குழந்தைகள் இருக்கும் தம்பதியினர் ரொம்பவே யோசித்து "வேண்டாம்" என்று முடிவெடுப்பது சிறந்தது. நம்மிடையே திருமணபந்தம் என்பது அத்தனை எளிதாக விட்டுவிட்டு வந்துவிட கூடியது அல்ல. அவசர முடிவுகள் தீராத வேதனையையும் வலியையும் இப்போது இருப்பதை விட அதிகமாகவே தரும். அதை அனுபவித்து தெரிந்துக்கொள்வதை விட, புத்திசாலியாக முன் யோசனையோடு நடந்துக்கொள்வது நமக்கும் , நம்மை சார்ந்தவர்களுக்கும் அமைதியையும், நிம்மதியையும் தரும்.
கணவன் மனைவி இருவரில் யாரோ ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ தவறுகள், பிரச்சனைகள் இருக்கலாம், அதை பேசியோ அல்லது பேசாமல் இருந்தோ தீர்த்துக்கொள்ள வேண்டுமே அன்றி விவாகரத்து வரை செல்வது இருவரின் இயலாமையை மட்டுமே காட்டுகிறது. தவறு செய்யாத மனிதன் இல்லை, எப்படிப்பட்ட தவறாக வேண்டுமானாலும் இருக்கட்டும், முதலில் ஒருவர் செய்யும் தவறை கூட தவறு என்று மற்றவரால் முடிவு செய்ய முடியாது. செய்பவர், அதை தவறு என்று எண்ணியிருந்தால் செய்திருக்கவே மாட்டார் என்பது ஒரு புறம் இருக்க, தவறு செய்தவராக சொல்லப்படுபவரும் மற்றவரின் பழக்கவழக்கம், நடத்தை, குணநலன் களால் கூட தவறு செய்திருக்கக்கூடும்.
எந்த ஒரு விஷயத்திற்குமே கால அவகாசம் என்பது ரொம்ப முக்கியம். அதை மற்றவருக்கு கொடுப்பதில் நாம் குறைந்து போவதில்லை. விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை இவற்றை தாண்டி, இந்த வாழ்க்கையை இவரிடம் வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும் என்ற பிடிவாதமும் இருந்துவிட்டாலே போதும் வென்று வந்துவிடுவோம். அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ சவால் களை சந்திக்கிறோம், வெற்றி பெறுகிறோம், வாழ்க்கையில் கூட அப்படி ஒரு சவால் நமக்கு தினமும் இருக்கிறது என்று நினைத்து வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்.
இன்று தவறாக தெரியும் ஒரு விஷயம் நாளை வேறு மாதிரியாக தெரியலாம், அல்லது நல்லதாக தெரிபவை நாளை பிரச்சனைகளை உண்டு பண்ண கூடியதாக இருக்கலாம். நாளை வரும் போது, நேற்றே நன்றாக இருந்ததே என தோன்றும். ஆக, எந்த கட்டத்தில் நாம் இருந்தாலும், சூழ்நிலை கைதி ஆகிவிடாமல் இருப்பது ரொம்பவே முக்கியம். அப்படியே சூழ்நிலை கைதி ஆகி விட்டாலும், ஆகி இருக்கிறோம் என்று அறிவை பயன்படுத்தி உணர்பவராக இருந்துவிட்டால், extreme decisions எதையும் எடுக்காமல் தள்ளியாவது போடுவோம். அமைதிக்காப்போம்.
பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் இடத்தில், முடிவுகளை உடனே எடுக்காமல், கொஞ்சக்காலம் தள்ளி போட்டு வைப்பது தான் நல்லது, மனிதன் மனிதனோடு தான் வாழ்கிறான், மிருகங்களோடு வாழவில்லை, அவை எந்த நேரத்தில் என்ன செய்துவிடும் என்று ஒரு அச்சத்தில் வாழ வேண்டியதில்லையே. அவற்றைக்கூட பழக்கி நம் வழிக்கு கொண்டு வந்துவிட முடியும் என்பதை பார்த்திருக்கிறோம்.. மனிதனை முடியாதா என்ன? முடியாமல் கூட இருக்கட்டுமே, என் வழி இது, உன் வழி அது என்று அவரவர் வழியில் அவரவர் இருந்துவிட முடியும், விவாகரத்து பெற்று தான் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை.
