சவுக்காரம்


1980 களில் ரொம்ப பிரசித்திப்பெற்ற சோப்பு விளம்பரம் "லிரில்" தான். டிவி எல்லோர் வீடுகளிலும் இருக்காது, எல்லாத் திரையரங்களிலும்  திரையிடப்படும் இந்த விளம்பரத்தையும், அந்த பெண்ணையும் விரும்பாதோர் இல்லை. 



எனக்கும் இந்த விளம்பரம் பிடிக்கும், அந்த சோப்பும் பிடிக்கும். ஆனால் வீட்டில் அதை வாங்கவே மாட்டாங்க. விலை அதிகமான சோப்புகள் என ஒரு பட்டியல் இருக்கும் அவற்றில் முதலில் வருவது "லக்ஸ்" அடுத்து "லிரில்". லக்ஸ் சோப்பிற்கு ஸ்ரீதேவி & ஜெயப்பிரதா விளம்பரப்படத்தில் வருவாங்க. லக்ஸ் சோப்பு பயன்படுத்தினால் ஸ்ரீதேவி போல இருப்போம்னு அநேகப் பெண்கள் நம்பியக்காலம்.

விலை காரணமாக, லக்ஸ்'ஐ அக்கம் பக்கத்தில் இருப்போர், உறவினர்கள் யாரும் உபயோகித்து பார்த்ததில்லை. ஆனால், நடு அத்தை வீட்டில் லிரில் சோப்பு வாங்குவாங்க. அங்கப்போகும் போது முகம் கழுவிட்டு வீட்டுக்குப் போடின்னு அத்தை சொன்னால், சோப்பை எடுத்து கலரை ரசிப்பேன், பின்னர் முகர்ந்துப்பார்ப்பேன், எலுமிச்சை வாசம் அடிக்கும். லிரில் சோப்பின் வடிவம், மேலுள்ள மஞ்சள், அடற்பச்சை கோடுகள் என்னமோ என்னை  மிகவும் கவரும்.

எங்க வீட்டில் எப்பவும் 'ரெக்ஸோனா' சோப்பு தான். ரெக்ஸோனா கிடைக்காத நேரத்தில், எப்போதாவது ஹமாம். இதில் ஆயாவிற்கு மட்டும் மைசூர் சாண்டில். அவங்க ரொம்ப சுத்தம், நாங்க பயன்படுத்திய சோப்பு அவங்களுக்கு பிடிக்காது. இந்த சாண்டில் சோப்பின் வாசமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். "தண்ணி சுடச்சுட இருக்கு, முகம் கழுவிக்கிட்டு போ பாப்பா" ன்னு அவங்க குளிக்கும் போது கூப்பிடுவாங்க. இதான் சாக்குன்னு சோப்பை ஆசைத்தீர முகர்ந்து, முகத்தில் பூசி கழுவுவேன். ஆயாவுடன் தூங்கும் போது, இந்த சந்தன வாசனை ஆயாவிடமிருந்து வீசும்,  இறுக்கி கட்டிக்கிட்டு தூங்குவேன்.


வீட்டில் தாத்தா கதை எப்பவும் தனிக்கதை. தாத்தாவிற்கு தனி ரூம். எல்லாமே தனி. ஆயாவே பணத்தை பார்த்து பார்த்து சிக்கனமாக செலவு செய்வாங்க. தாத்தா அதைவிட ரொம்ப மோசம், கஞ்சம் என்றே சொல்லனும். அநாவசியமாக ஃபேன் ஓடக்கூடாது, லைட் எரியக்கூடாது. ரேடியோ போடக்கூடாது.
தாத்தாவிற்கு பணம் செலவு செய்ய மனசே வராது, அதனால் அவரின் சோப்பு "லைஃப்பாய்". ஒரே ஒரு சோப்பு வாங்கினால், கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு வரும். ஒரு சோப்பு வாங்கி அதை ரொம்ம்ம்ம்பவே கஷ்டப்பட்டு இரண்டாக நறுக்கி, பாதி பாதியாகவே பயன்படுத்துவார். எனக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு 'ஒவ்வேக்' சோப்பு அது.

