எங்க வீட்டு சமையல் : ஆப்பம்

எனக்கு மிகவும் பிடித்த உணவு வரிசையில் இருப்பது ஆப்பம். அதுவும் தேங்காய் பாலோடு ஆப்பத்தை சாப்பிடும் போது..ஆஹா..ஓஹோ...சூப்பர்ர்... வாரத்திற்கு ஒருநாள் எங்க வீட்டில் ஆப்பம் இருக்கும். செய்யவும் மிகவும் எளிது.  உடலுக்கும் நல்லது.
 
தேவையான பொருட்கள் : 
பச்சரிசி : 3 கப் (200ml or 225 ml)
உளுந்து : 3 பிடி (படத்தில் இருப்பதுப்போல உளுந்தை அளக்கனும், உளுந்து அதிகம் ஆகிடக்கூடாது)
ஆப்பசோடா / சமையல் சோடா : 2 சிட்டிகை
உப்பு : சிறிது
தேங்காய் : 1
சர்க்கரை : தேவைக்கேற்ப
<= கவனிக்க : மேலுள்ள கைப்பிடி அளவிற்கும், படம் 2ல் உள்ள பிடிக்கும் வித்தியாசம் இருக்கு.  படம் 2ல் இருப்பதைப்போல அளவெடுக்கக்கூடாது. 

செய்முறை :  பச்சரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாக 2-3 மணிநேரம் ஊறவைத்து,  வெண்ணெய்ப்போல அரைத்து, மாவிற்கு தகுந்த உப்பில் கால் பகுதி மட்டும் சேர்த்து கரைத்து வைத்துவிடவும். இரவே மாவை தயார் செய்து வைத்துவிடவும்.

காலையில்,  4-5 கரண்டி மாவை வேறொரு கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் விட்டு தோசைமாவை விட சற்றே நீர்க்க கரைத்து, சமையல் சோடா சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

ஆப்பத்திற்கு என தனியாக நான்ஸ்டிக் வாணல் இருக்கிறது, எனக்கு
தோசைக்கல்லிலேயே (சற்று குழிவானதாக இருக்கவேண்டும், நான் ஸ்டிக் தோசைக்கல் இதற்கு சரிவராது) செய்து பழகிவிட்டதால், வாணல் பயன்படுத்துவதில்லை. வாணல்/தோசைக்கல் எதுவாக இருந்தாலும்  நன்கு சூடானவுடன் லேசாக எண்ணெய்த்தொட்டு தேய்த்துவிட்டு, (நான்ஸ்டிக் வாணலிற்கு எண்ணெய் தேவையில்லை) நடுவில் மாவை ஊற்றி, வேகமாக எடுத்து ஒரு சுற்று சுற்றி தோசை போல வடிவம் வரசெய்துவிட்டு, நடுவில் தேவைப்பட்டால் கொஞ்சம் மாவை ஊற்றி, சரியான அளவு மூடியால், மூடிவிட வேண்டும். முதலில் தீ பெரியதாகவும், ஆப்பம் ஊற்றியப்பிறகு தீயைக் குறைத்துவிடவும், 1-2 நிமிடத்தில் வெந்துவிடும், திருப்பிப்போடாமல் எடுத்தால் ஆப்பம் ரெடி.. !! 

தேங்காய் பால் செய்முறை :  தேங்காய்யை கீணி, சிறுத்துண்டுகளாக்கி, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொடியானவுடன், தேவையானளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும். மாவு சலிக்கும் சல்லடையை  ஒரு அகலமானப்பாத்திரத்தின் மேல் வைத்து, அரைத்தக்கலவையைக் கொட்டி பாலை பிழிந்து எடுக்கவும்.  பிழிந்த தேங்காய்யை திரும்பவும் ஒரு தரம் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, இன்னொரு முறை பாலை பிழிந்து எடுக்கவும்.  பாலை வேறு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும். ஆப்பம் தயார் செய்யும் முன்பே தேங்காய் பாலை தயார் செய்துக்கொள்ள வேண்டும். 

