எதை எழுதவேண்டும் என்றாலும், அதைப்பற்றிய விஷய ஞானம் கொஞ்சமாவது நமக்கு இருந்தால், ஓரளவு சிறப்பாக எழுதமுடியும். பொதுவாக எனக்கு தெரியாத விஷயத்தை எழுதும் போது, தெரிந்தவர்களிடம் கேட்பேன், பிறகு அதை கூகிலில் தேடி, இன்னும் கொஞ்சம் விபரங்கள் அறிய முற்படுவேன். இந்த தலைப்பில் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன், என்னோட குடிகார நண்பர்கள் யாரிடமாவது கேட்போம் என்று நினைத்தேன். நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே சொல்லிவைத்தார் போல குடிப்பழக்கம் இல்லாமல் போனது வருத்தமளித்தது :(. சரி எப்படியாச்சும் இதை பத்தி எழுதியே ஆகனும் னு முடிவு செய்து. .வூட்டுக்காரை கேட்டு பார்ப்போம்னு ஆரம்பிச்சேன்.

"ப்பா.. என்னை டாஸ்மாக் கூட்டிட்டு போறீங்களா? அங்க எல்லாரும் என்ன செய்யறாங்கன்னு நான் பாக்கனும்.." ன்னு சொல்லி முடிக்கல. .

"ஆஹா..எனக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா.? எவ்வளவு நல்லவளா இருக்கா? கட்டின புருஷன டாஸ்மாக் கூட்டுட்டு போன்னு சொல்றாளே... உலகத்திலேயே நாந்தாண்டி கொடுத்து வச்சவன்... "

" அடடா..நிறுத்துங்க..உங்கள டாஸ்மாக் கூப்பிடாட்டாலும், நான் நல்லவத்தான்..(இப்ப சொல்லிக்கிட்டாத்தான் உண்டு) ஆனா ஒன்னு. அங்க வந்து என்னை கம்பெனி கொடுன்னு சொல்லக்கூடாது, குடிக்கறவங்கள மட்டும் வேடிக்கை பாத்துப்பேன், அதுக்கு ஒன்னும் சொல்லப்பிடாது..."

"ஆஹா..இது அதைவிட  நல்லா இருக்கே. புருஷன குடிச்சிக்கோ னு சொல்ற பொண்டாட்டி உலகத்திலேயே நீதாண்டி. .சரி சொல்லு சொல்லு எப்ப போலாம்? 

ஏன் இவரு இப்படி அலையராரு.. தண்ணீ 'ன்னா.. எல்லாரும் இப்படித்தான் நாக்கை தொங்கப்போட்டு அலைவாங்களோ..? அப்படீன்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு .... "போலாம் போலாம்.. ரொம்ப அலையாதீங்க.. " ன்னு சொல்லி வேறு பேச ஆரம்பித்துவிட்டோம்.

நிற்க, 1995 ல் பக்கத்துவீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்ணை பற்றி, பக்கத்து வீட்டு பெண், கதை கதையாக சொல்ல, அப்போது ஒரு "Rehabilitation Centre" அட்ரஸ் கண்டுபிடித்து, அந்த பெண்ணை வரவைத்து, "ரூ.5000/- செலவாகுமாம். உன் புருஷனை சரியாக்கிவிடுவார்கள். ஒரு முறை கொண்டு போய் காட்டிவிட்டு வாயேன் "என்று சொன்னேன். "நான் சம்பாதிக்கற பணத்தையும் சேர்த்து வாங்கி குடிச்சிபுடுது, தெரியாம மறச்சி வச்சி ஏதோ குடும்பத்தை ஓட்டறேன், புள்ளக்குட்டிகளை படிக்க வைக்கிறேன். நான் எங்கம்மா போவேன் 5000 ரூபாய்க்கு" என்றார்.  அவரிடம் எதுவும் சொல்லாமல், அவர் சென்றவுடன் பக்கத்துவீட்டு பெண்ணிடம் இதைப்பற்றி பேசியபோது, "ஏன் தேவையில்லாத வேல நீ செய்யற, என் புருஷன் குடிச்சிட்டு இருந்தாலும் பரவாயில்ல.. 5000 ரூபாய் எல்லாம் செலவு செய்யறது வேஸ்ட்டு அது இருந்தா 3/4 பவுன் நகை வாங்குவேன் னு சொல்லுது.. அதுக்கு போயி ஹெல்ப் பண்ண நினைக்கறயே நீனு" என்றார். அத்தோடு இந்த விஷயத்தை விட்டுவிட்டேன்.

