இப்போது வீட்டு வேலை செய்வது என்பது மிக பெரிய பொழுது போக்கு, குறிப்பாக வீட்டை சுத்தம் செய்வது, அலங்காரம் செய்வது, படம் வரைந்து (என் இஷ்டத்திற்கு) ஓரளவு பின்புற சுவரின் கலருக்கு மேட்சாகும் மாறு மாட்டுவது, துணி தைப்பது இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அப்போது எல்லாம் வேலைகள் வேறு விதமாக இருந்தன. ஆயா ஏதாவது ஒரு வேலை செய்து க்கொண்டே இருப்பார். அவற்றை எழுதிவைத்துக் கொள்ள ஆசைப்பட்டு இந்த பதிவை எழுதுகிறேன் :-

1. நெல் அவித்தல் :- பெரிய பெரிய பித்தளை, தாமிர அண்டாக்கல் இருக்கும், அதை விறகு அடுப்பின் மேல் ஏற்றி வைத்து தண்ணிர் ஊற்றி அடுப்பை விறுகுகள் வைத்து பற்றவைத்துவிடுவார்கள். மொத்தம் மூன்று அடுப்புகள், பின் மூட்டை மூட்டையாக வாங்கி வைத்துள்ள நெல்லை கழுவி அதில் போடுவார்கள். துடுப்பு என்று மரத்தால் செய்தது இருக்கும். அதனால் இந்த நெல்லை அவ்வப்போது துழவி விட்டுக்கொண்டே இருப்பார்கள். வெந்தவுடன் பதம் அவர்களுக்கு தான் தெரியும், மெல்லிய சாக்கை கொண்டு கட்டி இன்னும் ஒருவர் உதவி க்கொண்டு அண்டாவை இறக்கி தண்ணீர் வடியவிட்டு, எங்களின் பெரிய வீட்டு மெத்தையில் (மாடி) காயவைப்பார்கள்.

இதில் என்னுடைய வேலை அடுப்பை அணையாமல் விறகை தள்ளி விடவேண்டும், சும்மா இல்லாமல் ஆயா அந்த பக்கம் போனவுடன் துடுப்பை எடுத்து அண்டாவில் போட்டு கையை சுட்டு க்கொள்ளுவேன், சில சமயம் சூடு தாங்காமல் அப்படியே அண்டாவில் விட்டுவிடுவேன். ஆயாவாக இருந்தால் திட்டு அப்பா பார்த்தால் நறுக்கு ன்னு தலையில் கொட்டு கிடைக்கும். அடுத்து காயவைத்த நெல்லை காலால் துழவி விடவேண்டும், வெயில் அதிகமாக இருக்கும் எனக்கு தலைவலி வருமென்று குடை கொடுத்து அதை பிடித்துக்கொண்டு காலால் தள்ளி காயவைக்க வேண்டும். இதை மாலை வரை அடிக்கடி செய்ய வேண்டும். அடுப்பு தள்ளுவதை விட இந்த வேலை பிடிக்கும். ஏனென்றால் காலால் தள்ளி தள்ளி விடுவது ஒரு வித விளையாட்டு போல இருக்கும். மாலை ஆனால் அதை பெருக்கி வாரி மூட்டையில் அடைத்து ஆயாவுடன் மிஷினுக்கு சென்று, திரும்பி வந்து அரிசியாக அதை ஹாலில் கொட்டினால், அதன் மேல் குதிக்கும் முதல் ஆள் நான் தான். ஆயா போகட்டும் என்று விட்டுவிடுவார்கள், மிஷினில் இருந்து வந்ததால் சூடாக இருக்கும், அதில் கையை விட்டு கிளரி கிளரி விளையாடுவேன்.

