நம் சமுதாயம் மற்றும் குடும்ப அமைப்பு ஒரு ஆணை சார்ந்ததாகவே உள்ளது. ஆண் என்பவர் தான் குடும்ப தலைவர், அவர் குடும்பத்தை காப்பாற்றினாலும் இல்லையென்றாலும் அவர் தான் தலைவர். ஆண் இல்லாத குடும்பத்தில், பெண் தலைவராக இருப்பார்கள். சமீபத்தில் (அந்த சமீபம் இல்ல), நண்பர் ஜார்ஜ் இறப்பிற்கு பின், அவருடைய மனைவி என்னை அழைத்து, அதிகமாக பிரச்சனையில் இருப்பதாகவும், அவரை வந்து பார்க்கும் படியும் அழைத்திருந்தார். சென்ற போது தான் தெரிந்தது ஜார்ஜ் அந்த பெண்ணை எத்தனை பிரச்சனையில் விட்டு சென்றிருக்கிறார் என்பது.

பிரச்சனைகள் என்று அவர் சொல்லியது :-

1. ஜார்ஜ் பெயரில் ரேஷன் கார்டு இல்லை. ரேஷன் கார்டு பொதுவாக முகவரி அத்தாட்சி மற்றும் குடும்ப உறுப்பினர் பற்றிய முழுவிபரங்களின் சான்றுகளுக்காக பயன்படுத்தப்படும். அதை கொண்டு தான் மற்றவை பெற முடியும். குறிப்பாக பாஸ்போர்ட், Bank Account Opening போன்றவற்றிக்கு இதை கேட்பார்கள். இவை இல்லாதவர்கள், கல்வி சான்றிதழ்களை பயன்படுத்தி பெற முடியும். இருந்தாலும் ரேஷன் கார்டிற்கு உள்ள தேவை மற்றவைக்கு கிடையாது.

ஜார்ஜ் பெயரில் ரேஷன் கார்டு இல்லாததால், Legal Heir பிரச்சனையில் அவருடைய அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய Final Settlement Amount கிடைக்கவில்லை. தற்போது தான் புதிய வீடு வாங்கியதால், வேறு எதிலும் அந்த வீட்டின் விலாசம் இல்லாததால், வேறு எந்த டாக்குமென்டையும் பயன்படுத்த முடியாத சூழலில் இருக்கிறார்கள். அவருடைய பாஸ்போர்ட் புதுப்பிக்காமல் விட்டு இருக்கிறார். அதனால் பாஸ்போர்ட் இருந்தும் அதை பயன் படுத்த முடியவில்லை.

2. தனக்கென்று அல்லது மனைவி குழந்தையின் பெயரில் நயா பைசா சேமிப்பு இல்லை. முன்று லட்சம் ரூபாய்க்கு ஒரு எல். ஐ.சி பாலிசி எடுத்து இருக்கிறார். கால் ஆண்டு முதல் தவணை கட்டிவிட்டு, இரண்டாவது தவணையை கட்ட நேரம் இல்லாமல் அந்த ஏஜெண்டிடம் கொடுத்து இருக்கிறார். அந்த புண்ணியவான் கட்டாமல் விட்டுவிட்டார். ஜார்ஜ் இறந்த பிறகு அந்த பணம் வருமென்று நினைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவிக்கு பணம் கட்டாமல் விட்டு இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அது சம்பந்தமாக இன்னமும் அந்த ஏஜெண்டிடம் போராடி கொண்டு இருக்கிறார்களே ஒழிய பணம் வரும் என்ற நம்பிக்கை இல்லை.

3. புது வீடு மாத தவணையில் கடனாக வாங்கியதால் அதற்கும் இவர்கள் இனி தவணையில் பணம் கட்டியாக வேண்டும். அதற்கும் தீவிபத்து, இயற்கை சீற்றம் பாதிப்பு சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் எதுவும் எடுக்கவில்லை.

