லட்சத்தீவு - பயணக்குறிப்புகள்-2


லட்சத்தீவுகள் எல்லாமே சின்ன சின்னத்தீவுகள். கடலுக்கு அடியிலிருக்கும் கோரல் பாறைகள் பல ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று மோதி,  மணலாகி, அந்த மணல், கடல் அலைகளால் அடித்துத்தள்ளப்பட்டு, சிறு சிறு மேடுகளாக சேர்ந்து, நாளடைவில் அப்படியே தீவுகள் ஆனது என்பதே இந்த தீவுகளின் கதை என அத்தீவிலிருப்போர் சொன்னார்கள். அது தான் உண்மையும் என்பது, தீவுகளின் வெள்ளை வெளீர் மெல்லிய மணல் பரப்பைப் பார்த்தாலே தெரிகிறது. தீவுகளிலிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் மெல்லிய மணல் வரிகள் தென்படுகின்றன, வருகின்ற காலங்களில் அவையும் சிறு தீவுகளாக மாற நேரிடலாம்.

அந்தமானை ப்போல அல்லாது, இங்குள்ள ஒரு தீவை சுற்றிப்பார்த்ததுமே,அங்கு தண்ணீரைத்தவிர வேறொன்றுமில்லை என நமக்கு புரிந்துவிடிகிறது. தீவில் இருக்கும்போது மட்டும் மொபைல் இணைப்புக்கிடைக்கும். அதும் BSNL மட்டும், லட்சத்தீவின் தலைநகர் தீவான "கவரட்டி'யில் மட்டும் Airtel இணைப்புக் கிடைக்கிறது. 
எல்லா தீவுகளிலும், முக்கியப் பயிராக தென்னை வளர்க்கப்படுகிறது. தென்னை மட்டுமே பிரதானம், தீவில் வசிப்போரின் தொழில்/வருமானம் இவற்றை சார்ந்தேயுள்ளது.  தேங்காய், தேங்காய் எண்ணெய், தேங்காயிலிருந்து செய்யப்படும் இனிப்புகள் தயாரித்தல் குடிசை தொழில்களாக செய்யப்படுகின்றன. தென்னைக்கு அடுத்து முக்கிய த்தொழில் மீன் பிடித்தல்.  ஏற்றுமதி செய்கிறார்கள்.

தீவுகளுக்கான மின்சாரம் 75%  ஜெனரேட்டர்களை பயன்படுத்தியும், மிச்சம் சோலார் ப்ராஜக்ட்கள் மூலம் உற்பத்தி செய்து சேமித்துக்கொள்கின்றனர். உபயோகப்படுத்தும் அன்றாட தண்ணீர்,  மேலாக 10-12 அடியிலேயே கிடைக்கிறது என தீவிலிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். சுற்றளா பயணிகள் கடையில் விற்கும் மினரல் வாட்டர் பாட்டில்களையே பயன்படுத்தினோம். அங்கிருக்கும் தண்ணீரின் சுவை கிணற்று நீரைப்போல இருந்தது.

தீவில் 100% இஸ்லாமியர்களே வசிக்கின்றனர். தீவுகளின் அரசு & தனியார் நிறுவனங்களில் இவர்களே இருப்பதாக சொல்லப்பட்டது. வேறு ஆட்களை அவர்கள் அனுமதிப்பதும் இல்லை, வேறு ஆட்கள் அங்கே வாழ்க்கை நடத்தும் சூழலும் இருப்பதாக தெரியவில்லை. கப்பலில் கூட, வேலைசெய்பவர்கள் அனைவருமே இஸ்லாமியர்களாகவே இருந்தனர்.