தாத்தா முதுகு தேய்க்க கூப்பிட்டாலே, வாயடிச்சிக்கிட்டே தேய்ப்பேன். "ஏன் தாத்தா இந்த சோப்புல நுரை வரல, வாசனையும் இல்ல, கரையவே மாட்டேங்குது, இதுக்கு பதிலா ஒரு செங்கல்லை தாங்க தேய்ச்சு விடறேன்"  னு சொல்லுவேன். உடனே தாத்தா புராணத்தை ஆரம்பிச்சிடுவாரு. நான் ஒரு ஏழை விவசாயிக்கு பிறந்த பரம ஏழை.. நீ பொறக்கும் போதே உங்கப்பன் ஃபோர்மேன், எனக்கப்படியா, மேல் சட்டைக்கூட இல்லாமல், வெத்து ஒடம்போட, இடுப்புல  சின்னதா ஒரு துண்டைக்கட்டிக்கிட்டு, உங்க ஆயா வீட்டு வாசலில், சொந்த மாமங்காரன் கிட்ட, "ஐயா..சாமி, எனக்கொரு வேல வாங்கித்தாங்கன்னு கைக்கட்டி நின்ன ஆளு"  உங்களாட்டும் செலவு செய்ய எனக்கு வசதி இல்ல" ன்னு சொல்லுவாரு.

இந்த கதையை 12814 ஆவது தடவையாக  காதில் ரத்தம் சொட்ட சொட்டக் கேட்டு, முதுகை ஏனோ தானோவென்று  தேய்ச்சிட்டு வருவேன். கதையும் மாறாது தாத்தாவின் பாதி " லைஃபாய்"  சோப்பும் மாறாது. இந்த சோப்பையும் விரும்பி எங்கவீட்டில் இன்னொரு ஜீவன் தாத்தாவிற்கு தெரியாமல் திருடி குளிக்கும். அது என் சின்ன அண்ணன். அதை தாத்தாவிடம் போட்டுக்கொடுத்ததில், என்னமோ ஒரு தரம் குளிச்சதில், சொத்தே கரைஞ்சுப் போன மாதிரி, அவர் அண்ணனை ஏகத்துக்கும் திட்ட, அந்த கடுப்பில் அண்ணன்,  என்னை எவ்ளோ முடியுமோ அவ்ளோ கும்மி கும்மி எடுத்த கதை வேற இருக்கு.  (யப்பா என்னா அடி.??!!! அண்ணன்களா அதுங்க.. பிசாசுங்க!! எப்பவாச்சும் அதுங்க அடிவாங்கியிருந்தா தெரியும்.. அடி எவ்ளோ வலிக்கும்னு...:((, நம்ளத்தானே வீட்டில ஒருத்தர் விடாம பின்னி பெடல் எடுத்தாங்க...)

இப்ப ஒரு டிவிஸ்டு. பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு நுழையுது சோப்பு. திருமணம் ஆன நாளிலிருந்து இன்று வரை பழனி ஆண்டவர் பயன்படுத்தும் ஒரே சோப்பு, "சின்தால்" அவரும் மாறமாட்டார்,  நாங்கள் மாறினாலும், அவருக்கென சின்தால்' தான் வாங்கனும். எனக்கும் சின்தால் சோப்பே பழகியும் போனது. இருப்பதிலேயே, சருமத்திற்கு மிகவும் தரமான சோப்பு சின்தால்' என்பதால், அதுவே தொடர்கிறது. சோப்பு கிடைக்காத நேரத்தில் நீயூ' விலிருந்து ஓல்ட் க்கு வருவோம். ஓல்டிலிருந்து நீயூவிற்கு மாறுவோம். (Cinthol had been rated first with high TFM. http://en.wikipedia.org/wiki/Total_fatty_matter )

நடுவில் நவீன், அவனுக்காக தனியாக விருப்பப்பட்டு வாங்க ஆரம்பித்த சோப்பு, "பியர்ல்ஸ்". ஆனால் ஒன்றிரண்டோடு அதன் கதை முடிந்தது. அவரும் சின்தாலே பயன்படுத்தினார். முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் வரவே, மெடிமிக்ஸ்; க்கு மாறினார்.

