கவிதா - அம்மா - மிஷ்கின் ...

இந்த படத்தை பார்ப்பதற்கு முன் எந்த விமர்சனத்தையும் படிக்கக்கூடாது என்ற முடிவுடன் இருந்தாலும், ரீடரில் கண்ணில் படும் பதிவுகள் எல்லாம், இந்த பட விமர்சனமாக இருக்க, கடைசி வரியை மட்டும் படிக்குமாறு பார்த்துக்கொண்டேன். அதில் ஆதிஷா வின் கடைசி வரியை படிக்கும் போது, "அம்மா" பற்றிய கதை என்று புரிந்தது. அம்மா சம்பந்தப்பட்ட படம் என்றால், நாம பார்க்கமுடியுமா, என்ற எண்ண ஓட்டம் இருந்துக்கொண்டே இருந்தது....

அம்மா இல்லங்கற காம்ப்ளக்ஸ் நிறைய இருக்கு.. அது நெகட்டிவாக போயிட க்கூடாதுன்னு நானே எனக்கு கவுன்சலிங் கொடுத்து கொடுத்து, அம்மா இல்லைன்னா என்ன? என்னால் தனியா செய்துக்க முடியும்...னு செய்து செய்து.. :)) எதையும் செய்ய முடியும் ங்கற தன்னம்பிக்கை நிறைய வளர்ந்துடுச்சி.! எங்களுக்கு எல்லாம் தன்னம்பிக்கை இல்லையா ன்னு, அம்மா இருங்கவங்க எல்லாம் வந்தால், க்யூல வாங்க.. உட்கார்ந்து பேசுவோம். .டீல முடிப்போம்..!!  சரி, இப்ப காம்ப்ளக்ஸ் போயிடிச்சான்னு கேட்டீங்கன்னா.. சில உதாரணம் சொல்றேன்.

இந்த பக்கம், அந்த பக்கம் வீடுகளில் அம்மாக்களின் படையெடுப்பு நடந்து, பெண்கள் ரொம்ப ஓய்வாக, அம்மா சமைத்துப்போட்டு சாப்பிட்டு, அவங்க மடியில் படுத்தாலோ, தலைவாரிக்கிட்டாவோ,  இவங்க குழந்தைகளுக்கு லீவு விட்டால் போதும்னு அம்மாவீட்டுக்கு மாசக்கணக்கில் போனாலோ.. யாரோ கொள்ளிக்கட்டைய என் இரண்டு காதுலேயும் சொருகின மாதிரி புகை வரும் பாருங்க.. ஹும்ம்ம்.!!  இரண்டு பேருக்குமே இன்னைய வரைக்கும் நடுவீட்டில் இப்படி ஒரு வயத்தெரிச்சல் கேஸ் இருக்காள்னு தெரியாது. அவ்வளவு ஏன் என் நெருங்கிய நண்பர்கள் அம்மாவின் மேல் பாசத்தை கொட்டும் போதோ, அவங்க அம்மாக்கள் இவிங்க மேல பாசத்தை கொட்டும் போதும்.. வெளியில் ரொம்ப நல்ல பெண்ணாக :)  உள்ளுக்குள்ள ஒரே புகைச்சலோட இருப்பேன்.. :( . பாவம் இதெல்லாம் இப்ப வரைக்கும் எந்த நண்பர்களுக்கும் தெரியாது. .ஹி ஹி.. :))  I am a Fraud !!

ம்ம்ம்.. தலைப்புக்கு வருவோம். நந்தலாலா.. அம்மாவை பிரிந்த அந்த இரண்டு குழந்தைகளின் மனநிலை என்னை ஒத்தே இருந்ததால், ரொம்ப மனதை பாதித்தப்படமாக இருந்தது. கண்களில் வரும் கண்ணீரை நிறுத்தவே முடியாமல், உள்ளிருந்த வலிகள் அத்தனையும் வெளிக்கொண்டு வந்துவிட்டது. காரணக்காரியங்கள் எதுவாக இருந்தாலும், அம்மா இல்லாமல் வளரும் எல்லா குழந்தைகளின் மனநிலையும், ஏக்கங்களும், எதிர்ப்பார்ப்புகளும், கோவங்களும், வெறுப்புகளும், அழுகையும், ஆத்திரமும், தேடுதலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை பல தடவை உணர்ந்திருந்தாலும், இந்த படத்தில் அப்படியே தெரிந்தது, வலித்தது.

மனதை பாதித்த பல படங்கள் வந்துள்ளன, "அன்பே சிவம்" என்ற படத்தில் கூட இரண்டு பேர் பயணத்தின் நெடுகிலும், பல மனிதர்களை, நிகழ்வுகளை சந்திப்பார்கள். மேக்கப் போட்ட கதாநாயகி, கதாநாயகன், டூயூட் , காதல், முத்தங்கள், அன்பு என்ற பலவும் இருந்தது. அதைத்தாண்டி ஒரு சினிமாத்தனம், ஒரு பகட்டு இருந்தது. கடைசியில் சொன்ன இரண்டை தவிர்த்து, மற்றவை எல்லாமே இந்த படத்திலும் இருக்கிறது, காதல், முத்தம், அன்பு, உண்மை, மனிதம்,  இவற்றின் ஊடே மிக யதார்த்தமான இரண்டு குழந்தைகளின் பயணம் காட்டப்பட்டுள்ளது..

சந்தானம், விவேக், வடிவேலு என்று யாருமே இல்லாமல், படம் முழுக்க நகைச்சுவை. சிரிப்புக்கூட, வெடிசிரிப்பாக சத்தம் போட்டு சிரிக்கவைத்த காட்சிகள் படம் முழுக்க வருகின்றன,  சிரித்துக்கொண்டு இருக்கும் போதே.. நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது, கண்ணீர் மறையுமுன் மீண்டும்  சிரிக்க வைக்கிறார்கள். இவை எல்லாமே மேலோட்டமாக இல்லை, உள்ளிருந்து வருகிறது. மாறி மாறி அழுகையும் சிரிப்புமாக இப்படி ஒரு திரைக்கதை ???? இதுவரையில் எந்த ப்படத்திலும் பார்த்திராத ஒரு திரைக்கதையை இந்த படத்தில் பார்க்க முடிகிறது.

