மனதின் ஆவேசங்கள்...மெளனப்புலம்பல்களாக…-2

முன்னரே இரண்டு பதிவுகளில் மனதின் மெளனப் போராட்டாங்களை பற்றி எழுதியாயிற்று..
மனதும் அறிவும் அசைபோடும் நேரங்கள்-
மனசின்ஆவேசங்கள்…மெளனப்புலம்பல்களாக…

ஆனால் இப்படிப்பட்ட போராட்டங்களுக்கு முடிவு இல்லை என்றே படுகிறது.. அப்படி ஒரு முடிவு தேவை என்று நான் நினைக்கும் பட்சத்தில் எல்லாம், கெளதம புத்தர் என்னவோ எனக்கு நினைவுக்கு வருகிறார். அவரை போலவே ஒரு ராத்தியில் ஓடி போய் ஒரு மரத்திற்கு கீழ் அமர்ந்து கொள்ளலாமா? ஆனால் அடுத்த வினாடி எழும் கேள்வி - எப்படி அவரால் தன் மனைவி யசோதராவையும், குழந்தை ராகுலா' வையும் விட்டு விட்டு துறவு போக முடிந்தது ..?!! எத்தனை சுயநலம் அவருக்கு என்றே தோன்றுகிறது. அவரின் பக்க நியாயங்கள் ஆயிரம் இருக்கட்டுமே... ஏன் அவரின் மனைவி மற்றும் குழந்தையை பற்றி அவர் யோசிக்கவே இல்லை? என்ன மனிதர் இவர்?

துறவு என்பது எத்தனை எளிதானதாக வேண்டுமானால் அவருக்கு இருந்துவிட்டு போகட்டும் அதற்கான காரணம் ஒரே ஒரு முறை அவர் ஏழ்மையை கண்ணால் பார்த்தது என்று தானே அவரின் கதைகள் சொல்லுகின்றன. எத்தனையோ துயருக்கு நடுவில், நம் வாழ்க்கையை நாம் நடத்திச்சென்றுக்கொண்டு தான் இருக்கிறோம். இவரின் சொந்த முடிவுகளுக்காக தன் குடும்பத்தினரை துயரத்தில் விட்டது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை. இவரை போல் எல்லோரும் ஒரு முடிவு எடுக்க ஆரம்பித்து இருந்தால் நம்மிடையே எத்தனை கோடி புதிய மதங்கள் உருவாகி இருக்கும்?!

மனதில் இருக்கும் இப்படிப்பட்ட முடிவில்லாத கேள்விகளுக்கு நாமே விடைத்தேடி அலையும் போது மனதும் அறிவும் போடும் சண்டையினை கூர்ந்து கவனிக்கும் போது அத்தனையும் மெளனத்தில் நடக்கும் பெரிய யுத்தமாகவே இருக்கிறது. தலை பாராமாகி போகிறது.....

"இன்னைக்கு செத்தால் நாளைக்கு பால்" இது தான் மனித வாழ்க்கையின் நிச்சயம் என்ற போதிலும் அதற்குள் நம்மிடையே எத்தனை எத்தனை

மன வேறுபாடுகள்
சண்டைகள்
நீயா, நானா என்ற போட்டி
நீ அறிவாளியா நான் அறிவாளியா
நீ ஜெயிப்பதா நான் ஜெயிப்பதா என்ற கேள்வி
உன்னை விடவும் நான் சிறந்தவன்/ள் என்று காட்டிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் தேவையற்ற முயற்சிகள்
ஒருவரை ஒருவர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புண்படுத்திக்கொள்ளுதல்
ஆத்திரம்
தான் என்ற அகங்காரம்
விட்டுக்கொடுத்தல் என்பதே மறந்து போகும் கோபங்கள்
ஆழ்ந்த மெளனங்கள்
அதனால் எழும் கோபங்களும், புலம்பல்களும்
பணமும் அதற்கான முக்கியத்துவமும்
சுயநலமான முடிவுகள்

என்று நம்மின் எல்லா எதிர்மறையும் வெளியில் வரவைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்துக்கொள்கிறோம்.

வாழ்க்கை என்ற இந்த சின்ன வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வந்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம், நில் என்றால் வாழ்க்கை நின்றுவிடுவதில்லை. போ என்றாலும் சென்று விடுவதில்லை. கடிவாளம் இல்லாத குதிரை என்று சொல்லலாமா? .... இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கோடிட்டு வரைந்து அதன் வழியே நடக்க முடியுமா? முடியும் என்றாலும் அது அத்தனை எளிதானதா? போகிற போக்கில் போகட்டும், நாமும் உடன் செல்வோம் என்று செல்லலாமா? அப்படி சென்றால் நம் எதிர்ப்பார்ப்புகள், சந்தோஷங்களை அடைய முடியுமா? எதிர்ப்பார்ப்புகளுக்கும், சந்தோஷத்திற்கும் எல்லைகள் உண்டா? அந்த எல்லைகளை நிர்ணயிப்பது யார்? நாமா? எதிராளியா? நாமாக இருந்தால் கட்டும் படுத்தலாம், அதிகவும் படுத்தலாம், ஆனால் எதிராளியின் எதிர்ப்பார்ப்பாக இருந்துவிட்டால்...?!! மிஞ்சி நிற்கும் கேள்வி இது.. விடை தெரியா கேள்வி இது.. அதை அவர் பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிடலாமா? விட்டுவிட்டு வந்துவிட்டால்...... .எதிராளியின் நினைவுகளையும் விட்டுவிட வேண்டுமல்லவா?

ஓ மனமே!! ஏன் அதை செய்ய மறுக்கிறாய்? கொஞ்சமாக சுயநலமாக இருந்துதான் பாரேன் என்று உன்னை எத்தனை கெஞ்சினாலும் இன்னமும் உன்னைத்தவிர மற்றவை கவனிக்கிறாயே .... எங்கே செல்கிறது உன் பாதை.. கோடிடாத... குறிக்கோள் இல்லாத..... ஏதோ நினைவலைகளின் பின்னால்... கட்டுப்பாடு இல்லாது ஓடும் உன் பாதங்களை நீயே இழுத்து நிறுத்திவிடு, நிறுத்திவிடாதே மண்ணுக்குள் புதைத்து விடு. புதைத்தால் மட்டுமே நகர்ந்து போகாமல் அங்கேயே இருக்கும்..

இப்படித்தான் யுத்தங்கள் மண்ணில் புதையும் வரை தொடர்கிறது.
மனிதனின் சந்தோஷம் எதில் இருக்கிறது? ஒருவருக்கு பிடித்த விஷயத்தை அவர் மனம் நினைக்கின்ற விஷயத்தை அறிவின் துணையுடன் முடித்துவிடும் போது கிடைக்கிறது. கிடைக்காத பட்சத்தில், நிறைவேறாத நேரங்களில் தான் கேள்வியும் பதிலும் மாறி மாறி வருகிறது.

எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு, தூங்கினோமா, எழுந்தோமா, சாப்பிட்டோமா, வேலைக்கு சென்றோமா, சம்பாதித்தோமா, அரட்டை அடித்தோமா, ஊரை சுற்றினோமா, சினிமா பார்த்தோமா, சண்டை போட்டோம்மா, இன்று நாம் சந்திக்கும் புதிய மனிதரிடம் உதட்டோர புன்னகையோடு பேசினோமா... கிரிக்கெட் பார்த்தோமா....கிண்டல் அடித்தோம்மா... என்று..இதற்கு மேல் என்ன இருக்கிறது வாழ்க்கையில்.. சரிதானே?

தினமும் நம்மை நம் வாழ்க்கையின் கையில் ஒப்படைத்து விட்டு, இப்படி ஓய்வாக இருந்தால்............

இருக்கமுடியாமல் போகும் போது தான்....... திரும்பவும் இந்த பதிவின் ஆரம்பமே இதன் தொடர்ச்சி............

அணில் குட்டி அனிதா :..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வெயக்காலம் அதுவுமா.. இவிங்களுக்கு தான் கழண்டு போச்சி சரி. .அதுக்குன்னு... அதை அப்படியே வெளியில காட்டிக்கனும்ம்மாஆஅ???? முடியல தாயீஈஈஈஈ... தயவுசெய்து.. .இந்த மாதிரி போஸ்ட் இனிமே எழுத மாட்டேன்னு எனக்கு பிராமிஸ் போடுங்க கவி. .அப்பத்தான் நான் இங்கே இருப்பேன்.. இல்லன்னா. .நான் பப்பு கூட ஜாயின்ண்டு...

பீட்டர் தாத்ஸ் : Whatever you hold in your mind will tend to occur in your life. If you continue to believe as you have always believed, you will continue to act as you have always acted. If you continue to act as you have always acted, you will continue to get what you have always gotten. If you want different results in your life or your work, all you have to do is change your mind.

சிக்ஸ் பேக் - (Six Pack) வில்லிகளாக மாறிட்டாங்களோ!!

அணில் குட்டி அனிதா : அண்ணனுங்க, அக்காங்க யாரும் யாரும் டென்ஜன் ஆகப்பிடாது, நாட்டுல நடக்கறத அப்படியே புட்டு புட்டு வைக்கிறேன் .... ஏதோ என்னால முடிஞ்சது..

ஒரு வருஷம் முன்ன வரைக்கும் நம்ம அக்காஸ் எல்லாரும் அவிங்க கல்யாணம் பண்ணிக்க போறவரு எப்படி இருக்கனும்னு நினைச்சாங்கன்னா...

* ஐடி கம்பெனி யில் ஒரு நல்ல வேலை,
* குறைந்தபட்சம் 50 -70 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம்,
* சொந்த வீடு, மாமியார் , நாத்தனார் உடன் இருக்கக்கூடாது,
* பிக்கல் பிடுங்கல் இல்லாத தனிக்குடித்தனம்,
* ஆடம்பரமான வாழ்க்கை -

ஆனா இப்ப இம்புட்டும் சேர்த்து.... "சிக்ஸு பேக்" கும் வேணுமாம்.. அதுக்கு பாவம் நம்ம அண்ணனுங்க எங்க போறது......?!!

முதல்ல அண்ணன்களுக்கு "சிக்ஸ் பேக்" னா என்னான்னு தெரியுமான்னு தெரியல.. சரி அதுக்காக தான் இந்த போட்டோ...ஹி ஹி ஹி....ஆனா நம்ம அண்ணனுங்க கிட்ட வேற ஒரு சிக்ஸ் பேக் எப்பவும் கைவசம் ... இது இருக்க வரை அண்ணங்களை யாரும் அசச்சிக்க முடியாதில்ல..! ஆனா என்ன கல்யாணம் யாருக்கும் இந்த ஜென்மத்தில ஆக போறத்தில்லை ன்னு மட்டும் தெளிவா எனக்கு தெரிஞ்சி போச்சி.. :)


ஆனாலும் அக்காங்கங்க எல்லாம் திடீர்னு வில்லிகளாக மாறிட்ட மாதிரியே தெரியுது எனக்கு..

