ஐயங்கார் வெதுப்பகம் ரொட்டியும் சங்கமம் திரட்டியும்


விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து சாந்தி திரை அரங்கம் (நான் படிக்கும் காலத்திலேயே ஏதோ பிரச்சனையில் மூடிவிட்டார்கள்) வரும் வழியில் ரயில் நிலையத்தை ஒட்டி, அரசினர் ஆண்கள் உயர்நிலை பள்ளி செல்லும் தெருவில் ஒரு ஐயங்கார் வெதுப்பகம் இருந்தது. (இப்போது இருக்கிறதா என தெரியவில்லை). எனக்கு தெரிந்து அந்த பகுதியில் அது ஒன்று தான் வெதுப்பகம்.  

எனக்கோ அண்ணன்'களுக்கோ காய்ச்சல் வந்தால், அங்கு சென்று சுடச்சுட ரொட்டி வாங்கிட்டு வந்து தருவார்கள்.  மாலை 3-4 மணி வாக்கில் சென்றால், சுடச்சுட ரொட்டி கிடைக்கும்.  அது ஐயங்கார் வெதுப்பகத்தின் சொந்த உருவாக்கம், ரொட்டி கேட்டப்பிறகு, முழுசாக இருக்கும் ரொட்டியை நம் எதிரில் கட்டை மேல் வைத்து துண்டுகள் போட்டு, மெல்லிய வெள்ளை கவரால் சுற்றித்தருவார்கள். அதற்கு தயாரிப்பாளர் பெயர் எதுவும் இருக்காது. ரொட்டி. மிருதுவாக ருசியாக  இருக்கும். இப்போது போல மளிகை க்கடையில் எல்லாம் ரொட்டி கிடைப்பது இல்லை. ரயில் நிலையம் வரை நடந்து சென்று வாங்கி வர வேண்டும் என்பதால் ரொட்டி வாங்குவதை மிகப்பெரிய வேலையாக நினைப்போம்.

எங்களுக்கு காய்ச்சல் என்பது வருடத்திற்கு ஒரு முறை வந்தால் அதிகம்.அப்படியே வந்தாலும், மிளகு ரசமும், மிளகு தட்டிப்போட்ட மீன் குழம்பும், வயக்காட்டு நண்டு குழம்பும் வைத்து ஒரே வேளையில் காய்ச்சலை இறக்கி விடுவதில் ஆயா கெட்டி. வயல் நண்டுவை பற்றி சொல்லியே ஆகனும். காய்ச்சல் வரும் நேரம், விடாத நெஞ்சு சளி, இருமல் இருக்கும் நேரங்களில், இந்த நண்டு வரும். யாரிடமோ சொல்லி வைத்து வாங்குவார்கள், இது வரும் போதே கச்சா முச்சான்னு ஒன்றோடு ஒன்று மோதி சத்தம் எழுப்பிக்கிட்டே வரும். அதை வேடிக்கை பார்க்கும் போதே பாதி காய்ச்சல் ஓடிப்போயிடும். :). உயிரோடு அதை ஒவ்வொன்றாய் எடுத்து அம்மியில் வைத்து நச்சக்" ன்னு குழவியை அதன் உடம்பின் மேல் போடுவார்கள். அவ்வளது தான் ஆள் அவுட்.  பிறகு எடுத்து சுத்தம் செய்து குழம்பு ரெடி. கடல் நண்டுவை விட, கழனிவெளி நண்டு தான் சூப்பர் ருசி.

