குழந்தைகள் இருக்கும் தம்பதியினர் ரொம்பவே யோசித்து "வேண்டாம்" என்று முடிவெடுப்பது சிறந்தது. நம்மிடையே திருமணபந்தம் என்பது அத்தனை எளிதாக விட்டுவிட்டு வந்துவிட கூடியது அல்ல. அவசர முடிவுகள் தீராத வேதனையையும் வலியையும் இப்போது இருப்பதை விட அதிகமாகவே தரும். அதை அனுபவித்து தெரிந்துக்கொள்வதை விட, புத்திசாலியாக முன் யோசனையோடு நடந்துக்கொள்வது நமக்கும் , நம்மை சார்ந்தவர்களுக்கும் அமைதியையும், நிம்மதியையும் தரும்.

கணவன் மனைவி இருவரில் யாரோ ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ தவறுகள், பிரச்சனைகள் இருக்கலாம், அதை பேசியோ அல்லது பேசாமல் இருந்தோ தீர்த்துக்கொள்ள வேண்டுமே அன்றி விவாகரத்து வரை செல்வது இருவரின் இயலாமையை மட்டுமே காட்டுகிறது. தவறு செய்யாத மனிதன் இல்லை, எப்படிப்பட்ட தவறாக வேண்டுமானாலும் இருக்கட்டும், முதலில் ஒருவர் செய்யும் தவறை கூட தவறு என்று மற்றவரால் முடிவு செய்ய முடியாது. செய்பவர், அதை தவறு என்று எண்ணியிருந்தால் செய்திருக்கவே மாட்டார் என்பது ஒரு புறம் இருக்க, தவறு செய்தவராக சொல்லப்படுபவரும் மற்றவரின் பழக்கவழக்கம், நடத்தை, குணநலன் களால் கூட தவறு செய்திருக்கக்கூடும்.

எந்த ஒரு விஷயத்திற்குமே கால அவகாசம் என்பது ரொம்ப முக்கியம். அதை மற்றவருக்கு கொடுப்பதில் நாம் குறைந்து போவதில்லை. விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை இவற்றை தாண்டி, இந்த வாழ்க்கையை இவரிடம் வாழ்ந்துதான் தீர்க்க வேண்டும் என்ற பிடிவாதமும் இருந்துவிட்டாலே போதும் வென்று வந்துவிடுவோம். அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ சவால் களை சந்திக்கிறோம், வெற்றி பெறுகிறோம், வாழ்க்கையில் கூட அப்படி ஒரு சவால் நமக்கு தினமும் இருக்கிறது என்று நினைத்து வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்.

இன்று தவறாக தெரியும் ஒரு விஷயம் நாளை வேறு மாதிரியாக தெரியலாம், அல்லது நல்லதாக தெரிபவை நாளை பிரச்சனைகளை உண்டு பண்ண கூடியதாக இருக்கலாம். நாளை வரும் போது, நேற்றே நன்றாக இருந்ததே என தோன்றும். ஆக, எந்த கட்டத்தில் நாம் இருந்தாலும், சூழ்நிலை கைதி ஆகிவிடாமல் இருப்பது ரொம்பவே முக்கியம். அப்படியே சூழ்நிலை கைதி ஆகி விட்டாலும், ஆகி இருக்கிறோம் என்று அறிவை பயன்படுத்தி உணர்பவராக இருந்துவிட்டால், extreme decisions எதையும் எடுக்காமல் தள்ளியாவது போடுவோம். அமைதிக்காப்போம்.

பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் இடத்தில், முடிவுகளை உடனே எடுக்காமல், கொஞ்சக்காலம் தள்ளி போட்டு வைப்பது தான் நல்லது, மனிதன் மனிதனோடு தான் வாழ்கிறான், மிருகங்களோடு வாழவில்லை, அவை எந்த நேரத்தில் என்ன செய்துவிடும் என்று ஒரு அச்சத்தில் வாழ வேண்டியதில்லையே. அவற்றைக்கூட பழக்கி நம் வழிக்கு கொண்டு வந்துவிட முடியும் என்பதை பார்த்திருக்கிறோம்.. மனிதனை முடியாதா என்ன? முடியாமல் கூட இருக்கட்டுமே, என் வழி இது, உன் வழி அது என்று அவரவர் வழியில் அவரவர் இருந்துவிட முடியும், விவாகரத்து பெற்று தான் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை.

