நினைவோ ஒரு பறவை... விரிக்கும் அதன் சிறகை....

பூம்பூம்மாடு : எப்பவோ பார்த்தது. இப்போது எல்லாம் கண்ணில் படுவதேயில்லை. முதுகின் மேல் வேலைப்பாடுகளுடன் கூடிய துணி அல்லது பல நிறங்களில் புடவைகள் போத்திவிட்டு, அழகாக அலங்காரம் செய்யப்பட்டு, கழுத்தில், உடம்பில், கொம்புகளில் சலங்கைக்கட்டி, பலூன் கட்டி பூ மாலை மற்றும் இன்னும் பிற மாலைகள் எல்லாம் போட்டு, "ஜில் ஜில் ஜில்" சத்தத்துடன் மாட்டை ஓட்டிவருவார்கள், ஓட்டிவருபவரும் முண்டாசு கட்டி, காலில் சலங்கை க்கட்டி, கையில் ஒரு பீப்பியுடனும் வருவார். பீப்பியால் ஊதுவார், நடுநடுவே மாடிடம் என்னென்னவோ பேசுவார், கேள்விக்கேட்பார். அதற்கு மாடும் "பூம் பூம்" என தலையாட்டும். இந்த சத்தம் தெருவில் கேட்டால் போதும், ஓடி போயி நின்று மாடு தலையாட்டுவதை வேடிக்கப்பார்ப்பது தான் வேலை. இவருக்கு பணமோ, அரசியோ  தருவார்கள். முக்கால்வாசி அரிசி தான், தோளில் மாட்டியிருக்கும் ஒரு ஜோல்னா பையை திறந்துக்காட்டி வாங்கிக்கொள்வார். அதில் விதவிதமான அரிசி வகைகள் போடப்பட்டு இருக்கும்.

குடுகுடுப்பைக்காரர் : இவர் வந்தாவே வீட்டிலிருந்து யாரும் வெளியில் செல்லாமல் அவர் சொல்லுவதை சத்தமின்றி கவனிக்க சொல்லுவார்கள். அவர் எப்போதும், வீட்டில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே சொல்லுவார். அது நல்லதா கெட்டதா என தெரிந்துக்கொள்ளவே கவனிப்பார்கள். நல்ல விஷயம் சொன்னால், மகிழ்ச்சியோடு காசு போடுவார்கள், இல்லையென்றால், சீக்கிரம் சென்று காசுப்போட்டுவிட்டு, கிளம்புப்பா என்று விரட்டிவிடுவார்கள். பொதுவாக இவர்  "நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது, இந்த வீட்டு மகாலட்சுமிக்கு ஒரு நல்ல செய்தி இருக்கு, ஜக்கம்மா சொல்றா.. இந்த வீட்டு மகாலட்சுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கு.. ஜக்கமா சொல்றா ன்னு ஆரம்பித்து,, குடுகுடுப்பை படப்படவென அடிப்பாரு.. :) இதுக்கு மேல நினைவில்லை. இவரை பிள்ளைப்பிடிப்பவர், பூச்சிக்காரன் வரான் என்றும் சொல்லுவார்கள். இவரை க்காட்டி பயமுறுத்தி குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவார்கள் :)

நவீன்  பூம்பூம்மாடு, குடுகுடுப்பைக்காரர்  இருவரையுமே பார்த்தது இல்லை. பிறந்ததிலிருந்து சென்னையில் தான் இருக்கிறான், விடுமுறைக்கு கூட அவனை வேறு இடங்களுக்கு அழைத்து போனதில்லை. இவை எல்லாம் ஏதோ சில நேரங்களில் நினைவுக்கு வரும், எழுதி வைப்போம் என எழுத ஆரம்பித்ததும் நினைவுக்கு வந்த மற்றும் சில..


தண்டோரா : நகராட்சியில் பொதுமக்களுக்கு ஏதாவது தகவல் சொல்லவேண்டி இருந்தால், தண்டோரா போட்டு தெருத்தெருவாக சொல்லி வருவார்கள். அதாவது வீட்டு வரி கட்ட கடைசி தேதி, புது வரி செய்திகள் போன்றவை இருக்கும்.  இந்த தண்டோரா க்காரர்களுக்கு பணம் கொடுத்தால், வீட்டில் யாரும் இறந்து போனால், நாம் சொல்லும் பகுதிகளுக்கு தண்டோரா ப்போட்டு, யார் இறந்தார்கள், எத்தனை மணிக்கு இறந்தவர் உடல் தகனத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது என்றும் சொல்லுவார்கள். என் அப்பா & தாத்தா இறந்த போது விழுப்புரத்தில் பல இடங்களுக்கு தண்டோரா போட்டு தெரியப்படுத்தினர். :(.  படத்தில் இருப்பது தான் தண்டோராவா என தெரியவில்லை, ஆனால் இப்படித்தான் இருக்கும்.


தயிர்க்காரம்மா : இவங்க தினம் தலையில் கூடையில் வைத்த பானையை சுமந்து, படி ஏறி எங்கவீட்டுக்கு வருவாங்க. ஒரு பானையில் தயிர் இருக்கும், அந்த பானை மேலே உட்காரும் அளவு சின்ன பானை இருக்கும் அதில் வெண்ணெய் இருக்கும்.  அதில் தினமும் வெண்ணெய் இருக்காது. மாதத்தில் 2, 3 நாள் வெண்ணெய் வரும், மற்ற நாட்களில் கெட்டி தயிர். அது யாருக்கோ ஸ்பெஷல் என்று கொண்டு வரும் அந்த தயிர்க்காரம்மா.  பாலை கருப்பஞ்செத்தை  (கரும்பின் காய்ந்த சோலை) எரியவைத்து காயவைத்தால் ஒரு ருசியும், எருமுட்டை எரியவைத்து காயவைத்தால் ஒரு சுவையும், கருவேல மரத்து விறகு எரியவைத்து வைத்து காய்த்தால் ஒரு ருசியும் வரும் என சொல்லுவார்கள்.  எரிக்கும் விறகை பொறுத்துக்கூட செய்யும் உணவின் ருசி மாறும் என்பது அந்த தயிர்க்காரம்மா சொல்லித்தான் தெரியும். அது வந்தால் போது, ஓடி போயி ஓசி தயிர் க்கு பக்கத்தில் நின்று க்கொள்வேன். வீட்டுக்கு கொடுத்துவிட்டு எனக்காக மேலோட்டமாக டம்ளரில் கொஞ்சம் எடுத்து வாயில் ஊற்றும், இல்லைன்னா கரண்டியாலேயே உட்காருன்னு சொல்லி வாயில ஊத்தும் :)))) யம்மி யம்மி.. சூப்பரா இருக்கும்.. :)) அன்னாந்து வாயை திறந்து, சைட்ல எல்லாம் வழிய குடிப்பேன் :)))

கழனித்தண்ணீர் கலெக்ட் செய்பவர்கள் : அரிசி கழுவிய தண்ணீரை தோட்டத்தில் அதற்காக கட்டியிருக்கும் சின்ன ரவுண்டு த்தொட்டியில் ஊற்றிவைப்போம். இதில் இந்த தண்ணீர் தவிர, பழைய சாதம், புளித்து ப்போன இட்லிமாவு, கழுவி எடுத்த கருப்பு உளுந்து தோல் போன்றவையும்  சாக்கடையில் கொட்டாமல், இந்த தொட்டியில் தான் ஊற்றிவைப்போம்.  மாடு வைத்திருப்பவர் வீட்டு ஆயா, சந்து வழியே வந்து தினமும் இந்த தண்ணீரை எடுத்து செல்லும். ஆயா வரும் போது, போய் நின்று கவனிப்பேன், தொட்டியில் கையால் ஒரு கலக்கு கலக்கி, கொண்டு வந்த பானையை உள்ளே விட்டு தண்ணீரை மொண்டு நிரப்பிக்கொள்ளும். ஒரே நாற்றம் அடிக்கும், ஆனால் அது தான் மாட்டுக்கு டிலீஷியஸ் ஃபுட். :)) .

கோவிந்தா : மஞ்சள் நிற உடை அணிந்து, நெற்றியில் பெரிய நாமம் போட்டு, பெருமாள் க்கு வேண்டுதல் என்று கையில் ஒரு தட்டில் பெருமாள் படம் வைத்து அதற்கு பூமாலை எல்லாம் போட்டு வந்து "கோவிந்தா... கோவிந்தா" என்று குரல் கொடுப்பார்கள். இவர்களுக்கும் அரிசி போடுவது தான் வழக்கம். :) பிச்சாந்தேகி என்றும் கேட்பார்கள்.  அரிசி போடவில்லை என்றால் பணமும் போடலாம். இவர்கள் அதிகமாக வருவது புரட்டாசி மாதத்தில் தான். இவங்க இப்பவும் எப்போதோ ஒரு தரம் கண்ணில் படுகிறார்கள், ஆனால் நான் கராராக இவர்களுக்கு பணம் , அரிசி எதுவும் போடுவதே இல்லை. :)

அணில் குட்டி அனிதா : எனக்கு அந்த பூம்பூம்மாடு ரொம்ப பிடிச்சி இருக்கு.. :) ஏன் இப்பவெல்லாம் அது வரமாட்டேங்குது..???, அம்மணி நீங்க  வெட்டியா தானே இருக்கீங்க.. மாடு ஒன்னு பிடிக்கறது?? காசுக்கு காசுமாச்சி, எனக்கும் பொழுது போகுமில்ல.... உங்கள பாத்தா மத்தவங்களுக்கும் பொழுது போகுமில்ல... ??!! .. :))

பீட்டர் தாத்ஸ் : When we're young we have faith in what is seen, but when we're old we know that what is seen is traced in air and built on water.
.
படங்க: : நன்றி கூகுல்.

நண்பர்களின் பின்னூட்டங்களில் இருந்து எடுத்து சேர்த்தது : :)  

1. ஐஸ்வண்டி  -
2. சவ் சவ் ரோஸ் மிட்டாய்க்காரர்
3. விறகு வெட்டுபவர்
4. மரம் ஏறி
5. பால்வண்டி க்காரர், நெய் க்காரர்
6. பொரிக்காரப்பாட்டி
7. அவல்காரர்
8. சாணைப்பிடிக்கறவர்
9. அம்மி, உரல் கொத்துபவர்
10. நாவிதர்
11. பஞ்சுமிட்டாய் தாத்தா
.

கேப்பங்கஞ்சி வித் கவிதா’வுடன் அபிஅம்மா

வாங்க அபிஅம்மா...எப்படி இருக்கீங்க? அபி, நட்டு & அபிஅப்பா எப்படி இருக்காங்க? ஊருக்கே விருந்து வைக்கறவங்க நீங்க. .ஆனா உங்களுக்கு வெறும் கேப்பஞ்கஞ்சி ய கொடுக்க கூப்பிட்டு இருக்கேன்.:) என்ன செய்ய..அதுக்கு மேல எனக்கு இங்க வசதி இல்ல :)) எப்படியோ சகிச்சிக்கிட்டு குடிச்சிக்கிட்டே என்னோட கேள்விகளுக்கும் பதில் சொல்லிடுங்க. கேள்வியும் அப்படித்தான் இருக்கும் :)). உங்களை கேப்பஞ்கஞ்சி’க்கு அழைக்க காரணம், நீங்க ஒரு சக்சஸ்ஃபுல் குடும்ப தலைவி, அப்படி இருப்பதே இந்த காலத்தில் மிகப்பெரிய சாதனை. :).அந்த சாதனைக்காக உங்களை அழைத்து பேச விரும்பினேன்.

உட்காரவைத்து மரியாதையாக கேட்ட கேள்விகள் : -

கவிதா : உங்களை பற்றி சின்னதா ஒரு அறிமுகம் செய்துக்கோங்க. (உங்க ஊர், படிப்பு, குடும்பம் பற்றி )
வணக்கம் கவிதா! கேப்பங்கஞ்சி எனக்கு ரொம்ப பிடிச்ச உணவு. வசதிக்கும் கேப்பைக்கும் தானே எப்பவும் பத்து பொருத்தம். பணக்காரங்க வியாதின்னு செல்லமா சொல்ற சர்க்கரை வியாதிக்கு அருமருந்தே கேப்பைதானே. அதனால இன்னைக்கு பணக்கார உணவு கேப்பை தான்:-). 
என்னோட பெயர் கிருஷ்ணா தொல்காப்பியன். படிப்பு D.C.E., எங்க சொந்த  ஊர், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர். ஆனால் அப்பா மாயவரம் மாற்றலாகி வந்து, அங்கவே வீடு வாங்கி செட்டில் ஆகிட்டோம். படித்து முடித்ததும், பழனி தேவஸ்தானத்தில் ஜூனியர் இன்ஜினியராக (சிவில்) வேலை கிடைத்து செய்து வந்தேன்.

கவிதா: அட நீங்க சிவில் என்ஜினியரா  சொல்லவே இல்ல?  அப்படீன்னா தனிப்பட்ட உங்களின் ஆர்வம், விருப்பம் காரணமாக தான் படிச்சி இருப்பீங்க... வேலைக்கு போறீங்களா?
ஆமாம். டிகிரி இல்லை. டிப்ளமா தான். தனி ஆர்வம்'ன்னு சொல்ல முடியாது. என்னோட விருப்பம் னா அது டீச்சர்’ ஆவது தான். அந்த காலேஜ் பழனியில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அதிக தூரம் என்பதால் பக்கத்தில் இருந்த பாலிடெக்னிக்கில்  சேர்த்துவிட்டாங்க. விரும்பியது கிடைக்காட்டியும் கிடைத்ததை விரும்புகின்ற மனோநிலை எப்போதுமே எனக்குண்டு. அதனால் அதிலே எனக்கு பிடிச்ச சிவில்' எடுத்தேன். படித்து முடிச்ச பிறகு பழனி தேவஸ்தானத்தில் வேலை கிடைச்சது.  கல்யாணத்திற்கு பின்னே வேலைக்கு போகவில்லை.

