சந்தன முல்லை வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் என்ற தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறார்கள். இப்படி ஒரு தொடர் மிகவும் அவசியமானதாக தோன்றுகிறது. இதில் பதிவர்கள் நினைவில் வைத்து சொல்லும் எல்லா சொற்களையும் சேகரித்து சேமித்து வைக்கலாம்.

எனக்கு நினைவில் தெரிந்து என்னுடைய தாத்தா நல்ல தமிழ் பேசுவார்கள், ஆயா, அப்பா எல்லாம் அவ்வளவு சுத்த தமிழ் சொற்கள் உபயோகிக்க' வில்லை என்றே நினைக்கிறேன். உபயோகம் என்ற வார்த்தை அதிகமாக யாரும் இப்போது பயன்படுத்துவதில்லை.

இந்த பதிவில் குறிப்பாக எங்களது வீட்டில் என்னுடைய ஆயா, தாத்தா வழக்கில் வைத்து இருந்த சொற்களை நினைவு படுத்தி சொல்ல முயற்சி செய்கிறேன்.. இந்த சொற்கள் எதுவுமே என் மகனுக்கு சுத்தமாக தெரியாது.

வழக்கில் பயன்படுத்த மறந்த வார்த்தைகள் :-

அன்ன(ம்)வெட்டி - சாதம் எடுக்கும் கரண்டி, என் பையன் சாதம் எடுக்கும் கரண்டின்னு தான் சொல்றான்.. நானுமே..!
அன்ன(ம்)கூடை - சாதம் வைக்கும் பாத்திரம், இது ஆயாவீட்டில் இருந்தது என்னிடம் இல்லை.
கூஜா - தண்ணீர் வைக்கும் பாத்திரம் , இப்போது இந்த பாத்திரமும் இல்லை
களி - கேழ்வரகில் செய்யும் உணவு, செய்வதே இல்லை, யாரும் சொல்லுவதும் இல்லை.
கூழ் - கேழ்வரகில் செய்யும் உணவு, செய்வதே இல்லை, சொல்லுவதும் இல்லை.
நீராகாரம் - பழையசாதத்திலிருந்து எடுக்கும் தண்ணீர்.. காலையில் குடிக்க கொடுப்பார்கள், உடம்புக்கு ரொம்ப குளிர்ச்சி, சத்து என்று சொல்லுவார்கள்.
சொரபிஞ்சி :- இது உளுந்தை கொண்டு செய்யும் ஒரு உணவு, வடையை போன்று இருக்கும், ஆனால் காரம் இல்லை, வெறும் உளந்து ஊரவைத்து, அரைத்து (சின்ன அளவு) போண்டாவை போன்று உருட்டி எண்ணெயில் பொரித்து, தேங்காய் பால் எடுத்து அதில் போட்டு பரிமாறுவார்கள்.
உணவு பண்டம்:- பண்டங்கள்'ன்ன உணவை சார்ந்த பொருட்கள் ன்னு நினைக்கிறேன்.. என்ன அர்த்தம் என்றே மறந்து விட்டது
பதார்த்தம் :- சாப்பாட்டோடு தொட்டுக்கொள்ள வைக்கும் காய்கறிகள் பதார்த்தம். ஆனால் சொல்லுவதே இல்லை ..தொட்டக்க என்ன? என்று மாறியே போயிவிட்டது
நெப்பம் :- ரொம்ப சென்சிடிவ், soft, மெல்லிய, என்று பொருள்படும், என்னுடைய ஆயா அடிக்கடி சொல்லுவார்கள், நான் இப்போதும் சொல்லி என் கணவர் என்னை கிண்டல் அடிப்பார். "கண்ணாடிய ரொம்ப நெப்பமாக உபயோகிக்கனும், இல்லயென்றால் உடைந்துவிடும்"
புல்லாக்கு :- திருமணங்களில் மணப்பெண்ணுக்கு போடுவார்கள், மூக்கின் நடுவில் வைத்து இந்த புல்லாக்கை அழுத்திவிடுவார்கள், உதடுகளில் வந்து இடிக்கும். எனக்கு ரொம்ப பிடித்த ஒரு நகை :) என் கல்யாணத்தில் கேட்டு வாங்கிப்போட்டேன். இப்போது கிடைப்பதில்லை.
ஆபரணம் :- உடைகள், நகைகள்
பரிசம் : நிச்சயத்தார்தம்