இந்த வில்லிகளை சமாளிக்க அண்ணன்களுக்கு ஒரு எக்ஸ்ர்ஸைசு விடியோ... அண்ணங்களா ஜிம்'முக்கு போக வேண்டாம், வூட்டுலேயே செய்ங்க... ஏன் ஆபிஸ்ல மேனேஜர் ரூம் ல போய் செய்ங்க.. சீக்கிரம் பிரோமோஷன் கிடைக்கும்..
பீட்டர் தாத்ஸ் :- A few beers short of a six-pack


ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாமா?

ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாமா? அதுவும் நம் குழந்தை ஒன்று இருக்கும் போது? ஆகாயநதி அம்மாக்கள் பதிவில் என்னுடைய கன்னத்தில் முத்தமிட்டால் என்ற பதிவை படித்தபின் குழம்பி போய் கேட்டு இருக்கிறார்.

என்ன சொல்லுவது? சரி அவருக்கு அங்கு பதில் சொல்லுவதை விடவும், தனியாக பதிவு போடுவது சரியென்று பட்டது. பொதுவாக குழந்தை இல்லாதவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் போது எந்த பிரச்சனைகளும் வருவதற்கு வாய்பில்லை என்றே நினைக்கிறேன். ஒரே குழந்தையாக இருக்கும், அந்த குழந்தையின் மேல் தனி கவனம் செலுத்தி வளர்ப்பார்கள்.

நம்மில் பலருக்கு உடனே தோன்றக்கூடிய சந்தேகம், இப்படி எடுத்து வளர்க்கும் போது சொந்தங்கள் ஏதும் சொல்வார்களா? அந்த குழந்தையை தனியாக பிரித்து பார்ப்பார்களோ, அதனால் அந்த குழந்தை மனதளவில் பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் வரும். உண்மையாக இருந்தாலும், குழந்தைகள் இல்லாதவர்கள், அப்படி ஒரு குழந்தையை தத்து எடுக்கும் வளர்க்கும் போது முதுகுக்கு பின்னால் என்ன வேண்டுமானாலும் பேசினாலும் நேரில் கண்டிப்பாக அப்படி எதுவும் யாரும் சட்டென்று சொல்லிவிடவும், நடந்து க்கொள்ளவும் மாட்டார்கள். ஒன்று குழந்தைகள் இல்லாதவர்கள் வருத்தப்படுவார்கள் என்பதும், இரண்டாவது, அந்த குழந்தையால் அவர்களுக்கு கிடைத்திருக்கும் சந்தோஷமும் காரணங்களாக இருக்கும்.

அடுத்து சொந்த பிரச்சனைக்கு வரலாம், நமக்கு முன்னமே ஒரு குழந்தை இருந்து, இரண்டாவதாக ஆதரவற்ற குழந்தையை எடுத்து வளர்க்க முற்படும்போது நாம் யோசிக்க வேண்டியவை

1. சரி சமமாக அந்த குழந்தையை நடத்தும் அளவிற்கு நமக்கும், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்ல எண்ணங்களும், முதிர்ச்சியும் இருக்க வேண்டும். குறிப்பாக நம் பெற்றோருக்கு இருக்க வேண்டும்.

நான் எந்த வீட்டிற்கும் தத்து குழந்தையாக சென்றது இல்லை, ஆனால் அப்பாவும் தாத்தாவும் இறந்த பிறகு என்னை சொந்தங்கள் வீட்டிற்கு அனுப்பி தங்க வைத்தார்கள். அண்ணன் மகளாக, தங்கை மகளாக சென்று தங்கியிருக்கிறேன். குழந்தையாக அங்கே நான் எப்படி நடத்தப்பட்டேன் என்பது இன்னும் பசுமரத்து ஆணி போல் என் நெஞ்சில் இருக்கிறது. அவர்களின் சொந்த குழந்தைகளை போன்று என்னை அவர்கள் நடத்தியது இல்லை.

சில உதாரணங்கள். சாப்பிட ஏதாவது பலகாரம் வாங்கி வந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு போக த்தான் எனக்கு கொடுப்பார்கள். சில நேரங்களில் அவற்றை மறைத்து வைத்து கொடுப்பதை கூட பார்த்து இருக்கிறேன். சாப்பாடும் அப்படித்தான், தன் குழந்தைகள் விருப்பத்திற்கு செய்வார்கள், என்னை அப்படி கேட்டு செய்ததும் இல்லை, சமமான உணவை கொடுத்ததும் இல்லை. அதை பார்த்து பார்த்து நான் என் எதிர்பார்ப்புகளை அந்த வயதிலேயே குறைத்துக்கொண்டேன். அடுத்து உடைகள், அதுவும் எனக்கென்று ஒரு பட்ஜெட் வைத்து இருப்பார்கள். :) அவர்கள் குழந்தைகளுக்கு அப்படி எதுவும் பட்ஜெட் இருக்காது. என்ன பணம் சொல்லுகிறார்களோ அந்த அளவில் உடைகளை செலக்ட் செய்ய பழக்கிக்கொண்டேன். சில சமயம் உனக்கு இப்போது செய்ய முடியவில்லை என்றும் சொல்லுவார்கள், நானும் சரி பரவாயில்லை என்று சொல்லுவேன். வீட்டு வேலைகளும் எனக்கென்று கொடுத்துவிடுவார்கள். அவர்கள் குழந்தைகளை குழந்தையாக பார்ப்பார்கள், ஆனால் என்னை அப்படி பார்க்க மறந்துவிடுவார்கள். எல்லாவற்றிக்கும் மேல் என்னை ஒரு பாரமாக நினைத்தார்கள், அதற்கு காரணமாக நான் நினைப்பது , அவர்களின் வருமானத்திற்கு நான் அவர்களுக்கு அதிகபடியாக ஒரு ஆள். ஒரு ஆள் வீட்டில் அதிகமானால், சாப்பாடு முதற்கொண்டு எல்லாமே பட்ஜெட் டில் அதிகமாகும், அதனால் ஏற்படும் கஷ்டம், கோபம் அப்படியே என் மேல் வெறுப்பாகவும், கோபமாகவும் திரும்பும். அதனால் என்னுடைய தேவைகள் என்று எதையுமே கேட்காமல் என்னை நானே கட்டுப்படுத்திக்கொள்ளவும், இருப்பதை வைத்தே என் தினப்படி வாழ்க்கையை ஓட்டவும் கற்றுக்கொண்டேன். என் ஆயாவிடம் கூட அப்படித்தான் இருப்பேன்,. நமக்கு அவர்கள் செய்வது பெரிய விஷயம், இதில் என்னுடைய விருப்பம் என்று எதையும் கேட்கக்கூடாது என்று அவர்கள் செய்வதை சரி என்று சொல்ல பழக்கிக்கொண்டேன்.

இப்படி என் இயல்புக்கு அப்பால், மற்றவர்களை கவனித்து என்னை மாற்றிக்கொண்டதால், என்னுடைய விருப்பங்கள் எல்லாமே பின்னுக்கு தள்ளப்பட்டது, அதனால் கிடைக்கும் வெறுமையும், பாதிப்பும் இன்றும் எனக்கு இருக்கிறது என்பதற்கு யார் காரணம் என்று நீங்களே முடிவு செய்து க்கொள்ளலாம்.

குழந்தைகள் எல்லாமே குழந்தைகள் தான், அவர்களை ஒரே மாதிரியாக நம்மால் நடத்தமுடியவில்லை என்றால், அது கண்டிப்பாக அந்த குழந்தையை மனதளவில் பாதிக்கும். அந்த பாதிப்பு பாஸிட்டிவாகவும் மாறலாம், நெகடிவ்வாகவும் மாறலாம்.

2. பெண் குழந்தை என்னும் போது அந்த குழந்தைக்கு படிப்பை தவிர, கல்யாணம், அதற்கு பின் அந்த குழந்தைக்கு செய்ய வேண்டிய எல்லாமே நாம் தான் செய்ய வேண்டும், அதனால், அதன் கணக்கு வழக்குகளை போட்டு பார்த்து , அந்த குழந்தையின் மனநிறைவுக்கு நம்மால் அவற்றை வாழ்நாள் முழுதும் செய்ய முடியுமா என்று யோசித்துக்கொள்ளவேண்டும்.

3. அடுத்து சொத்து, நாம் சேர்த்து வைக்கும் நம்முடைய சொத்தை நம் குழந்தைக்கும், வளர்ப்பு குழந்தைக்கும் சரி சமமாக கொடுக்க நம் மனம் இடம் கொடுக்குமா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

4. நம் குழந்தைக்கு, இன்னொரு குழந்தை வளர்ப்பு குழந்தை என்று தெரிய வந்தால், வரும் விளைவுகளை சந்திக்க தயாராகவும், அதனால் வளர்ப்பு குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளை யோசித்து ப்பார்க்கவேண்டும்

5. சொந்த பந்தங்களை பற்றி இந்த விஷயத்தில் கவலைப்படவேண்டியது இல்லை. நாம் எல்லாவற்றிலும் சரியாக இருக்கும் பட்சத்தில், எப்படி அவர்கள் பிரச்சனை செய்தாலும், அவற்றை சரி செய்துவிட நம்மால் முடியும்.

6. நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத ஏற்ற தாழ்வுகளை நாமும், நம் குழந்தையும் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் மற்றொரு குழந்தையை அழைத்து வந்து அந்த குழந்தையை கஷ்டப்பட வைக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை.

இது நேரில் நான் பார்த்த ஒரு விஷயம், நன்றாக போய் கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் அந்த குடும்ப தலைவரின் தவறான சகவாசத்தினால், சொத்து சுகம் இழந்து நடுவீதியில் நிற்க நேரிட்டது, அப்போது அந்த குடும்பத்தலைவி எங்களிடம் சொன்னது, இந்த வளர்ப்பு குழந்தை மட்டும் இல்லை என்றால், எப்படியோ ஒரு வேலை சாப்பிட்டு நான் பிழைத்துக்கொள்வேன். இப்போது இந்த குழந்தை எனக்கு பாரமாக உள்ளது என்றார்கள். இது அவர்கள் சொந்த குழந்தையாக இருந்தால் சொல்லி இருப்பார்களா என்றால் நிச்சயமாக இருக்காது.

ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகள் அவர்களை போலவே சக குழந்தைகளுடன் வளரும் போது அவர்களுக்கு எந்த காம்ளக்ஸும் இருக்காது. ஆனால் இப்படி வெளியில் வரும் போது தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து கஷ்டப்பட்டு கொள்வார்கள், எனக்கு தெரிந்து வெளியிலும் சொல்லமாட்டார்கள். நான் ஒரு முறை தாம்பரத்தில் உள்ள ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு சென்றிருந்தேன். அங்கே வளரும் குழந்தைகள், நன்றாக படித்து மிக பெரிய அளவில், அதிகாரத்திலும், வேலையிலும் இருப்பதை பார்த்தேன். அதிலும் அந்த குழந்தைகளுக்கு அவர்கள் நல்ல இடமாக பார்த்து திருமணம் கூட செய்து வைக்கிறார்கள், எனக்கு அங்கு சென்று அவர்களுடன் நேரம் செலவிட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது, அவர்களுக்கு என்ற வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்.

ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகளை எடுத்து வந்து வளர்த்து, அவர்களும் கஷ்டப்பட்டு நாமும் கஷ்டப்பட்டு, ஒரு நாள் இல்லை ஒரு நாள், சே இந்த குழந்தையை ஏன் தான் தத்து எடுத்தோமோ என்று நாமும், ஏன் தான் இங்கு வந்தோமோ என்று அந்த குழந்தையும் நினைக்கும் படி இல்லாமல் இருந்தால் நலம். எடுத்து வளர்ப்பதை விடவும், தனியாக ஒன்று என்ன நிறைய குழந்தைகளுக்கு பணம் கொடுத்து அவர்களுக்கு உதவலாம், பிறந்தநாள், பண்டிகை நாட்களில் அவர்களுடன் சென்று நேரத்தை செலவிடலாம், செலவிட்டு பாருங்கள் எத்தனை சந்தோஷப்படுகிறார்கள் என்று உங்கள் மனதளவில் உணர்வீர்கள்.

அணில் குட்டி அனிதா : ம்ம்.. என்ன சொல்றீங்க.... வேண்டாம் னு சொல்றீங்களா.. ஏன் கவி.. ஏதோ ஒரு குழந்தைக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சா ..உங்களுக்கு பொறுக்கலையா? ..

பீட்டர் தாத்ஸ் : “Poetry is an orphan of silence. The words never quite equal the experience behind them.”

இதயத்தின் துடிப்பு.....

முன் குறிப்பு : அவ்வ்வ்வ்!! என்ன கொடுமைங்க இது..!! நான் என்னவோ இதயத்துடிப்பின் வலியை எழுதினால் எல்லாரும் காதல் கவிதை ன்னு நினைச்சிக்கிறாங்க... ஏங்க இப்படி தப்பு தப்பா புரிஞ்சிக்கிறீங்க. .தலை வலித்தால் தலை பிச்சி எடுத்துடுலாம் போல இருக்கும் .அப்படித்தான்.. இதயமும்.. ஒரு உறுப்பாக கருதி எழுதப்பட்டது..

எழுத்தை வைத்து தவறாக நினைப்பது என்பது இதுதானோஓஓஓஓஓஓஓஒ !!
.. ..
.. ..
.. ..
.. ..
.. ..


கடிகாரமுள்ளாக
என் கையில்
நீ
கிடைத்தால்
எளிதாக
நிறுத்திவிடுவேன்.

உன்
ஒவ்வொரு
துடிப்பும்
எனக்கு
வலிக்கிறது
நீயாக
நிறுத்திவிடு

என்
உடலிலிருந்து
உன்னை
தனியே
பிய்த்து
எடுத்து

நான்
இல்லாமல்

நீ
துடித்து
நிற்பதை
பார்க்க
ஆசை...


அணில் குட்டி அனிதா :- ஹய்யோ யம்மாஆஆ....இது என்னா ரத்த காட்டேறியா இருக்குமோ... ..ஹார்ட்டை அப்படியே புடுங்கி வெளியில எடுத்து காட்டறாங்க.. அவ்வ்வ்வ்வ்! இனிமே நான் இங்க இருக்கமாட்டேன்.. எனக்கு பேய் பிசாசு ரத்த காட்டேறி கூட இருக்காப்பலேயே இருக்கே... யாராச்சும் வந்து என்னை காப்பாத்துங்க..

பீட்டர் தாத்ஸ் : “Life is one of those precious fleeting gifts, and everything can change in a heartbeat.”

ஒரு வேண்டுகோள்... .

என் பெயரை பயன்படுத்தி, ப்ளாக் நண்பர்களிடம் உதவி கேட்டு பணம் வாங்குவதாக எனக்கு ஈமெயில் வந்து இருந்தது, இது இரண்டாவது முறை. கொடுத்தவரும், என் பெயரை பயன்படுத்தியதால், யோசிக்காமல் கொடுத்தும் இருக்கிறார். இது எனக்கு தெரியாமல் நடந்து இருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னிக்கவும்.

இப்படி திரும்பவும் எதுவும் நடக்காமல் இருக்கவே இந்த வேண்டுகோள். என் பெயரை பயன்படுத்தி, யாராவது உதவி கேட்டு வந்தால், என்னிடம் கேட்டுவிட்டு பண உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ஈமெயில் முகவரி அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். தயவுசெய்து, என்னை ஒரு முறை கேட்டு விட்டு கொடுங்கள். ஏனென்றால் பண உதவி என்பது சரியான இடத்திற்கு, சரியான நேரத்தில், சரியான முறையில் பயன்படவேண்டும். யாரும் தவறாக என் பெயரை உபயோகிக்க கூடாது என்பதால் இந்த வேண்டுகோள். இரண்டு முறையும் தவறாக தன் சுயநலத்திற்காக கஷ்டம் என்று சொல்லி ஏமாற்றி இருக்கிறார்கள்.

தயவுசெய்து யாரும் என் பெயரை சொல்லி கேட்பதால் ஏமாந்து பண உதவி அல்லது பிற உதவிகளை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரின் புரிதலுக்கும் மிக்க நன்றி

எவனோ ஒருவன்....

என்னை சுற்றி உள்ள நண்பர்கள் அனைவரும் எனக்கு ஒரு வரப்பிரசாதம். விலகி விலகி தவிர்த்து விட்டு போகும் என் இயல்பை பொருட்படுத்தாமல் என் மேல் அன்பு செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி எத்தனை பேருக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். ஒரு நாள் இரு நாள் இல்லை வருடங்களாக, அவர்களின் அக்கறையும், அன்பும் என்னை வியப்படையத்தான் செய்கிறது, அப்படி இருப்பவர்களிடம் கூட இன்னமும் நான் தொடர்ந்து அவர்கள் சொல்லுவதை கேட்டு, நல்ல முறையில் நடந்துக்கொள்வதில்லை என்பது வருத்தமாக த்தான் இருக்கிறது. என்ன செய்வது, யாரிடமும் ஒட்டாத தள்ளி தள்ளி போகும் என் இயல்பை என்னால் பல காரணங்களுக்காக மாற்றிக்கொள்ள முடியவில்லை.இந்த நண்பர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை.

இப்படி வருடங்களாக என் மீது அன்பும், அக்கறையும் உள்ள ஒரு நண்பர் செயகுமார். அவரின் பெயரை குறிப்பிட்டு எழுதுவதை அவர் விரும்புவாரா என்று தெரியவில்லை, ஆனால் குறிப்பிட விரும்புகிறேன். என் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறார், பின்னூட்டம் இடுவதில்லை. ஏனென்று எனக்கு தெரியவில்லை, நானும் கேட்கவில்லை. எனக்கு தேவையான மாரல் சப்போர்ட்’ஐ எப்போதும் நான் கேட்காமலேயே ஈமெயிலில் அனுப்பிக்கொண்டே இருப்பவர், நான் அவற்றை படிக்கிறேனா இல்லையா என்று கூட அவருக்கு தெரியாது. இவை எல்லாம் பலனை எதிர்பார்க்காத அன்பு. [சிங்கு……இப்ப சொல்லிக்கிறேன்... நீங்க அனுப்புகிற எல்லா ஈமெயிலையும் படிச்சிடுவேன் :)]

தொடர்ந்து முதல் ஆளாக என் பதிவுகளை படிப்பது இவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் என் பாடல் பதிவுகளையும் பார்த்து பாடல்களையும் கேட்டு, எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார். "செய்கின்ற வேலையை சரியாக செய்ய வேண்டும், குரல் நன்றாக இருக்கிறது, நல்ல பாடல்களை நன்றாக பயின்று பாடலாமே ஏன் ஏனோ தானோ என்று பதிவிடுகிறீர்கள்? " என்று சொல்லி, அலைபாயுதே படத்தில் வந்த இந்த பாடலையும் (ஆடியோ), மற்றும் பாடல் வரிகளையும் ஈமெயிலில் அனுப்பி இருந்தார்.

ஆனால் அந்த ஈமெயில் கத்திமுனையில் மிரட்டி அனுப்பப்பட்டிருந்தது. ஒழுங்காக, நன்று பயின்று , தரமாக, சரியாக ரிக்கார்ட் செய்து பதிவிட விருப்பமிருந்தால் மட்டுமே இந்த பாடலை நீங்கள் பாடவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார், எனோ தானோ என்று பாடி நல்ல பாடலை கெடுத்து விடாதீர்கள் என்றும் சொல்லி இருந்தார்.

முதல் முறை கேட்டவுடனேயே அவருக்கு நான் அனுப்பிய பதில், ரொம்ப கஷ்டம் பாஸ், நிறைய பிராக்டீஸ் செய்யனும், ரெக்கார்ட் செய்து உங்களுக்கு அனுப்புகிறேன் நீங்கள் சரி என்றால் பதிவிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன். ரிக்கார்ட் செய்து அவருக்கு அனுப்பி, "அவர் தயவுசெய்து பதிவிடாதீர்கள்," என்று சொன்ன பிறகு வேண்டுமென்றே பதிவிடுகிறேன்.. சிங்கு எஸ்கியூஸூமீ…. இதை பதிவிட்டே ஆகனும்னு முடிவு செய்துட்டேன்.. :) (எப்பவும் போலவே சொன்ன பேச்சு கேட்கற பழக்கம் இல்லல..)

