பொதுவாக காங்கரஸ் & திமுக போன்ற கட்சிகளின் மேல் வைக்கப்படும் முதன்மையான குற்றச்சாட்டு, குடும்ப அரசியல், கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைப்பத்தவர்களுக்கு முக்கிய பதவிகள் கிடைப்பதில்லை.. ஒரே குடும்பமே அரசியல் ஆதாயம் தேடிக்கொள்கிறது, கொள்ளையடிக்கிறது... இன்னும் பல...

பல சமயம் நினைத்துப்பார்த்ததுண்டு, ஒரு வேளை எம்ஜிஆர்’க்கு ஒரு மகன்/மகள் இருந்திருந்தால் ஜெயலலிதா அம்மையார் வந்திருப்பாரா.…. மாட்டார் தானே ?

இங்கே குடும்ப அரசியல் என்பது, பதிவிக்காகவோ பணத்துக்காகவோ வருவதில்லை. ஒரு தனி மனிதன், ஒரு கட்சி ஆரம்பித்து அதை எப்பாடுப்பட்டாவது (இதில் நல்லது கெட்டது எல்லாமே அடக்கம்) எல்லாவற்றையும் கடந்து, அனுசரித்து, சாணக்கியத்தனம் செய்து,  எதிரிகளை சம்பாதித்து படிப்படியாக கட்சியை உயர்த்தி, மக்களின் நன்மதிப்பை பெற்று, மிகப்பெரிய நம்பிக்கை சக்தியாக (அக்கட்சியை சார்ந்தவர்களுக்கு) மாற்றி, அந்தக்கட்ச்சிக்காண எல்லாவித நல்லது கெட்டதற்கும் பொறுப்பேற்று.. வளர்த்த, வளர்ந்த ஒரு ஆலமரம் போன்ற ஒரு கட்சியை.. வேற்று கையில் கொடுக்கும் போது அது கொஞ்சம் கொஞ்சமாக சுயலாபத்திற்காக பிய்த்து எறியப்படும் தானே…?? எத்தனையோ பேர் கட்சித்தொடங்குகின்றனர்… எல்லோராலும் அதை கச்சிதமாக கட்டுக்கோப்புக் குறையாமல் வளர்க்க முடிகிறதா? …இங்க சரத்குமாரோ, டி.ராஜேந்தரோ நினைவு வந்தால்….

பல லட்சம் தொண்டர்கள் யாரோ ஒரு தலைவரின் மேல் கொண்ட நம்பிக்கைதான் ஒரு கட்சி, அதை எளிதாக உடையவிட அத்தலைவரை சுற்றி இருக்கும் இரத்த சம்பந்த உறவுகள் விட்டுவிடுவார்களா? அல்லது பல லட்சம் பேர் கொண்ட கட்சியில், பல நூறு கட்சி பதவிகளில் இருக்கும் யாரோ ஒருவரை தேர்ந்தெடுத்து கட்சியை கையில் கொடுத்தால்.. அது எத்தனை முட்டாள் தனமான முடிவாக இருக்கும். தேர்ந்தெடுக்கும் ஒருவர் மட்டுமா அந்த கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்?  உட்பூசல், கட்சி சார்ந்தவர்களுக்கு, சார்ந்தவர்களின் சாதி மக்களுக்கும், சார்ந்தவர்களின் சொந்த பந்தகளுக்கு ஆத்திரமும் ஆவேசமும் வராதா? இவற்றையெல்லாம் யோசித்தே  ஆரம்பித்தவரின் குடும்பமே கட்சி உடையாமல் இருக்க அதிகாரத்தை தன் கையிலேயே வைத்திருக்கிறது.  தலைவரின் குடும்பம் வாரிசு எனும் வரும் போது, கட்சியை சார்ந்தோர்க்கிடையே பெரிதாக பூசல் வாராது.. அது பிடிக்காவிட்டாலும், உரிமை, கட்சியின் பாதுகாப்பு கருதி உடன்பட்டுவிடுவார்கள். எனக்குப்பிறகு என் குடும்பம் வராது என்று சொன்ன எத்தனையோ பேர், தன் குடும்பத்தினரையே வாரிசாக கொண்டுவந்துள்ளனர்…

இந்திய வரலாற்றை எடுத்துக்கொள்ளுங்கள், தமிழர்களை ஆண்ட மன்னர்கள் அனைவருமே குடும்ப வழிவழியாக வந்தவர்களே.. சோழர், சேரர், பாண்டியர் னு.. அரசருக்கு பின் அவரின் மகன், மகள் தான் அரசனைக்கு வருவார்கள். யாருமே இல்லையென்றால் அரசியார், இல்லையென்றால் அண்ணன் தம்பி ன்னு யாரோ அரசரின் குடும்பத்தை சார்ந்தவர்களே வருவர்.  அமைச்சரவையில் இருக்கும் யாரோ ஒருவருக்கு அரசனென்ற பட்டத்தை சூட்டமாட்டார்கள். இதுவேதான் உலகெங்கிலும் வழக்கம்.

புதிதாக ஆரம்பிக்கும் ஒரு கம்பெனியை எடுத்துக்கொள்ளுங்கள்.. அது வளர வளர , அதன் லாபத்தில் தன்னையும் சார்ந்தவங்களையும் மேலும் மேலும் வளர்க்கப்பார்ப்பகளே ஒழிய அதில் வேலைசெய்யும் யாரோ ஒருவருக்கு கம்பெனி பொறுப்புகளை க் கொடுத்துவிட்டு வேடிக்கைப்பார்க்க மாட்டார்கள்.

