கோவி.கண்ணன் :
ஆகா........கெளம்பிட்டாய்ங்க......
நட்பு என்பது உப்பு போல இருக்கனும், உணவில் உப்பு எப்படியோ மனித உறவில் நட்பும் அப்படித்தான், மிகுதியானாலோ (மிகுந்த உரிமை எடுத்துக் கொள்வது), குறைவானலோ (பெயரளவுக்கு இருந்தாலோ) சுவைக்காது. எல்லாம் சரியான அளவோடு இருக்கனும். அளவுக்கு மிஞ்சினால் நட்பும் உப்பும் உவர்ப்பு தான். உப்பில்லாத உணவு பத்தியம், சிலருக்கு உடல் கோளாறினால் பத்தியம் தேவைப்படும், மன அளவில் பிறரிடம் நெருங்கிப் பழகும் தகுதி இல்லாவர்கள் நட்பின் பங்களிப்பு பற்றி கவலைப்படுவதில்லை, அவர்களுக்கு தேவைப்படுவதும் இல்லை.

தமிழரசி :
சுயநலம் போட்டி பொறமை என எந்த தீவினை பயக்காத உறவை தருவதே நட்பு ..எதிர்பார்ப்பு எதுவும் இன்றி விட்டு கொடுத்து நீ நான் என இல்லாமல் நாம் என சொல்லும் அன்பே நட்பு . களங்கம் கற்பிக்காத கட்டுக்குள் அடங்காத ஆழ்மனம் சுமக்கும் அர்த்தமான உறவு நட்பு. சோகம் தாங்கி சுமை குறைத்து தாயாய் மாறி தன்னலம் மறந்து தலை கோதி நலம் மட்டும் தந்து நான் இருக்கேன் என சொல்லும் அன்பே நட்பு.கண்கள் கண்டதும் வரும் காதல் போலத்தான்..எந்த பரிந்துரைக்கும் பற்றாக்குறைக்கும் விலை போகா விவேகம் நட்பு .இதை கொண்டாட நாள் ஒன்று போதாது நல்ல மனம் மட்டுமே இதன் வித்து .நல்ல விதைகளையே நடுவோம் நல்ல நட்பையே வளர்ப்போம்.....நீர் ஊற்றி அல்ல நல்ல எண்ணம் சாற்றி. அர்த்தம் சொல்லும் அதனை பொருளும் நட்பு என்னும் நற்சொல் அறியும்

.உன்னை கண்டதும் நான் கொண்டது நட்பே பெண்ணே ..
நட்புடன் ஜமால்
நட்பு என்பது வார்த்தையல்ல வாழ்க்கை
--------------------------------------
நட்பு ஒரு கண்ணாடி போன்றது, முகத்தில் இருக்கும் அழுக்கை மறைக்காமல் காட்டும் கண்ணாடி போன்று நண்பன் தவறு செய்தாலும் சுட்டி காட்டுவது நட்பு.
-------------------------------------
Friendship is not a word but a worLd with Love

சித்தார்த் & காயத்திரி
நட்பும் நட்பு சார்ந்த பிரதேசங்களும்
எப்பொழுதும்
அடர்பச்சை நிறத்தில் செழித்திருக்கும்
என்று சொல்வதற்கில்லை.
அங்கும் மழை பொய்ப்பதுண்டு.
வறட்சி வருவதுண்டு.
தாவரங்களின் நீர்மையை
காற்றின் கொடுங்கரங்கள் உருவியெடுக்க
நிலமெங்கும் பழுப்பு பரவுவதுண்டு.

இத்தனைக்குப் பிறகும்
ஒரு துளி நீருக்கான காத்திருப்பை
விடாமல் இந்நிலம் நிகழ்த்திக்கொண்டிருப்பதால்
இது ஒருபோதும் பாலையாவதில்லை

- வெ. சித்தார்த்

******************

நம் நண்பர்கள் 2006 ல் நட்பு பற்றி சொன்னவை...

எஸ்.பாலபாரதி

அம்மா- தொப்புள்கொடி கொடுக்கும் உறவு. அப்பா- உயிர் கொடுத்த உறவு. உடன் பிறப்புகள்- ஒரே ரத்தம் என்பதால் வரும் உறவு. மனைவி- காமத்தின் அடித்தளம் அமைந்த உறவு. நட்பு--- எங்கோ பிறந்து, எங்கோவளர்ந்து, எந்த ரத்த உறவுமில்லாமல்.. அன்பு செலுத்துகிற உறவு. சுருக்கமாகச் சொன்னால்.... எங்கொல்லாம் ஒரு மனம் காயப்படும் போது..
அதற்கு ஆதரவாய் இன்னொரு மனம் குரலெழுப்புகிறதோ..
அங்கே இருக்கிறது நட்பு.

பொன்ஸ்

நண்பர்கள் என்பவர்கள் ஆற்றின் கரை மாதிரி. நம் கருத்துகளில், செயல்களில், அதிகம் ஊடுறுவக் கூடாது. அந்தக் கருத்துகளைச் செதுக்குவதற்கு உதவலாம் ஆனால், கட்டாயப் படுத்தும் அன்போ, நட்போ நிச்சயம் போகப் போகக் கசப்பைத் தரும்.


ஜொள்ஸ்

நட்பு எனக்கு மிகவும் பிடித்த பூ !
---------------------------------------
உன்னை என் நண்பர்களுக்கும் என்னை உன் நண்பர்களுக்கும் பிடிக்காவிட்டாலும் நம்மை பிடித்துவிட்டது நட்புக்கு!
------------------------------------------
உன்னைக் கொடுத்தால்தான்
என்னைக் கொடுப்பேன் என்ற பேராசையெல்லாம்
காதலைப்போல் நட்பிற்கு இல்லை !

சீனு

இந்த உலகில் உள்ள எந்த ஒரு உறவும், ஏதோ ஒரு எதிர்ப்பார்புடனோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ உண்டாவது. கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இருப்பது திருமணம் தாய் பிள்ளையை நேசிப்பது, தன் பிள்ளை என்பதால் தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையில் இருப்பது கட்சி என்னும் பந்தம். ஆனால், எதையும் எதிர்ப்பார்க்காமல் வெறும் நேசத்தை மட்டுமே கொண்டுள்ளது நட்பு மட்டுமே. காரணம், நண்பர்கள் பெரும்பாலும் ஒரே வயது உள்ளவர்கள். அதனால் ஒரே wavelength இருக்கும். இதுவே,மிக முக்கியமான காரணம், அங்கே எதிர்காலத்தினைப் பற்றின பயம் சுத்தமாக இருக்காது. அதனால், கவலைகள் இல்லை. Hostel Life வாழ்ந்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

* Photos - Mumbai - Marine Drive Beach

நட்பு இன்னும்....தொடரும்.... :)