Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

பயணக்குறிப்புகள் - ஸ்ரீநகர்/குல்மார்க்/சோனாமார்க்

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரின் கோடை காலத்தலைநகர். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தென்னிந்திய நதிகளுடன் ஒப்பிடும் போது, அதிக நீர்வரத்தோடு, அகலம் குறைவாகவே எனக்குப்பட்டது, நாங்கள் பார்த்த இடம் அப்படி இருந்ததோ என்னவோ.

சென்னையிலிருந்து தில்லிக்கு, தில்லியிலிருந்து  ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் சென்றோம். 24*7 ராணுவம் மற்றும் CRPF கண்காணிப்பில் ஸ்ரீநகர் இரண்டு கட்ட பாதுக்காப்பின் கீழ் இருப்பதாக விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்டது. அதை அங்கிருந்த திரும்பும் வரையில் கவனித்தோம்.  கடைத்தெரு, சுற்றுலாப் பயணிகள் குவியும்  இடங்கள், அரசு அலுவலகங்கள் என எங்கும் பாதுகாப்பு தெரிந்தது.

ஸ்ரீநகர் செல்ல ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் சிறந்த நேரம். . 

ஸ்ரீநகரில் பார்க்க வேண்டிய இடங்கள் -

மிக முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்களில் "தால் ஏரி" முதலிடத்தை பிடிக்கிறது. ஏரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்கு படகு வீடுகளில்


வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரைக்கு வந்து செல்ல சிகாரா எனப்படும் படகுகளை பயன்படுத்துகிறார்கள். நமக்கு இந்த படகுகள் ரூ.600/- லிருந்து கிடைக்கும். திறமையிருந்தால் இன்னும் குறைத்துக்கூட பேசலாம். டீ, காபி, காஷ்மீர் காவா எனும் டீ போன்றவை படகில் வந்து விற்பனை செய்கிறார்கள். எதுவாகினும் பேரம் பேசி விலை குறைத்து  வாங்குவது நல்லது. உதாரணத்திற்கு 100 ரூ மதிக்கத்தக்க பொருளை ரூ.500/- என்கிறார்கள்.

முகலாய தோட்டங்கள் -முகலாயர்களின் காலத்தில் கட்டப்பட்டவை. உள்ளே கட்டிடங்களின் வடிவமைப்புகள் இதனை உணர்த்துகின்றன. முக்கியமாக ஷாலிமார் கார்டன்ஸ், நிஷாத் பாக் தோட்டங்களுக்கு சென்றோம். 

தங்கியிருந்த விடுதியிலிருந்து 100 ரூ கொடுத்து தால் ஏரிக்கும், அங்கிருந்து ஷாலிமார் பார்க்கிற்கு 250 ரூ, திரும்ப அங்கிருந்து நிஹாத் பார்க்கிற்கு 100 ரூ யும் ஆட்டோவிற்கு கொடுத்தோம். 500 ரூ வரை கேட்டார்கள், பேரம் பேசி பிரயாணம் செய்தோம்.
 
Jamia Masjid - ஒரே நேரத்தில் 33,333 பேர் தொழுகை செய்யக்கூடியளவு பெரிய மஸ்ஜீத். உள்ளே அனுமதி உண்டு.சுற்றி கடைத்தெரு இருக்கிறது, தேவைப்படுபவை வாங்கலாம்.

காஷ்மீரில் இருந்து சால்வைகள் மற்றும் கம்பளிகளை வாங்கலாம். தவிர காஷ்மீர் டிசைன் சல்வார் வகைகள்  வாங்கலாம். காட்டன் என்று சொல்கிறார்கள், ஆனால் காட்டன் இல்லை. துணியும் அப்படி ஒன்றும் நன்றாகயில்லை.மரத்தால் ஆன கைவினை பொருட்கள் அதிகம், படகு ஒன்று நினைவுக்காக வாங்கிவந்தேன். 

நூடுல்ஸ் லிருந்து, தோசை, சப்பாத்தி,பூரி வகையறாக்கல், அசைவ உணவுகள், பிரியாணி என எல்லாம் கிடைக்கிறது. சாப்பாட்டுக்கு குறைவில்லை. 

குல்மார்க் ;

இது ஸ்ரீநகரிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் 2,690 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஒரு நாள் பயணமாக டாக்ஸி அமர்த்திக்கொண்டு கிளம்பினோம். போகிறவழி நெடும்பயணமாக மலைகளின் கிராமங்களின் ஊடே சென்றது.  குல்மார்க் கில் பனிமலைக்கு செல்ல முன்கூட்டியே இங்கிருந்தே


ஆன்லைன்லில் பதியவேண்டும், எங்களுக்கு தெரியவில்லை. அங்குபோய் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. குதிரை மூலம் மேலே சென்று வரலாம் என்றனர். அதிக பணம். கீழே மட்டும் சுற்றிவர ஒரு குதிரைக்கு 3000 ரூ என பேசினர். ரொம்பவும் பேசி ஒருவருக்கு 1000 ரூ என பேசி மலையேறாமல் கீழே இருந்த இடங்களை மட்டும் சுற்றினோம். ஒரு கட்டத்திற்கு மேல் என் எல்-5 எலும்பு வலி பிரச்சனையால் குதிரைமேல் உட்கார்முடியால இறங்கி 1 கிமி தொலைவு நடந்தே வந்தேன். இடுப்பு வலி இருப்பவர்களுக்கு வெகுதொலைவு, மலை ஏற்ற இறக்க குதிரை சவாரி சரிவராது.குதிரை சவாரிக்கு தனியாக ஒரு ஷூ வாடகைக்கு வாங்கவேண்டும். அதுவும் பேரம் தான். சாமர்த்தியமிருந்தால் அதிக நஷ்ட ப்படாமல் இருக்கலாம்.