ஆப்பம் சுட்டு எடுத்தவுடன், ஓரங்கள் மடங்கிய தட்டில் வைத்து, தேங்காய் பாலை அதன் மேல் ஊற்றிப் பரிமாறவும்.

தேங்காய் பாலின் பயன்கள்
 * வயிற்றுப்புண்ணிற்கு நல்லது.  முடி உதிர்தல், இளநரையைக் கட்டுப்படுத்தும், அடர்த்தியான கூந்தலுக்கும் தேங்காய்பால் சிறந்தது.
 
* கொழுப்பைக்குறைக்கும் தேங்காய் - என ஒரு பதிவைப்படித்தேன். நீங்களும் படிக்க 

அணில் குட்டி : அம்மணி வீட்டில் ஆப்பம் செய்தால், முதல்ல உக்காந்து இவிங்க நல்லா மூக்குமுட்ட சாப்பிட்டுட்டு,  அப்புறம் தான் வூட்டுக்காருக்கும் புள்ளைக்கும் கொடுப்பாங்க.. "சிறந்த அம்மா", மிகச்சிறந்த மனைவி" போன்ற பட்டமெல்லாம் இவிங்களுக்கு மட்டும் தான் கொடுக்கனும்னு இந்த நேரத்தில் மிகத் தாழ்மையோடு கேட்டுக் கொ(ல்)ள்கிறேன்........

பீட்டர் தாத்ஸ் : Your diet is a bank account. Good food choices are good investments. - Bethenny Frankel

எருமைமாடாக மாறுவது எப்படி?!

சூழ்நிலைகளால் மாறும் மனிதர்கள் இருக்கிறார்கள், ஆனால் மாறுவதுக்கென்றே சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்பவர்களை பார்க்க ஆயாசமாக இருக்கிறது, அவர்களை கடந்து வர முடியாமல் தவிக்கும் மனதிற்கு ஆறுதலோ அறிவுரையோ சொன்னாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. 

அதே சமயம் யாரையும் நீ இப்படி இரு என்று சொல்வதை விட, நாம் நம்மை மாற்றிக்கொள்வது எளிதெனப்படுகிறது. எது நடந்தாலும் எதற்காக கஷ்டப்பட்டாலும் யாரையும் நொந்து பிரயோசனம் இல்லை,  என்னை நான் நொந்துக்கொள்வதை தவிர... :)

மனித குணங்கள் மாறுவதில்லை என்னையும் சேர்த்தே. கடந்து
வந்தப்பாதைகளை பார்க்கத் தெரிந்து, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் இருக்குமேயானால், நம் குணத்தை சற்றே மெறுகேற்றிக்கொள்ள முடியும்.. தவிர இயற்கையாக அமைந்த குணம் உள்ளேயே பதுங்கியிருக்கும். அதில் மனிதத்தைத்தாண்டி மிருகமே அதிகம் இருப்பதாக கணிக்கிறேன்..

மிருகத்தை கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி மனிதத்தை வளர்க்க முயற்சி செய்தவாரே இருக்கிறேன்... என்னை சுற்றுயிருப்போர்  மிருகத்தை வெளிக்கொண்டுவரவே முயற்சி செய்கின்றனர். அவர்களை வென்று என் மனிதத்தைக்காப்பாற்ற அதீத போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது என் மனமும் அறிவும்.

என் மனமும் அறிவுமே எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை... கிழக்கு மேற்காக, மேற்கு கிழக்காகவே இருக்கிறது.. இரண்டும் ஒன்று சேரும், ஒரு நாள் வருமென அறிவு மனதையும், மனது அறிவையும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

