குறிப்பு:- அணில் குட்டியை யாருமே ஆறு விளையாட்டுக்கு அழைக்கவில்லை, என்னை மட்டும் அழைச்சிருக்காங்க. அதனால் முன்பை போல என்னை அழைக்கவில்லை என்று ஆட்டம் போடுமோ என்று பயந்து, அணிலுடன் ஆலோசனை செய்து அது விருப்பத்திற்கு இணங்க, அணிலோட language ல இந்த பதிப்பை எழுதியுள்ளேன்.

ஆறு விளையாட்டுக்கு, என்னை எங்க வீட்டில எப்படியெல்லாம் நல்லவிதமா அவங்களால முடிஞ்ச அளவிற்கு கவனிச்சிருக்காங்கன்னு சொல்றேன். ரொம்ப வருஷமா துக்கத்தை மனசுலியே வச்சிருக்கேன். உங்ககிட்ட சொல்லும் போது துக்கம் தொண்டைய விட்டு இறங்கி வந்துடும் இல்லையா?.. சாதாரணமா பெண் குழந்தைகளை வீட்டுல அடிக்க மாட்டாங்க. அதுவும் நான் குலவிளக்கு, புரியலயா..என் அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர், இருவருக்கும் பெண் குழந்தை இல்லை. அதனால் நான் தான் எங்கள் வீட்டு குலவிளக்கு. ஆனா எங்க வீட்டுல அதிகமா கவனிக்க பட்டதும் நான் தான். அதுவும் உங்க வீட்டு கவனிப்பு, எங்க வீட்டு கவனிப்பு இல்லைங்க, இப்படி பதிவு போடற அளவுக்கு கவனிச்சிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க.

எங்க வீட்டுல என்னை நன்றாக கவனித்தவர்கள், என் ஆயா(பாட்டி), தாத்தா, அப்பா, உடன் பிறந்த அண்ணன்கள் இருவர் (பெரிய அண்ணன், சின்ன அண்ணன்), கடைசியா என் பையன். பையன் கூட விளையாடிடான்னு ஆச்சிரிய படாதீங்க, பொறுமையா படிங்க..

1. ஆயா (இது ரொம்ப special.) பொதுவாக எங்களது வீட்டில் கட்டுபாடு அதிகம், வெளி ஆட்கள் வரும் போது, அவர்களை “வாங்க” என்று சொல்லிவிட்டு, முன் நிற்காமல் உள்ளே சென்று விட வேண்டும். அவர்கள் திரும்பி செல்லும் வரை வெளியில் வரக்கூடாது. 12 வயது இருக்கும், யாரோ தெரிந்தவர்கள் வந்திருந்தார்கள், நான் வெளியில் ஈசி சேரில் சாய்ந்து படுத்து கொண்டு கதை புத்தகம் படித்து கொண்டு இருந்தேன். வந்தவர்களை கவனிக்கவே இல்லை..என் ஆயா வெளியில் வந்தவர்கள் என்னை பார்த்து, வந்தவங்கள வா’ ன்னு சொன்னியான்னு கேட்டாங்க.. நான் கதை படிக்கற ஆர்வத்துல சீட்ட விட்டு எழாமல்,(மரியாதை இல்லையாமா?) “இல்ல அதான் புக் படிக்கறேன் இல்லை” என்றேன். அதக்கூட பரவாயில்லை உள்ளேயாவது போயிருக்கலாம் இல்ல..அதுவும் செய்யல. என் ஆயா..இரண்டு, மூன்று முறை கண்ணால் சாடை செய்து உள்ளே போக சொன்னார்கள். என்னவோ எனக்கு நேரம் சரியில்லைங்க.. அன்னிக்குன்னு பார்த்து, எனக்கு என்னதான் செய்யறாங்க பார்க்கலாம் என்று கவனிக்காத மாதிரி உட்கார்ந்திருந்தேன்.