கவிதா: வேலைக்கு போயிக்கிட்டு இருந்த நீங்க திருமணத்திற்கு பின் வேலையை விடனும்னு வந்தப்ப உங்க மனநிலை எப்படி இருந்தது..?
அது முன்பே எடுத்த முடிவு. அதே சமயம், அப்பாவிற்கும் சிதம்பரத்திற்கு வேலை மாறியது. அதனால் சிதம்பரத்தில் B.E.,சேர்ந்துவிடலாம் என வேலையை விட்டேன். ஆனா, உடனே கல்யாணம் ஆயிடுத்து. அதுக்கு அப்புறம் படிக்கவும் மனசில்ல, வேலைக்கு போகவும் முடியல. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் ன்னு எனக்கு சரிப்பட்டு வராதுன்னு நினைத்து விட்டுட்டேன்.

அணில் : அபிஅம்மாஅக்கா....... (ஸ்ஸ்ஸ் இவிங்கள எப்படி கூப்பிடனும்னே தெரியலையே.)) ஹி ஹி...கிருஷ்ணாக்கா,  கவி ய பத்தி என்ன தெரியும்னு பேட்டிக்கொடுக்க வந்தீங்க?
அணிலு ஆஞ்சநேயர் பலம் ஆஞ்சநேயருக்கு தெரியாது. அம்மாம் பெரிய பாலம் கட்டினபோது கூட இருந்து பார்த்த அணிலுக்குமா தெரியாம போச்சு? முத்துக்கு கேப்பங்கஞ்சி ஊத்தினப்ப, அதை படிச்சி இருக்கேன். அதனால கவிதா'வின் கேப்பங்கஞ்சி பத்தி ஓரளவு தெரியும். என்னை கேப்பங்கஞ்சி க்கு கூப்பிட்டவுடனே அபிஅப்பாவை, கவிதாவின் பதிவில் படிக்க நல்லதா லிங் எடுத்து கொடுங்க என கேட்டு படிச்சது. ல்விங்ஸ்மைல் வித்யாவின் கேப்பங்கஞ்சி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். நல்ல பதமான பேட்டி அது. 

கவிதா : திருமணத்திற்கு முன் and பின் - இதை இழந்தீர்கள் எதை பெற்றீர்கள் ?!  (பெற்றவையில் குழந்தைகள், அபிஅப்பா பற்றி எல்லாம் சொல்ல க்கூடாது)
திருமணத்துக்கு முன் இழந்தது B.E படிப்பை மட்டுந்தான். வேறு எதையும் இழந்ததாக நினைவில்லை. அது போல திருமணத்துக்கு முன்பு அடித்து போட்ட மாதிரி வருமே ஒரு தூக்கம், அதை திருமணத்திற்கு பின் இழந்தேன்னு சொல்லலாம். அப்பெல்லாம், நினைச்ச நேரத்தில் தூங்கலாம். குடும்ப ரெஸ்பான்சிபிலிட்டி இல்லை.. ஆனா, திருமணத்துக்கு பின் வெறும் 1000 ரூபாயில் குடும்பம் நடத்துவது எப்படி, மாசம் 75 ஆயிரம் வந்தால் குடும்பம் எப்படி நடத்தறதுன்னு திட்டமிட வேண்டியிருக்கு. அதனால, படுத்த பின்னும் வீட்டுவரி, பாலிசி, கேபிள், ஸ்கூல் பீஸ் ன்னே கனவுகள் வருது. ஆக திருமணத்துக்கு பின்னாடி எனக்கு கிடைப்பது நல்ல அனுபவம் தான்.

அணில் : கிருஷ்ணாக்கா நீங்க இருக்கும் வீடு, நீங்க ப்ளான் செய்த படி கட்டியதுன்னு சஞ்சய் அங்கிள் ஒரு போஸ்ட் ல எழுதி இருந்தாங்க நிஜம்மாவா க்கா?  உங்களுக்கு உங்க வூட்டுல அப்படி எல்லாம் ஃபிரிடம் கொடுத்தா வச்சி இருக்காங்க? இல்லாட்டி நீங்களே அதை புடுங்கி வாங்கனீங்களா?
சஞ்சய் எழுதின அந்த பதிவை படிச்சேன், பின்னூட்டம் கூட போட்டு இருக்கேன் அதிலே. நாங்க கல்யாணத்துக்கு பின்னே பேசிய முதல் பேச்சே வீடு பற்றியது தான். ஒரு தனி வீடு, பார்க்க அழகா, சின்னதா, தினமும் அதை நானே சுத்தம் செய்யும் அளவான வீடு என ஏகப்பட்ட கனவு. அப்போது மனதில் போட்ட பிளான் இந்த வீடு. அதில் கொஞ்சமும் மாறாமல் கட்டியது தான் என் வேலை. மற்றபடி பிளான் என்பது எங்க இரண்டு பேரின் பிளான் தான். பொதுவா பத்து மாதம் தான் கரு சுமக்கும் காலம். ஆணால் நாங்க இந்த வீட்டு பிளானை பத்து வருஷம் கருவாக சுமந்தோம்.
சுதந்திரம் 'ங்கறது கொடுக்கல் வாங்கல் பிஸினஸ் இல்லை. சுதந்திரத்தை எடுத்துப்பது, விடுப்பது தான். அவங்க அக்கறையா செய்யும் ஒரு காரியத்தை அவங்க கிட்டே விடுவதும்,நான் அக்கறையா செய்யும் காரியத்தை நானே செய்வதும் தான் நடந்தது. மார்பிளா, டைல்ஸா' ங்கறது முதல், மாடி கைப்பிடி டிசைன் வரை சண்டை என்பது நடந்து கொண்டு தான் இருந்தது. சண்டையில் யார் ஜெயிக்கிறோமோ, அவங்க சொன்னத் நடந்திடும். இப்போது கூட வீட்டில் தன் தலைவர் படம் மாட்ட வேண்டும் என அடம். குழந்தைகள் படமே மாட்டக்கூடாது என்கிறேன், தலைவர் படம் மாட்டவிடுவேனா? மாட்டவே கூடாதுன்னு சொல்லிட்டேன். இப்படி நானும் அவரோட சுதந்திரத்தை பறிப்பது உண்டு:-)) 

கவிதா : நீங்க ஒரு குடும்ப *குத்துவிளக்கு" ஆச்சே....  உங்களின் பார்வையில் - ஒரு பெண் எப்படி இருக்கனும்னு நினைக்கிறீங்க? ,
ஹாஹா! குடும்பம் பார்த்துப்பது என்பதும் ஒரு வேலை தானே. அதக்கு மட்டும் என்ன குத்துவிளக்கு பட்டம் தனியே வேண்டி கிடக்கு:-)) அப்படி பார்த்தா ஆபீஸ் குத்துவிளக்கு, பிஸினஸ் குத்துவிளக்கு,ன்னு சொல்லலாமே. :)).  ஆண்/பெண் யாராக இருந்தாலும் சரி தன் கடமை இது தான்னு தெரிந்த பிறகு, அதை சரியா செய்து முடித்தால் போதும். அது அத்தனை பெரிய கம்பசூத்திரம் ஓன்னும் இல்லை. விட்டு கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டு கொடுப்பதும், தட்டி கேட்கும் நேரத்தில் தட்டிகேட்பதும் பரஸ்பரம் நடக்க வேண்டியவை. அதிலே ஆண் என்ன பெண் என்ன?  

கவிதா: உங்க கணவர், ப்ளாக் எழுதுகிறார். அவரை "பெண்களிடம் ஜொள்ளுவிட்டு திரிபவர்" என்று வினவு தளத்தில் எழுதப்பட்டு இருந்தது. இது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன், இதனால், அவரின் மனைவியாக உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?   (உங்களின் நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்)
என்னை பொறுத்த வரை இது ஒரு விஷயமே இல்லைங்க. ப்ளாக்ல எப்போதும் யார் யார் பற்றியோ கிசுகிசு வருது. இது மாதிரி மத்தவங்கள பத்தி பேசறது என்ன புதுசா? சகஜம் தானே. அது மாதிரி இதுவும் ஒன்னுங்க. 15 வருஷமாக அவரை எனக்கு நல்லா தெரியும், இதை ஒரு மேட்டராகவே நான் நினைக்கல...கவலையும் படல.... என்னைப் பொருத்தவரை கண்டுக்காம ஒதுக்கித்தள்ள வேண்டிய ஒரு கிசுகிசு.. :) 

அணில்: யக்கோவ், மங்சிங் அண்ணாச்சி ய பத்தி கூட அதுல எழுதி இருந்தாங்க.. பாவம் அண்ணாச்சி தொண்ட கிழிய கத்தி கூப்பாடு போட்டாரு (ஒன்னியம் வேலைக்கு ஆகல அது பெரிய சோகக்கதை, அதை அப்பாளிக்கா உங்கக்கிட்ட தனியா சொல்றேன் சரியா..) ஆனா, உங்க வூட்டுக்காரு செம சைலன்ட் ஆ கமுக்கமா இருந்தாரே' ன்னு எங்க கவி க்கு டவுட் வந்து,  நேராவே "நீங்கள் இப்படி செஞ்சீங்களா? ஏன் உங்க பேரு வந்து இருக்குன்னு கேட்டுட்டாங்க" ஆனா நீங்க அவரோட வூட்டுக்காரம்மணி, சும்மாவா வீட்டீங்க? பூரி கட்டைய வச்சி அடிச்சி உதச்சி அவரு என்ன செய்தார் ஏன் அப்படி பேர் வந்துச்சின்னு கேட்டீங்களா?
அணிலம்மா, போன பதிலிலேயே சொல்லிட்டேனே.. அது ஒரு மேட்டரே இல்ல, இதுல என்ன அதைப்பத்தி பேசிக்கிட்டு, துருவி தோண்டிக்கிட்டுன்னு விட்டாச்சி,  நானு, அபிஅப்பாவை இந்த விஷயமா கேக்கக்கூட இல்லை :), தலையில ஏத்தி வச்சிக்கிற அளவு ஒர்த் இல்லாத விஷயம். அதான் சொல்லிட்டேனே.. 'கிசு.கிசு' ன்னு.. அதுக்கெல்லாமா முக்கியத்துவம் கொடுப்பாங்க :))) விடு..விடு..போட்டும்.

கவிதா : புடவை, நகை, அக்கம் பக்கத்து கதைகள், டிவி சீரியல், குழந்தைகள், கணவருக்கு சாப்பாடு கொடுப்பது தவிர்த்து, சமுதாயம் சார்ந்த பிரஞ்ஞை உங்களுக்கு இருக்கிறதா? ஆம் என்றால் அவை என்ன? இல்லை என்றால் ஏன்?
முதலில்ல என் வீட்டை, என் குழந்தைகளை கவனிக்கிறேன். யாருக்கும் எந்த தீங்கும் என் குழந்தைகளால் வராதபடி வளர்கிறேன். அதுவே என்னால் சமூகத்துக்கு முடிந்த பெரிய கடமை. எனது வீடு, குழந்தைகள், குடும்பம், வீட்டுக்கு வெளியே வாசல்,தெரு இதுதாங்க என் உலகம். இதை தாண்டி எல்லாம் நான் போறது இல்லைங்க. டிவி சீரியல் பார்க்கறதை எல்லாம் வேணாம்னு சொல்ற அளவு நானு இண்டலக்சுவல் இல்லை. பார்த்தால் தப்பில்லை ன்னு தான் நினைக்கிறேன்.  எந்த நேரமும் லேப்டாப் முன் அமர்ந்து பஸ் அரட்டை, பேஸ்புக், ட்விட்டர், எல்லாத்திலியும் குட்மார்னிங், என் மனைவி புளிகுழம்பு வைத்தாள் என சொல்லிகொண்டு இருப்பதற்கும், டிவி சீரியல் பார்க்கும் பெண்ணுக்கும் அதிக வித்தியாசம் இல்ல. (நான் டி வி சீரியல் பார்ப்பது அரிது. அது வேற விஷயம்) அது தப்பு, கேலிக்குரியது ன்னு சொன்னால் அதையே கம்பியூட்டர்ல செய்யும் நீங்களும் அதே கேட்டகிரியில தானே வரீங்க.. :))

கவிதா : பெண்ணியவாதிகள், பெண் போராளிகள் பற்றிய தங்களின் புரிதல் ?
என் பாட்டி வயது 95 ஆகிறது. அவங்க ஒரு பெண் வயதுக்கு வந்தால் படிப்பை நிறுத்திடனும்னு உறுதியா சொல்லுவாங்க, அதான் பெண்மைக்கு அழகுன்னு சொல்லுவாங்க. அவங்க கண் வழி பார்த்தா அதான் அவங்களோட பெண்ணீயம். என் அம்மா காலத்தில் அது வேற மாதிரி இருந்தது. என் காலத்தில் அது இன்னும் கொஞ்சம் மாறி போனது. இப்போதிய காலக்கட்டத்தில் பிடிக்கலையா. டைவர்ஸ் பண்ணு என்கிற ரீதியில் வந்தாச்சு. எது பெண்ணீயத்துக்கு அளவுகோள்னு யாரும் சொல்லமுடியாது, அது அவங்கவங்களை பொறுத்தது. 

