சில பாடல்கள்.....

1. தோல்வி நிலையென நினைத்தால்...



2. ஒவ்வொரு பூக்களுமே....




3. கடவுள் தந்த அழகிய வாழ்வு ....




4. கடவுள் உள்ளமே...



5. வெற்றி நிச்சயம் இது ....



6. வெற்றி கொடி கட்டு..

க்ளைமாக்ஸ் காட்சிகள் !!

ஒரு திரைபடத்தில் க்ளைமாக்ஸ் காட்சிகள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது இந்த பதிவை எழுதும் வரை வந்து இருக்கிறதே, இது தான் இயக்குனரின் வெற்றி, பார்க்கும் பார்வையாளர்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த தாக்கம் எதிர்மறையாகும் போது சில நேரங்களில் படம் தோல்வி அடைந்தும் விடுகிறது. தோல்விக்கு க்ளைமாக்ஸ் மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. அதுவும் ஒரு காரணம்.

க்ளைமாக்ஸ் ..

1. காட்சி அமைப்புகள் நாம் நினைத்தவாறே அமைந்திருந்தாலும் ஒரு தாக்கம் இருக்கும்
2. காட்சி அமைப்பு இப்படி இருந்திருக்கலாமே என்ற எண்ணத்தை நமக்கு உண்டாக்கியும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.

பூ : தான் விரும்பியவனின் வாழ்க்கை நன்றாக அமையவில்லை என்று தெரிந்ததும், மனம் நொந்து, அடக்கமுடியாமல் "ஓ வென்று அழும் காட்சி....... " அந்த கடைசி சில நிமிடங்களில் அந்த பெண்ணை போலவே, அவன் திருமணத்திற்கு பின் சுகமாக இருக்கிறான் என்ற நம்மின் எதிர்பார்ப்பு பொய்யாகிறது. இந்த பெண்ணும் இனி நிம்மதியாக இருக்க மாட்டாளே ! என்ற தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.......

ஆனந்த தாண்டவம் : அந்த கடைசி கெஞ்சலில் அந்த பெண்ணிற்கு அவன் வாழ்வளித்திருந்தால், அவள் இறந்திருக்க மாட்டாள், கடைசியாக அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க ஏன் எல்லோரும் மறந்து போனார்கள் என்று தொக்கி நிற்கும் கேள்வி...... ஏன் இப்படி அனைவரும் சுயநலமாக இருந்து ஒரு உயிரின் இழப்பிற்கு காரணமானார்கள்......... அதுவும் அந்த பெண்ணை விரும்பியவன்.." சாரி" சொல்லி சென்றது... .....ம்ம்ம்ம்...:((((( இது தான் தாக்கம்...

சேது : இவ்வளவு சோகம், வலி வேண்டாமே என்று இன்றும் நினைக்கவைத்த படம்

பிதாமகன் : இதுவும் அப்படியே, சூர்யாவை சாக அடித்து இருக்க வேண்டாம் ..ஒருவரின் பாசத்தைக்காட்ட மற்றொருவரை சாகத்தான் அடிக்க வேண்டுமா என்ற கேள்வியோடு...

அன்பே சிவம் ; தனி மனிதனின் தியாகமும் அவனின் ஆசாபாசங்கள் அத்தனையும் மறுக்கப்பட்ட, அவனாலேயே மறைக்கப்பட்ட தொடர்கதை... தியாகிகள் எப்போதும் இப்படித்தான் தங்களின் வாழ்க்கையை தொடரவேண்டுமா என்ற கேள்வியோடு...

நந்தா : பாலா;வின் திரைப்படங்களில் மற்றொருமொரு சோகமான க்ளைமாக்ஸ்... ஏன் பாலாவிற்கு யாரும் சந்தோஷமாக வாழ்ந்தால் பிடிக்காதா என்ற கேள்வியுடன் ....

கல்கி : பாலச்சந்தர் அவர்களின் படங்களில் மிகவும் பிடிக்காத படங்களில் ஒன்று இது. என்ன ஒரு மோசமான கதை... க்ளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ள முடியாததற்கு காரணம் நம் கலாசாரம் அல்ல, ஒருவரை இப்படித்தான் தண்டிக்க வேண்டும் என்று எடுத்த முடிவு முட்டாள்தனமானது... அப்படி ஒரு ஆணிடம் இருந்து தான் குழந்தை பெற்று... அவனால் வாழ்க்கையை இழந்த குழந்தை இல்லாத இன்னொரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டுமா? இந்த படத்தில் க்ளைமாக்ஸ் மட்டும் இல்லை எதுவுமே ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லாததால் ஏற்பட்ட தாக்கம்...