நாங்கள், லட்சத்தீவுகளில்  "கவரட்டி, கல்பேனி, கட்மத்" தீவுகளை
சுற்றிப்பார்க்க அழைத்து செல்லப்பட்டோம்.  இவற்றில் "கவரட்டி" தலைநகர் தீவாக இருப்பதால், அங்கு சரக்கு & பயணிகள் கப்பல் துறைமுகம் என இரண்டும் ஓய்வின்றி இயக்கத்தில்  இருந்ததால், கடல் நீர் நாளடைவில் அசுத்தமாகி, தண்ணீரில் இறங்க தயக்கமாகவே இருந்தது.
அடுத்து, 'கட்மத்' தீவில், "கடல் வெள்ளரி" என்ற ஒருவகை மீன் இனம் அதிக அளவில் கிடந்தது. மருத்துவகுணம் அதிகமிருப்பதால், இதை கொல்ல/பிடிக்க அரசு தடைவிதித்துள்ளது. எனக்கு இது ஒருவித அருவருப்பை கொடுத்ததால், தண்ணீரில் கால்வைக்க சங்கடப்பட்டேன். ஆனால் என்னைத்தவிர
எல்லோரும், என் கணவரையும் சேர்த்து, சகஜமாக இறங்கி விளையாடினர். அதற்கு உயிர் இருந்தாலும், கல் போல ஒரே இடத்தில் அசையாமல் கிடந்தது, ஆபத்தில்லை,நம்மை எதும் செய்யாது என்று சொன்னாலும்,  அதற்கு உயிர் இருக்கிறது என்பது மூளைக்குள் ஏறிவிட்டதால், எங்கே அதை மிதித்து விடுவோமோ, அதற்கு வலிக்குமோ, வலிச்சால் கடிச்சிடுமோன்னு என்னால் தண்ணீரில் இறங்க முடியவில்லை. இறங்கினாலும் அதன் மேல் கால் படாமல் நடக்க ரொம்பவே சிரமப்பட்டு, இந்த விளையாட்டே வேணாம்னு மேலேறி நின்றுக்கொண்டேன்.

ஆக, கடைசியாக  "கல்பேனி" யே எனக்குப் பிடித்த தீவானது. மிக சுத்தமான தண்ணீர், வெகு நேரம் தண்ணீரில் இருந்தோம், வெகு தூரமும் தனியாக சென்றுவந்தோம். குளிக்குமிடம், சாப்பிடுமிடம், ஓய்வெடுக்குமிடமென எல்லாமே மிகவும் வசதியாக, சுத்தமாக இருந்தது.  கல்பேனி தீவு , போக வர மொத்தமாக 11 கிமி தொலைவு, ஒரே ஒரு நீண்ட சாலை. இந்த கடைசியிலிருந்து அந்த கடைசிக்கு சென்று வரலாம். எல்லாத்தீவுகளைப்போல இங்கும் முழுக்க முழுக்க தென்னை மரங்களே ! .

தண்ணீரைத்தவிர, படகு சார்ந்த விளையாட்டுகள், விதவிதமான கோரல் பாறைகள், இதில் மனித மூளையைப்போன்ற கோரல் கவனத்தை ஈர்த்தது. விதவிதமான அளவுகளில் கண்ணைப்பறிக்கும் வண்ண வண்ண மீன்கள், ஆழ்கடல் டைவிங் என சிலது இலவசமாகவும், சிலவற்றிற்கு பணம் செலுத்தியும் பார்க்க முடிந்தது.

உணவு : கப்பல் & தீவுகளில் சைவம், அசைவம் என இரண்டுமே கொடுக்கப்பட்டன. தேவையானவற்றை , தேவையானளவு நாமே எடுத்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.  தண்ணீரில் அதிக நேரம்  விளையாடி, களைப்போடு,நல்ல பசியும் எடுப்பதால் ,ருசிப்பார்க்காமல் உணவை ஒரு பிடிப்பிடிக்க முடிந்தது.