ரொட்டிக்கு வருவோம், குடும்ப டாக்டர் ராஜாராம் மனசு வைத்தால் மட்டுமே ரொட்டி சாப்பிட வாய்ப்புண்டு. சாப்பாடே கூடாது என அறிவுரை செய்தால் ஒழிய இந்த ரொட்டியும் கிடைக்காது. சாப்பாடு வேண்டாம் என்றாலும் அடுத்து வந்து நிற்பது கஞ்சி தான். நொய் அரிசிக்கஞ்சி, அர்ரொட்டி மாவு கஞ்சி என்று எதையாவது செய்து க்கொடுப்பார்கள். தொட்டுக்கொள்ள காரமில்லாத உப்பு நார்ந்தங்காய் ஊறுகாய். (ஸ்ஸ்ஸாஆ.)  இதை எழுதும் போது, அந்த கஞ்சியும் ஊறுகாயும் கிடைக்காதா என மனம் ஏங்குகிறது. கஞ்சிக்கூட வைத்து விடலாம், அந்த ஊறுகாய். சான்சே இல்ல.  ஆனால் அப்போதோ மனம் ரொட்டிக்கு தான் ஏங்கியது. . அதற்கு கண்டிப்பாக சாப்பாடு சாப்பிட முடியாத வாய் கசப்போடு கூடிய காய்ச்சல் வந்தே ஆகவேண்டும். அநாவசியமாக ரொட்டி வாங்கித்தரவே மாட்டார்கள். கடையில் சென்று ரொட்டி வாங்கி சாப்பிடுவது கெட்ட பழக்கம், காய்ச்சல் என்றால் மருந்து போல் சாப்பிட வேண்டிய லிஸ்டில் மட்டும் வருபவை.

ஓரிரு முறை அந்த வெதுப்பகத்திற்கு நானும் சென்று ரொட்டி வாங்கி வந்த நினைவு இருக்கிறது. பொதுவாக வெளி வேலைகளுக்கு, கடைகளுக்கு என்னை அனுப்பவுதில்லை. அனுப்பினாலும் கூட அண்ணன், அத்தை, அத்தை மகள், மகன் என்று யாராவது வருவார்கள்.

இருங்க..இருங்க..... தலைப்பில் ரொட்டிக்கும் திரட்டிக்கும் என்ன சம்பந்தம் னு தெரியாமல் படித்துக்கொண்டு வருபவர்களுக்கு............... சங்கமம் திரட்டியின் அறிமுகம்..
================================================================
பிரபல பதிவர் + இயக்குனரும், இந்திய நாட்டின் மீதும்,  தமிழ் நாடு மற்றும் மொழியின் மீதும் தீராத தீவிர காதல் கொண்டிருக்கும் அமெரிக்கரான (?!) திருவாளர் இளா அவர்கள், தமிழ் நல்லுலகத்திற்கு ஒரு தமிழ் திரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார்.  நம்மை எல்லாம் நம்பி ஆரம்பித்த அவரை நாம் கைவிடலாமா?? விடவேக்கூடாது. அந்த திரட்டியில் உங்களின் பதிவை சேர்ப்பது மிகவும் எளிதுதான். ஒரு Gmail கணக்கு இருந்தாலே போதுமானது.  இதை படிக்கும் போதே, www.isangamam.com லிங்கை க்ளிக்கி, ஓடிப்போய்  ஒரு "உள்ளேன் ஐயா"  போட்டுட்டு, உங்க வலைப்பதிவையும் இணைச்சுட்டு வந்து  மிச்சத்தை படிங்க. அப்பத்தான் அமெரிக்காவில் இருந்து எனக்கு கமிஷன் வந்து சேரும்.
    
உங்க பதிவை சேர்த்துட்டீங்களா?  வாங்க திரும்ப ரொட்டி சாப்பிட கிளம்புவோம்.
===============================================================
வீட்டில் எங்கள் மூவருக்கு மட்டும் தான் இந்த ரொட்டி கணக்கு. அதுவும் காய்ச்சலை சாக்காக வைத்து அடம் பிடித்து ரொட்டி வேண்டுமென கேட்கும் ஒரே ஆள் நான் தான். அண்ணன்கள் கஞ்சி கொடுத்தால் குடித்துவிட்டு பேசாமல் இருப்பார்கள். எல்லாவற்றிற்கும் அடம் பிடிப்பது,  கேட்டதை தராவிட்டால் உண்ணாவிரதம் இருந்து சாதிப்பது போன்ற எல்லா நற்செயல்களும் செய்து, நற்செயல்களுக்கு ஏற்றவாறு எல்லோரிடமும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிவாங்குவதும் நானாகத்தான் இருக்கும். பெண் குழந்தை இப்படித்தான் இருக்கனும்னு சட்டம் திட்டம் பேசும் வீட்டில், பெண் குழந்தையை அடிப்பதில் மட்டும் தயவு தாட்சன்யம் பார்த்தது இல்லை. யப்பா என்னா அடி.. அதுவும் எது கையில் கிடைக்குதோ அதை வைத்து அடி பின்னிடுவாங்க பின்னி..ம்ம்ம்...இப்ப நினைத்து பார்த்தால் கூட, என் உடம்பு எவ்வளவு அடி உதைகளை தாங்கி, கடந்து வந்து இருக்கிறது என்பதை நினைத்து பிரம்மிப்பாக உள்ளது.  குடும்ப குல விளக்கு என ஒரு பக்கம் போற்றப்பட்ட என்னை மட்டுமே பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது....... எவ்வளவு நல்லவளா இருந்து இருக்கேன்னு மட்டும் புரியுது. . 

