நீ பெண், நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி சொல்லி ரொம்பவும் கட்டுப்பாட்டோடு வளர்த்தார்கள். உடை இப்படித்தன் இருக்க வேண்டும். இப்படித்தான் பேசவேண்டும், பார்க்கவேண்டும், நடக்கவேண்டும், சிரிக்கவேண்டும் என்று ஒவ்வொன்றும் சொல்லிக்கொடுப்பார்கள். எதையுமே என் இஷ்டத்திற்கு செய்ததாக நினைவில்லை. ஆயாவிற்கு நான் செய்வது தவறு என்று நினைத்தால் போதும் அப்படியே விட்டு விடமாட்டார்கள், திட்டி திட்டி திட்டி, அடித்தும் கூட மாற்றுவார்கள். சத்தம் போட்டு சிரிக்கவே கூடாது.. அதுவும் தாத்தா அப்பா இருக்கும் போது சத்தமே வரக்கூடாது. பூமி அதிராமல் மெதுவாக நடக்கவேண்டும், பூமாதேவிக்கு வலிக்கும் ?! என்பார்கள். உட்காருவது பாதங்களில் இரு பக்கங்களில் வடுக்கள் வரவே கூடாது. (கீழே உட்காரும் போது தேய்ந்து தேய்ந்து கருமை நிறம் படரும்).

இதை எல்லாம் விட கொடுமை, அதிகாலை 4 மணிக்கு "பாப்பா" என்று ஒன்று அல்லது இரண்டு முறை என் தலை அருகே வந்து மெதுவாக அழைப்பார்கள், எழுந்துவிட வேண்டும். அதுவும் சத்தமே வரக்கூடாது அண்ணன்கள், அப்பா எழுந்து விடக்கூடாதாம். இரண்டு முறைக்கு மேல் கூப்பிட்டும் நான் எழவில்லை என்றால், தட்டி எழுப்பி சத்தம் வராமல் இருக்க ஒரு விரலை வாயின் மேல் வைத்து காட்டி...என்னை வெளியில் அழைத்து சென்று அதிகாலையிலே அர்ச்சனை கிடைக்கும் அதுவும் பெண் எப்படி இருக்கவேண்டும் என்ற அறிவுரை வழங்கப்படும்.. "ஆமா நீ ஏன் இப்படி ராத்திரியில நீயும் ஏன்ச்சி என்னையும் எழுப்பி உயிரை வாங்கற..என்ன தூங்க விடேன்.." என்று சொல்லுவேன்.. ஆனா ஆயா ஏன் என்னை எழுப்புகிறார்கள் என்பதற்கு திரும்பவும் ஒரு லக்சர் கொடுப்பார்கள்.. அவங்க லக்சரை கேட்பதற்கு பதில் 4 மணி என்ன 2 மணிக்கு கூட எழுந்து வேலை செய்யலாம் என்று தோன்றும்.

உடைக்கு வருகிறேன். அரைப்பாவாடை என்பது முழுங்காலுக்கு கீழ் இருக்கும் படி அளவு வைத்து தைப்பார்கள். "ஆயா எல்லாரும் அழகா முட்டி வரை போட்டு இருக்காங்க எனக்கு மட்டும் முக்கா பாவாடை தைத்து தரீங்க.. எனக்கு பிடிக்கலை " என்பேன்." "முட்டிக்கு கீழ் தான் பாவாடை போட வேண்டும். ஆசிரியர் கிட்ட வேணும்னா நான் வந்து பேசறேன்..அடம் பிடிக்காத இதை பழகிக்கோ..." என்பார்கள். ஆனா எனக்கு ஸ்கர்ட் முட்டிக்கு மேல் போட்டுக்கொள்ள ரொம்ப ஆசையாக இருக்கும். போடுபவர்களை பார்க்க பார்க்க பொறாமையாக இருக்கும்.