ஏன், ஒன்னுத்துக்கும் பொறாத வாட்சப் குரூப் ஆரம்பிக்கறவங்களே , ஆரம்பிச்சவர் கண்டதை அனுப்பாதீங்க, பேசாதீங்க ன்னு ஆயிரத்தெட்டு சட்டம் போடுவாரு. ஏன்னா அவங்க தலைமை.. அவங்க ஆரம்பிச்சது.. அதில் யாருக்கும் அதிகாரமில்லை என்பதை அப்பப்ப சுட்டிக்காட்டிட்டே இருப்பாங்க. அது அன்பான வேண்டுகோளாக இருக்கலாம். நமக்கு பிடித்தால் இருக்கலாம் இல்லைன்னா வெளியில் வந்து வேறொரு குரூப் ஆரம்பிக்கலாம்.. ஆனால் அந்த குரூப் தலைமைக்கிட்ட சண்டைப்போட்டு , நீ போடா நான் தான் தலைமை தாங்குவேன்னு சொல்ல முடியுமா?? அப்படிக் கேட்க முடியாதுன்னு ஒரு அடிப்படை புரிதல் வேணுமில்லையா.. .. தம்மாத்தூண்டு வாட்சப் குரூப் க்கே இப்படின்னா.. ஆண்டாண்டு காலமாக பகல் இரவு பார்க்காமல் ஒரு வெறித்தனத்தோடு உருவாக்கி வளர்த்த கட்சியை ..யாரையாவது நம்பிக்கொடுக்க முடியுமா? அப்படியே கொடுத்தால் தான் கட்சி கட்டுக்கோப்பாக இருக்குமென உத்திரவாதம் உண்டா? நீயா நானா ன்னு அடித்துக்கொள்ள மாட்டார்களா?

குடும்பத்தை சார்ந்தவர் என்றால், அதற்குப்பட்ட கஷ்ட நஷ்டங்களை…ஏன் அதில் வரும் வருமானத்தையும் சேர்த்துக்கொள்ளலாம், வருமானத்தையும் பல வருடங்களாக ப்பார்த்தவர்கள், எதையுமே பகிர்ந்துக்கொடுக்கும் மனது இருக்குமே ஒழியே மொத்தத்தையும் கொடுத்துவிட்டு ஓட்டாண்டியாகி நடு ரோட்டில் நிற்கும் முடிவை எடுக்கும் முட்டாளாக இருக்கமாட்டார்கள்.

அரசியில் கட்சி என்பதும் ஒரு கம்பெனியே....என்ன வருமானத்தோடு, பொது சேவையும், நாட்டு நலன்களையும் பார்க்கவேண்டும். பார்க்கின்றமாதிரி நடிக்கவாவது செய்ய வேண்டும். கேப்டன் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார்… நல்ல மனிதர் என்பது எல்லோருக்கும் தெரியும்.. அவரின் உடல்நிலை மோசமானபோது, அவரின் குடும்பத்தினர் தானே முன்னின்று நடத்தினர், அவரின் குடும்பம் கையில் எடுத்தபோதே, அந்த கட்சியின் நிலை என்னவென்பதை அனைவரும் அறிவோம், மாறாக அந்த பொறுப்பை அக்கட்சியை சார்ந்த ஒருவரிடம் ஒப்படைத்திருந்தால்? யோசியுங்கள்.. விஜய்காந்த் என்னவானார் என்று கேள்விக்கேட்டுக்கொண்டல்லவா இருந்திருப்போம்.

பணத்தைத்தாண்டி கட்சிக்கட்டுகோப்பாக இருக்க வேண்டுமென்பதில் தான், ஏதோ ஒரு நோக்கத்தோடு ஆரம்பித்த அந்த தலைமைக்கு தோணும். எப்படியோ போகட்டும், யாரோ நடத்தட்டும், யாரோ பொறுப்பை எடுத்துக்கொள்ளட்டும் என்று எந்த நல்ல தலைவனும் நினைக்க மாட்டான். அப்படி நினைத்தால் அவன் தலைவனுமில்லை.

ஏன் இப்ப இருக்கும் அதிமுக வில் குடும்ப அரசியில் நடக்கலையா, பாஜக வில் குடும்ப அரசியலே இல்லையா.. அதென்ன எப்பவும் காங்கரஸ், திமுக வை மட்டுமே வண்டியில் ஏத்தறது…. எல்லாக்கட்சிகளிலும் குடும்ப அரசியல் தான் நடக்குது.…… மூக்கை இப்படிக்கா மட்டும் நுழைக்காம எல்லா இடத்திலும் நுழைத்துப்பார்த்து வண்டியில் ஏத்தலாமே.…

இது எந்தக்கட்சிக்கும் வக்காளத்தில்ல…எல்லாக்கட்சியிலும் எல்லாமும் இருக்கு… அதில் குறைந்தபட்ச ஆபத்து எதிலிருக்கு… ஓரளவு நிம்மதியாக இருக்க முடியுமான்னு பாத்துத்தான் முடிவு செய்யனுமே ஒழிய…. மொக்கைக்காரணங்களை சொல்லி நம்மை அதிபாதளத்தில் தள்ளுவார்கள் என்று தெரிந்தும் போய் விழுவது…உங்களோடு சேர்த்து எல்லோரையும் படுகுழியில் தள்ளிவிடும்…

அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் கம்பெனிகள் தான்… யாரும் இங்கே தியாகிகள் இல்லை….

அணில் குட்டி ; வொய்..அம்மணி வாலின்டியரா டையருக்கு அடியல் படுத்திங்?  எனக்கே தெரியாம எதாது கட்சியில் சேர்ந்து இருப்பாங்களோ... ?? ம்ம்ம்...அம்மணிய வேவு பாக்கனும்......

பீட்டர் தாத்ஸ் : A political party cannot be all things to all people. It must represent certain fundamental beliefs which must not be compromised to political expediency, or simply to swell its numbers. -Ronald Reagan