இப்படி அடி உதை வாங்கினாலும், அது ஒரு காலம், ரொட்டிக்காக ஏங்கிய காலம் ! வருசத்திற்கு ஒரு தடவையோ இரண்டு தடவையோ கிடைக்குமா அதற்காக காய்ச்சல் வருமா என்று எதிர்பார்த்ததுப்போக , இன்று வாரத்திற்கு 3-4 நாட்கள் காலை நேர உணவில் ரொட்டி சேர்ந்துவிட்டது. மைதா ரொட்டி போக, இப்போது கோதுமை ரொட்டி வந்துவிட்டது. பிரட் ஆம்லெட், பிரட் ரோஸ்டு வித் ஜாம் , சீஸ் & பட்டர், பிரட் சான்ட்விஜ், பிரட் ஃப்ரென்ச் ஃப்ரை , பிரட் முட்டை பொரியல்,  பிரட் & பால். இப்படி ரொட்டியில் செய்யும் உணவுகள் உடலுக்கு நல்லது கலோரி குறைவு என சாப்பிடுவதும் அதிகமாகிவிட்டது.  காலை வேளை அவசரத்தில் செய்வதற்கும் மிகவும் எளிதாக உள்ளது.

சீஸ், பட்டர்,  முட்டை  பால் எல்லாம் கலோரி குறைச்சலா என கேட்டால், முட்டை தவிர மற்றவை கொழுப்பு நீக்கியதாகத்தான் வாங்குகிறோம். நாம் கடைக்கு போனாலே,  ரொட்டியை எடுத்து கையில் கடைக்காரர் கொடுப்பது வழக்கமாகிவிட்டது.   ரொட்டி இல்லாத வாரம் இருப்பதே இல்லை.

எப்போது ரொட்டி சாப்பிட்டாலும், காய்ச்சல் நினைவுகளும், காய்ச்சல் வரும் போது ரொட்டிக்காக அடம் பிடித்த நினைவுகளும், ஐயங்கார் வெதுப்பகமும் நினைவில் வராமல் இருப்பதில்லை.

அணில் குட்டி : மக்கா... ரொட்டிய பத்தி படிச்சதுல சங்கமம் திரட்டியில் பதிய மறந்துடாதீங்க. யாரும் பதியாமல் போனால், திரட்டி ஓனர் அமெரிக்காவிலிருந்து துப்பினால், எங்கையும் நடுவில் விழாமல் நேரா கவி முஞ்சி மேல வந்து தான் விழும்.. ஹி ஹி...அது அந்தம்மாவோட கவலை நமக்கென்ன..??

நீங்களும் உங்க பதிவில் சங்கமம் திரட்டியை விளம்பரம் செய்தீங்கன்னா, அமெரிக்காவில் இருந்து கமிஷன் வரும் ! அதான் இப்ப மேட்டர்..  விளம்பரம் செய்து கமிஷனை வாங்க மறக்காதீங்க .. திரட்டி ஓனர் அமெரிக்காஆஆஆ......ங்கறதையும் மறந்துடாதீங்க.. :)

பீட்டர் தாத்ஸ் : Good days are to be gathered like grapes, to be trodden and bottled into wine and kept for age to sip at ease beside the fire. 
Our memories are the only paradise from which we can never be expelled
.

நல்லதொரு குடும்பம்....

நவீன் : ஏன்ப்பா இவ்ளோ கஷ்டப்படறீங்க, நம்ம வீட்டு ஃபோட்டோகிராபர் கிட்ட கேளுங்க .. அவங்க சொல்ற இடத்தில் நின்னு எடுத்தா..நல்லா வரும்.

போட்டோ எல்லாம் எடுத்து முடிந்து, நவீன் தோழி என்னிடம் தனியாக...


