பெண்கள் என்றாலே அழகு. அழகுக்கு அழகு சேர்க்க, தடுக்கி விழுந்தால் அழகு நிலையங்கள் முன் விழும் அளவிற்கு, பார்க்கும் இடமெல்லாம் அழகு நிலையங்கள் முளைத்துவிட்டன.. பெண்கள் அல்லாது ஆண்களுக்கும் தனியாக அழகு நிலையங்கள் நிறைய கண்களில் படுகின்றன.

அழகு நிலையங்களில் தலை முடி முதல், கால் நகம் வரை அழகு செய்கிறார்கள். 15 ரூபாயில் தொடங்கி...ஆயிரக்கணக்கில் அழகு மேம்படுத்தும் சேவை/பணிக்கு தகுந்தார் போன்று பணம் வாங்குகிறார்கள். இதில் நான் கவனித்த அளவில் நடுத்தர வயதை கடந்த பெண்கள் தான் அழகு நிலையங்களில் அதிகம். அதுவும் அவர்கள் தலைக்கு கருப்பு வண்ணம் பூசி கொண்டு செல்கிறார்கள் என்றால் கூட பரவாயில்லை, அதனுடன், தங்களை இளமையாக்கி கொள்ள செய்து கொள்ளும் bleeching, facial, முடி வெட்டுதல், திருத்துதல், வழித்தல், மழித்தல் எல்லாம் தேவைதானா?. அழகு செய்து கொள்கிறேன் பேர்விழி என்று உள்ளே பெண்கள் அடிக்கும் கூத்து சொல்ல இயலாதவை. நான் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அதை சொல்லவும் கூடாது. அவர்களை பார்க்க கூச்சப்பட்டு நான் வெளியில் வந்ததுண்டு. ஏன் இவற்றை வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ள முடியாதா? என தோன்றும். இவர்கள் இதையெல்லாம் செய்து கொண்டபிறகு இளமையாகி விடுகிறார்களா?.

இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று என் கணவரிடம் (Male opinion) கருத்து கேட்டேன், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “அடி..லூசே.!.யாரோ எதையோ செய்துட்டு போறாங்க..உனக்கு என்ன?!! ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத விஷயத்தை பேசி என் நேரத்தை ஏன் வீணடிக்கற” என்றார். கருத்து சொல்லாமல் போகட்டும், ஆனால், நான் இப்படி அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்கும் போதெல்லாம், “லூசு லூசு” என்று சொல்லி என்னை லூசாக்க பார்க்கிறாரா?.. இல்லை நான் “லூசாக” இருப்பதால் லூசு என்கிறாரா? என சந்தேகம் வந்துவிட்டது. அதையும் அவரிடமே கேட்க, “நீ லூசு இல்லைமா.. உன்னை போன்ற ஒரு அறிவு கொழுந்தை கல்யாணம் செய்து கிட்டேன் பார்..நான்..!. நான் தான் ‘லூசு’ ”..என்றார். இதை கேட்ட பிறகு தான் எனக்கு நிம்மதியாயிற்று. நீங்களும் நிம்மதியாய் இருக்கலாம், யார் என்னவென்று அவரே தெளிவுபடுத்திவிட்டார் அல்லவா?.