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் பெண்ணை கூட போராளியாக மாத்துது. இந்திராகாந்திம்மா, அவங்க அம்மாவோட இல்லாம அப்பா கூடவே அவரை பாத்து பாத்து வளந்தாங்க. அரசியல்ல அவங்க ஈடுபட காரணம் அவங்க வளந்த சூழல். இலங்கையில் பெண்கள், வீட்டிலே இருந்த அப்பா, மாமனார், புருஷன், மகன் னு எல்லாம் அழிந்த பின்னே அவங்க போராளியா ஆக வேண்டிய சூழ்நிலை. ஏன் அவங்களுக்கு மட்டும் குழந்தை, புருஷன், மெகந்தி, வளையல், கர்ப்பம், டிவி சீரியல் ஆசை எல்லாம் இருந்திருக்காதா என்ன? சூழ்நிலை பாவம் அப்படி ஆகிபோச்சு:-( இதுக்கு மேல இதைப்பத்தி விளக்கம் எனக்கு சொல்ல தெரியலை

அணில்: உங்களை உக்காரவச்சி  என்னிக்காவது இந்த அபிஅப்பா சமைச்சி போட்டு இருக்காறா? இல்லாட்டி நீங்களாச்சும் யோவ் சமைச்சி போடுய்யா.. அப்படின்னூ கேட்டு இருக்கீங்களா?
அபிஅப்பாவுக்கு சமைக்க தெரியும். ஆனால் நான் சமைக்க விடுவதில்லை. ஏன்னா சமைத்து கொடுப்பதை மத்தவங்க ருசித்து சாப்பிடனும்னு நினைக்கிறதை விட இதை பதிவாக்கி பின்னூட்டம் எத்தனை வருங்கற கணக்குத்த்தான் அவங்க மனசில் அதிகம் ஓடும். அதனால் சமைக்க விடுவதில்லை. மேலும், என் வேலைகளை மற்றவர்கள் செய்யும் போது எனக்கு திருப்தி வராது. 
கவிதா : ஒரு வீடு கட்டும் போது அத்தியாவசியமாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
பல்வலி வந்தால் உலகிலேயே அதிக வலி அதான் என்போம், வயிற்று வலி வந்தால் அதான் வலி என்போம். அது போல வீடு கட்ட ஆரம்பிக்கும் போது சாயில் டெஸ்ட் அதாவது மண் பரிசோதனையிலேயே அதன் பைலிங், ஃபூட்டிங் எல்லாம் எப்படி செய்ய வேண்டும் என தெரிந்து விடும். அப்ப ஆரம்பிக்கும் சவால்கள், பிரச்சனைகள் இல்லை. வீடுகட்டி முடித்த பின்னர் காலம், பீம்ல எல்லாம் நீட்டி கொண்டிருக்கும் கம்பிகளில் ரஸ்ட் ப்ரூப்ஃ பார்க்காம விட்டா வரும் ஸ்டீல் கேன்சர் எனப்படும் வியாதி வரை சவால் தான் எல்லாமே. அப்போதைக்கு மற்றது மறந்து போய் புதியது தான் நியாபகம் இருக்கும். இதை விரிவாக தான் சொல்ல முடியும். பத்து பதிவா போட மேட்டர் இருக்கு அபிஅப்பாவுக்கு:-))

அணில்: அட இம்புட்டு மேட்டர் உங்களுக்கு தெரியுது அப்புறம் ஏன் நீங்களும் அபிஅப்பா மாதிரி எழுதறது இல்ல?  அபிஅப்பா உங்க கைய கால எல்லாம் கட்டி போட்டு ஹவுஸ் அரஸ்ட் செய்து வச்சி இருக்காறா?
மேட்டர் தெரிஞ்சவுடன் இதை எழுதினால் அதிகபட்சமாக கட்டுமானதுறையை ஒரு இருபது பதிவில் முடிச்சிடலாம். ஆனா இதை எல்லாம் நேரிடை அனுபவத்தால் தான் முழுசா கொடுக்க முடியும். சமீபத்தில் திரு. வேலன் அவர்களின் வீட்டு பிளான் போடும் சாஃப்ட்வேர் பதிவு படிச்சேன், அது போல சில நல்ல பதிவுகள் போடலாம். அதையே தான் திரு.வேலன் மாதிரி இருக்கவங்க எழுதறாங்களே..நான் தேவையா? அவரோட பதிவுக்கு இந்த லிங் பாருங்க. அபிஅப்பா என் கையை கட்டி எல்லாம் போடவில்லை. அப்படியே போட்டா அப்ப என் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என இது வரை அனுபவம் இல்லை.

கவிதா: கோல்டன் ஹவர்ஸ் - (அதிகாலை 4-6 வரை) - இதைப்பற்றிய விளக்கம் சொல்ல முடியுமா?
எப்பவும் 3.30க்கு எழுந்துக்குவேன். காலை 4 மணிக்கு பூஜை செய்ய ஆரம்பித்து 5.30க்கு முடித்துவிட்டு, சில சமயம் படுத்துகூட விடுவேன். அந்த ப்ரம்ம நேரத்தில், நம் மூளை நல்ல புத்துணர்ச்சியுடன் வேலை செய்யும், அப்போது வீசும் காற்று மாசு இல்லாமல் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது, அவற்றை பெறவே இந்த பூஜை நேரம் வீட்டில பழக்கப்படுத்தப்பட்டது. முக்கியமாக பூஜைக்கு எந்த தொல்லையும் இருக்காது

கவிதா: கணவர் - இவங்க ஒரு காலக்கட்டத்தில் மனைவிக்கு இன்னொரு குழந்தையாக ஆகிடறாங்க..- விளக்கம்
கணவரின் மேல் இருக்கும் ஆசையில், அன்பில் எல்லோரும் கணவரை தாயை போல் கவனிச்சிக்குவாங்கத்தான். ஆனா அதையே இவங்க அட்வான்டேஜ் ஆ எடுத்துக்கிட்டு, தன் வேலையை கூட பொண்டாட்டி செஞ்சுட்டா நல்லா இருக்கும் என நினைக்கும் நினைப்பு சோம்பேறி தனத்தின் உச்சம். அதுவும் ஒரு "ஐஸ்" வைக்கும் விஷயம் தான். எனக்கு எதும் தெரியாது. எல்லாம் அவ பார்துப்பா என மற்றவர்கள் மத்தியில் அள்ளிவிடுவது. இது தெரியாத பேக்குகள் அதை பாராட்டா நினைச்சு "ஹய்யோ நான் இல்லாட்டி அவரு சோத்தை எடுத்து காதிலே வச்சாலும் வச்சிப்பாரு' என உருகும் பெண்கள். இதெல்லாம் சுத்த அக்மார்க் அயோக்கியத்தனம்.

கவிதா: அபியை பற்றிய ஒரு பதிவு ரொம்ப கோபமாக எழுதி இருந்தேன். திருமணம் செய்து கொடுத்தப்பின் ஒரு பெண், அவளின் வாழ்நாள் முழுதும் தம் குடும்பத்தின் நலன் கருதி பொறுப்பாகவும், அதற்கான வேலைகளை சரிவரவும் செய்துக்கொண்டு தான் வர வேண்டும். நிற்க, அவள் பிறந்தவீட்டிலாவது எந்த வேலை பளுவும் இல்லாமல் சந்தோஷமாக வைத்திருக்கலாமே? ஏன் அவளைக்கும் இந்த வயதிலேயே பொறுப்புகளை கொடுக்கிறீர்கள்?
குழந்தைகளுக்கு அவங்க அவங்களுக்குன்னு வேலையை பிரிச்சு கொடுத்து செய்ய பழக்கனும். முதலில் தான் சாப்பிட்ட தட்டை கழுவ சொல்லி பழக்க ஆரம்பிக்கனும். பின்னே டாய்லெட் போனா தானே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லி தரனும், அப்புறம் படிப்படியாக எல்லாம் சொல்லித்தர வேண்டியது தான். இதிலே ஆண் குழந்தை, பெண் குழந்தை பாகுபாடு பார்க்கக்கூடாது. அபிக்கும் தன் வேலையை தானே செய்ய சொல்லி பழக்கி வைக்கிறேன். நட்டுவுக்கும் பழக்குவேன். ஆண் குழந்தையையும் வேலை செய்ய சொல்லி பழக்கும் போது, நாளை வரும் மனைவியை அவன் அவனுடைய வேலையை செய்ய சொல்ல மாட்டானே

இதிலே கொடுமை சில பேர் பெண் குழந்தைகளுக்கு குறிப்பாக அப்பாக்கள் "அய்யோ அவ போற இடத்திலே தான் கஷ்ட்டப்பட போறாளே, என் வீட்டிலாவது சந்தோஷமா இருக்கட்டும்" என சொல்லி தன் மனைவியை கஷ்ட்டப்படுத்துவாங்க. என்னய்யா இது அப்ப உன் மனைவியும் இன்னும் ஒரு அப்பனுக்கு பொண்ணு தானே என்கிறது தெரியலையா. நீ பெத்த பொண்ணுன்னா ஒரு சட்டம்.இன்னும் ஒருத்தன் பொண்ணுன்னா ஒரு சட்டமா.?. அதாவது அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆன பின்னே அடிமை வாழ்க்கை வாழனும் என மனதளவில் மறைமுகமாக தயார் படுத்துறான் ன்னு அர்த்தம். .

அணில் : யக்கோவ் வுட்டா அம்மணி உங்களையும் அவிங்களமாதிரி டென்ஷன் கேஸா மாத்திடுவாங்க. .சோ நீங்க எனக்கு பதில் சொல்லுங்க... உங்களோட ஸ்கூல், காலேஜ், ஆபிஸ் பிரண்ட்ஸ் பத்தி சொல்லுங்க... இன்னும் அவர்களோட கனக்ஷன் இருக்கா.. ?
இல்லை. அணில். எனக்கு அத்தனை நண்பிகள்,நண்பர்கள் இல்லை. இப்போது பழக்கமும் விட்டு போச்சு.

கவிதா : நேரம் காலம் இல்லாம இந்த அபிஅப்பா  யாரையாச்சும் விருந்துக்கு கூட்டுட்டு வராரே... அவரை விறகு கட்டையாலயே அடிக்கனும் போல உங்களுக்கு தோணி இருக்கா.. இல்ல அடிச்சே இருக்கீங்களே.. ?
இல்லை. விருந்து, சமையல் எல்லாம் எனக்கு பெரிய சுமை இல்லை. நான் அபி மாதிரி இருக்கும் போதே சமைக்க தொடங்கிட்டேன். என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால், சீக்கிரமே சமைக்க ஆரம்பிச்சிட்டேன். நான் புகுந்த வீட்டிலும் என் மாமியார் எப்போதும் அனையா அடுக்களைக்கு சொந்தக்காரி ன்னு சொல்லலாம். எப்போது யார் வந்தாலும் நல்ல சாப்பாடு சமைத்து அதிலே ஒரு வகை இன்பம் காணும் குடும்பம். அதனால் எனக்கு சமையல் என்பது ஒரு பிடித்தமான விளையாட்டு.

ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :

1.ப்ளாக் நண்பர்கள் உங்கள் வீட்டிற்கு இதுவரை வந்தவர்களை நினைவு கூற முடியுமா? உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பர்/தோழி யார்?ஏன்?
பிளாக் நண்பர்கள் என சொன்னாசீமாச்சு அண்ணா, கண்மணி டீச்சர்,முத்து, இம்சைஅரசி ஜெயந்தி, கவிதாயினி காயத்ரி, இராம், ஜி(ஜியாவுதீன்), கோபி, சென்ஷி, ஆயில்யன், நாமக்கல் சிபி & அவரோட மனைவி, பாலராஜன் கீதா, தினேஷ், மாலா(நட்புவலை), கீதாம்மா, வழிப்போக்கன் யோகேஷ், வேலன் அண்ணாச்சி, கும்க்கி, சஞ்சய், மங்களூர்சிவா, இம்சைவெங்கி, இளையகவி கணேஷ்குமார், குசும்பன்,ஷோபா அக்கா, மாயவர்த்தான், நீடூம்நிஜாமுதீன் இன்னும் சிலர் பெயர் உடனே நியாபகம் வரவில்லை. இன்னும் நாகைசிவா, சுரேகா, ஜி3, ஜே கே போல பலரை குசும்பன் திருமணத்தில் பார்த்தேன். நான் போன வலைபதிவர்கள் வீடு என்றால் சீமாச்சு அண்ணா, கண்மணி டீச்சர், மயில் விஜி, மஞ்சூர் ராஜா வீடுன்னு போயிருக்கேன். கோவை போன போது சந்தனமுல்லை, தாரணி பிரியா, வீட்டுபுறா சக்தி, செல்வா ஆகியோரை பார்த்து இருக்கேன்.  எனக்கு நண்பர்கள் வட்டம் தனிப்பட்டு இல்லை.அபிஅப்பாவுக்கு நண்பர்கள் எனக்கும் நண்பர்கள் ஆகிவிடுவது தான் வழக்கம்..

2.அபி - நட்டு - இரு குழந்தைகளிடம் உங்களின் மனம் கவர்ந்த விஷயம் என்ன? 
அபியிடம் சின்சியாரிட்டி. எதிலும் ஒரு வரைமுறை இருக்கும். கோடு போட்டு வாழும் வாழ்க்கை. அது பிடிக்கும். 
நட்ராஜிடம் ரெஸ்பான்சிபிலிட்டி. எதிலும் ஒரு பொறுப்பு இருக்கும். டாய்லெட் போகும் போது லைட் போட்டு போனால் கூட வரும் போது சேர் எடுத்து போட்டு ஆஃப் செய்து விட்டு வருவதும், கேட் திறந்து வைக்காமல் அதை சாத்தி விட்டு வருவதும், வீடு பூட்டிய பின் அதை இழுத்து பார்ப்பதும், சிலேட்டில் எழுதிய பின் அதை உள்ளே வைக்கும் போது அழகாக அழித்து விட்டு வைப்பதும்

3.அபிஅப்பா வின் மைனஸ் , ப்ளஸ் என்ன? (பர்சனலாக இருந்தால் இந்த கேள்வி வேண்டாம்)
அவங்க மைனஸ், பிளஸ் இரண்டுமே ஒரே விஷயமாக தான் இருக்கும் எல்லா விஷயத்திலும். எந்த கெட்ட பழக்கம் ஆனாலும் அதில் எக்ஸ்ட்ரீம் லெவல் வரை போவது பெரிய மைனஸ் பாயிண்ட் அதை ஒரே நாளில் தூக்கி போட்டு பின்னர் அதை சீந்தாமல் ஒதுக்குவது பிளஸ் பாயிண்ட். அது போல முக்கியமான ஒன்று he is an unperdictable man.  அவரை எளிதில் கணிக்க முடியாது.

4. எது உங்களின் வாழ்க்கையில் உங்களுக்கு பூரண திருப்தி அளிக்கிறது என்று நினைக்கிறீர்கள்? ஏன்? 
அஃப்கோர்ஸ் கணவர், குழந்தைகள், குடும்பம் எல்லாமே பூரணதிருப்தி தான்.