அம்மா அப்பா இல்லாமல் அல்லது இருவரில் ஒருவர் இல்லாமல் வளரும் குழந்தையின் மனநிலை மோசமாக பாதிக்கப்படும். மனதளவில் எந்த அளவு பாதிக்கப்படும் என்பதை ஓரளவு அறிந்தவள் நான். பெற்றோர் இருக்கும் குழந்தைகள் எந்த சந்தர்ப்பத்திலும் இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு தள்ளப்படுவது சரியில்லை. மேலும் உங்களுடைய பிரச்சனைகளால் குழந்தை ஏன் பாதிக்கப்பட வேண்டும். அந்த குழந்தை என்ன செய்தது? ஒன்றும் அறியாத வயதில் ஊர் பேசும் பேச்சிலும், உறவினர்களின் ஏச்சிலும், பரிதாப பார்வைகளாலும் செய்வதறியாது பேச்சற்று போய், தனக்குள்ளே பேசி, தனக்குள்ளேயே அழுது, தனக்குள்ளேயே முடிவுகளை எடுத்து, சமுதாயத்தின் மீது நம்பிக்கை அற்று, யாரை கண்டாலும் அவரின் பார்வை என் மீது எப்படி இருக்கிறது என்ற ஆராய்ந்து........... நீண்டு கொண்டே போகும் பட்டியலுக்கு முடிவு இல்லை.
இந்த பாதிப்பு இத்துடன் முடிந்து விடுவதில்லை, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, திருமணம் முடிந்து, கணவர் அல்லது மனைவி வீட்டில் இதை வைத்து உற்றார் உறவினர் பேசும் பேச்சுகள், சிலர் நேரடியாக வந்தும் கேட்பார்கள், அவர்களுக்கு பதில் சொல்லவே தர்ம சங்கடமாக இருக்கும். இருப்பினும் எதையோ சொல்லி மழுப்பி கெளரவத்தை காப்பற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுவர்.
மனதளவில் குழந்தைகளை பாதிப்புக்குள்ளாக்க, நமக்கு என்ன உரிமை இருக்கு?. அவர்கள் விரும்பி இந்த உலகத்திற்கு வரவில்லை, நம்மால் தான் அவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களை எந்தவிதத்திலும் நாம் பிரச்சனைகளுக்கு உள்ளாக்குவது சரியில்லை. எனக்கு தெரிந்து இதற்கு குழந்தைகளுக்காக தனி சட்டம் கொண்டுவந்தால் கூட சந்தோஷப்படுவேன். அம்மா, அப்பா இருவரிடமும் வளர நினைக்கும் குழந்தைக்காக பெற்றோர் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் சந்தோஷப்படுவேன்.
குழந்தையை பொறுத்தவரை அம்மா, அப்பா இருவருமே தேவையாக இருக்கிறார்கள். அதை பெற்றவர்கள் உணர்ந்துவிட்டாலே போதும். நான் மட்டும் போதும் என்று அம்மாவோ, அப்பாவோ நினைத்தால், அது குழந்தையின் விருப்பமாக இருக்காது, அப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கக்கூடிய முதிர்ச்சி குழந்தைக்கும் இருக்காது.