கதாப்பாத்திரங்களில் முன்னனி கதாநாயகி/கதாநாயகன் என்று யாராவது இந்த படத்தில் நடித்திருந்தால், வித்தியாசமான கதை, கதாபாத்திரம் என,  நடிப்பை பிழியோ பிழியோ என்று பிழிந்து, நம்மையும் சக்கையாக பிழிந்து எடுத்து இருப்பார்கள். நல்லவேளை இயக்குனர்,  மிக மிக இயல்பாக நடித்து அசத்திவிட்டார்.

இசைஞானி : வார்த்தைகளால் சொல்ல முடியாது, அனுபவிக்கனும். படம் முழுக்க பயணம் செய்து இருக்காரு..அதுவும் பல இடங்களில் நம்மை இசை தாலாட்டுது.  டைட்டில்ஸ் போடும் போதே... மயங்க வைக்கறாரு..  சலனம் அதிகமில்லாத ஓடை நீரில் கண்ணை மூடி படுத்திருக்க, தென்றல் வந்து நம்மை வருடிக்கொண்டே இருப்பது போன்ற சுகம்,   இப்படி ஒரு இசையை கேட்கத்தான் காதுகள் படைக்கப்பட்டதோ..?

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே....அன்பு ஒன்னு தான் அனாதையாய்.......  :))  ஜேசுதாஸ்..  Dedicating to me


படத்தின் தயாரிப்பு :  நம்ம சங்கர் சார் ஒரு பாட்டுக்காக செலவு செய்யும் பணத்தில், இப்படிப்பட்ட படங்கள் 3-4 எடுத்துடலானு நினைக்கிறேன்.

இயக்குனருக்கு சொல்ல நினைப்பது, பேன்ட் பெல்ட் போட பல மைல் தூரம் பல மனிதர்களை கடந்து வந்த பிறகு, ஒரு பெண்ணால் போடப்படுவது கொஞ்சம் மனதை நெருடுகிறது... அதுவரையில் ஏன் யாருக்கும் அது தோன்றவில்லை... ?

இது வரையில் திரைவிமர்சனம் "பார்வைகளில்" எழுதியதே இல்லை. எழுதுவது இல்லை என்ற நிலையை மாற்றிய படம் இதுவாகதான் இருக்கும். :)

அணில்குட்டி அனிதா : ஸ்ஸ்ஸ்ஸ்... ஆத்தா.. முடியல ஆத்தா. .எழுதாத வரை நாங்க எல்லாம் நிம்மதியாக இருப்போம். எதையும் நீங்க புதுசா ஆரம்பிக்காதீங்க...

பீட்டர் தாத்ஸ் :  Amma, I love you !

அழகி நீ பேரழகி அழகான கண்ணழகி...

வேளச்சேரி - தாம்பரம் சாலை,  இந்த சாலையில் ஹால்டாவிலிருந்து பள்ளிக்கரணை வரை பிரச்சனை ஒன்றும் இல்லை. பள்ளிக்கரணையை தொட்டு விட்டால், சாலை ஓரங்களில் மட்டுமல்ல நட்ட நடு ரோடில், சாலையை இரண்டாக பிரித்து கட்டியிருக்கும் சின்ன சுவர்களின் பக்கத்திலும், நடுவே திரும்பும் வளைவுகளிலும், ஒன்று இரண்டு இல்லை, கூட்டம் கூட்டமாக மாடுகள் அமர்ந்திருக்கும் அல்லது மேய்ந்துக்கொண்டு இருக்கும்.

இவை 24 மணி நேரமும் சாலைகளிலேயே தான் இருக்கின்றன.  இது பள்ளிக்கரணையிலிருந்து, கிழக்கு தாம்பரம் வரை தொடர்கிறது. மேடவாக்கம் வரை அதிகமாக காணப்படும் இந்த மாடுகள் கூட்டம், கிழக்கு தாம்பரம் நோக்கி செல்ல செல்ல குறையும். ஆங்காங்கே ஒன்றிரண்டு பார்க்கலாம்.. ஆனால் இல்லாமல் இருக்காது.

எப்போது விழுப்புரம் செல்ல வேண்டி இருந்தாலும், தாம்பரம் ஸ்டேஷனில் வண்டியை விட்டுவிட்டு அங்கிருந்து பேரூந்தோ ரயிலோ பிடிப்பது வழக்கம்.  ஒரு நாள் விடியற்காலை 4 மணிக்கு கிளம்பி போகவேண்டி இருந்தது. பள்ளிக்கரணை தாண்டி செல்லும் போது கவனிக்கிறேன், அந்த மாடுகளின் எஜமானர்கள் மாடுகள் எங்கு நின்றிருக்கிறதோ அங்கேயே அவற்றிக்கு வைக்கோலை போட்டு, மடியைக் கழுவி,  பால் கறந்து க்கொண்டு இருக்கிறார்கள். சாலையின் ஓரத்திற்கு அழைத்துச்சென்று கூட இதை செய்யவில்லை. மாடுகள் நிற்கும் இடங்களிலேயே நடந்துக்கொண்டு இருந்தது.

நிஜமாகவே இவர்கள் தான் அந்த மாடுகளுக்கு சொந்த க்காரர்களா என்ற சந்தேகம் கூட வந்தது. 24 மணி நேரமும் தெருவில் இருக்கும் மாடுகளுக்கு யார் வேண்டுமானலும் சொந்தக்காரர்களாக ஆகலாம் அல்லவா? எனக்குமே ஏன் நாமும் விடியற்காலையில் போயி ஒரு படி பால் கறந்து கொண்டுவரக்கூடாது என்று தோன்றாமல் இல்லை. 

மாடுகளை சாலையில் அதுவும் ரொம்பவே போக்கவரத்து அதிகம் உள்ள சாலைகளில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் தொந்தரவு தரும் படி விட்டுவைப்பது குற்றம், இதில், அங்கேயே அவற்றிற்கு சாப்பாடு கொடுத்து, துணிமணி கொடுத்து, தூங்க சொல்லுவதும், பாலை- ஆள் அரவமற்ற விடியற்காலை பொழுதுகளில் வந்து கறந்து சென்றுவிடுவதும் எத்தனை அயோக்கியத்தனம்.

