பாலுமகேந்திரா அவர்களின் படம் ஒன்று வந்தது. நடிகை அர்ச்சனா மட்டும் நினைவு இருக்கிறது. ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்குள் எத்தனை பிரச்சனை சங்கடங்கள் என்று சொல்லும் படம். இல்லம் என்ற சிவகுமார்ஜி, அமலா நடித்த படமும் வீட்டை பற்றிய கதைதான். இரண்டும் பார்க்கும் போது நம் ஒவ்வொருவருக்குள்ளும் நம் வீட்டை பற்றிய கனவுகளும் கற்பனைகளும் இல்லாமல் இல்லை என்பது புரியும். வீட்டை கட்டிப்பார், கல்யாணம் செய்து பார் என்ற பழமொழி கூட உண்டு.

வீட்டை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக இருந்தது. கட்டிடம் சார்ந்த படிப்பை படிக்கவில்லை என்றாலும்,கட்டிடம் கட்டும் போது பார்த்து கவனித்து அதை சார்ந்த படிப்பு படித்தவர்களுடன் பேசி தெரிந்துக்கொண்ட விஷயங்களை எழுதி இருக்கிறேன். தவறுகள் இருக்கலாம், கவனிப்பவர்கள் சுட்டவும்.

வீட்டுமனை வாங்குவதில் இருந்து ஆரம்பிக்கலாம். பொதுவாக மனை வாங்கும் போது திசை பார்ப்பார்கள், இப்போது இருக்கும் சூழலில் எப்படியோ ஒன்று வாங்கிவிட்டாலும், கண்டிப்பாக அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

1. வாஸ்து :
எல்லோருமே பார்க்கிறார்கள், பார்த்துவிட்டு செய்துவிட்டால் பிற்காலத்தில் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதனால் ஒரு பிரச்சனை என்று யாராவது சொல்லும் போது தேவையில்லாமல் நாம் கவலைப்பட்டு அந்த சமயத்தில் முடிந்தும் முடியாமல் எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. வாஸ்து என்ற கடவுள் அந்த நிலத்தில் எந்த நிலையில் சயனத்திருக்கிறார் என்பதை கடகால் தோண்டுவதற்கு முன்னே சொல்லிவிடுவார்கள். இதுவும் திசையை வைத்து தான் கணிக்கிறார்கள். அதைக்கொண்டு குறிப்பாக சமையல் அறை, கழிவறைகள், தண்ணீர் வரவு எந்தெந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று சரியாக வைத்துவிட்டால் போதும்.

2. காற்று சுழற்சி
இது ஒவ்வொரு காலக்கட்டதிற்கு தகுந்தார் போன்று மாறும். அதாவது உங்கள் வீடுகளிலேயே கவனித்து பார்த்தீர்கள் என்றால் வருடம் முழுதும் நமக்கு காற்று ஒரே திசையில் இருந்து வராது. மாறிக்கொண்டே இருக்கும். இந்த காற்றின் திசை சுழற்சியை கவனித்து, அதற்கு தகுந்தார் போன்று வீட்டின் கதவுகள், ஜன்னல் வைக்க நாம் கட்டிடத்தை வடிவமைக்க வேண்டும். அதை வெற்று நிலமாக இருக்கும் போது முடிவு செய்ய முடியும். காற்றின் சுழற்சி எந்த ஒரு காலகட்டத்திலும் வீட்டினுள் வாராமல் தடையாக எந்த சுவரையும் எழுப்பிவிடாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்.இயற்கை காற்றினால் மட்டுமே நம் உடல் ஆரோக்கியம் நல்ல முறையில் பாதுகாக்கப்படும்.

3. தண்ணீர்
நிலத்தடி நீரோட்டத்தை மனை இருக்கும் இடத்திலோ, அதை சார்ந்தவர்களிடமோ தீர விசாரித்து, வாஸ்த்துவையும் மனதில் கொண்டு பிறகு தண்ணீர் எடுக்கும் இடத்தை குறிக்க வேண்டும். குத்துமதிப்பாக தோண்டினால், நிலத்தடி நீரோட்டம் இல்லாத இடமாக போனாலோ, பாறை இருந்துவிட்டாலோ பிரச்சனை.

4. முன் வாசல்
கவனித்து பார்த்தவரை தெற்கு வாசல் சிறந்தது என்று பலர் சொல்லி கேட்டு இருக்கிறேன். அப்படி இருக்கும் நிலமாக நாம் தேர்ந்தெடுத்து வாங்கலாம். இல்லாதபட்சத்தில் கிழக்கு (அ) மேற்காக முன் வாசல் இல்லாதவாறு பார்த்துக்கொள்வது நல்லது. இதற்கு காரணம் சூரிய வெளிச்சம் நேரடியாக வீட்டின் முன் விழும். அதனால் வெப்பம் அதிகமாக வீட்டுக்குள் காலையும் மாலையும் பரவும். முன் வாசல் கதவுகளில் ஆண்டு முழுதும் தொடர்ந்து சூரிய வெப்பம் தாக்குவதால் மிக குறுகிய காலத்தில் கதவு அழகிழந்தும், வெளுத்தும் போய்விடும். தெற்கு வாசல் ஏனென்று ஒரு முறை யாரையோ விசாரித்தபோது மேற்கண்ட விளக்கம் எனக்கு கொடுக்கப்பட்டது. .

