என்னாலேயே முடியல..

என் கணவர், என்னுடைய கனவுகளை எழுதிவைக்க சொன்னக்காரணமே, என் கனவுகள் கதைகளாக இருப்பது மட்டுமல்ல, அதை அவரிடம் சொல்லும் விதமே!.

ஒரு தயாரிப்பாளரிடம், அறிமுக இயக்குனர் கதை சொல்வதைப்போல இருக்குமென நினைக்கிறேன். அவர் எதிரில், அந்தக்கனவு நிஜத்தில் நடந்தால் எப்படியிருக்குமோ அப்படி சொல்லுவேன். பின்னணி இசை மட்டுமே இருக்காது.

ஓவராக கற்பனை செய்துக்கொள்வதில் என்னை வெல்ல என்னாலேயே முடியாதுதான். இருந்தாலும், நேற்று வந்த கனவை நினைத்து சிரிப்பதா அழுவதா.. இல்லை ஏன் இப்படியெல்லாம் எனக்கு கனவு வந்து தொலைக்குதுன்னு நினைச்சி ஆச்சரியப்படுவதான்னு தெரியல...

தினப்படி எத்தனையோ நிகழ்வுகள் நடக்குது..

ஓவியா சென்றதிலிருந்து பிக்பாஸ் பாதிப்பு இல்லை.... 

அதிமுக வால் பிரேக்கிங் நியூஸ் அடிக்கடி வந்து அந்த சத்தமும் பழகிப்போச்சி

ரஜினி அரசியல் - பெருசா யோசிக்கல..

கமல் டிவிட்டர் - யோசிச்சாலும் ஒன்னும் புரியப்போறதில்ல..

என் சொந்தப்பிரச்சனைகள்.. அது ஏகத்துக்கும் இருக்கு...

என் கணவரின் அலுவலகப்பிரச்சனை, அதை அவர் எப்படிக்கடக்கப்போகிறார் என்ற கவலை...

வெளி மாநிலத்தில் இருப்பதால், இங்கு சந்திக்கும் மனிதர்கள்..னு

என்னென்னமோ தினப்படி நடக்குது.. இதுல..நேற்று எனக்கு வந்த கனவு இருக்கே.... படிங்க..நீங்களும் கடுப்பாக சான்ஸ் இருக்கு...

காலையில் எழுந்துவரும் போது கனவு நினைவில் இல்லைதான். ஆனால் பல் விளக்கும் போது நினைவுக்கு வர, மறந்துவிடுவேனோன்னு , பிரஷ்ஷை வாயிலிருந்து எடுத்துவிட்டு அவரை அழைத்து கனவை சொன்னேன்.

"இன்னைக்கு எனக்கு ரொம்ப ஸ்ட்ரேன்ஜ்ஜா ஒரு கனவு வந்துச்சிப்பா..."

புதுசா என்ன..ங்கற மாதிரி லுக்கு விட்டுட்டு என் முகத்தையே கவனிச்சார்..

"காடை இருக்கில்ல..."

"ஆங்...??????"

"காடை ப்பா காடை... பறவை..கோழிமாதிரி..நாமக்கூட மூனார்ல காடை முட்டை ஆம்லெட் சாப்பிட்டோமே..?! அந்த காடை..."

"ம்ம்ம்..சொல்லு.. " னு சொன்னக்குரல் கடுப்பாக இருந்தது.


"அந்த காடையை பிடிச்சி, பால் கறந்து.. அதை ஒரு ஃபில்டரில் வடிகட்டி உங்களுக்கு தரேன்" ப்பா..

ஞே.... அவர்ட்ட ரியேக்ஷனே இல்ல..என்ன சொல்றதுன்னு தெரியாம.. என்னையே ப்பாக்கறாரு..  [கனவை சொல்ல முன்னமே கடுப்பா?  யார்கிட்ட??? ]

ரியாக்ஷன் செய்யமுடியாம திகைச்சிப்போய் நிக்கறவரை பாத்து சிரிப்பு வந்தாலும், வெளியேக்காட்டிக்காம... 

"எப்படிப்பா காடை க்கிட்ட பால் கறக்க முடியும்? எனக்கு ஏம்ப்பா இப்படியெல்லாம் கனவு வருது..?"

"உனக்கு இப்படியெல்லாம் கனவு வராட்டிதான் பிரச்சனை..காடை என்ன காடை.. எரும்பை ப்பிடிச்சிக்கூட நீ பால் கறப்ப.. போடி போ.. போய் பல்ல வெளக்கு...."