மகாராஜா மாளிகை, சிறு குன்று என ஒரு சில இடங்களே காண்பிக்கப்பட்டது. குதிரை மேய்ப்பவர் அலேக்காக லாகவமாக என்னைத்தூக்கி ஒவ்வொரு முறையும் ஏற்றியது ஆச்சரியபடும்படி இருந்தது. ஆனால் இடுப்பு வலிதான்..இப்ப நினைத்தாலும் குதிரை சவாரி பயமாகவேயுள்ளது. மகாராஜா அரண்மனை இப்பவும் ஏதாது விழாக்களுக்களின் விருந்துக்கு பயன்படுத்த படுகிறது என தெரிந்தது. முகலாய அரசர்களின் கோடை வாசஸ்தலமாக இவ்விடம் அமைக்கப்பட்டுள்ளதாக அரண்மனை குறிப்புகள் சொல்கின்றன.

குதிரையில் 2-3 மணி நேரத்தில் சுற்றி வந்துவிடலாம். குதிரையிலிருந்து இறங்கியபிறகு ராணி கோயில் ஒரு குன்றின் மேல் இருக்கிறது. அதை நாமே சென்று பார்த்துவிட்டு வரலாம். 

குல்மார்க்கில் வேறொன்றுமில்லை. திரும்ப இரவுக்குள் ஶ்ரீநகர் திரும்ப வந்துவிட்டோம். 

சோனாமார்க்;

ஸ்ரீநகரின் வடகிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சிந்துநதி வழி நெடுக பார்க்கமுடிந்தது. குழாங்கற்கலில் வெள்ள வெளேரென தண்ணீர் உருண்டு 
ஒரு சலசலப்பு சத்தத்தோடு ஓடுகிறது. கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி.இங்கேயும்
குதிரை சவாரி. ஒரு வேன் பிடித்து சில சுற்றுளா இடங்களுக்கு சென்றோம். இங்கேயும் 
பேரம் பேசவில்லையெனில் நஷ்டம் தான். ஒருவருக்கு 100 ரூ அதிகமே. ஆனால் 5000 ரூ 
வரை கேட்கிறார்கள்.இருவருக்கும் சேர்த்து 800 ரூ கொடுத்தோம்.

இங்கேயும் எல்லா உணவு வகைகளும் கிடைக்கும். சின்னதாக ஒரு குளம், ஒரு ஆறு,  போய் 
வருகின்ற பாதையில் உள்ள மலைகள் என ஒன்றும் சுற்றிப்பார்க்க அதிகமில்லை. இரவுக்குள் ஶ்ரீநகர் வந்துவிட்டோம்.

பேரம் பேச தெரிந்தால், பாக்கெட் காலி ஆகாமல் வீடு திரும்பலாம் என்பதே இப்பயணத்தில் கற்றுக்கொண்டது.

 Picture courtesy : Thankyou Google. 

பொன்னியின் செல்வன் -2 PS-2 -Review

படம் சாதாரணமாக இருக்கு. ஏன் ஆஹா ஒஹோ ன்னு எழுதறாங்கன்னு தெரியல. அதிலும் சிலர் பாகுபலி யை மிஞ்சிவிட்டதாக எழுதுவது சத்தியமா ஏன்னு புரியல. பாகுபலி பிரம்மாண்டம். இதில் அப்படி ஒன்றும் பிரம்மாண்டமில்லை.

நடிகர் கார்த்தியை தவிர எல்லா நடிகர்களின் முகத்திலும் மணிரத்னத்தின் முகத்தை ஒட்டிவிட்டு படத்தைப் பார்த்தால் தெரியும், ஒரே மாதிரியான வசன உச்சரிப்புகள், எந்த உணர்ச்சியானாலும் அதே முகபாவனை.. பாவனைன்னு க்கூட சொல்லமுடியாது.

ஐஸ்வர்யாராய் விக்ரம் வரும் கடைசி காட்சிகளை அதிகமாக பாராட்டுகிறார்கள். அந்தம்மா என்னவோ எங்கேயோ பார்த்தபடி/முழித்தபடி/வெறித்தபடி முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வசனம் பேசுகிறார். விக்ரம் பதிலுக்கு அதே மாதிரியான முழித்த பார்வையோடு அல்லது அதற்கான முயற்சியோடு கொஞ்சம் நெற்றியை சுருக்கி பேசுகிறார். என்னத்த சூப்பரான நடிப்பு இதில் இருக்குன்னு தெரியல.. Over hyped scene by public.

சுந்தரசோழர் எங்கேயுமே சுந்தரசோழராக தெரியாமல் ' ஹாய் செல்லம்' னே சொல்றமாதிரி இருந்தது எனக்கு. தலையை எப்பவும் போல ஒரு பக்கமாக திருப்பிக்கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். 