இதோ பாடல்…

குரல்: சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
படம்: அலைபாயுதே
இசை: ஏ. ஆர். ரஹ்மான்


evno3.mp3


அணில் குட்டி அனிதா : சிங்கண்ணே உங்களுக்கு இது அவசியமா??? அம்மணி பாட்டுப்பாடி கொல்றது தாங்காம எத்தனையோ பேரு எழுதறதை விட்டுட்டு ஓடிட்டாங்க.. ..ம்ம் எனக்கேன்ன வரவங்க எல்லாம் உங்களைத்தான் கும்ம போறாங்க... வாங்கிக்கோங்க..

பீட்டர் தாத்ஸ் :“Music speaks what cannot be expressed, soothes the mind and gives it rest, heals the heart and makes it whole, flows from heaven to the soul.

ஓம் சிவோ ஹம்...!!

Shivan destiny is our final destination
Lyrics - Vaali
Singer - Vijay Prakash

Hara hara hara hara hara hara hara hara Mahadev
Hara hara hara hara hara hara hara hara Mahadev

Om.
Bhairava Rudraya
Maha Rudraya
Kaala Rudraya
Kalpanta Rudraya
Veera Rudraya
Rudra Rudraya
Gora Rudraya
Aghora Rudraya
Maarthanda Rudraya
Anda Rudraya
Brahmanda Rudraya
Chanda Rudraya
Prachanda Rudraya
Thanda Rudraya
Soora Rudraya
Veera Rudraya
Bhava Rudraya
Bheema Rudraya
Athala Rudraya
Vithala Rudraya
Suthala Rudraya
Mahathala Rudraya
Rasathala Rudraya
Talatala Rudraya
Pathala Rudraya
Namo Namaha

Om Sivoham..
Om Sivoham..
Rudra naamam bajeham..

(
Chorus)Om Sivoham
Om Sivoham
Rudra naamam bajeham

Veera badraya agni nethraya gora samhaaraka
Sakala lokaaya sarva boothaya Sathya saakshatkara
(chorus)Shambo Shambo Sankara

Om Sivoham
Om Sivoham
Rudra naamam bajeham

(Chorus) Hara hara hara hara hara hara hara hara Mahadev

Sri Rudhra manthras..

Namah somaya cha Rudraya cha Namastamraya charunaya cha Nama shangaya cha pashupataye cha Nama ugraya cha bhimaya cha Namo Agrevadhaya cha dure vadhaya cha Namo hantre cha haniyase cha Namo vrukshebhyo harikeshebhyo Nama staraya Namash shambhave cha mayo bhave cha Namah shankaraya cha mayaskaraya cha Namah Shivaya cha shivataraya cha

Anda brammanda koti
Akhila paripaalana
Poorana jagat kaarana sathya deva deva Priya

Vedha vedhartha saara
yagna yagnomaya
Nishchala dushta nigragha
sapta loga samrakshana

Soma soorya agni lochana
Swetha rishaba vaaghana
Soola pani bujanga booshana
tripura naasha nardhana
Yoma kesa mahaasena janaka
pancha vaktra parasu hastha namaha

Om Sivoham
Om Sivoham
Rudra roopam bajeham

Om Sivoham
Om Sivoham
Rudra naamam bajeham

Kaala trikaala nethra trinethra soola trisoola dhaatram
Sathya prabaava divya prakaasha manthra swaroopa mathram
Nishprapanchaadhi nishkalankoham nija poorna bodha ham ham
Gathya Gathmaagam Nithya Bramhogam Swapna Kasogam Hum Hum

Sachit Pramanam Om Om
Moola Pramegyam Om Om
Ayam Bramhasmi Om Om
Aham Bramhasmi Om Om

Gana Gana Gana Gana Gana Gana Gana Gana
Sahasra Kanta Sapta Viharaki

Dama Dama Dama Dama Duma Duma Duma Duma
Siva Damarugha Nadha Viharaki

Om Sivoham
Om Sivoham
Rudra naamam bajeham

Veera badraya agni nethraya gora samhaaraka
Sakala lokaaya sarva boothaya Sathya saakshatkara
(chorus)Shambo Shambo Sankara

உயர் சாதியில் பிறந்த திமிர்

யாருக்கு ??!! என்பது முதல் கேள்வி. FC , BC, MBC, SC, ST இப்படித்தான் நாம் வகைப்படுத்தி பிரிக்கப்பட்டு இருக்கிறோம். இதில் FC பிரிவினருக்கு, அவரை விடவும் மற்றவர்கள் குறைவு என்ற திமிர். அதே போல் BC, க்கு மற்றவர்கள் எல்லோரும் அவரைவிடவும் குறைவு என்ற திமிர், இப்படியே தான் மற்ற சாதி பிரிவினரும் தனக்கு கீழ் உள்ளவர்களை குறைவாக மதிப்பிடுகின்றனர்.

நாம் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருந்தால், இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்திருக்கவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்.

கணினியில் காலம் கழித்துக்கொண்டு நாம் இருந்தாலும் இன்னமும் சந்தில், தெருவில், தோட்டத்தில், புழக்கடையில் உட்கார்ந்து சாப்பிடும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி அவர்களை சாப்பிட வைப்பது உயர் சாதியினர். அவர்களை வீட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை. என்னால் சகித்து க்கொள்ள முடியாத ஒரு பழக்கமாக இதை கருதுகிறேன். ஐயா, அவன் சக மனிதன். நம்மை போன்று ரத்தம், சதை, இதயம், கண்கள் கொண்ட ஒரு மனிதன். விலங்கு அல்ல. ஏன் எத்தனையோ வீடுகளில் நாய்களை கூட வீட்டிற்குள் விடுகிறார்கள், மடியில் வைத்து கொஞ்சுகிறார்கள். இவர்கள் வந்தால் என்ன, உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன.?

சரி எப்படி இந்த உயர் சாதித் திமிர் நம்மிடையே ஆரம்பிக்கிறது. ஆரம்பிக்கும் இடம் முதலில் வீடு தான். சாப்பாடு ஊட்டும் போதே குழந்தைக்கு இதுவும் சேர்த்து ஊட்டிவிடப்படுகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் இந்த FC பிரிவில் இருப்பவர்களுக்கு இருக்கிற திமிர் இருக்கிறதே. .என்னவோ கடவுளிடமிருந்து நேராக இறங்கி வந்தவர்கள் போன்று அவர்கள் நடந்து க்கொள்வதும், அவர்களுக்கு மட்டுமே கடவுள் அதிக அறிவையும், பண்பையும் படிப்பையும் கொடுத்தவிட்ட மாதிரி அவர்கள் நடந்து க்கொள்வது மட்டுமே அல்லாது அவரை விட கீழ் சாதியில் பிறந்தவர்களை கொட்டி கொட்டி நீ இதற்கு மேல் எழுந்துவிடக்கூடாது என்பதில் அதிகம் கவனம் வைப்பதும் சகிக்கமுடியாத ஒரு செயல்.

உயர் சாதியினரால் தனிப்பட்ட முறையில் மிக மிக மோசமாக நான் அடிக்கடி பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதுவும் இந்த அறிவு, படிப்பு, வேலை, திறமை, வாய்ப்புகள் என்று வரும்போது உழைப்பு, நேர்மை என்ற இந்த இரண்டும் இல்லாமல் வெறும் சாமர்த்தியத்தால் மட்டுமே முன்னுக்கு வர முயன்று அதற்காக என்னை முதுகில் குத்திய நிறைய கேடு கெட்ட உயர் சாதியினர் உள்ளனர். அவர்களின் அந்த பல் இளிக்கும் சாமர்த்தியம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது என்பது ஒரு தகுதியின்மையாகவே நினைக்கிறேன். அப்படிப்பட்ட தகுதியும் எனக்கு வேண்டாம் என்றும் நினைக்கிறேன்.

எப்போதும் நேர்மையற்ற முறையில் தன்னை முன்னிலை படுத்தும் இவர்களை பின்னுக்கு தள்ள நேர்மையாக போராடி அப்படிப்பட்டவர்களை கண்டாலே மனிதர்களாக எனக்கு மதிக்க தோன்றவில்லை. நிறைய உதாரணங்கள் என்னால் எடுத்துச்சொல்ல முடியும். அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது அலுவலங்களில். அவர்களை விட அடுத்தவர்கள் முந்தி செல்லுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடிவதில்லை. அதற்காக அவர்கள் எடுக்கும் குறுக்குவழி நடவடிக்கைகள் அருவருப்பை தரக்கூடியவை. என்ன வேண்டுமானலும் சிரித்துக்கொண்டே செய்து முடிக்கும் கேவலமான குணத்தை உடைவர்கள் எனலாம். இந்த சிரிப்பு நம்மை குழித்தோண்டி புதைத்த பின்னும், அந்த குழிக்குள் மேல் நின்று அதற்கு காரணம் அவர்கள் இல்லை என்பது போன்று சிரித்து சிரித்து பேசுவார்கள் பாருங்கள்... தூ என்று முகத்தில் உமிழ தோன்றும்.

அடுத்து வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் இவர்களின் அட்டூழியங்களுக்கு அளவில்லை எனலாம். அதற்கு முக்கியக்காரணம் அதே சாதிப்பிரிவை சேர்ந்த ஒட்டுமொத்த கூட்டமும் அங்கேயே இருக்கும். தங்கள் இனத்தை பார்த்தவுடன் அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பது. அப்படிக்கொடுப்பது மட்டும் இல்லாது நமக்கு திறமை இல்லை என்று சொல்லி வெளியில் அனுப்புவார்கள். வாய்ப்பு கேட்பவனும் ஜால்ரா அடிப்பான், கொடுப்பவனும் ஜால்ரா அடிப்பான். அதை தாண்டி நாம் அங்கு நிற்க வேண்டுமென்றால் பல தியாகங்களை செய்ய வேண்டும். இல்லையேல் பின்னங்கால் வைத்து அப்படியே வந்துவிடவேண்டியதுதான். அதில் முக்கியமானது பல் இளிப்பது.. ... இந்த கருமத்தை எப்படித்தான் இவர்கள் செய்கிறார்கள் என்பது இன்றளவும் எவ்வளவு ஆராய்ச்சி செய்தும் என்னால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

அடுத்து உணவு முறை, இதில் இன்னமும் பத்து பேருக்கும் முன்.. "அசைவ உணவை சாப்பிடும் போது, அய்யோ.. கடவுளே எப்படித்தான் இந்த கருமத்தை எல்லாம் சாப்பிடுகிறீர்களோ.. ?? ச்சேக்..!! வாந்தி வருது " என்று நாம் ஒரு உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே சிரித்துக்கொண்டே சொல்லும் கேவலமான பிறவிகள். நானும் திருப்பி அவர்கள் நிலைக்கு இறங்கி, நீ திங்கும் கொழ கொழ... தயிருஞ்சாதத்தையும், ஊறுகாயை யும் பார்த்தால் எனக்கும் கூட தான் வாந்தி வருகிறது, எப்படித்தான் இதையே தினமும் தின்னு..சூடு சுருணை என்று எதுவுமே இல்லாமல் இருக்கியோ."ன்னு சிரிக்காமல் சொல்லிவிடுவது உண்டு. அப்படி சொல்லாமல் அமைதியாக அவர்களை பொருட்படுத்தாமல் சாப்பிடும் நம்மவர்களும் உண்டு. அல்லது மற்றவர்கள் எதிரில் இப்படி சொல்லும் போது உடம்பு கூசி, நா பேச எழாது அசிங்கப்படுபவர்களும் உண்டு. இப்படி இருக்க விரும்புவதில்லை..