எல்லாத்தீவுகளிலும், அவர்களின் பாரம்பரிய கிராமிய நடனங்களை ஆட அதற்கான நடனக்குழுக்களை ஏற்பாடு செய்திருந்தனர். பாடலை மலையாளம்& ஹிந்தி மொழிகளில் பாடினர். சிலவற்றை யூடியூப்பில் பதிவேற்றியுள்ளேன். பார்த்து ரசிக்கலாம்.
கப்பல் தவிர, விமானம் மூலமும் தீவுகளுக்கு செல்லலாம். விடுமுறை நாட்களில், இந்த தீவுகளின் ரிசார்ட்டில் சென்று தங்கிவிட்டு வரலாம் என திட்டமிடுவது புத்திசாலித்தனமல்ல, பணவிரயமே ! அங்கு பார்ப்பதற்கோ, நேரம் செலவிடவோ ஒன்றுமில்லை!!  குறிப்பாக வெயில் அதிகமிருக்கும் மாதங்களில் சென்றால், அனல் தாங்கமுடியாது, அறையினுள்ளேயே சுருண்டுக்கிடக்க வேண்டியது தான்.  ஒன்றிரண்டு நாள் பயணமாக சென்று வரலாம்.

லட்சத்தீவு செல்ல விரும்புவோர் : கப்பலில் சுற்றுளா பயணியாக செல்வதை விட,  கொச்சி/மங்களூர்/கோழிகோட்டிலிருந்து கிளம்பும் கப்பலில்,தனிப்பட்ட முறையில் "கல்பேனி" தீவிற்கு ஏசி / சாதா அறை /ஸ்லீப்பர் கோச் என உங்கள் வசதிக்கேற்றவாறு முன் பதிவு செய்து, அங்கு நேரடியாக சென்று, ரிசார்ட்டில் அறை எடுத்து, விருப்பப்படி
பொழுதுப்போக்கிவிட்டு திரும்பவும் இதே வழியாக முன்பதிவு செய்து வரலாம். விமானத்தில் செல்வதானாலும் "அகாட்டி" தீவிலிருந்து ஏதாது ஒரு தீவுக்கு கப்பலில் சென்று திரும்ப வரலாம்.  எல்லா தீவுகளிலும் ஒரே ஒரு ரிசார்ட்தான் இருந்தது. எல்லாத்தீவுகளுமே 10-20 நிமிடங்களுக்குள் முழுமையாக ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்துவிடலாம் என்பதால், ரிசார்ட்டை தேடி அலைய வேண்டி இருக்காது. பொதுவாக லட்சத்தீவிற்கு பயணசெலவு மிக அதிகமாவதால், மேல் சொன்னபடி பயணிக்கலாம். 

*Thx Google : Lakshadweep maps, Sea cucumber fotos.

லட்சத்தீவு - பயணக்குறிப்புகள்

லட்சத்தீவுகள் அரபிக்கடலில் அமைந்துள்ளதால், கேரளாவிலிருந்து தான் கடல்வழி பயணங்கள் ஆரம்பிக்கின்றன. கொச்சியிலிருந்து தொடங்கும் பயண வழியை நாங்கள் தேர்வு செய்திருந்தோம்.  கொச்சியை தவிர, மங்களூர் மற்றும் கோழிக்கோட்டிலிருந்தும் கடல்வழி பயணங்கள் தொடங்குகின்றன. விமானப்பயணம் போலவே, கப்பலில் செல்லவும் ஏகப்பட்ட பரிசோதனை முறைகள். எல்லாவற்றையும் கடந்து ஒரு வழியாக மதியம் 3 மணி வாக்கில் கப்பலில் ஏறி, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை அடைந்தோம்.

நாங்கள் சென்ற பயணக்கப்பல் , ஒரே சமயத்தில், 700 பேர் பயணம்
செய்யக்கூடிய வசதிகளோடு, மொத்தம் 5 தளங்களை கொண்டிருந்தது. 6 ஆவது மொட்டைமாடி. :) 
முதல் 2 தளங்கள் தினப்படி பயணம் செய்பவர்களும், குறைந்த கட்டணத்தில், குறைந்த தொலைவு பயணம் செய்பவர்கள் பயன்படுத்தும் வகையில், ரயிலின் " ஸ்லீப்பர் கோச் " போல இருக்கைகளும், கழிவறை பொதுவிலும்  இருந்தது. முதல், இரண்டு தளங்களுக்கு வெளிக் காற்றோட்ட/குளிர்சாதன வசதியில்லை. மின்விசிறி மட்டுமே.