5.உங்களுக்கு பிடித்த நடிகர், கலர், உணவு, சினிமா, உடை ? 
சினிமாவில் அத்தனை ஆர்வம் இல்லை. அதனால் இந்த நடிகர் படம் பிடிக்கும்னு ஆசையாக எல்லாம் பாக்கமாட்டேன். கலர் பற்றி கவலைப்பட்டது இல்லை. எதுனாலும் ஒக்கே தான். உடை - புடவை மட்டுமே. காட்டன் புடவை பிடிக்கும். படிக்கும் காலத்தில் ஜீன்ஸ் போட்டதுண்டு. அதும் சைட் விசிட்க்கு மட்டுமே.

6. பொது வாழ்க்கையில் உங்களை கவர்ந்த அல்லது பிடித்த பெண் /ஆண் யார்?
கர்மவீரர் காமராஜர், ராஜீவ்காந்தி, பெரியார், அன்னை இந்திராவை, விஜயலெஷ்மி பண்டிட்டை பிடிக்கும், கலைஞரின் மகள் செல்வி' யை மிகவும் பிடிக்கும்.

7. கலைஞர் - பிடித்த பிடிக்காத விஷயங்கள்
பிடித்தது : உழைப்பு, பிடிக்காதது : ஒன்றும் இல்லை.

8. உங்கள் பிறந்தவீட்டில் இருந்த ஒன்று புகுந்த வீட்டில் இல்லாதது - நீங்கள் மிஸ் பண்ற ஒரு பொருள்
அம்மாதான். ஆனால் பொருள் என்று கேட்டதால் எதும் இல்லை. என் உண்டியல் முதல்கொண்டு எல்லாவற்றையும் எடுத்து வந்துவிட்டேன்:-)

9. இசை ஆர்வம் பற்றி. பிடித்த இசை, இசைக்கலைஞர்.
எனக்கு அண்ணன் முறையான திரு.மாணிக்கவினாயகம் தான். காரணம்  என்னை குழந்தை முதல் அவர் பார்க்கும் போது எல்லாம் "கிருஷ்ணா முகுந்தா முராரே" என்ற கீர்த்தனையை பாடுவார், அது பிடித்து போனது. என் பெயரில் பாடுவதால் ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். அது போல அவர் பாடலில் தாளம் கட்டுக்குள் அடங்கி வரும். கைமீறி போகாது. ஒரு சிக்கனமான குடும்ப தலைவி குடும்பம் நடத்துவது போல தாளம் கட்டுக்குள் இருக்கும். ஸ்ருதி பிசகாது. அது போல டி ஆர் மகாலிங்கம் அவர்கள் பாடும் போது பிருகா அடிக்கும் வேகம்.... ஆலாபனையின் போது சர்னு ஒரு பிருகா அடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். விரும்பி கேட்பேன். அது போல பெண்களில் எஸ். வரலஷ்மி. அதே டைப் பிருகா அடிப்பதில் கெட்டிகாரங்க. ரொம்ப பிடிக்கும். 

ஹைலைட்ஸ்:

1. கேள்வியை அனுப்பி, அபிஅப்பாவின் தலையீடு இருக்கவே கூடாதுன்னு பலமுறை சொல்லியும், ஒன்னும் நடக்கல, நானும் விடல, அபிஅம்மாவும் விடல. இருவரும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கடைசி நேரத்தில் அபிஅப்பா வின் எக்ஸ்ட்ரா மேட்டர் எல்லாத்தையும் எடுத்துவிட்டோம்.(எங்களோட கூட்டு சதி ன்னு சொல்லமுடியாது, 2 பெண்களும் சேர்ந்து, சதியை மதியால் வென்றோம்னு சொல்லிக்கலாம் :), அபிஅம்மா கைக்கொடுங்க..:)) )

2. அபிஅம்மா ரொம்ப தெளிவாக இருந்தாங்க. என் கேள்விகளுக்கு அவங்களோட பதில் என்னவாக இருக்கனும், எப்படி இருக்கனும், எது இருக்கக்கூடாது, எந்த வார்த்தைகள் வரனும், வரக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருந்தார்கள். (இது ரொம்ப பிடிச்சிது எனக்கு). சில வார்த்தைகளை குறிப்பிட்டு இப்படி எல்லாம் நான் பேசவே மாட்டேன் எடுத்துடுங்கன்னு ரொம்ப கிளையரா சொல்லிட்டாங்க. ஏனோ தானோன்னு, அபிஅப்பா சொன்னா என்ன தான் சொன்னா என்ன? என்று விடாமல், நிதானமாக, தெளிவாக தன் பதில்களை சொல்லியது மட்டும் இல்லாமல், தேவையில்லை என்று நினைத்த என் பொதுவான கேள்வி ஒன்றையும் எடுங்கன்னு சொல்லிட்டாங்க. 

அபிஅப்பா இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்க கொடுத்து வச்சி இருக்கனும். பல்லாண்டு வாழ்க வளமுடன் !! :)
.

குடிகாரன் பேச்சி பொழுதானப் போச்சி

எதை எழுதவேண்டும் என்றாலும், அதைப்பற்றிய விஷய ஞானம் கொஞ்சமாவது நமக்கு இருந்தால், ஓரளவு சிறப்பாக எழுதமுடியும். பொதுவாக எனக்கு தெரியாத விஷயத்தை எழுதும் போது, தெரிந்தவர்களிடம் கேட்பேன், பிறகு அதை கூகிலில் தேடி, இன்னும் கொஞ்சம் விபரங்கள் அறிய முற்படுவேன். இந்த தலைப்பில் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன், என்னோட குடிகார நண்பர்கள் யாரிடமாவது கேட்போம் என்று நினைத்தேன். நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே சொல்லிவைத்தார் போல குடிப்பழக்கம் இல்லாமல் போனது வருத்தமளித்தது :(. சரி எப்படியாச்சும் இதை பத்தி எழுதியே ஆகனும் னு முடிவு செய்து. .வூட்டுக்காரை கேட்டு பார்ப்போம்னு ஆரம்பிச்சேன்.

"ப்பா.. என்னை டாஸ்மாக் கூட்டிட்டு போறீங்களா? அங்க எல்லாரும் என்ன செய்யறாங்கன்னு நான் பாக்கனும்.." ன்னு சொல்லி முடிக்கல. .

"ஆஹா..எனக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா.? எவ்வளவு நல்லவளா இருக்கா? கட்டின புருஷன டாஸ்மாக் கூட்டுட்டு போன்னு சொல்றாளே... உலகத்திலேயே நாந்தாண்டி கொடுத்து வச்சவன்... "

" அடடா..நிறுத்துங்க..உங்கள டாஸ்மாக் கூப்பிடாட்டாலும், நான் நல்லவத்தான்..(இப்ப சொல்லிக்கிட்டாத்தான் உண்டு) ஆனா ஒன்னு. அங்க வந்து என்னை கம்பெனி கொடுன்னு சொல்லக்கூடாது, குடிக்கறவங்கள மட்டும் வேடிக்கை பாத்துப்பேன், அதுக்கு ஒன்னும் சொல்லப்பிடாது..."

"ஆஹா..இது அதைவிட  நல்லா இருக்கே. புருஷன குடிச்சிக்கோ னு சொல்ற பொண்டாட்டி உலகத்திலேயே நீதாண்டி. .சரி சொல்லு சொல்லு எப்ப போலாம்? 

ஏன் இவரு இப்படி அலையராரு.. தண்ணீ 'ன்னா.. எல்லாரும் இப்படித்தான் நாக்கை தொங்கப்போட்டு அலைவாங்களோ..? அப்படீன்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு .... "போலாம் போலாம்.. ரொம்ப அலையாதீங்க.. " ன்னு சொல்லி வேறு பேச ஆரம்பித்துவிட்டோம்.

நிற்க, 1995 ல் பக்கத்துவீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்ணை பற்றி, பக்கத்து வீட்டு பெண், கதை கதையாக சொல்ல, அப்போது ஒரு "Rehabilitation Centre" அட்ரஸ் கண்டுபிடித்து, அந்த பெண்ணை வரவைத்து, "ரூ.5000/- செலவாகுமாம். உன் புருஷனை சரியாக்கிவிடுவார்கள். ஒரு முறை கொண்டு போய் காட்டிவிட்டு வாயேன் "என்று சொன்னேன். "நான் சம்பாதிக்கற பணத்தையும் சேர்த்து வாங்கி குடிச்சிபுடுது, தெரியாம மறச்சி வச்சி ஏதோ குடும்பத்தை ஓட்டறேன், புள்ளக்குட்டிகளை படிக்க வைக்கிறேன். நான் எங்கம்மா போவேன் 5000 ரூபாய்க்கு" என்றார்.  அவரிடம் எதுவும் சொல்லாமல், அவர் சென்றவுடன் பக்கத்துவீட்டு பெண்ணிடம் இதைப்பற்றி பேசியபோது, "ஏன் தேவையில்லாத வேல நீ செய்யற, என் புருஷன் குடிச்சிட்டு இருந்தாலும் பரவாயில்ல.. 5000 ரூபாய் எல்லாம் செலவு செய்யறது வேஸ்ட்டு அது இருந்தா 3/4 பவுன் நகை வாங்குவேன் னு சொல்லுது.. அதுக்கு போயி ஹெல்ப் பண்ண நினைக்கறயே நீனு" என்றார். அத்தோடு இந்த விஷயத்தை விட்டுவிட்டேன்.

1995 ல் எங்களிடம் தொலைபேசி, கம்பியூட்டர், இண்டர்நெட் வசதி இல்லை. வெளிஉலகம்  தெரியாது, குதிரைக்கு கடிவாளம் இட்டது போல், வேலைக்கு செல்வேன், வருவேன். அவ்வளவே. இதற்கு எல்லாம் வைத்தியம் இருக்கிறது என்பதும் தெரியாது, ஆனால் அந்த பெண் கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்து சும்மா இருக்க முடியாமல், எப்படியோ அங்கிங்கு விசாரித்து ஒரு  மறுவாழ்வு இல்லத்தை கண்டுபிடித்து சொல்ல முடிந்தது.

சமீபத்தில், உறவினர் ஒருவருக்காக, "Just Dial" க்கு ஃபோன் செய்து, மறுவாழ்வு இல்லங்களை பற்றி தகவல் கேட்டேன். எத்தனை மருத்துவமனைகள்... எண்ணி சொல்லமுடியாத அளவு வந்து குவிந்தன. பலர் அவர்களாக என்னை அழைத்து பேசினர். நானாக சிலரை அழைத்தும் பேசினேன். சென்னையில் மற்றும் சுற்று வட்டாரத்தில் தடுக்கி விழுந்தால் மது மற்றும் போதை மறுவாழ்வு இல்லங்கள் உள்ளன. இந்த நோயாளிகள் குணமாகி வந்த பிறகு, அவர்களை தனிமைப்படுத்த கூடாது அல்லது தனியாக இருக்கவிடக்கூடாது என்பதே மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

இதற்கு குறைந்த பட்சம் ரூ.300/- லிருந்து அதிகபட்சம் ரூ.10000/- & 15000/- வரை சிகிச்சை முறைக்கு தகுந்தார் போன்று வாங்குகிறார்கள். Out patient ஆக 3 நாட்கள் (வாரத்தில் 1 சிட்டிங் வீதம் 3 வாரங்கள்) முதல், In patient ஆக ஒரு மாதம் - மூன்று மாதம் வரையிலான சிகிச்சை அளிக்கப்படுகிறது.நோயாளியின் ஒத்துழைப்பை பொறுத்து, இந்த சிகிச்சை காலம் மாறுபடுகிறது.

ஒருவர் அளவுகடந்து குடிக்கிறார் /போதைப்பொருள் பயன்படுத்துகிறார் என்று தெரிந்தால், அதனால் நமக்கும், அவருக்கும், இந்த சமுதாயத்திற்கும் பிரச்சனைகள் வருகிறது என்ற தெரிந்தால், புரிந்தால்,  தேவையான சிகிச்சையை,  அவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.  ஒரு மனிதனுக்கு நிதானம் தவறி போகும் அளவிற்கு இருக்கும் பழக்கங்கள் அவர்கள் வேண்டுமென்றே தனக்கு தேவையென்று பழக்கப்படுத்திக் கொள்வது இல்லை. ஏதோ ஒரு சந்தர்பத்தில் பழக்கமாகி, அதை விட்டுவிடக்கூடிய மன உறுதி இல்லாத போது, அதையே நாடி சென்று, அதில் தான் வாழ்க்கையின் அத்தனை சந்தோஷமும் இருப்பதாக அடிமையாகி விடுகிறார்கள். அது உண்மையில்லை என்பதை உணரவைப்பது, அந்த மனிதர்களை சுற்றியுள்ள நம்மின் கடமையாகிறது. ஒருவன் குடிக்கிறான், போதை வஸ்து சாப்பிடுகிறான் என்று வெறுத்து ஒதுக்குவதை விடவும், அவனிடம் அன்புக்காட்டி, அவனுக்கு தேவையான சிகிச்சையை அளிப்பதன் மூலம் அவனுக்கும் மறுவாழ்வு கிடைக்க செய்யலாம், அவனால் அவனுக்கும் துன்பம் இருக்காது, மற்றவர்களுக்கும் இருக்காது.

இப்படிப்பட்டவர்களை சரிசெய்ய, நமக்கு நல்ல மனப்பக்குவமும், சமயோஜித புத்தியும், முதிர்ச்சியும்,  நிதானமும், அவர்களின் கொடுஞ்செயல்களை கண்டு அஞ்சாத மனவலிமையும்,  அவர்களை எதிர்த்து விடாமல், அன்பாகவும், அமைதியாகவும் தகுந்த தீர்வை காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவர்களை வெறுத்து ஒதுக்குவதன் மூலம், இன்னமும் மோசமான நிலைமைக்கு தான் அவர்கள் செல்வார்களே ஒழிய, மாறிவிட மாட்டார்கள். ஒருவரின் வாழ்க்கை நம் கண் எதிரில் அழிய நாம் காரணமாக இருக்கக்கூடாது. தெருவில் குடித்துவிட்டு விழுந்துக் கிடப்போர் அனைவருக்கும் நம்மால் உதவி செய்ய முடியுமா என்றால் முடியாது, ஆனால் நம்மை சுற்றி உள்ளவர்களில் யாரும் அப்படி இருந்தால், உதவமுடியும். இதற்கு அடிப்படை தேவை அந்த மனிதனின் மீது நாம் வைக்கும் உண்மையான அன்பும், அவனும் நம்மை போன்ற ஒரு மனிதன் என்ற நினைவும் தான்.