சிறுவயதில், நிறம், வாசனை, விளம்பர மோகத்தில், பொருட்களை வாங்க வேண்டும் என்பது போய், இது தான் நல்லது என எவ்வளவு விலை ஏறினாலும் அல்லது குறைவான விலையில் தரமான பொருளாக கிடைத்தாலும், சில தயாரிப்புகளை , தரம் மற்றும் உடல் நலம் கருதி தொடர்ந்து வாங்குவதென்னவோ உண்மை. 

அணில் குட்டி : ம்ம்... அம்மணி அடுத்து என்ன டூத் பேஸ்ட்டா?  கோபால் பல்பொடியிலிருந்து ஆரம்பிச்சி எழுதுவீங்களே...............ஹய்யோ கடவுளே.....

பீட்டர் தாத்ஸ் : Let advertisers spend the same amount of money improving their product that they do on advertising and they wouldn't have to advertise it.

Thx : Google -> Images & Video

எங்க வீட்டு சமையல் :கோதுமை தோசை & அடை

 கோதுமை தோசை :

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு : 2 கப்
பெரிய வெங்காயம் : 1
பச்சைமிளகாய் : 3
கடுகு : 1/4 ஸ்பூன்
உளத்தம் பருப்பு : 3/4 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை :

மாவை தோசை மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லை வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு , உளுத்தம் பருப்பு தாளித்து பொன் நிறமானதும், நறுக்கிய வெங்காயத்தையும், நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சை மிளகாவையும் போட்டு வதக்கவும், பாதி வதங்கும் போது கருவேப்பிலைப்போட்டு  வதக்கி, இதை கரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி நன்கு கலக்கவும்.

தோசைக்கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, மாவை வெளிப் புறத்திலிருந்து சுற்றி ஊற்றி, உட்புறத்தை நிரப்ப வேண்டும். நடுவில் ஊற்றி சுற்றக்கூடாது.  சாதா தோசை மாவைவிட சற்று தளர இருக்க வேண்டும். ரொம்பவும் கெட்டியாகவோ, ரொம்பவும் தண்ணியாகவும் இருக்கக்கூடாது. 

தோசை வெந்ததும் திருப்பிப்போட்டு எடுக்கவும். இது மாவின் பதத்தை பொறுத்து மொறு மொறுவென சுட்டு எடுக்க முடியும்.  இந்த தோசைக்கு எந்த காய்கறி சாம்பாராக இருந்தாலும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். சாம்பார் தவிர, தேங்காய் சட்னி, இட்லி தூளும் நன்றாக இருக்கும்.

                                                                   =======&=======
அடை :

தேவையான பொருட்கள் :
1.
இட்லி அரிசி : 1.5 கப்
துவரம் பருப்பு : 1 கப்
காய்ந்த மிளகாய் : 7-8 

2 :
பாசி பருப்பு : 1 பிடி
கடலை பருப்பு : 1 பிடி
கொண்டகடலை : 1 பிடி

3.
சோயா ச்சங்க்ஸ் : 1 பிடி

தேங்காய் : பொடியாக நறுக்கியது 3 ஸ்பூன் அளவு
வெங்காயம் - 2 
கருவேப்பிலை - சிறிது
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : தேவைக்கேற்ப

செய்முறை :

அரிசி , பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். அரிசியில் காய்ந்த மிளகாயை போட்டுவிடவும்.

2 இல் சொல்லியிருப்பது தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றை சேர்க்கும் போது துவரம் பருப்பின் அளவை 1/2  கப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும். கொண்டக்கடலையை 4-5 மணி நேரம் முன்னமே ஊறவைக்கனும்.

சோயா ச்சங்க்ஸ் 1, 2 - இரண்டிலும் சேர்க்கலாம். இதனால் ருசி எதுவும் மாறாது. சோயா ச்சங்க்ஸை ஊறவைத்து பிழித்து வைத்துக்கொள்ளவும்.