1995 ல் எங்களிடம் தொலைபேசி, கம்பியூட்டர், இண்டர்நெட் வசதி இல்லை. வெளிஉலகம்  தெரியாது, குதிரைக்கு கடிவாளம் இட்டது போல், வேலைக்கு செல்வேன், வருவேன். அவ்வளவே. இதற்கு எல்லாம் வைத்தியம் இருக்கிறது என்பதும் தெரியாது, ஆனால் அந்த பெண் கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்து சும்மா இருக்க முடியாமல், எப்படியோ அங்கிங்கு விசாரித்து ஒரு  மறுவாழ்வு இல்லத்தை கண்டுபிடித்து சொல்ல முடிந்தது.

சமீபத்தில், உறவினர் ஒருவருக்காக, "Just Dial" க்கு ஃபோன் செய்து, மறுவாழ்வு இல்லங்களை பற்றி தகவல் கேட்டேன். எத்தனை மருத்துவமனைகள்... எண்ணி சொல்லமுடியாத அளவு வந்து குவிந்தன. பலர் அவர்களாக என்னை அழைத்து பேசினர். நானாக சிலரை அழைத்தும் பேசினேன். சென்னையில் மற்றும் சுற்று வட்டாரத்தில் தடுக்கி விழுந்தால் மது மற்றும் போதை மறுவாழ்வு இல்லங்கள் உள்ளன. இந்த நோயாளிகள் குணமாகி வந்த பிறகு, அவர்களை தனிமைப்படுத்த கூடாது அல்லது தனியாக இருக்கவிடக்கூடாது என்பதே மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

இதற்கு குறைந்த பட்சம் ரூ.300/- லிருந்து அதிகபட்சம் ரூ.10000/- & 15000/- வரை சிகிச்சை முறைக்கு தகுந்தார் போன்று வாங்குகிறார்கள். Out patient ஆக 3 நாட்கள் (வாரத்தில் 1 சிட்டிங் வீதம் 3 வாரங்கள்) முதல், In patient ஆக ஒரு மாதம் - மூன்று மாதம் வரையிலான சிகிச்சை அளிக்கப்படுகிறது.நோயாளியின் ஒத்துழைப்பை பொறுத்து, இந்த சிகிச்சை காலம் மாறுபடுகிறது.

ஒருவர் அளவுகடந்து குடிக்கிறார் /போதைப்பொருள் பயன்படுத்துகிறார் என்று தெரிந்தால், அதனால் நமக்கும், அவருக்கும், இந்த சமுதாயத்திற்கும் பிரச்சனைகள் வருகிறது என்ற தெரிந்தால், புரிந்தால்,  தேவையான சிகிச்சையை,  அவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.  ஒரு மனிதனுக்கு நிதானம் தவறி போகும் அளவிற்கு இருக்கும் பழக்கங்கள் அவர்கள் வேண்டுமென்றே தனக்கு தேவையென்று பழக்கப்படுத்திக் கொள்வது இல்லை. ஏதோ ஒரு சந்தர்பத்தில் பழக்கமாகி, அதை விட்டுவிடக்கூடிய மன உறுதி இல்லாத போது, அதையே நாடி சென்று, அதில் தான் வாழ்க்கையின் அத்தனை சந்தோஷமும் இருப்பதாக அடிமையாகி விடுகிறார்கள். அது உண்மையில்லை என்பதை உணரவைப்பது, அந்த மனிதர்களை சுற்றியுள்ள நம்மின் கடமையாகிறது. ஒருவன் குடிக்கிறான், போதை வஸ்து சாப்பிடுகிறான் என்று வெறுத்து ஒதுக்குவதை விடவும், அவனிடம் அன்புக்காட்டி, அவனுக்கு தேவையான சிகிச்சையை அளிப்பதன் மூலம் அவனுக்கும் மறுவாழ்வு கிடைக்க செய்யலாம், அவனால் அவனுக்கும் துன்பம் இருக்காது, மற்றவர்களுக்கும் இருக்காது.

