இரவு 8.00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளம் போகும் ரயிலில் புக் செய்து இருந்தான் ஆனந்த், கூடவே சுமதியும். இருவரும் விடுமுறைக்கு அங்கே செல்ல திட்டமிட்டு கிளம்பியிருந்தார்கள்.

3 ஆம் வகுப்பு ஏசி கோச்சில் சீட் பார்த்து அமர்ந்து இருவரும் லேசாக மூச்சு விட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் நிறைய ஆரம்பித்தனர். இவர்களுக்கு எதிரே 2 ஆண்களும் ஒரு பெண்ணும் இவருக்கு பக்கத்தில் ஒரு ஆணும் வந்து அமர்ந்தனர். எதிரில் வந்து அமர்ந்த 2 ஆண்களில் ஒருவர் இளைஞர் 30 வயதுக்குள் இருக்கும், சுமதி அவரை பார்த்தவுடன், பார்வையை நிறுத்தினாள்... வசீகரிக்கும் முகம், கூடவே ஒட்டிக்கொண்டு இருக்கும் சிரிப்பு, லேசான கன்னதுக்கு குழி......சுருள் முடி...

அவள் பார்ப்பதை உணர்ந்த அந்த இளைஞன் இவளை பார்த்தான்... ..சுமதி சட்டென்று கண்களை வேறு பக்கம் திருப்பிகொண்டாள்...

ஆனாலும் அவளால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை.. அவன் அவளை கவனிக்கின்றானா என்று பார்த்துவிட்டு மீண்டும் அவனையே கவனிக்க ஆரம்பித்தாள்.

அவன் எழுந்து வெளியில் செல்ல... ஆனந்தின் காதோரம் சென்று அந்த இளைஞன் அமர்ந்திருந்த இடத்தைக்காட்டி ரகசியமாக என்னவோ சொன்னாள்.

ஆனந்த்.."ம்ம்..நானும் வந்தவுடன் பார்த்தேன்..., .சரி உனக்கு டிரிங்ஸ் எதுவும் வாங்கிட்டு வரனுமா? " போயிட்டு வந்துடறேன் இரு... என்று பேச்சை மாற்றிவிட்டு சட்டென்று அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

திரும்பவும் அந்த இளைஞன் வந்து இவள் எதிரில் அமர, சுமதியும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவனை பார்க்க திரும்பினாள். அவன் பார்க்காத போது அவனையும்... அவன் இவளை கவனித்தாள் வேறு பக்கம் பார்த்தவாரும் இருந்தாள்.

இளைஞனுக்கு லேசாக உள்ளுக்குள் பூரிப்பு, ஏன் இவள் இப்படி நம்மை விழிங்கிவிடுவது போல் பார்க்கிறாள். ரொம்பவும் பிடித்துவிட்டதோ..?!!

இவனும் அவள் எப்போது அடுத்து தன் பக்கம் கண்களை திருப்புவாள் என்று காத்திருந்தான். அவள் இவனை பார்த்தவுடன்...காத்திருந்தவனாக லேசாக சிரித்தான்....

சுமதியும் சிரித்தாள்.....அவனுடன் மெதுவாக பேச ஆரம்பித்தாள்..... எர்ணாகுளமா?

ம்ம்....ஆமா நீங்க..?!

ஆமாம் நாங்களும்....

கூட யாரு..?!

என்னோட ஹஸ்பண்ட்... .:)

"..............ஓ...ஒகே..!!"

ஆனந்த் வந்துவிட்டான்.. இளைஞன் அவனையும் பார்த்து சிரித்தான். ஆனந்த் சின்ன புன்முறவலோடு நிறுத்திக்கொண்டு , சுமதியிடம் வாங்கிவந்த வீக்லி மேகசினையும், தண்ணீர் பாட்டலையும் கொடுத்தான்... .."இந்தா....படி.. வாட்டரை அந்த கார்னர்ல வை.."

சுமதி மேகசினை திறந்து வைத்துக்கொண்டாளும், அவளால் அதில் கவனத்தை செலுத்த முடியவில்லை. .அவ்வப்போது வருவோர் போவோரை பார்ப்பது போன்று எதிரில் இருப்பவன் மேல் கண்கள் செலுத்தியவாறே இருந்தாள்...

* * * * * **

எல்லோரும் படுக்க தயாரானார்கள். சுமதி கீழ் இருக்கையில் படுத்தாள், ஆனந்த் நடு இருக்கையில் படுத்தான்.

இரவு 12 -1 மணியிருக்கும், எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க.. இளைஞன் சத்தமில்லாமல் எழுந்து, சுமதி படித்திருக்கும் இருக்கைக்கு அருகில் வந்து அவளில் பாதங்களை வருடினான்...

சுமதி.. யாரோ தொடுவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தாள்.. அவளில் கால்களுக்கு மிக அருகில் அந்த இளைஞன் நின்றிருந்தான். அவள் எழுந்துவிட்டதை உணர்ந்து... "வா..என்று செய்கை செய்தான்.

சுமதி'க்கு ஒன்றும் புரியவில்லை.. என்ன செய்கிறான் இவன்?..

இளைஞன் திரும்பவும் அவளை பார்த்து "வா...." என்று செய்கை செய்தான்..

சுமதிக்கு பயம் கவ்வியது..நெஞ்சு படப்படத்தது....விடுக்கென்று எழுந்து லைட்'ஐ போட்டாள். அதை எதிர்பார்க்காத இளைஞன்.. வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தான்.

சுமதி எழுந்து ஆனந்தை எழுப்பினாள். ஆனந்த்.....தூக்க கலக்கதோடு.."என்னம்மா.. .." என்றான்.

சுமதி கண்கள் கலங்க..பயத்துடன் அந்த இளைஞன் தன் கால்களை தொட்டு எழுப்பி வா என்று அழைக்கிறான் என்றாள். ஆனந்த்..வேகமாக கீழே குதித்தான்.

"சரி..பயப்படாதே நான் பார்த்துக்குறேன்.. நீ படு..."

அந்த இளைஞன் சென்ற திசையில் இவனும் சென்றான்... இளைஞன் ஒருவித நடுக்கத்தோடு என்ன நடக்குமோ என்று ரயில் கதவோரம் வெளிபக்கம் பார்த்து நின்றிருக்க... ஆனந்த் அவன் பின்னால் சென்று மெதுவாக தோலை தொட்டான்...

உடம்பும் மனதும்... நடுங்க...திரும்பினான் இளைஞன்....

ஆனந்த்...புன்னகையோடு ..."கூல்..... .சுமதி உங்களை பார்த்துக்கிட்டே வந்ததால தவறா நினைச்சிக்கிட்டீங்க போல இருக்கு....ஆக்சுவிலி.. அவளோட அண்ணன் உங்கள் போலவே இருப்பார்.. ஆனா அவர் இப்ப உயிரோட இல்ல, ஒரு ரோட் ஆக்ஸிடன்ட்ல இறந்து போயிட்டார்.. அதான் அவளுக்கு உங்களை பார்த்ததும் அவளின் அண்ணன் ஞாபகம் வந்து போச்சி... என்கிட்ட சென்னையில நீங்க வந்து உட்கார்ந்தவுடனேவே சொன்னாள்.. அண்ணனை போலவே இருக்காருன்னு.. அதான் உங்களை வச்ச கண் வாங்காமல் பார்த்துக்கிட்டே வந்தா.. தவறா நினைக்காதீங்க... "

".........................ஐ அம் சாரி.......ஐ அம் ரியலி சாரி..சார்...."