பத்மா'ச் கிட்சன் அப்டேட் செய்து மாதங்கள் ஆகுது. எழுதனும்னு நினைத்து வேறு பதிவுகள் போட்டுக்கொண்டே வர இதை சுத்தமாக மறந்தேவிட்டேன்.

மரவள்ளி கிழங்கு - Tapioca

இதில் iron, potassium, manganese and copper சத்துகள் உள்ளன. கொழுப்பு குறைவு, உருளைக்கிழங்கை போன்றே இருந்தாலும், இதில் அதைவிட கலோரி குறைவாகவே இருக்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் நல்ல உணவு. சதைபிடிக்க வேண்டும் என்று விரும்புவோர் இதை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

சில எளிதான செய்முறைகள்.

மரவள்ளி கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி ஆவியில் வேகவைத்து எடுத்து, தோலை உறித்துவிட்டு, வெல்லம் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம், இது பள்ளியிலிருந்து வந்தவுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மாலை வேளையில் சாப்பிட சிறந்த உணவு.

மரவள்ளிகிழங்கு அடை :-

பச்சரசி - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 5
மரவள்ளி கிழங்கு மீடியம் சைஸ் - 1
உப்பு -தேவைக்கேற்ப
சோம்பு - சிறிது
லவங்கம் - 2
வெங்காயம் - 1
தேங்காய் - பொடியாக நறுக்கியது ஒரு கரண்டி
கருவேப்பிலை
கொத்தமல்லி இலை
எண்ணெய் -தேவைக்கேற்ப

செய்முறை ;- மரவள்ளி கிழங்கை தோல் சீவி, கேரட் துருவலில் வைத்து சீவிக்கொள்ளவும். ஊறவைத்த பச்சரசி, மிளகாய், சோம்பு, லவங்கம் எல்லாம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். மாவுடன் உப்பு, பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். மாவு அடை ஊற்றும் பதத்திற்கு இருக்கவேண்டும். தோசைக்கல் வைத்து எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து அதையும் இந்த மாவுடன் சேர்க்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கலக்கி அடைகளாக இடவும்.மரவள்ளி கிழங்கு வடை :-

கடலைபருப்பு - 1.5 கப்
மரவள்ளி கிழங்கு சிறியது
காய்ந்த மிளகாய் -3
சோம்பு - சிறிது
லவங்கம் - 2
உப்பு -தேவைக்கேற்ப
எண்ணெய் -தேவைக்கேற்ப
கருவேப்பிலை
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை

செய்முறை :- ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து, பாதி கடலை பருப்பு சோம்பு, லவங்கம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்தபின் மீதமுள்ள பருப்பை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து க்கொள்ளவும், பின், துருவிய மரவள்ளிக்கிழங்கு, ஆப்ப சோடா, நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலக்கி, வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக ஆனவுடன் இரக்கவும். இது சூடாக சாப்பிட வேண்டும்.


மரவள்ளி கிழங்கு பக்கோடா :-

கடலை மாவு- அரை கப்
பச்சரிசி மாவு - ஒரு பிடி
நெய் - 2 ஸ்பூன்
துருவிய மரவள்ளி கிழங்கு - 1/4 கப்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சைமிளகாய்- 2 - பொடியாக நறுக்கியது
லவங்கம் - 2, சோம்பு -சிறிது, பூண்டு - 4 பல், இஞ்சி - சிறிய துண்டு - இவையெல்லாம் அரைத்து கொள்ள வேண்டும்.
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் -தேவைக்கேற்ப
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை, கொத்தமல்லி தழை -பொடியாக நறுக்கியது.

செய்முறை :- எல்லாவற்றையும் ஒன்றாக தண்ணீர் விடாமல் நன்றாக கலந்துக்கொள்ளவும், நன்கு கலந்த பிறகு லேசாக தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்திற்கு பிசையவும். எண்ணெய் காயவைத்து ஒரு பிடி கையில் எடுத்து, எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக பிசைந்து பிசைந்து நிறைய பெரிய துண்டுகள் விழாதது மாதிரி விடவும். பொன்னிறமானவுடன் எடுத்து பரிமாறவும்.

அணில் குட்டி அனிதா :- பத்மா'ன்னு ஒருத்தங்க இருந்தாங்க அவங்க ஆட்டம் பல பேரால் பல சமயம் தாங்க முடியாமல் இருந்திச்சி.. இப்ப அவங்க பேத்தி ஜூனியர் பத்மா' வா ஆகி நம்ம உயிரை வாங்கறாங்க... .. எப்ப போட்டோவுக்கு மாலைய மாட்ட போறாங்களோ.. ?? பின்ன என்னங்க..இப்படி இவங்க சொல்ற சமையல செய்து சாப்பிட்டா.. நமக்கு சீக்கிரம் சங்கு தானே..அப்புறம் ஆட்டோமேட்டிக்கா மாலைத்தானே..!!

பீட்டர் தாத்ஸ் :- “Good painting is like good cooking: it can be tasted, but not explained”