நவீன் தோழி : ஆன்ட்டி, நீங்க என்ன வேல பார்க்கறீங்க

கவி : அட்மின் & ஹெச் ஆர்

நவீன் தோழி : ஹோ..ரியிலி...பட்,  நீங்க பெரிய ஃபோட்டோகிராபரா ஆன்ட்டி.. உங்களுக்கு ஃபோட்டோகிராஃபிதான் பேஷனா ஆன்ட்டி.........

கவி : அவ்வ்வ்வ்.... .. (அசிங்கப்பட்டாடா ஆட்டோக்காரி )
 
********

கவி : ப்பா.. இன்னைக்காச்சும் பேப்பரை கடையில் போட்டுடுங்க..

பழம்நீ: நிறுத்து................. அத்தோட நிறுத்து........  போடறேன்...

கவி :  (கடுப்பாக.) ம்க்கும் இப்படிதான் வார வாரம் சொல்றீங்க.. ஒரு மாசத்துக்கு மேல அப்படியே கிடக்கு.. நான் போட்டுடவா?

பழம்நீ: வேணாம். ஒரு மாசம் தானே ஆச்சி.. கிடக்கட்டும். அதை அதை வருசக்கணக்கா என்ன செய்யறதுன்னே தெரியாம இந்த வீட்டுல வச்சி இருக்கேனில்ல.. இது கிடந்தா பரவாயில்லை..
 
கவி: ஆங்.. ...... 

***********

நவீன் : அம்மா, உன் முகத்தில கண்ணு தாம்ம்மா இருக்கு.. எவ்ளாம் பெரிய கண்ணு....

கவி : :) :)

பழம்நீ: உன் முகத்தில மூக்கும் , கண்ணும் தாண்டி இருக்கு..

கவி : அய்யய்ய .. .. என்ன சும்மா எப்பப்பாத்தாலும் கண்ணு இருக்கு மூக்கு இருக்குன்னு..முகத்தில் வேற என்ன இருக்குமாம்?

பழம்நீ : முகம் இருக்கனும்டீ...

கவி: ஞே... ! 

*************

கவி : வாவ்.. .என்னா சூப்பரா இருக்கு சாம்பார். . ஆனாலும் உங்க பொண்டாட்டி சமைக்கிற சாம்பார் சூப்பர்ர்ர்ர்ராஆஆ இருக்கு... என்னா டேஸ்ட் என்னா டேஸ்ட்

பழம்நீ - ஆமாம்மா என் பொண்டாட்டி ஒரு சாம்பார்..... அவ புள்ள சாம்பாரோ சாம்பார்... 

கவி: .. :((((       சாம்பார் ரொம்ப பிடிக்கும்னு சாப்பிட்டா... அவங்க எல்லாம் சாம்பாரா..?

பழம்நீ : நேராவே சொல்லியும் கேள்வி கேக்கும் போதே தெரியல...

கவி : .......அவ்வ்வ்...

**********

(காலை 6 மணி)

கவி : ப்பா... இன்னைக்கு என்ன டிபன் செய்யட்டும் ?

பழம்நீ: பிட்ஸா

கவி : அவ்வ்.... பிட்ஸா செய்ய நோ Base . (காலங்காத்தால என்ன கொடுமைடா இது)

பழம்நீ: மக்ரோனி

கவி : நான் வாங்கல

பழம்நீ : ம்ம்ம் ....அந்த இத்தாலி ஃபுட்...... பாஸ்தா...

கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்.. அதெல்லாம் நான் வாங்கறது இல்லப்பா.. 

பழம்நீ - பர்கர் ...

கவி :  யப்பாஆஆஆ ....... என்ன டிபன் செய்யட்டும்னு சொல்லித்தொலைங்க.. இத்தாலி, அமெரிக்கா, அண்டார்ட்டிக்கான்னுக்கிட்டு

பழம்நீ : ஏய் நீ எப்பேர்ப்பட்டவன்னு எனக்கு நல்லா தெரியும்டி... பொறுப்பா என்ன டிபன் வேணும்னு கேட்டுட்டு போயி, அதை தவிர்த்து மத்ததை செய்ய போற.. எத்தனையோ  தரம் பாத்தாச்சு... போடி போ.. .  உன் இஷ்டத்துக்கு எதையாது செய்துக்கோ.... 

கவி : :((((((  (என்ன இவ்ளோ சீக்கிரம் தெளிவா ஆகிட்டாரு?)