உதிரிப்பூக்கள் : இப்பவும் எப்பவும் மிகவும் பிடித்த க்ளைமாக்ஸ், தன்னை உணர்ந்து, விஜயன் கதாபாத்திரம் தானே தன் முடிவை தேடிக்கொள்வது. அதை ஊர் சனம் அத்தனையும் நின்று வேடிக்கை பார்ப்பது. இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு ஒரு சல்யூட். "நான் ஒருவன் கெட்டவனாக இருந்ததால் நல்லவர்களான உங்களை எல்லோரையும் இன்று கெட்டவர்களாக்கிவிட்டேன் " என்ற *வசனம் எனக்கு இதில் மிகவும் பிடித்தது. (*வார்த்தைகளில் தவறிருக்கலாம் எப்பவோ பார்த்தப்படம்)

சிந்துபைரவி : குழந்தை இல்லா பெண்ணிற்கு இன்னொரு பெண் தியாகியாகி குழந்தை பெற்றுத்தரும் இயந்திரமாக (மட்டும்) ஆக்கப்பட்ட மற்றுமொருப்படம். இந்த தியாகி என்ற பெண்ணிற்கு ஆசைகள், எதிர்பார்ப்புகள், எதிர்கால வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லையா?...இல்லை இருக்காதா..?. என்னவோ.. புதுமை படைக்கிறேன் என்ற இவரின் படங்களில் பல எரிச்சல்களை எற்படுத்தியவை. இதிலும் அப்படி ஒரு க்ளைமாக்ஸ் ..மேல் சொன்ன கேள்விகளுடன்...

காஞ்சிபுரம் : க்ளைமாக்ஸ்'ஸில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரமும் இறந்துபோவார் என்று நினைத்தேன்.... இப்பவும் அவர் ஏன் இறக்கவில்லை என்ற கேள்வி தொக்கி நிற்கிறது, மகளை கொன்றுவிட்ட பிறகு, மகள் மட்டுமே வாழ்க்கை என்ற அவருக்கு ஏது (அ) எது இனி வாழ்க்கை? இயக்குனர், அதை ஏன் யோசிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துக்கொண்டே இருக்கிறது. இப்படி பைத்தியம் ஆக்கி படத்தை முடிக்க வேண்டுமா?

சிறைச்சாலை : பொய்யான காத்திருப்பு... சுத்தமாக பிடிக்கவில்லை..ஏன் இப்படி? பொய்யான காத்திருப்புகளுக்கு முடிவு இல்லையா... ? ஒருவர் மேல் வைத்திருக்கும் ஆழமான அன்பு நம்மை சிந்திக்க வைக்காமல் செய்துவிடுகிறதா? சிந்திக்க முடியாமல், பைத்தியம் போல் ஆக்கி கொண்டால் மனிதனின் அறிவுக்கு வேலை இல்லாமல் போகுமே... :((. என்னவோ இந்த க்ளைமாக்ஸும் ஏன் இப்படி என்ற கேள்வியோடு நிற்கிறது...

மின்சாரக்கனவு : நிஜமாகவே எதிர்பார்க்காத முடிவு, அரவிந்த்சாமி கதாபாத்திரம் சாமியார் ஆனது.. :)))))))) வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதற்கு உதாரணம் ... ஏன் காதல் தோல்வி இப்படித்தான் முடியவேண்டுமா என்ற கேள்வியோடு...

நான் கடவுள் : படம் இன்னமும் பார்க்கவில்லை.. பார்த்திருந்தால் நிறைய எழுத இருக்குமென்று நினைக்கிறேன்... பாலாவின் படமாயிற்றே.... . ?! :)

பதிவின் க்ளைமாக்ஸ் : இன்னமும் நிறைய நிறைய படங்கள் இருக்கின்றன... நினைவில் என்றும் இருப்பவை போல எழுதும் போது நினைவில் வந்தவை இவை மட்டுமே...

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்..... .அம்மணி க்கு மட்டும் க்ளைமாக்ஸ்'ஸே வர மாட்டேங்குது.... நானும் எதிர் பாத்து எதிர் பாத்து ஏமாந்து போறேன்.... :(((

பீட்டர் தாத்ஸ் :It was a great movie, but I didn't think it was going to end like that,

எது சுதந்திரம்....

பெண் - என்று தனியாக எடுத்துக்கொண்டால்,

1. அதிக சுதந்திரம்
2. சரியாக அறியப்பட்டு, புரியப்பட்டு நடைமுறை படுத்திக்கொள்ளும் சுதந்திரம்
3. சுதந்திரம் - அப்படீன்னா?

இந்தியாவை பொறுத்தவரை இந்த மூன்றும் எல்லா காலக்கட்டங்களிலும் இருப்பதாக தெரிகிறது. அதிக சுதந்திரம் எடுத்துக்கொண்டு அழிந்து போன பெண்கள் உண்டு, இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் சுதந்திரம் அவளை சுற்றியுள்ள அத்தனை பேரையும் பாதிக்கிறது என்பது அறியப்பட்ட ஒற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. எங்கேயோ படித்த நினைவு-

பெண்களை ஆண்கள் காவல் புரிவதால்
பெண்மை தாழ்ந்ததன்று.
வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது.
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?
- வாரியார்

"அவள் அப்படித்தான்" படத்தில் நடிகை சரிதா வை (என்ற கதாபாத்திரத்தை) திருமணம் செய்து கொண்டுவரும் கலைஞானி 'யின் முன்னாள் காதலியான ஸ்ரீபிரியா (என்ற கதாப்பாத்திரம்), கேட்பார் "பெண் சுதந்திரத்தை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க? " அதற்கு சரிதா மிகவும் யதார்த்தமாக கேட்பார் "அப்படின்னா?"