ஊறிய அரிசி +மிளகாயை நைசாக முதலில் அரைத்து வைத்துக்கொள்ளவும். பருப்பு வகைகளை ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளவும். கொஞ்சம் பருப்பை நிறுத்தி, அதனுடன் சோயா ச்சங்ஸை சேர்த்து நைசாக அரைத்து எல்லாவற்றையும் தோசை ஊற்றும் பதத்திற்கு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.

அத்துடன் பொடியாக நறுக்கி வதக்கிய வெங்காயம், கருவேப்பிலை, உப்பு, தேங்காய் துண்டுகள் சேர்த்து (கொத்தமல்லி இலை இருந்தால், பொடியாக நறுக்கி அதையும் சேர்க்கலாம்)  நன்கு கலக்கி, இதையும் தோசைக்கல்லில் முதலில் எண்ணெய் விட்டு, வெளிப் புறத்திலிருந்து சுற்றி ஊற்றி உள்பக்கத்தை நிரப்ப வேண்டும்.  நடுவில் ஊற்றி சுற்றக்கூடாது, அப்படி செய்தால் அடை மெல்லியதாக இல்லாமல் , குண்டாக வந்துவிடும்.

இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன், எடுத்து பரிமாறவும். இதற்கு எண்ணெய் சற்று தாராளமாக விட வேண்டும். இல்லையேல் ருசிக்காது. அடைக்கு அவியல் தொட்டுக்கொள்வார்கள். ஆனால் தேங்காய் கார சட்னி நன்றாக இருக்கும். அடை இரவு நேரத்தில் சாப்பிட நன்றாக இருக்கும்.

அணில்குட்டி : அம்மணி இனிமே சாப்பாடு போஸ்ட் நிறைய எழுத உத்தேசித்து இருக்காங்க. .காரணம் என்னென்னு உங்களுக்கு மட்டும் சொல்றேன் காதைக்கொடுங்க... .. ..... ....... ........ " திடீர்னு ஒரு நாள் ப்ளாகர் ஸ்டேடஸ் செக் பண்ணாங்க..அதுல.. மத்த போஸ்டுகளை விட, இவிங்க எழுதின சாப்பாட்டு போஸ்ட்கள் தான் 1000 கணக்கில் மக்கள் தேடி படிச்சி இருக்கறதை கவனிச்சாங்க.... மக்களுக்கு எது தேவையோ ..அதை சேவையா செய்யனும்னு முடிவு பண்ணி..... .. ...........   ........ஹி ஹிஹி..... இதுக்கு மேல என்னால முடியல.. 

பீட்டர் தாத்ஸ் : The main facts in human life are five: birth, food, sleep, love and death.
.

Skype 'ஓட உறவாடி

முதன் முதலில், அலுவலகத்தில் 2006ல் "Skype" உபயோகிக்க ஆரம்பித்தேன்.  அலுவலகம் சார்ந்த பேச்சுக்காக மட்டுமே Skype பயன்பட்டது.  கான்ஃபரன்ஸ் கால்'களுக்காக அலுவலக நண்பர்களை அதில் சேர்த்திருந்தேன்.

வெளிநாட்டில் உள்ளோரிடம், அலுவலக வேலையாகவும், வெளிநாட்டு நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கும் Skype பயன்பட்டு வந்தது. ஆனால் இதுவரை யாருடன் பேசும் போதும் தோன்றாத ஒரு விசயம் , இப்போது என் குழந்தையோடு பேசும் போது தோன்றுகிறது. அப்படி என்ன தோணிச்சின்னு கேக்கறீங்களா?

"என்ன பேசி என்ன பண்ண, என் புள்ளைக்கு ஒரு வாய் சோறு ஊட்ட முடியல, என்னத்த டெக்னாலஜியோ.......என்னத்த சோ மச்சு இம்ப்ரூவ்டோஒ ????? "

சரி சரி... யாரும் ரென்ஷன் ஆகப்பிடாது. பெத்த மனம் பித்துன்னு சும்மாவா சொன்னாங்க. எனக்கே தெரியும் இப்படி யோசிக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்னு.. ஆனால்..  இதுவரை ஸ்கைப் பயன்படுத்தும் போது தோன்றாத ஒரு விசயம், என் புள்ளையோடு பேசும் மட்டும் எனக்குத்தோன்றியிருக்கிறது.


