உனக்கு 20 எனக்கு 18

நண்பியிடமிருந்து 9.20 க்கு ஃபோன்.......

ஹல்லோ..

இப்பதான் தூங்கி ஏன்சியா? ஏன் குரல் ஒருமாதிரியா இருக்கு? உடம்பு சரியில்லையா?

இல்லல்ல....

சரியா கேக்கல..ஆமா ..நீ ஏன் இவ்ளோ மெதுவா பேசற?

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.....மெதுவா பேசு... என் கொழந்த தூங்கறான்...

ஹா ஹா ஹா... உன் கொழந்த தூங்கினா நீ மெதுவா பேசு.. நான் ஏன் மெதுவா பேசனும்..?!!

உலகமே மெதுவா தான் பேசனும்.. ... !!!!

அடிப்பாவி..... :))))))

# விடுமுறை நாளில் நவீனின் தூக்கம் !!

****************************************
 
Interstellar ஆ பாக்கற?

ம்ம்...

இதுவரைக்கும் உனக்கு என்ன புரிஞ்சிது (சிரிப்பை அடக்கிக்கிட்டே)

...................

என்ன லுக்கு.... ?? ஹா ஹா ஹா.. (அவனால இப்ப சிரிப்ப அடக்கவேமுடியல.. ) இதுவரைக்கும் ..உனக்கு..... என்ன ..... புரிஞ்சிது...?!

...................
 
ஹா ஹா ஹா... :))))   ஏதோ ஆக்ஷன் படம் பாத்தோமா, ஹாரார் படம் பாத்தோமான்னு இல்லாம ..உனக்கெதுக்கு இந்த வேல? :))))) ஹா ஹா ஹா

இங்லீஷ் ல சப் டைட்டில் போடறாங்கடா.. (சீரியஸ்லி வாட்சிங் மூவி)

போட்டா..? உனக்கு புரிஞ்சிடுமா? :))))))))))))

அடிங் ஓடிப்போடா... ! :)))

****************************
 
கடைக்கு போயும் மறந்துட்டேன், வரும் போது ஒருகிலோ வெங்காயம் வாங்கிட்டு வா...

வீட்டுக்குள் நுழையும் போதே, பக்கத்துக்கடையில் வெங்காயம் நல்லாயில்ல....

ஏண்டா வர வழியெல்லாம் விட்டுட்டு , பக்கத்துக்கடைக்கு வந்த? அங்க விலை அதிகம், நல்லாவும் இருக்காது, இங்கன்னா நானே வாங்கியிருக்க மாட்டேனா? சரி போய் வேற எங்கையாச்சும் வாங்கிட்டு வா, வெங்காயம் இல்லாமல் எதும் செய்யமுடியாது.

பரவாயில்ல செய்யாத ...
*******

ரீஃப்ரெஷ் செய்துட்டு வந்து...

 வெங்காயம் வாங்கித்தரலன்னு, வேணும்னே எதாச்சும் உப்புமா மட்டும்  நாளைக்கு செய்தேன்னு வை, காசு கையில் இருக்கு, உடனே உன் புருஷன் மாதிரியே "ஒன்வே" டிக்கெட் புக் பண்ணி உன்னை கொல்கத்தா பேக் பண்ணிடுவேன் ஜாக்கறதை.!!!.

அடப்பாவி... :))))))))))))) (ஒன்வே' வாஆஆஆம்..)
****************************
 
(கம்பியூட்டரில் தலையை விட்டுட்டு இருக்கிறான்)
 
டேய்....இங்கப்பாரு.. அம்மா சொல்றதை கொஞ்சம் கேக்கறியா?

அன்னாந்து கேவலமா ஒரு லுக் விட்டு..    'ம்ம்ம் ம்ம்ம்'

ராத்திரி ரொம்ப நேரம் முழிச்சி இருக்கறது கண்ணுக்கு நல்லதில்ல,

நெக்ஸ்ட்

8 மணி நேரம் கண்டிப்பா தூங்கினா தான் மூளை தெளிவா வேல செய்யும்..

நெக்ஸ்ட்

தூக்கம் இல்லாம போனா உடம்பு ரொம்ப ஹீட் ஆகி,, தலைமுடி கொட்டும், ஹீட் ல வர எல்லா டீஸீஸும் ஒன்னொன்னா வரும்..

நெக்ஸ்ட்..

எரும.. என்ன நெக்ஸ்ட் நெக்ஸ்ட் ங்கற சொல்றது புரிஞ்சிச்சா இல்லையா?

நீ சொன்னதை கேட்டாச்சி , உன் டைம் முடிஞ்சிப்போச்சி கெளம்பு...