3. இளவம்பஞ்சி : மரக்காணம் தாத்தாவின் பூர்வீகம், அங்கிருக்கும் இளவம்பஞ்சி மரத்தில் பஞ்சிக்கு சொல்லி வாங்கி வருவார்கள், இதை தான் பெட்டில் வைத்து தைப்பார்கள். இந்த பஞ்சியில் தைத்த பெட் உடம்புக்கு குளிர்ச்சி, மென்மையாக இருக்கும் நன்றாக தூக்கம் வரும். மூட்டைகளாக வந்த பஞ்சை ஒரு ரூமிர்குள் போட்டு, குச்சியை கொடுத்து தலை காது மூக்கு எல்லாம் கட்டி மூகமூடி போல் ஆக்கி அனுப்புவார்கள், நமக்கு யார் மேலாவது கோபம் இருந்தால் அவர்களை நினைத்து க்கொண்டு எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அடிக்கலாம். செம ஜாலியான வேலை இந்த வேலை முடிந்தது.

4. தையல் : தாத்தா தான் பெட், தலையணை உறை எல்லாம் தைப்பார், அவருக்கு பெடலிங் மட்டும் நான். அவர் முன்னே அமர்ந்தால், நான் எதிராக பெடலில் கால் வைத்து நின்று மிதிப்பேன். அவருக்கு முட்டி வலி என்பதால் நான் தான் சித்தால். தைத்து முடிப்பதற்குள் நானும் தாத்தாவும் ஏகத்துக்கு ஆயாவிடம் திட்டு வாங்குவோம். எப்பவுமே எங்கள் வீட்டில் அந்த அம்மா ரொம்ப புத்திசாலி, அதனால் எல்லாரையும் ஒழுங்காக செய்யவில்லை ன்னு திட்டவது மட்டும் இல்லாமல் சரியாகவும் சொல்லி தருவார்கள். சில சமயம் தாத்தா அப்பா நிக்கர் எல்லாம் நானே தாத்தா சொல்லித்தர தைப்பேன். எனக்கு ஸ்கூல் பாவாடை, வீட்டுக்கு போடும் பாவாடை எல்லாம் நானே ஆயா சொல்லித்தர தைத்து க்கொள்வேன். சட்டை மட்டும் வெளியில் கொடுப்பார்கள். இதில் மிஷின் பெடலிங் சூப்பர் விளையாட்டு.

5. பஞ்சடைத்தல் : இப்போது தைத்த தலையணை க்கு எல்லாம் பஞ்சடைக்கறதும் எங்க வேலைதான். இப்ப நினைத்தால் கூட முதுகு வலிக்கிது ஆனா ஆயா எமகாதகி, விடமாட்டாங்க.. இது மட்டும் விளையாட்டே இல்லை பனிஷ்மெண்டு !

6. சுண்ணாம்பு கலக்குதல்: வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கறது பெரிய வேலை, அதில் சங்கு போல் ஒரு சுண்ணாம்பு கட்டிகள் இருக்கும் அதை முதல் நாள் இரவு பெரிய தொட்டியில் தண்ணீர் விட்டு கொட்டு விடுவார்கள், அது ஊறி கரைந்து காலையில் அடிக்கும் பதத்தில் இருக்கும். தென்னம் பாலையில் செய்த பிரஷ்'கள். அதை ரெடி செய்யவும் பாலைகளை முதல் நாள் இல்லை மூன்று நாட்கள் முன் கூட்டியே ஊறவைப்பார்கள். அப்புறம் அதை பிரஷ் 'ஆக அடிக்க செய்யமுடியும். இதில் என் வேலை தொட்டியில் தண்ணீர் நிரப்புவது, எனக்கு அந்த சுண்ணாம்பில் கைவிட்டு விளையாட ஆசையாக இருக்கும். ஆயா என்னவொ கை வெந்து போயிடும் செய்யாதே சூடு என்பார்கள், சரி கைதானே வைக்க கூடாது என்று ஏதாவது குச்சி வைத்து தொட்டியின் மேல் உட்கார்ந்து அதை நோண்டிக்கொண்டே இருப்பேன்.

