நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்ல படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க

ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்து புத்தி சொல்ல வந்தேங்க
நான் ஒரு முட்டாளுங்க


கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க

ஏ..ஏ...ஏ.. கைதே ...டாய்..
கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க

முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க

பேசாத என்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க

பீச் பீசா கீசாங்க பேஜாரா பூட்டுங்க..

நான் ஒரு முட்டாளுங்க


கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது

பால் கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா ஓடுது

மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லம் நடக்குது

ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது

நான் ஒரு முட்டாளுங்க


நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க

நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க

ஆன வரை சொன்னெங்க அடிக்க தானே வந்தாங்க

அத்தனையும் சொன்ன என்னை இளிச்ச வாயன் என்னாங்க.

நான் ஒரு முட்டாளுங்க...

பாடல்: நான் ஒரு முட்டாளுங்க..
படம்: சகோதரி.
பாடியவர்: சந்திரபாபு.

இந்த பாடலோடு... ஆரம்பிக்கிறேன்... முட்டாள் என்று உணர்வதும் அதை ஒற்றுக்கொள்ளவும் கூட நம் மனம் பக்குவப்பட்டு இருக்க வேண்டும். அந்த பக்குவத்தை பெற நான் எந்த முயற்சியையும் எடுத்தேனா என்பதை விடவும், என்னை பக்குவப்படவைக்க என்னை சுற்றி நிறைய அறிவாளிகள், சாமர்த்திய சாலிகள், முகம் ஒன்று பேசி புறம் ஒன்று பேசுபவர்கள், வெளியே புன்னகையும் உள்ளே பொறாமை கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள் என்ற நம்பிக்கை 100% இருக்கிறது. :) இவர்களுக்கு மத்தியில் நிச்சயம் நான் ஒரு முட்டாளுங்க.. :)

தெரிந்தும் தெரியாமலும் புரிந்தும் புரியாமலும், இல்லை எல்லாமே புரிந்தும் சாமர்த்தியமாக பல் இளிக்க தெரியாத முட்டாளாகவே என்றும் இருப்பதில் பெருமையே அன்றி சிறுமை இல்லை என்று என்னை அவ்வப்போது பக்குவப்பட வைக்கும் அனைத்து அறிவாளி திலகங்களுக்கும் வந்தனம்..!! வணக்கம்..!! நமஸ்கார்... !!..என்று சொல்லி ஆட்டத்தை ஆரம்பிக்கிறேன்.


அபி' யின் வேலை குறித்து அவளின் அப்பா எழுதிய பதிவை படித்தலிருந்து... என்னவோ மனதில் சொல்ல முடியாத பாரம் அழுத்திக்கொண்டே இருக்கிறது. ஐயா நல்லவர்களே நாலும் தெரிந்தவர்களே, பெண்ணின காவலர்களே பேராற்றல் மிக்க பெருந்தகைகளே.... திருமணம் ஆகும் வரையாவது பெண் குழந்தைகள் சந்தோஷமாக, உடல் வலி மன வலி எதுவும் இன்றி, நேரம் காலம் இன்றி தூங்கி, நன்றாக சாப்பிட்டு,குழந்தை குழந்தையாக சந்தோஷமாக இருக்கட்டுமே.

குழந்தைக்கு உழைப்பின் அருமை தெரியவேண்டும், அவர்களின் உடல் வாகிற்காகவும், நலினத்திற்காகவும்
பெண் குழந்தைகள் கண்டிப்பாக சில வேலைகள் செய்யத்தான் வேண்டும். ஆனால் அப்படி எல்லாம் செய்து எந்த பலனும் இல்லை என்று என் அனுபவம் கூறுகிறது. என் குழந்தை வயிற்றில் இருந்த போது காலை 4-லிருந்து இரவு 9.30 வரை நின்ற கால் நிலை காலாக சுக பிரசவம் ஆக வேண்டும் என்று வேலை வாங்கினார்கள். ஆனால் எனக்கு சுக பிரசவம் ஆகவில்லை. என்னை பிழிந்து எடுத்து வேலை வாங்கியது மட்டுமே மிச்சம். சென்ற நாட்கள் மீண்டும் வாரா.