"ஆவ்வ்வ்.... அப்ப நெக்ஸ்ட் பால் எரும்புக்கிட்டவா..? " ன்னு நினைச்சிக்கிட்டு அவர் மேற்கொண்டு திட்டும்முன்ன எஸ் ஆகிட்டேன். :

கனவை சொல்லியாச்சி...இதோ எழுதியும் வச்சாச்சி. ஆனா என்னாலேயே இந்த கனவை இப்பவரை ஜீரணிக்க முடியல.. ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் கனவு வருதுன்னு தெரியமாட்டேங்குது..

நேத்திக்கோ..அதுக்கு முன்னமோ... காடையோ..கோழியோ மற்ற பறவைகளைப்பற்றியோ பேசல.. பார்க்கல.. காடை ஆம்லெட் சாப்பிட்டுக்கூட ஒரு 4-5 வருசமிருக்கும்..

என்னமோ போங்க.. என்னாலேயே முடியல..

அணில் குட்டி : பாருங்க..கொஞ்ச கொஞ்சமா சந்தரமுகியா மாறிக்கிட்டு இருக்க கவிதா வை பாருங்க.!!!.

பீட்டர் தாத்ஸ் : I'm interested in the dream and subconscious mind, the peculiar dream-like quality of our lives, sometime nightmare quality of our lives. - Anthony Hopkins

வெங்காயம் நறுக்கிய "கத்தி"

எலிப்டிக்கலை ((elliptical) மிதித்தபடி, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்  ..."என்னாச்சு....?"

சலிப்பும் எரிச்சலுமாய்.. "கோச்சிக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா..."
"...................................." 

எப்படி ரியாக்ட் செய்யறதுன்னு தெரியல....  சின்ன சின்ன விசயத்தை பெருசாக்கி.. ...... ச்சே...!! உப்பு பொறாத விசயமெல்லாம் மனுசனுக்கு எவ்வளவு மன உளைச்சலை தருது???.... அதும் பெண்ணுக்குள் தான் எத்தனை "multiple personality?". அம்மா' வாக அதீத அன்பை பொழியும் அவளே,  மருமகளாக/மாமியாராக/நாத்தனாராக .."வில்லி" என பெயரெடுப்பதும்..? அவளைப்படைத்த ஆண்டவனுக்கே அவளை புரிந்துக்கொள்ள முடியுமான்னு தெரியல.

எலிப்ட்டிகல்ஸ் ஐ விட்டு இறங்கி தரையில் செய்ய வேண்டிய
உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தேன். அவளும் நேரம் முடிந்து பக்கத்தில் வந்து நின்றாள்.

"எத்தனை நாள் தான் போட்டும் போட்டும்னு சும்மா இருக்கறது? நானும் பலமுறை இப்படி செய்யாதீங்கன்னு அமைதியா பொறுமையா சொல்லிப்பாத்துட்டேன்... திரும்ப திரும்ப அதையே செய்யறா....சுத்தமா ப்பிடிக்கல எனக்கு...."

"நீ அம்மாவை விட்டு சொல்ல சொல்லியிருக்கலாம்...."

"ம்க்கும்.....அடிக்கடி சொல்ற என்னையே மதிக்கல... இதுல அம்மாவையா மதிப்பா அவ? திமிர் பிடிச்சவ.... இவள எல்லாம் ஆரம்பத்திலேயே அடக்கி வைக்கனும்.. இல்லைனா... தலமேல ஏறி உக்காந்து மொளகா அரைச்சிடுவா.."

கல்யாணம் முடிஞ்சி 4 மாசம் கூட ஆகல. வீட்டுக்கு வந்த அண்ணி'யை இவளால சகிச்சிக்க முடியல... இவ கல்யாணம் செய்துக்கிட்டு போய் எப்படி இருக்கப்போறாளோ? ..............இதெல்லாம் மைன்ட் வாய்ஸ் தான்.. அவளிடம்..

"உனக்கு டாலரன்ஸ் ரொம்ப கம்மி அலர்."

"எத்தனை தரம் சொல்லிக்கொடுத்தாலும், தினம் செய்யற தப்பையே திரும்ப திரும்ப செய்தால் உனக்கும் டாலரன்ஸ் இருக்காது.."