வானதி , பூங்குழலி & மணிமேகலை கதாப்பாத்திரங்கள் புத்தங்கத்தில் வேற லெவலில் இருக்கும். படத்தில் அவர்களும் மணிரத்னத்தின் முகத்தை மாட்டிக்கொண்டு வருகிறார்கள், btw மணிமேகலை படத்தில் இல்லவே இல்லை. 

சின்ன வயது நந்தினி, கரிகாலன் நடிப்பும் அதே. முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் வசனத்தை பேசுவது, நடப்பது, ஓடுவது.. தளபதி'யில் ஆரம்பித்து துக்கம்/கோவம் னு வந்தால்.. ஆஆ..... ஓ ன்னு ஆகாயத்தைப் பார்த்து தொண்டக்கிழிய கத்துவது தான் மணிரத்னத்தின் ஸ்டைல். இதை விக்ரம் பிரபு 2-3 இடங்களில் செய்யும் போது கடுப்பாகிறது. ஏன் கத்தறாரு.. அழத்தானே செய்யனும்னு தோணிச்சி. 

குந்தவை வந்தியத்தேவன் காதல் காட்சியும் Over hyped scene by public.ரொம்ப சாதாரணமா இருக்கு. படகை ஓட்டிவந்த படகோட்டிகள் நட்ட நடு ஏரியில் எங்கே காணாப்போனார்கள் என்று தெரியவில்லை. குந்தவையின் குரலை வந்தியத்தேவனால் கண்டுபிடிக்க முடியலங்கறதே இந்த காட்சியின் உட்சக்கட்ட தவறு/தோல்வி. திரிஷாவின் வயது முகத்திலும் உடலிலும்.தெரிகிறது,

விக்ரம்பிரபு விக்ரமை சந்தித்து பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கி இறந்துபோனார் என்று சொல்லும் காட்சியில் விக்ரம் தலைமுடி காதை தாண்டியுள்ளது. அதற்கு அடுத்து விக்ரம் வரும் காட்சிகளில் எல்லாம் தலைமுடி தோளைத்தாண்டி வளர்ந்து தொங்குகிறது. 

சோழ சாம்ராஞ்சியத்தில் நாட்டின் உள் கட்டமைப்பு, கோட்டை, அதன் பாதுகாப்பு, கட்டிட அமைப்பு, பாதாள வழிகள் எல்லாம் எத்தனை பாதுகாப்போடு அமைக்கப்பட்டவை என்பதும்,  சோழர்களின் நிர்வாகத்திறமை வாய்பிளக்க வைத்த வரலாற்று சான்றுகளாக இன்னும் இருக்கின்றன.. இதில் பாதாள வழியில் உள்ள ஒரு சின்ன ஓட்டை வழியாக சுந்தர சோழரின் அறை தெரிய, அங்கிருந்து அவரை தாக்கி கொல்ல பாண்டியர்கள் முயற்சி செய்கிறார்கள். நம்ப முடியல. அதே சமயம், சுந்தர சோழர் அறையிலிருந்து அந்த துவாரம் தெரியவில்லை. எப்படி இது சாத்தியம். ஒரு அரசரின் அறைக்கு இவ்வளவு தான் பாதுகாப்பா? இதைக்கூடவா இத்தனைப்பெரிய படத்திற்கு home work செய்யல?. 

ஊமைஅரசி - இந்தம்மா தான் பொன்னியின் செல்வனின் hidden queen. இவரை பின்பக்கத்திலிருந்து சில காட்சிகளில் காட்டிவிட்டு, முகத்தை காட்டும் போது கொன்றுவிடுகிறார்கள்.

ஜெயம்ரவி தான் கதாநாயகன், ஆனால் பொம்மை போல எப்பவும் ஒரு புன்முறுவலோடு, மணிரத்னத்தின் நாயகனாக வளம் வருகிறார்.

ஜெயசித்ரா - பாவமா இருக்காங்க. அதே மணிரத்னத்தின் முகமூடி. பிரபு ஒரு காட்சியில் நன்றாக நடித்துள்ளார், முகமூடியில்லை. சரத்குமார், பார்த்திபன் எல்லாம் சுமார். ஒரு வேளை நன்றாக நடிக்கக்கூடியவர்களாக இருந்தாலும், மணிரத்னம் அவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை கொடுக்க வாய்பில்லை.

நாகை புத்தபீடம்  பிரம்மாண்டம், இதனை கடல் அடித்துசெல்லும் காட்சி ஒன்று புத்தகத்தில் இருக்கும், அது படத்திலில்லை. ஏமாற்றம்.  

கடைசியில் போர் தேவையில்லாத ஆணி. 

இசைப்புயலின் இசை படத்திற்கு +. BGM ரொம்பவே நல்லாயிருக்கு.

மூலக்கதை" பொன்னியின் செல்வன்" னு டைட்டிலில் வருகிறது. அதனால்.. அதிலிருந்து இது எடுக்கப்பட்டதுன்னு நினைச்சிக்கிலாம். யாரும் எடுக்கவே முடியாதுன்னு விட்டுவிட்டுதை, மணிரத்னம் எடுத்து இயக்கி வெளியிட்டிருப்பதற்கு பாராட்டுகள். A Manirathnam movie. Historical movie in his view & stand. 