***********

கவி :  ப்பாஆஆஆஆ   எத்தனை நாளா சொல்றேன், வலது கண் அடிச்சிக்கிட்டே இருக்கு. இப்படி தொடர்ந்து அடிச்சதே இல்லை. எதாச்சும் செய்ங்கப்பா எரிச்சல் எரிச்சலா இருக்கு... :(

பழம்நீ: ( என் எதிரில் வந்து நின்று ) உன்னோட வலது கைய அந்த கண்ணுக்கு நேரா கொண்டு வா ....

கவி : ம்ம்... ஆச்சி..அப்புறம் ???

பழம்நீ : இப்ப.. உன்னை இத்தனை நாளா அடிக்கற அந்த கண்ணை, நீ உன் வலது கையால திருப்பி அடி......

கவி : ஆங்க்.... :((

*********

பழம்நீ : என்னடி இது? :((( (செம கடுப்பில்)

கவி : ஹி ஹி..அதுவா சேமியா புட்டு. அணில் சேமியாவில் தானே செய்வேன். ஆனா ஒரு சேஞ்சுக்கு பேம்பினோவில் ட்ரை பண்ணலாம்னு பார்த்தா ............ஸ்ஸ்ஸ் இப்படி வந்துடுத்துப்பா...... எஸ்க்யூஸ்மீ...  :) 

பழம்நீ : (அதே கடுப்பில்)  எப்பிட்ரீ இதை சாப்பிடறது... ?

கவி : கையாலதாம்ப்பா...

பழம்நீ : கிர்ர்ர்ர்ர்ர்...........

*************

கவி : (ரொம்ப மும்மரமாக இரவு 9.30 மணிக்கு மேல் அலுவல் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவரை)  ப்பா.. .இங்க வாங்களேன் உங்கக்கிட்ட ஒரு விசயம் சொல்லனும், ரொம்ப முக்கியம். .இப்ப சொல்லாட்டி மறந்துடுவேன்...

பழம்நீ : (எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு வந்து) ........ ம்ம் சொல்லு...

கவி : இல்ல எனக்கு தூக்கம் தூக்கமா வருதா... நான் தூங்கறதை யாராச்சும் வேடிக்கை பார்த்தா நல்லா இருக்கும்னு தோணிச்சி அதான் கூப்பிட்டிட்டேன். ... எதிர் ல உக்காந்து கொஞ்சம் வேடிக்கை பார்க்கறீங்களா?

பழம்நீ : அடி.. #@$#%$@$#^%  . .எவண்டி உன்னை எல்லாம் பெத்தது.. ?! :(((

கவி : :)))))))))  ஹி ஹி.. எங்கப்பா ன்னு சொல்லமாட்டேனே. .அவரு ஆம்பளையாச்சே அவராலே பெத்துக்க முடியாதே.... :)))

பழம்நீ:  அட ஆண்டவா இன்னும் எத்தனை வருசத்துக்கோ......இதெல்லாம்.... .

கவி :...... :)))))))))

************

கவி : அப்பா கார்ட் வச்சி இருக்கியாடா... ?

நவீன் : இல்லம்மா.

கவி : கவர்மென்டு ஆபிஸ் போனால் டக்குன்னு அப்பா கார்ட்டை எடுத்து க்காட்டு, அவரை யாரும் மதிக்க மாட்டாங்க. .ஆனா அவர் கார்ட்டை காட்டின்னா கொஞ்சமாச்சும் மரியாதையா பதில் சொல்லுவாங்க..

பழம்நீ: மவளே ஆனாலும், உனக்கு இருக்க திமுரு இந்த உலகத்தில் வேற யாருக்கும் இருக்காதுடி...

கவி : ஹி ஹி.. தாங்ஸ் ஆபிசர்.. :)))

************

நவீன் : ஏன் உன் மூஞ்சி சைஸ் க்கு கண்ணாடி போட்டுக்கிட்டு இருக்க

கவி : சன் லைட் அலர்ஜிடா... கண்ணுல   தண்ணி தண்ணியா வருதுடா..... அதான்..

நவீன் : நொள்ளக்கண்ணு ன்னு நேரா சொல்லேன்.. ..ரொம்ம்ம்ம்ம்ப பில்டப் கொடுக்கற.. ..

