடுவேன்னு..” கர்ணன் படத்திலுருந்து சுட்ட dialog யை அடிக்கடி சொல்லிக்குவாங்க..தாங்காது) குடுக்கறது இருக்கட்டுங்க..எத்தனை தரம்..இவங்க ஏமாந்து போயிருங்கன்னு கேளுங்க.. ஒன்னு இல்லைங்க...9 posting போடலாம்.. party அவ்வளவு உஷார் ..என்னை வேலைக்கு வெச்சிருக்கும் போதே உங்களுக்கு எல்லாம் புரிஞ்சி இருக்கனும்... இவங்க யாரையாவது பார்த்து “பாவமா இருக்குன்னு” சொன்னா போதும்...இவங்கள அந்த area பக்கமே போகமா பாத்துக்கறது தான்..அவங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு முழுநேர வேலைனா பாத்துக்கோங்க......

பெற்ற சுதந்ததிரத்தை கூட இழந்து விடுவோமோ...

இப்படியே போனால், நாம் பெற்ற சுதந்ததிரத்தை கூட இழந்து விட்டு நிற்போமோ? என்ற கேள்வியுடன்....

சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் படும் அவதியை பற்றி அம்மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், அரட்டை அரங்கத்தில் உணர்ச்சி பொங்க ஆவேசமாகவும், ஆற்றாமையுடனும் கொட்டி தீர்த்ததின் தொகுப்பு இதொ..

வறட்சி அதிகமாக இருக்கும் காலத்தில் சிவகங்கை மாவட்ட மக்களுக்கு என்று கிடைக்கும் மாற்று வேலை கன்மாய்’யை (நீர் தேக்கம்) வெட்டுவதுதான். ஆனால் அரசாங்கம் இந்த பணியை தனியார் பண முதலைகளிடம் பெரும் பணத்திற்கு செய்ய சொல்லிவிட்டது. அவர்கள் பெரிய பெரிய யந்திரத்தை கொண்டு விரைவில் வேலையை முடிப்பது என்னவோ நடக்கிறது. ஆனால், மண் வெட்டும் வேலை க்கூட கிடைக்காமல் சிவகங்கை மாவட்ட மக்கள் பிழைப்பது எப்படி, வயிரை நிரப்புவது எப்படி.?.

சாலைகள் அத்தனையும் மண் சாலைகள், குண்டும் குழியுமாக.... சில கிராமங்கள், அருகில் உள்ள நகரங்களுடன் நேரடியாக இனைக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் பல கிமி தூரம் சுற்றி செல்ல வேண்டி இருக்கிறது. எத்தனை காலம் ஆனாலும் அரசாங்கம் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருக்க காரணம் என்ன?.

காந்தியடிகளால் திறக்கப்பட்ட அரசாங்க பள்ளி ஒன்று, பராமரிப்பு இன்றி, மேல் கூரை முதல், கதவு, சன்னல், செங்கல் வரை திருடப்பட்டு இப்போது வெறும் குட்டி சுவராக காட்சி அளிக்கிறது. (video clippings காட்டப்பட்டது).

சிவகங்கை மாவட்ட மக்கள், ஆற்றில் தேங்கி இருக்கும் தண்ணீரை கொஞ்சம் போல் எடுத்து சென்று, அவரவரின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். அரசாங்கமோ தண்ணீர் எடுக்கும் உரிமையை ஒரு தனியார் தொழில் நிறுவனத்தின் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி கொள்ள அனுமதித்துள்ளது. அவர்கள், ஆழ்துளையிட்டு, நீர் அத்தனையும் உறிஞ்சிவிடுகிறார்கள். அத்தனையும் இழந்துவிட்டு நிற்கவேண்டியுள்ளது.

கடற்கரை, சினிமா, தொலைக்காட்சி, கணினி, இணையதளம், ஈமெயில், அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை, ஐரோப்பாவுடம் பேச்சி வார்த்தை, சிங்கப்பூர் சுற்று பயணம், ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு, வைகோ கட்சி தாவல், சரத்குமார் ராதிகா ‘ஜே’ வுடன் சேர்ந்தது சரியா?! என்று நாம் எதை எதையோ பேசிக் கொண்டிருக்க, இதோ இங்கே நம்மை போன்ற ஒரு தமிழன்...

அன்றாட வயிற்று பிரச்சனையின் ஆற்றாமையில்..!
எல்லாம் இருந்தும் கிடைக்காத கொடுமையில்....!
அரசாங்கத்தாலேயே ஏமாற்றப்பட்டும் இயலாமையில் !


நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறாம்..!

அணில் குட்டி அனிதா: இந்த அம்மனிக்கு வேற வேல இல்லப்பா..! எதையாவது பேசிக்கிட்டு.. என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க.. சரியான புலம்பல்ஸ் மன்னி..!

சரி, நாம மேட்டருக்கு வருவோம். நம்ம அண்ணாச்சிங்க 2, 3 பேரு “அண்ணா” ன்னு கூப்படக்கூடாது.. friends ஆவே இருப்போம்னு சொல்லி இருக்காங்க.. நான் என்னவோ ரொம்ப மரியாதையா கூப்பிடலாம்னு பார்த்தா..விடமாட்றாங்கப்பா.. நாட்ல “அண்ணா’ ன்னு அன்பா கூப்பிட்டது தப்பா போச்சு. இனிமே. நாம Friends, அதனால....வாடா மச்சி, போடா வெண்ணைய்..ன்னு சொல்ல வேண்டி இருக்கும்...யாரும் கோச்சிகிட்டு ‘கா’ விட்றகூடாது சரியா..?!!! .. ஆமா யாரு அந்த 2, 3 பேருன்னு உங்களுக்கு எல்லாம் தல வெடிக்குமே.. இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்..!

நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேங்க...... "All Indians are my (sister and brothers க்கு பதிலா) friends” னு அறிவிப்பு கொடுக்கலாம்னு இருக்கேன்.."நீங்க என்ன சொல்றீங்க..சட்டு புட்டுன்னு ஒரு லெட்டர் போடுங்க...

அணில் குட்டியின் - அர்த்தமுள்ள பாட்டு


அணில் குட்டி அனிதா:- எல்லாரும் எப்படி இருக்கீங்க..நம்ம கவிதாக்கு வேல அதிகமா இருக்காம்..எழுத முடியலைன்னு scene போட்டுட்டு இருக்காங்க, நீங்க எல்லாம் என்னை miss பண்ணுவீங்களேன்னு..அவங்களுக்கு leave குடுத்துட்டு நான் present.! பாவிதா..sorry sorry tongue slip ஆயிடுத்து.. கவிதா book லிருந்து ‘இந்தியாவின் ஏழ்மை’ ஐ திருடி காப்பி பண்ணியிருக்கேன்..படிச்சிட்டு லெட்டர் போடுங்க.. பாருங்க இது அணில் குட்டி special so நீங்க எனக்கு தான் லெட்டர் போடனும்..சரியா..ஆஆஆஆஆ..(காது கேக்காதவங்களுக்காக..இந்த extra.ஆஆஆ).