இப்படிப்பட்டவர்களை சரிசெய்ய, நமக்கு நல்ல மனப்பக்குவமும், சமயோஜித புத்தியும், முதிர்ச்சியும்,  நிதானமும், அவர்களின் கொடுஞ்செயல்களை கண்டு அஞ்சாத மனவலிமையும்,  அவர்களை எதிர்த்து விடாமல், அன்பாகவும், அமைதியாகவும் தகுந்த தீர்வை காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவர்களை வெறுத்து ஒதுக்குவதன் மூலம், இன்னமும் மோசமான நிலைமைக்கு தான் அவர்கள் செல்வார்களே ஒழிய, மாறிவிட மாட்டார்கள். ஒருவரின் வாழ்க்கை நம் கண் எதிரில் அழிய நாம் காரணமாக இருக்கக்கூடாது. தெருவில் குடித்துவிட்டு விழுந்துக் கிடப்போர் அனைவருக்கும் நம்மால் உதவி செய்ய முடியுமா என்றால் முடியாது, ஆனால் நம்மை சுற்றி உள்ளவர்களில் யாரும் அப்படி இருந்தால், உதவமுடியும். இதற்கு அடிப்படை தேவை அந்த மனிதனின் மீது நாம் வைக்கும் உண்மையான அன்பும், அவனும் நம்மை போன்ற ஒரு மனிதன் என்ற நினைவும் தான்.

இதில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை. நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா,  குடிப்பழக்கதிற்கு அடிமையாகி, அதனால் உடல் பாதிக்கப்பட்டு, நலிவடைந்து இறந்தார் என்பது அனைவரும் அறிந்தது.  இவை வெளிச்சத்தில் இருக்கும் ஒரு உதாரணம் இப்படி பல, நாம் அறியாமல் நடக்கத்தான் செய்கின்றன.

நம் ப்ளாகர் நண்பர் செந்தழல் ரவி க்கு,  சிகிரெட்  பழக்கம் ஓவராகவே இருந்தது. இப்போது அறவே இல்லை, நிறுத்திவிட்டார்.  மன உறுதியும், மனைவி, குழந்தை, குடும்பம் போன்ற கூடுதல் பொறுப்புகளும் காரணமாக இருந்து இருக்கின்றன. இதனை அவர் பதிவொன்றில் படித்தேன்.

என்னுடைய அலுவலகத்தில் ஒரு முறை, புது பிராஜக்ட் கிடைத்தவுடன்,  தண்ணி பார்ட்டிக்கு ஏற்பாடாகியிருந்தது. என்னை சேர்த்து இருவர் பெண்கள். மற்ற அனைவரும் ஆண்கள், மொடா குடியர்கள். எல்லோரும் குடித்துக் கொண்டு இருக்க, என்னுடன் வந்த பெண்ணை அழைத்து, என் சியிஓ ஏதோ தனியாக பேசிக்கொண்டு இருந்தார்.  கொஞ்ச நேரத்தில் அந்த பெண் இரு கண்ணாடி டம்ளர்களில், கோல்ட் காஃபி என்று எதையோ எடுத்துவந்தாள்.  "லேடிஸ், உங்களுக்கு கோல்ட் காஃபி" என்று சிரித்துவிட்டு சென்று விட்டார் சியிஓ. நானும் அந்த பெண்ணும் தனி அறையில் இருந்தோம். அவள் அதனை குடிக்க ஆரம்பித்து இருந்தாள், எனக்கு ஏன் சியிஓ அவளை தனியாக அழைத்து பேசினார் என்ற சந்தேகம் இருந்ததால், குடிக்காமல் முகர்ந்து பார்த்தேன், அறியாத வாசனை எதுவும் வரவில்லை.