எங்கள் பக்கத்துவீட்டில் தீடிரென்று பிரச்சனையில் பிரிந்து சென்றுவிட்டார் குழந்தையின் அப்பா. அது விஷயமாக பேச என்னை அந்த பெண் அழைத்த பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர்களின் 4 வயது பெண் குழந்தை நடுவே வந்து "அம்மா எனக்கு அச்சன் வேணும்ம்மா.. அச்சன் நம்மளோடையே இருக்கட்டும் மா.. அச்சன் எப்ப வரும் மா என்று கேட்க... கோபம் தாங்க முடியாமல் , அந்த பெண் அந்த குழந்தையை அடித்து நொறுக்கிவிட்டு சொன்னது, "ஏண்டி உனக்கு எல்லாம் நான் செய்யறேன் , உனக்காக தான் வேலைக்கு போறேன், உன்னை விட்டு ஓடி போன அப்பாவை வேணும்னா கேக்கற.". ன்ற விழந்த அடி இருக்கே.. குழந்தை பாவம் பிரச்சனை தெரியவில்லை, அதற்கு தேவை அப்பா ..அவ்வளவே! அழுதுக்கொண்டு அம்மாவின் மடியில் வந்து பேசாமல் படுத்துக்கொண்டது. குழந்தைக்கே இந்த அடி என்றால், நான் அவரிடம் சேர்ந்து இருங்கள் என்று எப்படி சொல்வது என்று அவர் பேசுவதை கேட்டுவிட்டு வந்துவிட்டேன். :(
ஏன் பெற்றோர் குழந்தையின் இடத்தில் இருந்து அதன் தேவை என்ன என்பதை பார்க்க தவறுகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் பிரச்சனையே அவர்களுக்கு முதன்மையாக தெரிகிறது.
இதை தவிர்த்து, நம் வாழ்க்கையில் மூன்றாம் மனிதர் தலையீடு இருக்கவே கூடாது. இது என் வாழ்க்கை, இதை நான் முடிவு செய்ய வேண்டும் என்று இருவருக்குமே இருக்க வேண்டும், எது சரி, எது தவறு என்று நம் அறிவை கொண்டு யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போதே விவாகரத்து ஒரு முடிவாகாது என்று தெரிந்துவிடும், மூன்றாம் ஒருவரின் தலையீடு இருக்கும் போது அது பிரிவை அதிகப்படுத்தும். அந்த மூன்றாமவர், இருவரின் பெற்றோராக இருக்கலாம், அவர்கள் தன்னை சார்ந்தவர்களுக்கு அந்த நேர பிரச்சனைகளின் சாராம்சத்தை வைத்து முடிவு சொல்லுவார்கள். அடுத்து நண்பர்கள், உறவினர்கள் என்று அவரவருக்கு தெரிந்ததை சொல்லி மேலும் மேலும் நம் மனதை குழப்பியோ பிரச்சனைகளை அதிகப்படுத்தியோ விடுவார்கள் அன்றி குறையாது. அதனால் நம் வாழ்க்கையை பற்றி, நாம் முடிவு செய்ய வேண்டும், அதுவும் யாருடைய influence யையும் நமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு முடிவுகள் எடுக்க க்கூடாது, அப்படிப்பட்ட முடிவுகள் எதிர்காலத்தில், நமக்கே பிரச்சனையாக தான் முடியும். நம்மை நாமே நடுநிலையாக வைத்து யோசித்து முடிவு செய்ய வேண்டும். நாளை நமக்காக பேச யாரும் நம் வாழ்க்கையில் இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து முடிவுகள் எடுப்பது நலம்.
விவாகரத்து வேண்டாமே..!! முடிந்தவரை வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாமே....அப்படியே இல்லை முடியவே முடியாது என்ற ஈகோ அதிகமாக இருந்தால் இப்படி க்கூட சொல்லலாம், கணவருக்கோ, மனைவிக்கோ நாம் வாழ்வளித்தாக நினைத்து பெருமைப்பட்டும் கொள்ளலாம்.
அணில் குட்டி அனிதா : ச்சோஓஓ கடவுளே.. ச்சும்மா இருன்னா எங்க??? சொன்ன பேச்சு கேக்கக்கூடாதுன்னே பொறந்த ஜென்மம் கவியோ?!
பீட்டர்தாத்ஸ் :"The ideal that marriage aims at is that of spiritual union through the physical. The human love that it incarnates is intended to serve as a stepping stone to divine or universal love." - Gandhi
விவாகரத்து தேவையா..?!!
Posted by : கவிதா | Kavitha
on 19:21
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
36 - பார்வையிட்டவர்கள்:
இன்றைய காலகட்டத்திற்கு மிக அவசிய பதிவுங்க...