இதில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை. நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா,  குடிப்பழக்கதிற்கு அடிமையாகி, அதனால் உடல் பாதிக்கப்பட்டு, நலிவடைந்து இறந்தார் என்பது அனைவரும் அறிந்தது.  இவை வெளிச்சத்தில் இருக்கும் ஒரு உதாரணம் இப்படி பல, நாம் அறியாமல் நடக்கத்தான் செய்கின்றன.

நம் ப்ளாகர் நண்பர் செந்தழல் ரவி க்கு,  சிகிரெட்  பழக்கம் ஓவராகவே இருந்தது. இப்போது அறவே இல்லை, நிறுத்திவிட்டார்.  மன உறுதியும், மனைவி, குழந்தை, குடும்பம் போன்ற கூடுதல் பொறுப்புகளும் காரணமாக இருந்து இருக்கின்றன. இதனை அவர் பதிவொன்றில் படித்தேன்.

என்னுடைய அலுவலகத்தில் ஒரு முறை, புது பிராஜக்ட் கிடைத்தவுடன்,  தண்ணி பார்ட்டிக்கு ஏற்பாடாகியிருந்தது. என்னை சேர்த்து இருவர் பெண்கள். மற்ற அனைவரும் ஆண்கள், மொடா குடியர்கள். எல்லோரும் குடித்துக் கொண்டு இருக்க, என்னுடன் வந்த பெண்ணை அழைத்து, என் சியிஓ ஏதோ தனியாக பேசிக்கொண்டு இருந்தார்.  கொஞ்ச நேரத்தில் அந்த பெண் இரு கண்ணாடி டம்ளர்களில், கோல்ட் காஃபி என்று எதையோ எடுத்துவந்தாள்.  "லேடிஸ், உங்களுக்கு கோல்ட் காஃபி" என்று சிரித்துவிட்டு சென்று விட்டார் சியிஓ. நானும் அந்த பெண்ணும் தனி அறையில் இருந்தோம். அவள் அதனை குடிக்க ஆரம்பித்து இருந்தாள், எனக்கு ஏன் சியிஓ அவளை தனியாக அழைத்து பேசினார் என்ற சந்தேகம் இருந்ததால், குடிக்காமல் முகர்ந்து பார்த்தேன், அறியாத வாசனை எதுவும் வரவில்லை.

அவளிடம் "ஆல்கஹால் கலந்துள்ளதா "என்றேன். அவள் சிரித்துவிட்டு, "இல்லை கவி, இதோ பார் நான் குடிக்கிறேன்" என்று குடித்துக்காட்டினாள், எனக்கு நம்பிக்கை வரவில்லை. நான் குடிக்கிறேனா என்பதை சியிஓ வேறொரு இடத்தில் இருந்து கவனிப்பதாக எனக்குப்பட்டது. சந்தேகம் போகவில்லை, எனக்கு அந்த பாட்டிலை காட்டு என்றேன்.  அவள் பேன்ட்ரி சென்று, அங்கிருந்தபடியே ஒரு பக்கம் காஃபியும், மற்றொரு பக்கம் பாலும் நிறைந்து இருந்த பாட்டிலை காட்டினாள், மலேசியாவிலிருந்து வந்தது, இந்தியாவில் இது போல் இல்லை என்றாள். அவள் துபாயில் சிறிது காலம் வசித்துவந்தவள். அவளுக்கு அந்த பானத்தை பற்றி தெரிந்திருப்பதாக நினைத்தென். என் க்ளாஸை பார்த்தேன், அந்த காஃபியும், இரண்டு ஐஸ் க்யூப்ஸ் போட்டு இருந்தாள். சரி என்னத்தான் ஆகிறது பார்க்கலாம் என ஒரு சிப்' குடித்தேன்.  குளிர்ச்சியுடன், லேசான எரிச்சலுடன் வயிறு முழுக்க ஏதோ ஒன்று பரவலாக பரவியது போன்று இருந்தது. வெறும் காஃபி இப்படி இருக்காது. இதில் ஆல்கஹால் கலந்து இருக்கும் என்று ஊர்ஜிதம் செய்தபோது சியிஓ என் பக்கம் வந்து. "எப்படி இருக்கிறது" என்றார். எப்படி இருந்தது என்று சொன்னேன். ஒரே சிப் க்கு இவ்வளவு சீன் ஆ.. ? அது வெறும் காஃபி தான். மலேசியா காஃபி என்றார்.  எதுவும் எதிர்த்து வாதிடவில்லை, அவரிடமும், அவளிடமும் நார்மலாக பேசிக்கொண்டே பேன்ட்ரி சென்று அந்த பாட்டிலை எடுத்து படித்து பார்த்தேன், 45% ஆல்கஹால் &  காஃபி, மில்க், சுகர் இன்னும் சில பெயர்கள் எழுதி இருந்தன. வாஷ் பேசினுக்கு நேராக சென்று வாய் கொப்பளித்து, அவர்கள் அறியாமல் இதையும் ஊற்றிவிட்டு வந்துவிட்டேன்.  இந்த ஒரு சிப்'கே எனக்கு உடல் நலம் சரியில்லை என்று அடுத்த நாள் வேலைக்கு போகாமல் மட்டம் போட்டு ஓவர் சீன் போட்டது வேறு கதை. :))

இத்தனை சென்ஸிடிவ் வாக எடுத்துக்கொண்ட என்னையும், சாதாரணமாக இரண்டு கிளாஸ் குடித்த மற்றொரு பெண்ணை  பார்த்து கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது, அது அவள் விருப்பம், இது என் விருப்பம். யாரும் யாருடைய விருப்பதிலும் தலையிட அவசியம் என்ன இருக்கிறது. அவளுக்கு அது பிடித்து இருந்தது, மாறாக என்னால் அதை குடிக்கவே முடியவில்லை. இது தான் தனிமனிதர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட வித்தியாசங்கள்.

எல்லா போதைக்கும் இப்போது சிகிச்சை உள்ளது. அடிமையானவர்கள் தவிர்த்து, பொழுதுப்போக்கு, பார்ட்டியில் குடிப்பது போன்றவை தேவையா தேவையில்லையா என்பதைவிடவும், அதனால் பிரச்சனையில்லாத போது, அது தனிமனித சுதந்திரம் என்று விட்டுவிட வேண்டியது தான். எல்லாவற்றிற்கும் இப்போது சிகிச்சை உள்ளது. அதை புரிந்து, அறிந்து, தேவையான நேரத்தில், அதை சரிவர பயன்படுத்தி நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவரையும் சந்தோஷமாக வாழ வைப்போம்.

அணில்குட்டி அனிதா : அம்முனி.. எப்ப நீங்களும் உங்க வூட்டுக்காரரும் சோடி'யா டாஸ்மாக் போறீங்க....சொன்னீங்கன்னா..நானும் சைட் ல சேந்துக்குவேன்... உங்களுக்கே ஆசை வரும் போது எனக்கு வராதா என்ன?? மக்கா அம்மணி கிடக்கட்டும்.. நீங்க யாராவது போகும் போது சொல்லுங்க.. வந்து பழகிக்கிறேன்.. பிடிச்சா தொடரலாம்.. இல்லனா விட்டுடலாம்.. டீலா... நோ டீலா..ஆ?!!

பீட்டர் தாத்ஸ் : Drunkenness is temporary suicide: the happiness that it brings is merely negative, a momentary cessation of unhappiness”

“Drink moderately, for drunkenness neither keeps a secret, nor observes a promise”

“Water is the only drink for a wise man.”

படங்கள் : நன்றி கூகுல்
.

ஆட்டோக்கார அண்ணாச்சிகளும் நம் இரத்த அழுத்தமும்..

ஐயா... இந்த உடம்பை பிரச்சனையில்லாம வைத்துக்கொள்ள என்ன பாடுபடவேண்டி இருக்கு. வயசான காலத்தில் அக்காடான்னு ரெஸ்டு எடுக்காம, தியானம்,டப்பாங்குத்து டான்ஸ், நீச்சல் குளம்'ன்னு தினம் ஒரு மணி நேரமாவது உடற்பயற்சி செய்து உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்தாலும், ஒரே ஒரு தரம் சென்னை ஆட்டோ வில் போக முடிவு செய்து "ரேட்" கேட்டால் எகுறுது பாருங்க நம்ம பிபி ....ஆஹா... தினமும் செய்த உடற்பயிற்சியின் ரிசல்ட் எல்லாம் "கோவிந்தா கோவிந்தா...வெங்கடரமணா கோவிந்தா" தான்...

நம்மளுக்கு பிபி எகுறுகிற விஷயம் தெரிந்ததால், சரி ஆட்டோ பக்கமே போகக்கூடாதுன்னு 99%, ஆட்டோவை அழைக்காமல் பார்த்துக்கொண்டாலும், ஏதோ அவசரத்திற்கு வேறு வழியே இல்லை என்று அழைத்தால், பிரச்சனை ஆரம்பம் என்றே அர்த்தம். 

ஒருநாள் அப்படித்தான் 2 மணி நேரம் பஸ்'ஸிற்காக காத்திருந்து, வராமல், சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலை பிடிக்க முடியாமல் போகும் என்ற நிலை வந்த போது, வேளச்சேரி ஸ்டேஷன் சென்று, ரயிலில் சென்றுவிடலாம் என ஆட்டோவை அழைத்தேன்.

"ரயில்வே ஸ்டேஷன் போகனும்"

"..ம்ம் உட்காரும்மா..."

"எவ்வளோங்க?"

"50 ரூ குடும்மா"

"என்னாது 50ரூபாயாஆஆஆ?" (புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ன்னு ஏறுது பிபி)

(மனசாட்சி : கவி..டோர் க்ளோஸ்!! கூல்ல்.. ஒரு 50 ரூபாய்க்கு ஆத்திரப்பட்டு, கோபப்பட்டு, பிபி அதிகமாகி, மண்டைய போட்டுடாத. .உன்னைய நம்பி ஒரு புள்ள, ஒரு வூட்டுக்காரு இருக்காரு அதை எல்லாம் யோசிச்சி.. பொறுமையா நிதானமா நியாத்தை கேளு...)

"சரி நமக்கு இல்லாத பொறுமையை நிதானத்தை வரவைத்து.. "என்னங்க இது.. 50ரூ ன்னு சொல்றீங்க? இங்க இருந்து 30ரூ தான் அதுவும் நீங்க ஷார்ட் ரூட் ல தான் போவீங்கன்னு தெரியும்.. கொஞ்சம் நியாயம் தர்மமா கேளுங்க..."

"உட்காரும்மா... போயிட்டு சும்மாதானம்மா வரனும்.. அதான் 50ரூ. .சரி.. வேணும்னா 40 ரூ கொடு.. அவ்வளவு தான் குறைக்க முடியும்.."

ஏறி உள்ளே அமர்ந்து.. "ஆனா உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லைங்க.. எப்படிங்க.. இப்படி எல்லாம் உங்களால ரேட் கேக்க முடியுது..? "

ஆட்டோ டிரைவர் வேகமாக கீழே இறங்குகிறார். "இந்தாம்மா இறங்கு நீ முதல்ல... என்ன காலங்காத்தல வந்து உக்காந்து மனசாட்சி அது இது ன்னு பேசற. .உன் சவாரியே எனக்கு வேணாம். .முதல்ல இறங்கு நீனு.."

ஆஹா இருக்கிற ஒரே ஆட்டோவையும் விட்டுட்டா என்ன செய்ய... ?! "ஏங்க இறங்கனும்.. அதான் 40ரூ தரேன் னு சொல்லித்தானே உக்காந்தேன்... 40 ரூ கொடுக்கறதுக்கு இது க்கூட பேசாட்டி எப்படிங்க..? நீங்க மட்டும் ரேட் டை உங்க இஷ்டத்துக்கு ஏத்துவீங்க...நாங்க எதுவுமே சொல்லக்கூடாதாங்க..?."

"யம்மா தாயே நீ 50 ரூ கொடுத்தாலும் உனக்கு ஆட்டோ வராது. .இறங்கு.."

"நான் இறங்க மாட்டேன்,....நீங்க கேக்கறதுக்கு எல்லாம் தலையாட்டிட்டு போகனும்னு எழுதி இருக்கா என்னா..? நானும் பேசினேன் நீங்களும் பேசினீங்க சரியா போச்சி ...சீக்கிரம் போங்க. .எனக்கு ட்ரையின்க்கு டைம் ஆச்சி..:

"காலங்காத்தல.. மாட்டுது பாரு நமக்குன்னு"

"ஹல்லோ நான் என்ன காலண்டரா மாட்டி வைக்க..?"

"ஆத்தா விட்ரு..நான் உன்கிட்ட பேசல, நீ என்கிட்ட பேசவேணாம்"

அத்தோடு இது முடிந்தது என்றாலும், எப்போது நான் ஆட்டோ பிடிக்க சென்றாலும் பிரச்சனைதான், சண்டை போடாமல் வருவதே இல்லை. எனக்கு தெரிந்தவரை, கேரளா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான்,  மகராஷ்டிரா மாநிலங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் கண்ணியமாக நடந்துக்கொள்கிறார்கள், எத்தனை மீட்டர் காட்டுகிறதோ அதை தான் கேட்பார்கள். மீதம் இருந்தால் கொடுத்துவிடுவார்கள். மும்பையில் மீட்டர் கூட இல்லை, வெறும் 5 ரூ கொடுத்தால் போதும், 4 கிமி வரை சென்று விடலாம். இங்கு ஒரு கிமி சென்றாலே 30ரூ, அதிலிருந்து ஒரு 5 அடி தள்ளி போங்கன்னு சொன்னால் 35 ரூ ன்னு சொல்லி, நம்மை எரிச்சல் செய்வார்கள்.