ரொம்பவும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்,

தேவைகள் என்பது அவரவரை பொறுத்தது, சுதந்திரம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, (இதிலும் சிக்கல் உள்ளது, எது சுதந்திரம் என்ற புரிதலோடு் சிலரும், புரிதல் இல்லாமல் பலரும்) அது பெரிய விஷயமாகவும் போராடி பெற்று நிலை நிறுத்தி வெற்றியை கொண்டாட வேண்டிய விஷயமாக இருக்கிறது

அது என்னவென்றே தெரியாமல், வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக அனுபவிப்பவர்களும் உண்டு. அதற்காக அந்த பெண் முட்டாள் அறியாமையில் உழல்பவள் அவளுக்கு உலகம் தெரியவில்லை என்று நினைக்கவேண்டியதில்லை, அப்படி நினைத்தால் அது வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மனப்பிதற்றல்கள் எனலாம்.

எல்லாம் தெரிந்தும், இது தான் என் வாழ்க்கை நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வட்டத்துக்குள் இருப்பவர்களுக்கும் சுதந்திரம் என்பது அந்த வட்டத்துக்குள் ஆரம்பித்தும், தொடர்ந்தும், முடிந்தும் விடுகிறது.

ஆக சுதந்திரத்தை எப்படி எடுத்துக்கொள்கிறோம் எப்படி பார்க்கிறோம், தனி நபர் நடைமுறை வாழ்க்கையில் அது எவ்வளவு எப்படி தேவைப்படுகிறது என்பது அவரவரை பொறுத்தது. வெளியில் நின்றுக்கொண்டு வீர ஆவேசமாக இது தான் "பெண் சுதந்திரம்" என்று கூச்சலிடவும், அறிவுறத்தவும், கோபப்பட்டு பொங்கி எழுதலும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒற்றுவராது.

"நீ நல்லா இருக்கியா ..சந்தோஷம்.. .நான் நல்லா இருக்கேனா... சந்தோஷம்...!! " இது தான் தாங்க வாழ்க்கை.... இதுல சுதந்திரம் எங்க இருக்கு எப்படி இருக்குன்னு நீங்களே தெரிஞ்சிகோங்க... புரிஞ்சிக்கோங்க... ... :)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


விகடனுக்காக எழுதியது -
http://youthful.vikatan.com/youth/india63/index.asp
http://youthful.vikatan.com/youth/india63/kavitha15082009.asp

நன்றி -சிபி
நன்றி - விகடன்


!!! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !!!!


.

கிருஷ்ணர் ரொம்பவே பாவம் தான்... :) கேட்டுத்தான் ஆகனும்..!!

இன்று கிருஷ்ண ஜெயந்தி... .. கிருஷ்ணனின் கவனத்தை என் பக்கம் திருப்ப இதை விட நல்ல ஐடியா எனக்கு கிடைக்கவில்லை :))))))))..அவர் ரொம்ப பாவம் தான் ஆனாலும் அதை எல்லாம் பார்த்தால் நடக்குமா?

பார்வைகள் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கர்நாடக சங்கீத பாடல் பதிவிடுகிறேன். என்ன சொல்ல வரேன்னா....

நான் முறையாக சங்கீதம் பயிலவில்லை.. .., முயற்சி செய்தும்.. உருப்படியாக பாட்டு கத்துக்கல... ஸ்வர வரிசை தாண்டியது இல்லை... அது என்னவோ என்ன மாயமோ...தெரியல.... பாட்டு ஆரம்பிக்கறதுக்குள்ள நான் வகுப்புக்கு போவதை நிறுத்திவிடுவேன் :))

இசையின் அரசி பாடிய இந்த பாடலை அடிக்கடி கேட்கும் பழக்கம் எனக்குண்டு, கேட்டு கேட்டு மண்டையில் ஏற்றி ஏதோ பாடி இருக்கேன்.

குறை ஒன்றும் இல்லை !!



தாளம், ....ம்ம்.. ..ராகம்.. ம்ம்.. எல்லாமே கேட்டு கேட்டு பாடியது தான்... சங்கீதம் பயின்றவர்கள் போன்று பாடி இருக்க வாய்பில்லை. ஏதோ முயற்சி செய்து இருக்கிறேன். சங்கீதம் பயின்றவர்கள் குறையை சுட்டி க்காட்டினால் திருத்திக்கொள்ளகிறேன்.

