வெயில் காலம் வந்தாலே வற்றல், வடவம் போட்டு வைத்துக்கொள்வது வழக்கம். வடவம் கூட ஒவ்வொரு வருடமும் போட வேண்டிவராது. ஆனால் வற்றல் போட்டுவிடுவேன். நவீனுக்கு ரொம்பவும் பிடிக்கும், எனக்கு உதவியும் செய்வான். வற்றல் போடுவதற்கு முன்னர் ரொம்ப வெயில் வந்துவிட்டால்,  வற்றல் பிழியும் வரை குடைப்பிடித்துக் கொண்டு நிற்பான். Missing you my baby.. :(

1. கஞ்சி வற்றல்
தேவையானவை :

ஜவ்வரசி : 1/4 கி
பச்சரிசி மாவு : 1/2 கி
பச்சைமிளகாய் : 7-8
சீரகம் : 2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

வற்றல் ஊற்ற பாலித்தின் கவர்கள் அல்லது பாலியஸ்டர் துப்பட்டா/புடவை.

செய்முறை : ஜவ்வரிசியை இரவு ஊறவைத்து, காலையில் மிக்ஸியில் அரைத்து, அடி கனமான பெரியப்பாத்திரித்தில் கொட்டிக்கனும். அதிலிலேயே பச்சரிசி மாவயும் கொட்டி 12-15 டம்ளர் தண்ணீர் விட்டு, கட்டி முட்டி இல்லாமல் நீர்க்கக் கரைத்து உப்பு, அரைத்த பச்சைமிளகாய் விழுது சேர்த்து அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளரிக்கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் தேவைப்பட்டால் இன்னமும் ஊற்றிக்கொள்ளலாம். மாவு வெந்து கஞ்சி பதத்திற்கு வரும், லேசாக பொங்கும் சமயம் சீரகத்தைக் கொட்டி நன்கு கிளறி இறக்கிவிடவும்.  வெயிலில் துணிப்போட்டு சின்ன கரண்டிக்கொண்டு சிறு சிறு வற்றலாக ஊற்றி, 2 -3 நாட்கள் தொடர்ந்து காயவைத்து எடுக்கவும்.

துணியைவிட்டு வற்றல் வரவில்லையென்றால், பின்புறம் திருப்பி தண்ணீர் தெளித்தால்,  உதிர்ந்துவிடும். தண்ணீர் தெளித்து எடுத்தால் வெயிலில் காயவைத்து எடுத்துவைக்க வேண்டும்.

2. முறுக்கு வற்றல் :

தேவையானவை :

பச்சரிசி மாவு (அ) பச்சரிசி : 1 கி 
பச்சைமிளகாய் : 12
சீரகம் : 4 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை : பச்சரிசி மாவாக இருந்தால், தோசை மாவு பதத்திற்கு  உப்பு சேர்த்து  கரைத்து, அதில் பச்சைமிளகாய் அரைத்துவிட்டு சீரகம் கொட்டி, சிறு தீயில் வைத்து கிளரிக்கொண்டே இருந்தால், மாவு வெந்து கெட்டியாகும். நன்றாக கெட்டியானவுடன் அடிபிடிக்காமல் இறக்கிவிடவும்.

பச்சரிசியாக இருந்தால், முதலில் பாத்திரத்தில் தண்ணீர் உற்றி கொதிவந்தவுடன், அரிசியைக்கொட்டி நன்கு குழைய வேகவைக்கவேண்டும். பாதி வேகும்போது பச்சைமிளகாய் விழுது, சீரகம் சேர்த்து கிளரிவிட்டு, சாதம் நன்கு குழைந்து கெட்டியானதும் இறக்கிவிட்டு

வெயிலில் துணியை பரப்பி, தேன்குழல் அச்சில் பெரிய ஸ்பூன் கொண்டு மாவை/வற்றல் சாதத்தை எடுத்து நிரப்பி, பிழிந்துவிடவும்.

3. பக்கோடா வற்றல்

தேவையானவை :

பச்சரசி : 1 கி
பச்சைமிளகாய் : 8-9
பெரிய வெங்காயம் : 4
இஞ்சி : 2 விரல் அளவு
சோம்பு :  2 ஸ்பூன்
லவங்கம் : 2
கருவேப்பிலை : ஒரு பிடி
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை : பச்சரிசியை குழைய வேகவைத்து,  அத்துடன் பொடியாக நறுக்கி ஒன்றும் பாதியாக மிக்ஸியில் அடித்து எடுத்த வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், நைசாக அரைத்த இஞ்சி, சோம்பு, லவங்கம் விழுது, இரண்டாக கிள்ளிய கருவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கிளரி,  வெயிலில் துணி விரித்து, கைகளில் மாவை அள்ளி, சின்ன சின்னதாய் கிள்ளி வைக்க வேண்டும். மாவு சூடாக இருந்தால் ஒரு தட்டில் எடுத்துவைத்து கொள்ளலாம், காற்றில் சூடு குறைந்துவிடும்.  2-3 மூன்று நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும். 

பீட்டர் தாத்ஸ் : One should eat to live, not live to eat.