சென்னையில் தனியாக நபர்கள் இருப்பதை கவனித்து, அந்த வீடுகளில் கொள்ளைகள் நடப்பது சகஜமாகிவிட்டது. நாங்கள் இருக்கும் இடத்தில் தனியாக பகல் 11 மணி அளவில் நடந்து சென்ற பெண்ணின் தங்க சங்கிலி'ஐ திருடன் அறுத்து சென்றுவிட்டது, எங்கள் நகர் பெண்களுக்கு் மனதில் கிலி'யை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து அடுத்த அடுத்த நாள் ஒரே இடத்தில் இரண்டு முறை நடக்கவே... எல்லோரும் பயந்து, போலிசார் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து ரோந்தில் இருந்து வருகிறார்கள்.

இந்த மாதிரி திருடர்களை பற்றியும், வீடு புகுந்து திருடும் ஆட்களை பற்றிய பேச்சு வரும் போது, என் கணவரிடம் "நீங்கள் கவலை படாதீர்கள், எப்படிப்பட்ட திருடன் வந்தாலும்.. நான் அவனை உட்காரவைத்து, அன்பாக பேசி, சாப்பாடு எல்லாம் போட்டு நல்லவானாக்கி அனுப்பி வைக்கிறேன்" என்றேன்.

அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படி சிரிக்கிறார் என்று முறைத்தால்.."திருட்டு பசங்க திருட்டு பசங்க தான்.. மாறவே மாட்டாங்க. .நீ உட்கார்ந்து பேசி சாப்பாடு எல்லாம் போட்டாலும், எல்லாம் முடிந்த பிறகு உன் நடு மண்டையில் நச்'ன்னு (அது ஏன் நடுமண்டை என்ற கேள்வி எழுந்தது) போட்டுட்டு, அவன் வந்த வேலையை முடிக்காமல் போக மாட்டான் "என்றார்.

"அப்படியா? "என்று நானும் ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினேன்.. ஹி ஹி..அப்படி என்ன இதுல சிந்திக்க இருக்குன்னு நீங்க நினைக்கறீங்களா.. வேற ஒன்றும் இல்லை.. நடு மண்டையில் நச்சுன்னு போட்டால், என்ன செய்வது என்று தான்.

இது வரையில் இரண்டு முறை நேரடியாக திருட்டை பார்த்து இருக்கிறேன். திருடும் போது இல்லை, திருடிக்கொண்டு சென்ற பிறகு. என்னுடைய ஆயா வெள்ளிக்கிழமை ஆனால் போதும் காலையில் 4 மணிக்கு எழுந்து, தலையில் எண்ணெய் வைத்து, வெளி அடுப்பில் சுடத்தண்ணீர் வைத்து, குளிப்பது வழக்கம். எப்போதும் 4 மணிக்கு எழுந்தாலும், வெள்ளியன்று தலைக்குளித்தல் என்பது திருடனுக்கு வசதியாக போயிற்று. ஏனென்றால் அன்று தான் அவர் கம்மல், மூக்குத்தி கழட்டி வைத்துவிட்டு குளிப்பார்.

அன்றும் அப்படித்தான், நாங்கள் எல்லாம் உறங்கிக்கொண்டு இருக்க, ஆயா கம்மல், மூக்குத்தியை கழட்டி வைத்துவிட்டு, எப்போதும் போலவே கதவையும் திறந்து வைத்துவிட்டு, அவர் வெளியில் சுடத்தண்ணீர் வைக்கும் இடத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக்கொண்டு இருக்க, தொடர்ந்து கவனித்து வந்திருந்த திருடன், வீட்டில் நுழைந்து கம்மல் மூக்குத்தியை தேடத்தொடங்கி இருக்கிறான்.

படுத்திருந்த எங்கள் அனைவரையும் தாண்டி, இரண்டு பீரோக்களை திறந்து துணி எல்லாம் இழுத்து கீழே போட்டு, மற்ற அறைகளிலும் துளிக்கூட சத்தமே இல்லாமல் தேடிவிட்டு, கடைசியில் , அடுப்பங்கறையில் ஒரு டப்பாவின் மூடி மேல் சர்வ சாதாரணமாக கழட்டி வைத்திருந்த கம்மல், மூக்குத்தியை எளிதாகவே எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

குளித்துமுடித்து வந்த ஆயா கண்ணில் பட்டது பீரோக்கள் !?? நான் தான் முதல் டார்கட்... பாப்பா எழுந்திரு... எவனோ உள்ள வந்துட்டு போயிருக்கான்...அதுக்கூட தெரியாம தூங்கறியா...?!!

".........................." (தூக்கம் கலையாமல் கடுப்பாக எழுந்த எனக்கு பீரோவை பார்த்ததும், பதட்டத்தோடு சட்டென்று எழுந்து நின்றுவிட்டேன்.)

"பாப்பா, உன்னைத்தாண்டி தானே போயிருக்கான்..காலடி சத்தம் கூட தெரியாமல் தூங்கனியா. .என்ன பொண்ணும்மா நீ.. பொண்ணு இப்படியா தூங்கறது... ?!!