//மனதளவில் குழந்தைகளை பாதிப்புக்குள்ளாக்க, நமக்கு என்ன உரிமை இருக்கு?. அவர்கள் விரும்பி இந்த உலகத்திற்கு வரவில்லை, நம்மால் தான் அவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களை எந்தவிதத்திலும் நாம் பிரச்சனைகளுக்கு உள்ளாக்குவது சரியில்லை. எனக்கு தெரிந்து இதற்கு குழந்தைகளுக்காக தனி சட்டம் கொண்டுவந்தால் கூட சந்தோஷப்படுவேன். அம்மா, அப்பா இருவரிடமும் வளர நினைக்கும் குழந்தைக்காக பெற்றோர் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் சந்தோஷப்படுவேன்.//
மிக நேர்மையான ஆசைங்க பாராட்டுக்கள்.
நல்ல பதிவு கவிதா! ஆனா இதிலே பலவிஷயத்தை கவனிக்க வேண்டியிருக்கு. சும்மா எடுத்தேன் கவுத்தேன் என்பது வாழ்க்கை இல்லை. இதை புரிந்துகொண்டால் நல்லது.இது சம்மந்தமான ஒரு விஷயம் பின்னர் பகிர்ந்து கொள்கின்றேன். தேவையான பதிவு இன்றைய சூழலில் எல்லோருக்கும்!
விவாகரத்து மட்டுமல்ல, சதா சண்டை போட்டு கொண்டு வாழ்வதும் வேண்டாம் என சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும். பெற்றோர்களின் சச்சரவு குழந்தைகளை கொன்று போடுகிறது. ஆனால் இந்த உலகில் பிரச்சினைகள் மட்டுமே அதிகம் தென்படுகின்றன.
இருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கை அத்தனை எளிதல்ல. அவரவர் முடிவு செய்து கொள்ளட்டும். விவகாரத்து வேண்டுமா, வேண்டாமா என!
நல்ல பதிவு. முடிவு எடுப்பவர்கள் இப்படி எல்லாம் தீர யோசிப்பது இல்லை. விவாகரத்து வரை போவோர்கள் அதை உடனடியாய் செய்வதும் இல்லை. மனதில் ஏற்படும் வடுக்கள் பெரும் ரணங்கள் ஆகிவிடுகின்றன. விவாகரத்து ஆனவர்கள் விவரமாக சொன்னால் தெரியும். விவாகரத்து வாங்கும் மனநிலையில் இருப்போர் எழுதினால்தான் புரியும்.
வாங்க கவிதா..!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நியூஸோட வந்திருக்கீங்க..!
தம்பதிகள் தங்களுடைய ஈகோ மனப்பான்மையை குடும்பத்திற்காக விட்டுக் கொடுத்துத்தான் தீர வேண்டும்..! இதில் தனி மனித உரிமையை நுழைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது..!
குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவாவது விட்டுக் கொடுத்துச் செல்வது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பயனளிக்கும்..!
நல்ல பதிவு! அந்த நேரத்தில் சேர்ந்து இருப்பதை விட பிரிந்து விடுவது என்பது நல்லதாக தோன்றும் அல்லது தோன்ற வைப்பார்கள்.. பின்னர் குறுகிய காலத்தில் சே இப்படி ஆக்கி விட்டோமே என்று நம்மை நாமே நொந்து கொள்ளும் நிலை வந்துவிடும்... மனமாற்றங்களும், வருத்தங்களும் நம்மை விட உலகில் இன்னும் பல்லாயிரம் மடங்கு அதிகமானவர்கள் நிம்மதியாகவே வாழ்கின்றனர் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.
உங்கள் கருத்துகள் ஏற்புடையவை. குழந்தையை முன்னிறுத்தி உங்கள் வாதம் இருப்பதால் வலுவாக இருக்கிறது.
ஆனால், திருமணம் என்ற அமைப்பு அன்பு, பாதுகாப்பு, காதல், பெண்மை, குழந்தைமை, அழகிய இரவுகள் என்று ஒரு பக்கம் ரசனை சார்ந்தது. அதற்கு கோரமான இன்னொரு பக்கமும் இருக்கத்தான் செய்கிறது.