கவி : கிர்ர்ர்ர்ர். !  (சன் க்ளாஸ் போடறது ஒரு குத்தமாய்யா?)

***********

அணில் குட்டி : துப்பின கதை எல்லாம் வெளிய வரக்காணோம்... ???

பீட்டர் தாத்ஸ் : Other things may change us, but we start and end with family”

ஞானத்தங்கமே..

நீ
நான்
நாம்
நம் குழந்தை
இவ்வாழ்க்கை
பறவை
நாய் 
உயிரற்ற " மரம் "
                                        (பூவும் காயும் கனியும் வாசமும் காற்றும்.........)
மரம்

அத்தனையும் மாயை !


அழியாத ஒன்றை எடுத்துக்கூறு
..............................

அழியாத ஒன்றை மட்டும் எடுத்துக்கூறு
அடங்காத ஆசை மட்டுமே

அழியாத வரிசையில் முன்னின்று சிரித்தது
மற்றவரையும் சிரித்து பார்க்க செய்தது

ஆசையை அழித்தவன் உண்டோ
ஆசையை அடியோடு அழித்தவன் உண்டோ

இல்லை...
வேகமாய் சொல்லி.. 

ஆசை தொடர்கிறது ...........
மாயையும் தொடர்கிறது........


குட்டையில் ஊறிய மட்டைகள் !


அன்னா ஹசாரே வந்து தான் நமக்கு ஊழலை எதிர்க்க சொல்லித்தரனும். அதற்கு பிறகு நாமெல்லாம் அவர் வழியில் கொடித்தூக்கி , ஆர்பாட்டம் செய்து ஊழலை எதிர்க்க வேண்டும்.  அது வரைக்கும் "ஊழல்" அப்படீன்னா நமக்கு என்னான்னே தெரியாது. பார்த்ததே இல்லை செய்ததே இல்லை. நாமெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்க. !

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது பல பஸ்கர்கள், அன்னா ஹசாரேக்கு சப்போர்ட் செய்து பஸ் விட்டது மட்டுமல்ல,

"ஒரு வேளை சாப்பாட்டை நான் தியாகம் செய்துவிட்டேன் நீங்கள் செய்யவில்லையா? " # அட அட அட.... ?! :))))))))))))))

# ஊரு பக்கமெல்லாம் செவ்வாய், வெள்ளி, சனி மூன்று நாளும் நம் வீட்டு பெண்கள் விரதம் இருப்பாங்க.. . இவரு ஒரு வேள பட்டினியாம், ஊழல் நின்னுப்போச்சாம். ரோடுல நடக்கும் போது ஃபிகருங்களை மட்டும் பார்க்காமல் அங்கிட்டும் இங்கிட்டும் கொஞ்சம் பாருங்க.. உங்களை போன்ற சகமனிதன், பல நாட்கள் பட்டினியில் கிடப்பது தெரியும். இவரு இருக்காராம்மா ஒரு நாள் பட்டினி..... 

"இனி நான் ஊழலுக்கு உடந்தையாக இருக்கமாட்டேன்" # அட அட அட அட  !! :))))))))))))

# அப்ப இதுவரைக்கும் இருந்தீங்களா?

இது மாதிரி இன்னும் எத்தனை எத்தனையோ...... சிலிர்த்து போச்சி சிலிர்த்து................. என் மயிற்கால்கள் !

அப்ப நமக்கு சொந்தமாக எப்பவுமே மூளை வேலைசெய்தது இல்லை. தலைவர் னு ஒருத்தர் எல்லாத்துக்கும் வேணும். இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன், ஒரு வேளை சாப்பிடாமல் இருந்து,ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவிட்டால், ஊழல் போயிடுமாய்யா? தனிமனிதனாக என்ன செய்யறோம்? எப்படி அன்றாட வாழ்க்கையில் இருக்கிறோம்னு வாய் கிழிய பேசுபவர்களும் எழுதுபவர்களும் இருக்கிறார்களா?  ம்ம்..மூக்கை விட்டு தான் அவர்களின் சொந்த வாழ்க்கைக்குள் சென்று பார்க்க வேண்டும் !