இங்கிருந்து கிளம்ப ஒரு நாள் முன்னிலிருந்து, யூரோவை இந்திய ரூபாயில் எவ்வளவு வருகிறது எனக் கணக்கு பார்க்க ஆரம்பித்திருந்தான். சரி இது மனித குணம், எப்படியும் 3-4 மாதங்கள் இப்படித்தான் இருப்பான் என்று நினைத்திருந்தாலும், காசு கணக்குப்பார்த்து வயிற்றை காயப்போடுவானோ என்ற பயம் எனக்கு இருந்தது. அது சென்னை விமானநிலைத்தில், "என்னடா சாப்பிட்ட" ன்னு கேட்பதில் இருந்து ஆரம்பித்தது.

"ரொம்ப விலை அதிகம்மா.. ஒரு சாக்லெட், ஒரு கோல்ட் காஃபி குடித்தேன், என்றான்.

இது நடக்குமென்று தெரிந்ததால், ஒன்றும் சொல்லவில்லை, சொன்னாலும் அவன் மாற்றிக்கொள்ள மாட்டான் எனத்தெரியும். துபாய் சென்றதும், "சாப்பிட்டியாடா?" என்ற கேள்விக்கு அதே பதில் ஆனால், சாக்லெட்டும் குறைந்து இப்போது வெறும் "கோல்ட் காஃபி" யில் நின்றது.

பாரிஸ் சென்றதும், நானே அழைத்து, "ஐயா சாமி, சப்பாத்தி இருக்கு,  2 நாளைக்கு வரும், சூடு பண்ணி, ஜாம் வச்சி இருக்கேன்  தொட்டுக்கிட்டு சாப்பிடு" என்றேன்.

நேற்று தான் ஸ்கைப்பில் வந்தான்.  சாப்பாடு விசயம் பேசிவிட்டு, இருவரும் கொடுத்தனுப்பிய பணத்தைப்பற்றி வரவு செலவு கணக்குப்பார்த்தோம்.

கொஞ்சம் பாரிஸ் நகரம் பற்றி சொன்னான். அதிகம் சொல்லவில்லை. என்னளவு பேசக்கூடிய பையன் இல்லை. என்னைப்போல் இருந்திருந்தால், இன்னேரம் பக்கம் பக்கமாக பேசியிருப்பான். முக்கியமாக எந்த கேமராவும் எடுத்துச்செல்லவில்லை. உன் அளவு எனக்கு ஃபோட்டோகிராபியில் இன்ட்ரஸ்ட் இல்லை என சொல்லிவிட்டான்.

நான் வளர்த்தது சரியில்லையோ என அடிக்கடி நினைக்கும் படி தான் இங்கு நடந்துக்கொள்வான். ஆனால், அங்கு ஒரே நாளில், நான் சொல்லித்தராமலேயே எல்லாவற்றையும் செய்துக்கொண்டான்.  குறிப்பாக "ஏன் மிதியடி வாங்கி அனுப்பல"  என்று கேட்டான்.  ஆஹா?? நான் மறந்துவிட்ட ஒரே பொருள் இது தான் போல, எப்படி எனக்குத்தோன்றாமல் போனது என்று நொந்துக்கொண்டேன்.  சமையல் பிடித்துணிக்காக இரண்டு சின்ன டவல்கள் கொடுத்திருந்தேன், அதில் ஒன்றை மிதியடி ஆக்கியிருந்தான்.  கச்சிதமாக எல்லாவற்றையும் அறையில் அடுக்கி வைத்திருந்தான்.