அணில்குட்டிஅனிதா :................... திருத்தி??!!!! என்ன செய்ய போறீங்க.. திருப்பி பாட போறீங்களா கவி... ?!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !! மக்கா....... உங்களுக்கு எல்லாம் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் கேட்டுக்கோங்க..அம்மணி கேட்டாங்களேன்னு யாராச்சும் குறை இருக்கு..... தாளம் இங்க நொல்ல அங்க நொட்ட ன்னு சொல்லி... அம்மணிய உசுப்பேத்தி இன்னொரு முறை பாட வச்சிங்க... நான் ச்சும்மா இருக்க மாட்டேன்..சொல்லிட்டேன்...... ... நான் என்ன செய்வேன்ன்னு எனக்கே தெரியாது சொல்லிட்டேன் ஆம்ம்மா.......... என்னைய டென்ஜன் ஆக்கிடாதிங்க.. :((

பீட்டர் தாத்ஸ் : Music is enough for a lifetime, but a lifetime is not enough for music

ப்ளாகர் சிலரை பற்றிய கவிதைகள்...

என்னால் முடிந்த, எனக்கு தெரிந்த, புரிந்ததை எழுதி இருக்கிறேன்.... தப்பு எவ்வளவு இருக்கோ அவ்வளவு போக மீதமுள்ள பொற்காசுகளை எனக்கு எல்லாரும் தனித்தனியா கொடுங்க... நோ குரூப்பிசம் என்டர்டயிண்டு..ஹியர்..!!

அப்புறம்... அந்த ஆட்டோ ஆட்டோ ன்னு சொல்றாங்களே..அதை பத்தி எல்லாம் உங்க யாருக்கும் இது வரைக்கும் தெரியாதுன்னு கேள்விப்பட்டேன்.. :) நிஜமா உங்களுக்கு எல்லாம் தெரியாது தானே ?!! ம்ம்ம் அது..!! அப்படியே மெயின்டெயின் செய்துக்கோங்க.... சரியா ..:)))

சந்தோஷத்துடன் சந்தோஷ்' லிருந்து ஆரம்பிக்கிறேன்..

அமைதிக்கு
மறுபெயர்
சாந்தி..சாந்தி சாந்தி... (சே...!!).
சந்தோஷ்...சந்தோஷ்...சந்தோஷ்.... !!
ஆனால்
நீ
பொங்கிவிட்டால்
பூமி
இல்லை...
நாங்களும்
நடுங்கிபோகிறோம் ...!!

**********
தலை கனத்தோடு
உன்
பக்கம் வந்தால்
தலைதெறிக்க
ஓட வைக்கிறாய்
உன்
ந(க்கல்)கைச்சுவை
எழுத்துக்களால்......!!

@@@@@@@@@@@@@@@@@@@@

முல்ஸ்

பப்பு
இல்லையென்றால்
உன்
பதிவுகள் இல்லை !!

பப்பு
நீ
எப்போது விழிக்க போகிறாய் ?
நாங்கள்
எப்போது
தப்பிக்க போகிறோம்... ?

****
எப்போதும்
உன்
கைகளில்
துண்டு காகிதம், கத்திரி,கலர்கள், கேமரா
ம்ம்ம்.ம்ம்ம்ம்..............
நீ
எதை
வேண்டுமானாலும்
வச்சி'க்கோ......ஆச்சி......
ஆனால்
எங்களையும்
பப்புவையும்
பத்தி
கொஞ்சமா
யோசிச்சிக்கோ..மச்சி....!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சிபி
ஸ்ஸ்ஸ்ஸ்.........
உன்
எதிர்கவிதைகளால்
என்
கவிதைகள்
பிரபலம் ..
ஹை........
நானும் பிரபலமாயிட்டேன்....

***
உன்
கலாய்த்தல்
பின்னூட்டம்
இல்லாத
என் பதிவுகள்
ஏதோ
ஒன்றை இழந்தது
போல..............!!

***
என்ன
பேசினாலும்
எப்படி
பேசினாலும்
சிரிக்கவைக்கிறாய்..

நீ
சுவாசிப்பது
என்ன
* N2O வா?

*N2O= Nitrous oxide, happy gas/laughing gas

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஜமால்


யூ த ஃப்ஸ்டூ !!

முடிவுகளை
பற்றி
உனக்கு
கவலையில்லை
எப்போதும்
நீ
ஆரம்பம்.... :)

@@@@@@@@@@@@@@@@@@@@

ஹே ராம்

டீச்சர்
வணக்கம்
டீச்சர்..!

குட்மார்னிங் டீச்சர் !!
குட் ஆஃப்டர்னூன் டீச்சர் !!
குட் ஈவினிங் டீச்சர் !!
குட் நைட்..டீச்சர் !!

டீச்சர்.ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............

அவ்வ்வ்வ்வ்வ்......இதுக்கு மேல எழுத வரல.....டீச்சர்'ஐ பாத்தாவே ஒரே பயம் பயம்மாஆஆஆ இருக்கு....!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சாக்லேட்

அன்பினால்
கட்டி
போடுபவன்
அது
எதுவரை
என்பதை புரிந்தவன்
அதுவரையில்
அதை
நிறுத்தியும் வைப்பவன் :)

இசைஞானி' க்கும்
இவனுக்கும்
என்ன
சம்பந்தம் ??