எனக்கு நினைவு தெரிந்து, எதற்குமே லஞ்சம் கொடுத்து என் வேலையை நான் செய்ததில்லை என்று சொன்னால் யாரும் இதை நம்புவீர்களா என்று எனக்கு தெரியவில்லை.  இதை நான் நினைவு தெரிந்து செய்ய ஆரம்பித்தது என்னுடைய 13.5 வயதில். சின்ன அண்ணனுக்கு பள்ளியில் டிசி வாங்க சென்ற போது, இரண்டு மூன்று நாட்கள் அலைய வைக்க, ஆயா, என்னை உடன் செல்லுமாறு அனுப்பினார்கள். பள்ளி அலுவலக ப்யூன் , என்னிடம் பணம் கேட்க, அங்கேயே சத்தம் போட்டு கூட்டத்தை கூட்ட, அலுவலகத்தில் அத்தனை ஆசிரியர்களும் ஆஜர். அண்ணன் பயந்து போயி அலுவலகத்தை விட்டு வெளியேற, நான் கேட்பவர்கள் அத்தனைப்பேருக்கும், அண்ணன் எத்தனை முறை பள்ளிக்கு வந்தார், ஒரு டிசி க்கொடுக்க ஏன் இத்தனை தாமதம் நடக்கிறது, மேலும் தேவையில்லாமல் எதற்கு நான் பணம் கொடுக்க வேண்டும்? என்று கேள்வி சாதாரணமாக கேட்காமல் , குரலை உயர்த்தி கேட்டுக்கொண்டு இருந்தேன். பாவடை சட்டை அணிந்த சின்ன பெண், ஆச்சரியத்துடன் ஆசிரியர்கள் என்னை கவனித்துக்கொண்டு இருந்தார்கள்.

இத்தனைக்கும் எனக்கும் அந்த பள்ளிக்கும் சம்பந்தமில்லை. என்னை யாரும் அறிந்திருக்கவில்லை. அண்ணன் தான் அங்கே படித்தார். அண்ணனுடைய வாத்தியாரிடம் நான் ஆங்கிலம் , கணிதம் ட்யூஷன் சென்றதால், என்னை அவருக்கு மட்டும்  தெரிந்திருந்தது. பஞ்சாயத்திற்கு வந்ததும் அவரே தான். அவருடைய மாணவியாக  ஓரளவு என்னைப்பற்றி தெரிந்து வைத்திருந்ததால், "இங்கவாம்மா, சத்தம் போடக்கூடாது, பணம் நீ கொடுக்க வேண்டாம், டிசி கொடுக்க நான் ஏற்பாடு செய்யறேன், வா என, க்ளர்க் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று , எழுதி கையெழுத்து இட்டு இருந்த டிசி யை கிழித்து க்கொடுத்து அனுப்பிவைத்தார். ப்யூன் அன்று கேட்ட பணம் ரூ. 2/-  ( :) )

பிற்பாடு, எங்கள் அனைவரது சான்றிதழ்களும் தீ விபத்தில் எரிந்து போனபோது, சென்னை டிபிஐ அலுவலகத்திற்கு தினம்  காலையில் சென்று, அதிகாரியின் அறை வாசலில் நிற்பேன். மாலை தான் திரும்பி வருவேன். அங்கேயும் பணம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்தேன், அதனால் சரியான நேரத்திற்கு சான்றிதழ்களை கொடுக்க முடியாமல், என் மேற்படிப்பு ஒரு வருடம் நடுவில் தடைப்பட்டது, இருந்தாலும், ஒரு மாதம் காத்திருந்து , நடையாக நடந்து வாங்கினே ஒழிய, பணம் கொடுக்கவில்லை.

அரசு அலுவலகங்களில் பணம் கொடுக்காமல் ஒரு வேலையை செய்ய சிரமம் தான், ஆனால் தன் வேலை முடியவேண்டும் என நாமாகத்தான் அவர்களுக்கு பணம் கொடுத்து கொடுத்து பழக்கி, அதையே இன்று அவர்கள் தங்களின் அன்றாட கட்டாயப்பழக்கமாகி வைத்து இருக்கிறார்கள்.