ஒரு முறை குஜராத்தில் மீட்டருக்கு போக மிச்சம் 40 காசு இருந்தது... அந்த ஆட்டோ ஓட்டுனர் அதை எனக்கு கொடுக்க பாக்கெட்டில் தேட, நான் பரவாயில்லை விடுங்க என்று சொல்ல. .அவர்.. "ருக், பெஹன்ஜி, ஹம்கா தேஸ் மதராஸ் நையி ஹே.....சுட்டி லோ... " வென்று கையில் காசை கடுப்பாக திணித்துவிட்டு சென்றார்.

இதே கதை கேரளாவிலும் நடந்திருக்கிறது. அங்கே 25 பைசா.. (2004 ல்), இல்லையென்றால் பரவாயில்லை என்று சொல்ல,"உங்க காசு எங்களுக்கு எதுக்கு.. இது சென்னையில்லை.. அடுத்தவன் வயத்தில அடிச்சி பொழைக்க" ன்னு சொல்லிவிட்டு சென்றார்.

மற்ற மாநிலங்களில் கண்ணியமாக நேர்மையாக ஆட்டோ ஓட்டுனர்கள் இருக்கும் போது, இங்கு மட்டும் இவர்கள் இப்படி அராஜகம் செய்து பிழைப்பதன் காரணம் என்ன? வேற என்ன "நாம் தான் காரணம்."

அங்கெல்லாம் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாமலோ, அதிக பணம் வசூலித்தோ ஆட்டோ ஓட்டவிட முடியாது. பொதுமக்களே முதலில் விட மாட்டார்கள். அரசாங்கம் வந்து தலையிட்டு பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்ற நிலை இல்லை. சுயநலமாக அந்த நேரத்தில் நம் வேலை நடந்தால் போதும் என்று யாரும் நினைப்பதில்லை. பணம் இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் ஆட்டோ ஓட்டனர்களிடம் ஒரே மாதிரியாக நடந்துக்கொள்ளுகிறார்கள். இங்கே ஆட்டோ க்காரர் என்ன கேட்டாலும், ஏறி உட்கார்ந்துவிடும், அதிகம் சம்பாதிக்கும், மேல் தட்டு மக்களால் மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். கழுத்தில் ஐடி கார்ட் ஐ மாட்டியிருப்பதை பார்த்தே ஆட்டோஓட்டுனர்கள், அதிகமாக கேட்பது வழக்கமாகிவிட்டது. ஒரு முறை பணம் பார்த்து பழகியவர்கள் மற்ற சாமானியர்களிடமும் அப்படி எதிர்ப்பார்ப்பது சரியில்லை. இவர்களும் அலுவலக வேலை தொடங்கும் முன்/ முடிந்த பிறகும், ஏன் இந்த ஐடி கார்டை மாட்டிக்கொண்டு திரிகிறார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

நிற்க, இதற்கான ஒரு ஒழுங்கு முறையை செய்ய பொதுமக்களாகிய நாமே கடைப்பட்டு இருக்கிறோம்.

1. அந்தந்த குடியிருப்பு பகுதிகளில் ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை, அந்த பகுதி மக்கள் சந்தித்து, நியாயமான ஒரு கட்டணத்தை வாங்கும்படி, பேசி முடிவு செய்து, அதை அமல்படுத்தலாம்.

3. வெகு தொலைவு செல்லவேண்டி வரும் போது மீட்டர் போட்டே ஆகவேண்டும் என்பதை வலியுறத்தவேண்டும். இல்லையென்றால் ஆட்டோவில் ஏறுவதை புறக்கணிக்க வேண்டும்.

4. கேஸ் ஆட்டோ புதிதாக வந்துள்ளது. இதற்கு அன்றாட செலவு குறைவாக உள்ளதால், கட்டணம் குறைவாக வசூலிக்க முடியும். எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் இதற்கான வசதி இருப்பதாக தெரியவில்லை. எல்லா பெட்ரோல் நிலையங்களும் இந்த வசதியை கொண்டு வருவதின் மூலம், பெட்ரோல் ஆட்டோக்கள் கேஸ்' ஆட்டோக்களாக மாற வாய்ப்பிருக்கிறது.

5. ஷேர் ஆட்டோ முறையை எல்லா இடங்களில் அனுமதிக்க ஆட்டோக்காரர்கள் ஒத்துழைக்க்க வேண்டும். எங்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு முறை வீட்டிலிருந்து பஸ் நிறுத்தம் செல்ல 30-35 ரூ வசூலிக்கப்படுகிறது. இதுவே ஷேர் ஆட்டோவாக இருந்தால், குறைந்தது 5 ரூ- 10 ரூ க்குள் வேலை முடியும். 4-5 பேரை ஒரு சவாரிக்கு ஏற்றினால், ஆட்டோக்காரரும் நஷ்டம் என்று சொல்ல முடியாது. மேலும் குறைந்த கட்டணம் என்று தெரிந்தால், அதிகமானோர் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.

6. டீசல் ஆட்டோவிலும் கட்டணம் குறைவாக வாங்கமுடியும், ஆனால் அதிக அளவில் டீசல் ஆட்டோக்கள் இல்லை. என்ஜின் சீக்கிரம் பழுதாகிவிடுகிறது, அதனால் டீசல் ஆட்டோ நஷ்டம் என்ற காரணம் சொல்லப்பட்டது.  இதை ப்பற்றி அதிகம் எனக்கு தெரியவில்லை. தெரிந்துக்கொள்ள இன்னும் முயற்சிக்கவில்லை. டீசல் ஆட்டோக்கள் அதிகமாக சத்தம் வேறு போடும்.

மேற்கண்ட தகவல்களை எங்கள் குடியிருப்பு பகுதி சங்கத்தலைவரிடம் அவருக்கு பழக்கப்பட்டவர் மூலம் சொல்லியும் இருக்கிறேன். காத்திருந்து தான் என்ன பலன் கிடைக்கிறது என்பதை பார்க்கவேண்டும்.

பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்களில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருக்கும் ஒற்றுமை பொது மக்களாகிய நமக்கும் இருக்கவேண்டும். ஏன் இவ்வளவு கட்டணம் என்று ஆட்டோ ஓட்டனர்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, நம்மை ஒதிக்கிவிட்டு, அதைவிட அதிகம் கொடுத்து அதே ஆட்டோவில் ஏறி அமர்ந்து நம்மை பணம் இல்லாத " பரதேசி " யை பார்ப்பது போன்று ஏளனப்பார்வை ஒன்றை நம்மீது வீசிவிட்டு செல்பவர்கள் இருக்கும் வரை என்னத்தான் செய்வது.. ?! :(

அணில் குட்டி அனிதா : நீங்க ஒரு ஆட்டோ வாங்கி, மெயின்டெயின் செய்து பாருங்க, அப்புறம் இப்படி ஒரு போஸ்ட் போடுவீங்களான்னு பாக்கலாம்... அம்மணி.....ஆட்டோ இல்லன்னா.. பஸ், பஸ் இல்லன்னா ட்ரையின், ட்ரையின் இல்லனா ஏரோப்ளேன்.. அதுவும் இல்லன்னா நடராஜா சர்வீஸ்.. ... நீங்க கடைசிவரை நடராஜா சர்வீஸ் தான்... உங்கள மாதிரி ஆளுங்களுக்கு அது தான் சரி.... :)))) லெஸ் டென்சன் மோர் நடை.. ஓக்கே.. !!

பீட்டர் தாத்ஸ் : “The best advertisement for us is people telling people. If organizers have a successful event and they tell their friends, co-workers, neighbors, etc. about this, then we are able to increase the use of the facility.”

*நன்றி : முத்துலட்சுமி ஹிந்தி வார்த்தைகள் சரிப்பார்த்துக்கொடுத்தார். :)

படம் : நன்றி கூகுல்.
.

ஜொள்ளுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..

1. தான் ஜொள்ளு விடுகிறோம் என்று தெரிந்தே விடுவார்கள், அது தேவை அல்லது தவிர்க்க இயலாதது என்பது இவர்களது நிலைப்பாடாக இருக்கும்.

2. ஜொள்ளு விடுவார்கள் ஆனால் நான் உத்தமன், ஒரு பெண்ணை கூட ஏறெடுத்து பார்க்கமாட்டேன் னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க,  இவர்களை நீயும் "ஜொள்ளு"தான் ன்னு சொல்லிவிட்டால் போதும், கோபத்தில் கொப்பளித்து, கத்திக்க்கூப்பாடு போட்டு, ஆஹா ஓஹோ எங்கப்பன் குதிருக்குள் இல்லை என நிரூபிப்பார்கள். பாவம் தான் :)

3. ஜொள்ளுவிடுவதை,  ஜொள்ளுவிடும் பெண்ணிடமே சொல்லிவிட்டு விடுவார்கள்.இவர்களுக்கு உண்மை விளிம்பிகள் என்ற நினைப்பு, இதை அனைவரிடமும் பயன்படுத்துவார்கள் என்று அறியாத பெண்கள், தெரியாமல் கவிழ்ந்துவிடுவது என்னவோ உண்மைதான். பொய் சொல்லறவனை விடவும், உண்மையை சொல்ற ஆணை பெண்ணுக்கு பிடிக்கும் என்று தெரிந்து க்கொண்டு அதற்கு தகுந்தார் போன்று செயல்படும் நல்லவர்கள் இவர்கள். 



4.  இன்னும் சிலர், ஜொள்ளு விடுவது, வெளியில் தெரியவே க்கூடாது என ரொம்பவே சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு ஜொள்ளுவிடுவார்கள். பல பெண்களுக்கு இவர்களை அடையாளம் கண்டுக்கொள்ள சிரமமே.

5. பெண்களை "அழகு" என்று பார்த்து, ஒரு குறிப்பிட்ட இடத்தோடு தன் பார்வையை, நினைவை நிறுத்திக்கொள்ளும் நாகரீகமான ஜொள்ளர்கள் ஒரு வகை. 

6. 5 ஆவது பாயின்ட்டை படித்து முடித்தவுடன், நாம் இதில் தான் வருகிறோம் என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொள்ளும்  ஜொள்ளர்கள் அனைவரும் இதில் வருவார்கள். :)

7. சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக ஜொள்ளுபவர்கள். அதாவது இவர்கள் ரெகுலர் ஜொள்ளர்கள் இல்லை, ஆனால் தனிமையாக ஒரு பெண்ணோடு இருக்கும் நேரத்தில், சந்தர்ப்பம், தனிமை, இதுவரை இல்லாத உணர்வு ன்னு ஏதோ ஒன்று வந்து தொலைய, ஜொள்ள ஆரம்பித்து விடுவார்கள். அந்த பெண் கூட இவர்களை இப்படி இதுவரை பார்த்திருக்க மாட்டாள், அதனால் அவளுக்கும் தர்மசங்கடமாக இருக்கும்.  "என்ன கொடுமைடா இது, இவனும் எல்லார் மாதிரியா ன்னு"  யோசிப்பாள்

8. ஆன்லைன் முகமூடி ஜொள்ளர்கள். முகத்தை மறைத்து, வேற்று பெயரில் பெண்களிடம் ஜொள்ளுபவர்கள். இதே ஆள் நிஜ பெயரில் அதே பெண்களோடு நேரடியாக மிகவும் நன்றாக பேசக்கூடிய நல்லவராக இருப்பார்.

9. ரொம்ப பாவமானவங்க இவங்கத்தான். சாதாரணமாக பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு பேசுவார்கள், ஆனால் டன் டன் ஆக ஜொள்ளு வடியும்.. அது அவர்களுக்கு தெரியவே தெரியாது. ஜொள்ளுவிடுகிறோம் என்ற பிரஞ்ஞை இல்லாமல் ஜொள்ளுபவர்கள். இவர்களிடம் சொல்லியும் பயனில்லை. :)

10. இரண்டும் கெட்டான் வகை ஜொள்ளர்கள். ஜொள்ளுவிடனும்னும் ஆசை இருக்கும், விடாமல் நல்ல பெயர் வாங்கனும்னும் ஆசை இருக்கும், இரண்டையும் சரிவர செய்ய முடியாமல் தடுமாறி...  நமக்கு சிரிப்பை வரவழைப்பார்கள். எதாவது ஒன்றை செய்துத்தொலை என்று நாமே சொல்லிவிடலாம் என்று தோன்றும். :)

11. இதை மறந்தேவிட்டேன்.  வயதான கேசுகள். மகள் வயது இருக்கும் பெண்ணிடம் வழிந்து க்கொண்டு நிற்பார்களே பார்க்கலாம், சின்ன வயதுக்காரர்களை கூட ஏதாவது திட்டி சமாளித்து விடலாம், இவர்களை வயதின் காரணமாக ஒன்றும் செய்யவும் முடியாது. சகித்துக்கொள்ளவும் முடியாது. இவர்களின் தொல்லையின் விழுக்காடு மற்றவற்றை விட அதிகம்.

இதில் எனக்கு பிடிக்காத, அதிகமாக கோபப்பட வைக்கும் ஜொள்ளர்கள் -  இரண்டாவது மற்றும் மூன்றாவது வகையை சேர்ந்தவர்கள் தான்.  மற்றவர்களை எல்லாம் பிடிக்கும் என்ற அர்த்தம் இல்லை. மற்றவர்கள் மேல் கோபம் வருவதில்லை.

இந்த வகை ஆட்கள் மட்டும் என்னிடம் சிக்கினால்.. அவர்களை  பேசவே விடுவதில்லை..பேச விட்டால் போதும்.. நான் இப்படி, அப்படி ன்னு ஜூப்பர் டூப்பர் கதை சொல்லி படம் க்காட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அப்படியே காதை திருப்பி அனுப்பலாம் போல கோவம் வரும். யார் பெத்த புள்ளையோ நம்ம கையில அடி வாங்கி நிஜமாவே காதுக்  கோணி போச்சின்னா.. என்ன பண்றது..ன்னு , கோபத்தை அடிக்கக்கொண்டு, போ போ.. ரொம்ப கஷ்டப்படாத, இங்க ஒன்னும் உன் வேல நடக்காது, கிளம்பு, வேற வேல இருந்தால் பாருன்னு சொல்லி அனுப்ப வேண்டியதாக இருக்கும்.

