மனநிலை சரியில்லாமல் வாழ்கையை இழந்தவர்களா? இல்லை வாழ்கையை இழந்ததால் மனநிலை சரியில்லாமல் இருக்கிறார்களா? என்பது விடைதெரியாத கேள்வி. தெருவோருத்தில், கிழிந்த ஆடைகளுடன், சிலருக்கு ஆடைகள் கூட இருக்காது, தான் என்ன செய்கிறோம், எங்கிருக்கிறோம், எப்படி இருக்கிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் மனம் போன போக்கில், கால் போன போக்கில் அல்லது ஏதோ ஒரு இடத்தில் தன்னை இழந்து கிடக்கும் இந்த தெருவோருத்து மனிதர்களும் நம்மில் ஒருவர் தானே.

சக மனிதனை இப்படி தெருவோரங்களில் பார்க்கும் போது நெஞ்சம் சோர்ந்து போகாமல் இருப்பதில்லை. ஹால்டா சிக்னலை (ஒரு வழி பாதையாக்கி விட்டார்கள்), வலதுபுறமாக கடக்கும் போது, அந்த நடைபாதையில் ஒரு மனிதர், தன்னை முழுவதுமாக உணராத நிலையில் கிடந்தார். நல்ல வெயில், ஆடை இல்லை.. ஏதோ ஒன்று ஆடை என்று எங்கோ ஓர் இடத்தில் கிழிசலாக கிடந்தது, ஆனால் அது அவரின் மானத்தை மறைக்கவில்லை என்பதை உணராத நிலையில் கிடந்தார். அவரால் எழுந்து நடக்கமுடியவில்லையா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் படுத்தநிலையில் அவர் கழித்திருந்த சிறுநீர்,மலத்தின் மேலேயே கிடந்தார். தன்னால் தனக்கு எதுவும் உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. குடிகாரரும் இல்லை. மனநிலை பாதிக்கப்பட்டு, தன்னை இழந்த ஒருவர் என்று புரிந்தது. பக்கத்தில் எதையோ தன் சொத்தாக நினைத்து கட்டி வைத்திருக்கும் ஒரு சின்ன அழுக்கு மூட்டை அதற்கு சாட்சியம்.

இவரை தொலைவில் இருந்தே பார்த்துவிட்ட எனக்கு, அவரை அந்த கோலத்தில் வேடிக்கை பார்த்துவிட்டு சென்றுவிட முடியவில்லை நின்று உதவி செய்யும் அளவிலும் அவர் கிடக்கவில்லை. வேளச்சேரியில் இருந்து இடது புறம் திரும்பி சிறிது நேரத்தில் கவனித்தேன், அந்த போக்குவரத்து நெரிசலில் மேற்சொன்னவற்றை சிந்தித்தவாறு அவரையும் தாண்டிதான் விட்டேன். வெயிலுக்கு ஒரு மேல் சட்டை, தலையை சுற்றி ஹெல்மெட்டிற்காக போட்டுக்கொள்ளும் துப்பட்டா என்று நல்ல பாதுகாப்போடு சென்றுக்கொண்டு இருந்தேன். அவரை கடந்துவிட்டாலும், அப்படியே விட்டுவிட்டு அதற்கு மேல் செல்ல முடியவில்லை. வண்டியை நிறுத்தி, சட்டையை கழட்டிக்கொண்டு அவரை நோக்கி நடந்தேன், அதற்குள் அங்கு கடக்கும் வாகனங்களில் வந்தோர் அத்தனை பேரும் என்னை கவனிக்க ஆரம்பித்தனர், ஆண்கள் சிலர் மெனக்கெட்டு வண்டியை நிறுத்தி,"கிட்ட போகாதீங்க மேடம் ஏதாவது செய்துவிட போறான், கார்ப்பரேஷன் வாரிட்டு போயிடுவான்," "He is not a normal person, leave it, No use of helping him" , அனைவருமே எதற்கு இந்த பெண்ணிற்கு இந்த வேலை என்பதை போன்று பார்த்தார்கள், அவர்கள் அப்படி சொல்ல காரணமாக நான் நினைத்தது, அந்த மனிதர் முழு நிர்வாணமாக இருந்ததே.