4. எல்லாவற்றிற்கும் மேல் சிகிரேட் பிடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் சொல்லிய பிறகும் , யாருக்கும் தெரியாமல் சிகிரேட் பிடித்ததே ஜார்ஜ்'ஜின் மரணத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது. 42 வயதில் மரணம் !.

ஆக அவருடைய மனைவி எதை தொட்டாலும் பிரச்சனை என்ற நிலையில் இருக்கிறார். சுத்தமாக அவருக்கு இப்போது வருமானம் இல்லை, படித்திருக்கிறார். வேலைக்கு செல்லலாம் என்றாலும் , ஜார்ஜ் ஜின் திடீர் இழப்பு அவரை வெகுவாக பாதித்துள்ளது. வெளியில் என்னால் செல்லவே முடியாது கவிதா என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். 2ஆம் வகுப்பு படிக்கும் சிறு குழந்தை, அவனுக்கும் நல்ல உடல்நிலை இல்லை. அடிக்கடி வீசிங் தொல்லையால் சிறு வயது முதலே அவதிப்பட்டு கொண்டு இருப்பான். அவனை கவனிக்கவே முழு நேரமும் முன்பு இவருக்கு சரியாக இருக்கும், இப்போது கூடுதலாக ஜார்ஜ் ஜின் பொறுப்புகள் அத்தனையும் இவருக்கு வந்துள்ளது. எப்படி சமாளிக்க போகிறார் என்பதை விட, எளிதாக சமாளிக்க ஜார்ஜ் எதையும் செய்துவிட்டு போகவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.

தயவு செய்து உங்களை நம்பி வரும் பெண்களுக்கு தேவையானவற்றை செய்து வையுங்கள் :-

1. திருமணம் ஆனவுடன், உங்கள் வீட்டிலிருந்து உங்கள் பெயரையும், பெண் வீட்டிலிருந்து அவருடைய பெயரையும் பிரித்து ரேஷன் கார்டு உங்களின் பெயரில் வாங்குங்கள். கூட்டு குடும்பமாக இருந்தாலும் இதை செய்துவிடுவது நல்லது.

2. புதுப்பிக்க வேண்டியவை அணைத்தையும், முன்கூட்டியே தேதி குறித்து வைத்து புதுப்பித்து விடுங்கள். பாஸ்போர்டு, வீடு, வண்டிக்கு எடுத்திருக்கும் இன்சூரன்ஸ் பாலிஸிகள் முதலானவை. கட்ட வேண்டிய வரிகள் ஏதாவது இருப்பின் நேரத்திற்கு கட்டுங்கள்.

3. இது வரையில் இன்சூரன்ஸ் பாலிசி, சேமிப்பு கணக்குகளில் நாமினி பெயர்களில் உங்களது பெற்றோர், உடன் பிறந்தோர் பெயர் இருந்தால், அதனை உடனடியாக மனைவி மற்றும் குழந்தையின் பெயருக்கு மாற்றம் செய்துவிடுங்கள்.

4. இதை தவிர்த்து மனைவிக்கு ஓரளவு வெளிஉலக நடப்புகளை அவ்வப்போது கற்றுக்கொடுத்தும், பழக்கப்படுத்தியும் வையுங்கள். அவர் எதையும் தனியாக செய்யும் திறனை வளர்த்து விடுங்கள்.

மேலும் சில முன்னவே பதிவிட்டு இருக்கிறேன் தயவு செய்து அதையும் படித்து இதுவரையில் யாரும் எதுவும் செய்யாமல் விட்டுவைத்து இருந்தால், உடனே செய்துவிடுங்கள்.

கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்யவேண்டியது..
புகைப்பிடித்தல் பற்றிய பதிவு

அணில் குட்டி அனிதா : ம்ம் அம்மணி சொல்லிட்டாங்க செய்துடுங்க. .அப்புறம் அம்மணி எப்படி வூட்டுக்காரு எவ்வளவு சொல்லி கொடுத்தாலும் மக்காவே இருக்காங்கன்னு கேட்டு எனக்கும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க...

பீட்டர் தாத்ஸ் : The fear of death follows from the fear of life. A man who lives fully is prepared to die at any time. ~Mark Twain