கூழோ..கஞ்சியோ.. இல்லை நிஜமாகவே அது கருமமோ... ஒருவர் உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது எதற்கு அப்படி சொல்லவேண்டும். ஒன்று சாப்பிட்டு முடித்தப்பிறகு அதன் நல்லது /கெட்டதை எடுத்து சொல்லி சொல்லலாம், இல்லை சாப்பிடுவதற்கு முன் சொல்லலாம். அதை செய்ய மாட்டார்கள். .ஏனென்றால் அவர்கள் அறிவுஜீவிகள், உயர் சாதியில் பிறந்த வென்றுகள். முட்டை கலந்த கேக், ஐஸ்கீரிம் சாப்பிடுவார்கள், தனியே அசைவ உணவகம் சென்று ஒரு கைப்பார்ப்பவர்களும் உண்டு, வீட்டிலேயே தனியே பாத்திரம் வைத்து சமைத்து சாப்பிடும் வேஷதாரிகளையும் நேரில் பார்த்து இருக்கிறேன்.

உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, கட்டியிருக்கும் வீடு, படுத்துறங்கும் பாய் முதற்கொண்டு ஒரு கீழ்சாதிக்காரன் செய்தது என்று அறியாதவர்களா? கீழ்சாதிக்காரன் உழைப்பில் , வியர்வையில் தானே அன்றாடம் நீங்கள் சுவாசித்து உயிர்வாழ்கிறீர்கள்? பிறகென்ன.. உங்களைவிடவும் கீழ்சாதிக்காரனுக்கு அறிவு உண்டு, திறமை உண்டு, பண்பு உண்டு, மனிதநேயம் நிறையவே உண்டு. அதை புரிந்து, அவர்களுடன் சேர்ந்து நடந்து பழகுங்கள், நடக்க பிடிக்கவில்லை என்றால், ஓரமாக நின்று ஒதுங்கி நின்று பழகுங்கள்.. இல்லையேல் இடித்து த்தள்ளிக்கொண்ட செல்ல எங்களுக்கும் உங்களை படைத்த அதே ஆண்டவன் நல்ல அறிவையும், ஆரோக்கியத்தையும், உடன் உங்களைவிடவும் நல்ல குணத்தையும் கொடுத்து இருக்கிறார்.

அணில் குட்டி அனிதா :- அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! ரம்பம்பம்ம்ம்ம்..ஆரம்பம்ம்ம்ம்... பம்பம்பம் பேரின்பம்.. 6 , 7 மாசமாச்சி.. அம்மணி நீங்க இப்படி எழுதி... ஆனா..லும் இது ஓவர் சூடு மச்சி...... !!

பீட்டர் தாத்ஸ் :- A community is democratic only when the humblest and weakest person can enjoy the highest civil, economic, and social rights that the biggest and most powerful possess.


வண்ணக்கலவை...

எப்படியோ ஆரம்பித்து எப்படியோ முடிந்துவிட்ட வண்ணக்கலவை இது...
படத்தை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்....

அணில் குட்டி அனிதா :- ம்ஹூம்.. முடியல.. !!

பீட்டர் தாத்ஸ் :- Paintings have a life of their own that derives from the painter's soul.ஓட்டு போடுங்க ப்ளீஸ்

இதுவரை யார் பதிவையும் காப்பி அடித்தது இல்லை. இன்று நாகைசிவா' வின் பதிவை அப்படியே காப்பி எடுத்து பதிவிட்டுள்ளேன். அவரை போல் இவ்வளவு எல்லாம் தெளிவாக எனக்கு எழுத வரலை. சரி இல்லாத மூளையை கசக்கி எழுதுவதற்கு பதிலாக காப்பி அடிப்பது எளிதாக தோன்றியது.

சிலர் என்னுடைய பதிவுகளை நக்கல் செய்ய அவ்வப்போது காப்பி எடுப்பதுண்டு.. அவர்களை முன்னோடியாக கொண்டு ஆனால் ஒரு நல்ல விஷயத்திற்கு சிவா'வின் பதிவை காப்பி அடிக்கலாமே என்று.....

இதோ.....

சிவா'வின்

ஓட்டு போடுங்க ப்ளீஸ் .....


நாளை இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுகள் எப்படி அமைய போகின்றது என்பதற்கு உங்கள் பங்கை அளிக்கும் நாள். என்னத்த வோட்டு போட்டு என்னத்த ஆக போகுது என்று நம்மில் பல என்னத்த கண்ணையாக்கள் உள்ளனர். இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் ஏன் சார் ஒட்டு போடனும் என்று ஆயிரம் காரணங்களை நம்மால் அடுக்க முடிகிறது. ஏன் ஒட்டு போட வேண்டும் என சிறிது சிந்தித்தால் ஆயிரத்து ஒரு காரணங்கள் கிடைக்கும் என்பது நிதர்சனம். அந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளை புறம் தள்ள உங்கள் ஒட்டு அவசியம் என்பது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது.

நம்மளில் பலர் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் - ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை னு சொல்லி சொல்லியே இப்போ வானரங்களை ஆள விட்டு இருக்கிறோம். கோள்(ஒட்டு) எடுத்தால் ஆடும் வானரங்கள் வானரங்கள் இருந்தவர்கள் இன்று பணம் கொடுத்தால் ஒட்டு போடும் வானரங்களாக நம்மை மாற்றி விட்டார்கள். இதை களைய நம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாத ஒட்டுப்பதிவு அவசியம்.

வக்கனையாக பல அரசியல் நிலைப்பாடுகளை அலசி ஆராய்ந்து விட்டு, ஆமாம் நான் ஒருத்தன் ஒரு வோட்டு போட்டு தான் இந்த நாடு மாற போகுதா என்று கூறும் ஒரு கூட்டம் உண்டு இங்கு. 5000 கோடி ஊழல் என்று பத்திரிக்கையில் வந்த தலைப்பை செய்தியை படித்து சார் இந்த நாடு உருபடவே உருப்படாது என்று பக்கத்து இருக்கையில் இருக்கும் சக அலுவலரிடம் சொல்லி விட்டு 500 ரூபாய் வாங்கி கொண்டு கோப்பில் கையெழத்து இடும் ஏதோ ஒரு அரசு ஊழியருக்கும் மேலே உள்ளவர்களுக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை. ஒரு வோட்டு பல வரலாறுகளை புரட்டி போடலாம்.

யாருப்பா வொட்டு போடுற இடத்தை தேடி போய்....... மேற்கொண்டு படிக்க....

முழுசா படிக்க பதிவை நானா எழுதினேன்... போங்க பாஸ்.. அவரோட பதிவுக்கு போய் படிங்க....


! Please Cast your Vote!


என்னைச்சுற்றிலும் எத்தனை இனிப்பானவர்கள் !!

சொல்ல வார்த்தைகள் இல்லை... அத்தனை மகிழ்ச்சியுடன் இன்று இருக்கிறேன்..

பார்வையிடும் பதிவுகள் போடுவதற்கு அவரவருக்கு பிடித்த இனிப்புகள் கேட்டு வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. இது இப்போது என்று இல்லை.. நானும் திருந்தப்போவதில்லை நீங்களும் திருந்தப்போவதில்லை. எதுக்குன்னு கேட்டு டென்ஷன் பண்ணாதீங்க. . பிடித்த இனிப்பு ஒன்று சொல்லுங்கள் ன்னா சொல்லி த்தொலைக்கலாம் இல்லையா..


பாருங்க சிபி'யை "காராபூந்தி" ன்னு சொல்லி இருக்காரு .அது இனிப்பா?? கேட்கிறேன் அது இனிப்பா? ம்ம்.. பால்கோவா தான் அவருக்கு பிடித்தது... புனிதா சொல்லிவிட்டதால் திரும்ப வேறு கேட்டேன் அதற்கு சொன்ன பதில் தான் காராபூந்தி.. ம்ம்.. என்ன சொல்ல..

இப்படி என் உயிரை அடுத்து வாங்கியது வேற யாரு குசும்பன்.. பிடித்த ஸ்வீட் "ஷ்ரேயா......"!! அவ்வ்வ்வ்வ்வ்!! ஏன்ப்பா ஏன்ன்ன்ன்ன்ன்ன்??

அடுத்து ஆயில்ஸ்... சோமாசு..! அப்புறம் வேறு ஏதோ சொன்னார், ஆனால் எனக்கு ஒன்று போதும் என்று சொன்னவுடன்.. "யக்கா பிடிச்ச கிடைச்ச ஒன்னையும் ஒனக்கு கொடுத்துட்டு நான் என்ன செய்ய " என்கிறார்..

ம்ம்ம். புலி... .இவரு நிஜமாவே பிஸ்தா தான்.. எங்க போறேனோ அங்க என்ன இருக்கோ அது பிடிக்கும்.ன்னு " சொன்னாரு.. ஏன்ன்ன்ன் ?? பிடிச்ச ஸ்வீட் பேரு கேட்டா இது பிடிச்சி இருக்குன்னு ஒரே வார்த்தையில உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல தெரியாதா? கையில கால் ல விழுந்து.. அப்புறம் சொன்னது பிஸ்தா ரோல்..

அடுத்து பானிப்பூரி சந்தோஷ்.. பானிப்பூரி யா "ஒவ்வேக்" சொல்லுங்க... சாணி என்ன சயனைட்'ஐ அதுக்குள்ள போட்டு கொடுத்தாலும் அப்படியே ஹார்லிக்ஸ் மாதிரி சாப்பிடுவோம்னு சொன்னவரு இந்த நல்லவரு சரி அவ்வளவு பிடிக்குமேன்னு ஸ்வீட் பேரை கேட்காமல் இதையே எடுத்துக்கிட்டேன்..