என் சுயநலம், எதிர்பார்ப்பு, நான் வைத்த நம்பிக்கை நிறைவேறாத ஒரு சந்தர்ப்பத்தில் பிறர்மீது எனக்கு ஏற்படும் நம்பிக்கை இழப்பு, அவர்களை நம்பிக்கை துரோகிகளாக காண்பிக்கிறது. அவர்களின் இடத்திலிருந்து பார்க்கையில் அவர்கள் நல்லவர்களாகவே இருக்கலாம், வாழ்க்கையின் ஓட்டத்தில் எதையும் என்னைப்போல் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் அங்கங்கே இறக்கிவைத்துவிட்டு ஓடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் எது முக்கியம், யார் முக்கியம் என்று தெரிந்திருக்கிறது. ஆனால் நானோ தேங்கிவிடுகிறேன்..அந்த தேக்கமே அவர்களை எனக்கு நம்பிக்கை துரோகிகளாகக்காட்டுகிறது. இப்படியானவர்கள் கண்ணில் படும்போது அல்லது அவர்களை மன்னிக்கும் அளவு நான் பக்குவப்படவில்லை எனும்போது, என் மனம் மனிதத்தை இழக்கிறது...உடனே அறிவு சும்மா இருந்து விடுவதில்லை. மனதை பார்த்துக் சரமாரியாக கேள்விகளைத் தொடுக்கிறது. தொடுத்த கேள்விகளின் பதிலில் "என்னைத்தவிர, என் கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் வேறு யாரும்  பொறுப்பில்லை... " என்றே பஞ்சாயத்து முடிகிறது. இந்த முடிவில் இன்னொரு ஆரம்பமாக,  என் மேல் தான் தவறு என்பதை ஒருவிதக் குழப்பத்தோடு உணர்ந்து.....தொடர்கிறேன்...

இந்த தொடர்ச்சி மெளனத்தின் மொழியாக மாறுகிறது.  மெளனம் பல பிரச்சனைகளை உள்ளடக்கிவிட்டு, வெளியில் என்னை ரொம்பவே நல்லவளாகக் காட்டுகிறது.. ஆனால் உள்ளுக்குள் நான் நல்லவளில்லை என்பதை எனக்குள்ளேயே நான் பேசிக்கொள்ளும் சண்டையிட்டு மாண்டுக்கொள்ளும் இரு வேறு பிசாசுகள் உணர்த்துகின்றன. அந்த பிசாசுகள் வெளிவந்துவிடாமல் இருக்க என்னை நான் கட்டுப்படுத்தி வளர்ப்பதில் அதிக சிரமம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இப்படி பிசாசாக மாறி அதைக்கட்டுப்படுத்துவதற்கு பதில்.. பிசாசாக மாறாமல் இருக்க என்ன வழியென்று யோசிக்கையில். வாழ்க்கையை அதன் போக்கிற்கே எடுத்துக்கொண்டு, எனக்கு நடப்பதை, எனக்கு சுற்றியிருப்பவர்களுக்கு நடப்பதை மிக எளிதாக எருமைமாட்டின் மீது மழைபெய்வதுப்போல சூடு சுரணை எதும் இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்கிறேன்.

ஆக,  முடிவின் படி, இப்போது எருமைமாடாக மாறுவது எப்படியென்ற ஆராய்ச்சியில் இருக்கிறேன்... 

அணில் குட்டி : ஹை....?!! . எருமைமாடா அம்மணி ஆவறதப்பத்தி ஒரு பிரச்சனையுமில்ல....ஆனா அப்பவாச்சும் அம்மணி "வாயி" மூடுமான்னு அவங்க வூட்டுல இருக்கவங்க ஆர்வமாக எதிர்ப்பார்தீங்..... வாட் யூ கைஸ் எதிர்பார்த்தீங்...?. சொல்லிட்டுப்போங்க... எனக்கு பிரயோசனப்படும்...

பீட்டர் தாத்ஸ் : Human progress is neither automatic nor inevitable... Every step toward the goal of justice requires sacrifice, suffering, and struggle; the tireless exertions and passionate concern of dedicated individuals. - Martin Luther King, Jr.

தொடர்புடைய மற்றப்பதிவுகள் : (என்னுடைய குறிப்பிற்காக)
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2011/06/blog-post.html
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2009/05/2.html
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2009/02/blog-post_26.html
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2006/07/blog-post_05.html 

Images : Thx google.