தற்போது வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகும் ஐ.டி கம்பெனிகளின் ஆட்குறைப்பு மற்றும் சம்பளம் குறைப்பு காரணமாக புதிதாக திருமணம் ஆனவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போடுவதாக செய்தி வருகிறது. மிகவும் வேதனையான விஷயம், தவறா சரியா என்று கேட்டால், நேரடியாக மிக தவறான முடிவு என்றே சொல்லலாம்.

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைக்கும் இவர்கள் செய்யும் மற்ற ஒரு வேதனைக்குறிய விஷயம், கருக்கலைப்பு. கருக்கலைப்பு என்று எழுதும் போதே நெஞ்சு படப்படக்கிறது, உள்ளே இருப்பது ஒரு உயிர், வேண்டாம் என்று முடிவு செய்து க்கொள்ள எல்லாவித உரிமையும் இருந்தாலும், குழந்தைக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாத போது பொருளாதார கஷ்டங்கள் கருதி, திட்டமிட்டு கருக்கலைப்பு செய்வது மிகவும் கொடுமையான விஷயமாக படுகிறது.

அடுத்து திருமணம், திருமணம் என்பது பொருளாதாரம் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமா என்றால் இல்லை என்றே சொல்லுவேன். பணம் நமக்கு அத்தியாவசிய அன்றாட தேவை என்றாலும் வரும் வருமானத்திற்கு தகுந்தார் போன்று குடும்பம் நடத்த இயலும். திருமணம் சரியான வயதில் செய்வதற்கு சில முக்கிய காரணங்களாக சொல்லப்படுவது

1. நல்ல திடக்காத்திரமான குழந்தைகள்
2. பிரச்சனை இல்லாத மகப்பேறு
2. நம் வயதிற்கும் நம் குழந்தைவயதிற்கும் உள்ள வயது இடைவெளி. அதாவது குழந்தையை வளர்த்து, படிக்கவைத்து, அந்த குழந்தை வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வரும் வரையிலும் நம் ஆயுள் இருக்கவேண்டும்.
3. நம்மை நம்பி திருமணம் செய்து கொண்டவருக்கு (இரு பாலாரும்) கடைசிவரை துணையாக இருப்பது. இதற்கும் நம் வயது ரொம்பவும் முக்கியம், அதுவும் இப்போதைய வாழ்க்கை முறையில் எதையும் திடமாக சொல்லிவிட முடிவதில்லை.

இவை எல்லாம் யோசித்து தான் முன்னவர்கள் ஆண், பெண் திருமணவயதை நிர்ணயித்து இருக்கிறார்கள். ஆனால் சம்பளம் குறைந்துவிட்டது, வேலை நிரந்தரம் இல்லை என்ற காரணங்களை வைத்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதையும், திருமணத்தை தள்ளி போடுவதை சரியான முடிவாக எடுத்துக்கொள்ளவே முடியாது.

தன்னம்பிக்கை இருக்கும் யாரும் இப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள். இது தான் வாழ்க்கையின் முடிவு என்று யாரும் சொல்லிவிட முடியாது, எத்தனை கதவுகள் மூடப்பட்டாலும் கண்டிப்பாக ஒரு கதவு நமக்காக திறக்கும், அப்படி திறக்காவிட்டால், திறக்க வைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்கு வேண்டுமல்லவா?

ஐ.டி வேலை மட்டும் தான் உங்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறதா? இதை நினைத்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை... ?! :(

* குறிப்பு :- தலைப்பில் இளைஞர்கள் என்று சொல்லியிருந்தாலும், இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு பொருந்தும். :)

அணில் குட்டி அனிதா :- ம்ம்....வந்துட்டாங்கடா.. அறிவுரை அல்லி!! எல்லாரும் ஒன்னு செய்யுங்க...சம்பளம் வாங்கினாலும் வாங்காகாட்டியும், வேலை இருந்தாலும் இல்லாட்டியும் கல்யாணம் மட்டும் முதல்ல பண்ணிக்கோங்க, புள்ள குட்டி பெத்துக்கோங்க... அப்புறம் அம்மணி வீட்டு அட்ரஸ் கேட்டு, சைலன்ட்டா வந்து செட்டில் ஆயிடுங்க... ஹி ஹி.... உங்களையும் உங்க குடும்பத்தையும் அம்மணி பாத்துக்குவாங்க..!!

பீட்டர் தாத்ஸ் :- The real measure of your wealth is how much you'd be worth if you lost all your money.