இந்தியாவின் ஏழ்மை

இந்தியாவின் ‘இனிஷியல்’
இரக்கமற்றவர்களின் ‘எச்சில் சோறு’

இயலாதவர்களின் ‘சொர்கம்’
இருப்பவர்களின் “மிதியடி’

தாதாக்களை உருவாக்கும் ‘தாய்’
தகாத வழி நடத்தும் ‘ஆசான்’

விலா எலும்புகளை எடுத்துகாட்டும் “ஒவியம்’
விடை தெரியா ‘கேள்வி’

மக்களை விலைபேசும் ‘மார்கெட்’
மனித ஓநாய்கள் பசியாரும் ‘ஹோட்டல்’

கனவுகள் நிறைந்த ‘கானல் நீர்..’
கடவுளின் கால் படாத ‘ரோடுகள்’

===================

நம்ம அண்ணாச்சிங்க ..பாலா, கார்த்திக், சீனு அப்புறம் அக்கா பொன்ஸ் (என்ன பேருமா இது?!! ‘பொன்ஸ்’ ‘பொங்கல்ஸ்’ ன்னு!) எல்லாரும் ரொம்ப request செய்துகிட்டதால நான் எதுவும் எழுத கூடாதுன்னு பார்த்தேன். ஆனா பாருங்க அதிர்ஷ்ட்ட காத்து நம்ம பக்கம் வீசுது.. என்னோட கருத்துள்ள கவிதையை படிச்ச, நம்ம தமிழ் சினிமா Director’s நான் பாட்டு எழுதி தந்தாத்தான் படம் எடுப்பேன்னு ஒத்த கால்ல நிக்கறாங்க. சரி, அவங்க கால் வலிக்க வேண்டாமேன்னு எழுத advance வாங்கிட்டேன். நானே பாடனும்னு வேற இன்னொரு கால்ல நிக்கறாங்க.. கொஞ்சம் “கீச் கீச்” ன்னு இருக்கும்னு சொன்னாலும் கேட்கல.. தொந்தரவு தாங்காம..free யா பாடிக்கொடுத்திருக்கேன். இப்ப சூப்பர் hit ஆன ‘ வாளமீன்’ பாட்டு மாதிரி வேனும்னு சொன்னாங்க.. sample எடுத்து விடறேன் பார்க்கறீங்களா?.

கண்ணுக்குட்டிக்கும் கழுதக்குட்டிக்கும் கல்யாணம்..அந்த
காட்டுல இருக்கற Animals எல்லாம் ஊர்கோலம்..
நடு காட்டுலதான் நடக்குதுங்க கல்யாணம் -அத
பார்க்க வந்த பன்னி குட்டியெல்லாம் ஒரே நாத்தம்

கல்யாணந்தான் கல்யாணம்..
சோம்பேரி கழுதைக்குத்தான் கல்யாணம்
கல்யாணந்தான் கல்யாணம்..
கசமாலம் கண்ணுக்குட்டிக்குத்தான் கல்யாணம்

கண்ணுக்குட்டிக்கு சொந்தம்பந்தம் அந்த காட்டெருமை தானுங்கோ !
கழுதைக்கு சொந்தபந்தம் அந்த குரங்குகூட்டம் தானுங்கோ !

ஓ...ஓ................ஓ.. ..


அடடடா...ஆ...cool cool.. .. என்னங்க.? எல்லாரும் ஆட ஆரம்பிச்சிட்டீங்க... உணர்ச்சி வசப்படாம உட்காருங்க..(அட..போதும்..!கைய மடக்குங்க boss!.) சும்மா இது sample தான்... முழுசும் இன்னைக்கே பாடிட்டா எப்படி.. part part ஆ பாடலாம்..னு.............. என்ன..?!! என்னை part part ஆ கழுட்டுவீங்களா?.... என்னங்க நானும் நீங்களும் ஒன்னுக்குள்ள ஒன்னு... எதுக்கு tension ஆகறீங்க.. என்ன..?! நான் பாட்டு எழுத & பாடக்கூடாது..அவ்வளவு தானே.. Done..ங்க..ஆளவிடுங்க..! வரட்டா?!

அஞ்சறைப்பெட்டியில் கிடைக்காத அழகா அழகு நிலையங்களில்....

பெண்கள் என்றாலே அழகு. அழகுக்கு அழகு சேர்க்க, தடுக்கி விழுந்தால் அழகு நிலையங்கள் முன் விழும் அளவிற்கு, பார்க்கும் இடமெல்லாம் அழகு நிலையங்கள் முளைத்துவிட்டன.. பெண்கள் அல்லாது ஆண்களுக்கும் தனியாக அழகு நிலையங்கள் நிறைய கண்களில் படுகின்றன.

அழகு நிலையங்களில் தலை முடி முதல், கால் நகம் வரை அழகு செய்கிறார்கள். 15 ரூபாயில் தொடங்கி...ஆயிரக்கணக்கில் அழகு மேம்படுத்தும் சேவை/பணிக்கு தகுந்தார் போன்று பணம் வாங்குகிறார்கள். இதில் நான் கவனித்த அளவில் நடுத்தர வயதை கடந்த பெண்கள் தான் அழகு நிலையங்களில் அதிகம். அதுவும் அவர்கள் தலைக்கு கருப்பு வண்ணம் பூசி கொண்டு செல்கிறார்கள் என்றால் கூட பரவாயில்லை, அதனுடன், தங்களை இளமையாக்கி கொள்ள செய்து கொள்ளும் bleeching, facial, முடி வெட்டுதல், திருத்துதல், வழித்தல், மழித்தல் எல்லாம் தேவைதானா?. அழகு செய்து கொள்கிறேன் பேர்விழி என்று உள்ளே பெண்கள் அடிக்கும் கூத்து சொல்ல இயலாதவை. நான் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அதை சொல்லவும் கூடாது. அவர்களை பார்க்க கூச்சப்பட்டு நான் வெளியில் வந்ததுண்டு. ஏன் இவற்றை வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ள முடியாதா? என தோன்றும். இவர்கள் இதையெல்லாம் செய்து கொண்டபிறகு இளமையாகி விடுகிறார்களா?.

இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று என் கணவரிடம் (Male opinion) கருத்து கேட்டேன், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “அடி..லூசே.!.யாரோ எதையோ செய்துட்டு போறாங்க..உனக்கு என்ன?!! ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத விஷயத்தை பேசி என் நேரத்தை ஏன் வீணடிக்கற” என்றார். கருத்து சொல்லாமல் போகட்டும், ஆனால், நான் இப்படி அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்கும் போதெல்லாம், “லூசு லூசு” என்று சொல்லி என்னை லூசாக்க பார்க்கிறாரா?.. இல்லை நான் “லூசாக” இருப்பதால் லூசு என்கிறாரா? என சந்தேகம் வந்துவிட்டது. அதையும் அவரிடமே கேட்க, “நீ லூசு இல்லைமா.. உன்னை போன்ற ஒரு அறிவு கொழுந்தை கல்யாணம் செய்து கிட்டேன் பார்..நான்..!. நான் தான் ‘லூசு’ ”..என்றார். இதை கேட்ட பிறகு தான் எனக்கு நிம்மதியாயிற்று. நீங்களும் நிம்மதியாய் இருக்கலாம், யார் என்னவென்று அவரே தெளிவுபடுத்திவிட்டார் அல்லவா?.

சரி, விஷயத்திற்கு வருவோம். சென்னை தி.நகரில் ஒரு பெரிய துணி கடை, அதில் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கின்றன. அங்கு பெண்களுக்குகான அழகு பொருட்களும் கிடைக்கின்றன. அங்கு குவியும் பெண்கள் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு பொருட்களை வாங்கி செல்வார்கள், பொருட்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என கவனிப்பார்களே தவிர, நிதானமாக தான் வாங்கிய பொருட்களுக்கான விலையை தான் கடைக்காரர் பெற்றிருக்கிறாரா என்று கவனிப்பது இல்லை. அப்படி கவனித்தால் தெரியும் 100 ரூபாய் க்கு நாம் வாங்கி இருந்தால், கடைக்காரர் 115 முதல் 120 ரூபாய் வரை அதிகம் பெற்றிருப்பார். இந்த தவறு அதே கடையில் மற்ற பிரிவுகளில் ஏற்படுவதில்லை. பெண்களின் குணம் அறிந்து கடைகாரர் எளிதாக ஏமாற்றுகிறார். அழகு நிலையங்களில் பயன்படுத்தும் cream, lotion, shamp, hair dye எல்லாம் தரம் வாய்ந்ததா?. வெளிநாட்டில் இருந்து வரவைக்கபட்டது என்று சொல்லப்படும் பல பொருட்கள் தரம் வாய்ந்ததா என்று எத்தனை பெண்கள் கவனிக்கிறார்கள்.?. பெண்கள் பொதுவாக பொருட்கள் வாங்கும் போது அதன் விலையை பார்க்கிறார்களே தவிர, அதனுடைய பயன்பாடு, பொருளின் தரம், பொருள் தயாரித்த நிறுவனம் நம்பிக்கை ஆனதா, பொருள் தயாரித்த வருடம், அந்த பொருளின் பயன்படுத்தும் கால அளவு (expiry date) போன்றவற்றை கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை..

வீட்டில் எளிதாக பயன்படுத்தும் சில அழகு பொருட்கள்:- கஸ்தூரி மஞ்சள், சந்தனம், பால், தயிர், பயத்தம் பருப்பு, வெந்தயம், கசக்கசா, கடலை பருப்பு, உளுந்து, துவரம் பருப்பு, கொத்தமல்லி, பீட்ரூட், முல்தாணி மட்டி, லவங்கம், கடுக்காய், சாதிக்காய், பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வெட்டிவேர், நெல்லிக்காய், செம்பருத்தி, சியக்காய் வேப்ப இலை, துளசி, மருதாணி, முட்டை, எலுமிச்சை, மிளகு, பார்லி, விளக்கெண்ணெய்,உப்பு,தேங்காய், நல்லெண்ணெய்....சொல்லி கொண்டே போகலாமே..!

நம் வீடுகளில் இல்லாத எந்த பொருள் அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டிலேயே அத்தனையும் செய்து கொள்ளமுடியும். அடிக்கடி bleeching, facial செய்து கொள்வது நிச்சயமாக தோலுக்கு கேடுதான். அது மட்டுமல்லாது சருமம் தடித்து போகும். ஆண்களுக்கும் இது பொருந்தும். வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்களேன் !!

அணில் குட்டி அனிதா:- ஆனாலும்.. .. இந்த அம்மனி சொல்லறது ஒன்னு செய்யறது ஒன்னாவே இருக்கு..தாங்க முடியலங்க..நானும் எதுவும் சொல்ல கூடாதுன்னு தான் பார்க்கிறேன்..முடியலங்க....,இப்ப பாருங்க...Beauty parlor வேண்டாம்னு சொல்லறவங்களுக்கு அங்க என்னங்க வேலை..?.. இதெல்லாம் நீங்க யாரும் கேக்க மாட்டீங்களா? .. இந்தம்மனி இந்த range க்கு போனா அந்த கடவுளுக்கே பொறுக்காது.. ம்ம்.. .. கேட்பாரு இல்லாம போச்சு.. இது ஒரு பக்கம் இருக்கட்டும், இவங்க daily காலையில வேலைக்கு போறதுக்கு முன்னாடி மேல சொன்ன list ல எதையாவது அரைச்சு பூசிக்கிட்டு பயமுறுத்துவாங்க..யாரும் தப்பி தவறி..வீட்டு பக்கம் வந்துறாதீங்க..பயந்துபோய்..படுத்த படுக்கை ஆயிடுவீங்க...இல்லை ஒரேடியாக மேல போனாலும் ஆச்சிரியமில்லை..! நான் அட்டைபெட்டிய விட்டு வெளியில வரவே மாட்டேன்..சின்ன உசுரு..பொட்டுன்னு போய்ட்டேன்னா..என்ன செய்யறது.. அதனால..என்னோட meeting time after office hours ie., only evening தான். அவங்க hubby க்கும் , பையனுக்கும் வேற வழியே இல்லை........ என்னை மாதிரி அவங்களுக்கு ஒளிஞ்சிக்க இடம் இல்லை... பாவமா இருக்கு....என்ன செய்யறது....I am helpless !!

ரோட் ரேஸ் ரோமியோக்கள்........

சென்னை மாநகரத்து போக்குவரத்து நெரிசலில் இரு சக்கர வாகனம் ஓட்டுவது என்பது இப்போது எல்லாம் மிக சிரமமான, tension ஆன விஷயமா போச்சு. அதில் இந்த ரோமியொக்கள் கொடுக்கும் தொல்லைகளை என்னவென்று சொல்வது. அவர்கள் செய்யும் சில இடையூர்கள் விபத்தை உண்டாக்கி விடுமோ என்று பயமாக இருக்கிறது.