இந்த பகுதி மக்கள் இதற்காக எதுவும் செய்தால் நலமாக இருக்கும். பாவம் வாயில்லாத ஜீவராசிகள் பெரிய வாகனங்களில் மோதி அடிபடவும், இறந்து போகவும் நிறையவே வாய்ப்பிருக்கிறது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்வர்களும், இவற்றின் மோதாமல் போகவேண்டுமென விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடக்கின்றன.

பள்ளிக்கரணை சென்னை மாநகராட்சி க்கு உட்பட்டது இல்லை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் வருகிறது. இணையத்தில் தேடியதில் கிடைத்தது, இந்த இமெயில் அட்ரஸ்- collrkpm@tn.nic.in, இவருக்கு, மாடுகளை அகற்றுமாறு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன். என்னால் முடிந்தது இதுவே. சென்னை மாநகராட்சி சம்பந்தபட்டு இருந்தாலும், புகார் கொடுத்தாலும், அதற்கான சேவையை உடனே அல்லது எப்போதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. அதில் அனுபவமும் உள்ளது. இருப்பினும்,  "கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே" , ஒரு சமயம் இல்லையேல், ஒரு சமயம் யாராவது கண்டுக்கொள்வார்கள் என்ற அல்ப நம்பிக்கையில், இந்த புகாரையும் எப்போதும் போல் கொடுத்துள்ளேன். பார்க்கலாம்.


இதை ப்படிப்பவர்கள், பள்ளிக்கரணை - கிழக்கு தாம்பரம் சாலையில் நடுரோடில் 24 மணி நேரமும் சுற்றிக்கொண்டு இருக்கும் மாடுகளை அகற்ற, ஏதேனும் நடவடிக்கை எடுக்க  உதவி செய்தால் நலம். அல்லது யாரை அணுகவேண்டும் என்று சொன்னால் என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

இதே போன்று வீடு கட்டுபவர்கள், மணல் ,ஜல்லி, செங்கல் போன்றவற்றை நடுரோட்டில் கொட்டி வைத்து, என்னவோ சாலை அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை போல் பயன்படுத்துக்கிறார்கள், இப்படி எல்லாம் செய்யாவிட்டால் நம்மை இந்தியர்கள் என்று யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் போலவே.

 இது நம்ம ஊரு மாடுகளுக்கு...


அணில் குட்டி : கவி க்கு வர வர கைத்தொழில் அதிகமாயிட்டே போகுது... ம்ம்..  இந்த பதிவை பிரண்ட் ஸ்கிரீன் எடுத்து வச்சிக்கோங்க மக்கா.. பள்ளிக்கரணை பக்கம் எந்த மாட்டுக்கிட்டவாச்சும், பால் மிஸ் ஆச்சின்னா.. கவி ய வந்து பிடிங்க....... அம்மணி க்கு அந்த மாடுங்க ரோடுல சுத்தறது மேட்டர் இல்ல... பாலை எப்படி கறந்து விக்கறது ங்கறது தான் இப்ப மேட்டரே.. புரியுதா..?

பீட்டர் தாத்ஸ் : “Some roads aren't meant to be travelled alone”


படங்கள் : நன்றி கூகுல்.

மீசை

மீசை மேல எப்பவும் எனக்கு ஒரு கண்.. :). கொஞ்சம் வித்தியாசமாக மீசை வைத்து இருப்பவர்களை பார்த்தால், எப்படி இதை வைக்கறாங்க.. மெயின்டெயின் பண்றாங்கன்னு யோசிப்பேன்.  அப்பா, தாத்தா சவரம் செய்யும் போது கிட்டவே உட்கார்ந்து ரொம்ப கூர்ந்து கவனிப்பேன்.  தாத்தா கீழே உட்கார்ந்து தான் செய்வார். தாத்தா சவரப்பெட்டிய கொண்டுவந்தாலே... தாத்தா "சவர கல்யாணம்" ஆரம்பிச்சிட்ட்டார் ன்னு குரல் கொடுப்போம், அவ்வளவு நேரம் ஆகும். சவரம் செய்ய அப்பாவும் தாத்தாவும் சவரக்கத்தியை தான் பயன்படுத்துவார்கள். கத்தின்னா அது கத்தி! அவ்வளவு கூர்மையாக இருக்கும், என்னை தொட விடமாட்டார்கள், பார்க்க மட்டுமே அனுமதி. அதை துடைத்து, பேப்பரில் சுற்றி, துணியில் சுற்றி, அதற்கான கவரில் போட்டு, ஒரு பெட்டியில் வேறு வைப்பார்கள். ரேஸரில் அண்ணன் தான் ஷேவ் செய்துக்கும்.

எங்கள் வீட்டில் இடுப்பு வரையிலான முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும். அப்பா அங்கு நின்றுக்கொண்டே ஷேவ் செய்வார். நான் கண்ணாடிப்பக்கமாக நின்று அவர் ஷேவ் செய்வதை பார்ப்பேன். தாத்தாவும், அப்பாவும்  மீசை சரியாக இருக்கிறதா என்று பெரிய மனுஷியான என்னிடம் கேட்பார்கள். நானும் சரியாக சொல்லுபவளாக இருந்து இருக்கிறேன், இல்லைன்னா வீட்டில் உள்ள அத்தனை பேரை விட்டுவிட்டு என்னை கேட்பார்களா..?  பாருங்க சின்ன ப்புள்ளையிலேயே எம்புட்டு புத்திசாலியா இருந்து இருக்கேன் ன்னு ??! சரி.. சரி...நோ புகைச்சல்.... அதெல்லாம் பிறவியிலேயே இருக்கனும்.. நீங்க யாரும் வருத்தப்படக்கூடாது. ஏன்னா இப்ப என் கணவருக்கும் நானே சொல்கிறேன். (பாவம் அவர் தலையெழுத்து.. வேற யார் கிட்டத்தான் கேட்பாரு? )
இதுல இரண்டு பேருமே ரொம்ப மெல்லிய மீசை மேல் உதட்டை ஒட்டிய மாதிரி வைப்பாங்க.. தாத்தா ஒரு காலக்கட்டுத்துக்கு மேல முழுசும் சவரம் செய்ய ஆரம்பிச்சிட்டாரு. அப்பா அப்படி மீசையை வைக்கும் போது, ரொம்ப கவனமாக கத்தியை பயன்படுத்துவார், நான் உற்று கவனிப்பேன்,  விட்டால் அவர் முகத்தோட ஒட்டிக்கற மாதிரி கவனிப்பேன். சில சமயம் திட்டி, தள்ளி நில்லு பாப்பா, கத்தி பட்டுட போகுதுன்னு சொல்லுவாங்க. என்னவோ அவர் மீசையை சரி செய்வதை பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம். இதில் இடது, வலதில் கடைசியில் செய்யும் போது வாயை ஒரு மாதிரி கோணி செய்வார். அப்போது முகம் அஷ்ட கோணலாக இருக்கும், அதை பார்த்து ரிஜிஸ்டர் செய்துக்கொண்டு, அப்பா முடித்தவுடன், அப்பா நீங்க ஷேவ் செய்யறப்ப இப்படித்தான் முகம் இருந்தது என நானும் வாயை கோணிக்காட்டுவேன். தாத்தா மட்டும்.. "இந்த குட்டி என்னா கிருவி" யா இருக்காளே..அவங்கப்பன் கிட்ட எல்லாரும் நின்னு பேசவே பயப்படுவாங்க.. இவ மட்டும் பயமத்து திரியறாளே.. பத்தா (பத்மா), இதெல்லாம் நீ கொஞ்சம் சொல்லக்கூடாது" ன்னு ஆயாவிடம் சொல்லுவார்.  தாத்தா நீங்க கூட ஷேவ் செய்யும் போது அப்படித்தான் கோணறீங்க ன்னு சொல்லிவிட்டு செல்வேன். :)