அடுத்து குட்டி கண்ணம்மா... "ஒரு ஸ்வீட் கிட்ட ஸ்வீட் டை பத்தி கேட்கலாமா. ?" .ன்னு பதில் சொல்றாங்க.... ! சரி வேணாம்... நான் அழுதுடுவேன்... நெக்ஸ்ட்

கவிதாஆஆஆ !! எப்பவும் முல்ஸ் இப்படித்தான் ஸ்டார்ட் கேமெரா ஆக்ஷன்.! ன்னு ஆரம்பிப்பாங்க.... எனக்கு எல்லாமே பிடிக்கும்ப்பா.. என்னால முடியலப்பா.. ஒரு ஒரு மணி நேரம் லக்சர் கொடுத்து அப்புறமா அம்மணி பிடித்த ஸிவீட் பேரை சொன்னாங்க.....

ஜுவிட்டுங்களாஆஆஆஆ ஆளவிடுங்கப்பா... !!

இதுல ரொம்ப நல்ல பிள்ளைகள் - கேட்டவுடன் எதுவுமே மறுகேள்வி கேட்காமல் கொடுத்தவர்கள்

தேவ், ரவி, சிவகுமார்ஜி, வெயிலான், மாதவன், ராஜ்நடராஜன், கைப்பூ, பாலாஜி, மங்கைஜி,

ரொம்ப கெட்ட பிள்ளைகள்

கேட்டும் கண்டுக்காம சொல்லாமே எஸ்கேப் ஆகறவங்க...

சரி.. இந்த விட்ஜிட் சேர்க்கும் வரை அதன் அழகு தெரியவில்லை. .சேர்த்தப்பிறகு பார்க்கவும் படிக்கவும் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு..

என்னைச்சுற்றி எத்தனை இனிப்பானவர்கள் இருக்கிறார்கள்.. ஒரு ஸ்வீட் ஸ்டாலில் இருப்பது போன்ற ஒரு உணர்வு......

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கவி பாத்து பாத்து ஸ்வீட் ஓவராகி சக்கர வியாதி வந்துட போகுது...

பீட்டர் தாத்ஸ் :-
May you have enough happiness to make you sweet, enough trials to make you strong, enough sorrow to keep you human enough hope to make you happy.

குறிப்பு - விடுப்பட்டவர்கள் ஸ்வீட் நேம் சொன்னால்தான் சேர்த்துக்கொள்ள படுவார்கள்.. :)))) அதுவும் ரீப்பீட்டு ஆகாமல் இருந்தால் நலம்.

டயட்டீஷியனை ஏமாற்றுவது எப்படி?!

எல்லா ஜிம்' களிலும் ஒரு டயட்டீஷியன் இருப்பார், அவர்கள் நினைக்கும் அல்லது நாம் நினைக்கும் அளவிற்கு உடல் எடை குறையவில்லை என்றால், உடனே வந்து உபதேசம் செய்ய ஆரம்பித்துவிடுவார். உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தவுடன் எனக்கு கொடுக்கப்பட்ட இரண்டு புத்தங்கங்கள்

1. எப்படி / என்ன உணவு சாப்பிடவேண்டும், ஒவ்வொரு உணவின் கலோரி அளவு உள்ள புத்தகம்

இதை ஒரு முறை படித்துப்பார்த்துவிட்டு, இது நமக்கு சரிப்பட்டு வராது என்று ஓரமாக வைத்து விட்டேன். முதலில் எடுத்து படித்தவன் என் அன்பு மகன், புரட்டி பார்த்துவிட்டு என்னை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். உன்னை பத்தி தெரியாம உங்க ஜிம் ல என்ன என்னவோ செய்ய சொல்றாங்க போல.. ம்ம்.. ஆமா நீ இந்த டயட் லிஸ்ட் எல்லாம் முழுசா படிச்சியா..? படிச்சி இருக்க மாட்டியே.. அப்படியே படிச்சாலும் உனக்கு புரிஞ்சி இருக்காதே..... ...ஹய்யோ ஹய்யோ!! ஏன்ன்ன்ன்ன்ன் உனக்கு இந்த வேலை...?!! என்னவோ போ.. எப்படியும் இந்த ஜென்மத்துல நீ வெயிட் ரெடியூஸ் பண்ண போறது இல்ல.....

அடுத்து என் வீட்டுக்காரர், இவருக்கு எப்பவும் ஒரு நல்ல பழக்கம், எதை படித்தாலும் முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை படித்துவிடுவது. சோ, இந்த புத்தகம் கையில் கிடைத்தவுடன், படிக்க ஆரம்பித்தவர், நடுவே என்னை திரும்பி பார்த்து நக்கலாக சிரித்தவாறே, இந்த டயட் எல்லாம் நீ செய்தால், ஜிம் க்கு போக வேண்டிய அவசியமே இல்லையே? எடுத்து உள்ள வை! என்றார்.

ம்ஹூம் குடும்பத்தில் நம்மை பார்த்தால் எல்லாருக்குமே நக்கலா போச்சி.. கவனிச்சிக்கிறேன்.. !!

2. தினமும் என்ன சாப்பிடுகிறேன் என்று தேதி போட்டு , நேரம் குறிப்பிட்டு எழுதி டயட்டீஷியனிடம் காண்பிக்கவேண்டும்.

சரி உண்மையாக சத்தியமாக என்ன சாப்பிட்டோமோ அதை எழுத வேண்டும் என்று நானும்

6.30 டீ ஒரு கப்
9.30 இட்லி 3, தேங்காய் சட்னி
1.15 சாதம், அவரைக்காய் சாம்பார்,கருணைகிழங்கு வறுவல்
5.00 டீ ஒரு கப்
7.00 சூப்
8.30 சப்பாத்தி 3 + வெங்காயத்தொக்கு

தண்ணீர் - 3.5 லிட்டர்

இப்படி எழுதிவிட்டு வருவேன், மெனு தினமும் மாறும், நேரமும் மாறும். இதை பார்த்துவிட்டு டயட்டீஷீயன் நீங்க 9.30 லிருந்து 1.15 வரை எதுவுமே நடுவில் சாப்பிடவில்லை அதனால் நடுவே பழச்சாறு, இல்லை சுண்டல், காய்கரி சாலட், இப்படி ஏதாவது சாப்பிடுங்கள், அதே போல் மோர் நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பு எழுதிவிட்டு செல்வார். இதில் அந்த கருணைகிழங்கு, தேங்காய் சட்னி யை சிகப்பு கலரால் சுழித்து, வறுவல், கொழுப்பு மிகுந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்று குறிப்பு இருக்கும்.

சொன்னார்களே என்று நானும் மோர் நிறைய சேர்த்துக்கொண்டேன், ஆனால் வெண்ணெய் எடுக்கவில்ல. 2-3 நாளில் ஏதோ கொஞ்சம் இறங்கிய எடை கூட ஆரம்பித்தது. எனக்கு இந்த வெண்ணெய் எடுத்து எல்லாம் மோர் செய்ய தெரியவில்லை அதனால் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இதை 3 தினம் சென்று கவனித்த டயட்டீஷியன் நோண்ட ஆரம்பித்தார், நான் நடந்ததை சொன்னவுடன் சரி மோர் வேண்டாம் ஆனால் கண்டிப்பாக நீங்க பழங்கள் நிறைய உணவில் சேர்க்க வேண்டும், அப்புறம் ஒவ்வொரு உணவு இடைவெளிக்கும் 2 மணி நேரம் இருக்கவேண்டும். இடைவெளி அதிகமானால் நீங்கள் அதிகம் சாப்பிட ஆரம்பித்துவிடுவீர்கள் என்று அட்வைஸ்.

எப்படி எழுதினாலும் ஏதாவது ஒரு நொட்டு குறிப்பு எழுதிவிட்டு சென்றார்கள், சரி என்னத்தான் செய்வது, உடற்பயிற்சி சொல்லி தரும் அந்த பெண்ணிடம் "ஏம்மா தெரியாமல் உன்கிட்ட பணம் கொடுத்து ஜிம் ல் சேர்ந்துவிட்டேன் அதுக்காக இப்படியா.. இட்லி க்கு சட்னி தொட்டுக்கொள்ள கூடாதுன்னு எப்படி? காலங்காலமாக அதை த்தானே நாம சாப்பிட்டு வருகிறோம்...?!! இப்படி அநியாயத்துக்கு அதை சாப்பிடதே இதை சாப்பிடாதேன்னா... நான் வீட்டிலேயே பட்னி கிடந்து உடம்பை குறைத்துக்கொள்வேனே.. என்று கடுப்பாக சொல்லிவிட்டு ஒரு நாள் மதியம் பசிக்காமல் சாப்பிட மறந்து போய்விட்டதால்,

from 10 - 4.15 - I didnt feel hungry, so I didnt take any food. என்று எழுதிவிட்டு வந்தேன். அடுத்தநாள் சென்றால், டயட்டீஷியன், பயிற்சியாளர்கள் எல்லாம் எனக்காக வெயிட் செய்து கும்ம ஆரம்பித்தார்கள். இது வரைக்கும் யாருமே இப்படி டயட் ஷீட் எழுதியதில்லை.. நீங்க என்ன இப்படி எல்லாம் எழுதறீங்க.. என்றார்கள்.

பின்ன என்னங்க.. இடைவெளி விட்டா அடுத்தநாள்... இடைவெளி விடக்கூடாதுன்னு ஒரு குறிப்பு எழுதறீங்க. .சரி இடைவெளி இல்லாமல் எழுதுணுமேன்னு இப்படி எழுதினேன்.. அது தான் உண்மை என்றவுடன்.. கடுப்பாக இருந்தாலும் சரி லிக்குவுட் டா வாவது ஏதாவது சாப்பிடுங்கப்பா ன்னு சொல்லி விட்டுட்டாங்க...

அதற்கு பிறகு எதக்கு நமக்கும் அவங்களுக்கும் பிரச்சனை என்று ஒரு ஸ்டேன்டர்ட் மெனு எழுதிவிட்டு வருவது வழக்கமாக்கி கொண்டேன்.

