திருமணம் நிச்சயம் செய்வதற்கு முன் மாப்பிள்ளை வீட்டாரின் பழக்கவழக்கங்கள் என்னென்ன என்று நன்றாக தெரிந்து கொண்டு திருமண ஏற்பாடுகளை செய்வது நல்லது. பொதுவாக குல தெய்வம் என்று ஒன்று இருக்கும். இது ஒவ்வொரு வீட்டுக்கும் மாறுபடும். அதனால் ஏற்படும் பழக்கவழக்கங்களும் மாறுபடும். பெண்கள் (என்னையும் சேர்த்துதான்) இயல்பாகவே புகுந்த வீட்டு பழக்க வழக்கங்களை தன்னுடையதாக்கி கொண்டு தன் வீடு, தன் மக்கள், தன் கடவுள் என்று மாறிவிடுகிறார்கள். கடவுள் என்று வரும்போது, சைவம்-சிவன்(பட்டை), வைணவம்-விஷ்னு(நாமம்) என்று இரண்டும் எப்போதும் திருமணங்களில் கலந்து விடுவதுண்டு. எங்களுது வீட்டில் இப்படி நிறைய திருமணங்கள் நடந்திருக்கிறது. என்னுடைய அத்தை-சைவம் மாமா-வைணவம் இதனால் பழக்கவழக்கங்களில் நிறைய பிரச்சனைகள். அத்தை, மாமா வீட்டிலுள்ளவாறு தான் எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் மாமா சிவன் கோயிலுக்கு போகக்கூடாது என்பார். அவருக்கு பிடிப்பதில்லை. குழந்தைகள் பெயர் உட்பட எதிலும் சிவன் (கடவுள்) வந்துவிடக்கூடாது.

சரி, மாமியாரை மொட்டை அடித்த மருமகள் கதைக்கு வருவோம். திருமணம் முடிந்து, குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது, குழந்தையின் அம்மாவும் மொட்டை அடித்து கொள்ளவேண்டும் என்பது தான் அந்த மாப்பிள்ளை வீட்டு வழக்கம். இதை திருமணத்திற்கு முன்பு அவர்கள் பெண் வீட்டாரிடம் சொல்லவில்லை. குழந்தை வயிற்றில் இருக்கும் போது தான் இந்த மொட்டை விஷயம் அந்த பென்ணிற்கு தெரிய வந்தது. இந்த பெண்ணிற்கோ மிகவும் சிறிய வயது.. யாருமே தலை வாரிவிட பயப்படும் (இறுக்கி பிடித்து சீவி விட முடியாது) அளவிற்கு கருகருவென்று மிகவும் அடர்த்தியான கூந்தல்.. இந்த பெண்ணிற்கோ அந்த வயதில் தன் தலை முடியை இழக்க மனமில்லை, மொட்டை அடித்து கொள்ள மிகவும் வெட்கமாகவும், வேதனையாகவும் இருந்தது..

என்ன செய்வது, மாமியார் வீட்டில் இதற்கு முன் திருமணம் ஆன அத்தனை பெண்களும் மொட்டை அடித்து இருந்தனர், தப்பிக்க வழியில்லை. தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் பழக்கவழக்கத்தை எப்படி இந்த சின்ன பெண்ணால் தடுத்து மாற்றமுடியும் பெண்ணின் கணவரும், தன் வீட்டு வழக்கப்படிதான் எல்லாம் செய்ய நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மாமியாரை எதிர்த்து கொள்ளவும் இஷ்டமில்லை. என்னசெய்வது என்ற ரொம்ப நாள் யோசித்த அந்த பெண், குழந்தைக்கு மொட்டை அடிப்பதற்கு முன், அதே குல தெய்வத்திடம், எனக்கு பதிலாக, என் மாமியார் மொட்டை அடித்து கொள்வார், நான் உனக்கு பூ முடி கொடுக்கிறேன் என வேண்டிக்கொண்டு, அதை நாசுக்காக மாமியாரிடமும் சொல்லிவிட்டாள். மாமியாரும் என்ன செய்வது என்று தெரியாமல் தெய்வகுத்தம் ஆகிவிடுமோ என்று பயந்து மொட்டை அடித்து கொண்டார்கள். இந்த பெண் பூ முடி மட்டும் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டாள். வீட்டில் உள்ள அனைவருமே என்ன செய்வது என்று தெரியாமல், பிரச்சனையும் வளர்த்த முடியாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.

அந்த பெண் வேறு யாரும் இல்லைங்க..நான் தான்...என் மாமியாருக்கு, நான் நல்லபடியாக மொட்டையடித்து வைத்தேன். எனக்கு நம்பிக்கை இல்லாத பல விஷயங்களில் இதுவும் ஒன்று, வேற வழியே தெரியாமல் மாமியாருக்கு மொட்டை அடிக்க வேண்டியாதாயிற்று..

அணில் குட்டி அணிதா:- கேளுங்கம்மா..கேளுங்கய்யா இந்த அக்கறமத்த.. அம்மணி எவ்வளோ மோசமான ஆள்ன்னு இப்பவாவது புரிஞ்சிகோங்க.. .மாமியாருக்கே மொட்டை போட்டுட்டாங்களே.. அப்ப நாம எல்லாம் என்ன கதி..? அம்மணிக்கு போன பதிவுல சப்போர்ட் பண்ண அத்தன பேரும் தயவுசெய்து அத வாபஸ் வாங்குங்க.. இல்லைனா..மாமியார் மொட்டை உங்களுக்குதான்..... சொல்லிட்டேன்.. ம்ம் இனிமே நானுமே உஷாரா வாலை சுருட்டி வச்சிக்கணும், ராமருக்கு வேண்டிக்கிட்டேன்னு, என் வாலை கட்பண்ணி பிரஷ் பண்ணாலும் பண்ணிடுவாங்க......... (குட்டி குட்டி பெயிண்டிங் பிரஷ் எல்லாம் நம்ம வால்ல பண்றதாதான் கேள்வி, உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?)

பீட்டர் தாத்தா :- Many receive advice, only the wise profit from it.