சிறு வயதிலிருந்து மட்டும் இல்லை இப்பவும் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கிறது...... நானே அவற்றிற்கு விடை தேடி சந்தேகத்தை தீர்த்துக்கொண்டாலும் இன்னமும் சில கேள்விகள் தொங்கலில் இருக்கத்தான் செய்கின்றன. நீங்கள் பதில் சொல்லுங்களேன்..

1. * இரவில் நிலவு காயும் நேரங்களில், நாம் வானத்தை பார்த்து நடக்கும் போது, நிலவும் நம்முடனேயே வருவது போன்று இருக்கும் அது ஏன்? இது கண் பார்வை சம்பந்தப்பட்டதா? இல்லை நாம் அப்படி நம்முடன் வருவதாக நினைத்துக்கொள்கிறோமா ?

* அப்பாவிடம் சின்ன பிள்ளையாக இருக்கும் போது கேட்டது அப்பாவும் பதில் சொன்னார் தான் , ஆனால் அப்போது புரிந்த மாதிரி இருந்தது..இப்போது புரியவில்லை.

2. எல்லோர் வீடுகளிலும் அப்பா வின் ' அம்மா அப்பா புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள், ஆனால் அம்மாவின் ,அம்மா அப்பா போட்டோவை அவர்களின் நினைவாக ஏன் வைப்பது இல்லை.? ***

3. எல்லா உயிரினங்களும் தண்ணீரில் போட்டவுடன் நீச்சல் (கற்றுக்கொள்ளாமல் அப்படியே நீந்து கின்றன) அடிக்கின்றன. ஏன் மனிதனால் மட்டும் முடியவில்லை. ? **
** என்னுடைய அப்பா இதற்கு ஒரு பிறந்த கோழியை தண்ணீரில் தூக்கி போட்டு அது நீச்சல் அடிப்பதை காண்பித்தார். மனிதன் மட்டுமே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னாரே தவிர்த்து ஏன் என்று சொல்லவில்லை? ! ஒருவேளை அப்போது நான் ஏன் என்ற கேள்வியை அப்பாவிடம் கேட்க மறந்து கோழி நீச்சல் அடிப்பதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன் எனலாம். :) )

4. பாலூட்டும் உயிரினங்கள் எல்லாமே குட்டி போட்டவுடன், தானே சென்று யாரும் சொல்லி த்தராமல் தாயிடம் பால் குடிக்கின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும் சொல்லி தரவேண்டியுள்ளது, ஏன் பிறந்த குழந்தை தானாக இதை செய்வதில்லை?

5. காட்டுக்கு ராஜா வான சிங்கம், நிஜத்தில் ஒரு காட்டெருமையோ, யானையோ அதனருகில் வந்து மூச்சு விட்டால் கூட ஏன் பயந்து ஓடுகிறது? இப்படி ஒரு கோழையான சிங்கத்தை நாம் ஏன் காட்டுக்கு ராஜா என்கிறோம்.? (இதற்கு 'ஹே ராம்' பதில் சொல்வதாக சொல்லி சொல்லவேயில்லை :( )

6. புலிக்கு மரம் ஏற தெரியும்.. ஆனால் ஏன் மரம் ஏறுவதில்லை?

7. பெற்றோர் எல்லோரும் ஏன் பிள்ளை வீட்டில் இருப்பதை/இறப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்.? பெண் வீட்டில் அதாவது மாப்பிள்ளை வீட்டில் இருப்பதை ஏன் கெளரவ குறைச்சலாக நினைக்கிறார்கள்? ***

8. பெண்ணை விட ஆணுக்கு தசைகள் அதிகம் இருப்பதால் தான் அவன் பெண்ணை விட உடல் வலிமை அதிகமானவனாக இருக்கிறான். சரியா?

9. தென் இந்திய கோயில்களின் கருவறை மிகவும் குறுகிய, உயரம் குறைந்த வாயில் கொண்ட வெளிச்சம் இல்லாத இருட்டறைகளாக அமைக்கப்பட்டதன் காரணம் என்ன?

10. மருத்துவம் படிப்பவர்கள், (ஆண்/பெண்) பாலியல் உறவை எளிதாக வைத்துக்கொள்கிறார்கள். அதை ஒரு பெரிய பொருட்டாக நினைப்பதில்லை. அதற்கு அவர்களின் படிப்பு சார்ந்த அறிவும், பாதுகாப்பு முறைகளும் தெரிந்திருப்பது காரணம். உண்மையா? *** (தனிநபர் சம்பந்தப்பட்டது என்றாலும் இந்த கேள்வி எங்கோ எதையோ கேட்டு எழுந்தது)

11. முகம் பார்க்கும் கண்ணாடியில் சிலரின் முகம் கோணலாக ஏன் தெரிகிறது. அதாவது அவருக்கு அவர் முகம் நேராக அழகாக தான் தெரியும், பக்கத்திலிருந்து பார்க்கும் எனக்கு கோணலாக தெரியும். அவரிடம் என் முகத்தை அவர் பார்த்தால் எப்படி தெரிகிறது என்று கேட்டால் சரியாக த்தான் தெரிகிறது என்பார். இதில் கண்ணாடியில் பிரச்சனையா இல்லை... என் கண்களில் பிரச்சனையா.? இல்லை அவர் முகமே கோணல் முகம் தானா?

12. காண்டாமிருகம் ஒரு சைவ விலங்கு. ஆனால் இறந்து கிடக்கும் மிருகங்களின் மாமிசங்களை தின்ன முயற்சி செய்கிறது ஏன் என்பது விளங்கவில்லை. அதனுடைய பற்கள் அவற்றிற்க்கு உகந்தது அல்ல என்றே நினைக்கிறேன். ஒரு வேளை பற்கள் உகந்ததாக இருந்தால், அசைவமாக ஆக இருந்து இருக்குமோ?

13. நம் மக்கள் முடிவே இல்லாத/இல்லாமல் செய்கிற மெகா சீரியல் எடுப்பதை எப்போது நிறுத்துவார்கள்?

14. தேங்காய்-கொழுப்பு என்று உணவில் கட்டுப்படுத்த சொல்லும் போது, எப்படி கேரளாவில் தேங்காய் எண்ணெய் யில் சமைத்த உணவும், தேங்காய் எல்லாவற்றலும் சேர்த்த உணவை வாழ்க்கை முழுதும் சாப்பிடுகிறார்கள், அவர்கள் ஆரோக்கியமாக இல்லையா?

15. மீன் தண்ணீருக்குள் எப்பவும் நீந்திக்கொண்டே இருக்கிறதே அதன் Fins வலிக்காதா?

அணில் குட்டி அனிதா : கவி நீங்க கூட எப்படி எப்போதும் பேசிக்கிட்டே இருக்கீங்கன்னு உங்க வீட்டில இருக்கவங்க கேட்டுக்கிட்டே இருக்காங்களே அதுக்கு பதில் தெரியுமா உங்களுக்கு?

பீட்டர் தாத்ஸ் : The question isn't who is going to let me; it's who is going to stop me.

*** இந்த கேள்விகளை தனிப்பட்ட முறையில் யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம், பொதுவாக எனக்கு தோன்றிய கேள்விகள்.