எல்லாவற்றையும் விட இன்ட்டலெக்சுவல் சுஹாசினியை படத்திலும் எழுத்திலும் பேச்சிலும் எங்கும் கொண்டுவராமல் இருந்ததற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி & பாராட்டுகள். 

எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி படத்தை கண்டிப்பாக குடும்பத்தோடு ஒரு முறை பார்க்கலாம். 

 #ponniyinselvan2 #ponniyinselvan2review #ponniyinselva2_review 

 Pictures courtesy : Thankyou google.

கள்ளி (Cactus) செடிகள் கதை

வீட்டு பால்கனி தோட்டத்தில், நான் அதிகம் விரும்பி வளர்க்கும் தாவரம் காக்டஸ். இதில் கற்றாழையில் ஆரம்பித்து பலவிதமான கள்ளி செடிகளை வளர்த்து வருகிறேன். பொதுவாக காக்டஸ் க்கு பாட்டில் மூடியில் தண்ணீர் ஊற்றினால் போதும். என்னிடம் குட்டி குட்டி காக்டஸ் நிறைய உள்ளது. அதில் குட்டியா உருண்டையா இருக்க காக்டஸ் லேசா கைப்பட்டா போதும் கையோடு வந்துடும். 

சென்னையிலிருந்து திருவாரூர் சென்றபோது, எல்லாவற்றையும் கொண்டு வந்துட்டேன். பின் பக்கம் வராண்டா போன்ற இடத்தில், மழை கொட்டாத இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தேன். 

 போன வாரத்தில், பக்கத்தில் எங்கேயோ நாய் குட்டிபோட, அதை தேடிக்கொண்டு தோட்டத்தின் பின் பக்கத்தில் வந்து தேடிய 3-4 பசங்க கண்ணில் இந்த காக்டஸ் பட்டுவிட்டது. 

ஆசையை அடக்கமுடியாமல், நேர்மையாக முன் பக்கம் கேட்டில் வந்து நின்று, ' ஆண்ட்டி, அந்த காக்டஸ் எங்களுக்கு கொடுக்கறீங்களா?' ன்னு கேட்டானுன்க.. உங்களுக்கு ஏன்டா நான் தரனும்னு மைன்ட் வாய்ஸ்ல நினைச்சிக்கிட்டு, 'ஸாரிப்பா, அது சென்னையிலிருந்து கொண்டு வந்து வச்சியிருக்கேன், கொடுக்கற ஐடியா இல்ல" ன்னு சொல்லிட்டேன். முகமெல்லாம் வாடிப்போய்.. 'ஓக்கே'ன்னு போயிட்டானுங்க. 

ஒரு ஓசி நாய் குட்டிங்களயே ஒரு வாராம வீடு வீடா தேடறானுங்க.. இதை விட்டு வைப்பானுங்கன்னு எனக்கு தோணல. உடனே வூட்டுக்காருக்கிட்ட '.ப்பா கண்டிப்பா நாளைக்கு வந்து இத திருடுடிட்டு போயிடுவானுங்க.. நாம வேற இடத்தில் மாத்தி வச்சிடுவோம்னு' சொல்ல.. 

எப்பவும் போல,' சின்ன பசங்க எவ்ளோ டீசன்ட்டா வந்து கேட்டுட்டு போறானுங்க.. அவனுங்கள போய் சந்தேகப்படறியே' ன்னு திட்டு விழுந்தது. எனக்கு என்னவோ, அவனுங்கள நம்ப முடியல.... நானே மாடியில் உள்ள போர்ட்டிகோவிற்கு மாத்திட்டேன். அதில் அந்த குட்டி ரவுண்டு, தொட்டா கையோட வரும்னு சொன்னேனே, அதில் இரண்டு பிச்சுக்கிட்டு வந்தத, குட்டி கப்பில் நட்டு வச்சிருந்தேன். அது வளராமல் காய்ந்து போய் இருந்தது, நானும் மனம் தளராமல் தண்ணீர் விட்டுக்கிட்டு இருந்தேன். அதையும், கற்றாழையும் மட்டும் அங்கேயே வைத்துவிட்டேன். 

அடுத்தநாள் மாலை, சமையலறையில் வேலையாக இருக்க, இவனுங்க சத்தம் கேட்டது. தோட்டத்தின் பின்பக்கம் செல்வதும் தெரிந்தது. குடுகுடுன்னு ஓடி பின்னாடி ரூம் ஜன்னல் வழியாக கவனித்தேன். 'எங்கடா காணோம்'னு கிட்ட வந்தவனுங்க, அந்த காய்ந்த காக்டஸ் சில் ஒன்னை நைசா கிள்ளி எடுத்து, எடுத்ததே தெரியாத மாதிரி உள்ளங்கைய வச்சிக்கிட்டு போயிட்டானுங்க. 