5. வெளிச்சம்
காற்றுக்கு அடுத்து முக்கியத்துவம் தரவேண்டிய விஷயம் வெளிச்சம். கண்களுக்கு மட்டும் அல்ல, நல்லமுறையில் தெளிவாக நம் மூளை வேலை செய்யவும், கோபம், சிடுசிடுப்பு, எரிச்சல் போன்றவை அடிக்கடி நிகழாமல் இருக்க வெளிச்சம் நமக்கு உதவி செய்கிறது. இதற்கு நம் கட்ட விருக்கும் வீட்டை சுற்றி உள்ள வீடுகளின் அமைப்புகள் மிகவும் முக்கியம். வெளிச்சம் வராத அளவு மிக உயர்ந்த கட்டிடங்கள் நம் மனையை சுற்றி இருந்தால், சுற்றிலும் 5- 7 அடி அளவு இடம் விட்டு வீட்டை கட்டலாம். இது மழைபெய்யும் போது நம் வீட்டில் விழும் தண்ணீர் நிலத்திற்குள் செல்லவும் வழிவகுக்கும். சந்துகள் முழுசாக சிமெண்டு போட்டு மூடிவிடாமல், செடி, கொடி, மரங்கள் வைத்து பராமரித்தால் நல்லது. காரணம் நல்ல காற்றும், செடி, கொடி, பூக்களின் வாசமும் கிடைக்கும். மழைநீர் வீணாகாமால் நிலத்தடி நீராக மாறும்.

6. அஸ்திவாரம்
எந்த ஒரு விஷயத்திற்கும் அஸ்திவாரம் மிகவும் முக்கியம். எத்தனை செலவானாலும் அஸ்திவாரம் அந்த இடத்திற்கு தகுந்தார் போன்று, இன்றிலிருந்து அடுத்த 40 வருடங்களுக்கு அந்த இடம் எப்படிப்பட்ட வளர்ச்சிகளை பெரும் என்பதை கணக்கிட்டு ஆழம் மட்டும் இல்லை உயரத்தையும் அதிகப்படுத்தி போட்டு விட வேண்டும். அரசு செயற்படுத்தும் திட்டங்களின் மூலம் நம் குடியிருப்பில் இருக்கும் ரோடுகள் உயரப்படுத்தப்படும், இது 4 ஆண்டுக்கு ஒரு முறை என்று ஊகித்தாலும் 40 வருடங்களில் எத்தனை முறை ரோடு உயர்த்தப்படும் என்பதை கணக்கிடலாம். இப்படி கணக்கிடாமல் தெருவிலிருந்து ஓரளவு உயரமாக கட்டிடத்தை எழுப்பினால், நாளடைவில் வீடு உள்ளேயும் , தெரு மேலேயும் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. அதனால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே வர வாய்பிருக்கிறது. அதனால் வீட்டின் உயரத்தை எப்போதும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.

7. கவனிக்க வேண்டியவை

  • மேல்தளம், வெப்பம் நேரடியாக வீட்டில் இறங்காமல் வெதர் ப்ரூஃப் கண்டிப்பாக போட்டுவிடவேண்டும்.
  • நம் வீட்டு மழைநீர் சுற்றி உள்ள வீடுகளில் விழாதவாறு நம் வீட்டு ஜன்னல், கதவு வெளிப்புற லாஃப்டுகள் அமைக்க வேண்டும்.
  • மேல் மாடி மழைநீர் வீணாகாமல் கிணற்றுக்குள் அல்லது ஆழ்துளைக்குக்குள் செல்லும் வசதியை செய்து விட வேண்டும்
  • வாகனங்கள் நிறுத்த வசதியாக இடம் அமைத்து க்கொள்ள வேண்டும்
  • கிட்சன் ஒர்க் ஸ்பேஸ் கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் நல்லது
  • வாஷிங்மிஷின், கேபிள், டிஷ் வைக்க தேவையான புரொவிஷன் வைத்துக்கொள்வதும் நல்லது.
  • அரசாங்கத்தின் கழிவுநீர் குழாயின் மட்டத்தை விட, அதனை சென்று அடையும் நம் வீட்டு கழிவு நீர் குழாய் குறைந்தபட்சம் 3-4 அடி உயரம் இருந்தால் நல்லது
  • எல்லாவற்றிக்கும் மேல் நாம் வீடு கட்டும் போது, ஜல்லி, செங்கல், மணல் போன்றவற்றை தெருவில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கொட்டாமல் பார்த்துக்கொள்வது ரொம்பவும் முக்கியம். தெருவில் கொட்டி வைத்தே நம் வேலையை முடிக்கிறோம். அது மற்றவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சலாக இருக்கிறது என்பதை நாம் என்றும் சிந்தித்து பார்த்தே இல்லை.
  • வரவேற்பு அறை மற்றும் உள்அறைகள் போன்றவற்றில் பர்னீச்சர் எப்படி போடுவோம், அல்லது எப்படிப்பட்ட பர்னீச்சர் நமக்கு போட விருப்பம் என்பதற்கு ஏற்றார் போன்று அவற்றின் அளவுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். .
-------------------------------------------------------------------------------------------

அணில் குட்டி அனிதா : அட... இம்புட்டு சொல்லி இருக்காங்க ஆனா அம்மணி இன்னும் சொந்தமா வூடு கட்டவே இல்லையே?!!! அட கடவுளே...... .கட்டாமேயே இப்படி ஒரு பதிவா? இவிங்க மட்டும் வூடு கட்டியிருந்தா.. இன்னும் செமத்தியா பதிவுல வூடு கட்டுயிருப்பாங்கப்பா .. ............ சொல்றதுக்கு இதுக்கு மேல என்ன இருக்கு??????

பீட்டர் தாத்ஸ் : - A house is made of walls and beams; a home is built with love and dreams.
Home is not where you live, but where they understand you
Home, the spot of earth supremely blest, A dearer, sweeter spot than all the rest

.