7. தென்னங்காய், ஓலை :-
மரம் ஏறி பதிவில் சொல்லி இருப்பேன், வீட்டில் தேங்காய் வெட்ட ஆள் வந்தால் நான் பார்த்துக்கனும், ஓலை பின்னும் போது பார்த்துக்கனும், தாத்தா ஓலை பின்னுவார் என்னையும் அழைத்து பின்ன சொல்லி கற்றுக்கொடுப்பார், 25 ஓலைகள் எல்லாம் தேவைப்பட்டால், நாங்களே பின்னிவிடுவோம், பாம்பு ஓலை செய்வது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதை செய்து வைத்து விளையாடுவேன். பின்னுவதோடு நின்று விடாது சரியா உல்டா உல்டாவாக ஆயா சொல்லும் இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும்.

9. விழல் அடித்தல் :- தாத்தா குடிலுக்கு 5 வருடங்களுக்கு ஒரு முறை இதை வாங்குவோம், எங்கிருந்து வாங்குவார்கள் என்பது நினைவில்லை. இது தாத்தா செக்ஷன் ஆனாலும் கிழவி விடாது என்பது வேறு விஷயம். விழல் வந்தவுடன் அதற்கு தண்ணீர் தெளித்து வைக்க வேண்டும். ஆள் வந்து விழல் பரப்பி கட்ட ஆரம்பித்தவுடன் தாத்தா ஏணி போட்டு அவர்களுடன் கூரை மேல் ஏறிவிடுவார். என்னையும் மேலே வரச்சொல்லுவார். கார்த்தி அண்ணா ஏறிவிடும், ஆயா என்னை ஏற விடமாட்டங்க. காரணம் சூப்பர் விழுந்து கை கால் உடைந்துவிட்டால், முடமான பெண்ணை யாரும் கல்யாணம் செய்துக்க மாட்டாங்களாம். அதனால் நான் ஏணியிலே நின்று கட்டிய விழலை தாத்தா சொல்கிற படி அடிப்பேன். விழல் கட்டுபவர்களை வேடிக்கை பார்க்க ரொம்பவே பிடிக்கும். தாத்தா விழுந்து விடாமல் இருக்கிறாரா என்பதற்காகவே நான் ஏணியை விட்டு இறங்கமாட்டேன். அவரை நான் தான் பார்த்துக்கொள்வதாக எனக்கு ஒரு நினைப்பு. :)

10. திருவாசகம், திருவருட்பா படித்தல் : இது மட்டும் எனக்கு பிடிக்காத ஒரு வேலை. ராத்திரி ஆனால் போதும், தாத்தா கூப்பிட்டு விடுவார், அவருக்கு கண்பார்வை மங்கி விட்டதால் படிக்க நான் வேண்டும், அவர் கொசுவலைக்குள் சென்று , எனக்காக பெட் மேல் ரீடிங் டெஸ்க் போடுவார். இல்லைன்னா முதுகுவலிக்குதுன்னு எஸ்கேப் ஆகிவிடுவேன். எவ்வளாம் பெரிய பெரிய புக், தொடர்ந்து நேற்று விட்டதிலிருந்து ஆரம்பித்து செய்யுள் படிக்கவேண்டும், அதற்கு அர்த்தம் வேறு சொல்லி என்னை கொல்லுவாரு. இப்ப என்னவோ அந்த புத்தங்கள் படிக்க வேண்டும் போல் இருக்கிறது தீ விபத்தில் எல்லாமே போயின என்பது வேறு கதை. அதில் திருவாசகம் என்னவொ எனக்கு ரொம்பவும் பிடிக்கும், அருட்பா கொஞ்சம் எளிதாக அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் திருவாசம் அப்படி இல்லை தாத்தா சொல்லாவிட்டால் எனக்கு தெரியாது.