துடுப்பு: பெரிய அண்டாக்களில் சமைக்கும் போது, இதை உபயோகிப்பார்கள், மரத்தினால் செய்யப்பட்ட நீளமான கரண்டி ஆனால் தோசை திருப்பி போல் நேராக இருக்கும், கரண்டி போன்று குழியாக இருக்காது.
கொட்டும்: தேள், பாம்பு எல்லாம் கொட்டும், ஆனால் இந்த வார்த்தையை சொல்லுவதே இல்லை, எதுவாக இருந்தாலும் கடிக்கும் என்றே சொல்லுகிறோம்.
காக்கை கரையும் : காக்கா கத்துகிறது என்று தான் சொல்லுகிறோம்.
உரு: படிக்கும் போது எல்லாம் தாத்தா சொல்லுவார்கள், நன்றாக பாடத்தை உரு அடி (மனப்பாடம்) செய் என்பார்கள். இதில் 'ரு' சரியா தெரியவில்லை.
பானம் : வெல்லத்தை கொண்டு செய்யும் ஜீஸ்.. ஆயாவிற்கு பிறகு யாருமே இதை செய்வது இல்லை.. மறந்தும் போய்விட்டேன்..
அறிவுகால் : வாசற்படியில் இருபுறமும் கதவுடன் இணைக்க பயன்படும் மரம்வேலைபாடு. வெள்ளிக்கிழமை ஆனால் மஞ்சல் பூசி பொட்டு வைத்து.. உம் எங்க.. செய்வதே இல்லை.. அறிவுகாலா அபபடின்ன்னா? கேட்கும் நிலைமை வந்துவிட்டது.
மாடம் : இது சின்ன ஷெல்ப் போன்று ஒரு அகல் விளக்கு ஏற்றி வைக்கும் அளவிற்கு இருக்கும் விளக்கு அங்கு இருக்கிறதோ என்னவோ வீட்டின் எல்லா சாவிகளும் அங்கே தான் இருக்கும்.. அடிக்கடி வீட்டில் உபயோகிக்கும் வார்த்தை "மாடத்தில் பாரு இருக்கும்"
புறாக்கூண்டு : மர பீரோவில் உள்ளே பணம் நகைகள் வைக்கும் அறை.. இப்போது ஆசாரிகளுக்கு இதை சொன்னால் என்னவென்று கேட்கிறார்கள்.
கோவணம் : தாத்தா எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கோவணத்துடன் தான் குளிப்பார்.. ஹா ஹா.. இப்ப இதை எல்லாம் சொன்னால் வீட்டில் எனக்கு அடி விழும்.. !! :)
கைலி/லுங்கி : மறந்தே போன ஆண்கள் உடுத்தும் உடைகள்.என் பிள்ளைக்கு என்னவென்றே தெரியாது.. :(
அத்தான்: அம்மாவீட்டில் மாமா முறையை அத்தான் என்று தான் சொல்லுவார்கள், ஆனால் நானே பயன்படுத்தியதில்லை.. மறந்தே போனது..
தொட்டால் சிணுங்கி : எதற்கு எடுத்தாலும் கோபம், சாப்பிடாமல் இருப்பது, முகம் துவண்டு போவதால் எனக்கு ஆயா வைத்த பெயர்..
சாக்கு : காரணம் என்ற பொருள் படும் "இதான் சாக்குன்னு ஓடிடாது நில்லு"
புகைக்கூண்டு : சமையில் அறையின் புகை போக கட்டப்படும் கூண்டு சமையல் அறையில் இருந்து மெத்தை (மாடி்) வரை இருக்கும்.. ஒரு சின்ன அறை போன்றே கட்டுவார்கள்.


இன்னும் நிறைய இருக்கு யோசித்து சேர்த்து விடுகிறேன்... பதிவை தொடர அழைப்பது -

1. மங்கைஜி
2. சந்தோஷ்
3. நாகைசிவா
4. ராயல் ராம்
5. தெகாஜி
6. பூரணி சரன்
7. இனியவள் புனிதா
8. செந்தில்

அணில் குட்டி அனிதா:- ம்..ம்.. எனக்கு தூக்கம் வரூது.. என்னைய விடுங்க..!!

பீட்டர் தாத்ஸ் :- A winner is someone who sets his goal, commits himself to those goals, and then pursues them with all the ability he has.