இதுவரை
எனக்கு
தெரியவில்லை..
உங்களுக்கு
தெரியுமா?

@@@@@@@@@@@@@@@@@@@@@

ரவி

இணையத்தின்
இம்சை !!

இளகிய
மனதோடு
எல்லோர்
இதயத்திலும்
ஒரு
ஓரத்தில்
இடம்
பிடித்தவன்... :)

@@@@@@@@@@@@@@@@@@@@@@

கிருஷ்ணா - லக்கி

உள்ளிருக்கும்
அவனில்
நீங்காத
நல்லவன்
இருக்கிறான்

சில
எழுத்துக்களில்
ஏனோ
எகத்தாளம்
தூக்கல்.!!

ஏனென்று
விடைக்கான
அவனால்
மட்டுமே முடியும்..

அன்பான
ராட்சஷன்.. !!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குசும்பன்

உன்
பதிவுகளில்
பெயர்
மாற்றங்கள்
அருமை....

குசும்பன்' ஐ
கூட
பசும் பொன் !!!
என்று
சொல்லலாமோ?!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பிரபா - தெக்கிக்காட்டான்

நீ
பேசாதவரை
நாங்கள்
தப்பித்தோம்

நீ
பேச ஆரம்பித்தாலே............
கடவுள்
பஞ்சியை
கொடுத்ததின்
நோக்கம்
விளங்கிவிடும்... !!

(ஹி ஹி..நீ பேச ஆரம்பித்தாலே நாங்கள் பஞ்சியை காதில் அடைத்துவிடுவோமே.... )

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

முத்துலெட்சுமி

முத்தான
உன் பேச்சை
கேட்டபிறகு
ஏனோ
உன் எழுத்துக்களில்
முத்தில்லாதது
போன்ற
உணர்வு...........

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

புனிதா

நீ
பிழியும் சோக கவிதை
கண்டு
நிறுத்திவிட்டேன்
என்
சோகத்தை
பிழிய....

@@@@@@@@@@@@@@@@@@@@@

உண்மை தமிழன்

ரிப்பன்.........
பட்டத்து வால்............
ஜெட்' விட்டு சென்ற புகை...........
மாநகர இரண்டு கோச் பேரூந்து.........
மெரினா கடற்கரை.........

இப்படி
நீளமாக எதை பார்த்தாலும்
உன் பதிவுகள்
நினைவுக்கு வருகிறதே முருகா !!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சிவா

"ஏதோ சொல்கிறேன்"
என்று...
எதையாவது
சொல்லாமல்
இது' தான்
என்று
சொல்பவன்..!!

(மன)
ஆழத்தை கடக்க
அசரும்
போதெல்லாம்...
இரண்டொரு வார்த்தையில்
எளிதாக
கடக்க வைப்பவன்..

எதையும்
"இல்லை" யென
சொல்லாத
உன் புன்னகை'யும்
உன் நட்பும்..

நான் பெற்றது
கடவுள்
எனக்களித்த
ஒரு வரம் ..!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அணில் குட்டி அனிதா : பொற்காசு கலக்ட் பண்ண இப்படி ஒரு வழியா.. அம்மணி சோத்துக்கு சிங்கி அடிக்கறாங்களோ....??? இப்படி டீசன்ட் பிச்ச ஆரம்பிச்சிட்டாங்க.... ஏதோ பாத்து போடுங்கப்பா தட்டுல... :)))))

பீட்டர் தாத்ஸ் : Know yourself, master yourself, conquest of self is most gratifying.

வீட்டை விட்டு.........

வந்தாகிவிட்டது.. எத்தனை வருட கனவு.. இத்தனை வருடங்கள் கழித்து நிறைவேறும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால் நடந்துவிட்டது. சுதந்திரக்காற்றை சுவாசிக்கலாம், சுதந்திரமாக சிந்திக்கலாம், பேசலாம், சிரிக்கலாம், அழலாம், மனம் சொல்வதை மட்டும் கேட்கலாம்... இந்த சுதந்திரக்காற்று எத்தனை சுகமாக இருக்கிறது.... ஒரு முறை அடிவயிற்றுவரை காற்றை உள்ளிழுத்து சுவாசி்க்கிறாள் சுவாதி. அவள் கையை ஒரு முறை கிள்ளி பார்த்துக்கொள்கிறாள் ..உண்மைதான்....வந்தாகிவிட்டாது.

ஆயிற்று, ஏழு மணிக்கு ரயில், 6.45 க்கு வந்திவிட்டேன். லோயர் பர்த், 2ஆவது ஏசி கோச், லக்கேஜ் அரேன்ஜ் செய்துவிட்டு, டிக்கெட்''டை ஒரு முறை செக் செய்துவிட்டு, செக்கர் வந்தால் டிக்கெட் டை எடுக்க வசதியாக கைப்பையின் சைட் சிப்'பில் வைத்துக்கொண்டேன். கொஞ்சம் ரிலேக்ஸாக பின்னால் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடி... நடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பி பார்க்கிறேன். என்னவோ சொல்ல முடியாத ஒரு பயம் கவ்வுகிறது..... அய்யோ.....ஏன் இது? வேண்டாமே.....கண்விழித்து நேராக உட்காருகிறேன். இல்லை...இனி எதையும் திரும்பி பார்க்கக்கூடாது. இந்த நிமிடம் எனக்கு சொந்தம், இதை மட்டும் யோசிக்கவேண்டும். இதை மட்டும் ரசிக்க வேண்டும்.