"என்னோடா அம்மா, நான் ஆபிஸ் விட்டு வரத்துக்கு முன்ன எனக்கு ஈசியா இருக்கும்னு சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சி வைப்பாங்க. தினம் மாவு கீழக்கொட்டி இருக்கும், ஆபிஸ் விட்டு வர டென்ஷன்ல
அதப்பாத்தா..கத்துவேன்.... ஆனா அவங்களால முடிஞ்சது அவ்ளோதான்..  'போடி உனக்கு மாவு பெசஞ்சி தரதே பெரிய விசயம்னு" சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.. நான் கத்தறத காதுலக்கூட வாங்க மாட்டாங்க.."

..எனக்கு அம்மா.. அதனால இதைப்பெரிய விசயமா பேசறதில்ல... அதுவே மாமியாரா இருந்தா யோசிச்சிப்பாரு... என்னால கத்தவும் முடியாது.. கத்தினா..அவங்களும் தொடச்சிவிட்டுட்டு போகமாட்டாங்க.....அதான் வித்தியாசம்.. நாம தான் இடத்துக்கு ஆளுக்கு தகுந்தாப்ல போயிட்டே இருக்கனும்... சின்ன சின்ன விசயத்தை பெருசு படுத்தாம விட்டுட்டாவே..பாதி பிரச்சனையை வராது..

"வாஸ்தவம் தான்.. ஆனா சின்னதா இருந்தாலும் ஒவ்வொரு விசயமும் ஒவ்வொரு ரிசல்ட் தரும். ஒரு நாளைப்போல வெங்காயத்தை நறுக்கிட்டு கத்தியை கழுவாம வச்சிப்பாரு, எவ்ளோ நாத்தம் அடிக்கும் தெரியுமா? சமையல் ரூமே நாத்தம் அடிக்கும். கத்தியில் ஒருமாதிரி அழுக்குப்படிய
ஆரம்பிச்சுடும். அந்த கத்தியை வச்சி வேற என்ன நறுக்கினாலும் இந்த வெங்காய நாத்தம் அதிலேயும் வந்துடும்.  இதை அவக்கிட்ட பலமுறை சொல்லிட்டேன். ஆனா அவ எங்க கேட்டா.. ? அதான் நேத்து புடுச்சி வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேன்.. ! "

".... போக போக சரியாகிடும்ப்பா.. அவங்களுக்கு நீங்க செய்யறாப்ல செய்து பழக்கமிருக்காது. ..கொஞ்சம் டைம் குடு.."

"ம்க்கும் கொடுத்துட்டாலும்,...!!!. என் அண்ணனுக்கு தூபம் போட்டு , அம்மாவையும் என்னையும் தினம் எதாது காரணம் சொல்லி நோண்ட மட்டும் நல்லா தெரியுது.. இது தெரியலையா??..."

"...விடு.. திரும்ப வந்தா எப்படியோ இருக்கட்டும்னு இருக்க பாரு...சண்டை ப்போடாத.. உன்னைத்தான் குத்தம் சொல்லுவாங்க.."

"வந்தாப்பாக்கலாம்.. நீ வேணாப்பாரு, தனிக்குடித்தனம் அடிப்போட்டுட்டு அவங்க அம்மா அப்பா தான் வருவாங்க.. அவ எங்க வரப்போறா?

"..........................."

செய்திருக்குமா விஜய் டீவி? # Bigg Boss Tamil

ஓவியாவிடம் ஆரவ் பழகியவிதம் தவறே. வேணாம்னு நினைக்கறவன் தள்ளியிருக்கனும். இங்க இருக்கவரை டைம் பாஸ் னு தொட்டு பேசறதும், கேமரா இருக்கு தள்ளியிருன்னு ரகசியமாக அடிக்கடி சொல்வதும், ஸ்மோக் ரூம்மில் வேற மாதிரி பேசறதும் னு அவன் செய்தது எல்லாமே பொறுக்கித்தனம். ஏன்னா காயத்திரியிடம் முதல் முதலில் சொல்லும் போதே ஓவியா அவனை நிஜம்மாவே காதலிக்கறான்னு தெரிஞ்சி தான் சொன்னான்..

நாமிநேஷன் ஆகாம இருக்கனும்னா காயத்திரி & கோ விற்கு சொம்பு தூக்கனும் அதே சமயம் ஓவியாவிடம் நெருக்கமா இருக்கறது அவங்களுக்கு த்தெரியவும் கூடாதுன்னு திட்டமிட்டு அதை செயல்படுத்த ஓவியாவை மனதளவில் தயார்ப்படுத்த நினைத்தான். ஆனால் நம்ம ஓவியா தான் உண்மையாச்சே எப்படி சரின்னு சொல்லுவாங்க. சொன்னாலும்.. ஏன் அப்படி நடிக்கனும்னு அடுத்த நொடியே மாறிடுவாங்க.