இனி மிச்சம் இருக்கும் எங்களின் வாழ்க்கை,  இந்த ஸ்கைப்போடு தான் தொடரும் போல..  அவன் என் பக்கத்தில் இருப்பதைப் போல உணர முடிவது என்னவோ உண்மை தான்.    இருந்தாலும் -

"என்ன பேசி என்ன பண்ண, என் புள்ளைக்கு ஒரு வாய் சோறு ஊட்ட முடியல, என்னத்த டெக்னாலஜியோ.......என்னத்த சோ மச்சு இம்ப்ரூவ்டோஒ ????? "  :((((

அணில் குட்டி : அம்மணிக்கு ரொம்பத்தான் ஆசை, நேத்து பேசினமாதிரி இன்னும் ஒரு இரண்டு நாள் பேசட்டும், காசிக்கு போனாலும் கர்மம் தொலையலங்கற கதையா, புள்ள.. என்னடா இது ஸ்கைப் மூலம் நமக்கு வந்த தொல்லைன்னு, இன்னைக்கு பீச் லீவு, கேட் போட்டுட்டாங்கன்னு சொல்றாப்ல, ஸ்கைப் ல கவிதா'ன்றவங்கக்கூட எல்லாம் பேசமுடியாதாம்ம்மா" ன்னு சொல்லிட்டு கடைய கட்டப்போறாரு...  அம்மணி இம்சை.. பெரிய இம்சையாச்சே.....

பீட்டர் தாத்ஸ் : The Internet: transforming society and shaping the future through chat.


உனக்கு 20 எனக்கு 18

கவி: நவீன் இந்த ஃபோட்டோவில் (பாஸ்போர்ட் சைஸ்) அழகா இருக்க
 

நவீன்: அந்த ஸ்டூடியோவில் தனியா மேக்கப் ரூம் இருந்திச்சிம்மா, பவுடர் இருந்திச்சி நிறைய எடுத்து பூசிக்கிட்டேன் :)
 

கவி:  அட... பவுடர் அடிச்சியா அழகா ஆயிட்டேன்னு சொல்ற..
 

நவீன்:  அந்த ஃபோட்டோகிராஃபர் என்னை 'சிரிக்க'  சொல்லி எடுத்தாரும்மா...
 

கவி:  :))))))) ........

************

கவி: டார்க் நைட் ரைஸஸ் போகப்போறேன்
 

நவீன்: அந்த படம் பூரா டயலாக்ஸ் தான்,  உனக்கு புரியாது, சத்யம்ல சப்-டைட்டிலோட போடறான் அங்க புக் பண்ணிக்கோ...
 

கவி: நான் இங்லீஷ் சொல்லிக்கொடுத்த பய நீனு.. ஆன்னா வூன்னா.. எனக்கு இங்லீஷ் தெரியாதுன்னு சொல்ற...
 

நவீன் : உண்மைய சொன்னேன்... :)
 

கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்..
************
 கவி: நவீன் அம்மாவோட வந்து சமைக்க கத்துக்கோ...
 

நவீன் : ஐ... இதான் சாக்குன்னு என்னை வேல வாங்கிட்டு , நீ ரெஸ்ட் எடுக்கலாம்னு பாக்கறியா... நடக்காது...
 

கவி : அட நீ செய்ய வேணாம்டா.. வேடிக்கைப்பாரு ...போதும்...
 

நவீன் : முடியாது.. நீ அப்படியே என்னை வேலைவாங்குவ... சமைக்கவே தெரியாட்டியும் பரவாயில்லை பிரட் அம்லெட், பிரட் ஜாம் சாப்பிட்டு உயிர் வாழ்வேனே தவிர, உன்கிட்ட சமையல் கத்துக்க வரமாட்டேன்....
 

கவி : கிர்ர்ர்ர்ர்ர்
****************
 (மொபைல் வாங்கவேண்டி, வேளச்சேரியில், நவீனும் நானும் பல கடைகளுக்கு ஒரு ரவுண்டு போயிட்டு வந்தோம்.. இரண்டு மூன்று கடைகள் பார்க்கவேண்டி இருந்த நிலையில், ஒரு கடை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது.... )
 

நவீன் : அம்மா, அவசரமா எனக்கு ஆய் வருது...
 

கவி : :))) என்னடா இந்த நேரத்தில்... இந்த கடையை முடிச்சிட்டு வீட்டுக்கு போயிடலாம் , தாங்குமா?
 