சரி, விஷயத்திற்கு வருவோம். சென்னை தி.நகரில் ஒரு பெரிய துணி கடை, அதில் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கின்றன. அங்கு பெண்களுக்குகான அழகு பொருட்களும் கிடைக்கின்றன. அங்கு குவியும் பெண்கள் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு பொருட்களை வாங்கி செல்வார்கள், பொருட்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என கவனிப்பார்களே தவிர, நிதானமாக தான் வாங்கிய பொருட்களுக்கான விலையை தான் கடைக்காரர் பெற்றிருக்கிறாரா என்று கவனிப்பது இல்லை. அப்படி கவனித்தால் தெரியும் 100 ரூபாய் க்கு நாம் வாங்கி இருந்தால், கடைக்காரர் 115 முதல் 120 ரூபாய் வரை அதிகம் பெற்றிருப்பார். இந்த தவறு அதே கடையில் மற்ற பிரிவுகளில் ஏற்படுவதில்லை. பெண்களின் குணம் அறிந்து கடைகாரர் எளிதாக ஏமாற்றுகிறார். அழகு நிலையங்களில் பயன்படுத்தும் cream, lotion, shamp, hair dye எல்லாம் தரம் வாய்ந்ததா?. வெளிநாட்டில் இருந்து வரவைக்கபட்டது என்று சொல்லப்படும் பல பொருட்கள் தரம் வாய்ந்ததா என்று எத்தனை பெண்கள் கவனிக்கிறார்கள்.?. பெண்கள் பொதுவாக பொருட்கள் வாங்கும் போது அதன் விலையை பார்க்கிறார்களே தவிர, அதனுடைய பயன்பாடு, பொருளின் தரம், பொருள் தயாரித்த நிறுவனம் நம்பிக்கை ஆனதா, பொருள் தயாரித்த வருடம், அந்த பொருளின் பயன்படுத்தும் கால அளவு (expiry date) போன்றவற்றை கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை..

வீட்டில் எளிதாக பயன்படுத்தும் சில அழகு பொருட்கள்:- கஸ்தூரி மஞ்சள், சந்தனம், பால், தயிர், பயத்தம் பருப்பு, வெந்தயம், கசக்கசா, கடலை பருப்பு, உளுந்து, துவரம் பருப்பு, கொத்தமல்லி, பீட்ரூட், முல்தாணி மட்டி, லவங்கம், கடுக்காய், சாதிக்காய், பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வெட்டிவேர், நெல்லிக்காய், செம்பருத்தி, சியக்காய் வேப்ப இலை, துளசி, மருதாணி, முட்டை, எலுமிச்சை, மிளகு, பார்லி, விளக்கெண்ணெய்,உப்பு,தேங்காய், நல்லெண்ணெய்....சொல்லி கொண்டே போகலாமே..!

நம் வீடுகளில் இல்லாத எந்த பொருள் அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டிலேயே அத்தனையும் செய்து கொள்ளமுடியும். அடிக்கடி bleeching, facial செய்து கொள்வது நிச்சயமாக தோலுக்கு கேடுதான். அது மட்டுமல்லாது சருமம் தடித்து போகும். ஆண்களுக்கும் இது பொருந்தும். வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்களேன் !!

அணில் குட்டி அனிதா:- ஆனாலும்.. .. இந்த அம்மனி சொல்லறது ஒன்னு செய்யறது ஒன்னாவே இருக்கு..தாங்க முடியலங்க..நானும் எதுவும் சொல்ல கூடாதுன்னு தான் பார்க்கிறேன்..முடியலங்க....,இப்ப பாருங்க...Beauty parlor வேண்டாம்னு சொல்லறவங்களுக்கு அங்க என்னங்க வேலை..?.. இதெல்லாம் நீங்க யாரும் கேக்க மாட்டீங்களா? .. இந்தம்மனி இந்த range க்கு போனா அந்த கடவுளுக்கே பொறுக்காது.. ம்ம்.. .. கேட்பாரு இல்லாம போச்சு.. இது ஒரு பக்கம் இருக்கட்டும், இவங்க daily காலையில வேலைக்கு போறதுக்கு முன்னாடி மேல சொன்ன list ல எதையாவது அரைச்சு பூசிக்கிட்டு பயமுறுத்துவாங்க..யாரும் தப்பி தவறி..வீட்டு பக்கம் வந்துறாதீங்க..பயந்துபோய்..படுத்த படுக்கை ஆயிடுவீங்க...இல்லை ஒரேடியாக மேல போனாலும் ஆச்சிரியமில்லை..! நான் அட்டைபெட்டிய விட்டு வெளியில வரவே மாட்டேன்..சின்ன உசுரு..பொட்டுன்னு போய்ட்டேன்னா..என்ன செய்யறது.. அதனால..என்னோட meeting time after office hours ie., only evening தான். அவங்க hubby க்கும் , பையனுக்கும் வேற வழியே இல்லை........ என்னை மாதிரி அவங்களுக்கு ஒளிஞ்சிக்க இடம் இல்லை... பாவமா இருக்கு....என்ன செய்யறது....I am helpless !!