என்னவோ என் முகம் ரொம்பவும் இறுக்கமாக இருந்தது. இப்படி ஆகி, ஆக்கப்பட்டு பல வருடங்கள் ஆயிற்று. சிரிக்க வேண்டுமென நினைக்கும் போது எல்லாம் சுற்றி இருப்பவர்களின் வார்த்தைகள் முகத்தை சிரிக்க விடாமல் இறுக்கிவிடும். எங்கே சென்றது என் புன்னகை ? எப்போதும் யாரை பார்த்தாலும் அப்பழுக்கின்றி சிரிக்கும் என் முகம் எங்கே போயிற்று? என் சிரிப்பு அத்தனையும் சுரண்டி எடுத்துவிட்டு, என் முகத்தை மட்டுமல்ல என் மனதையும் இப்படி ஆக்கியது யார்? வெளியில் இருப்பவர்களா இல்லை எனக்குள் இருக்கும் நானா?

இமைகள் உயர்த்தி யார் தன்னுடன் பிரயாணம் செய்கிறார்கள் என்று பார்க்க தோன்றவில்லை. பார்த்து என்ன செய்ய போகிறேன். அவர்கள் ஓவ்வொருவரின் புன்னகையிலும் ஏதோ ஒரு பொய் ஒட்டிக்கொண்டு இருக்கும். உதட்டோர சிரிப்போடு, எங்கே போகிறேன் என்று இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால் மட்டும் என்ன செய்ய போகிறார்கள்?. இத்தனை வருடங்களாக நான் இழந்தவிட்டதை திருப்பி கொடுத்துவிடுவார்களா? இல்லை நீ போகாதே உனக்கு தேவையானதை நாங்கள் செய்கிறோம் என்று சொல்ல போகிறார்களா? அப்படி சொல்லத்தான் இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இல்லை அல்லவா? அப்படி இருக்க ஏன் இவர்களிடம் என்னைப்பற்றி சொல்ல வேண்டும். ஒருவரையும் பார்க்க பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட எத்தனையோ பேர் என்னின் இந்த முடிவிற்கு காரணம். சக மனிதர்களின் போலி சிரிப்பில் இனியும் என்னை ஏமாற்றிக்கொள்ள நான் தயாராக இல்லை. போதும் ..போதும் என்கிற அளவு இந்த பொய்யான பேச்சையும் சிரிப்பையும் புன்னகையையும் பார்த்தாகிவிட்டது.

போதுமான பணம் பேங்கில் இருக்கிறது, ப்ளான் செய்த படி எல்லாம் சரியாக நடக்கிறது. எப்படியும் இரண்டு நாட்களில் போய் சேர்ந்துவிடுவேன். ம்ம்..... எதிர்பார்த்த என் வாழ்க்கையின் ஒரே ஒரு ஆசை இது... ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் ஆசைப்பட்டது முதல் முறையாக நடக்கிறது. இதோ ரயில் புறப்பட்டு விட்டது. இனி யாரும் என்னை தடுக்க முடியாது. என் ஆசை நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில், இறுக்குமான என் முகம் லேசாக தளர்ந்தது. அங்கேயும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? மீண்டும் முகம் இறுகியது. மீண்டும் அப்படிப்பட்ட மனிதர்களை தான் சந்திக்க போகிறேனா? எங்கே சென்றாலும் இவர்கள் நிழலை போன்று துரத்திக்கொண்டு தான் வருவார்களோ?.

"டீ..டீ டீ....காப்பி.காப்பி......." ஒருவர் விற்றுக்கொண்டு சென்றார்...

எங்கேயோ சுற்றிக்கொண்டிருந்த என் மனம் சுற்றுவதை நிறுத்தி, சற்றே இந்த சத்தத்தினை கவனிக்க ஆரம்பித்தது.

பின்னாலேயே...."டின்னர் ஆர்டர் ப்ளீஸ்".மற்றொருவர் சின்ன நோட்டோடு வந்தார்.

"என்ன இருக்கு" ...... நான்

"சப்பாத்தி, ரோட்டி & மீல்ஸ் மேடம், வெஜ் ஆர் நாந்வெஜ்?"

அங்கே போனால் கண்டிப்பாக வெஜ் தான்... ஏன் இப்ப நாந்வெஜ் சாப்பிட்டால் என்ன? ........... ஒன் நாந்வெஜ் மீல்ஸ் ...ப்ளீஸ்! சீட் நம்பர் 32"

எழுதிவிட்டு கடந்து சென்றுவிட்டான்.