6.30 டீ ஒரு கப்
9.30 நூடுல்ஸ் 1/2 கப்
10.30 வெள்ளரிக்காய் - 2
1.15 சாதம், சாம்பார்,முட்டை
3.00 - காய்கரி சாலட்
5.00 டீ ஒரு கப்
7.00 சூப்
8.30 சப்பாத்தி 3 + தொக்கு
9.00 - பழங்கள்

ம்ம்..ஒரு தொல்லை விட்டது. இப்பவெல்லாம் அந்த டய்ட் டீஷியன் எனக்கு குறிப்புகள் எழுதுவதில்லை அப்படியே எழுதினாலும்..- ஒரே வார்த்தை - Good !! தான்.. ம்ம் எங்க க்கிட்டியேவா?? பணத்தையும் வாங்கிக்கிட்டு இவங்க ஜிம் ல நம்ம செய்யற கொடுமை இருக்கே............ முடியல.... !!

அணில் குட்டி அனிதா : ...... சொல்ல ஒன்னியம் இல்ல.. ..அம்மணிய திருத்தமுடியாது.......!! திருத்த நினைக்கவறங்க எல்லாரும் முட்டைஸ்..!! நான் முட்டையாக விரும்பல.. அப்ப நீங்க??!!

பீட்டர் தாத்ஸ் :
Food is an important part of a balanced diet.

கன்னத்தில் முத்தமிட்டால்....

"அம்மாக்கள் தினம்" கொண்டாட்டம் !! முல்ஸ் அம்மாக்கள் வலைப்பூக்களில் அம்மாக்கள் தினம் சிறப்பாக அம்மாக்களை பற்றி எழுத ச்சொல்லி இருந்தார். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு எழுதி தள்ளுகிறார்கள். ஆனால்

கவிதா
ஒரு
அம்மாவாக
ஆயிரமாயிரம்
பக்கங்கள் எழுதமுடியும் !

குழந்தையாக
எதுவுமே
எழுத தோன்றவில்லை
எழுதுபவர்களை
பார்த்தால்
பொறாமை
ஏக்கம்..

'கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் கதாபாத்திரமான அமுதா என்ற குழந்தையை போன்று இன்னமும் அம்மாவை தேடும் ஒரு குழந்தையாகவே இருக்கிறேன். இந்த பதிவில் என்னுடைய ஏக்கத்தையும், அம்மா இருப்பவர்களையும் அவர்களுக்கு அம்மாவிடம் கிடைக்கும் பாசத்தையும் பார்க்க பொறுக்காத பொறாமையிலும் எழுதுகிறேன். பொறாமை என்பது கூடாது தெரியும்..ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு வந்துவிடும்.. கொஞ்சமாக எல்லாம் இல்லை ஏகத்துக்கு பொறாமை உண்டு. :)

கண்டிப்பாக சோகம், துக்கும், துயரம், அழுவாச்சி எதுவும் இல்லை. :)

எனக்கு அம்மாவாக இருந்து தோற்றுப்போனவர்கள்-

ஆயா
அப்பா
சின்ன அண்ணன்
என் கணவர்
என் மகன்
என் நண்பர்கள்
நண்பர்களின் அம்மாக்கள்
நண்பர்களின் குழந்தைகள்

இவர்கள் எல்லோருமே என் மேல் அதிகமாக அன்பு செலுத்தக்கூடியவர்கள். செலுத்திக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் நான் எதிர்ப்பார்க்கும் அன்பை என் அம்மாவாக அவர்களால் கொடுக்க முடியவில்லை. கொடுப்பது எனக்கு என் அம்மாவின் இடத்தை மனதளவில் இன்னமும் நிறைவு செய்யவில்லை எனலாம்.

சொல்ல விரும்புவது, ஒரு குழந்தைக்கு அம்மா' வாக அந்த குழந்தையை பெற்ற தாயை தவிர்த்து யாராலும் முழுமையான அந்த குழந்தையின் மனதை நிறைவு செய்யும் அளவிற்கு அம்மா'வாக இருக்கவே முடியாது என்பது என் அனுபவத்தில் நான் கற்றது, பெற்றது. என்னுடைய ஆயாவை போன்று என்னை கவனித்தவர் இல்லை, என்னை வளர்த்தவர் இருக்குமுடியாது என்றாலுமே அவர் கூட என் அம்மா வாக முடியாது என்பது பல நேரங்களில் நான் உணர்ந்தது. என் அண்ணன் மகனிற்கு நான் அம்மாவாக இருக்கும் வாய்ப்பை பெற்றபோதுக்கூட அவனுக்கும் என்னால் அவனின் அம்மாவை போன்று இருக்கமுடியவில்லை என்பது உண்மை. அத்தையாக இருப்பது எளிது, அம்மாவாக.... :(


அம்மா - ?????? அன்பை பெற்றதில்லை அதனால் எனக்கு தெரியவில்லை.. அறிந்தவரை- குழந்தைகள் அம்மாவின் மடியில் உட்காரும், தலைவாரிக் கொள்ளும், சாப்பாடு ஊட்டிக்கொள்ளும், பள்ளியில், கல்லூரியில், சினிமா தியேட்டர்களில், கடைகளில் பார்க்கும் இடமெல்லாம் குழந்தைகள் அம்மாவோடு வரும், இறுக்கமாக அம்மாவை கட்டிக்கொண்டும் வரும். பள்ளியில் பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் வரும் போது எல்லாம் என் தோழிகளின் அம்மாக்கள் வருவார்கள், அம்மாக்கள் எல்லாம் மீட்டிங் முடிந்தவுடன் டீச்சரிடம் சிரித்து சிரித்து பேசுவார்கள். :( எனக்கு பிடிக்காது. ஓரமாக நின்று கவனிப்பேன். பொறாமை வரும் இடங்களில் முக்கியமானது பள்ளி. பிரச்சனை என்று வந்தால் உடனே குழந்தைக்கு சப்போர்ட் செய்துக்கொண்டு அம்மாக்கள் வந்துவிடுவார்கள். எனக்கு எப்பவுமே நானே துணை. (அதனாலே வாதிட பழகிக்கொண்டேனோ என்று நினைப்பேன்.) ஆயாவின் வயதிற்கு அவர்களால் அழைத்ததற்கு எல்லாம் வர முடியாது. அதனால் அவரை தொந்தரவு செய்தது இல்லை.

அடுத்து திருமணத்திற்கு பிறகு என் குழந்தை பேறு..!! என் வாழ்நாளில் மறக்கமுடியாத அம்மா இல்லாத வலியை ஏற்படுத்தியது. யாரிடமும் சொன்னது இல்லை. விடுமுறைக்கு என் அக்கம் பக்கம் இருப்பவர்கள் குழந்தைகளுடன் அம்மா வீடு என்று சென்று விடுவார்கள். அல்லது குழந்தைகளையாவது அனுப்பிவிடுவார்கள். அப்படி ஒரு நாள் கூட என் வாழ்நாளில் எங்கும் சென்றது இல்லை. செல்ல இடமில்லை என்பது யதார்த்தம். சில சமயம் இது தான் வாழ்க்கை என்று தெரிந்தாலும் வருத்தப்படாமல் இருக்க முடிவதில்லை. . செல்ஃப் கவுன்சிலிங் கொடுக்கும் போது இதை எல்லாமும் யோசித்து என்னை நானே தேற்றிக்கொள்வேன். ஏக்கம் என்பது இப்பவும் இருக்கத்தான் செய்கிறது. இருந்துவிட்டு போகட்டும் என்று ரொம்பவும் கவுன்சிலிங் கொடுத்து என்னை தேற்றிக்கொள்ளவும் நினைப்பது இல்லை. அழவேண்டுமா அழுதுவிடு, சிரிக்கவேண்டுமா சிரித்துவிடு, யார் உயிரையாவது வாங்க வேண்டுமா வாங்கிவிடு என்பதை நடைமுறை படுத்திவிடுவதுண்டு :)

உலகத்தில் அம்மா இல்லாமல் நான் மட்டுமா இருக்கிறேன்.? இருப்பவர்களை பார்த்து பொறாமைப்படாமல், இல்லாதவர்களை பார்த்து சந்தோஷப்பட்டு க்கொள்ளலாமா? அது் தவறில்லையா? தவறாகத்தான் தோன்றி இருக்கிறது, அம்மா இல்லாத யாரைப்பார்த்தாலும் நான் படும் கஷ்டங்கள் கண் முன்னே வந்து என்னை போல் இவர்களும் கஷ்டப்படுகிறார்களே என்று தோன்றுமே தவிர்த்து, அவரை விடவும் நான் மேல் என்று என்றுமே நினைத்தது இல்லை. அம்மா இல்லாமல் யாரையும் இந்த உலகத்தில் படைக்காதே என்று வேண்டிக்கொள்வேன், வேண்டிக்கொள்கிறேன்....

குழந்தைகள் பெற்றுவிட்டால் மட்டுமே ஒரு பெண் அம்மா'வாகிவிட முடியாது.! * பதிவை அம்மாக்களில் வலைப்பூக்களுக்கும் அனுப்புகிறேன்.

அணில் குட்டி அனிதா : இதோடா ! அம்மணி அட்டண்டண்ஸ் கொடுத்துட்டாங்க..!! ஏழு கழுத வயாசாச்சு... பெத்தப்புள்ளைக்கு நாலு கழுத வயசாச்சி.. இன்னமும் ம்ம்மா...!! யம்மா.. ! ஆத்தா... ன்னு பதிவு போட்டுக்கிட்டு.. தாங்கலடா இந்த கொசு த்தொல்லை. .யாராச்சும் ச்சப்புன்னு அடிச்சி கொசுவ கொல்லுங்க முதல்ல...!!

பீட்டர் தாத்ஸ் :- When you are a mother, you are never really alone in your thoughts. A mother always has to think twice, once for herself and once for her child.

பட பட பட பட்டாம்பூச்சி....

பட்டாம்பூச்சியே.........

உன்
ஒவ்வொரு
வர்ணத்தையும்
ரசித்தேன்... !

ரசித்தவை
வார்த்தைகள்
அற்ற
கவிதைகளாய்
தொடர்கிறது...........

அந்த
கவிதைகள்......???!!!!!
நீ...... ....!!

.

காதோடு தான் நான் பாடுவேன்......

எல் ஆர். ஈஸ்வரி அம்மாவின் பாடல்களில் பக்தி பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும். அவருடைய பாடல்களை மிக எளிதாக பாடிவிடமுடியாது. அவர் பாடிய பாடல்களில் பிடித்தவை

எலந்தபழம் எலந்தபழம்
துள்ளுவதோ இளமை...

அவர் பாடிய பாடல்களில் ரொம்பவும் ரசித்து கேட்கும் பாடல்களில் ஒன்று, சூப்பர் மெலடி .....

