ஏன் திருமணத்திற்கு பிறகு இந்திய பெண்கள் பீப்பா’ மாதிரி ஆகிவிடுகிறார்கள்..விவரியுங்கள் பார்க்கலாம்? நண்பர் தரண் அவர்கள் ‘கூந்தலும் கணவனும்” பதிவில் இப்படிதான் குறிப்பிட்டு இருந்தார். எங்கேயோ வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு, எப்போது பார்த்தாலும், இந்தியர்களையும், இந்திய கலாசாரத்தையும், இந்திய பெண்களின் அழகை ?!! யும் குறை கூறுவதே அவருக்கு வேலையாய் போயிற்று..

என் முதல் கேள்வி - ஏன் திருமணதிற்கு பிறகு ஆண்கள் ரோட் ரோலர் போல ஆவதில்லையா.?.. உதாரணத்திற்கு அவர்களின் தொப்பை ஒன்றே போதுமே.. ஒரு எண்ணெய் விளம்பரத்தில், “ஏங்க இவங்க தொப்பையை குறைக்கக்கூடாதா? “ என வித விதமான தொப்பைகளை காட்டுகிறார்கள்.. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அடக்கமுடியாது..சிரிப்பு சிரிப்பா வரும்...இப்படி தொப்பைக்கு சொந்தமானவர்கள் பெண்களை கிண்டலடிப்பது எப்படி பொருந்தும் என்று புரியவில்லை.

திருமணத்திற்கு பின் ஆண்கள் குண்டாவதற்கு முக்கிய காரணம் மாமியார் வீட்டில் பந்தாவாக மாப்பிள்ளை என்ற புது சர்டிவிக்”கேட்” டோடு மூன்றுக்கு 5 முறை மூக்கு முட்டவும், அதற்கு மேலும் சாப்பிட்டு விட்டு, வீடு வீடாக விருந்தும் என்று, ஒரு வாரத்திற்குள் பாருங்கள்..”மாப்புள நீயா?” ன்னு கேட்கற அளவுக்கு குண்டாகிவிடுகிறார்கள்.. ஆனால் பெண்கள் அப்படியா?.. மனசுல கை வைச்சு சொல்லுங்க பார்க்கலாம். பெண்கள் ஏன் குண்டாகி போகிறார்கள் என்பதற்கான எனக்கு தெரிந்த காரணங்களை கூறுகிறேன்..

1. குழந்தை பிறந்தவுடன், தன்னை கவனிப்பதை விட குழந்தையை கவனிக்கவும், குழந்தைக்கு பாலூட்டவும் அவர்கள் நிறைய சாப்பிட தொடங்குகிறார்கள். தனக்கும், தன் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுவதால் சதை விழுந்து போகிறது..
2. நிறைய பெண்களுக்கு ஹார்மோன் இன்பேலன்ஸ் காரணமாக சதை விழுகிறது என்பது தெரிவதில்லை.
3. கர்ப்பபை பிரச்சனை, சரியான இடைவெளி இல்லாத உதிரப்போக்கு, அதிக (அ) மிக குறைந்த உதிர போக்கு காரணமாகவும் குண்டாகி போகிறார்கள்.
4. மன ரீதியான பாதிப்பு, திருமணம் ஆன பிறகு அவர்கள் மேல் உள்ள அழகின் அவசியம் போய், மற்றவர்களின் மீது (கணவன், குழந்தை) திரும்புவதும் இதற்கு காரணம்.
5. எந்த உடல் பிரச்சனையும் இல்லாத பெண்கள், கணவரும், குழந்தைகளும் வெளியில் சென்றபிறகு, வேலை எதுவும் இல்லாமல் போவதால், பகல் நேரங்களில் தூங்குவதாலும், தொலைக்காட்சியே கதி என்று உட்கார்ந்து விடுவதும் காரணங்களாகிறது.
6. வீட்டில் மீந்து போன சாப்பாட்டை (வீணாக போகிறதே என்று) தலை எழுத்தே என்று சாப்பிடுவதாலும் குண்டாகிறார்கள்.
7. உடலுக்கு சரியான உடற்பயிற்சி இல்லாமல் போவதும் ஒரு முக்கிய காரணம். (எல்லாவற்றிக்கும் இப்போது தான் மிஷின் வந்துவிட்டதே)
8. கடைசியாக, வேலைக்கு போகும் பெண்கள், காலையில் சீட்டில் போய் உட்கார்ந்தால், மாலை தான் எழுவார்கள். உடலுக்கு எந்த பயிற்சியும் இல்லாது போகிறது.

இப்படி தன் நலம் பாராட்டாமல், தன் கணவன், குழந்தை நலம் பாராட்டுவது மட்டுமன்றி, உழைத்து உழைத்தே குண்டாகி போகும் பெண்களை, சும்மா கிண்டல் செய்வதை விட்டுவிட்டு உங்களின் தொப்பை ஏன் வளர்ர்ர்ர்ர்ர்ந்ந்ந்ந்ந்ந்தூ..வந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு 7 காரணம் வேண்டாம் ஒரே ஒரு உருப்படியான காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம்.

அணில் குட்டி அனிதா:- அம்மனிக்கு வாய் சும்மாவே இருக்கறது இல்லை.. நம்மளயே தினமும் ஒருத்தர் உருட்டி விடற மாதிரி இருக்கோமே.. இந்த மாதிரி subject எல்லாம் எழுதலாமா.. ம்ம்ம்...அம்மனிக்கு கொஞ்சம் கூட அடக்க ஒடுக்கம் இல்லங்க.!

அப்புறம்..ஒரு விஷயம்., இவங்க வீட்டுல renovation க்கு அவங்க hubby ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு.. என்னான்னு கேக்கறீங்களா?.. single door எல்லம் double door ஆ மாத்தறாங்க.. அட..நீங்க நினைக்கற மாதிரி “வாஸ்து “ சாஸ்த்திரம் எல்லாம் பாக்கலைங்க.. அம்மனி சைஸ்’ க்கு single door பத்தலையாமா...!! ஹி..ஹி.. விட்டுகுள்ள ஆட்டோ வைச்சி தான் இவங்கள ஒரு சுத்து சுத்த வேண்டி இருக்கு .!! .. பஸ், ட்ரைன் எல்லாத்திலுமே 1-1/2 டிக்கட் தான்.. இப்படியே போனா.. இருந்தாலும், செத்தாலும்.. அம்மனிக்கு பெரிய பெரிய வாசல் வச்சி..”கவிதா மகல்” தான் கட்டனும்...