வாலிபால் குழுவில் இருக்கும் போது விக்கரவாண்டி'க்கு ஒரு முறை அழைத்து சென்றார்கள், குட்டி ஸ்கர்ட் போட்டால் தான் தடுக்காமல் விளையாட முடியும், ஆனால் என்னிடம் இல்லை, தோழி ஒருத்தியிடம் கேட்டு நீலக்கலர் குட்டி ஸ்கர்ட் வாங்கி வைத்துக்கொண்டேன். குறிப்பாக இந்த குட்டி ஸ்கர்ட் போடுகிறேன் என்று தெரிந்தால் விளையாடவே அனுப்ப மாட்டார்கள். வயது வந்த பெண்ணை வெளியூர் அனுப்ப எல்லாம் வழியே இல்லை. வீட்டில் யாருக்கும் தெரியாது. தாத்தா'விற்கும் அப்பாவிற்கும் நான் வாலிபால் ஆடுவது தெரிந்தாலும் இப்படி ஸ்கர்ட் போட்டு ஆடுகிறேன் என்று தெரியவே தெரியாது. வெளியூர் என்றால் விடமாட்டார்கள். ஆயாவிடம் மட்டும் ப்ர்மிஷன் வாங்கிவிட்டேன்..அப்பாவிற்கும், தாத்தாவிற்கு தெரியாமல் ஆயா பார்த்துக்கொள்வார்கள். எப்படியும் இரவு்க்குள் திரும்பி வந்துவிடலாம்.

வாங்கி வைத்திருந்த ஸ்கர்ட் விக்கரவாண்டியில் நாங்கள் தங்க அனுமதித்த பள்ளியில் சென்று மாற்றினேன். எனக்கு ரொம்பவும் பிடித்துபோனது. "எவ்வளவு அழகாக இருக்கு ஏன் போட விடுவதில்லை..ஒரே ஆதங்கம் எனக்கு" விளையாட்டில் இருந்த கவனத்தை விட அந்த நீல நிற ஸ்கர்ட் மீது அதிக கவனம் இருந்தது. தோழிகள் அனைவரிடமும் போய்"ஏய் ஸ்கர்ட் நல்லா இருக்கா" என்று கேட்டு அசடு வழிந்தது இப்பவும் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

அவர்கள் வீட்டில் எல்லாம் எங்கள் வீட்டை போல் கட்டுப்பாடு இல்லை. அதனால் நான் இப்படி கேட்பதை அல்ப விஷயமாக பார்த்தார்கள். எனக்குமே அது தெரிந்திருந்தாலும் ஆர்வ கோளாரு என்ன செய்வது :) சின்ன பிள்ளைதானே.. :)

ஆனால் இந்த கொடுமை எல்லாம் இப்பவும் தொடருகிறது. நான் என்ன உடை போட வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்பதை என் கணவர் கூட பரவாயில்லை என்று சொல்லுவேன் என் மகன் முடிவு செய்கிறான். என் இஷ்டம் போல இருக்க நேரம் ஆகாது ஆனால் எனக்கு எந்த உடை நன்றாக இருக்கிறது என்று நான் உணர்வதை விட, என்னை சுற்றி இருப்பவர்கள் பார்த்து எபப்டி இருக்கிறேன் எது எனக்கு அழகாக இருக்கிறது என்று சொல்லும் போது அப்படி விட்டுவிடத்தான் நினைக்கிறேன். அடம் அதிகம் பிடிப்பதில்லை என்றாலும் "என்னை பேண்ட் போட விடுவதில்லை, Full skirt போட விடுவதில்லை, தலை முடியை வெட்ட விடுவதில்லை, இந்த வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லை.. " என்று சொல்லி சொல்லிக்காட்டி கொண்டே இருக்கிறேன்.

அணில் குட்டி அனிதா:- என்னாது.. .அம்மணிக்கு சுதந்திரம் இல்லையா? என்ன கொடுமை மக்களா இது?! இதை பெரிய அளவுல நாம எல்லாருமே சேர்ந்து எடுத்துக்கிட்டு போயி அவங்க புள்ளக்கிட்ட சொல்லி இந்த ப்ளாக் எழுதறதையும் அப்படியே நிறுத்த சொல்லிட்டா.. நாம எல்லாரும் பர்மெனன்ட்டா நிம்மதியா இருக்கலாம்.. என்ன நான் சொல்றது.. ஓகே வா... மீட்டிங் புள்ளையோட வச்சிடலாமா?

பிட்டர் தாத்ஸ் :- All women's dresses, in every age and country, are merely variations on the eternal struggle between the admitted desire to dress and the un-admitted desire to undress