அது ஒரு மாலை வேளை, ஒரு கூட்டுக்குடும்பத்து வீடு போல சத்தத்தோடு இருக்கிறது. ஆனால் என் கண்ணுக்கு யாரும் தெரியவில்லை.

ஒரு ஹால், வராண்டா, வாசல், வாசலுக்கும் தெருவிற்கும் இடையே நடக்க சிமெண்ட்டால் போடப்பட்ட பாதை, பாதையின் இருப்பக்கமும் தோட்டம் என ஒரு சாதாரண விட்டிற்கு தேவையான அனைத்தும் கண்ணில் பட்டது.

ஏதோ கை வேலையாக இருக்கிறேன்.. யாரோ வரும் சத்தம் கேட்டு வாசலை எட்டிப்பார்க்கிறேன். நண்பரின் நண்பர் வருகிறார், எனக்கு அவரைத்தெரியும்….ஆனால் எனக்கு நண்பரில்லை, நான் பேசியதில்லை.

வந்த வேகத்தில், சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வரான் பாருங்க, சாப்பிட எதாது கொடுத்து தூங்க வைங்க’ ன்னு சொல்றார், அவர் வழியை மறைப்பதால் , எட்டிப்பார்க்கிறேன்.

ஒரு கருப்பு நிற நாய்.. பழுப்பு நிறத்தில் குட்டி நாய் இரண்டும் கழுத்தில் பெல்ட்டில் கட்டி, சங்கிலி கோர்க்கப்பட்டு அந்த சங்கிலி சங்கரின் கையில் இருக்க நடந்து வருகிறார். நடையில் விருவிருப்பு இல்லை…எதோ ஒரு சோம்பல், தளர்ச்சி தெரிகிறது. முகமும் வாட்டமாய்...

என்னிடம் பேசிய நண்பர், நான் பார்க்க வழிவிட்டு வீட்டுனுள் சென்றுவிடுகிறார்.

நான் சங்கரை பார்க்க அவரும் என்னைப்பார்க்கிறார். ஏதும் பேசவில்லை.. ஆனால் கண்கள் மட்டும் பேசிக்கொள்கின்றன.. நெருங்கும் போது, என் கையில் நாய்களை கட்டிய சையினை கொடுத்துவிட்டு, வராண்டாவில் போடப்பட்டிருக்கும் ஒரு நாற்காலியில் போய் அக்காடான்னு உட்கார்ந்துக்கொள்கிறார். நாயை நான் கொண்டுப்போய் கட்ட வேண்டும் - இதுதான் கண்ணால் பேசி புரிந்துக்கொண்டது….

அவர் சென்று உட்காருவதை ப்பார்த்தவாரே நானும் நாய்களை கொண்டுக்கட்டுகிறேன். என் கவனம் முழுக்க நண்பரின் மேல் இருக்கிறது..ஏன் என்ன ஆச்சி,முன் வந்த இவரின் இன்னொரு நண்பருக்கு சொல்லியிருக்கலாம். எனக்கு எதும் தெரியவில்லை, அவர் சொல்லவும் மாட்டார் னு நான் கேட்கவும் நினைக்கல.

ஆனால் ஏதோ சரியில்லை எனமட்டும் தெரிந்தது.

கையைக்கழுவிக்கொண்டு  (கொரோனா எஃபெக்ட் மட்டுமில்ல, நாயை கட்டியதாலும்) இவரை நெருங்கி, 'டீ வேணுமா இல்ல் காஃபியா ' ன்னு கேக்கறேன்.

டீ … என்று சொல்லும் போதும் இருவரின் கண்களும் சந்திக்கின்றன.  எனக்கு புரியுது, அவரும் எனக்குப்புரியுமென்று நினைப்பதை உணர்கிறேன்.

சமையலறை சென்று இரண்டு அடுப்பு பற்ற வைத்து, ஒன்னில் டீ, இன்னொன்னில் காஃபி செய்து , இரண்டு கப்புகளில் ஒன்றில் டீ, ஒன்றில் காப்பின்னு எடுத்துட்டுப் போய் டீ கப்பை தரேன்.

கப்பை வாங்கி எதிரில் டீபாயில் வைத்துவிட்டி, என்னைப்பார்த்து, 'எனக்கு காஃபி வேணும்' என்கிறார். இதைத்தான் கண்ணில் பார்த்துட்டு போனேனேன்னு மையிண்ட் வாய்ஸில் நினைத்து இன்னொரு கையில் இருந்த கப்பை கொடுக்கிறேன்.