பொங்கல் தீபாவளிக்கு இரவு விழித்து மேல் தளத்திலிருந்து கீழ் தளம் வரை கூட்டி பெருக்கி கழுவி சுத்தம் செய்து,
பெரிய பெரிய மாக்கோலங்கள் போடுவதும், பொது சேவை செய்கிறாயா என்று வீட்டில் உள்ளவர்கள் திட்ட திட்ட, பழக்கிவிட்ட ஆயாவை திட்டிக்கொண்டே நானும் செய்வதை நிறுத்தாமல் செய்தும் பலனொன்றும் காணேன்.. கதவடைக்கப்பட்ட மற்ற வீடுகளில் பெண்கள் சூரியன் பின்னங்கால்களில் அடித்த பிறகு, பொறுமையாக எழுந்து எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் திபாவளியை கொண்டாடத்தான் செய்கிறார்கள், கோலம் போட்ட என்னை பாரட்டவும் செய்வார்கள். அவர்கள் எல்லாம் என்னைவிடவும் சந்தோஷமாக எளிமையாக நாட்களை நகர்த்துகிறார்கள் என்பதில் சந்தேகம் எதுவம் இல்லை. தன் குடும்பம் தன் வீடு என்று வந்தால் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற பக்குவம் பெற்றவர்களாக தான் இருக்கிறார்கள்.

வேலையும், உழைப்பும், பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தத்துவ பேச்சுகளுடன் கொட்டி கொட்டி வளர்க்கப்பட்ட எனக்கு அப்படி இல்லாத மற்றவர்களை பார்க்கும் போது வெறுத்து போனது வாழ்க்கை தான் அன்றி, வேறில்லை. ஒரு வேளை எனக்கு பொறமையோ..??, பொறாமை பட்டு இருந்தால் அவர்களை போல் என் வாழ்க்கை தரத்தை மாற்றி இருப்பேனே... மாறாக இன்னமும் எப்போதும் வேலை வேலை வேலை...... ஏனென்றால் நான் ஒரு பெண்....இரத்தத்தில் ஊட்டி வளர்த்து இருக்கிறார்கள் நல்லவர்கள். :)

சுகாதாரம், சுத்தம் என்பதே என்ன என்று தெரியாத சோம்பேறிகளும், வெட்டி நியாயம் பேசிக்கொண்டு சிரித்து கும்மாளமிட்டு கொண்டு, அடுக்கடுக்காக பொய்கள் பேசியும் புறம் பேசியும் பொறாமை பட்டும், புது புடவை நகைகள், பொழுது போக்குகள், போதுமான பிடித்த சாப்பாடு என்ற ஊரில் இருக்கும் அத்தனை உணவகங்களிலும் உட்கார்ந்து ஒய்யாரமாக சாப்பிட்டு உடம்பை வளர்த்தும், பணம் பத்தும் செய்யும் என்று பகட்டாக காட்டி, பகல் இரவு பார்க்காமல் ஊர் சுற்றியும், எகத்தால பேச்சும்,ஏளன பேச்சும், எடுந்தெரிந்த வார்த்தைகளும், நடத்தையும் என்று இப்படி இருப்பவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட செயல் படுத்திக்கொள்ள முடியாத பாடம் ஏராளம்....

சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள்... இப்படியே இருந்துவிட்டு போகட்டும்... யாருக்கு நஷ்டம்... அவர்களுக்கா இல்லை இந்த நாட்டிற்கா? Bull Shit !! கொடிப்பிடித்தவனும், இன்னமும் கொடிப்பிடிப்பவனும் முட்டாள்கள்... :) முன்னேற வழி தெரியாத மூடர்கள் தான்... :)

ம்ம்....தயவு செய்து குழந்தைகளுக்கு எப்படி சாமர்த்தியமாக இருக்க வேண்டும் என்று மட்டும் கற்றுக்கொடுங்கள். வேறு ஒன்றுமே தேவையில்லை... பிழைத்துக்கொள்வார்கள். நம் சமூகம் அப்படித்தான் வளர்ந்து கொண்டு இருக்கிறது....

ஒன்று சேர்ந்து கும்மி அடிக்கத்தெரியாமல், தனியாக இருந்து இப்படி பதிவு போட்டு.....
அதற்கும் நேரடியாக வந்து திட்டமாட்டார்கள்.. . முதுகுக்கு பின் கூட்டம் கூடி எச்சில் தெறிக்க, இளக்காரமாய் பேசுவார்கள்...

இங்கே வந்து மட்டும் அதையே பேசட்டுமே..... கட்டாயமாக... முகம் கிழிந்து தான் போவார்கள் ............முகமூடி அணிந்தவர்கள் அத்தனை பேரும்.....

அணில் குட்டி அனிதா : அய்யய்ய.... என்னடா இது வம்பா போச்சி.. யாருப்பா அது. .அம்மணிய இப்படி கிளப்பிவிட்டது. .....நல்லா இருங்கப்பா...!!! பாரு... வரும் போதே என்னா சவுண்டு..ன்னு....... முடியல. .அப்படி ஓரமா உக்காந்துக்கிறேன்.. என்னைய கோவத்துல மிதிச்சிடபோறாங்க..

பீட்டர் தாத்ஸ் :-
Four things a woman should know: How to look like a girl, How to act like a lady, How to think like a man, And how to work like a dog