கிர்ர்ர்ர்ர்..
 
******************************

நீ பெரியவனா வளந்துட்டதால,  நான் உனக்கு சின்னவளா ஆகிடமாட்டேன். நான் உன்னோட அம்மாங்கறத மறந்துடாத.....

 :)))))) ஹே ஹே.... அப்புறம்... ?!!

(ஸ்ஸ்ஸ்.. எப்படி டயலாக் டெலிவரி செய்தாலும் அசர மாட்றானே..?! )
*****************************

அப்பா மாதிரியே உனக்கும் அபீஷியல் பர்த்டே வேறயா?

ஆமா...

ஏன் இரண்ரெண்டு??

இப்ப மாதிரியெல்லாம் இல்ல, அட்மிஷன் அப்ப பிறந்த தேதி வருஷம் கேப்பாங்க, அவங்க ஒரு தேதி வருஷம் வச்சியிருப்பாங்க, அதுக்கு அதிகமா இல்ல குறைச்சலா இருந்தா, அவங்களே ஒரு மாதம்/வருசத்தை தகுந்தமாதிரி மாத்தி போட்டுக்குவாங்க.. அப்பாக்கு வருசம் தவிர தேதி மாசம் இரண்டும் மாறியிருக்கு....எனக்கு மாசம் மட்டும்.

ஓ....

அதுமட்டுமல்ல, கைய வளச்சி காதை தொட சொல்லுவாங்க. தொட்டுட்டா வளந்துட்டோம், ஸ்கூல் ல சேர்த்துக்கலாம்னு  முடிவுசெய்துக்குவாங்க

இது வேறையா? உடம்பு வளந்தா போதுமா? அறிவு வளர வேணாம்..?? உன்னையெல்லாம் அப்படியில்ல செக் பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கனும்?

உஸ்ஸ்ஸ்ஸ் ..........(எங்க ஆரம்பிச்சாலும் என்கிட்டவேயில்ல வந்து முடிக்கிறான்?)
 
********************
 
பீட்டர் தாத்ஸ் : A Boy's best friend is his Mother - Joseph Stefano

ஜெ'வின் நினைவாக....

அம்மையார் ஜெயலலிதாவின் நினைவாக அவரது பாடல்களை பதிவு
செய்யனும்னு நினைத்திருந்தேன்,உடனேயே அதை செய்யமுடியல. செய்ய ஆரம்பித்தவுடன் கண்ணதாசனும், வாலியும் மாற்றி மாற்றி என்னை ஆக்கரமித்துக்கொண்டனர்.

என்னமாதிரியான பாடல்வரிகள்?? ஸ்ப்ப்பா..எப்படி இப்படியெல்லாம் எழுத முடிந்தது.... வியந்து வியந்து பலமுறை திரும்ப திரும்ப கேட்டு லயித்துப்போய்விட்டேன்.

குறிப்பிட்டு சொல்லனும்னா,  " சந்ரோதயம் ஒரு பெண் ஆனதோ..." இதை தொடர்ந்து 10-15 நாள் பாடிக்கிட்டே இருந்தேன். இது ஒன்றுமட்டுமா? ... "குங்குமப்பொட்டின் மங்களம்.."

"நல்லது கண்ணா...கனவு கனிந்தது நன்றி உனக்கு"

"எங்கே அவள் என்றே மனம்.".. அடடா.....இதுமட்டுமா......

"ஒரே முறை தான் உன்னோடு பேசிப்பார்த்தேன்......" ...

சரிதான்.......... இது இப்பத்திக்கு நிக்காது.. பாட்டைக்கேட்டுப்பாருங்க..

https://soundcloud.com/gkavith/jj7

இதில் 1-7 ஆக பிரித்து பாடியிருக்கேன். முடிந்தளவு எனக்கு பிடித்தப்பாடல்களை பாடியுள்ளேன். இங்க ஒன்னே ஒன்னு (7) தான் பதிவிட்டிருக்கேன்..  உங்களுக்கு பிடித்தால் மிச்சமிருக்கும் பாடல்களை இங்கப்போய் --> www.soundcloud/gkavith கேளுங்க.  நான் பாடியதற்காக இல்லாட்டியும், பாடல் வரிகளுக்காகவாச்சும் கேட்டுப்பாருங்க...# ஜெயலலிதா நடித்த திரைப்படங்களிலிருந்து பாடல்கள்

எங்க வீட்டு சமையல் : டிம்மர் டெவில்

டிம்மர் டெவில் (Dimer Devil) மேற்கு வங்கத்தின் மிக பிரசித்திப்பெற்ற முட்டையில் செய்யப்படும் சிற்றூண்டி.