என்னுடைய நண்பர் ஒருவர், ஓவர் ஜொள்ளு. "அட கருமம் புடிச்சவனே..லிமிட் டா இரு.. ஓவரா ஜொள்ளுவிடாத எனக்கு பிடிக்கல ன்னு சொல்லுவேன். அவன் அப்பத்தான், "நீ பிடிக்கல ன்னு சொல்லும் போதே.. உனக்கு பிடிச்சி இருக்குன்னு தெரியும் னு "சொல்லுவான்.  "அட எப்படிடா இப்படி எல்லாம் னு " ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்டால் போதும் "பெண்களின் குணமாச்சே அது, எனக்கு தெரியும்"என்பான்.. "அட கட்டயில போறவனே... நான் பொண்ணே இல்லன்னு நீ நினைச்சா கூட பரவாயில்லை... நான் சொல்றது உண்மைத்தாண்டா.. ஓவர் ஜொள்ளுவிடாத எனக்கு பிடிக்கல.. ஒவ்வேக்க்க்க்,  பிரண்டாக  ஃப்ரியா இருந்து தொலைக்க முடியல.. உன் நினைப்பை சரி செய்துக்கோ' ன்னு சொல்லி இருக்கேன். 

நாம் என்ன சொன்னாலும், அதை நம்பாமல் திரும்பவும், தான் செய்வதையே செய்து இம்சை செய்யும் சில கேசுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்வது? ஒதுங்கி போவதை தவிர வழியில்லை. :)).  எல்லா பெண்களுக்குமே தன்னிடம் தவறாக பேசும், நடந்துக்கொள்ளும் ஆண்களை இனம் கண்டுக்கொள்ள முடியும். பலர் தெரிந்தும், அதை விரும்பி ரசித்து, பேசாமல் இருந்து விடுவார்கள். எல்லை மீறும் போது, அந்த ஆணை மட்டும் குற்றம் சொல்லுவார்கள். முதல் வார்த்தையிலேயே ஒரு பெண் நினைத்தால் இவற்றை எல்லாம் நிறுத்த முடியும். !

ஜொள்ளுவிடுவது என்பது ஒன்றும் மிக பெரிய குற்றமான செயலில்லை. இனக்கவர்ச்சியே. இதை கடந்து வருவதும், தேங்கி நிற்பதும் தனிமனித கட்டுப்பாட்டில் உள்ளது.  நம் வரைமுறை என்ன, அடுத்தவர்களுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கிறதா, அதனால் அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  என்னை போன்ற ரொம்ப சென்சிட்டிவ்'ஆனவர்களுக்கு இவை எல்லாம் ரொம்பவே தர்மசங்கடத்தை தரும் என்பது நான் உணர்ந்து சொல்லும் கருத்து.

அணில் குட்டி அனிதா:
  கவி நீங்க யாரை பாத்தும் ஜொள்ளு விட மாட்டீங்களா? ரெம்ப நல்லவங்களா? ...............சரி சரி நோ முறைச்சிப்பை,  நீங்க பொம்பளைன்னு மறந்து போயி தொலச்சிட்டேன்.. பொம்பளைன்னா எது செஞ்சாலும் தப்பில்லேங்ஓஓஓஒ..!! நீங்க கன்டினியூங்கோஓஓஓஓ!  நான் வரேங்கோஓஓஓ !! பைங்கோஓஓஒ !!

பீட்டர் தாத்ஸ் :A morning-glory at my window satisfies me more than the metaphysics of books.  ~Walt Whitman

பின்குறிப்பு : இது எந்த ஒரு ப்ளாகரையும் குறிப்பிடுவது இல்லை. இந்த பதிவு பொதுவாக எழுதப்பட்டது. யாரையாவது குறிப்பிட்டு எழுதி இருப்பதாக, அவருக்கோ அவரை சார்ந்தவர்களுக்கோ தெரிந்தால், அதற்கு என் எழுத்து பொறுப்பல்லவே. ஏனென்றால், ப்ளாகில் ஆண்/பெண் யாரிடமும் அதிகமாக நான் பேசுவதில்லை. இது அனைவரும் அறிந்ததே. நன்றி, வணக்கம்.
.

லெட்டர், கத், கடிதம்' னு கூட சொல்லலாம்

கடிதம் எழுதுதல் என்பது நம்மிடையே அறவே நின்றுவிட்டது. Communication என்பது மிகவும் துரிதமாக பல்வேறு வடிவங்களில் எளிதாக நமக்கு கிடைத்துவிட்டதால், கடிதங்கள் எழுதுதல் என்பதின் தேவைகள் குறைந்துவிட்டன.

சின்ன வயதில், தாத்தா, ஆயா சொல்ல சொல்ல பல கடிதங்கள் எழுதி இருக்கிறேன். அப்பா ஒரு முறை யாருக்கோ ஆங்கிலத்தில் கடிதம் எழுத சொல்லி டிக்டேட் செய்தார்,. யாருக்கு என்ன விஷயம் என்பது மறந்து போயிவிட்டது. என் கையெழுத்து நன்றாக இருக்குமென, எதை எழுதவேண்டும் என்றாலும்.. என்னை அழைத்துவிடுவார்கள்.

இதில் நாங்கள், "இன்லேன்ட் கவர்" அதிகம் பயன்படுத்தியதாக இருக்கும். எங்கள் அம்மாவிற்கு, மூவரும் ஆளுக்கு ஒரு பக்கம் என்று எழுதி அனுப்புவோம். இந்த கடிதம் மட்டுமே எங்களுக்கும் அம்மாவிற்கும் இருந்த தொடர்பாக இருந்தது. இதை க்கூட "பாவம், உங்களையே நினைச்சிக்கிட்டு இருக்கும், எழுதும்மா" ன்னு ஆயாவின் தொந்தரவின் பேரில் எழுதுவதாகவே இருக்கும். இன்லேன்ட் லெட்டரில் முதல் பக்கத்தில் நான் தான் எழுதுவேன் என்று அடம் பிடிப்பேன். ஆனால் உள்ளே விஷயங்கள் எல்லாம் ஆயா தான் சொல்லித்தருவார்கள். தனியாக எழுதியதே இல்லை. என்ன எழுதவேண்டும் என்று தெரியாது. பெரிய அண்ணன் மாத்திரம் தனியாக எழுதும். அதுவும் அவர் பீட்டர், எப்பவும் ஆங்கிலத்தில் எழுதுவார்.

ஆயா, தாத்தா எந்த கடிதம் என்றாலும் ஆரம்பிப்பது - "நலம், நலமறிய அவா. நிற்க. " என்பது தான் இருக்கும். இதை எழுதிவிட்டு, ஆயா சொல்லு ...சொல்லு ன்னு அவங்க வேலை செய்துக்கிட்டு இருக்கும் போது கேட்டு கேட்டு எழுதுவேன். பொதுவாக ஆயா லெட்டர் எழத சொல்லுவது, அத்தைகளுக்கு, சித்தப்பாவிற்கு என்று இருக்கும். அம்மாவிற்கு மாதம் ஒன்று என்பது கணக்கு.

அம்மா வீட்டுக்கு போகும் போது,ஒரு வேளை நாங்கள் எழுதிய கடிதத்தில் தவறுகள், வார்த்தை பிரயோகம் சரியாக இல்லாவிடில் கேட்பார்கள், திருத்துவார்கள். சின்ன அண்ணன் தான் நிறைய தப்பு செய்யும். எங்கள் கடிதங்கள் எல்லாமே சேர்ந்துவைத்து இருப்பார்கள்.  "ஆயா தான் சொல்லிகொடுத்தாங்கன்னு சொல்லிடுவேன்.." உடனே, அம்மாவும், மாமியாரை திட்டிவிட்டு என்னை அணைத்துக்கொள்வார்கள். :)

எட்டு (head) சித்தப்பா என்று எங்கள் சொந்தக்காரர் அப்பாவின் சித்தி மகன், அவருக்கு கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு கண் தெரியாது. இதற்கு காரணம் அவரின் இடைவிடாது மூக்குப்பொடி போடும் பழக்கம் என்று அப்பா சொன்னார். அப்பா அவரின் கண் பார்வை வர எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறார், முடியவில்லை. அவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. எங்கள் வீட்டில் தான் பல வருடங்கள் இருந்தார். அவரும் யாருக்காவது கடிதம் எழுத வேண்டுமானால்.. என்னைத்தான் அழைப்பார்.

பிறகு, +1,+2 படிக்கும் போது,  தோழிகளுக்கு கடிதம் எழுதுவேன். அவர்களும் எனக்கு திருப்பி பதில் அனுப்புவார்கள். +1 ல் சித்தப்பா வீட்டில் சென்னையில் இருந்தேன்..அங்கு படிப்பை தொடர முடியாமல், பாதியில் ஆயாவிடமே வந்துவிட்டேன். அந்த பள்ளித்தோழிகளுக்கு விழுப்புரத்தில் இருந்து கடிதம் எழுதுவது வழக்கமாகிவிட்டது.

கடிதம் கதை இத்தோடு முடிந்தது என்றால் இல்லை. திருமணம் ஆகிவந்த பிறகு ஆயா எனக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவார்கள். தனியாக குழந்தையை வளர்க்கிறேன் என்பதால்,எப்படி இருக்க வேண்டும் என எழுதுவார்கள், ஆயாவின் கடிதங்களில் சிறப்பு அம்சம் என்னவென்றால், இடைவெளியில்லாமல் நெருக்குமாக எழுதுவார்கள். கடிதத்தை மடிக்கும் இடத்தை கூட விட மாட்டார்கள்.

கடிதங்கள் என்று சொன்னால், முதலில் நினைவுக்கு வருவது, நேரு மாமா சிறையில் இருந்த போது இந்திராஜிக்கு எழுதிய கடிதங்கள். அடுத்து 5 ஆம் வகுப்பு படிக்கும் போது "Kannan Writes from Kanyakumari" என்ற பாடம் ஆங்கில புத்தகத்தில் இருந்தது. வகுப்பில் கண்ணன்'னு ஒரு பையன் இருந்தான், கன்யாகுமரி'ன்னு ஒரு பெண்ணும் இருந்தாள். இந்த பாடம் வரும் போது எல்லோரும் அவர்கள் இருவரையும் கிண்டல் அடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. மற்றவர்கள் கிண்டலிலிருந்து தப்பிக்க கண்ணனும், கன்யாவும் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள். 5 ஆம் வகுப்பிலேயே இப்படி எல்லாம் பிள்ளைகள் கிண்டல் செய்து இருக்கிறார்கள்..ம்ம்ம்ம்.. என்ன உலகமடா இது.?

அடுத்து கடிதத்தின் மேல் ஒட்டும் ஸ்டாம்ப். :) ஸ்டாம்ப்ஸ் கலெக்ட் செய்வதை பொழுதுப்போக்காக நிறைய குழந்தைகள் ஒரு காலத்தில் செய்து வந்தார்கள். ஸ்டாம்பை எச்சில் தொட்டு ஒட்டக்கூடாது என்று தாத்தா சொல்லி இருந்தார். விளக்கம் கேட்டபோது, பின்னால் தடவியிருப்பது மயில் துத்தம்,அது விஷம் என்ற சொல்லப்பட்டது. அவர் சொன்னபடியே நடந்துக்கொள்வேன், ஸ்டாம்ஸ் 'ஐ தண்ணீர் தொட்டு, ஒட்டுவேன்.

இந்த காலத்து குழந்தைகளுக்கு கடிதம் தேவையில்லை என்றாகிவிட்டது. அடுத்து போஸ்ட் பாக்ஸ். என் மகன் இதை பார்த்து இருக்கிறானே ஒழிய பயன்படுத்தியதே இல்லை. போஸ்ட் ஆபிஸ் போகும் வேலையே இல்லாதபடி, தடுக்கிவிழுந்தால் கூரியர் சர்வீஸ்கள் வந்துவிட்டன, அவற்றின் துரிதமான சேவை, நம்மை போஸ்ட் ஆபிஸ் செல்லவைப்பதை தடுத்து விடுகிறது. ஆனாலும் என் கணவர் ஸ்பீட் போஸ்ட் ஐ இன்றும் பயன்படுத்தி வருகிறார். அவருடன் சமீபத்தில் அடையார் போஸ்ட் ஆபிஸ் சென்று வந்தேன். அரசு அலுவலகம் சார்ந்த சிலவற்றை தபால் துறை மூலம் தான் அனுப்பவேண்டும் என்று சொல்லி அனுப்புவார்.

மணி ஆர்டர், இதன் சேவை இப்போதும் தேவைப்படுகிறது தான். ஊர் பக்கம் பலருக்கு பேங்க் அக்கவுண்ட் இருப்பதில்லை. அதற்கு மணி ஆர்டர் தான் ஒரே வழி.

 தந்தி, ஒரு காலத்தில் தந்தி என்றால், படிப்பதற்கு முன்னமே துக்க செய்தியாகத்தான் இருக்கும் என, வீட்டு பெண்கள் அழ ஆரம்பித்து விடுவார்கள். தந்தி என்றாலே ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. அதுவும் இப்போது சுத்தமாக இல்லை.

தபால்துறை இனி வரும் காலங்களில் நமக்கு பயன்படாமலேயே போய் விடுமோ என்ற எண்னம் கூட வந்தது. கூரியர் சர்வீஸ் போன்று, அலுவலகங்களுக்கு - டோர் ஸ்டெப் கலெக்ஷன், அக்கம் பக்கம் இருக்கும் கடைகளிலேயே கடிதங்களை பெற்றுக்கொண்டு,  டெலிவரி செய்தல் போன்ற சேவைகள் கிடைக்குமானால், தொடர்ந்து தனியார் பக்கம் போகாமல்,பழையபடி மக்கள் இவற்றை பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

அணில் குட்டி அனிதா: வய் திஸ் போஸ்டு..? ஹை இது கூட போஸ்டு தான்.. அதான் ப்ளாக் ல தினம் போஸ்ட் பண்றீங்க இல்ல அப்புறம் என்னவாம்? .ஹி ஹி...ஹிஹி.. எப்புடீஈஈ !! :))))

பீட்டர் தாத்ஸ் : To send a letter is a good way to go somewhere without moving anything but your heart.”