இரு சக்கர வாகனம் வாங்கலாம் என்று முடிவு செய்தவுடன் சில வாகனங்களை (Model) நான் வேண்டாம் என்று சொல்ல, என் கணவரும், என் அண்ணனும் சென்று scooter book செய்துவிட்டு வந்து, அதற்கான காரணக்காரியங்களை சொல்லி என்னை ஓட்ட பழக சொன்னார்கள். இதில் என் அண்ணனின் பங்கு அதிகம். சென்னை, அண்ணாசாலையில் என் பின் அமர்ந்து எனக்கு பயிற்சி கொடுத்தார். அதற்கு பிறகு நான் தனியே பழகி வேகமாக ஒட்டவும் பயின்றேன்.

Scooter என்பது ஆண்களுக்கான வண்டி, காலால் உதைத்து start செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும்.பெண்களுக்கு நடைமுறையில் கொஞ்சம் சிரமம் தான். நிறைய முறை உதைக்கும் போது கால் கொலுசு சிக்கி இழுத்து காலில் இரத்தம் வந்திருக்கிறது. வீட்டில் ஒருமுறை உதைத்து start செய்து விட்டால், அதன் பிறகு மாலையில் அலுவலகத்தில் ஒருமுறை. அவ்வளவுதான். கொஞ்ச நாட்களில், நன்றாக பழகிக்கொண்டேன்.

பழகிய பிறகு கூட, சிக்னலில் வண்டி நின்று போனால், ஆண்களை போன்று அப்படியே start செய்ய தெரியாது. வண்டியை ஒரம் கட்டி, stand போட்டு தான் start செய்வேன். அலுவலகத்தில் நண்பர்கள் இதற்காக என்னை கிண்டல் செய்வது உண்டு. சிக்னலில் இதனால் சிலமுறை பலரிடம் திட்டும் வாங்கி இருக்கிறேன். பஸ் ஓட்டுனர்கள் அதில் முதலிடம். “சாவு கிராக்கி, நீயெல்லாம் Scooter ஓட்டவில்லை என்று சென்னையில் யாராவது அழுதார்காளா?..வில் தொடங்கி..எனக்கு அர்த்தம் புரியாத கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். அந்த வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியவில்லையே என்று கவலை பட்டதுண்டு..

125cc, நல்ல வேகம் தரும் இருந்தாலும், என் மேல் அக்கரை கொண்ட அனைவரும் வேகம் வேண்டாம் என்று எப்போதும் உபதேசம். நானும் சரி சரி என்று சொல்லுவேனே தவிர வேகம் செல்வதில் எனக்கு அப்படி ஒரு ஆர்வம். என் நண்பர் ஒருவர், ஆண்கள் நடுரோட்டில் விழுந்தால் பரவாயில்லை, ஆனால் ஒரு பெண் (புடவை அணிந்து) நடுரோட்டில் விழுந்தால், விபத்து என்றாலும் பார்க்க சகிக்காது என்று சொல்லுவார். Scooter ஓட்டுதல் என்ற சிறிய விஷயத்தை ஆண்களை போல் செளகரியமாக செய்ய முடியவில்லையே என்று நினைத்தது உண்டு. இது போன்ற நிறைய விஷயத்தில் ஆண்களை போல் அல்லாது, பெண்களுக்கு Practical difficulty இருப்பதை அனுபவம் மூலம் உணர்ந்து இருக்கிறேன்.

சரி, விஷயத்திற்கு வருவோம். நான் வேகமாக செல்வதானாலோ என்னவோ எனக்கு நிறைய ஆண்கள் இடையூர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஒரு பெண் தன்னை முந்துவதா என்று நினைப்பார்களோ என்னவோ..பின்னால் வேகமாக துரத்தி வந்து..ஒரு கட் கொடுப்பார்கள், நான் தடுமாறுவேன், அதில் அவர்களுக்கு ஆத்ம திருப்தி. சிலர், என்னை கடந்து சென்று, (என்னை தோற்கடித்து விட்டாராம்) ஏளனமாக (நக்கல்) பார்த்து விட்டு செல்வார்கள். சிலர் ஹெல்மெட்டின் முன் கண்ணாடியை தூக்கி, திருமுகத்தை காட்டி கட் கொடுத்து செல்வார்கள். துரத்தி வருகிறார்கள் என்பதை கூட அவர்கள் பலமுறை என் முன்னும் பின்னும் சென்றும், கட் கொடுத்தாலுமே உணர்வேன். சில சமயம், பேருந்தில் செல்லும் ஆண்களும், வண்டி ஓட்டும் எங்களின் கவனம் சிதறும் வகையில், பாட்டு பாடுவது, கூச்சல் செய்து கிண்டல் செய்வதும் உண்டு.

என் அலுவலகத்திலெ கூட ஒருவர் இருக்கிறார், இருவரும் ஒரே நேரத்தில் வண்டி எடுத்தாலும், நான் கொஞ்சம் வேகம் எடுத்து முன்னே சென்று விட்டால் பொறுக்க மாட்டார்..பின்னாலேயெ துரத்தி முன் செல்ல முனைவார், உபதேசம் வேறு செய்வார்(ஓடும் போதே)..அலுவலகத்திலும் உபதேசம் தொடரும். அதனால், அவர் போய் தொலைக்கட்டும் என்று நான் பின்னால் செல்வதும் உண்டு. எல்லோரும் அப்படி இல்லை என்பதும் உண்மை. நான் Scooter ஒட்டுவதை பெண்களை விட ஆண்களே அதிகம் உற்சாகப்படுத்தி உள்ளார்கள் என்பதை மறுபதற்கு இல்லை.

பெண்களை கிண்டல் செய்யவும், அவர்கள் தங்களை மிஞ்சிவிட கூடாது என்பதை உணர்த்துவதற்கும் சாலைகளா சிறந்த இடம்?. மெதுவாக செல்வதினால் ஆண்களின் கவனம் என் மேல் திரும்பாது என்றாலும், மெதுவாக செல்லும் போது கூட சில சமயம் தடுமாறும் அளவிற்கு சிலர் திடீரென குறுக்கே செல்வதும், U கட் போடுவதும் சரியா?. இது எனக்கு மட்டும் இல்லை, நான் கவனித்த வரையில் இப்படித்தான் பொதுவாக நடக்கிறது.

கிண்டல் செய்யவும், சேட்டைகள் செய்யவும் சாலைகள் சிறந்த இடம் இல்லை என்பதை யோசிப்பீர்களா தோழர்களே?