விருந்தாளி வீட்டை விட்டு போனது தான், அங்கிருந்த பூந்தொடப்பத்தை எடுத்து, பின்புறமா திருப்பி வச்சி விலாசிட்டாங்க விலாசி.. விலாசும் போது, திட்டு வேற..மரியாத கொஞ்சம் கூட இல்லாம, சேரை விட்டு எந்திரிக்காம, வயசுக்கு வர போற பொண்ணு, இப்படி வரவன், போரவன் எதுக்க வந்து நிக்கலாமான்னு..ஆஹா..என்ன வலி ..நமக்கு வேற அழவே தெரியாதா.. வாய தொரந்தா போதுமே..ஒரு 7 , 8 கிமீ சத்தம் கேக்கற அளவுக்கு இல்ல கவர் பண்ணி அழுவோம். எப்படியோ நம்ம சவுண்டால அவங்க இவங்கன்னு பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டா எல்லாரும் நான் என்னவோ கொலை குத்தம் பண்ண மாதிரி, ஆயாவை இன்னமும் ஏத்தி விட்டு அடிவாங்க வைச்சாங்க.. எனக்கா தொடப்பதால அடிச்சிட்டாங்களேன்னு ஒரே அவமானம் வேற... அழும் போதே நடு நடுவே.. அடி..அடி.. இன்னைக்கு நான் தொடப்பத்தால அடி வாங்கினா நாளைக்கு பெரிய பணக்காரியா ஆவேன்னு டயலாக் வேற..
(யாரோ எப்போதோ சொன்னது..செருப்பாலும், தொடப்பதாலும் அடி வாங்கினா பணக்காரா ஆவங்களாம்)

2. தாத்தா.. :- 10 வயது இருக்கும், மதில் சுவர் அருகில் (மாடியில்) ஒரு காலில் (style லு மா style) நின்று கொண்டு நோட்டு புத்தகத்தை புரட்டி பார்த்து,(ஒரே நோட்டில்) மற்றொரு பக்கத்தில் எழுதிகொண்டு இருந்தேன். அந்த பக்கம் போன என் ஆயா, நிற்காமல் , உட்கார்ந்து படி என்றார்கள். நான் பதில் ஒன்றும் சொல்லாமல் திமிரா ஒரு லுக் விட்டுட்டு எழுதி கொண்டே இருந்தேன். தாத்தா கொஞ்சம் தூரத்தில் நாற்காலியில் உட்கார்ந்து சுருட்டு பிடித்து கொண்டு இருந்தார். வில்லி (அதான் என் ஆயா) திருப்பி என்னை கடக்கும் போது இன்னொரு முறை சொன்னார்கள். நமக்குதான் அடி வாங்கனும்னு முடிவாயாச்சே..வாய் சும்மா இருக்குமா.. “ஆயா சும்மா உன் வேல என்னாவோ அத மட்டும் பாரு ஏன் என்னையே கவனிக்கற..போ..” அவ்வளவு தாங்க.. அவங்க வூட்டுகாருக்கு (அதான் என் தாத்தா) கோவம் வந்துடுத்து. என் கிட்ட பொருமையா வந்து பாப்பா, சட்டைய கழட்டு, அப்படின்னாரு.. அடடா..பாசமா ஏதோ தாத்தா சொல்லாறேன்னு கழட்டன அடுத்த நிமிஷம் இடி மாதிரி அடிங்க.. முதுகுல விழுந்தது.. 5 விரலும் பதிந்து போச்சு.. கால் தரையில நிக்கல.. வலியில குதிக்க ஆரம்பிச்சிட்டேன்.. நம்ம சவுண்டு எட்டு திக்கும் பரவ.. எல்லாரும் தாத்தாவின் கோவத்துக்கு பயந்து பேசாமல் நான் குதிப்பதை ரசிக்க.. நம்ம வாய் எப்பவும் போல சும்மா இருக்குமா.. இருங்க எங்க அப்பா வரட்டும் உங்க 2 பேரையும் என் முதுகை காட்டி மாட்டி விடறேன்னு சொன்னதுதான்..தப்பு பண்ணது இல்லாம..அத அப்பங்கிட்ட சொல்றேன் ஆத்தாகிட்ட சொல்றேன் வேற..எதுத்து பேசறையான்னு ..அதே இடத்தில இன்னும் 5 , 6 சகட்டு மேனிக்கு கிடைச்சுது.. வில்லி தான் கடைசில வந்து வில்லன் கிட்ட இருந்து காப்பாதினாங்க..