வழக்கம் போல பெரிய பதிவு.... பீட்டர் சூப்பரு ;))
வழக்கம் போல பெரிய பதிவு.... பீட்டர் சூப்பரு ;))
நல்ல பதிவு குழந்தைகளைப்பற்றிய சிந்தனையும் அக்கரையும் இருந்தாலே போதும் பாதி தம்பதியினருக்கு பிறியும் எண்ணமே வராது..
ஒருவரது எல்லா குணங்களும் நமக்குப் பிடிக்காதவையாக இருப்பதில்லை. பிடிக்காதவைகளைப் பற்றி நினைக்கும்போது அவரிடம் நமக்குப் பிடித்திருக்கின்ற அந்த குணங்களையும், அவர்கள் நமக்காகச் செய்த நல்லவைளையும் நினைவுக்கு கொண்டு வந்தால் விவாகரத்து சிந்தனை தள்ளிப் போகும்.
விவாகரத்துகள் அதிகமாகி வரும் இக்கால கட்டத்தில் இடுகை; நற்சிந்தனை.
Very good...Very good post...
I do have some different opinions, but the subject of the post is very admirable...
@ கருணாகரசு - நன்றிங்க.. ஆசை நிறைவேறினா நல்லா இருக்கும். ! :)
@ அபிஅப்பா - வாங்க. :) //இது சம்மந்தமான ஒரு விஷயம் பின்னர் பகிர்ந்து கொள்கின்றேன்.// ம்ம் சரி.. முடியும் போது சொல்லுங்க.. !
@ ராதாகிருஷ்ணன்ஜி,
//விவாகரத்து மட்டுமல்ல, சதா சண்டை போட்டு கொண்டு வாழ்வதும் வேண்டாம் என சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.//
சண்டை வராமல் இருக்காதுங்க, அப்படி வந்தால் தான் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளவே முடியும் சண்டை சீரியஸாக இருக்கும் போது குழந்தைகள் எதிரில் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நன்றாக புரிதலும், நம்பிக்கையும் இருக்கும் இடத்தில் பிரச்சனைகள் தலைதூக்குவது இல்லை. இங்கே விட்டுக்கொடுத்தல் கூட தேவைப்படாது. :)
//பெற்றோர்களின் சச்சரவு குழந்தைகளை கொன்று போடுகிறது.
//
உண்மை.... :(
//ஆனால் இந்த உலகில் பிரச்சினைகள் மட்டுமே அதிகம் தென்படுகின்றன.
//
பிரச்சனை இல்லாது வாழ்க்கை ஏதுங்க..?!!
//இருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கை அத்தனை எளிதல்ல. அவரவர் முடிவு செய்து கொள்ளட்டும். விவகாரத்து வேண்டுமா, வேண்டாமா என!
//
ம்ம்ம்..
எழுத்து என்பது ஒன்று நம் அனுபவத்தை உணர்ந்து எழுதுதல், மற்றொன்று, மற்றவர்களின் அனுபவத்தை நம்முடையதாக நினைத்து, அவர்களின் அத்தனை வலியையும் உள்வாங்கி, அனுபவத்து உணர்ந்து எழுதுவது.
இந்த பதிவில் ஏனோ தானோ என்று ஒரு மூன்றாம் மனிதராக இருந்து எழுதவில்லை. மற்றவர்கள் இடத்தில் இருந்து யோசித்து, அதனுடைய வலியை புரிந்து தான் எழுதி இருக்கிறேன்.
கஷ்டம் என்பது யாருக்கு, எதில் இல்லைன்னு நம்மை சுற்றி பார்த்தால்
நம்முடைய துன்பம் ஒரு தூசியை விட சிறியதாகிவிடும் என்பதே உண்மை.