"காதோடு தான் நான் பாடுவேன்... மனதோடு தான் நான் பேசுவேன்

பாடியவர் : எல் ஆர் ஈஸ்வரி
படம் : வெள்ளிவிழா

Kathodu.mp3


அணில் குட்டி அனிதா : காலங்காத்தால ஆரம்பிச்சிட்டாங்க அம்மணி.. கடவுளே என்னையும் சேர்த்து எல்லாரையும் காப்பாத்து................... !!

பீட்டர் தாத்ஸ் :- Words make you think a thought. Music makes you feel a feeling. A song makes you feel a thought.
ஆஸ்மாவை கட்டுப்படுத்த முடியும் - உலக ஆஸ்மா தினம்

மே 5, 2009 உலக ஆஸ்மா தினமாக கொண்டாடப்படுகிறது. இதில் வலியுறுத்தும் மிகமுக்கியமான விஷயம், ஆஸ்மாவினை கட்டுப்படுத்த முடியும். என்பதே.

ஆஸ்மா சுவாசக்குழாயில் ஏற்படும் அடைப்பின் காரணமாக வரும் நோய், சிறுவயதில் எங்கள் வீட்டில் குடியிருந்த பத்ரி யை பார்த்து இருக்கிறேன். எப்போதும் ஒரு குழாயைவாயில் வைத்து ஊதி ஊதி சுவாசத்தை சரி செய்வார். அது எனக்கு அப்போது ஒரு வேடிக்கையாக மட்டுமெ இருந்தது அதன் வலி தெரியாது.

திருமணம் ஆனப்பிறகு "ஆதிஅந்த " த்தை பார்த்து தெரிந்து கொண்டேன். இது குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் தொடர்ந்து வரும் என்றும் சொல்லுவார்கள், ஆதிஅந்தத்திற்கு " அவரின் கணவரின் மூலம் வந்ததாக சொன்னார்கள். இரவும் பகலும் அவர் படும் கஷ்டத்தை பார்த்து இருக்கிறேன். இரவில் மூச்சுவிடமுடியாமல் எழுந்து உட்கார்ந்து இருப்பார்கள், எனக்கு ரொம்பவும் பார்க்கவே பாவமாக இருக்கும். அவர்கள் விடும் மூச்சும் ஒருவித சத்தத்தோடு இருப்பதால் அவர் படும் கஷ்டத்தை நன்றாக அறிய முடியும்.

போன வாரத்தில் தான் ஆதிஅந்ததின் நினைவு நாள் வந்தது. ஆதிஅந்தம் கடைசி காலத்தில் என்னிடத்தில் வந்து இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதாக, அவர்கள் இறந்த பிறகு என் சொந்தங்கள் எனக்கு சொல்லியது மிகவும் கஷ்டமாகவும், மன வேதனையையும் அளித்தது. அழைத்து வந்து இருக்கலாமே என்று இன்றளவும் மனது அடித்துக்கொள்ளும். அவருக்கு போதிய சிகிச்சை கொடுத்து இருந்தால், இன்னுமும் அவர்கள் எங்களுடன் நிறைய ஆண்டுகள் இருக்க செய்து இருக்கலாமே என்று் நினைப்பதுண்டு. அவர்கள் இறந்து போனதும் ஆஸ்மா' நோயின் தீவிரம் தான். அவர் இறந்த போது நாங்கள் அகமதாபாத் நகரில் இருந்ததால், என்னால் செல்ல முடியவில்லை. என் கணவர் மட்டுமே செல்ல முடிந்தது. கடைசியில் அவரை பார்க்காததால் இன்று வரையில் அவர் இறந்துவிட்டதாகவே எனக்கு தோன்றாது.

இன்று உலக ஆஸ்மா தினம் மட்டுமல்லாது, ஆதி அந்தம் நினைவாக ஆஸ்மாவால் பாதிக்க பட்டவர்களுக்காக இந்த பதிவு.

ஆஸ்மாவை பற்றிய விளக்கங்கள் இந்த World Asthma Day (WAD) மிக தெளிவாகவும், விபரமாகவும் ஒவ்வொரு நாட்டவர்களுக்காகவும் தனித்தனியாகவும் கொடுத்து இருக்கிறார்கள்.

ஆஸ்மாவை கட்டுப்படுத்த சில கீரை/மூலிகை உணவுகள் :-

தூதுளை - இந்த கீரையை முற்களை அகற்றி நெய்யில் பொறித்து மிளகு த்தூள் தூவி சுட சாதத்தில் பிசைந்து தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சு கபம், சளி அறவே நீங்கும். பருப்பு போட்டும் கடைந்து சாப்பிடலாம். இந்த கீரை உடம்புக்கு சூடு என்பதால் நெய் சேர்த்து ஆயா எனக்கு கொடுப்பார்கள்.

ஆடாதொடை :- இது மருந்து, ரொம்பவும் கசக்கும். சமைத்து எல்லாம் சாப்பிட முடியாது. கஷாயம் வைத்து தருவார்கள். செய்முறையும் தெரியாது என் அத்தை அவரின் பேரக்குழந்தை ஆஸ்மாவால் அவதி படுகிறான் என்று அடிக்கடி செய்து கொடுப்பார்கள். அதனால் இதை தெரிந்துக்கொண்டேன்.

துளசி : இதை தினமும் சாப்பிட்டு வரலாம்

கற்பூரவல்லி செடி இலைகள் :- இதை பச்சையாகவே துளசியை போல் சாப்பிடமுடியும், கொஞ்சம் காரம் இருக்கும். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவார்களா என்று தெரியாது. இந்த இலைகளை கொண்டு பஜ்ஜி செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். (சாதாரண வாழைக்காய் பஜ்ஜி செய்யும் முறைதான்)

இது தவர்த்து ரொம்பவும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருக்கவேண்டும், தூசி தான் இவர்களுக்கு முதல் எதிரி, அதனால், வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது, நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளும் இவர்களுக்கு அலர்ஜி, புகை, ரொம்பவும் இருட்டான காற்றுவசதி இல்லாத இடம் எல்லாம் உகந்தவை அல்ல. பொதுவாகவே வீட்டில் நல்ல இயற்கை வெளிச்சமும், இயற்கை காற்றும் இருந்தால் யாருக்குமே எந்த நோயும் வராது. கதவு , சன்னல் அப்படி அமைய பெற்ற வீட்டில் இவர்கள் இருப்பது நல்லது. குளிர்ச்சி தரும் உணவுகளை குறைத்து க்கொள்ள வேண்டும். இரவு உணவு விரைவில் சாப்பிட்டு விடவேண்டும். 6.30 -7 மணிக்குள் சாப்பிட்டு விட்டால் நலம். தூங்கும் போது பிரச்சனை இருக்காது. புகைப்பழக்கம் கூடவே கூடாது. சுத்தமாக தலையணை, பெட்ஷீட் போன்றவை உபயோகித்தல் ரொம்பவும் நலம்.

ஆதிஅந்தம் :- ஆதிலட்சுமி அம்மாள் - என்னுடைய மாமியார். அவரை எப்போதும் ஆதிஅந்தம் என்று அழைத்தே பழக்கப்பட்டு விட்டேன். நவீனையும் சில சமயம் அப்படி அழைப்பத்துண்டு. அவருடைய முகச்சாயலும், செயல்களும் சில நேரங்களில் ஆதி அந்தத்தை நினைவு படுத்தும். நல்ல மாமியார், இவரிடம் நிறைய சமையல் குறிப்புகள் நான் கற்றுக்கொண்டேன். (குறிப்புகள் மட்டுமே). சின்ன மருமகள் இவர்களுக்கு ரொம்பவும் செல்ல மருமகள் (அட நாந்தாங்க!!) அவர்களுக்கு தேவையானதை செய்ய நினைத்திருக்கிறேன், செய்திருக்கிறேன். கடைசி காலத்தில் என்னிடம் வந்து இருக்க வேண்டும என்று அவர்கள் நினைத்தது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது. ஆதிஅந்தத்திடம் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் கையில் இருப்பதை வைத்து தன் குடும்பத்தை நடத்தியவர், யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காதவர் (என்னையும் சேர்த்து அவருக்கு 5 மருமகள்கள்) , யாரிடமும் எந்த கெட்ட பெயரையும் வாங்காதவர். இது ரொம்பவும் கஷ்டமான விஷயமல்லவா? யாருமே அவரை குறை சொல்லி நான் பார்த்தது இல்லை. பொதுவாக She is A Good Human Being.

அணில் குட்டி அனிதா :ம்ஹூம் எந்த ஊர்ல நடக்கும் இப்படி மாமியாருக்கு பெட் நேம் வச்சி கூப்பிடறது எல்லாம்... ??!! அம்மணிக்கு இருக்கிற திமிரு யாருக்கும் இருக்காதுடா சாமியோவ்.. என்ன ஒரு பயமில்லாத்தனம் !!.. ம்ம்ம்ம்..... !!! டிஸ்டென்ஸ் மெயின்டெயின் செய்யறது ஈஸ் ஆல்வேஸ் பெட்டர் வித் திஸ் லேடி..!!

பீட்டர் தாத்ஸ் :- Asthma is treatable and well can be controlled

ஏதோ என்னால் முடிந்தது....குறிப்பு: படத்தை க்ளிக்கி, பெரிதாக்கி பார்க்கவும்.

ஏன் பதிவு போடலன்னு ஒரே ரசிகர்கள் ????!! :))))))) தொல்லை. சரி ரொம்ப ஆர்வமாக கேட்கறாங்களே நம்மளால முடிந்தது இது. படம் !! காட்டுதல் ..
போஸ்ட் போட்டாச்சு போட்டாச்சு.. !! :))

பெயின்ட் பிரஷ்'ஷில் வரைந்தேன்.. கை இன்னும் பழகனும்னு தோணுது. வரைந்துக்கொண்டே இருக்கனும் இப்படி ஆடி'க்கு ஒரு தரம் னு வரைந்தால் எப்படி ஒழுங்காக வரைய வரும்... ?!! சோ திட்டறதுன்னு முடிவுசெய்தால் கொஞ்சமாக திட்டிட்டு போவீங்களாம்.


அணில் குட்டி அனிதா: .. ம்ம்ம்... ரசிக பெருமக்களே. ???? அப்படின்னு யாராவது கவி' க்கு இருக்கீங்களா? இல்ல இவிங்கிளா சொல்லிக்கிட்டு திரியறாங்களா? ரசிகர்கள் எல்லாம் வந்து பிரசண்ட் கொடுங்க.. அப்பத்தேன் அம்மணிய நான் நம்புவேன் ..........

பீட்டர் தாத்ஸ் : The world today doesn't make sense, so why should I paint pictures that do?