ஆச்சிரியப்படல… வாங்கிக்குடிக்கிறார்.  ஆனால் மனதில் இருக்கும் அழுத்தம் முகத்தில் தெரிகிறது. அவரின் நண்பர் சொல்லியது போல, சங்கருக்கு தேவை நல்ல தூக்கம்னு எனக்கும் புரிந்தது.

காஃபி குடிக்கும் வரை எதிரில் உட்கார்ந்து அவர் வேணாம் என்று வைத்த டீ யை நான் குடிக்கிறேன்.

முதல் இரண்டு சீனில் இருந்த அவரின் இன்னொரு நண்பர் என்ன ஆனார்னு தெரியல.. அவர் திரும்ப வரல..

காஃபி கோப்பையை வைத்ததும்… படுக்கறீங்களா…. ன்னு கேக்கறேன்.

அதுக்கும் பதில் இல்லை, எழுந்து படுக்கை அறை நோக்கி  செல்கிறார்.  நான் தொடர்வதை உறுதிப்படுத்திக்கொள்கிறார்.

அறைக்குள் செல்லும் வரை பின்னால் செல்கிறேன்..  உள்ளே சென்றதும் அவரை பக்கவாட்டிலிருந்து அன்போடு அணைத்து, அந்த அணைப்பில் எதுவானாலும் பாத்துக்கலாம், நாங்கள் இருக்கிறோம் னு சொல்லாமல் சொல்ல, அழைத்து சென்று படுக்க வைத்து,ஏசியை ஆன் செய்து, போர்வை போத்திவிட்டு, சன்னல் ஸ்கீர்ன் எல்லாம் மூடி இருட்டாக இருக்கிறதா என ஊர்ஜிதம் செய்துக்கொண்டு , கதவை சாத்திக்கொண்டு வெளிவருகிறேன்.

நாயில் ஒன்று குலைக்கும் சத்தம் கேட்கிறது.. எழுந்துக்கொண்டேன்…

 

நண்பரை கடைசியாக நேரில் சந்தித்தது 2009 ல்.

அதன் பிறகு இப்பவும் தொடர்பில் இருந்தாலும் மெயில் இல்லனா வாட்சப்..அதுவும் தொடர்ந்து இல்ல. குறிப்பா இந்த கனவு வந்த அன்றோ முன்னமோ அவரிடம் நான் எதும் பேசல..

அவங்க வீட்டில் நாய் இருக்குன்னு எனக்கு தெரியாது. ஆனால் ரொம்ப கஷ்டப்பட்டு ரீகால் செய்தால், ஆர்குட் டில் அவர் ஃபோட்டோ பகிர்ந்ததாக நினைவு..ஆனால் அதுவும் சரியான்னு எனக்கு நினைவில்லை.

கனவுக்கு பிறகு தொடர்பு கொண்டு கேட்டேன்.. ஆமாம் நாய் 1 வீட்டில் இருக்குன்னு சொன்னாரு.

ஆனால் கனவில் வந்த வீடு….நான் இருக்குமிடம் போல இருந்தது.

அவருக்கு முன்னால் வந்த நண்பரையும் தெரியும்..நான் பேசியதேயில்லை.

இதெல்லாம் எந்தமாதிரியான நினைவுகளில் சேர்த்திக்கை என்பது தெரியவில்லை…

எப்படியோ.. நண்பரின் நலம் விசாரித்து…நலமுடன் இருக்கிறார் என்று பதில் கிடைத்ததும் நிம்மதியாய் இருந்தது.

 

கனவே.... தயவுசெய்து வெள்ளி சனிக் கிழமைகளில் வந்து தொலைக்கவும், எனக்கு உன்னை நினைவு வச்சி வார இறுதியில் எழுதமுடியல.. ரீகால் செய்துட்டே இருக்க வேண்டியிருக்கு….தயவுக்காட்டு… அடுத்த நாள் நினைவு படுத்தி எழுதறதே தலைவலி, இதுல இப்படி 2-3 நாள் நினைவு வச்சிக்கறது இன்னும் பெரிய  தலைவலியா இருக்குது..

----------------------------

அணில்குட்டி ; அம்மணி, நண்பரிடம் கனவு கண்டேன் னு சொன்னவுடனே அவரு சிரிப்பு அடக்க முடியாம சிரிச்சாரு..இதுல அதை எழுதி வேற வைக்கறாங்க...  என்னத்த பெரிசா இதுல இருக்குன்னு எழுதி வைக்கறாங்கன்னு தான் தெரியல.

பீட்டர் தாத்ஸ்; I wonder how I can talk through eyes in my dreams.