அணில் குட்டி அனிதா:- ம்ம்..முடிச்சிட்டீங்களா கவிதா?. இவ்வளவு எழுதினாங்களே..ஒரு நல்ல விஷயத்த உங்க கிட்ட இருந்து எல்லாம் மறச்சிட்டாங்க.. அதாங்க.. ஆட்டொவோட நேருக்கு நேரா மோதி சில்லற பொறுக்கனதத்தான்.. சில்லறனா சும்மா இல்லை..அம்மனி ஒரு மாசம் வீட்டுல உட்கார்ந்து எண்ணி பார்க்கற அளவுக்கு பொறுக்கினாங்க.... பாவம் அவங்க hubby தான் நோட்டு நோட்டா டாக்டருக்கு செலவு செய்தாரு. இவங்க ஒரு கால்ல மாவுக்கட்டு பொட்டுக் கிட்டு குதிச்சி குதிச்சி நடந்தாங்களே..அப்பப்பா..! கண் கொள்ளா காட்சிங்க.. இதுல நலம் விசாரிக்க வந்த யாருமே..நாலு வார்த்தை நல்லாத சொல்லல...ஒரே புகழாரம் தான்..போங்க...”வேகமா போகாதேன்னு சொன்னோம் கேட்டியா..ன்னு” தான்..வரவங்க எல்லாம் இதையே சொல்லி சொல்லி....பாவம் இவங்க நொந்து நூலானது..நமக்கு இல்லை தெரியும்..!

கோயில்களில் பால் அபிஷேகம் பட்னியில் பல உயிர்கள்

நாத்திகம் பேசவில்லை, நம்பிக்கை உண்டு என்பதை விட, அமைதி வேண்டி கோயில்களுக்கு செல்கிறேன் என்பது உண்மை. கண்களை மூடி கடவுளை வணங்கும் பழக்கமும் இல்லை, காரணங்கள் மூன்று. 1. அற்புதமான அலங்காரம் 2. வேண்டும் என்று எதையும் கேட்பதில்லை. 3. மனசாட்சி க்கு மட்டுமே பயப்படுவது.

நம் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் நிச்சயமாக ஒரு நல்ல காரணம் இருக்கிறது என்பதை எப்போதும் நம்புகிறேன்.

வெகு நாட்களாக இது என் மனதை நெருடிக் கொண்டு உள்ளது. கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்.. யாருடைய நம்பிக்கையயும் யாரும் தவறு என்று சொல்ல முடியாது. சொல்லவும் அவசியம் இல்லை. ஒருவருடைய நம்பிக்கை , அது தவறாக இருந்தாலும் அது அவர்களுக்கு சந்தோஷத்தை தருகிறது என்றால், அதை நாம் ஏன் கெடுக்க வேண்டும்.

சாஸ்த்திரம் சம்பரதாயம் அத்தனையும் அவசியம்தான், ஆனால் குடம் குடமாக பால், தயிர் அபிஷேகம், அது மட்டுமா? நெய், இளநீர், தேன், வெண்ணைய், பஞ்சாமிர்தம் அத்தனையும் அபிஷேகம் கண் குளிர பார்த்து விட்டு ப்ரகாரம் சுற்றி வந்தால் அத்தனையும் புறவழியாக சாக்கடைக்குள்.. ... பக்தர்கள் செலுத்தும் அபிஷேகப் பொருட்கள் அத்தனையும் ஊற்றப்படுகின்றனவா?. இல்லை உள்ளிருப்பவர்களால் உறிஞ்ச படிகின்றனவா?. தேவையான அளவு அபிஷேகம் செய்துவிட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியை குழந்தைகள் காப்பகங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் அனுப்பலாமே..! கோயில் நிர்வாகமும், சமூக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இனணந்து இதனை செயற்படுத்தி பலரின் பசியை போக்கலாமே! யாராவது முயற்சி செய்வார்களா?.

அணில் குட்டி அனிதா:- அய்யய்யோ! கவிதா என்ன ...சாமி விஷயத்துல விளயாடரீங்க..சாமீ கண்ண குத்திடும்..தெய்வ குத்தமாகிடும். இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வாரது..நாம நல்லா இருந்தா போதாதா?.. என்னங்க..நான் சொல்றது சரி தானே?. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்னு சொன்னது கவிதா மாதிரி ஆளுங்களுக்கு..நமக்கு இல்லைங்கோ! அம்மணி ஏதோ சொல்லரத சொல்லிட்டு போகட்டும். யாரு பட்டினி கிடந்தா நமக்கு என்னங்க?. இதெல்லாம் நீங்க serious aa எடுத்துக்காதீங்க. அம்மணி இப்படித்தான், நடக்காத விஷயத்தை பேசி நம்மள மாட்டி விட்டுருவாங்க. நீங்க என்ன சொல்றீங்க..?!!

எனக்கு பயந்துக்கிட்டு கருத்து சொல்லாம விட்டுராதிங்கண்ணா.. யக்கோவ் உங்களையும் தான்..! வரட்டா....?!!

அணில் குட்டியின் - கருத்துள்ள கவிதைகள்

அணில் குட்டி அனிதா:- இன்னைக்கு..நண்பர் ஒருத்தர் அணில் குட்டி அனிதா..யாரு?..ன்னு, ஒரு super கேள்வி கேட்டு லெட்டர் போட்டு இருக்கிறார். அது எப்படிங்கண்ணா.... இப்படியெல்லாம் கேள்வி கேட்டு புல்லரிக்க வைக்கறீங்க?!! தாங்களிங்கண்ணோய்... அம்மணியும் நானும் அந்நியன் range க்கு blogger members யை தாக்கிட்டு இருக்கோம்.. நீங்க என்னன்னா..இப்படியெல்லாம் கேள்வி கேட்டு எங்கள தாக்கறீங்க.....! ம்ம்..என்னத்த சொல்ல...புரியலனா விட்டுறுங்கண்ணோய்....

இந்த பாலா எழுதன comments படிச்சதிலிருந்து அம்மணி..paper paper ஆ எழுதி கிழிக்கறாங்க..ஒன்னும் தேரலங்கறத..நான் சொன்னதா வெளியில சொல்லிடாதீங்க.. .பாலா நீங்க பாராட்டறமாதிரி இப்போ நான் எழுதுறேன் பாருங்க..

“ முறுக்கு மாவுல கலக்கறது ஓமம் !!
அணில் முதுகல போட்டிருக்கறது நாமம்..!!

ஆஹா..கவித கவித...உய்ய்ய்ய்ய்ய்ய்.. உய்ய்ய்ய்ய்..உய் ய்... (அட..நீங்களும் சத்தமா விசில் அடிங்க..கவிதா monitor விசில் சத்ததுல உடையட்டும்)

“குதிரைக்கு வைக்கறது கொள்ளு !!
அணிலுக்கு அழகே இந்த பல்லு !! wowwwww.!!!