மீசை என்பது ஆண்களுக்கு ஒரு பெரிய விஷயம் என்பதாக எனக்குப்பட்டது. அதற்காக நேரம் ஒதுக்கி, அதை சரியாக வைத்துக்கொள்ள பெரும் பாடுபடுவதாக தோன்றும். அலுவலகங்களில் என்னுடைய நண்பர்களும் மீசை க்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள். பள்ளி பருவத்தில் என்னுடன் படித்த பிள்ளைகளுக்கு மீசை வர ஆரம்பித்து இருந்தால், அதை நன்றாக, பெரியதாக வளர்க்க பெரும்பாடு படுவார்கள். மீசை தான் அவனை ஆணாக பிரதிபலிப்பதாக நினைக்கிறார்கள் என்றே எனக்கு தோன்றும். பள்ளியில் எங்களின் சீனியர் அக்கா ஒருவருக்கு மீசை இருக்கும். அவரை "அந்த மீசை அக்கா: என்று அட்ரஸ் செய்வோம். இப்போது நினைத்தால் கவலையாக இருக்கிறது, அவரின் மனது வேதனைப்பட்டு இருக்கும். அப்போது எல்லாம் இப்படி அழகு நிலையங்கள் இல்லை. அத்தோடு, கம்பியூட்டர் க்ளாஸ் போக பஸ் ஸில் போகும் போது, தினம் அதே பஸ்ஸில் வரும் ஒரு தோழிக்கும் மீசை இருக்கும். :( இந்த பெண் மிகவும் கலராக வேறு இருப்பார், அதனால் பளிச்சென்று தெரியும். அதைப்பற்றி பேசவும் தயக்கமாக இருக்கும். அதை காட்டிக்கொள்ளாமல் பேச மிகவும் முயற்சி செய்வேன்.

அதே சமயம் வெளிநாடுகளில், வட இந்தியாவில் மீசை இல்லாமல் தான் ஆண்கள் இருக்கிறார்கள்.  சிலருக்கு மீசை ரொம்பவே அழகைத்தரும், சிலர் மீசை இல்லாமல் தான் அழகாக இருப்பார்கள். மீசை இல்லாதவர்கள் முகம் இன்னமும் இளமையாக தெரியும்.  எனக்கு கொஞ்சம் அறிமுகம் ஆகி பழகி இருந்தாலே போதும், அவரிடம் அவரின் மீசை யை பற்றி சொல்லாமல் இருக்கவே மாட்டேன்.. :). அவங்க என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படாமல், மனதில் நினைப்பதை சொல்லிவிடுவதும் பழக்கமாக இருந்தாலும், இந்த மீசை விஷயத்தில் மட்டும் என்னவோ ரொம்பவே ஓவர்.

தென் இந்தியாவில் கடவுள்'களுக்கு மீசை இல்லை. அதாவது சிவன், பெருமாள், கனேஷ், முருகன் & குடும்பத்தில் யாருக்கும் மீசை இல்லை. அதுவே வட இந்தியாவில் சிவனுக்கு மிசைவைத்து இருக்கிறார்கள். பூரி கோயில் ஜெகனாத்' க்கு மீசை இருக்கிறதா என்ற சந்தேகம், உதட்டை அப்படி வரைந்து இருக்கிறார்களா இல்லை மீசையா என்று தெரியவில்லை.  இருப்பினும், வட இந்திய க்கோயில்களில் சிவனை மீசையோடு பார்க்கும் போது ஒரு அந்நியம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நாம் வழிவழியாக பார்த்த உருவம் வேறு மாதிரி தெரியும் போது அதை உடனடியாக எளிதில் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. தவிர்த்து நம் அய்யனாரும்,  சார்ந்த கடவுளர்களும் மீசை வைத்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்.

எனக்கு மீசை என்றாலே அப்பாவின் மீசை தான் முதலில் நினைவுக்கு வரும். பிறகு சார்லி சாப்ளின், ஹிட்லர், பாரதியார், கமலின் எல்லா மீசைகளும் பார்க்க பிடிக்கும், ரஜினி, வீரப்பன், மாபோசி & காந்திஜி. மீசை இல்லாதவர்களில் நெதாஜி , நேரு மாமா, தில்லு முள்ளு ரஜினி.

மீசை என்பது எதன் அடையாளம் என்று தெரியவில்லை. அதற்கு ஏன் பலர் ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் புரிவதில்லை. :) தெரிந்தவர்களை விளக்கச்சொல்லி கேட்கவே இந்த பதிவு.


அணில் குட்டி : ஹி ஹி..அம்மணி ரெம்ப பிடிக்கும்னா... நீங்க வேணா மீசை வளத்துக்கோங்களேன்... ... :))


பீட்டர் தாத்ஸ் : “A man without a mustache is like a cup of tea without sugar” 

உள்ளே..... வெளியே.......