//விவாகரத்து வரை போவோர்கள் அதை உடனடியாய் செய்வதும் இல்லை. மனதில் ஏற்படும் வடுக்கள் பெரும் ரணங்கள் ஆகிவிடுகின்றன. விவாகரத்து ஆனவர்கள் விவரமாக சொன்னால் தெரியும். விவாகரத்து வாங்கும் மனநிலையில் இருப்போர் எழுதினால்தான் புரியும்.//
ம்ம்ம்.. ரணம் மிகுந்த வாழ்க்கையில் நாம் சந்தோஷப்பட ஒரு சிறு விஷயம் கூடவா இல்லாமல் போயிவிடும்?!!
@ உ.த. - வந்துட்டேன்.. !! :) நன்றி :) குழந்தைகள் முக்கியம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்.
@ தமிழ்பிரியன்
//மனமாற்றங்களும், வருத்தங்களும் நம்மை விட உலகில் இன்னும் பல்லாயிரம் மடங்கு அதிகமானவர்கள் நிம்மதியாகவே வாழ்கின்றனர் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.//
இதையே தான் நானும் வழிமொழிகிறேன். நன்றிங்க.. !
@ ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி...
//அதற்கு கோரமான இன்னொரு பக்கமும் இருக்கத்தான் செய்கிறது.//
இருக்குதான், அதை நல்ல முகமாக மாற்ற அல்லது அப்படியே அதை பழகிக்கொள்ள நாம் ஏன் முயல கூடாது. அதற்கான நேரமும், பொறுமையும், சகிப்பு தன்மையும், வலியை பொறுத்துக்கொள்ள கூடிய மனவலிமையும் இருக்க வேண்டும் :), அது போதும் எதையும் கடந்து வரலாம் :)
@கோபி - :))) அப்பன் முருகனை விடவா பெரிய பதிவா எழுதிட்டேன்.?!!
@ சந்தோஷ் -
//குழந்தைகளைப்பற்றிய சிந்தனையும் அக்கரையும் இருந்தாலே போதும் பாதி தம்பதியினருக்கு பிறியும் எண்ணமே வராது..//
ம்ம்ம்...உண்மை...
பிரச்சனைகள் வரும் போது குழந்தைகள் மீதான சிந்தனையும் அக்கரையும் வேண்டும் என்பதை நமக்கு நாமே தொடர்ந்து வலியுறுத்திக்கொள்ள வேண்டும்.
@சுல்தான்ஜி -நன்றிங்க :)
@ அது சரி : ரொம்ப நன்றிங்க.. உங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்துக்கோங்க.. ஆனா எப்பவும் போல் என்னுடைய கருத்திலிருந்து மாறமாட்டேன்ங்க .. :))
கணவருக்கோ, மனைவிக்கோ நாம் வாழ்வளித்தாக நினைத்து பெருமைப்பட்டும் கொள்ளலாம்//
விளையாட்டுக்கு இல்லை, நிஜமாவே நிறைய பேர் வாழ்க்கை இப்படித்தான் ஓடுது.
@ விஜி - ம்ம்ம்ம்.... வாழ்க்கை ஓடனும்.. அவ்வளவு தான்...பிரிவு முடிவு ஆகாது...
நடுத்தரவர்கம் தான் இப்படி கவலைப்படுவாங்க, கிராமங்களில் வெட்டி விடுவதுன்னு சொல்லுவாங்க எளிமையாக முடிஞ்சுவிடும், குழந்தைகளுக்குன்னு எதிர்கால திட்டமிடல் என்பது பெரிசாக எதுவும் இல்லாததால் அவர்களுக்கு எளிது, பணக்காரவர்க்கத்திலும் இப்படித்தான். எதிர்காலம் பணம்னு எந்த பிரச்சனையும் இருக்காது.
*******
கொடுமைக்காரர்/காரி யாராக இருந்தாலும் சேர்ந்து வாழ்வது தண்டனைதாங்க, குழந்தைகள் என்பதற்காக மன அழுத்தத்தில் சேர்ந்து வாழும் போது பல குடும்பங்களில் தற்கொலைகள் நிகழ்ந்துவிடுகின்றன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டி இருக்கிறது கவிதா.
ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருக்கு கவிதா. ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. ஆனா ஒண்ணா வாழவே பொறுமையில்லாதவங்க, இதையெல்லாமா நாம சொல்லியா கேக்கப் போறாங்க...
//பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் இடத்தில், முடிவுகளை உடனே எடுக்காமல், கொஞ்சக்காலம் தள்ளி போட்டு வைப்பது தான் நல்லது, மனிதன் மனிதனோடு தான் வாழ்கிறான்//
Time heals what reasons cannot
நிறைய நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்கீங்க.
@ கோவி - வருகைக்கு நன்றி.. பஸ் ல பேசியாச்சி.. அதனால..இங்க பதியல.. :))
@ விக்னேஷ்வரி - நன்றிங்க..
@ சின்ன அம்மணி - வாங்க.. எப்படி இருக்கீங்க.. ?!! :)
வெல்கம் பேக் :)
நல்ல பதிவுக்கா
கவிதா,
நானும் முன்பு இதை பற்றி ஒரு கட்டுரை எழுதினேன்.
படித்து பாருங்கள்.
http://www.iniyavan.com/2009/06/blog-post_30.html
// விவாகரத்து தேவையா..?!! //
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காம வாழ்வதும்,
ஒருவரை ஒருவர் விட்டுட்டு வாழ்வதும் சரியல்ல!..
இன்று இதை சொல்ல எனக்கு என்ன தகுதியிருக்குன்னு தெரியலை
அதேவேளை
புகைப்பதினால் ஏற்படும் தீமைகளை பற்றி ஒரு மருத்துவர் ஆலோசனை சொல்வதைவிட புகைப்பழக்கத்தினால் நேரிடையாக பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி தன் வலிகளை சொல்லும்போது பிறருக்கு எளிதில் சென்றடைந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்னு நம்புகிறேன்!
அது போல என்னை ஒரு நோயாளியா நினைத்துதான் என் மனதில் பட்டதை சொன்னேன்
@ ஆதவன்.. : டாங்ஸ்ஸூ... :)
@ உலகநாதன்ஜி : கண்டிப்பா படிக்கிறேன் நன்றி.. :)
சரவணன் உங்களுடைய பின்னூட்டம் எனக்கு ரொம்பவே வருத்தம் அளிக்குது.
இருந்தாலும் தேவையான ஒன்று.
//ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காம வாழ்வதும்,
ஒருவரை ஒருவர் விட்டுட்டு வாழ்வதும் சரியல்ல!....//
சரியாக சொல்லி இருக்கீங்க..
//இன்று இதை சொல்ல எனக்கு என்ன தகுதியிருக்குன்னு தெரியலை//
உணர்ந்து சொல்லுவதால் உங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு...
உங்களுக்கு இருக்கும் மனகுறைகள் அத்தனையும் விலகி வாழ்க வளமுடன் !!
நல்லதொரு பார்வைங்க
இருப்பினும் கட்டாயமாக்க இயலாது சில சந்தர்ப்பங்களில் அது மிகவும் தேவையாக அமைந்து விடுகின்றது.
முடிந்த அளவு தவிர்ந்து கொள்வது மிக்க நலமே, அதுவும் ஈகோவுக்காக பிரிதல் ...
”அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவன் விரும்பாத ஒன்று விவாகரத்து”
வில்லி வந்துட்டங்க :) ... யாருமே இன்னொரு பக்கம் தைரியமா பேசாததால, நாம சும்மா கொஞ்சம் சொல்லலாம்முன்னுட்டு வந்தன்! :)
விவாகரத்துக்கு அப்புறம் மறுமணம் பண்றவங்க திருமணம் பற்றி என்ன நினைப்பாங்கன்னு நினைக்கிறீங்க? :))) ...
எங்க அண்ணன் கேட்டப்போ என்னக்கு புன்னகை தான் வந்தது. அக்கறையில் வந்த கேள்வி, பதில் எளிதல்ல! :)
அன்பின் ஒரு வகையிலும் விவாகம் ரத்தாகலாம்.
அன்பின் மறு நிலைகளில் மறுமணங்கள் இனிக்கலாம்.