தெரு நாய் கண்டத பொருக்கும் !!
அணில் கடிச்ச கொய்யா இனிக்கும்..!!

...உய்ய்ய்ய்ய்ய்ய்.. உய்ய்ய்ய்ய்..உய் ய்... Hold hold...

கவிதா கல்லு எடுக்கற மாதிரி இருக்கு..
பாலா உங்களுக்கு என் கவிதையை mail ல அனுப்பறேன். ஆனா ஒரு condition..அம்மணிய புகழ்ந்த மாதிரி என்னை புகழக்கூடாது. நான் அம்மணி மாதிரி சும்மா இருக்க மாட்டேன் உணர்ச்சி வசப்பட்டு பொங்கிடுவேன் பொங்கி.. ஆமாம்..அப்புறம் தொடர்ந்து கவிதையா எழுத ஆரம்பிச்சிடுவேன்..so comment எழுதறத்துக்கு முன்னாடி யோசிச்சி..எழுதுங்க..

காதல் சொல்வதில் பேதம் என்ன?.

நான் ஒரு நிகழ்ச்சிக்காக கவிதை எழுதி போயிருந்தேன். (பெரிய நிகழ்ச்சி, பெரிய ஆள் என்று தயவு செய்து தவறாக புரிந்து கொள்ளவேண்டாம்) அந்த கவிதை, ஒரு ஆணின் காதலை மையமாக கொண்டது. நிகழ்ச்சி தொகுப்பாளர் அதை 2 பக்கங்கள் படித்துவிட்டு என்னை நோக்கினார். சரி திரும்பி அனுப்ப போகிறார் என நான் நினைக்கும் வேளையில், அவர் என்னை பார்த்து, ஏம்மா.அது என்ன காதல்’ னு சொன்னாலே ஒரு ஆண் எழுதினாலும் சரி, ஒரு பெண் எழுதினாலும் சரி, ஆண் பெண் மீது காதல் கொள்வது போலவே எழுதுகிறீர்கள்?. நீ ஒரு பெண்தானே..ஏன் ஒரு ஆணை காதலிப்பதாக எழுத கூடாது? காதல் சொல்வதில் அப்படி என்னம்மா பேதம்?.என்று கேட்டார்.

அவர் அப்படி கேட்ட பிறகு தான் நான் ஏன் எப்படி எழுதவில்லை என்பதை யோசித்தேன். சில பல சொந்த காரணங்களுக்காக என்னால் அப்படி எழுத முடியவில்லை என்பதே, நான் அப்போது எனக்கே சொல்லி கொண்ட விளக்கம். அதற்கு பிறகு கொஞ்சம் தெளிவு பெற்று சில கிறுக்கி இருக்கிறேன். காதல் என்ற தலைப்பில்.. கிறுக்கிய சில உங்கள் பார்வைக்கு..

உன்னால் பார்க்கபடும்
நான்..!
என் அண்ணனால் பார்க்கபடும்
உன் தங்கை...

********
காதல் !
கண்களில் தொடங்கி
கவிதைகள் பாடி
கடிதங்கள் மாற்றி
கை தொடும் போது சிலிர்த்து
கல்யாணம் வரும் போது
காணாமல் போனது... !

********
தென்றலாய் என்
இதயம் திருடிச்சென்று.
புயலாய் வீசுகிறாயே..
நீ புயலானாலும்
உன் மொழிகள்
பூக்கள்...
தொடுக்க காத்திருக்கிறேன்..
உன்னையும் சேர்த்து த்தான்..

************
இன்னும் கிறுக்குவேன்....

அணில் குட்டி அணிதா:- என்ன கவிதா ... நான் தான் மரத்துக்கு மரம் தாவுவேன்..நீங்க என்ன ஏதோ ஒரு subject லிருந்து ஏதோ ஒரு subject க்கு தாவிருக்கீங்க?... என்ன...பாலா..& சந்தோஷ் comments பார்த்து பயந்து போயிட்டீங்களா?.வாழ்க்கையில இதுகெல்லாமா பயப்படறது.. நான் எதுக்கு இருக்கேன். .. பார்த்துக்கறேன்...நீங்க உங்க இஷ்டத்துக்கு எழுதுங்க...பாலா சென்னையில தானே இருக்கார்..என்ன..ன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டா போது... என்ன சந்தோஷ்.... நம்மகிட்டயேவா? கவிதா அடிச்ச lecture போதுமா..இன்னும் கொஞ்சம் வேணுமா?!...

ஆண்களின் நிழலில்... .. ..

“மிக அதிகமாகி வரும் திருமண முறிவுகள்”, இந்த பதிப்புக்கு காரணம். ஆண்களின் நிழலில் பெண்கள் இருப்பது தான் என்றும் பாதுகாப்பானது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆண், தந்தையாக, கணவனாக, மகனாக, தம்பியாக, அண்ணனாக, நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு உறவு முறையை பெண் விட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். ஆனால் கணவன் என்ற உறவு மட்டும் தான் கடைசி வரை நிலைக்கிறது. ஏன் மற்ற உறவு முறைகளுடன் வராத மன வேறுபாடு கணவருடன் மட்டும் வருகிறது என்று புரியவில்லை.?. அப்படி மன வேறுபாடு வரும் போது அதை நம் அறிவைக் கொண்டு கடந்து வர வேண்டுமே தவிர பெண்ணுரிமை பேசி நம் வாழ்க்கையை நமே கெடுத்துக்கொள்ள கூடாது.

கணவர் என்ற ஒரு ஆணிடமே, ஒரு பெண்ணால் சேர்ந்து வாழ முடியாத போது எப்படி விலகி, தனியே வெளி உலகத்தில் உள்ள ஆயிரம் ஆயிரம் ஆண்களை சமாளிக்க முடியும். பெண்ணுரிமை பேசும் பல பெண்களுக்கு இந்த விஷயம் புரிவது இல்லை. பிரச்சனை என்பது ஆண், பெண் இருவருக்கும் உண்டு. எத்தனை வீடுகளில் பெண்களால் ஆண்கள் அவதிக்குள்ளாகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. என் கணவர் அடிக்கடி சொல்லும் வசனம், “பெண்னுக்கு பெண் தான் எதிரி ஆண்கள் இல்லை” என்பது. பெண்கள் பிரச்சனைக்கு மாமியார், நாத்தனார், அண்ணி, அக்கா..என்று பெண்களையே பட்டியல் போடலாம்.