அவளிடம் "ஆல்கஹால் கலந்துள்ளதா "என்றேன். அவள் சிரித்துவிட்டு, "இல்லை கவி, இதோ பார் நான் குடிக்கிறேன்" என்று குடித்துக்காட்டினாள், எனக்கு நம்பிக்கை வரவில்லை. நான் குடிக்கிறேனா என்பதை சியிஓ வேறொரு இடத்தில் இருந்து கவனிப்பதாக எனக்குப்பட்டது. சந்தேகம் போகவில்லை, எனக்கு அந்த பாட்டிலை காட்டு என்றேன்.  அவள் பேன்ட்ரி சென்று, அங்கிருந்தபடியே ஒரு பக்கம் காஃபியும், மற்றொரு பக்கம் பாலும் நிறைந்து இருந்த பாட்டிலை காட்டினாள், மலேசியாவிலிருந்து வந்தது, இந்தியாவில் இது போல் இல்லை என்றாள். அவள் துபாயில் சிறிது காலம் வசித்துவந்தவள். அவளுக்கு அந்த பானத்தை பற்றி தெரிந்திருப்பதாக நினைத்தென். என் க்ளாஸை பார்த்தேன், அந்த காஃபியும், இரண்டு ஐஸ் க்யூப்ஸ் போட்டு இருந்தாள். சரி என்னத்தான் ஆகிறது பார்க்கலாம் என ஒரு சிப்' குடித்தேன்.  குளிர்ச்சியுடன், லேசான எரிச்சலுடன் வயிறு முழுக்க ஏதோ ஒன்று பரவலாக பரவியது போன்று இருந்தது. வெறும் காஃபி இப்படி இருக்காது. இதில் ஆல்கஹால் கலந்து இருக்கும் என்று ஊர்ஜிதம் செய்தபோது சியிஓ என் பக்கம் வந்து. "எப்படி இருக்கிறது" என்றார். எப்படி இருந்தது என்று சொன்னேன். ஒரே சிப் க்கு இவ்வளவு சீன் ஆ.. ? அது வெறும் காஃபி தான். மலேசியா காஃபி என்றார்.  எதுவும் எதிர்த்து வாதிடவில்லை, அவரிடமும், அவளிடமும் நார்மலாக பேசிக்கொண்டே பேன்ட்ரி சென்று அந்த பாட்டிலை எடுத்து படித்து பார்த்தேன், 45% ஆல்கஹால் &  காஃபி, மில்க், சுகர் இன்னும் சில பெயர்கள் எழுதி இருந்தன. வாஷ் பேசினுக்கு நேராக சென்று வாய் கொப்பளித்து, அவர்கள் அறியாமல் இதையும் ஊற்றிவிட்டு வந்துவிட்டேன்.  இந்த ஒரு சிப்'கே எனக்கு உடல் நலம் சரியில்லை என்று அடுத்த நாள் வேலைக்கு போகாமல் மட்டம் போட்டு ஓவர் சீன் போட்டது வேறு கதை. :))

இத்தனை சென்ஸிடிவ் வாக எடுத்துக்கொண்ட என்னையும், சாதாரணமாக இரண்டு கிளாஸ் குடித்த மற்றொரு பெண்ணை  பார்த்து கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது, அது அவள் விருப்பம், இது என் விருப்பம். யாரும் யாருடைய விருப்பதிலும் தலையிட அவசியம் என்ன இருக்கிறது. அவளுக்கு அது பிடித்து இருந்தது, மாறாக என்னால் அதை குடிக்கவே முடியவில்லை. இது தான் தனிமனிதர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட வித்தியாசங்கள்.

எல்லா போதைக்கும் இப்போது சிகிச்சை உள்ளது. அடிமையானவர்கள் தவிர்த்து, பொழுதுப்போக்கு, பார்ட்டியில் குடிப்பது போன்றவை தேவையா தேவையில்லையா என்பதைவிடவும், அதனால் பிரச்சனையில்லாத போது, அது தனிமனித சுதந்திரம் என்று விட்டுவிட வேண்டியது தான். எல்லாவற்றிற்கும் இப்போது சிகிச்சை உள்ளது. அதை புரிந்து, அறிந்து, தேவையான நேரத்தில், அதை சரிவர பயன்படுத்தி நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவரையும் சந்தோஷமாக வாழ வைப்போம்.

அணில்குட்டி அனிதா : அம்முனி.. எப்ப நீங்களும் உங்க வூட்டுக்காரரும் சோடி'யா டாஸ்மாக் போறீங்க....சொன்னீங்கன்னா..நானும் சைட் ல சேந்துக்குவேன்... உங்களுக்கே ஆசை வரும் போது எனக்கு வராதா என்ன?? மக்கா அம்மணி கிடக்கட்டும்.. நீங்க யாராவது போகும் போது சொல்லுங்க.. வந்து பழகிக்கிறேன்.. பிடிச்சா தொடரலாம்.. இல்லனா விட்டுடலாம்.. டீலா... நோ டீலா..ஆ?!!

பீட்டர் தாத்ஸ் : Drunkenness is temporary suicide: the happiness that it brings is merely negative, a momentary cessation of unhappiness”

“Drink moderately, for drunkenness neither keeps a secret, nor observes a promise”

“Water is the only drink for a wise man.”

படங்கள் : நன்றி கூகுல்
.