3 ஆவது தளம், தீவுகளுக்கு பயணம் செய்யும் தினப்படி பயணிகளுக்கான முதல் வகுப்பு "ஏசி கோச்". ஒரு அறையில் 4 பயணிகள் தங்கும் வசதி. இந்தத் தளத்திலிருந்து, வெளிப்பக்கம் வராண்டா போன்ற அமைப்பு உள்ளதால், பயணிகள் வெளியில் வந்து அமரலாம், நடக்கலாம், வேடிக்கைப்பார்க்கலாம். இந்த வராண்டாக்களில், இரவில் கப்பல் நிறுத்தப்பட்டு, கப்பல் கேப்டன் & டீம் உணவருந்தும் நேரத்தில்,  கப்பலில் பணிபுரிவோர் வேக வேகமாக மீன் பிடித்தலில் ஈடுபடுகின்றனர்.  கைத்தேர்ந்த மீன் பிடிக்காரர்கள். 3 ஆவது தளத்திலிருந்து தூண்டிலை வீசவேண்டும். அந்த தூண்டில் வெகுதூரம் சென்று விழுகிறது.மீன் சிக்கவில்லை என்றால், அதிவேகமாக, லாகவமாக தூண்டில் கயிற்றை (மெல்லிய இளகுவான கம்பிகள்) சிக்கல் இல்லாமல் சுற்றி, மீண்டும் வேகமாக வீசுகிறார்கள். அசுர வேகம், விவேகம் இரண்டும் சேர்ந்து, அவர்கள் பிடித்த ஒவ்வொரு மீனும் ஒன்றரை அடி நீளமும், அதற்கேற்ற கனமும் இருந்தன. அவற்றை கப்பலில் செய்யும் சமையலுக்கே விலைக்கு கொடுத்துவிடுவார்கள் என ஊகித்தோம்.  சமையல் அறை மற்றும் முதல் 3 தளங்களுக்கான சாப்பாட்டு அறையும் 3 ஆவது தளத்தில் இருந்தது.

சுற்றுளா பயணிகளுக்காக தனியாக 5 ஆவது தளத்தில் மற்றொரு சாப்பாட்டு அறை இருந்தது.  முதல் 3 தளத்தில் இருப்பவர்கள் 4-5 தளத்திற்கு உள்ளே வர அனுமதியில்லையென்றாலும், 6 ஆவது மொட்டைமாடி தளத்திற்கு சென்றுவர முடியும். அதனால், பலர் மொட்டைமாடியில் வந்து உட்கார்ந்தும், வேடிக்கைப்பார்த்தும், உறங்கியும் நேரத்தை கழித்தனர்.  5 ஆவது தளத்தில், சுற்றுளா பயணிகளுக்காக மட்டும் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் இவர்களும் இறங்குவதால், கட்டுப்படுத்த முடியாமல் அசுத்தமாவதாலும், நீச்சல் குளம் யாருக்குமில்லாமல் இயங்காமலேயே இருந்தது.

4 மற்றும் 5 ஆவது தளம் இரண்டும், பிரத்தேயமாக சுற்றுளா
பயணிகளுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒரு அறையில் இருவர் மட்டுமே தங்கும் வசதி, கழிவறையும், குளியல் & ஹீட்டர் வசதியுடன், நட்சத்திர விடுதி ஏசி அறைகள் போல இருந்தது.

அறைக்கு வந்த அரை மணி நேரத்தில், Recreation Room க்கு அழைத்து, அடுத்த நாளிலிருந்து எங்களின் பயணம் குறித்தும், உணவு வழங்கப்படும் நேரம், கடலில் பயணம் செய்யும் போது எங்களின் பாதுகாப்பு குறித்த விசயங்களையும் கப்பலின் சுற்றுலா இலாக்காவை சேர்ந்த மேலாளர் விபரம் அளித்தார்.