இங்க பொதுவாக எதையும் கடையில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, செய்முறை தெரிந்துக்கொண்டு, வீட்டில் செய்து சாப்பிட்டால் நல்லது. காரணம் ஒன்று சுத்தமின்மை, இரண்டாவது பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய். ஒருமுறை பொரித்து வைத்ததை நாம் கேட்டவுடன் இன்னொரு முறை எண்ணெய்யில் போட்டு சூடாக்கி தருவது இவர்களின் வழக்கம், அதனால், அதிகளவில் அது எண்ணெய் இழுத்துக்கொண்டு வரும். நம்மூர் மாதிரி பச்சக் கச்சக்னு பேப்பரில் அமுக்கி எண்ணெய் எடுத்து சாப்பிடமுடியாது. ஏனென்றால், அநேகமாக எல்லாமே உருண்டை வடிவில் இருக்கும், அல்லது சிக்கன், முட்டை, மீனில் செய்யப்பட்டவை, அமுக்கினால் சாப்பிடமுடியாதளவு விண்டு தனித்தனியாகவிடும்..

தேவையான பொருட்கள் :

சீரகம் : 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
தனியா தூள் 1 ஸ்பூன்
சீரகப்பொடி : 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி : 1/2 ஸ்பூன்
கரம் மசாலா : 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் : 1
வெங்காயம்: 2
உருளைக்கிழங்கு: 3
முட்டை : 4
பிரட் தூள் : ஒரு கைப்பிடி
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : தேவைக்கேற்ப
கொத்தமல்லி- பொடியாக நறுக்கியது ஒரு கைப்பிடிளவு

செய்முறை :
  1. வாணலில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சீரகம் சேர்ந்து
    பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  2. மிளகாய், தனியா, சீரகம், கரம் மசாலா, மஞ்சள் பொடிகளை சேர்த்து நன்கு கலக்கி வதக்கவும்
  3. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை கொட்டி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, இறக்கி வைத்துவிடவும்
  4. 3 வேகவைத்த முட்டைகளை பாதியாக வெட்டிக்கொண்டு அதனை மேற்சொன்ன உருளை மசாலைக்கொண்டு ஒரு லேயர் நிரப்பி உருண்டையாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு தட்டில் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்

  6. பிடித்துவைத்த உருண்டைகளை அதில் பிரட்டி, மற்றொரு தட்டில் பரப்பிவைத்துள்ள பிரட் துகள்களில் பிரட்டி, எண்ணெய் காயவைத்து அதில் போட்டு பொன்னிறாமாக பொரித்து எடுக்கவும்
  7. தக்காளி சாஸ்ஸாடு சூடாக பரிமாறவும்.
மேற்குவங்கத்தின் எல்லா உணவுகளிலும் தாளிக்க சீரகமும், மசாலாவோடு சீரகப்பொடியும் சேர்க்கிறார்கள். தாளிக்க கடுகு எண்ணெய்யும், மீன் தயாரிக்கும் முறைகளில் கடுகை அரைத்து விழுதாகவும் சேர்க்கிறார்கள். இவை செரிமானத்திற்கும், உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்றாலும் நமக்கு கடுகு எண்ணெய் பழக்கமில்லாததால், தாளிக்க நல்லெண்ணெய்யும் பொரிக்க அவரவருக்கு பிடித்த எண்ணெய்யும் பயன்படுத்திக்கலாம்.

இதில் கைவசம் சீரகப்பொடியும்,கரம் மசாலாவும் இல்லாதததால் அவற்றை சேர்க்காமல் செய்தேன். சுவையில் ஏதும் வித்தியாசம் தெரியவில்லை.  

கலர் & உடலுக்கு கெடுதியான பொருட்களை கலப்படம் செய்கிறார்கள் என்பதால் மஞ்சள் பொடி தவிர்த்து, சமையல் சார்ந்த எந்த ரெடிமேட் பொடி வகைகளும் கடையில் வாங்குவதில்லை. எல்லாமே தேவைக்கேற்ப மிஷினில் கொடுத்து/மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்வேன்.

அணில் குட்டி : சாப்பாடே பிரதானம்னு வாழ்ற பெங்காலிகள் இடத்திற்கு வந்து அம்மணியும் நல்லாவே விதவிதமா கட்றாங்க... :)

பீட்டர் தாத்ஸ்: Nothing brings people together like good food

சிவலிங்கம்

இந்த மாதிரியொரு கனவு இதுவரை வந்ததேயில்ல. ஜெகஜோதி' ன்னு சொல்லுவாங்களே அதன் அர்த்தத்தை இந்த கனவில் கண்டேன்.