ஆரம்பிச்சாட்டங்கய்யா காலையிலேயே.. பொண்ணு எப்படி இருக்கனும்னு... ம்ம்ம்.. இன்னைக்கு முழுக்க நிச்சயமாக வீட்டில் இருக்கும் அத்தனை வாயிலும் நான் தான் மாட்டுவேன். இருந்தாலும் ஆயா சொல்லுவதில் ஏதோ இருக்குமோ??? நாம் அப்படி தூங்கி இருக்கக்கூடாதோ?!! என்ற கேள்வி எழாமல் இல்லை...

எல்லாம் திறந்து இருந்தாலும் எதுவும் திருடு போகவில்லை என்று ஹாலையும், ரூம்; யையும் வைத்து முடிவு செய்த நாங்கள், ஆயாவின் கம்மலை மறந்து போனோம், ஆயாவும் தான். !!

அரைமணி நேரம் கழித்துத்தான் ஆயா சமையல் அறை சென்று பார்க்க, கம்மல் காணவில்லை என்று தெரிந்தது. அப்படியே முழங்கால் கட்டி உட்கார்ந்துவிட்டார்கள்.

*********************

இது முடிந்து பல மாதங்கள் கழித்து தாத்தா எங்களின் குடும்ப ஜாதக புத்தகத்தை எடுத்துவர சொன்னபோது, எடுத்து வந்து அவரின் பக்கத்தில் உட்கார்ந்து முதலில் ஆரம்பித்த தாத்தாவின் ஜாதகத்தில் இருந்து புரட்ட ஆரம்பித்தேன். அடுத்து ஆயா ஜாதகம் வந்தது. திருடு விஷயமாக தாத்தா குறிப்பு ஏதோ எழுதி இருப்பதை பார்த்து படிக்க ஆரம்பித்தேன்.

அதாவது திருடு நடந்த பிறகு இரவும் பகலுமாக உட்கார்ந்து ஆயாவின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்ந்து, கணக்கிட்டு, "இந்த கிரகபலன்களினாலும், பார்வையினாலும் பத்மாவின் கம்மல் தொலைந்துபோனது - பொருள் நஷ்டம்" என்று எழுதி இருந்தார்.

அட.. தாத்தா இவ்வளவு நல்லா ஜாதகம் பார்க்கிறாரே? ஏன் இந்த கணக்கை எல்லாம் இந்த திருட்டு சம்பவம் நடக்கும் முன்னமே கணக்கிட்டு சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் இந்த திருட்டு நடக்காமல் ஆயா கவனமாக இருந்து இருக்கலாமே? நடந்து முடிந்த பிறகு கணக்கிட்டு பார்ப்பதில் என்ன பலன்? ஒரு வேளை இவரின் ஜாதகம் பார்க்கும் திறமையை வளர்த்துக்கொள்கிறாரா?

ஏன் ஜோசியர்கள் நடந்து முடிந்த விஷயத்திற்கு இவ்வளவு துள்ளியமாக காரணம் கண்டு பிடிக்கிறார்கள்? இத்தனை துள்ளியமாக ஏன் அவர்களால் எதிர்காலத்தை கணிக்க முடிவதில்லை...? அப்படிமட்டும் முடிந்துவிட்டால், எத்தனை விஷயங்களில் நாம் கவனமாக இருக்க முடியும்.

தாத்தாவிடமும் கேட்டு விட்டேன் தான்... ஆனால் பதில் ஏதும் தாத்தா சொல்லாமல் "ம்ம்ம்ம்.....பத்தா..(பத்மா) உன் பேத்தியம்மா கேள்விய பாத்தியா..?!! அம்மாடி...நீ கேட்டுட்டே. .இனிமே அப்படி கணித்து வைக்க முடியுதான்னு பார்க்கிறேன்... " என்று அப்போது சொன்ன தாத்தா அடுத்து கணித்து வைத்து இருந்தது என் அப்பாவின் மரணம் குறித்தது....

அதை எழுதாமல் மனதில் வைத்திருந்து..... அப்பா இறந்தபின், அவரின் இழப்பு தாங்காமல் தனியாக அமர்ந்து அப்பாவை பற்றி பேசிக்கொண்டே இருப்பார், அப்படி பேசும் போது இந்த குறிப்பையும் சொன்னார், மார்ச் 18 ஐ தாண்ட மாட்டேன்னு தெரியும்டா.. உன்னை விட்டுட்டு ஊருக்கு போகாமல் இருந்து இருக்கலாம்.. உங்க அம்மா உன் பக்கத்தில் இருந்து இருந்தா..... உன் உயிரை எப்படியும் திருப்பி கொண்டு வந்து இருப்பா...." என்றார்.

கேட்டுக்கொண்டு இருந்த நான் அப்போது நினைத்தது...."உண்மைதான் ஆயா மட்டும் இருந்து இருந்தால், கண்டிப்பாக அப்பா இறந்து இருக்கமாட்டார்."

அணில் குட்டி அனிதா : சரி என்ன சொல்ல வரீங்க..திருட்டு பசங்கள திருத்த முடியாதுன்னா? இல்ல உங்க தாத்தா நல்ல ஜோசியரா? வேஸ்டா?

பீட்டர்தாத்ஸ் : Thief : - Set a thief to catch a thief ....... :

Horoscope : - “There are many methods for predicting the future. For example, you can read horoscopes, tea leaves, tarot cards, or crystal balls. Collectively, these methods are known as "nutty methods." Or you can put well-researched facts into sophisticated computer models, more commonly referred to as "a complete waste of time.

.