இதுல என்ன high light னா.. பொம்பல பிள்ளைய கண்ட இடத்துல அடிச்சி காயப்படுத்த கூடாதாம்மா.. அதனாலதான் சட்டைய கழட்ட வச்சி பிண்னி எடுத்தாங்களாம்மா.. என்ன நல்ல எண்ணம் பாருங்க.....வீங்கின முதுக சரி பண்ண 3 நாளாச்சுங்க..

3. அப்பா:- அப்பா ரொம்ப அமைதி, கோவமே வராது.. அவர் கிட்ட அடிவாங்கன முதல் ஆள் நானாத்தான் இருப்பேன். இதுவும் ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க. வீட்டுல எல்லாரும் வெளியில போயிருந்தாங்க.. நாம தனியாத்தானே இருக்கோம்..கொஞ்சம் விசில் அடிச்சி (தேவையில்லா தான் என்ன செய்ய , ஒரு ஆர்வ கோளாறு தான்) பழகலாம்னு..விசில் அடிச்சி பழகிட்டு இருந்தேன்.. அப்பா பின்னாடி வந்தத கவனிக்கல.. என் விசில் practice ஐ கேட்டு டென்ஷன் ஆயிட்டாரு போல.. தலையில நல்லா கட்டைவிரல மடக்கி வச்சு“நறுக்குன்னு” ஒரு ஸ்டார்ங் கொட்டு.. அய்யோ.. யம்மா..தல ஒரு இன்ச் உள்ள போய்ட்டு வந்த மாதிரி ஒரு feeling. அழுக எல்லாம் வரவே இல்ல.. ஏன்னா நம்ம சீன் போட்டா கவனிக்க யாராவது வேணுமே.. வீட்டிலேயும் யாரும் இல்ல..அடிச்சிட்டு இவரும் ஒன்னுமே பேசல.. அவரு பாட்டுக்கும் போயிட்டாரு.. எனக்கோ.. என்னடா நாம பெத்த புள்ளைய இப்படி கொட்டினோமே.. அது தல இருக்கா..இல்லை உடம்புகுள்ள போச்சான்னு பாக்காம.. அவரு பாட்டுக்கு போயிட்டாரேன்னு தான் கவல (இந்த விஷயத்தை அவரும் யார் கிட்டேயும் சொல்லல நானும் யார் கிட்டேயும் சொல்லல). ம்ம் இப்படி ஒரு கொட்டு வாங்கின பிறகும் நான் விசில் அடிக்கறத நிறுத்தி இருப்பேன்னு நீங்க நெனச்சா அது உங்க தப்பு.. இப்பவுமே விசில் சரியா அடிக்க வரலைன்னு எனக்கு வருத்தம் தான்...

