உங்களின் ஒரு ரூபாய் கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு சொந்தமாகும்..

கூட்டம் நிறைந்த இடங்களில், சமுதாய தன்னார்வ பெண்கள், ஆண்கள் உண்டியல் ஏந்தி பணம் கேட்பதை பார்த்திருப்பீர்கள்...அவர்களை தயவுசெய்து உதாசினப்படுத்தாதீர்கள்.. உங்களின் ஒரு ரூபாய் கூட அவர்களுக்கு உதவும்..எத்தனையோ செலவுகளுக்கு இடையில் இது போல் என்றாவது ஒரு நாள் நாம் அடுத்தவர்களுக்கு செய்யும் சிறிய உதவி.யை எந்த காரணம் கொண்டும் ஒதுக்காதீர்கள்.. கோயில் உண்டியிலிலும், பிச்சைக்காரர்களுக்கும் போடும் பணத்தில் கொஞ்சம் இப்படியும் கொடுக்கலாமே?!

(மனித நேயம் கொண்டு, ஆயிர கணக்கில் உதவி செய்பவர்கள் இருக்கிறார்கள், இது அவர்களை பற்றிய பதிவு இல்லை)

தீபாவளி, பொங்கல் போன்ற விஷேஷங்களுக்கு, பணம் திரட்டி குழந்தைகள் காப்பகங்களுக்கு வழங்குவது வழக்கம். என்னை நம்பாமல் பணம் கொடுத்தவர்களுக்கு, காப்பகத்தில் கேட்டு ரசீதை scan செய்து இமெயிலில் அனுப்பி விடுவேன். அப்போது தானே அடுத்த வருடம் நம்பிக்கையோடு பணம் கொடுப்பார்கள். அதில் நான் வசூல் செய்கிறேன் என்று தெரிந்தவுடன், என்னிடம் என்ன சொல்லி திருப்பி அனுப்பலாம் (என் மனம் நோகாமல்) என்று யோசிப்பவர்கள் உண்டு..இதில் பெண்கள் அதிகம், சிரித்து கொண்டே என் வீட்டு அருகில் ஒரு இல்லம் இருக்கிறது அங்கே நேற்று தான் கொடுத்தேன் என்பார்கள். சிலர், சில்லரை இல்லை அப்புறம் தருகிறேன் என்பார்கள்.. சிலர் வேலையாய் இருக்கிறேன் நீங்க போங்க நான் வந்து தருகிறேன் என்பார்கள். இன்னும் சிலர், எல்லோரிடமும் வாங்குங்க, round off செய்ய எவ்வளவு வேண்டுமோ அவ்வளவும் நான் தருகிறேன் என்பார்கள், ஆனால் கடைசியில் அவரிடம் நான் செல்லும் போது, Money off என்பார்கள். தட்டிகழிக்க எத்தனை வழி இருக்கிறது ?!..

நூற்று கணக்கில் யாரும் கொடுக்க வேண்டாம் சிலரிடம் 5 ரூபாயை கூட வாங்கி இருக்கிறேன்.. நண்பர் ஒருவர்..என்னை பார்த்ததும் “எவ்வளவு வேண்டும்னு சொல்லுங்க கொடுக்கிறென்” என்றார். இத்தனை என்று கேட்டு வாங்கும் பழக்கம் இல்லாததால், அவரின் புகை பழக்கத்தை மனதில் கொண்டு, நீங்கள் 1 நாள் புகைப்பிடிப்பதை நிறுத்தி அதற்காக செலவாகும் பணத்தை கொடுங்கள் என்றேன். அவர் புகைக்காமல் இருந்தாரா என தெரியாது, ஆனால் அவர் எனக்கு கொடுத்த தொகை 27 ரூபாய்.

உங்களின் தேவைகளை குறைக்க வேண்டாம்..செளகரியத்தை குறைக்க வேண்டாம்.. ஏதோ உங்களால் முடிந்ததை இல்லை எனாமல் கொடுங்கள். கொடுக்கும் சிறிய தொகையினால் நாம் எதையும் இழக்க போவது இல்லை. நான் கூட என் தேவைகளுக்காக நிறைய செலவழிக்கிறேன்..என் தேவைகள் மட்டுமல்ல, என் குடும்ப தேவைகள் எல்லாம் செய்த பிறகு தான் உதவுவதற்கு பொருள் ஒதுக்குகிறேன். அதுவும் வருடத்திற்கு ஒன்று (அ) இரண்டு முறை.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி ஏக்க கண்களுடன் எவராவது உதவ மாட்டாரா என பார்க்கும் பச்சிளம் குழந்தைகளை மனதில் கொள்ளுங்கள்.. தட்டு தடுமாறும் வயதில், உழைக்க இயலாத வயதானவர்களை நினைத்து பாருங்கள்.

“ஏழைகள் எங்கும் இருக்கிறார்கள், ஆதரவற்றவர்கள் இல்லாத இடம் இல்லை, அவர்களது விதி” என்று மதியுடன் பேசி விவாதம் செய்பவர்களுக்கு பதில்.. என் ”புன்னகை” மட்டுமே. சக மனிதனின் உணர்வுகளையும், கஷ்டங்களையும் உணர முடியாத மனித நேயம் இல்லாத மனிதர்களிடம் பேசியோ, விவாதித்தோ என்ன பயன்..!

அணில் குட்டி அனிதா:- அம்மனி கர்ணனுக்கு கூட பிறக்காத sister ங்க.. (இதுல “யாரவது ஏதாவது கேட்டா நான் left hand ல இருக்கறத right hand க்கு மாத்தாம குடுத்துடுவேன்னு..” கர்ணன் படத்திலுருந்து சுட்ட dialog யை அடிக்கடி சொல்லிக்குவாங்க..தாங்காது) குடுக்கறது இருக்கட்டுங்க..எத்தனை தரம்..இவங்க ஏமாந்து போயிருங்கன்னு கேளுங்க.. ஒன்னு இல்லைங்க...9 posting போடலாம்.. party அவ்வளவு உஷார் ..என்னை வேலைக்கு வெச்சிருக்கும் போதே உங்களுக்கு எல்லாம் புரிஞ்சி இருக்கனும்... இவங்க யாரையாவது பார்த்து “பாவமா இருக்குன்னு” சொன்னா போதும்...இவங்கள அந்த area பக்கமே போகமா பாத்துக்கறது தான்..அவங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு முழுநேர வேலைனா பாத்துக்கோங்க......