பெண்கள் தேவை இல்லாமல் ஆண்களை சாடுகிறார்கள் என்பது என் கருத்து.. ஒரு உலக மகளிர் தினத்தன்று, தொலைகாட்சியில் சில பெண் பிரபலங்களை மகளிர் தினம் பற்றிய அவர்களின் கருத்து கூற பேட்டி எடுத்தார்கள். அதில் நடிகை பானுமதி சொன்ன கருத்து, “ அன்றிலிருந்து இன்று வரை பெண் தானே குழந்தை பெற்றுக் கொள்கிறாள்?. அதில் எந்த மாற்றமும் இல்லையே?. அப்புறம் என்னங்க? பெண் எப்பவும் பெண்ணா இருக்கணும்” இது என்னை வெகுவாக கவர்ந்தது. உண்மையும் அது தானே.

ஆண், பெண் என்ற வித்தியாசம் வேண்டாம். யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டாம். ஒருவரை ஒருவர் புரிந்து, அன்பு சேர்த்து வாழ்வது தானே வாழ்க்கை. ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா துறைகளிலும் கால் பதிக்கிறார்கள், பொருள் ஈட்டுகிறார்கள். அதனால் பெண்கள் தனியாக வாழ முடியும் என்று நம்புகிறார்கள் நல்ல சம்பாத்தியம் மட்டுமே சந்தோஷமான வாழ்க்கையை கொடுத்துவிடுமா? அதிகமான படிப்பும், அதற்கான வேலையும் தான் ஒரு பெண் துணிந்து தன் திருமண வாழ்க்கையை முறித்து கொள்ள காரணமா?.

பெற்றோர்களும் தன் பெண்களுக்கு பரிந்து பேசி அவர்கள் வாழ்க்கையை கொடுக்காமல், அவளின் பாதுகாப்பு என்பது கடைசி வரையில் கணவன் தான் என்று புரிய வைக்க வேண்டும். நிறைய பெண்களின் வாழ்க்கையில் பெற்றவர்களின் ஊக்கமும் இப்படி பட்ட முறிவுகளுக்கு காரணம் ஆகிறது.

நான் பிரச்னை இன்றி இருப்பதால் மிக தெளிவாக கருத்து கூறுகிறேன் என்று புரிந்து கொள்ளாதீர்கள். பிரச்சனை இல்லாத மனிதர்கள் இல்லை, அதில் நானும் ஒருத்தி.. ஆண்களும், பெண்கள் தங்களின் பாதுகாப்பில் இருக்க வேண்டியவர்கள் என்பதை உணர்ந்த்து நடந்து கொள்ளலாம்..
ஓளியின் திசைக்கேற்ப நிழலின் நீளம் அவ்வப்போது குறையும், கூடும். ஆண்களின் நிழலில் பெண்கள் இருப்பது தான் இயற்கை அமைத்து கொடுத்தது.. அதை நாம் தான் கவனித்து சரியான திசையில் திருப்பி நாம் நிற்க வசதியாக்கி கொள்ள வேண்டும்.

அணில் குட்டி அனிதா:- அய்யய்யோ.....போதும் கவிதா...... உங்க உபதேசம். நிறுத்துங்க.. அநியாயத்துக்கு நல்லவங்களா காட்டிக்காதீங்க. என்னவோ உங்க hubby கிட்ட நீங்க ரொம்ப adjust செய்து கிட்டு இருக்கற மாதிரி படம் போடறீங்க..!. படம் போட ஒரு அளவு வேணாம். இது உங்களுக்கே கொஞ்சம் over ஆ தெரியல.. வீட்டுல நீங்க பண்ற ராவுடி தாங்க முடியாம..பாவம்..அந்த மனுஷன் என்ன கஷ்ட படறார்னு அந்த எரியாவுக்கே தெரியும். ஊருக்கு தான் உபதேசமா உங்களுக்கு இல்லையா?... .. . .

என்னங்க..கைக்கட்டி கவிதா விட்ட கதையெல்லாம் serious ஆ கேட்டது போதும். கதைய பத்தி கொஞ்சம் நிறையவே திட்டி லெட்டெர் போடுங்க. அப்பதான் இந்த அம்மணி இப்படி எல்லாம் உபதேசம் பண்ணி நம்ம உயிர வாங்க மாட்டாங்க.... அப்புறம் இந்த அம்மணி கிட்டே இருந்து உங்களை எல்லாம் இப்படி காப்பாத்தரதனால உணர்ச்சி வசப்பட்டு என்னை புகழ்ந்து லெட்டர் போட்டு என் seat யை கிழிச்சிடாதீங்க.... அம்மணி இப்பவே ரொம்ப உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ன்னு இருக்காங்க.....
.

“தொட்டால் பூ மலரும்”

வண்ண மலரானேன்
நிற குருடனாய் நின்றாய்
சின்ன மழைத்துளியானேன்
குடையாகி எனை மறைத்தாய்
நிலவாகி குளிர்ந்தேன்
அமாவாசை அழகென்றாய்

சுடர்விடும் சூரியனானேன்
இரவுகள் மட்டுமே இன்பம் என்றாய்
தென்றலாய் தழுவ வந்தேன்
புயலாகி எனை அழித்தாய்
நிழலாய் உனை தொடர்ந்தேன்
ஒளி படாமல் பார்த்துக் கொண்டாய்

புல்லினமாய் பாதத்தை நெருடினேன்
செதுக்கி தள்ளி மண் தரையாக்கினாய்
சருகாகினேன் உன் காலடியில்
கூட்டி பெருக்கி குப்பையில் வீசினாய்
வருடங்கள் ஓடிவிட்டாலும், உரமாகி உயிர்வந்து
உன் வீட்டு தோட்டத்திலின்று

மலராத மல்லிகையாய் உன்
மனைவி அவள் கூந்தலில் சூடவே
மலர்ந்து விடத் துடிக்கிறேன் முகரவரும்
உன் மூச்சுக் காற்று தொட்டு விடுமென..!


அணில் குட்டி அனிதா:- என்னை விசாரிச்சி லெட்டர் போட்டு இருக்கீங்க..ரொம்ப thanks பாலா, நீங்க இங்க பார்க்கறது வேற.. PC க்கு பின்னாடி நடக்கறது வேற.. எல்லாத்தையும் பொறுமையா கேக்கற மாதிரி கேட்டுட்டு, அம்மணி சும்மா suuuuupppper..ஆ......டின்னு கட்டாறாங்கப்பா...வெளியில சொல்ல முடியல...அந்த அளவுக்கு ஊமக்காயம்.. . நம்ம வாய் வேற சும்மா இருக்கறது இல்லையா...எதையாவது சொல்லிட்டு வாங்கிக் கட்டிக்கிறேன்...ம்ம்..ம்..உங்களுக்கு எங்க இதெல்லாம் தெரிய போகுது.. ..

.அம்மணி கவிஞர் வாலியின் “தொட்டால் பூ மலரும்” பாடலை தலைப்பாக போட்டு என்னவோ .எழுதி இருக்காங்க.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு எனக்கு லெட்டெர் போடுங்க..சரியா..அப்பதான் நான் அவங்கள கொஞ்சம் கவனிக்க முடியும்.