4. பெரிய அண்ணன் :- ஒரு நாள் ஆயாவோட காசு பைல இருந்து யாருக்கும் தெரியாம காசு எடுக்கும் போது பார்த்துட்டேன். நாம தான் ஹானஸ்டுராஜி ஆச்சே சும்மா இருப்போமா.. அண்ணனை பார்த்து இரு இரு ஆயாகிட்ட சொல்றேன்ன்னு சொன்னேன். அண்ணனோ வேணா, பாப்பா (நானே தான்) உனக்கு வேண்ணா முட்டாய் வாங்கி தரேன்னு சொன்னாங்க. நாம இந்த லஞ்சத்துக்கெல்லாம் தலை வணங்கிட்டா என்னா ஆவறது.. ..ஓடி போய் முதல்ல சொல்லிட்டு தான் மறுவேலையே. அண்ணன் சமயம் பாத்துக்கிட்டே இருந்தாரு, ஒரு நாள் வசமா மாட்டினேன்.. தனியா ரூம்குள்ள போட்டு சாத்து சாத்துன்னு சாத்தினாரு.. பெரிய அண்ணாவுடைய style லே direct ஆ தலையில தாக்கறது தான். நான் என்ன நெனப்பேன்னா.. என்னடா நம்ம பாப்பா நம்மவிட புத்திசாலியா இருக்காளேன்னு பொறாமையில தலையில வச்சி வாங்கறாறோன்னு.. சரி single gape ல தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடி வந்து, நம்ம as usual style ல சவுண்டு விட ஆரம்பிச்சது தான்.. எங்க ஆயா..வந்து விசாரிச்சிட்டு, நேரா உள்ள போய் அடிக்கற மாதிரி ஒரு பிரம்ப எடுத்து கிட்டு வந்து, அண்ணன் கிட்ட கொடுத்து.. வாடா இப்ப இதால்ல நல்லா அடி, பொம்பல புள்ளன்னு இல்லாம.. அவள இப்படி போட்டு அடிச்சி இருக்கியே..(என்னவோ இவங்க என்ன அடிக்காத மாதிரி) உனக்கு அந்த பொண்ணு மேல எவ்வளவு கோவம் இருந்தா இப்படி அடிச்சி இருப்ப..வா வந்து ஆசை தீர அடின்னு சொல்ல.. நமக்கு இங்க கதி கலங்கி போச்சு... என்னா இந்த கிழவி same side goal போடறாங்களேன்னு, ஆனா..அண்ணன் பாவம் பாத்து விட்டுடாங்க.. ஆயா விடலயே.. அவங்க அடிக்க ஆரம்பிச்சிடாங்க.. நல்லா கண் குளிர அந்த பொண்ணு அழுறத பார்த்துகோடான்னு.. வச்சி விலாச ஆரம்பிச்சிடாங்க.. ம்ம்..பஞ்சாயத்து பண்ணாம ஒழுங்கா அண்ணன்கிட்ட மட்டும் அடிவாங்கனமா போனமான்னு இருந்திருக்கலாமா.. எங்க..

5. சின்ன அண்ணன். :- இவர் கிட்ட வாங்கினது சூப்பர். கேரம் போடு ஆடும் போது, 2 பேருக்கும் சண்டை ஆரம்பிச்சது.. நான் தான் சரி, நீதான் சரி..ன்னு ஆரம்பிச்சு.. அதுபாட்டுக்கும் நடக்குது. நாமத்தான் எதையும் சாமான்யத்துல சரின்னு ஒத்துக்க மாட்டோமே.. அண்ணன் பொறுமை இழந்து போய் ஒரே குத்து மூக்கு மேல.. வெத்தல பாக்கு தான்..வேற என்ன..கொட கொடன்னு ரத்தன் வர ஆரம்பிச்சிடுத்து.. அவருக்கு தான் நம்மல பத்தி நல்லா தெரியுமே.. உடனே ஓவர் சவுண்டு விடுவோம்னு.. குத்தன அடுத்த செகண்ட் என் வாய சத்த இல்லாம பொத்தி.. “இங்க பாரு.. ஓவரா சீன் போட்டு ஊற கூப்பிட்ட மவளே முஞ்சியில ஒரு பார்ட் ஒழுங்கா இருக்காதுன்னு சொல்லிட்டு ...’லேசா கைய என் வாயில இருந்து எடுத்து சவுண்டு (test ஆம்) வருதான்னு பார்த்தாரு.. எங்க வரும்.. வரலியே...