:))) சிலரோட சமூக அக்கறை.. தாங்ங்ங்க முடியலைங்க........... :))))))), சிரிக்கத்தான் முடிகிறது !! என்னமா சமுகத்தின் மேல் இருக்கும் தன் அக்கறையை தன்னுடைய (சிலமுறை பலமுறை படிக்கப்பட்டு, திருத்தப்பட்டு...டம்மா டம்மா டம டம டம்மா....) எழுத்தின் மூலம் கொட்டிக்காட்டறாங்க.. ..ஸ்ஸ்யப்பா...

ம்ம் அதையெல்லாம் படித்த பிறகும் நாம் திருந்தாட்டி.. நாம எல்லாம் மனுஷங்களே இல்லை. .இந்த சமூகத்தில் வாழவே தகுதியில்லாதவர்கள். அப்படி யார் என்ன எழுதிட்டாங்கன்னு கேட்டீங்கன்னா...  அதை எல்லாம் சொல்லி தெரியப்படுத்தற அளவு நமக்கு அறிவு இல்லைங்க.. .. வெளி உலகத்தில் (அழகிய) முகத்தை காட்டியும்..  உள்ளுக்குள்ள  (அழுகிய) வேறு முகத்தோடையும் இருப்பவர்களுக்கான, அறிவையும் சாமர்த்தியத்தையும் கடவுள் நமக்கு கொடுக்கல'ன்னு சொல்ல வந்தேன்.. .நிறைய மனிதர்களிடம் இதை கண்டுவிட்டேன் என்றாலும் சிலரின் நடிப்பை பார்த்து, என்னை மறந்து, வியந்து வாய் பிளப்பதில் கொசு உள்ளே சென்று குட்டி போட்டு இனப்பெருக்கும் கூட செய்துவிடுகிறது... அதற்கு கிடைத்த சான்ஸை அது சரியாக பயன்படுத்திக்குது.. :))).

இப்படி பார்த்து பார்த்து, ஏன் மனிதன் இப்படி முகமூடி மாட்டி திரிகிறான் என்ற கேள்விக்கு விடைத்தெரியாமல்.. இப்படி இருந்தால் தான் வாழமுடியும்..?? இல்லை வாழ்க்கை என்பதே முகமூடிகளுடன் கூடியதா? அல்லது இப்படி வாழ்ந்தால் தான் சந்தோஷமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை மனிதனுக்கு இருக்கிறதா என்ற சந்தேகமும் இருக்கிறது.

சரி அதை விடலாம்...பிரச்சனையும் கோபமும் - சமூக அக்கறையை, தன்  எழுத்தின் மூலம் தானாக பறைசாற்றுபவர்கள் மேலில்லை.. அதனை படித்து "ஆஹா ஓஹோ..என ஜல்லி அடித்து, நீ ஒரு அது.. நீ ஒரு இது.. " என ஏற்றிவிடுவதால், இந்த வேஷதாரிகள் இன்னமும் தன் முகத்தை அழகாக க்காட்டிக்கொள்ள  என்னென்ன முடியுமோ அத்தனையும் தங்கள் எழுத்தில் கொண்டு வருகிறார்கள்... :))  அதே சமயம், அவர்களின் "அழுகிய" முகம் தெரிந்த நமக்கு, கருமம் சகிச்சிக்க முடியல.!!  பாருங்க இப்படி எல்லாம் எழுத வேண்டி வந்துடுது.. !!

இப்படிப்பட்டவர்கள் வளர்வதால் என்ன பயன்னு ஓரமா உக்காந்து யோசிச்சி ப்பார்த்தேன்...  முதலில் தோன்றியது.. நல்ல அரசியல் வாதியாக வரலாம். .அப்பத்தான் "உள்ளே வெளியே" விளையாட்டு மிகச்சரியாக மக்களுக்கு சந்தேகம் வராமல் செய்து நம் நாட்டையும் மக்களையும் சமுக அக்கறை என்ற பார்வையில் எளிதாக ஏமாற்றமுடியும். இவர்களை போன்று வளர்ந்தவர்கள் தான் அரசியல்வாதிகளோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நல்ல அரசியல் செய்ய இந்த "உள்ளே..வெளியே" குவாலிட்டி இருந்தால் போதும் என்றே தோன்றுகிறது. அதாவது எத்தனை கேவலமான மனமும் குணமும் நடத்தை இருந்தாலும், வீட்டைவிட்டு வெளியில் வந்தவுடன், ஒரு மந்தகாச புன்னகை ஏந்திய முகமும், பார்ப்பவர்கள் ஆச்சரியப்பட்டு பூரித்து பொங்கி வழியும், பேச்சும் நடத்தையும் கண்டிப்பாக வேண்டும். இதை தொடர்ந்து செய்பவர்களை பார்த்து.. ஹி ஹி. .எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்குங்க..!! :))

அடுத்து, இவர்களை பார்த்து வளரும் இவர்களது குழந்தைகள் எதிர்காலத்தில் இவர்களை விட தில்லாலங்கடிகளாக வந்துவிடுவார்கள், அல்லது இரட்டை வேஷத்தை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல், மன அழுத்ததில் சமூகத்தில் ஒன்றாமல் தனித்து நிற்கக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டு,  பெற்றவர்களை வெறுப்பது போல சமூகத்தையும் வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

மூன்றாவது, இவங்களால பலருக்கு பொழுதுப்போக்கு, இப்ப என்னையே எடுத்துக்கோங்களேன். .இவங்க எழுதறதை எல்லாம் பல நேரம் படிக்கறது இல்லை என்றாலும், வலிந்து என் வாசலில் வந்து நிற்கும் சில எழுத்துக்களை படிக்கும் போது, இப்படியும் மனிதர்கள் என்று இன்னமும் மனிதர்களின் மேல் உள்ள நம்பிக்கை குறைந்து, இப்படி எழுதி என் பொழுதை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறேன். 

நான்காவது, தன் முதுகில் இருக்கும் அழுக்கை யாராலும் பார்க்க இயலாது என்ற பழமொழி இப்படிப்பட்டவர்களால் உறுதியாகிறது. :)))

ஐந்தாவது, என் எழுத்தை படித்து பார்த்து, நான் இப்படித்தான் என்று, முன் முடிவு செய்து அதற்கு தகுந்தார் போன்று பேசி, நடந்து என் மனதை புண்படுத்திய நல்லவர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.