சென்னை மாநகரிலே.....

சென்னை'யின் முதுகெலும்பு
அண்ணாசாலை !

அவளின் அழகிய கண்கள்
பல்கலை கழகங்கள் !

சினிமா சிறைக்குள் சென்னையை
சித்தரிக்கவே “சென்ட்ரல்”
ரயில் நிலையம் !

சென்னை மங்கையின்
மானத்தை காக்க - இல்லை
மானத்தை வாங்க அவள் கட்டியிருக்கும் சேலை கூவம் நதி !

இறந்த தலைவர்களுக்கு
இடமளித்து கொண்டிருப்பவள்
இந்தியாவின் மிக நீள கடற்கரைக்கு
சொந்தமான
மெரினா !

பட்டதாரிகளை பட்டியல் இட முடியாது
அவர்களின்
வளர்ந்த தாடிக்கும்
விளக்கம் கூற முடியாது !

மழித்த சில சில்லரைகள்
மகிழ்வாய் வேலை கிடைத்தவுடன்
பெண் வீட்டாரிடம்
பட்டியலிட்டு கேட்பதோ வரதட்சனை எனும்
பிச்சை..!

கல்யாண மார்க்கெட்டில்
விலை போகாத
மாதர்கள் சிலர்
வாடி வதங்கி
ஓரமாய் வீசப்படுகின்றனர்
பலர் தனித்து தங்கள்
முத்திரை பதிக்கின்றனர்.

வியாபாரம் நடத்த நம்மவர்கள்
எடுத்துக்கொண்ட
பொருள் “கல்வி”
பள்ளிக்கு தேவை
நோட்டு புத்தகங்கள் இல்லை
நோட்டு கட்டுகள் மட்டுமே!

வலது கையில் கையெழுத்து
இடது கையில் கையூட்டு
அரசு அலுவலகத்தில்
அமர்ந்திருக்கும் அவனுக்கு
போதா குறைதான்
பெண்டாட்டி வடிவில்!

கோட்டை முதல்
குடிசை வரை
குள்ளநரிகள்
சுகமாய் சுலபமாய்
சுரண்டுகின்றன.

காவல் நிலைங்களில்
கற்புகள் விலை பேச படுகின்றன

கல்வி சாலைகள் காசுக்காக
கையேந்துகின்றன

நித்தமும் பொதி சுமக்கும் கழுதைகள்
மாநகர பேரூந்து எனும்
பகவான்ங்கள்
படிகட்டில் பார்க்கலாம்
தற்காலிகமாய் உருவாகும்
பாரதத்தின் ஒற்றுமையை !
தொங்கும் தொப்பை வயிற்றில்
முட்டி மோதி
முழுசாய் ஏறினால்
உள்ளே ரசிப்பவர்களின்
கண்கள்
ரவிக்கையில் மட்டுமல்ல
இடையே தெரியும்
இடையிலும் தான்......

அணில் குட்டி அனிதா: கவிதா கவிதா ...போதும் நிறுத்துங்க.. என்ன இது..இவ்வளவு வெயில்ல உங்க கூட சுத்தி கலைச்சு போய் இருக்கேன்..என்னை கவனிக்காம நீங்க பாட்டுக்கு எழுதிட்டே போறீங்க.. சில்லுன்னு ஒரு டம்ள்ர் ஜீஸ் போட்டு குடுங்க... ஸ்ட்ரா..போட்டுத்தாங்க.. நம்ம பல்லுக்கு அப்படியே குடிக்க முடியாது......

ஹலோ!.. என்ன லுக்கு..! உங்களத்தான்...படிச்ச வரைக்கும் போதும். அம்மனி ஜீஸ் போட்டு வர லேட்டாகும்..அடுத்த பதிப்புல சென்னையை தொடரலாம். அப்புறம். மறக்காம. இதுவரைக்கும் சென்னை எப்படி இருந்துதுன்னு அணில் குட்டி அனிதா க்கு ஒரு லெட்டெர் போட்டுருங்க, நம்ம பத்தி நாலு வரி சேர்த்துகோங்க..சரியா?!! நான் அப்ரூவ் பன்னாத்தான் அம்மனிக்கு போகும்.. நானும் ஜீஸ் குடிச்ச்ட்டு ஒரு குட்டி தூக்கம் போடரேன் ! ..அப்பப்பா..! என்ன வெயில் என்ன வெயில்... அடுத்த முறை AC Taxi book பண்ண சொல்லனும்...கவிதா என்ன ஜீஸ் ரெடியா.....!

கவிதாவும், அணில் குட்டி அனிதாவும் அறிமுகம்

Blog நண்பர் ஒருவர் உதவியுடன் நானும் அணில் குட்டி அனிதாவும் இந்த Blogger க்கு அறிமுகம் ஆகிறோம். உங்கள் அனைவரது ஆதரவையும் எதிர் பார்க்கிறோம். ஆமா... இந்த அணில் குட்டி யாருன்னு பார்ககறீங்களா? நம்ம பாதுகாப்புக்குதான்... ..அடிக்கரவங்க திட்டரவங்க எல்லாம் அணில் குட்டியோடு நிறுத்திகிட்டுமேன்னு தான் உஷார் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கேன். சும்மா ஒன்னும் இல்லைங்க...! மாத சம்பளத்துக்கு fix பண்ணியிருக்கேன் with all benefits. சம்பளம் மட்டும் இல்லைங்க, இவங்க கொரிக்க காய், பழம், ஜூஸ் எல்லாம் Supply செய்யரேன்னு agreement போட்டு இருக்கேன். அதனால கொஞ்சம் பார்த்து நடந்துகோங்க. ஏடா கூடமா திட்டி துரத்தி விட்டுராதீங்க.. சென்னையில அணில் குட்டி கிடைக்கறது ரொம்ப ரொம்ப கஷ்டம்ங்க.. ..

ஏன் அணில் குட்டி?! ஒரு நாய் குட்டியோ பூனை குட்டியோ கிடைக்கலயான்னு நீங்க நினைக்கலாம். சின்ன வயசுலேர்ந்து அணில் குட்டினா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கு பின்னாடி ஒரு flash back இருக்கு.. அந்த கண்ணீர் கதையை blog நண்பர்களுக்கு நிச்சயம் சொல்லுகிறேன். முதல் பதிப்பிலேயே உங்களை எல்லாம் அழவைக்க வேண்டாம்னு பார்க்கிறேன்.

நானும் அணில் குட்டி அனிதாவும் சேர்ந்து, சென்னை நகரை ஒரு சுற்று சுற்றி வந்தோம்..இதோ ..