இங்க தான் ஆரவ்'க்கு பிரச்சனை ஆரம்பிச்சுது. தள்ளிவிடறது, பேசாமல் போறது, அடுத்தவங்கக்கிட்ட "ஓவியா என் மேல வந்து விழறா"ன்னு சொல்லி, தனக்கு ஓவியாவை பிடிக்காதுன்னு வெளியில் இருக்க அவன் காதலிக்கும், உள்ள இருக்க மத்தவங்களுக்கும் "தான் நல்லவன்" னு புரிய வைப்பதில் ஆரம்பிச்சி டென்ஷனாவே இருந்தான்.

ஓவியா  "காதல் இல்லை" ன்னு ஆரவ் சொன்னதால், அந்தக் கோவத்தை  மற்றவர்களிடத்தில் காட்டினாங்க. அதற்குப்பிறகும் ஓவியா குழப்பமடையக்காரணம், ஆரவ் திரும்ப வந்து பேசறது தான். தவிர, இரவே, "நாளை நான் இருக்கமாட்டேன்னு " னு சொல்லி ஓவியாவை அதிகளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதும் அவனே. அதை நினைத்தே இரவு தூங்காமல் "மிஸ் பன்றேன்" னு சொல்லிட்டே இருந்தாங்க.

காலையில் காயத்திரி "ஆரவ் இருக்கான்"னு சொன்னதும், ஓவியா ஓரளவு நார்மல் ஆனாங்க. ஆனால், ஆரவ் திரும்பவும் மற்றவர்களால் நாமிநேட் செய்யப்பட்டதும், எப்பவும் போல இவ்ளோ நாடகம், திட்டம் போட்டும் நம்மை நாமிநேட் செய்துட்டாங்களேன்னு, ஓவியா இன்னமும் மன உளைச்சலில் இருக்காங்கன்னு புரியாமல், சுயநலமாக "இப்ப சந்தோஷமா"" ன்னு கேட்டு , ஓவியாவை இன்னமும் மன அழத்தத்திற்கு ஆளாக்கிவிட்டான். அவனிடம் பேச, ஓவியா படுக்கை அறைக்கு சென்ற போதும், "யாரோ இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க" ன்னு திரும்பவும் அப்படியே பேசி ஒவியாவை காயப்படுத்தவும் செய்தான்.

ஓவியா , உண்மையாக நேசிப்பதால், நம்மால் தான் இப்படியெல்லாம் ஆச்சோ? ...ஏன் திரும்பவும் நம்மக்கிட்ட சாதாரணமா பேசறான்..?  அவனுக்கு காதல் இருக்குமோங்கற சந்தேகம் அதிகமாகி அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மட்டுமே நீச்சல் குளத்தில் இறங்கி என்னவோ முயற்சி செய்தாங்க. அந்த ஆழத்தில் நீச்சல் தெரியாவிட்டாலும் சாகமுடியாது என்பதும் உள்ளே ப்போன கொஞ்ச நேரத்தில் ஒவியாவிற்கு தெரிந்திருக்கும்.

ஓவியா இப்படியிருக்க 90% ஆரவ் வும், 10% மட்டுமே மற்றவர்களும் காரணம்.ஓவியாவிற்கு, ஆரவ் ஓவியாவைப்பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசிய குறும்படத்தைக்காட்டியும்,வெளியில் மக்களின் ஆமோக ஆதரவையும், அன்பையும் காட்டியும் மனக்குழப்பத்தை எளிதாக ப்போக்கிட முடியும்.

செய்திருக்குமா விஜய் டீவி?

நிகழ்ச்சிக்காக அந்த பெண்ணின் மனதோடு விளையாடி, பைத்தியக்காரி பட்டத்தை விஜய் டீவி கொடுக்காது என்று நம்பலாமா? பரணியை அப்படி சொல்லிதான் அங்க இருக்கவங்க அனுப்பினாங்க.


பின்குறிப்பு : ஓவியா போயிடுவாங்கன்னு தெரிஞ்சவுடனே, ஆரவ் க்கு ஒரு நிம்மதியும், தான் அங்கு தொடர்ந்து இருக்கமுடியும் என்ற நம்பிக்கையும் வந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இவன் அக்கறையோடு இல்ல சும்மாக்கூட பேசாமல் இருப்பது ஓவியாவிற்கு நல்லது. எப்படி பொய்க்காரி சூலி இப்ப அமைதியா தள்ளி இருக்காளோ அப்படி..