நவீன் : ம்ம்ம் ட்ரை பண்றேன் ..வேகமா வா....

(கடையில் 10 நிமிஷமாவது செலவிட்டு இருப்போம்.. வண்டியிடம் வந்தவுடன்..)
 

கவி : டேய் அவசரமா ஆய் வருதுன்னு சொன்னீயே, திரும்பு.. பேன்ட்லியே போயிட்டியா சைலன்ட்டா வர..
 

நவீன் : இல்லல்ல,  ஆய் நின்னுப்போச்சிம்மா ..
 

கவி:  :))))))))))))) அது எப்படி நிக்கும்?

நவீன் : வண்டியில உக்காந்து ஓட்டும் போது ஆய் வருதும்மா.. ஏன்சி நடந்தா ஆய் வரலம்மா... 

கவி : ஹா ஹா.... :)))))))))) 
***************
கவி : நவீன் அப்பாக்கு ஒரு மிஸ் கால் கொடு..

நவீன் : ஏன் நீ கொடு சும்மாத்தானே இருக்க..
 

கவி : உன் ஃபோன்ல எனக்குத்தெரியாதுடா...
 

நவீன் : உன் ஃபோன் மாதிரி தான் எடுத்துக்கொடு...
 

கவி : Appa, Dad, Palani, CC என்று எனக்கு தெரிந்ததை எல்லாம் தேடுகிறேன், கிடைக்கல... "டேய்.. என்ன பேர்ல அப்பாவை ஸ்டோர் செய்து வச்சி இருக்க... அப்பா நம்பரையே காணல... "
 

நவீன் : Director " ன்னு இருக்கும் பாரு அதான் உன் புருஷன்..
 

கவி : ஞே.. !
*********************

கவி : ஏன்டா லேட்டா வர?

நவீன் :மெமரிக்கார்ட் இன்னும் கொடுக்கல, அதான் அந்த மொபைல் ஸ்டோர் போயி 'நின்னு'  பேசிட்டுவரேன்
 

கவி : எல்லாருமே நின்னு' தான் பேசுவாங்க.. எனக்குத்தெரிஞ்சி யாரும் கடையில படுத்துக்கிட்டு பேசமாட்டாங்களே...
 

நவீன் : ஞே... & கிர்ர்ர்ர்ர்ர்ர்...

****************
 
கவி : எத்தனைப்பேர் வேலைக்கு போயிருக்கீங்க

வெங்கடேஷ்: 3 பேர் ஆன்ட்டி

கவி : அவ்ளோதானா? மிச்சம் ? எத்தனப்பேர்  மேல படிக்கறீங்க..

வெங்கடேஷ் : யாருமில்ல ஆன்ட்டி... நவீன் மட்டும் தான்..

கவி : ஓ..??

வெங்கடேஷ்: ஆமா ஆன்ட்டி, எங்க செட்டிலேயே அவனுக்கு தான் செம "மண்டை" அவன் கூட ...மேல படிக்காட்டி எப்படி ஆன்ட்டி... ?

கவி: (ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்) :))

****************

கவி: 8 ஆவது வரைக்கும் கூடவே படிக்க உக்காருவேன். அடி பின்னி எடுப்பேன். அதுவும் கணக்குப்போடும் போது வாங்குவான் பாருங்க...... ஒரு வேள ரொம்ப மக்கா இருந்தானோ.. ? டவுட்டிங்...

நவீன் தோழி : ஆன்ட்டி, நவீன் ஈஸ் தி பெஸ்ட்,  ப்ராஜக்ட் ல அவங்க சொல்றது (மொத்தம் 3 பேர்) எதுமே எங்க இரண்டுப்பேருக்கு புரியாது, அவன் தான் முதல்ல புரிஞ்சிக்கிட்டு, கட கடன்னு பதில் சொல்லுவான். அவன்கிட்ட இருந்து அப்புறமா நாங்க கேட்டுத்தெரிஞ்சிக்குவோம்..

கவி : ஹோ. .ரியலி..

