அது ஒரு மழைக்காலம். ஒரு காலை வேலையில், நன்கு பலத்த மழைபெய்து முடிந்து வானம் கலைத்து போய் அமைதியாகி இருந்தது. ஆறுபோல தெருவெங்கும் தண்ணீர் ஓடியது, திண்ணை மறைத்து ஓடியது. குட்டிக்கவிதாவிற்கு படகு விட ஆசை வந்தது.. அதற்குள்ளே அவளை போன்ற குட்டிகள் பேப்பர் படகுகளை விட ஆரம்பித்துவிட்டனர்.

வேகவேகமாக நோட்டுபுத்தகத்தை எடுத்து, பக்கம் பக்கமாக கிழித்துக்கொண்டு இருந்தாள் குட்டி கவிதா. அப்பா வந்து பார்த்தார்..

"பாப்பா என்ன செய்யறே..??"

"அப்பா, ரோட்ல நிறைய தண்ணீ போது..நம்ம பெண்ணையாறு போல இருக்கு, நான் போட் விடனும்.. இப்பவே பக்கத்து வீட்டு கெளரி(சங்கர்) விடறான்..ப்பா, நான் போட் செய்ய போறேன்..ப்பா.."

"சரி நோட்டை கிழிக்காதே நான் செய்து தரேன்.. கொஞ்சம் இரு..."

அப்பா சென்று தென்னை மரத்து பாளை ஒன்றை எடுத்து வந்து இருபுறமும் கொஞ்சம் சீவி, என்னை தென்னங்குச்சியை கொண்டு வர சொல்லி, அதை தேவையான நீளம் அளந்து ஒடித்து, ஆயாவிடம் ஒரு வெள்ளை துணி வாங்கி, அதை தென்னங்குச்சிகளுக்கு தகுந்தார் போன்று வெட்டி, ஊசி நூலை எடுத்துவர சொல்லி தென்னங்குச்சியுடனும் துணியை சேர்த்து தைத்தார். பின் அதனை படகு(பாளை)டன் சேர்த்து தைத்தார். அழகான நிஜ படகு தயாரானது....

"இந்தா..எல்லார் மாதிரியும் நீயும் பேப்பர் படகு விடனுமா?? எதையும் செய்யறதுக்கு முன்னே முட்டாள் பாப்பா யோசி... :))))))" என் தலையில் கொட்டி அந்த படகை என் கையில் கொடுத்துவிட்டு சிரித்து கொண்டே சென்று நான் விடும் அழகை பார்க்க மாடியின் முகப்புக்கு சென்றார்...

படகு ரெடி , என்னால் நம்பவே முடியவேவில்லை..என் கையில் நிஜ படகு.. அச்சு அசலை போன்றே குட்டியான படகு... 10 நிமிடங்களில் தயார் செய்து கொடுத்த அப்பா மட்டுமே எனக்கு எப்பவும் ஹீரோ.... எதையும் வித்தியாசமாக தனித்துவமாக செய்ய வைத்தது.. என் அப்பா... அப்படி ஒரு மிக சிறந்த அறிவாளியை, அதனால் தான் என்ற கர்வம் இல்லாத ஒரு அசாதாரண மனிதரை என் அப்பாவாக நான் பெற்றது ...... .......... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை...

இப்படி நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு.. ஒரு முறை ஆற்று திருநாளுக்கு தென்பெண்ணை ஆற்றுக்கு சென்ற போது என் திருமணத்தை ஆற்றில் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்கு அவர் சொன்ன காரணங்கள்,

1. எத்தனை ஆயிரம் பேர் திருமணத்திற்கு வந்தாலும் இடம் கொள்ளும். யாரும் நிற்க வேண்டியது இல்லை.
2. தேவைப்படுபவர்கள் அடிக்கடிபோய் ஆற்று தண்ணீரில் குளித்துவிட்டு வரலாம். இயற்கையை ரசிக்கலாம். கட்டுப்பாடு இல்லை.
3. கட்டு சாதங்களாக மெனு வைத்து, எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எல்லோரும் சாப்பிடலாம். அதற்கும் கட்டுபாடு இல்லை..
4. களைப்பு தீர ஆற்றில் படுத்து ரெஸ்ட் எடுத்துவிட்டு கிளம்பலாம்.

... ஆனால் என் திருமணத்திற்கு அவர் உயிருடன் இல்லை என்பது என் நெஞ்சை வதைக்கும் ஒரு விஷயம்...... இப்படி ஒருவரை சின்ன வயதில் நான் இழந்தது என் துர்பாக்கியம். அவர் மீண்டும் என்னிடம் வந்துவிடமாட்டாறா என்று நான் ஏங்கும் நாட்கள் இன்னமும் என்னின் பைத்தியக்காரதனமான நினைவுகளும் அதில் மட்டுமே வரும் நிஜங்களும்...