படிக்க நிறைய புத்தகங்கள் எடுத்துவந்தேன். அவற்றில் சில வாழ்க்கையின் தத்துவங்கள், தன்னம்பிக்கையை அள்ளித்தரும் புத்தகங்கள். வாழ்க்கையின் தத்துவங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை எடுத்தேன்... என்னவோ அந்த புத்தகத்தை எடுத்தவுடன், எனக்குள் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது. சிரிக்க முடியவில்லை, எல்லோரும் என்னை திரும்பி பார்ப்பார்கள், பைத்தியக்காரி என்று பட்டம் சூட்டுவார்கள். அவரவர் வேலையை தவிர அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதே பலருக்கு இங்கே வேலை. இவர்களுக்கு மத்தியில் எல்லோரையும் போல் நானும் நடிக்க வேண்டும். ஆனால் என் சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. மனதுக்குள் சத்தம் போட்டு சிரித்தேன். என் வாழ்க்கையை கொண்டு இப்படி ஓராயிரம் தத்தவ புத்தகங்கள் என்னால் கூட எழுத முடியும். ம்ம்ம்.... எழுதத்தான் போகிறேன். அவற்றை எல்லாம் விற்று பெரிய பணக்காரி ஆகப்போகிறேன். என் சிரிப்பை என்னால் இன்னமும் அடக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டே இருந்தேன். கண்களில் லேசாக தண்ணீர் வர ஆரம்பித்தது. யாரும் அறியாமல் துடைத்து, சுவாதி போதுமே சிரித்தது..எனக்குள் நானே சொல்லிக்கொண்டு சிரிப்பை அடக்கினேன்.

மனம் எதை எதையோ யோசித்தது. கண்ணை மூடி மனம் சொல்லுவதையும், அது போகின்ற வழியையும் கவனமாக கவனிக்க ஆயத்தமானேன். வேகமாக பறந்தது.....ஏழு கடல் ஏழு மலை தாண்டி..சென்றது.... இதோ...ஆப்பிரிக்க காடுகள்......வந்துவிட்டன..... காடுகளுக்குள் என்னை அழைத்து சென்றது. பச்சை பசேலென்ற அந்த காட்டில், பூக்களை, இலைகளை உரசிவரும் காற்றில் ஏதோ ஒரு சொல்ல முடியாத ஆனால் சுகமான வாசனை என்னை தழுவி சென்றது. லேசாக வழுக்கும் குறுகிய பாதையில் மழை ஓய்ந்த அந்த காலை நேரத்தில் ஈர இலைகள் என் உடலை நனைக்க நான் மட்டும் தனியாக சென்று கொண்டே இருந்தேன்....

நத்தை ஒன்று என் காலடி ஓசையில் பயந்து உடம்பை உள்ளே இழுத்துக்கொண்டது. எனக்கும் இப்படி ஒரு ஷெல் இருந்தால்?, என் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.... ....ஷெல் இருந்தால்.....??!!!! , பிரச்சனை வரும் போது எல்லாம் உள்ளே போயி புகுந்து க்கொண்டு என்னை காப்பாற்றிக்கொள்ளலாம். அதற்கு நான் நத்தையாக இருந்து இருக்கலாம், சுவாதி'யாக இருந்து இருக்க வேண்டாமே.... ...

பாம்பு ஒன்று வேகமாக கடந்து சென்றது...பயமொன்றும் எனக்கில்லை. என்னை பார்த்து பாம்பிற்கும் கண்டிப்பாக பயம் இருக்கும், நான் ஏன் அதைப்பார்த்து பயப்படவேண்டும்.? .....

எங்கே செல்கிறேன் என்று தெரியாத ஒரு நீண்ட பயணம்... அந்த ஒற்றையடி பாதை போயிக்கொண்டே இருக்கிறது. மரங்கள் கடந்து வெறும் பூக்கள் மட்டுமே உள்ள பூமி வருகிறது.."மேலே வானம் !! கீழே பூக்கள். !!" வேறு ஒன்றுமே அங்கு இல்லை. ஆஹா எத்தனை அழகு.!! என் கண்களை கடவுள் இதற்காக தான் படைத்தானோ.... அப்படியே சிலையாக நின்று கண்ணுக்கு எட்டிய அளவு பூக்கக்களின் வண்ணங்களையும், வாசனையும் ரசிக்கிறேன். இந்த பூக்கள் அத்தனையும் இந்த நொடி எனக்கு மட்டுமே சொந்தம்... நினைக்கும் போதே பொங்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை....என் முகமும் அந்த பூக்ககளை போல் மலர்ந்து சிரிக்கிறது.