வூட்டுக்கார் ஆபிஸ் விட்டு வந்ததும் சொன்னேன். ஆயிரம் வேலையில் என்னோட புலம்பலெல்லாம் அவர் காதில் எப்ப விழுந்திருக்கு... இல்ல எப்ப நாம சொல்றதை மதிச்சி கேட்டு இருக்காங்க..' ஓ..'னு ஒரு பதில் சொல்லிட்டு அவர் வேலைய பாக்க போயிட்டாரு.. காய்ந்ததை எடுத்தாலும் எனக்கு மனசு கேட்கல.. அதையும் தூக்கிட்டு வந்து உள்ள வச்சிட்டேன். திருட்டு பயபுள்ளைங்க... கம்ளைன்ட் செய்லாம்னு நினைச்சி.. பின்ன நாம மாங்கா அடிச்சது.. ன்னு நம்மோட சின்ன வயசு கேவலங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வர.. சரி தொலையட்டும்னு விட்டுட்டேன்.  

பீட்டர் தாத்ஸ்:“I think that the best thing we can do for our children is to allow them to do things for themselves, allow them to be strong, allow them to experience life on their own terms, allow them to take the subway... let them be better people, let them believe more in themselves.” ― C. JoyBell C. 

Picture courtesy - Thank-you Google.

ஏதோ ஒரு சினிமா படப்படிப்பு

 சோழிங்கநல்லூர்,  TNHB சிமெண்டு சாலையில் , மாலை 4 மணி வாக்கில் ஒரு காரும், 2, 3 இருசக்கர வாகனங்களும் வந்து நின்றன. அதில் வந்தவர்கள் ஒன்று கூடி பேசியும், தனித்தனி குழுக்களாக பிரிந்தும் பேசினர், சாலையில் அமர்ந்து ஏதோ வரைப்படைத்தை சரிசெய்வது போல தெரிந்தது. சிமெண்டு சாலை அத்தனை சுத்தமாக இருக்கும். 

இதற்கு பிறகு வந்தவற்றை fast forward ல் சினிமா காட்சிகளில் பார்ப்பதுப்போல கோர்வையாக்கி பார்த்துக்கொள்ளுங்கள்.இவை அத்தனையும் அவ்வப்போது போர்ட்டிக்கோவிற்கு வரும் போதும், சமையல் அறை சன்னல் வழியாகவும் கவனித்தவை ; -

1. 2-3 கார்கள் வந்தன. ஆங்காங்கே பார்க் செய்யப்பட்டு, இட நெருக்கடி காரணமாக திரும்ப எடுத்து வேறு இடங்களிலும் பார்க் செய்யப்பட்டன.

2. ஒரு சின்ன தண்ணீர் லாரி வந்தது ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது.

3. ஆட்டோக்கள் 2-3 வந்தன, அதிலிருந்தோர்  இறங்க, அவையும் இடம் பார்த்து பார்க் செய்யப்பட்டன.

4. இரண்டு கேரவன் வந்து, எங்களது போர்ட்டிக்கோவிற்கு நேரெதிரில் நிறுத்தப்பட்டன.

5. இரண்டு க்ரேன் லாரிகள், ரிங் ரோட்டின் முகப்பில் நிறுத்தப்பட்டன.

6. இரண்டு பேட்டரி வைத்த லாரிகள் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன.

இதற்குள் மாலை மணி 5.30-5.45 ஆகியிருந்தது.

7. ஒரு சின்ன லாரி வந்தது, வேக வேகமாக இரண்டு டேபிள், நாற்காலிகள் இன்னும் இதர பொருட்கள்  இறங்கின. சாலையில் ஓரமாக ஒரு இடம் பார்த்து, மேஜைகள் போடப்பட்டு, காபி, டீ க்கான கேன்'கள் வைக்கப்பட்டு, தேவைப்பட்டவர்கள் வந்து வாங்கிக்கொண்டு சென்றனர்.

வேலை மிக வேகமாக நடப்பதே தெரியாமல் நடந்துக்கொண்டிருந்தது. அதாது நான் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 7 ஆவது மாடியிலிருந்து கவனிப்பதால் எல்லாமே ஊமைப்படமாக தெரிந்தது. அவர்களது வேலையில் எங்கேயும் ஒரு தடங்கலோ, சோர்வோ, தயக்கமோ இல்லை. வேலை சொல்லிவைத்தார் போல / திட்டமிட்டார் போல அதுப்பாட்டுக்கும் நடந்துக்கொண்டே இருந்தது.

சில பல லாரிகள் அவ்வப்போது வந்து தொழில்நுட்ப கருவிகள், நாற்காலிகள், படப்பிடிப்பிற்குத்தேவையான செட்டுகள் அமைக்க தேவையான பொருட்கள் என இறக்கி வைத்துவிட்டு தொலைவில் மக்கள் நடமாட்டமில்லா இடங்களில்  நிறுத்தி வைக்கப்பட்டன.

கேரவன் நிறுத்தியிருந்த எதிர் வீட்டுக்காரம்மா வெளியில் வந்து வண்டிக்காரர்களிடம் 'இங்கே வண்டியை நிறுத்தக்கூடாது, இங்கே கூட்டம் போடக்கூடாது' என சண்டையிட, வேன் ஓட்டுனர் உடன்பட்டு, இரண்டு வண்டியையும் அவங்க வீட்டின் எதிரிலிருந்து நகர்த்தி சற்று தள்ளி நிறுத்தினார். அந்தம்மா, அடுத்து விடாமல் அவங்க வீட்டு பக்கத்தில் காலி இடத்தில் டீ விநோயகம் நடத்தும் இடத்திற்கும் போய் சத்தம் போட, அவங்களும் சிமெண்டு ரோடுக்கு இடத்தை மாற்றினர். 