எழுத்து என்பதை நம்மை தனிப்பட்ட முறையில் யூகிக்க உதவுகிறது என்பதை உணர்ந்ததே "என்னை யார்" என்று என் எழுத்தின் மூலம் முன் முடிவுக்கு வந்து அதை என்னிடமே சொன்னபோது தான்... !! அது வரையில் அப்பாவியாக இவர் என் 'நண்பர்/தோழி' என்ற நம்பிக்கையை இழந்த போது என் வலியை ... .... வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

என் எழுத்தின் மூலம் என்னை அறிந்தவர்கள் யாருக்குமே என்னை தனிப்பட்ட முறையில் தெரியாது. பக்கம் பக்கமாக எழுதும் ஒருத்தி, ஊமையாக க்கூட இருக்கலாம். ஏன் குருடாகக்கூட இருக்கலாம். எழுத்து என்பது, நம்மை பிரதிபலிப்பதாகவா இருக்கிறது? என்பதை பலநேரம் நான் கேள்வியாக்கி எனக்குள்ளவே கேட்டு இருக்கிறேன். பொதுவில் வாய் கிழிய எழுதுவதை, தனிப்பட்ட முறையில் செயற்படுத்தக்கூடியவராக இருக்கிறார்களா, நடந்துக்கொள்கிறார்களா என்று கவனிக்காமல், அல்லது அதை பற்றி தெரியாமல் ஒருவரை பற்றிய எண்ணங்களை, தனக்கு புரிந்தபடி அமைத்துக்கொள்வது மனித இயல்பாகிவிட்டது. அப்படி அமைத்துக்கொள்வது சரியில்லை என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.

பல வருடங்களாக நம்முடன் பழகும் ஒருவருக்கு கூட நம்மை பற்றி சரியாக தெரியாமல் இருக்கும் போது, எழுத்தை படிப்பதின் மூலம் இவர் இப்படித்தான் என்பதை யூகிப்பது மட்டுமில்லாமல், அவர் அப்படித்தான் ன்னு ஒரு முடிவுடன் எப்படி அணுகமுடியும்? இது தொடர்புடைய பதிவு

மனிதர்கள் யாரும் தன் நெகட்டிவ் வெளியில் தெரிவதை விரும்பமாட்டார்கள், நெகட்டிவ் என்று சொன்னது, ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதுவே பாசிட்வ்'விற்கு கிடைக்கும் மதிப்பை கண்டு மயங்கி, அதனை இன்னமும் அதிகமாக்கி க்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.  நம்மின் நெகட்டிவ், பாஸிட்டிவ் என்ன, எதில் தவறு செய்கிறோம், எங்கே சரியாக இருக்கிறோம் போன்ற சுய அலசல்கள் இருந்தால், அந்த மனிதனை எதுவும் சஞ்சலப்படுத்திவிடாது. சுய அலசல் இருப்பவர்கள், வேஷதாரிகளாக இருப்பதில்லை. :). 

சரி சரி எங்கேயோ ஆரம்பித்து அங்கே இங்கே என எங்கெங்கோ வளைந்து நெளிந்து போயிட்டேன், தலைப்புக்கு வருகிறேன். என்னென்னவோ எழுதிய பிறகும், இது எதற்கு என்று புரியாதவர்களுக்கு ஒரு சின்ன உதாரணம்-

சமூக அக்கறையும், சாமானியர்களின், கீழ்மட்ட மக்களின் மீதும் அக்கறை மண்டி கிடக்கும் எத்தனை பேர் நம் வீட்டு வேலைக்கு நாம் சாப்பிட்டு போடும் தட்டை கழுவ, நமக்கு சமைத்து போடவும், நம் வீட்டு கழிவறைகளை கழுவ, சுத்தம் செய்ய, இந்த மனிதர்களை காசு (காட்டி) கொடுத்து,  கழவ சொல்லாமல் இருக்கிறோம்? - இவர்களுக்கு சம்பளம் என்ன? 50 ரூ - 4000 ரூ வரை. இது சீமாட்டிகளின்/சீமாட்டன்'களின் சம்பளத்தை பொறுத்து மாறுபடும்.

என்னை நோக்கி உங்கள் கை நீளும் முன்.. - எங்கள் வீட்டில் வேலையாள் எப்போதும் வைப்பதில்லை. எங்கள்வீட்டு கழிவறையை நான் என் கையை கொண்டு தான் சுத்தம் செய்கிறேன். நாங்கள் கழிக்க  பயன்படுத்தும் ஒரு இடத்தை, சக மனிதனை விட்டு சுத்தம் செய்ய விடுவதில்லை..அதற்கு என் மனம் இடம் கொடுப்பதில்லை... இதை நான் இப்போது முடிவு செய்யவில்லை, சின்ன வயதில் தோட்டத்து சந்தின் வழியாக, இரண்டு பக்கெட் தூக்கிக்கொண்டு வந்து, மனித கழிவை, முகம் சுளிக்காமல் அள்ளிக்கொண்டு சென்ற எங்கள் வீட்டு கக்கூஸ் க்காராம்மை'வை பார்த்து முடிவு செய்தது. அந்த அம்மா, மாதம் சம்பளம் வாங்கும், ஒரு மாநில அரசு ஊழியர். பிச்சை எடுக்காமல், மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல், திருட்டு வேலை செய்யாமல், உள்ளே வெளியே நாடகம் நடத்தாமல், செய்கின்ற வேலையை கவனமாக செய்வார். தெருவில் அந்த வண்டியை அவர் தள்ளிக்கொண்டு போவதை பார்க்கும் போது எல்லாம், என் வீட்டில் இப்படி ஒரு வேலையாள் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து மனதில் பதிய வைத்ததை இன்னமும் தொடர்கிறேன்.