நவீன் தோழி : ஆமா ஆன்ட்டி, பிலீவ் மீ, .. ஹி ஈஸ் வெரி இன்டெலிஜன்ட்....

கவி : :) (ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்)

*****************

நவீன் ஃப்ரண்ட்ஸ் : ஆன்ட்டி, போட்டோவ பாருங்க. நீங்க பாக்காமையா?

கவி : (போட்டோவை பார்த்துவிட்டு) , இதை கொடுத்து அனுப்புறதுல எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை, செக்கியூரிட்டி செக்கப்ல ஸ்கேனிங் மிஷின் ஒர்க் ஆகாம நின்னு, பிர்ச்சனை ஆகிடும்.!! :((((. அப்புறம் நவீனுக்கு தான் பிரச்சனை... :((((( (முகத்தில் வண்டி வண்டியா சோகம்)

நவீன் ஃப்ரண்ட்ஸ் : ஹோ.. போட்டோஸ் நாட் அல்லவுடா ஆன்ட்டி....

கவி :.. ஹி ஹி... ஃபோட்டோவில் இருக்கற எல்லா மூஞ்சியுமே நவீன் மூஞ்சியாச்சே..... :)))))

நவீன் ஃப்ரண்ட்ஸ் : ஞே.........கலாய்க்கறாங்கன்னு தெரியாம..கொஞ்ச நேரத்தில் சீரியஸா ஆயிட்டோமேடா....ச்சே..

நவீன் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

****************

நவீன் ஃபிரண்ட்ஸ் : ஆன்ட்டி, கவலைப்படாதீங்க. உங்க புள்ளையா நாங்க இருக்கோம். நீங்க எப்ப வேணாக்கூப்பிடலாம். குறிப்பா, பண விசயத்திலும், நீங்க எங்களை உங்க புள்ளையாவே நினைக்கலாம்...

கவி :..ஹோ..தாங்ஸ்.... பணவிசயத்தை மட்டும் நவீன் கிட்ட க்ளையர் பண்ணிக்கோங்கப்பா.....

நவீன் : (அவங்க அப்பா பக்கம் திரும்பி) அங்கயாச்சும் எதாது தேறும்.. இங்க... ம்ஹூம்ம்ம்ம்..... (கை உதறிக்காட்டுகிறான்..)

நவீன் ஃபிரண்ட்ஸ் :... ஹான்.....

கவி : எச்சூச்சுமி, ஆல் டோர் க்ளோஸ்... யார் கிட்ட.. ?! :)))

*****************

கவி: 2009 ல் என் புள்ள  சோயா மில்க் வாங்கிகொடுத்து, உனக்கு ரொம்பநல்லதும்மா, மாசா'க்கு பதிலா இத சாப்பிடுன்னு சொன்னான். ஆனா என் டாக்டர் இப்பத்தான் என்னை சோயா மில்க் சாப்பிடச்சொல்லி இருக்காங்க... ரொம்ம்ம்ம்ப லேட்...

பழம்நீ:  உனக்கு தேவையானது எல்லாத்தையும் (என்னென்னு தெரிஞ்சி) எங்களால வாங்கித்தர முடியும்...நீ கேக்காமயே வாங்கித்தந்துட்டு தான் இருக்கோம்... ஆனா ஒன்னே ஒன்னு தான் எங்களால முடியாது.... :((  (ரொம்ப கவலையுடன்)


கவி:   ஓஓஓஓ......... அது என்ன.. ? (மிகுந்த எதிர்பார்ப்போடு)


பழம்நீ: அறிவு அறிவு .......... (சத்யராஜ் குரலில்)


நவீன் : :))))))))) 


கவி:  கிர்ர்ர்ர்ர்ர்... 

*********************
அணில் குட்டி : அம்மணியோட புள்ளப்புராணம் இனி எவ்ளோ நாள் தொடருமோ தெரியாது..எப்படியோ.. ஆஸ்பித்திரியில் சேக்கற நிலைமை வராம  இருந்தா சரி...

பீட்டர் தாத்ஸ் : To a mother, a son is never a fully grown man; and a son is never a fully grown man until he understands and accepts this about his mother."