நேரம் ஓடியது, நடுவில் நான் கடைக்கு செல்ல  வெளியில் செல்லும் போது 'ஹோட்டல் சென்னை கிங்' , ஒரு மளிகைக்கடை பெயர் பலகையும் எங்கள் குடியிருப்பின் மதில் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.கடைக்கு செல்லும் வழியெங்கும் சாலையோரங்களில் கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. காரில் இருந்தோர், அங்கிருந்து தொலைவில் படப்பிடிப்பு நடக்கவிருக்கும் இடத்தை நோட்டம் விட்டவாரே கைப்பேசியை நோண்டிக்கொண்டு இருந்தனர். 

இதில் அநேகமாக இளைஞர்/இளைஞிகள் இருந்தனர்.  வழியிலிருந்த டீ கடையில் விரைவாக தொழில் நடந்துக்கொண்டிருந்தது. படப்பிடிப்புக்கு வந்தவர்வர்கள் குழுக்களாக அங்கு இருக்கும் எல்லா டீ கடை சிற்றூண்டி கடைகளை ஆக்கிரமித்து இருந்தனர், சிலரின் கைகளில் சிகிரெட். திரும்ப வரும் போது எங்கள் குடியிருப்பு செக்கியூரிட்டி, 'ராகாவா மாஸ்டர்' நடிக்கும் படம் என்றார்.

வீட்டுக்கு வந்து என் வேலையை பார்க்க ஆரம்பித்து, படப்பிடிப்பை மறந்தேவிட்டேன். 8-8.30 மணியிருக்கும், எப்படியிருந்தாலும் இங்கிருந்து ராகவா மாஸ்டரை பார்க்க முடியாது , ஆனாலும் படப்பிடிப்பு எந்த நிலையில் இருக்குன்னு பார்க்க போனால்- அங்கு நடப்பவை எனக்கு புதிதாக, பார்த்திராத ஒரு விசயமாக இருந்தது. 

இப்போது கேரவன் விளக்குகள் எரிந்தன, ஏசி ஆன் செய்யப்பட்டிருந்தது. இரண்டு கேரவன்'களுக்கும் முன் ஒரு டேபில் போட்டு அதில் ஒருவர் துணிகளுக்கு பொட்டிப்போட்டுக் கொண்டிருந்தார். 

இன்னொரு பக்கம் சாப்பாடு ஒரு வேனில் வந்து இறங்கியது, இரண்டே பெண்கள், பாத்திரம் கழுவ (அந்த தண்ணீர் லாரி இப்போது சாப்பாடு இருக்கும் இடத்திற்கு அருகில் வரவைக்கப்பட்டு அதிலிருந்து தேவையான தண்ணீரை அவ்வப்போது கொடுத்துக்கொண்டிருந்தது), வந்த உணவுகளை சிறிய பாத்திரங்களுக்கு மாற்றினர்.  ஆண்கள் இடைவெளி விட்டு 3 டேபில்களை   போட்டு, ஒவ்வொரு டேபிலின் முன்னும் அரைவட்ட வடிவில் நாற்காலிகளை அடுக்கினர். இப்போது இவ்விடத்தை நோக்கி வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் நகர்ந்தனர். சாப்பாட்டை வாங்கிக்கொண்டு, நாற்காலியில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். 

3-4 பேரில் ஆரம்பித்த இந்த படப்பிடிப்பு முன்னேற்பாடு 250-300 பேர் வரை கூடியிருந்தது. 

இன்னொரு பக்கம் கேமரா வைக்குமிடம், லைடிங் என தொழில்நுட்ப கலைஞர்கள் ஆவன செய்துக்கொண்டிருந்தனர்.

சினிமா, ஒரு நாளையில் சில மணி நேரங்களுக்கு எத்தனைப்பேருக்கு சாப்பாடு போடுகிறது, அவர்களின் வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இரவு 9-30 வரை படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை.  எப்போது ராகவா வந்தார் , எப்போது படப்படிப்பு முடிந்தது எனத்தெரியவில்லை.

காலையில் எழுந்து ப்பார்த்த போது,அந்த இடத்தில் இத்தனைக்கூட்டம் இருந்த சுவடே தெரியவில்லை.. குறிப்பாக சாலை சுத்தமாக இருந்தது.

என்னாது..... சினிமாக்கு போலாமா?

மொபைல் அழைத்தது.....மோகன் தான், ஆள்காட்டி விரலால் தேய்த்து எடுத்து காதில் வைத்தேன்.

"ஹல்லோ.. சொல்லுடா…" 

"கொரானா முடிஞ்சி, தியேட்டர்ஸ் திறக்க ஆரம்பிச்சிட்டாங்க. சினிமாக்கு போலாம் வரியா.. வீட்ல வேற, எங்கேயாவது வெளியில் போலாமானானு கேட்டுட்டே இருக்காங்க. ஃபேமிலியோட போலாம்… என்ன சொல்ற.."