கழிவறை கழுவுவது என்பது சாமானிய வேலை இல்லை என்பது, அதை செய்வதால் எனக்கு தெரியும்.  அதை பணம் கொடுத்தாலும் இன்னொரு வீட்டில் சென்று செய்வேனா என்றும் யோசிப்பேன். :). ஒரு வேளை, அப்படியும் என் வேலை இருந்திருந்தால்...???!! அதையும் செய்திருக்க க்கூடும், ஏனென்றால், ஊராருக்கு உபதேசம் செய்யும் சீமாட்டிகளும்/சீமாட்டன்'களும் இருக்கும் இந்த சென்னை மாநகரத்தில் எளிதாக அந்த வேலைகள் கிடைக்கும்,  :))).

ஆக, சொல்லவந்தது, சீமாட்டிகளை/சீமாட்டன்'களை பற்றியல்ல, நமக்கு சமூகத்தில் சக மனிதன் மேல் உள்ள அக்கறை என்பது நம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்... தெருவில் இருந்து அல்ல............

அணில் குட்டி :.............................. ம்ம்...... ம்ம்........................( அம்மணி ரெம்ப கோவமா இருக்காங்களோ....  ) சரிங்க ஆப்பிசர்..!! (அடி ஜூட்......இதுக்கு மேல பேசப்பிடாது இப்ப..)


பீட்டர் தாத்ஸ் :Faith is the first factor in a life devoted to service. Without it, nothing is possible. With it, nothing is impossible.

ஏன்ன்ன்ன்ன் இப்படி?

கவி : GM

சிபி :  AC

கவி : AC ன்னா?

சிபி: நீங்க General Manager ன்னு சொன்னீங்க.. இல்ல, நானு Associate Consultant ன்னு சொன்னேன்.. 

கவி :கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

****************
கவி : காலை வணக்கம்

சந்தோஷ் : யார் காலை தொட்டு வணக்கம் சொல்றீங்க..

கவி: ஞே.....!.
***************
 ஸ்டேடஸ் மெஸேஜ் - "அகம் பிரம்மாஸ்மி"

குசும்பர் : "அகம் பிரம்மாஸ்மி " ன்னா என்னங்க அர்த்தம்

கவி : நானே கடவுள் ன்னு அர்த்தம் ..........

குசும்பர் : கருமம் !!

கவி : ஹல்ல்லோஒ நானா வந்து கேக்க சொன்னேன்.. கேட்டுட்டு என்ன கருமம் ன்னு சொல்றீங்க?!

குசும்பர் : அதே தான் !! வந்து கேட்டேன் பாருங்க.. என்னை சொல்லிக்கிட்டேன் "கருமம்" ன்னு ...

*********************
எஸ்.எம்.எஸ்

சிபி : உங்க கதை சூப்பர் ! அந்த ஹூரோ கேரக்டர் ரொம்ப நல்லா இருக்கு, எனக்கு பிடிச்சிது, நெக்ஸ்ட் எப்ப தொடரும்?

கவி : இந்த மெசேஜ் யாருக்கு?

சிபி : அட உங்களுக்கு தாங்க. .உங்க கதை புக் ல வந்து இருக்கு இல்ல, அதுக்கு கமெண்டு ங்க..

கவி : கமெண்டு...??? அதுவும் எஸ் எம் எஸ் ல..????! கதைய படிச்சீங்களா? அதுல ஹூரோவே இல்ல

சிபி : ஹோ ஹீரோ இல்லையா ...ஏங்க கதைன்ன ஒரு கரு இருக்கனுமே .. அது தாங்க ஹூரோ.. அதை சொன்னேன்..

கவி :   :((((( சிபி வேணாம்.....

********************
கவி : தாலாட்டு பாட்டு பாடி வச்சி இருக்கேன். இனியன் தூங்கலன்னு சொன்னீங்க இல்ல, அனுப்பறேன்.

குசும்பர் : அவ்வ்வ்... நோ மர்டர் வெறி பாவம் சின்ன குழந்தை...

கவி : ஹல்லோ, என் புள்ள என் பாட்டை கேட்டுத்தான் தூங்குவான்

குசும்பர் : ரைட்டு! இப்ப புரியுது ஏன் இப்படி கருப்பா ஆனான் தம்பின்னு !

கவி:  ...இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், பாட்டு பாடறத்துக்கும் கருப்புக்கும் என்ன சம்பந்தம்??

குசும்பர் : வாங்க வாங்க..இதுக்காகத்தான் வெயிட்டிங், உங்க பாட்டு கேட்பது கரண்டு ஒயரை புடிப்பதுக்கு சமம். அப்படி கரண்டு ஒயர புடிச்சா என்ன ஆவோம்??

கவி : அய்ய அய்ய அய்ய.ன்ஏ...

குசும்பர் : ஏங்க தினம் தேடி வந்து பல்பு வாங்கிட்டு போறீங்க...?!!

*******************

கவி : எதிர்ல வந்த பொண்ணை பாத்தியாடா?

நவீன் : ம்ம் ம்ம் பாத்தேன்..

கவி : அதானே...!! அந்த மாதிரி பொண்ணை பாத்துத்தான் உனக்கு கல்யாணம் செய்ய போறேன்..

நவீன் : அய்யோஓஒ...யம்மாஆஆஆ ஏன்ம்மா...சரியான கன்ட்ரி ஃபிகர், நான் வீட்டை விட்டு ஓடிடுவேன்....

கவி : ஹை நிஜம்மாவா? .சரி நீ ஒடு, நான் உன்னை துரத்தி பிடிக்கிறேன்.. .. ஓடிப்பிடிச்சி விளையாடி ரொம்ப வருஷம் ஆச்சிடா..

நவீன் : அம்மாஆஆஆ. .ஐம் சிரீயஸ்..

கவி : அட நான் கூட சீரியஸ் தாண்டா. .நிஜம்மாவே ரொம்ப வருஷமா ஓடிப்பிடிச்சி விளையாடலடா... :((

நவீன் : கிர்ர்ர்ர்ர்... :(
 *****************

சந்தோஷ் : கார் வாங்கினா நேனோ வாங்குங்க.. நல்ல மூவிங் ல இருக்கு..

கவி : நவீனா சந்தோஷ் நம்மளை நேனோ வாங்க சொல்றாங்கடா...

நவீன் : நீ மட்டும் நேனோ வாங்கின.. நம்மவீட்டு ரேஷன் கார்டல என் பேர் இருக்காது சொல்லிட்டேன் !!!.

கவி :  ஹை ஜாலி.... இது தெரிஞ்சி தான் சந்தோஷ் சொல்லி இருக்காங்க போல  .:))  இரு தாங்ஸ் சொல்லிட்டு வரேன்..!!