படங்கள் : நன்றி கூகுல்.
.

கேப்பங்கஞ்சி வித் கவிதா'வுடன் - வவாச வின் சிங்கங்கள் (பகுதி-2)

வவாச - சிங்கங்களின் பதில்கள் - பகுதி
 

கவிதா: போன பதிவில் அணிலு கொடுத்த லிங்க் பார்த்த போட்டோ பத்தி சொல்லுங்க... 
 சிங்கங்கள்: பதிவுலக மாநாட்டுக்கு ...நாங்க எல்லாம் மாணவர்களா இருந்த நேரம் போனப்போ எடுத்த படங்கள் அவை...அந்த மாநாட்டுக்கு தருமி... ஆசிப்... பெனத்தலார் .லக்கி...செந்தழல்...போன்ற பேராசிரியர்கள் வந்திருந்து எங்களை வேடிக்கைப் பாத்து சென்றது தனிக் கதை.




கவிதா: கவனித்து பார்த்த போது - சில சிங்கங்கள் தன் வீட்டை மட்டும் சுத்தம் செய்ய வராங்க.. அதே சமயம் வவாச வை கண்டுக்காம இருக்காங்க.. ஏன் இப்படி? சிங்கங்கள் : தனிப்பட்ட பதிவுகளே ரொம்ப சொற்பமாகிவிட்ட போது, குழுப்பதிவா? அதுவுமில்லாம எங்களுக்கு கலாய்க்கிறதுதான் தெரிஞ்சிருக்கும் போல. யாருமே கலாய்க்க இல்லாத போது யாரை கலாய்க்க? ஆளில்லாத கடையில யாரு வந்து டீ ஆத்துவாங்கசொல்லுங்க?

 அணில் : அட கவி..என்னாதிது.??!! இப்ப நான் கேக்கறேன் பாருங்க.. - வவாச - தோற்றம் - மறைவு. , வவாச - சிங்கங்கள்கல்யாணத்திற்கு முன்-பின்வவாச - ஊத்தி மூடிய உண்மை காரணம்.. - குறிப்பு வரைக..
சிங்கங்கள்:- நல்லா கேக்குறாய்ங்கய்யா டீடெயிலு....அணிலு....நோட் பண்ணிக்கோ சங்கம்...பதிவு மெமெரி ஒரு நூறு கிகா பைட்....ரசிகர்கள் நூறு கோடி மெகா பைட்...இந்த பைட் சங்கத்துல்ல என்னிக்குமே பைட் இருந்தது இல்ல...என்னா எந்த ஸ்டண்ட் மாஸ்டரும் எங்க திறமைக்கு சரியான முறையில்ல சண்டைக் கத்து தர முடியாம கரண்ட் கம்பியிலே காக்கா சிக்குன மாதிரி பிலீங் ஆயிட்டாங்க..இது சங்க வரலாற்றுல்ல இருக்க உண்மை.. இதை மறைக்க மன்மோகன் சிங்கே முயற்சி பண்ணாலும் முடியாது...அது என்ன ஊத்தி மூடுறது.... கேள்வியிலே பிழை இருக்கு... மூடுனா ஊத்தவே முடியாது...மூடியைத் திறந்தால் ஊத்தவே முடியும்...இது ஒலக ஞானிகள் சர்பத் சங்க மாநாட்டில் மேடையேறி முழங்கிய மாபெரும் வாழ்க்கையின் உண்மை தத்துவம்...அதை புரிஞ்சுக்காமல் ஒரு கேள்வி அந்தக் கேள்விக்கு பதில் நோட்ஸ் எடுக்க ஒரு அணிலு...கேள்வியிலே கருத்து குழப்பம் இருப்பதால் ரிஜெக்ட் கேள்வி இது...  கல்யாணம்ங்கற ஒரு சொல்லை வைத்து சிங்கங்களை மிரட்ட நினைக்கும் இந்த் பெண்ணிய ஏகாத்தியபத்திய  கேள்விக் கணையை எதிர்த்து கல்யாணமாகாத கன்னி சிங்கம்...கட்டிளம் சிங்கம்.... மிச்சமிருக்கும் யூத் சிங்கம் தனிப்பதிவு போட்டு விளக்கம் அளிக்கும்... அதுவரைக்கும் இந்தக் கேள்விக்கான பதில் பாஸ் எனப் போட்டுக்கொள்ளவும் 

 
கவிதா: (அணில் சுப்.. சும்மா இரு...சும்மா இருன்னு சொன்னா கேட்டியா.. சிங்கங்க புடுங்கி வைக்குதுப்பாரு..! ) வவாச வை தொடர்ந்து நடத்த முடியாமல், பலமுறை விற்க முடிவெடுத்து, அதை யாருமே வாங்க முன்வராததால் - சங்கத்து சிங்கம் இளா 'வே திரும்ப திரும்ப வாங்கிக் கொண்டதாக செய்தி வந்தது - இதை பற்றி

இளா : ம்க்கும். இது வேறையா சங்கம் நல்லாப் போகும் போதே சுண்ணாம்புக்கு வழியில்லை  இதுல இதுவேற. வெந்த கத்திரிக்காயிலஆசிட்ட பாய்ச்சாதீங்க....
   

அணில் : ஹி ஹி..ஆமாம்மா அவரே வாங்கி...அவரே தனியா டீ ஆத்து ஆத்துன்னு ஆத்தறாரு.... மத்த சிங்கம் எல்லாம் அதைகுடிக்க கூட போகமாட்டேங்குது -ஒரு வேள  டீ அம்புட்டு கேவலமா இருக்குமோ????
சிங்கங்கள் : புலி பசித்தாலும் புல்லைத் திங்காது சிங்கம் திகைத்தாலும் டீயை குடிக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா..."அரிமா அரிமா ஆயிரம் அரிமாஓசியில் டீ போட்டு ஊருக்கு தருமா..??!" அந்தப் பாடல் வழியே நாட்டு மக்களுக்கு டீ போட்டு நற்பணி ஆத்தி வருகிறார் எங்கள் விவாஜி...(இளா)

 
கவிதா : சங்கத்துல சிங்கங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று அடித்து கொண்டதன் விளைவு, ஒரு சிங்கம் தனியாக வெளியில் வந்து புது சங்கம் ஆரம்பித்து, அதுவும் இப்போது காத்தாடி க்கொண்டு இருக்கிறதே - சிங்கங்கள் இதனை விளக்க முடியுமா?
சிங்கங்கள்: அது என்ன தனிசங்கம்? சொல்லவே இல்லே????
 

அணில்: (அய்யய்ய.. கவி நீங்க ரொம்ப டீசன்ண்டா கேள்வி கேக்கறீங்க ..இது எல்லாம் வேலைக்கு ஆகாது இதே கேள்விய நான் கேக்கறேன் பாருங்க..) - ஹாய் சிங்கம்ஸ்... வெளியில ஸ்மைல் பண்ணிக்கிட்டு சங்கத்துக்குள்ள ஈகோ வில் வெட்டு குத்து'ன்னு இருக்கீங்களாமே? மத்தவங்க வேட்டியெல்லாம் கூட கழட்டி விட்டு விளையாடறீங்களாமே? அதனால் தான் சங்கத்தை நடத்தவேமுடியாம போச்சின்னு பேசிக்கறாங்க.. ?
சிங்கங்கள்: போர்ட் பிகோ கார் தெரியும் அது என்ன ஈகோ...அப்படி ஒரு வார்த்தைக்கே அர்த்தம் தெரியாத அன்பு சிங்கங்களிடம் வம்பு எதற்கு? வேட்டி கிழிந்தக் கதைக்கு பின்னால் ஒரு காவிய கதை இருக்கிறது... நேரம் வரும் போது நாடு அதை அறியும்....அது வரை அது பற்றி மெளனம் காப்பதாய்  ஒரு தீர்மானம் போடப்பட்டு சிங்க மானம் காப்பாற்றப்பட்டிருக்கிறது..

 
அணிலு: விழுந்துவிட்ட வவாச வை, தற்போது, வவாச விற்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் தூக்கி நிறுத்த படும் பாடுப்பட்டு வருவதாக கேள்விப்பட்டோமே அது உண்மையா?
சிங்கங்கள்: அணிலு ,வா. ஒரு நதி மாதிரி அதை யாரும் நிறுத்த முடியாது...அது ஓடிகிட்டே இருக்கும்......பை பை யார் அந்த ஒருத்தர் WHO IS THAT BLACK SHEEP..... ம்ம்ம்மேஹே.......மம்ம்மேஹே.....ஆல் சிங்கம்ஸ் ROTATE YOUR HEADS IN 360 DEGREES NOW..  இப்போ பதிவுலகத்துக்கே தலை சுத்தப் போவுது பாருங்க கவிதா ...:)))

அணில் : சிங்கம்ஸ்.. நீங்க எல்லாம் ரொம்ப மக்காமே?? ஹி ஹி.. உங்களை எல்லாம் ஓவரா புகழ்ந்தாங்களே கவி, அவங்களேதான் என்கிட்ட இப்படி சொன்னாங்க..:)) ..  ஒரு கான்சஃப்ட் சொல்லி... அதை டெவலப் செய்து எழுத சொன்னா....  ஆல் சிங்கம்ஸ் ஸும்.. "தெரியல" நீங்களே சொல்லுங்கன்னு திரு திரு ன்னு முழிச்சிக்கிட்டு வந்து நின்னீங்களாமே..  ?
 சிங்கங்கள்: சிங்கம்ஸ் எல்லாம் மக்குன்னு கவிதா சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை. எங்க தல கைப்ஸ் வழியே தான் நாங்களும். அவர் மேல ஒரு அடி விழுந்தா பார்த்துட்டு  சும்மாவா இருப்போம். எல்லாரும் ஒன்னா சேர்ந்து பின்னி பெடலெடுத்துருவோம்,  கைப்புள்ளைய. வேற என்ன செய்ய முடியும் எங்களால?..


 
அணில். நீயூஸ் பேப்பரில் எல்லாம் உங்க பேர் போட்டு நியூஸ் வந்து இருக்கே... எதாச்சும் ஏடாகூடமா செய்துட்டீங்களா..என்ன மேட்டர் அது?
 
சிங்கங்கள்: அய்யோ அய்யோ....அடுத்த வருசம் மெடிக்கல் காலேஜ் பாடத்துல்ல எங்க பாடம் வர போவுது...இப்போ போய் என்னிக்கோ நியுஸ் பேப்பர்ல்ல வந்த நியுஸ் பத்தி எல்லாம் கேட்டுகிட்டு...அணிலு உனக்கு ஒரு வெர்சன் தானா???..அப்டேட் வெர்சன் இல்லையா.???..

கவிதா : வவாச - பழையபடி "ஆக்டிவ்" ஆக இருக்க செய்ய உங்கள் அனைவரின் சிங்கங்கள் : கூட்டு முயற்சி எப்படிப்பட்டதாகஇருக்கும்?  
சிங்கங்கள்: எல்லாரும் குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்துக்கலாம்னு  இருக்கோம். அவ்ளோதான் எங்க டக்கு

 
கவிதா : வவாச பதிவுகள் தவிர்த்து - வேறு எதாவது முயற்சியில் ஈடு பட்டு இருக்கிறீர்களாஅதாவது சமுதாயம் சார்ந்து குழுஉதவிகள், ப்ளாகர் இல்லாமல் வெளி உலக தொடர்பு ஏதாவது?!! 
சிங்கங்கள் : நகைச்சுவை போட்டிகள் மூலமா வந்த பணத்தை சிலஇடங்களில் உதவி செய்திருக்கோம். அதெல்லாம் சொல்லிக் காட்டிக்க நாங்க விருப்பப்படவில்லை. 

 
அணில் : ஆம்மா.. அது என்ன அட்லாஸ் வாலிபர்.. ?!!
சிங்கங்கள்: அட் லாஸ்ட் (at last) வாலிபர்ன்னு போட்டா மக்கள் பிலீங் ஆவாங்களேன்னு தான் கடைசியில "ட்" விட்டுட்டு போட்டோம்...இப்போ எல்லாம் ட்விட்டுகிட்டே இருக்காங்க..

. 
கவிதா : சங்கம் சார்ந்த உங்களின் மற்ற குழு பதிவுகள் பற்றி சொல்லுங்க.
சிங்கங்கள் : எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது...இலைகளும் கிடையாது...ஒரே சங்கம்...நாங்க எல்லாம் அதில்ல சிங்கம்...அம்புட்டு தேன்... 

 
நன்றி நவில்தல் :
கத்தி, கதறி, கொஞ்சி, கெஞ்சி கூத்தாடி பதில் சொல்லியே ஆகனும் னு நின்ன போது, பாவம் இம்புட்டு இம்சை பண்றாங்களேன்னு மனமிறங்கி பதில் அளித்த சிங்கங்களுக்கும், அதை கண்கொட்டாமல் ப்ரூஃப் ரீட் செய்து, அப்ரூவ் செய்த மற்ற சிங்கங்களுக்கு நன்றியோ நன்றி.

வவாச'வை கேப்பங்கஞ்சியில் அழைத்து பேசி, முன்பு போல் அவர்களை எழுதவைக்க ஊக்குவிக்க வேண்டும் என்று சொன்ன, நம்ம முருகனுக்கு (.) என் சார்பிலும், சிங்கங்கள் சார்பாகவும் மிக பெரிய நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்.
 

கடைசியாக, நானும் அணிலும் எங்களின் இஷ்டம் போல் கேட்ட கேள்விகள் ஒன்றை கூட மாற்றாமல், அதனை சீரியாஸாகவும் எடுத்துக்கொள்ளாமல், சிரித்து மகிழும்படியாக பதில் அளித்த சிங்கங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். எந்த ஆட்சேபனையும் செய்யாத மற்ற சிங்கங்களுக்கும் எங்களது நன்றிகள்
 

பீட்டர் தாத்ஸ் : Coming together is a beginning. Keeping together is progress. Working together is success.- Henry Ford
.