கப்பல் பயணம், பொதுவாக எல்லோரும் சொல்வது போல, தலைசுற்றல் வாந்தி போன்ற உபாதைகளை வர செய்கிறது, அதற்கு தகுந்தார் போன்று தேவையான மருந்து/மாத்திரைகளை கைவசம் வைத்துக்கொள்வது நல்லது.  என் கணவருக்கு கப்பலின் ஆட்டம் எந்தப்பிரச்சனையும்/வித்தியாசத்தையும் தரவில்லை. ஆனால் எனக்கு, கப்பலில் ஏறிய மாலை பொழுதே வாந்தியும் தலை சுற்றலும் வந்து, சோர்வடைந்தேன். இதுவரை பேரூந்து, ரயில் & விமானப்பயணங்களில் ஒரு முறைக்கூட எனக்கு தலைசுற்றலோ/ வாந்தியோ வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல் நாள்  எனக்கு பிரச்சனை இருந்தாலும், மற்ற நாட்களில் இல்லை.

கடல் அலையின் காரணமாக, கப்பல் ஓடும் போதும், நிற்கும் போதும், தாலாட்டுவதைப் போல, மேலும் கீழும், இப்படியும் அப்படியுமாக எந்நேரமும் ஆடிக்கொண்டே தான் இருந்தது. இதனாலாயே, கப்பலின் உள்கட்டமைப்பு அதற்கு தகுந்தார் போல அமைக்கப்பட்டுள்ளது. கப்பலில் நடந்து செல்லும் வழி நெடுகிலும், பிடித்துக்கொண்டு நடக்க கைப்பிடி வைக்கப்பட்டுள்ளது. அறையில் உள்ள கட்டில், நாற்காலி, மேஜை, அலமாரி என எல்லாவற்றையும் , கப்பலின் அசைவினால், நகர்ந்துவிடாமலும், விழுந்துவிடாமலும் இருக்க புத்திசாலித்தனமாக சின்னச்சின்ன நகாசு வேலைகள்  செய்யப்பட்டிருந்தன. பயணிகள் அமர்ந்து சாப்பிடும், சாப்பாட்டு அறையில் உள்ள மேஜை அனைத்திலும், பொருட்கள் நழுவி விழாமல் இருக்க விளிம்பில் மெல்லிய மரப்பலகையை இணைத்து தடுப்பான் அமைக்கப்பட்டிருந்தது.


சிறிய தேவைகளுக்குக்கான கடைகள்,அடிப்படை/தேவையான வசதிகள் கொண்ட மருத்துவமனை,உணவுக்கான தனி அறைகள், நீச்சல் குளம், மேல் மொட்டைமாடி தளத்தில் "ஹெலிக்காப்டர் இறங்கும் தளம்" என அநேகமாக எல்லா வசதிகளும் உள்ளேயே இருந்தன..மருத்துவர், காவலர் களுக்கான தனி அறைகள் ஒதுக்கப்பட்டு,அவர்கள் பணி நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரவு நேரங்களில் கப்பல் பயணமும், பகல் நேரங்களில் சிறு படகுகளின் மூலம் சுற்றலா பயணிகளை ஒவ்வொரு தீவிலும் இறக்கிவிட்டுவிட்டு, மாலை  திரும்பவும் அதே படகுகளில் மூலம் கப்பலுக்கு அழைத்து வந்துவிடுகின்றனர். இப்படியாக மூன்று நாட்கள்  3 தீவுகளும், 3 இரவுகள் கடலில் பயணமுமாக சுற்றலா நிறைவடைந்தது.