அப்படின்னா இன்னொரு கல்யாணம் பண்ணப்போறியான்னு யாராவது என்ன இப்ப கேட்டா, என்ன பண்ணலாம்? புன்னகைக்கலாம். கேள்வி எப்பவுமே நல்லது - உண்மையை காட்டும் - பதில்கள் உண்மையை காட்டும் விதம் கடவுளை கற்சிலையில காட்டுற மாதிரி! :)
ஹே மது.. எப்படி இங்க.. உங்களை பாத்தவுடனே "ஓ பெண்ணே" ன்னு பாட்டு பாடனும் போல இருக்கு...
என்ன வேணும்னாலும் கமண்டு போட்டுக்கோங்க.. கவலையே இல்ல.. ! :)))
அப்புறம் இப்பத்தான் ப்ரொஃபைல் பார்த்தேன்... ஏன் இரண்டு ப்ளாக் இருக்குன்னு என்கிட்ட சொல்லல்ல...ம்ம்ம்ம்ம்ம்?!! :(
குட்டீஸ் சூப்பர்.. !! என்னுடைய முத்தங்களும் வாழ்த்துக்களும்....
குட்டீஸ் பாக்கனும் சென்னையை கடந்து போகும் வாய்ப்புக்கள் வரும் போது சொல்லவும்...
மது.. தமிழ் லையும் எழுதுங்களேன்... உங்க தமிழை படிச்சி ரொம்ப நாளாச்சி.... நிஜமா நீங்க எழுதறதுல எனக்கு பாதி புரியாது.. ஆனா திருப்பி திருப்பி படிச்சி புரிஞ்சிக்க ட்ரை பண்ணுவேன்... உங்க தமிழ் ஒரு மாதிரி வித்தியாசமா அழகா இனிமையா இருக்கும் :)
காத்திருக்கிறேன்... ...சரியா...
//அன்பின் ஒரு வகையிலும் விவாகம் ரத்தாகலாம்.
அன்பின் மறு நிலைகளில் மறுமணங்கள் இனிக்கலாம்.//
வாழ்க்கையை ஆய்வாக்குள்ளாக்க விரும்புபவர்கள் செய்யலாம், அதற்கான கால அவகாசம், வயது, சரியான மறு நிலை, நிதானம் எல்லாமே கூடி வரனும் தானே...
பலருக்கு ஒன்றே பல ஆய்வுகளை செய்த பலனை கொடுத்துவிடுகிறது :)
”அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவன் விரும்பாத ஒன்று விவாகரத்து”
ஜம்ஸ் தகவலுக்கு நன்றி...
கவிதா, அன்பான பதில் பார்த்து உண்மையான ஆனந்தம்! இந்த முறை வந்து திரும்பியாச்சு - அடுத்தமுறை கட்டாயம் கான்டக்ட் பண்ண ட்ரை பண்றேன்! :)
//
கோவி.கண்ணன் said...
நடுத்தரவர்கம் தான் இப்படி கவலைப்படுவாங்க, கிராமங்களில் வெட்டி விடுவதுன்னு சொல்லுவாங்க எளிமையாக முடிஞ்சுவிடும், குழந்தைகளுக்குன்னு எதிர்கால திட்டமிடல் என்பது பெரிசாக எதுவும் இல்லாததால் அவர்களுக்கு எளிது, பணக்காரவர்க்கத்திலும் இப்படித்தான். எதிர்காலம் பணம்னு எந்த பிரச்சனையும் இருக்காது.
*******
கொடுமைக்காரர்/காரி யாராக இருந்தாலும் சேர்ந்து வாழ்வது தண்டனைதாங்க, குழந்தைகள் என்பதற்காக மன அழுத்தத்தில் சேர்ந்து வாழும் போது பல குடும்பங்களில் தற்கொலைகள் நிகழ்ந்துவிடுகின்றன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டி இருக்கிறது கவிதா.
July 20, 2010 12:20 PM
//
இது பற்றி ஒரு தனி இடுகையே போடுமளவுக்கு சொல்லலாம் என்றாலும் நான் நினைப்பதை கோவி.கண்ணன் சுருக்கமாக சொல்லி விட்டார் :))
Post a Comment