11. கதை செக்ஷன் :- விடுமுறை நாட்களில் மட்டும் இது உண்டு, தாத்தா நாற்காலியில் உட்கார்ந்து கொள்ள நாங்கள் அனைவரும் சுற்றி அமர்ந்து கொள்வோம், நான் தான் பக்கத்தில் யாரையும் விடமாட்டேன். ராமாயணம், மகா பாரதம், ஏகலைவன், குட்டி குட்டி புராண கதைகள், அரிசந்திரன், எமராஜன், விக்கிரமாதித்தன் கதைகள் ன்னு தாத்தா சூப்பரா கதை சொல்லுவார். அவர் கதை சொல்லும் போது "உம்" சொல்லனும் இல்லன்னா ஏ பொண்ணே என்ன தூங்கறியா உம் சொல்லு ன்னு அதட்டுவாங்க.. :) கதையை கூட கிழவி எங்கே இருந்தாவது கவனித்து தாத்தா தப்பு பண்ணா போதும் ஓடியாருவாங்க.... எதுக்கு? வேற எதுக்கு திட்டத்தான்.. ::)

12. கட்டிட வேலை : கட்டிட வேலை நடக்கும் போது என்னை வேலை வாங்கா விட்டாலும், மணல், சிமெண்டு கலவை சரியாக இருக்கா? என்று நின்று பார்க்க சொல்லுவார்கள். பொதுவாக கார்த்தி அண்ணா இதில் எல்லாம் எக்ஸ்பர்ட் , கூடவே நானும் நின்று கற்றுக்கொள்வேன். மட்டபலகை வைத்து மட்டம் பார்ப்பது, தரை சாய்வு சரியாக இருக்கா என்று பார்ப்பது போன்ற சின்ன சின்ன வேலை எப்படி செய்கிறார்கள் என்று அண்ணாவே சொல்லித்தரும். இதில் கொள்ளூரை வைத்து தனியாக சிமெண்டை திருடி வந்து நானே எங்கேயாவது பூசி பார்ப்பேன். நன்றாக இருந்தால் திட்டு விழாது, கேவலமாக இருந்தால் கொட்டு மட்டும் இல்லை எப்படி சரியா செய்யணும்னு திருப்பி பாடம் வேறு எடுப்பார்கள்

13. பூ கட்டுதல் : இதை தவிர்த்து, அன்றாட வீட்டு வேலை, சம்பங்கி பூ, நித்தியமல்லி வீட்டிலேயே பூத்தது. அதை பறித்து வந்து கட்டவேண்டும் முதலில் தென்ன்ஞ்குச்சி வைத்து சொல்லி கொடுத்தார்கள் பிற்கு காலால் கோர்த்து கட்டவும் கற்றுக்கொண்டேன். இது கொண்டை அலங்காரத்திற்கு பயன்படும். அதிகமாக திட்டு வாங்குவது இந்த வேலையில் தான் இருக்கும், பூ கட்டாகி விழுந்து விட்டால் போதும் கிழவி கழுத்தே கட்டாகி விட்டது போல் திட்டுவிழும். இதில் இன்னொரு விஷயம் பூ கட்டும் நார், அதை வாழைமரத்தில் இருந்து எடுத்து வந்து மெல்லியதாக கிழித்து காயவைத்து சுருட்டி கட்டி வைத்து இருப்பார்கள் தேவைப்படும் போது எடுத்து தண்ணீரில் நனைத்து பயன்படுத்தவேண்டும்.

அணில் குட்டி அனிதா: ஓ இவ்வளவு வேலை செய்து இருக்கீங்களா நீங்க இப்ப என்னவோ உங்களை வீட்டில் சோம்பேறி தூங்குமூஞ்சி எதுக்கும் லாயிக்கு இல்லன்னு அடிக்கடி சொல்றது என் காதுல கேட்குதே... அது என்ன மேட்டரு கவி....?!!

பீட்டர் தாத்ஸ் :- “A woman can do anything. She can be traditionally feminine and that's all right; she can work, she can stay at home; she can be aggressive; she can be passive; she can be any way she wants with a man. But whenever there are the kinds of choices there are today, unless you have some solid base, life can be frightening.”