கடந்த 20 நாட்களாக,  நவீன் போலிஸ் வெரிஃபிகேஷனுக்கு அலைகிறான். பணம், அது சம்பந்தமாக எந்த காவல் நிலையம் சென்றாலும் பணம்.  ப்ளாகர் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டபோது ரூ 500/- கொடுத்தால் வேலை நடக்குமே என்று சொன்னார். வீட்டில் இதனால் பிரச்சனை என்பதை விடவும், என்னை உடன் அழைத்து செல்ல இருவருமே விரும்பவில்லை,  நிச்சயம் நான் பணம் தரமாட்டேன், பணம் கேட்பவர்களை சும்மாவும் விடமாட்டேன். தேவையில்லாமல் பிரச்சனை என்னால் அதிகமாகும், இது எனக்குமே தெரிந்திருந்தாலும், பணம் கொடுக்காமல் என்னால் அந்த வேலையை செய்ய முடியும், தேவையில்லாமல் அலைந்துக்கொண்டு இருக்கிறான், வருகிறேன் என நானும் கேட்டு கேட்டு பார்த்து ஓய்ந்துவிட்டேன்.

இதோ நேற்று வேளச்சேரி காவல் நிலையத்தில் பணம் கொடுத்துவிட்டு வந்து இருக்கிறான். ஆனாலும் சான்றிதழ் கைக்கு வரவில்லை, பணம் வாங்கியப்பிறகும், நாளை வாவென அனுப்பிவிட்டனர்.  இன்று அவனருகில் அமர்ந்து, எதற்கு அன்னா ஹசாரே க்கு ஆதரவு தெரிவித்து, வண்டியில் கல்லூரி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ஊர்கோலம் சென்றீர்கள்?. டைம் பாஸா  நவீன்?  பணம் கொடுக்காமல் அந்த வேலை செய்ய உன்னை நீ பழக்கி க்கொள்ள வேண்டும், பணம் வாங்காமல் செய்ய வேண்டியது தான் அவனுடைய வேலை. அதை நம்மைப்போல் ஒருவர், இருவர் கூட புரியவைக்காவிட்டால் எப்படி? பணம் கொடுப்பது சரியான்னு யோசித்து பார்த்தியா? என்னால் இதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றேன். (ரகசிய குரல், பழம்நீ காதில் நான் பேசியது விழுந்தால், இந்த உலகத்தில் வாழவே தகுதியில்லாத பெண் என்று ஒரு மணி நேரம் காதில் ரத்தம் வரும் அளவு லக்சர் கேட்க வேண்டி கிடைக்கும்)

நிஜமான வருத்தத்தோடு, மனம் முகம் சோர்ந்து,  செய்வதறியாது அவன் சொன்ன பதில். "அம்மா, பணம் கொடுக்கும் போதே ரொம்ப மோசமாக பேசறானுங்க, போலிஸ் ஸ்டேசனுக்கு எல்லாம் நீ வரவேணாம்னு தான் உன்னை கூட்டிட்டு போகல.. அந்த அட்மாஸ்ஃபியர் சரி இல்லமா.. நீ எல்லாம் அதை சகிச்சிக்கமாட்ட ....நீ பெண், சட்டென்று உன்னிடம் பணம் கேட்க மாட்டார்கள், ஆனால் ஆண்களிடம் அப்படியில்லை.... நீ அதை புரிஞ்சிக்கனும்..அப்பா சொல்ற மாதிரி நீ இதை எல்லாம் கண்டுக்காத . விட்ரு "

முடிந்தது. குழந்தையும் பழகிவிட்டான். :(( . இனி அவனுக்கும் காசு கொடுத்தால் வேலை நடக்கும் என்பது புரிந்து போனது அல்லது புரியவைத்துவிட்டார்கள். . " நான் ஆண், நீ பெண் போன்ற உதாரணங்கள் சொல்லி என்னை சமாளிக்க கற்றுக்கொண்டான். 

அணில் குட்டி : புள்ளயும் உங்கள மாதிரி ஒரு வருசம் படிக்காம வூட்டுல இருக்கட்டுமா? ...  இவிங்க ரொம்ப நல்லவங்களாமா....... ம்க்கும் ! காசை கொடுத்து இருந்தா ஒரு வருசம் வெட்டியா படிக்காம வீணடிச்சி இருக்க வேணாம்.... போற இடத்தில் எல்லாம் எல்லாத்துக்கும் பொங்கிட்டு, ஒன்னுக்கு பத்து தரம் அலைஞ்சிட்டு.............. அம்மணி.. போயி வேல எதாது இருந்தா பாருங்க...

பீட்டர் தாத்ஸ் : “Though the bribe be small, yet the fault is great”
.