கப்பல் - என்றாலே இரண்டு விசயங்கள் நமக்கு நினைவில் வந்துப்போகும். ஒன்று கப்பலோட்டிய தமிழர். முதல் நாள் மாலை மேல் தளத்திற்கு சென்ற போதே இவரின் நினைவு தான் வந்தது.ஒரு கப்பலை வாங்கி, அதை பயன்படுத்துவது என்பது லேசுப்பட்ட விசயமல்ல. யானையைக்கட்டி தீணி ப்போடுவதை விடவும் பலமடங்கு சிரமம் மிகுந்தது.  கனமான இரும்பைக்கொண்டு கப்பல் கட்டப்பட்டிருந்தாலும், எந்நேரமும் உப்புத்தண்ணீரிலேயே இருப்பதால், அதற்குண்டான வினையைப்பெறுகிறது, பெயிண்ட் செய்யப்படாத எல்லா இரும்பு பொருட்களிலும் உப்புக்காற்று தன் வேலையை காட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, எல்லாக்கதவு பிடிகளும் ஸ்டைன்லஸ் ஸ்டீல், இவற்றில் உப்புக்காற்று பட்டு,  சொற சொறப்பாக அதன் பொலிவை இழந்துள்ளது. இவற்றை பராமரிப்பதென்பது இயலாதக்காரியம்.

700 பயணிகளின் அன்றாட கழிவுகள் & குப்பையை எங்கே கொட்டுகின்றனர், கடலில் கொட்டினால் கடல்வாழ் உயிரனத்திற்கு  நிச்சயம் பிரச்சனை என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, வேலையாட்கள் குப்பையை கடலில் கொட்டிச்சென்றது அதிர்ச்சியை தந்தது. அது கடலில் கொட்டக்கூடிய குப்பையா என்று தெரியவில்லை  இருப்பினும், ஒவ்வொரு பகலிலும் தீவுகளுக்கு செல்ல கப்பல் நிறுத்தப்படும் போது, குப்பைகளையும் அகற்ற கப்பல் நிர்வாகம் ஏற்பாடு செய்யலாமென தோன்றியது. அரசுத்தரப்பிலிருந்து இதற்கான முறையான சட்டத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் நாம் வளர்ந்தவிதம், அவற்றை மதித்து செயல்படுத்துகிறோமா என்பது கேள்வியே... ! இவற்றை விட முக்கியமானது, கப்பலுக்கு தேவையான மின்சாரம்  & தண்ணீர். Engineering.....கொடுக்கப்பட்ட லிங்க்'ஐ க்ளிக்கி தெரிந்துக்கொள்ளலாம்.

அடுத்து, டைடானிக் கப்பல் :). மேல் தளம் செல்லும் போதெல்லாம்,கப்பல் கவிழ்ந்தோ, உடைந்தோ போனால் நம் கதியென்ன என்று நினைக்கும் போதே, அங்கிருந்து தப்பித்து (பறந்து) நிலப்பகுதிக்கு வந்துவிட வேணுமென எண்ணம் எழுந்தது. அதே சமயம் சில்லென்ற கடல் காற்றும், கப்பல் ஓடும் ஓ'வென்ற சத்தமும், நிலப்பரப்பின் பரப்பரப்பு இல்லாமல் கண்ணுக்கு எட்டிய  தொலைவு வரை தெரியும் அடர்ந்த தண்ணீரும், அதன் ஆத்மார்த்த ஆழ்ந்த அமைதியும்,  கப்பலின் ஓட்டத்தின் வேகத்திற்கு போட்டியாக, கடல் நீர் கப்பலில் மோதி நுரையுடன் பிரிந்துபோகும் அழகும், உயரத்தில் பறக்கும் கடல் பட்சிகளும், ஆங்காங்கே நானும் இருக்கிறேன் உனக்கு த்துணையாக என துள்ளிக்குதிக்கும் மீன்களும், கைக்கெட்டும் தூரத்தில் தெரியும் சூரிய அஸ்தமனமும், கேப்டன் அறையில் இயல்பாக வேலை செய்யும் கேப்டன் & டீமும் என்னை பயத்திலிருந்து வெளிக்கொண்டுவந்தன....

அடுத்த பதிவில் தீவுகள் குறித்த விபரங்கள் தொடரும்....