என் கணவரின் (சென்னை) அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் இரண்டு பெண்களோடு எனக்கு பேச வேண்டியிருந்தது.(நிஜத்திலும் பேச வேண்டியிருக்கு, ஆனால் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கல) அவர்கள் அலுவலகத்தில் உள்ள மற்றவர்கள் அறியாதவாறு வேறு எங்காவது ரகசியமாக சந்தித்து பேசலாம் என முடிவு செய்து என்னிடம் முன்கூட்டி தெரிவித்திருக்கின்றனர்.

மூவரும் ஒன்றாக கிளம்பினாலும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என ஒருவர் முன்னே செல்ல, நான் இரண்டாவது, எனக்கு பின்னே ஒருவர் என நடக்க ஆரம்பிக்கிறோம்.

நாங்கள் நடந்துக்கொண்டிருக்கும் சாலை முக்கிய பிரதான சாலையாக தெரிகிறது. அந்த சாலையில், அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்த இடம் வெகு தொலைவில் இருக்கிறது. என்னால் நடக்கமுடியுமென நடக்கிறேன். எனக்கு பின்னால் வரவங்க கொஞ்சம் உடல் பருமனானவங்க, அவங்களால் முடியல.. ஆனா நிக்காமல் ரொம்ப மெதுவா நடந்து வராங்க.

எனக்கும் அவர்களுக்குமான இடைவெளி அதிகமாயிட்டே இருக்கு. எனக்கு முன்னால் சென்றவர், ஓரளவு வேகமாக சென்று இடத்தை நெருங்கிட்டாங்க. நடுவில் பெரிய மேம்பாலம், மேல ஏறி இறங்கனும், நான் இறங்கிட்டேன், இதற்கு பிறகு எங்களை கண்காணிப்பவர்கள் யாருமிருக்க வாய்பில்லை என்பதால், எனக்கு பின்னால் வருபவர் வரும்வரை காத்திருந்து அவர்களோடு சேர்ந்து நடக்க உத்தேசித்து, சாலை ஓரமாக நிற்கிறேன்.

நிற்கும் நேரத்தில் அக்கம் பக்கம் சுற்றி நோட்டம் விட, ஒரு கோயில் தெரிகிறது, எனக்கு பின்னால் வரும் அந்தப்பெண்ணை கவனித்து, நிற்கும் நேரத்திற்கு அந்தக்கோயிலுக்கு சென்று வந்துவிடலாமென,  செல்கிறேன்.

ஆஹா..என்னே ஒரு காட்சி.!!!!!  சிவலிங்கம் !!!! ஜெகஜோதியாக
காட்சியளிக்கிறார். அட்டகாசமான அலங்காரம், லிங்கத்தின் தலையில் தங்கத்தால் செய்யப்பட்ட பாம்பு வடிவில் கிரீடம் போல ஏதோ ஒன்று அலங்கரிக்கப்பட்டு வசீகரிக்கிறது !கர்பகிரகமே விளக்குகளால் ஒளிர்ந்து ஜெகஜோதியாக என் கண்களுக்கு விருந்தளிக்கிறது. மெய் மறந்து ரசிக்கிறேன்.

வித்தியாசமான லிங்கமாக இருந்ததால், சாமியின் பெயரை அறிய, கோயில் வாசலின் மேல் பார்க்கிறேன்.... "நசாவா லிங்கம்" என்று படிக்கிறேன்.

திரும்ப படிக்க எத்தனிக்கும் போது விழிப்பு..

பெயர் மறக்காமல் இருக்க, தலைமாட்டிலிருந்த மொபைலை எடுத்து,, அவருக்கு வாட்சப்பில், பெயரை டைப்பி அனுப்பிவிட்டு, கனவை ரீகால் செய்ய ஆரம்பித்தேன்...

*****
படம் (நன்றி கூகுல்) : ஏகாம்பரநாதர், காஞ்சிபுரம். 
கிட்டத்தட்ட என் கனவு லிங்கம் இப்படிதானிருருந்தார்.. ஆனால் இவரைவிட உயரம்..காலஹஸ்தி லிங்கத்தை ஒற்று இருந்தாலும், அவருமில்லை.

கூகுலில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. எங்கிருக்கிறாரோ இந்த சிவபெருமான்?. என் கனவில் வந்து, காட்சிக்கொடுத்ததற்கு தவம் தான் செய்திருக்கிறேன்....

கனவுகளில்..நம்பமுடியாத பிரம்மிக்க வைத்த கனவு இதுவே... !!