அம்மா அப்பா இல்லாமல் அல்லது இருவரில் ஒருவர் இல்லாமல் வளரும் குழந்தையின் மனநிலை மோசமாக பாதிக்கப்படும். மனதளவில் எந்த அளவு பாதிக்கப்படும் என்பதை ஓரளவு அறிந்தவள் நான். பெற்றோர் இருக்கும் குழந்தைகள் எந்த சந்தர்ப்பத்திலும் இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு தள்ளப்படுவது சரியில்லை. மேலும் உங்களுடைய பிரச்சனைகளால் குழந்தை ஏன் பாதிக்கப்பட வேண்டும். அந்த குழந்தை என்ன செய்தது? ஒன்றும் அறியாத வயதில் ஊர் பேசும் பேச்சிலும், உறவினர்களின் ஏச்சிலும், பரிதாப பார்வைகளாலும் செய்வதறியாது பேச்சற்று போய், தனக்குள்ளே பேசி, தனக்குள்ளேயே அழுது, தனக்குள்ளேயே முடிவுகளை எடுத்து, சமுதாயத்தின் மீது நம்பிக்கை அற்று, யாரை கண்டாலும் அவரின் பார்வை என் மீது எப்படி இருக்கிறது என்ற ஆராய்ந்து........... நீண்டு கொண்டே போகும் பட்டியலுக்கு முடிவு இல்லை.

இந்த பாதிப்பு இத்துடன் முடிந்து விடுவதில்லை, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, திருமணம் முடிந்து, கணவர் அல்லது மனைவி வீட்டில் இதை வைத்து உற்றார் உறவினர் பேசும் பேச்சுகள், சிலர் நேரடியாக வந்தும் கேட்பார்கள், அவர்களுக்கு பதில் சொல்லவே தர்ம சங்கடமாக இருக்கும். இருப்பினும் எதையோ சொல்லி மழுப்பி கெளரவத்தை காப்பற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுவர்.

மனதளவில் குழந்தைகளை பாதிப்புக்குள்ளாக்க, நமக்கு என்ன உரிமை இருக்கு?. அவர்கள் விரும்பி இந்த உலகத்திற்கு வரவில்லை, நம்மால் தான் அவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களை எந்தவிதத்திலும் நாம் பிரச்சனைகளுக்கு உள்ளாக்குவது சரியில்லை. எனக்கு தெரிந்து இதற்கு குழந்தைகளுக்காக தனி சட்டம் கொண்டுவந்தால் கூட சந்தோஷப்படுவேன். அம்மா, அப்பா இருவரிடமும் வளர நினைக்கும் குழந்தைக்காக பெற்றோர் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் சந்தோஷப்படுவேன்.

குழந்தையை பொறுத்தவரை அம்மா, அப்பா இருவருமே தேவையாக இருக்கிறார்கள். அதை பெற்றவர்கள் உணர்ந்துவிட்டாலே போதும். நான் மட்டும் போதும் என்று அம்மாவோ, அப்பாவோ நினைத்தால், அது குழந்தையின் விருப்பமாக இருக்காது, அப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கக்கூடிய முதிர்ச்சி குழந்தைக்கும் இருக்காது.