சரி தலைப்புக்கு வருவோம்.....அப்பா அளவிற்கு கண்டிப்பாக நான் புத்திசாலி இல்லை. என் உடம்பில் ஓடுவது என் அப்பாவின் ரத்தம்...அவரின் அனுகுமுறை எனக்கு எல்லா விஷயங்களிலும் இருக்கிறது என்பது இயற்கை. ஆனால் இதற்காக என்னை நான் வேண்டுமென்றே தயார் படித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் உடம்புடன் ரத்ததுடன் கலந்துள்ளது...

சாதாரணமாக ஒரு பேப்பர் படகை அன்று நான் விட்டு இருக்க முடியும்.. பத்தோடு பதினொன்றாக... என்னுடைய படகும் சென்றிருக்கும்...ஆனால் அப்பா விடவில்லை அதற்காக சிரமம் எடுத்து, நேரம் எடுத்து எனக்காக அவர் செய்து கொடுத்தது அந்த தெருவில் அன்று அப்படி ஒரு படகு விட்டது நான் மட்டுமே என்ற பெருமை இப்பவும் எனக்கு இருக்கிறது..அப்பாவும் மாடியில் இருந்து என் சந்தோஷத்தை பார்த்து புன்முறவலோடு மகளை பார்த்து ரசித்தார். இப்படி பல விஷயங்களில் அப்பாவாலும் ஆயாவாலும் தனித்துவத்துடன் நான் இருந்திருந்திருக்கேன். அவர்கள் சொல்லி சொல்லி எல்லா விஷயங்களை ரொம்பவும் யோசித்து நேர்த்தியாக மட்டும் இல்லாமல் தனித்துவத்துடன் வித்தியாசமாக செய்ய முயற்சிக்க கற்றுக்கொண்டேன்...

அப்பா சொன்ன படி முட்டாள் பாப்பா வாக இல்லாமல்..... எந்த ஒரு காரியத்தை செய்யறதுக்கும் முன்னரும் கொஞ்சமாக யோசிக்கிறேன்.. சமயோசித புத்தியை வளர்க்க முயற்சிக்கிறேன்.., எப்படி இதை வித்தியாசமாக செய்ய முடியும்னு யோசிக்கிறேன்.. அதற்காக சில விஷயங்கள் எனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் விட்டு கொடுப்பதில்லை என்ற பிடிவாதம் வர ஆரம்பித்து, பிடிவாதங்களே என்னுடைய வித்தியாசமான சில முயற்சிகளுக்கு காரணமாக மாறிவிட்டது என்றே தோன்றுகிறது. அப்படி ஒன்றும் அதிக வித்தியாசங்களோடு பின்னால் வாலோடும், தலையில் கொம்போடும் அலையவில்லை என்பது மட்டும் உண்மையே.

தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால் எனக்கு ஏற்படும் பிரச்சனைகள் நிறைய...

1. மிக எளிதாக எந்த விஷயமும் நடந்துவிடுவதில்லை.
2. மனதிற்கும் உடம்பிற்கும் பல நேரங்களில் மிகவும் சிரமாக இருக்கும்
3. எதற்கும் அதிக கவனம் தேவை ப்படும்
4. வேலை நேரம் அதிகமாக இருக்கும்
5. தேவையான பொருட்களோ, சம்பந்தப்பட்டவை கிடைப்பது கஷ்டமாக இருக்கும். தேடி அலைய வேண்டி இருக்கும்.
6. சாதாரணமாக செய்தால் மனம் எளிதில் அதை ஏற்றுக்கொள்வதில்லை. மனம் அதில் சந்தோஷப்படுவதில்லை, நிறைவு ஏற்படுவதில்லை.
7. மிக சாதாரண பொருட்களையும் உபயோகப்படுத்த முடியுமா என்று யோசித்து எதை பார்த்தாலும் எப்போதும் ஒரு யோசனை இருக்கும்
8. எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு அதுவே பழக்கமாகி விட்டது.

நிறைய பாராட்டுகள் கிடைத்தாலும், நிறைய பேருக்கு இந்த தனித்துவம் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துவாக நான் உணர்ந்திருக்கிறேன்..சிலர் நேரடியாக சொல்லியும் இருக்கிறார்கள். என்ன நீ சாதிக்கனும்னு நினைக்கிற? வித்தியாசமாக இருக்கிறது சரி ஆனாலும் எல்லாவற்றிலும் வித்தியாசம் அவசியமா? தேவையா.? சாதாரணமாக செய்ய வேண்டிய வேலையை ஏன் இவ்வளவு சிரமம் எடுக்கறன்னு கேட்பவர்கள் நிறைய.. என் கணவரே சொல்லுவார்...ஏண்டி மண்டைய ஒடச்சிக்கறன்னு... ....

தவறா சரியா ? தெரியவில்லை...... நீங்க சொல்லுங்களேன்...

அணில் குட்டி அனிதா:- ஆரம்பிச்சாச்சி நீயூ இயர் அதுவுமா.. இவிங்களும் குழம்பி, அடுத்தவங்களையும் கொழப்பறதுல மன்னி... நான் வரல இந்த விளையாட்டுக்கு... நீங்க கவிக்கு சொல்லுங்க.. சரியா..தவறா....?!!

பீட்டர் தாத்ஸ் :- The greatness of art is not to find what is common but what is unique”