"என்னாது ஃபேமலியோட சினிமாவா? எங்கூட்டம்மா கண்டிஷனுக்கு எல்லாம் எந்த தியேட்டரிலும் சீட் கிடைக்காது என்னாலையும் அந்தம்மாவ கூட்டிட்டு வரமுடியாது.… ஆள விடு சாமி.. நீ போயிட்டு வா…"

"டேய்..என்னடா இப்படி சொல்ற.. சிஸ்டர் அப்படி என்ன கன்டிஷன் போடறாங்க.. சொல்லு கேப்போம்.."

"ஞாயித்துக்கிழமை சினிமாக்கு போகனும்னா.. ஞாயித்துக்கிழமை காலையில் தான் சொல்லுவாங்க.. அதுல.. சீட் நம்பர் A-E வரைக்கும் தான் இருக்கனும்.."

"ஓ..அது ஏன்"

"அந்த தூரத்தில் இருந்து பாத்தாதான் கண்ணுக்கு நல்லதாம். அதுக்கு கீழ இருந்தா வேணாம்னு சொல்லிடுவாங்க. 10 நிமிசம் முன்னாடி போய் சீட்ல உக்காந்துக்கனும், லேட் ஆகக்கூடாது, லைட் ஆஃப் ஆகி விளம்பரம் ஓடிட்டு இருந்தாக்கூட நான் செத்தேன்…"

"சினிமா தான் ஆரம்பிக்கலையே அப்பவுமா கோவப்படுவாங்க.."

"அவங்க பிரச்சன சினிமா ஆரம்பிக்கறதை பத்தி இல்ல… லைட் ஆஃப் பண்ண பிறகு போனா,, உக்காந்து இருக்கவங்கள தொந்தரவு செய்து உள்ள போய் உக்காரனும், பின்னாடி இருக்கவங்களுக்கு மறைக்கும்.. அப்புறம் நடக்கும் போது சீட்ல உக்காந்து இருக்கவங்க மேல இடிக்காம நடந்து போகனும்..  உட்கார்ந்து இருப்பவங்க காலை மிதிச்சிட்டு நடக்கனும்.. இதெல்லாம் அவங்களுக்கு பிடிக்காது…"

"டேய்..சிஸ்டர் சொல்ற எல்லா விசயமும் கரெக்ட் டா.. இதுக்கா அவங்கள சினிமாவுக்கு கூட்டுட்டு போகமாட்டேன்னு சொல்ற? அராஜகம் டா. "

"அடப்போடா.. அதுக்காக நம்மள ஊருக்கு முந்தி கிளம்ப சொல்லுவாங்க.. கொஞ்சம் லேட் டா ஆனாலும் ..போற வழியெல்லாம் சீக்கிரம் சீக்கிரம் னு உசுற வாங்குவாங்க.. ஜாலியா போனோமா படம் பாத்தோமான்னு இருக்காதுடா.. "

"அவங்க சொல்ற பாயின்ட்ஸ் எல்லாம் கரெக்ட் தான். நீ தான் தேவையில்லாம ரியாக்ட் பண்ற. நான் டிக்கட் புக் பன்றேன், நீ அவங்கள கூட்டிட்டு வர வழிய மட்டும் பாரு.. " டோக் ஃபோனை கட் பண்ணிட்டான். 

'சுஜா..சுஜா..எங்க இருக்க.. மோகன் குடும்பத்தோட படத்துக்கு போறானாம். நம்மையும் கூப்பிட்டான் நான் ஒக்கே'ன்னு சொல்லிட்டேன்.

"என்ன படம்? ரிவியூ படிக்காம நான் படத்துக்கு வரமாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா..?  ஆமா.. ஏந்த தியேட்டர்? சவுண்டு சிஸ்டம் எல்லாம் சரியா இருக்குமா?.  ஏசி’ய பாதியில் நிறுத்தாம இருப்பாங்களா..? கண்ட தியேட்டரில் நான் சினிமா பாக்க மாட்டேன்.'

அடக்கடவுளே!…இந்த ரிவியூ, ஏசி, சவுண்டு பத்தியெல்லாம் அவன்’ட்ட சொல்லலியே… அய்யோ... முதல்ல ஃபோனை போடுறா என் சிப்சு…..இல்லனா உனக்கு ஊதிடுவாங்கடா சங்கு......

பீட்டர் தாத்ஸ்; Conditions differ in life. Some extent it makes sense, some extent it annoys.



 

ஐயாறப்பர் கோயில் -திருவையாறு

திருவையாறு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, தியாகராஜ ஆராதனை விழாவும் அனைத்து இசை கலைஞர்களும் ஒரே இடத்தில் நடத்தும் இசை நிகழ்ச்சிதான்.

இதைத்தாண்டி, இங்கே வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான ஐயாறப்பர் சிவன் கோயில் இருக்கிறது.  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இது 51வது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், தாயார் தருமசம்வர்த்தினி. 

இக்கோயிலில் நுழைந்துவுடன் அதன் பிரம்மாண்டம் கவனத்தை ஈர்த்தது. திருவாயாறில் இப்படியொரு ஒரு கோயிலா என்ற ஆச்சரியம் நீங்காது கவனித்தபோது தான் அத்தனைப்பெரிய கோயிலை மிக மிக சுத்தமாக பராமரித்து வருவதையும் பார்க்க முடிந்தது. 