நவீன் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. !!
***********

நவீன் : யம்மா உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கேன், என் ரூமுக்கு வந்து நோண்டாதன்னு.. இங்க என்ன பண்ற நீ.. போ வெளிய.....ம்ம்ம்.. போ....

கவி : .......................

நவீன் : உன்னைத்தாம்மா.. .காது கேக்கல. .வெளியில போ....

கவி: .........................

நவீன்:.. எஸ்கியூஸ்மீ... கேன் யூ ஹியர் மீ, நான் உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்....வெளியில போ...

கவி : எனக்கு தமிழ், இங்லீஷ் எதுவும் தெரியாது.. I know only French.!!

நவீன் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!நிறைய வேலை.. நடுவே இதுவும்..

காலை எழுந்ததிலிருந்து தீபாவளி வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன, முறுக்கை பிழிந்துவிட்டு நடுவே நடுவே கணினியில் கொஞ்சம் வேலைப்பார்த்துகொண்டே இருந்தேன். முறுக்கு முடிந்து, தட்டை, நடுவே பாதுஷா, ஜாமுன்..என்று நடந்து முடிந்தது.

தீபாவளி நோன்பு , மாமியார் எப்படி செய்தார்கள் என்பதை அச்சு பிசுகாமல் காப்பி அடிக்கமுடியவில்லை, எனக்கு பிடித்தமாதிரி அவர்களுக்கும் கஷ்டம் இல்லாமல் செய்ய பழகி வருடங்கள் ஆகிவிட்டன. தீபாவளி நோன்பு க்கு ஒன்றும் அதிக வேலை இல்லையென்றாலும், நாளை முழுதும், இட்லி, தோசை தான். அதனால் இட்லி மாவு ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

நடுவே வந்த போது அய்யனார் கதையை படித்தேன்... ஏதேதோ சிந்தனைகள், நீ ஆண், நான் பெண் என்ற எண்ணங்களோடே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. யாரிடமும் இந்த வித்தியாசம் இல்லாமல், நீ மனிதன் நானும் மனிதன் என்று எளிதாக பேசிவிட முடிவதில்லை. ரொம்ப தெளிவான மனிதர்கள் என்னை சுற்றியில்லை என்று தோன்றியது. எல்லோருக்கும் என்னையும் சேர்ந்து நிறைய வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நமக்காக இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காக.

நண்பர் ஒருவரிடத்தில் இந்த வித்தியாசம் இல்லாமல் பேசுவேன் தான், இருவருக்கும் அந்த பிரஞ்ஞை பலநேரம் இருப்பதில்லை, இதற்கு  காரணம் தெளிவு என்று சொல்லிவிட முடியாது, அதே சமயம் ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருப்பதால், எளிதாக பலவற்றை பேசிவிட முடியும். அவை பிறகு மண்டையில் இருப்பதே இல்லை, மறைந்துவிடும். என்னுடன் பேசி அவரும் அப்படி ஆகிவிட்டாரா இல்லை அவருடன் பேசி நான் அப்படி ஆகிவிட்டேனா தெரியவில்லை.

தட்டை வெந்துக்கொண்டு இருக்கிறது, கிரைண்டர் ஓடும் சத்தம், ஷகிராவின் "வக்கா வக்கா" பாட்டை நினைவுப்படுத்துகிறது. நடுவே "கபடி கபடி" என்ற விளையாட்டில் சொல்லும் பாட்டும் நினைவில் வந்து செல்கிறது. தட்டையை பதமாக எடுக்க வேண்டும், கிரைண்டரில் மாவை தள்ளிவிடவேண்டும்,. நடுவே மீண்டும் ஆண் ஏன் தன்னை எப்போதும் தான் ஆண் என்று ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறான் என்ற கேள்வி விழுந்தது.

அதிகம் யோசிக்கல, வீட்டுக்காரருக்கு ஃபோன் செய்து சீக்கிரம் வர சொல்லனும், கடைக்கு போகனும், இன்னமும் டைலரிடம் கொடுத்த துணி வாங்கவில்லை. நவீன் பட்டாசு வேண்டும் என கேட்கவில்லை, ஆனால் போனவருடம் மிச்சமானதை கொண்டு போய் காயவைத்துவிட்டு வந்தான். செய்த எதையும் நன்றாக இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால் சாப்பிட்டான். முறுக்கில் கொஞ்சம் உப்பு "ஏத்து" என்றான். :) என்ன மொழியோ இவையெல்லாம் தெரியல. நாங்கள் வீட்டில் பேசாத ஒரு மொழி. :)

நேற்று இரவில் இருந்து காதில் கம்மல் போடாமல் இருக்கிறேன். பெரிய விஷயமா? என்னமோ என் கணவர் அது ரொம்பவும் பழசாக இருக்கிறது என்று சொன்னார், உடனே அவரெதிரில் கழட்டியது, வேறு எடுத்து போட த்தோன்றாத மனநிலை, இல்லை, காலையில் எழுந்ததிலிருந்து என் முகத்தை நான் கண்ணாடியில் பார்க்கவில்லை.

இப்போது அவர் வருவதற்குள் போட்டுவிட வேண்டும் இல்லையேல் அதற்காக ஒரு சண்டை வர வாய்பிருக்கிறது..

தீபாவளி ஒரு நாளாக ஆகிவிட்டது. மற்றுமொரு நாள். :)) பல வேலைகள் கூடுதலாக செய்ய வேண்டிய ஒரு நாள்.. .. இன்னும் தொடரும் வேலைகளோடு, இந்த சிந்தனைகளையும் ..தொடர...போகனும்... :
.
அணில் குட்டி அனிதா : வெயில் ல தான் பலருக்கு பிரச்சனை.. அம்மணிக்கு பலகாரம் செய்தா க்கூட பிரச்சனை போலவே... :( ம்ம்ம்..

பீட்டர் தாத்ஸ் : Many Deepavali festivals have come and gone. Yet the hearts of the vast majority are as dark as the night of the new moon. The house is lit with lamps, but the heart is full of the darkness of ignorance. O man! wake up from the slumber of ignorance. Realize the constant and eternal light of the Soul which neither rises nor sets, through meditation and deep enquiry.