எங்கள் பக்கத்துவீட்டில் தீடிரென்று பிரச்சனையில் பிரிந்து சென்றுவிட்டார் குழந்தையின் அப்பா. அது விஷயமாக பேச என்னை அந்த பெண் அழைத்த பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர்களின் 4 வயது பெண் குழந்தை நடுவே வந்து "அம்மா எனக்கு அச்சன் வேணும்ம்மா.. அச்சன் நம்மளோடையே இருக்கட்டும் மா.. அச்சன் எப்ப வரும் மா என்று கேட்க... கோபம் தாங்க முடியாமல் , அந்த பெண் அந்த குழந்தையை அடித்து நொறுக்கிவிட்டு சொன்னது, "ஏண்டி உனக்கு எல்லாம் நான் செய்யறேன் , உனக்காக தான் வேலைக்கு போறேன், உன்னை விட்டு ஓடி போன அப்பாவை வேணும்னா கேக்கற.". ன்ற விழந்த அடி இருக்கே.. குழந்தை பாவம் பிரச்சனை தெரியவில்லை, அதற்கு தேவை அப்பா ..அவ்வளவே! அழுதுக்கொண்டு அம்மாவின் மடியில் வந்து பேசாமல் படுத்துக்கொண்டது. குழந்தைக்கே இந்த அடி என்றால், நான் அவரிடம் சேர்ந்து இருங்கள் என்று எப்படி சொல்வது என்று அவர் பேசுவதை கேட்டுவிட்டு வந்துவிட்டேன். :(

ஏன் பெற்றோர் குழந்தையின் இடத்தில் இருந்து அதன் தேவை என்ன என்பதை பார்க்க தவறுகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் பிரச்சனையே அவர்களுக்கு முதன்மையாக தெரிகிறது.

இதை தவிர்த்து, நம் வாழ்க்கையில் மூன்றாம் மனிதர் தலையீடு இருக்கவே கூடாது. இது என் வாழ்க்கை, இதை நான் முடிவு செய்ய வேண்டும் என்று இருவருக்குமே இருக்க வேண்டும், எது சரி, எது தவறு என்று நம் அறிவை கொண்டு யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போதே விவாகரத்து ஒரு முடிவாகாது என்று தெரிந்துவிடும், மூன்றாம் ஒருவரின் தலையீடு இருக்கும் போது அது பிரிவை அதிகப்படுத்தும். அந்த மூன்றாமவர், இருவரின் பெற்றோராக இருக்கலாம், அவர்கள் தன்னை சார்ந்தவர்களுக்கு அந்த நேர பிரச்சனைகளின் சாராம்சத்தை வைத்து முடிவு சொல்லுவார்கள். அடுத்து நண்பர்கள், உறவினர்கள் என்று அவரவருக்கு தெரிந்ததை சொல்லி மேலும் மேலும் நம் மனதை குழப்பியோ பிரச்சனைகளை அதிகப்படுத்தியோ விடுவார்கள் அன்றி குறையாது. அதனால் நம் வாழ்க்கையை பற்றி, நாம் முடிவு செய்ய வேண்டும், அதுவும் யாருடைய influence யையும் நமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு முடிவுகள் எடுக்க க்கூடாது, அப்படிப்பட்ட முடிவுகள் எதிர்காலத்தில், நமக்கே பிரச்சனையாக தான் முடியும். நம்மை நாமே நடுநிலையாக வைத்து யோசித்து முடிவு செய்ய வேண்டும். நாளை நமக்காக பேச யாரும் நம் வாழ்க்கையில் இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து முடிவுகள் எடுப்பது நலம்.

விவாகரத்து வேண்டாமே..!! முடிந்தவரை வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாமே....அப்படியே இல்லை முடியவே முடியாது என்ற ஈகோ அதிகமாக இருந்தால் இப்படி க்கூட சொல்லலாம், கணவருக்கோ, மனைவிக்கோ நாம் வாழ்வளித்தாக நினைத்து பெருமைப்பட்டும் கொள்ளலாம்.

அணில் குட்டி அனிதா : ச்சோஓஓ கடவுளே.. ச்சும்மா இருன்னா எங்க??? சொன்ன பேச்சு கேக்கக்கூடாதுன்னே பொறந்த ஜென்மம் கவியோ?!

பீட்டர்தாத்ஸ் :"The ideal that marriage aims at is that of spiritual union through the physical. The human love that it incarnates is intended to serve as a stepping stone to divine or universal love." - Gandhi