இக்கோயிலைப்பற்றி ஒன்றும் தெரியாமல் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்றாதாலேயே இதன் பிரம்மாண்டம் பிரம்மிக்க வைத்தது. திருவாரூர் கோயிலைவிடவும் பெரியக்கோயில், மூன்று பிரகாரங்கள். இக்கோயில் தனுசு ராசி அன்பர்களுக்கு உகந்தக்கோயில் என்பதை சென்றுவந்தப்பிறகு தெரிந்துக்கொண்டேன்.  

இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு இதன் மூன்றாவது பிரகாரமான சப்தஒலி பிரகாரம். சுவாமி தரிசனம் முடித்து வெளியில் வந்தபோது, சப்தஒலி பிரகாரத்தின் பலகையை பார்த்தோம். ஆனால் இது மூன்றாவது பிரகாரம் என்பதால் இதில் யாருமே சுற்றவில்லை. இருப்பினும் பலகையைப்பார்த்த ஒரு ஆர்வத்தில் நானும் அவரும் மட்டும் பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தோம்.

சில அடிதூரம் நடக்கும் போதே அந்த பிரகாரம் மற்ற கோயில்களின் பிரகாரம் போல இல்லாது இரண்டுப்பக்கமும் மிக உயர்ந்த மதில் சுவர்களை கொண்டதாக இருந்தது. யாருமில்லாததால் ரொம்பவே அமைதியாக ஏதோ ஒரு அகன்ற குகைக்குள் செல்லும் அனுபவமாக இருந்தது.  சப்தஒலி என்பது எங்கு எப்போது வந்து நம்மை பயமுறுத்தும் என்ற எதிர்ப்பார்ப்போடு அன்னாந்து மதில் சுவர்களின் உயரத்தைக்கண்டு அசந்துப்போய் நடந்துக்கொண்டே போகும் போது இடது பிரகாரம் முடியும் இடத்தில், இங்கு நின்று வடக்கு நோக்கி "ஐயாறா" என்று குரல் எழுப்பினால் 7 முறை எதிரொலிக்கும் என்ற பலகையை பார்த்தவுடன் எது வடக்கு என்ற குழப்பம் வந்து என் கணவர் வலதுப்பக்கம் திரும்பி "ஐயாறா" என்று கூப்பிட.. அட.. ஆமாம்.. அக்குரல் 5 முறை எதிரொளித்தது, மீதமிருந்த இரண்டு ஒலி மிக மெல்லியதாக இருந்திருக்கிலாம், ஒருவேளை மிகநுட்பமான ரெக்கார்ட்கள் கொண்டு பதிவிட்டால் 7 முறை வெவ்வேறு ஒலியின் நீளத்தில் நமக்கு கேட்கக்கிடைக்கும். எதிரொலி என்பதைத்தாண்டி வெவ்வேறூ ஒலிவடிவில் கேட்பது வியப்பே. இதன் முக்கிய க்காரணம் இக்கோயிலின் கட்டிட அமைப்பே. 

அவர் வடக்கு நோக்கி சப்தமிட, நான் அவரை நோக்கி அதாவது தெற்கு நோக்கி சப்தமிட அதே ஒலியை வடக்கிலிருந்து கேட்க முடிந்தது. இது ரொம்பவே ஆச்சரியம் தான், இதையே இதன்பிறகு பார்த்த கோயில்களில் முயற்ச்சி செய்து ஒரு சத்தமும் வராதது ஏமாற்றமே.அம்பாள் சன்னிதிக்கு ஒரு 1/2 கிமீ நடந்து செல்ல வேண்டியிருந்தது. அத்தனைப்பெரிய கோயில். 

இந்த கோயிலுக்கு செல்ல திட்டமிடும் போது திருவையாறை சுற்றி 5 (இக்கோயிலை சேர்த்து 6) சிவத்தலங்களுக்கு செல்ல திட்டமிட்டுக்கொள்ளலாம். எல்லாமே 2-15 கிமீ ல் இருக்கிறது. 

புஷ்பவனேஸ்வரர் கோயில் 

திருப்பூந்துருத்தி

 

நெய்யாடியப்பர் கோயில் 

தில்லைஸ்தானம் 

 

 

 


 

ஐயாறப்பர் கோயில்

திருவையாறு 

 

ஆபத்சகாயேஸ்வரர் கோயில் 

திருப்பழனம்

 

சோற்றுத்துறை நாதர் கோயில் 

திருச்சோற்றுத்துறை

 

திருவேதிகுடி

திருவேதிகுடி 

 

பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் 

திருக்கண்டியூர்

 

டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு கோயிலுக்கு செல்ல திட்டமிட்டாலும், போகும் வழியில் உள்ள அத்தனைக்கோயில்களையும் கூகுளில் தேடி சென்றுப்பார்க்கலாம். கண்டிப்பாக 3-5 கிமீ ஒரு கோயில் இருக்கும். திரு' என்று ஆரம்பிக்கும் ஊர்களில் நிச்சயம் பெரிய வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. இப்படி கூகுளில் தேடி தேடியே திருவாரூரை சுற்றியுள்ள பலக்கோயில்களை நாங்கள் தரிசித்துவருகிறோம்.