6. கடைசியா என் பையன் ;- நாங்க குடும்பத்தோட 25-30 பேர் இருக்கும் திருப்பதிக்கு பஸ்ல போய்க்கிட்டு இருந்தோம். என் பையனுக்கு அப்போ 2.5 வயசு..பஸ்ல என் மடியில உட்கார்ந்துகிட்டு, கைல ஒரு ரோஜா பூ வை வச்சிக்கிட்டு விளையாடிட்டே வந்தவன் தூங்கிட்டான். கீழ் திருப்பதி பஸ் ஸ்டாண்டில், பஸ் நிற்கும் போது அவனும் எழுந்துட்டான். எழுந்து முதல் கேள்வி “அம்மா, பூ? ‘ எந்த பூவை கேக்கறான்னு நான் யோசிக்கறதுக்கு முன்ன கீழ இறங்கி அவனே தேட ஆரம்பிச்சிட்டான். அவன் கையில இருந்த ரோஸ் கீழ உதிர்ந்து விழுந்து கிடந்தது.. பார்த்தவுடனே அழ அரம்பிச்சான்.. அந்த ரோஸ் முழுசா வேணும்னு அழ ஆரம்பிச்சவந்தான்..என்னவோ சமாதானம் சொல்லியும் கேட்கல.. என் பையனாச்சே சவுண்டு 'மேல் திருப்பதி வெங்கட்’டுக்கு கேட்டு அவரே ஒரு பூ கொடுக்கற ரேஞ்சுக்கு கத்தறான். என் வீட்டுகாரர் எங்கயோ தேடி கண்டுபிடிச்சி ஒரு ரோஸ் வாங்கிட்டு வந்தாரு.. அவனோ..”என்ன பார்த்தா என்ன கேன மாதிரி இருக்கான்னு (சொல்லல) ஒரு லுக்கு விட்டுட்டு அத ஜன்னல் வழியா தூக்கி எறிஞ்சான். அழுகையும் நிக்கல.. எல்லாரும் சாப்பிட ஹோட்டலுக்கு போனாங்க.. நானும் இவன அழுகையோடேயே தூக்கிட்டு போனேன். ஹோட்டலுக்கு உள்ள கால வைக்கல, நான் இங்க ஒருத்தன் பூ கேட்டு அழுதுகிட்டு இருக்கேன்..நீ சாப்பிடவா போறே...எப்படி சாப்பிடறன்னு பாக்கறன்டீ நானுன்னு நெனச்சி.. பளார் பளார் ன்னு கண்ணதுல அடிக்க ஆரம்பிச்சிட்டான். என் பையன் face specialist. முகம் தான் அவனோட டார்கெட்டெ. இத பார்த்த என் பாசமலர் அண்ணன் ஓடி வந்து..’டேய்.. ஏண்டா என் பாப்பாவ இப்படி அடிக்கற (இவரு நம்மல அடிச்சது நமக்கு தானே தெரியும்), அழுகைய நிறுத்திட்டு ஒழுங்கு மரியாதையா சாப்பிடு இல்லைனா அடி நொறுக்கிடுவேன்னு சொன்னது தான் என் பையனுக்கு ஆவேசம் அதிகமாகி இன்னும் வேகமா என்னை சாத்த ஆரம்பிச்சான். சரி நம்ம பையன் நம்மல அடிக்கட்டும்னு பஸ்ல வந்து உட்கார்ந்து “அடிப்பான்னு” சொல்லிட்டேன். கிடச்ச chance அ அவன் மிஸ் பண்ணாம தலைமுடிய பிச்சி எடுத்து, காது கம்மலை பிடிச்சி இழுத்து, கண்ணத்திலே போட்டு சாத்தறான். தாயாச்சே எருமையிலும் பொறுமையா இருக்கனும்னு..பார்த்தேன்..ஆனா வலி தாங்க முடியாம என் கண்லேர்ந்து தண்ணியா வர ஆரம்பிச்சிடுத்து.. என் பையன் உஷார் ஆயிட்டான்.. ஆஹா..அம்மா அழ ஆரம்பிச்சா ஓவர் சீன் ஆயிடுமே..ன்னு அப்புறம் நம்மல எல்லாரும் சாத்த ஆரம்பிச்சிடுவாங்கலேன்னு, என் கண்ண தொடச்சி விட்டுட்டு.. கீழ கடந்த உதிர்ந்த ரோஸ்ஸின் காம்பை கைல எடுத்து வச்சிகிட்டு அமைதியா விளையாட ஆரம்பிச்சிட்டான்.....