படப்படவென பறந்து வந்து அமரும் வண்ணத்துப்பூச்சி... ..........பட்டாம்பூச்சி' யா? வண்ணத்துப்பூச்சி'யா?........................... பட்டாம்பூச்சி .................... பட்டாம்பூச்சி........... பட்டாம்பூச்சி' யை பார்த்தவுடன்.. நினைவலைகள் எங்கோ ரிவைண்டு செய்த டேப் ரிக்கார்டர் போல பின்னுக்கு இழுத்து செல்கிறது.. ...... போகாதே...! அங்கே போகாதே... !! இங்கேயே இரு..!! இது தான் சுகம்..சந்தோஷம்.... அங்கே போகாதே.. !! அது வேண்டாம்.. !! ... .அதனிடம் போகாதே..!! உன் கண் எதிரில் இருக்கும் வண்ணத்துப்பூச்சியை பார்த்து ரசி.... ! பார்.. உன் கண் முன்னே எத்தனை வண்ணத்து பூச்சிகள்..?? இவை எல்லாமே அதே போல் தான்... எல்லா வண்ணங்களும் இருக்கிறது... பூவீன் மீது அமர்ந்து அழகாக தேனை உறுஞ்சிகிறது..................

நான் சொல்லுவதை மனம் கேட்கவில்லை........மீண்டும் ஓடுகிறது............... வேகமாக பின்னால் நானும் ஓடுகிறேன்.. ...அய்யோ........ நில் செல்லாதே !! ............... .! ... .இங்கேயே நில்....செல்லாதே....... !! இழுத்து பிடிக்கிறேன் மனதை.. மீண்டும் இறுகி போகிறது என் முகம்... ஏன் இப்படி ? சந்தோஷமாக சில நிமிடங்கள் கூட இந்த மனம் விட மறுக்கிறதே ..... ஏன் இப்படி இல்லாத ஒன்றை தேடி ஓடுகிறது. .எதிரில் இருக்கின்ற ஓராயிரம் மலர்களும், அதனை மொய்க்கும் வண்ணத்துப்பூச்சிகளும்.......

"மேடம்.... டின்னர்.... 45 ரூபீஸ்..சேன்ஞ் ப்ளீஸ்....'

சத்தம் என் காதுகளை தொட, ஆப்பிரிக்க காடுகளிலிருந்து ....இதோ இங்கு வந்து குதித்து விட்டேன்.

தட்டை வாங்கிக்கொள்கிறேன்.பணத்தை கொடுக்கும் போது, பசிக்கு நேரத்திற்கு உணவளிக்கும் அவருடைய கண்களை நேராக பார்த்து, புன்னகையோடு.. "தாங்ஸ்...!!"

அவரும் புன்னகைக்கிறார், சென்றுவிட்டார்.

என் சிந்தனை திரும்ப எங்கேயோ செல்லும் முன் சாப்பிட்டுவிடலாம். சாப்பிட ஆரம்பிக்கிறேன். சிக்கன்... கிரேவி..., சிக்கன் கிரேவி....... என் குழந்தைக்கு சிக்கன் பிடிக்குமே... அவனுக்கு கொடுக்காமல் தனியே சாப்பிடுகிறேனே....? எங்கே என் குழந்தை? அவனில்லாம் எப்படி நான் தனியே இருக்கிறேன்? தனியே சாப்பிடுகிறேன்? அவனை விட்டுவிட்டு எப்படி நான் தனியே இங்கே.? அவன் எங்கே? அவனுக்கு சாப்பாடு யார் கொடுப்பார்கள்.?

ரயில் ஏன் இத்தனை வேகமாக போகிறது,... என்னை சுற்றியுள்ளவர்கள் அத்தனை பேரையும் பார்க்கிறேன். எல்லோரும் ருசித்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

எல்லோரையும் பார்த்து, "யாராவது ரயிலை நிறுத்துங்கள், என் குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.... நான் போகவேண்டும். ..நான் திரும்ப போக வேண்டும்...ரயிலை நிறுத்துங்கள்.........." கத்துகிறேன்.... யாரும் நான் கத்துவதை பொருட்படுத்தவில்லை. என்னை கவனிக்க கூட இல்லை. நான் தனியே கத்திக்கொண்டே இருக்கிறேன். "நான் கத்துவது உங்கள் காதில் விழவில்லையா?" ஒரு வேளை நான் கத்துவது அவர்கள் யார் காதிலும் விழவில்லையோ? ஏன் விழவில்லை.? தொண்டையை ஒரு முறை அழுத்தி பார்க்கிறேன். கணைத்துப்பார்க்கிறேன். திரும்பவும் கத்துகிறேன்...

"தயவுசெய்து யாராவது ரயிலை நிறுத்துங்கள்...... என் குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்... ரயிலை நிறுத்துங்கள்...நான் திரும்ப செல்லவேண்டும்...நிறுத்துங்க...ப்ளீஸ்....நிறுத்துங்க.............".எழுந்து ரயிலை நிறுத்தும் சங்கிலியை இழுத்துப்பிடிக்க எட்டுகிறேன்.........அது உயரமாய் இருக்கிறது, எனக்கு எட்டவில்லை......

" நிறுத்துங்க ப்ளீஸ்...யாராவது ரயிலை நிறுத்துங்க.... ப்ளீஸ்..." அழ ஆரம்பிக்கிறேன்...... "

*******************