பொது இடத்தில், நடைபாதையில், நடுத்தர வயதுடைய ஒரு ஆண் நிர்வாணமாக தன்னை உணராதவராக, மனநிலை பாதிக்கப்பட்டு, மலம் சிறுநீர் தான் கழித்திருக்கிறோம் என்றும் தெரியாமல் அதன் மேலேயே கிடக்கும் போது, அவரிடம் செல்ல யாருமே தயங்குவார்கள், பயப்படுவார்கள் தான். ஒரு பெண்ணாக எனக்கு ரொம்பவே அதிகமாகவே அந்த மனநிலை இருந்தாலும், அவரை அப்படியே விட்டு செல்ல முடியவில்லை. எத்தனை பேர் அந்த இடத்தை கடக்கிறார்கள், எத்தனை பேர் இப்படி அவரை வேடிக்கை பார்ப்பார்கள் என்ற எண்ணமே எனக்கு வந்தது. அவரிடம் நெருங்க ரொம்பவே தயக்கம் என்று சொல்வதை விடவும், நிறைய கண்கள் அப்படி ஒரு ஆணை நான் நெருங்குவதை பார்ப்பது வேறு ஒரு விதமான சொல்ல தெரியாத ஒரு மனநிலையை எனக்கு தந்தது, ஆனாலும் என் கால்கள் அவரை நோக்கி நடக்கின்றன. வேறு எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் நினைக்காமல் அவருக்கு அந்த சட்டையை போர்த்திவிட்டு வந்துவிட வேண்டும், அவர் இப்படி கிடக்க க்கூடாது, பிறகு தன்னார்வ நிறுவனத்தை தொடர்பு கொண்டு, அவருக்கு உதவி செய்துவிடலாம் என்று நினைத்தேன்.

சிலர் வண்டியை நிறுத்திவிட்டு கவனிக்க ஆரம்பித்துவிட்டனர் (இதை எல்லாம் நம் மக்கள் சரியாக செய்துவிடுவார்கள்). அவரிடம் நெருங்கிய நிலையில், அப்போது இடதுபுறத்தில் பெரிய கட்டிடம் எழுப்பிக்கொண்டு இருந்தார்கள், அதில் இருந்த வாட்ச்மென், என்னை கவனித்து ஓடி வந்து, "கொடும்மா நான் போடறேன், எப்படி கிடக்கிறான் பாரு, நீ கிட்ட போகவேண்டாம்" என்றார். எதுவும் பேசாமல் சட்டையை அவரிடம் கொடுத்துவிட்டு, அவர் போர்த்துவார் என்ற நம்பிக்கையில் எல்லோரும் நின்று என்னையே கவனிப்பது பிடிக்காமல் வேகமாக வந்துவிட்டேன். அடுத்தடுத்த நாட்களில் அந்த மனிதர் அங்கு இல்லை என்பது மனதுக்கு இதமாக இருந்தது.

அடையார் டெர்மெனஸ் எதிரில் எஸ்.பி.ஐ வங்கி கிளை உள்ளது அதன் அருகில் ஒரு பெண் இப்படித்தான் அமர்ந்திருப்பார், அவரின் கைகளில் எப்போதும் அவரின் சொத்து குவியல் மூட்டை ஒன்று இருக்கும். கிழந்த ஆடை, அழுக்கு, தெருவே கதி. எங்கு சாப்பிடுகிறார், எங்கு தூங்குகிறார் என்று தெரியாது. அலுவலகத்தில் இருக்கும் போது, மழை பெய்தால் என் அருகில் இருக்கும் ஜன்னலை திருந்து வைத்து ரசிக்க முற்படும் நேரங்களில் எல்லாம், இந்த அம்மா எங்கே இருப்பார்கள் என்றே யோசிப்பேன். சில நாட்கள் கவனித்து, Banyan க்கு போன் செய்து அவரை பற்றி சொல்லி அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களும் வந்து அழைத்து சென்று விட்டார்கள். அவர்கள் வரும் போது நான் அங்கு இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார்கள், ஆனால் அவர்கள் வரும் போது என்னை அழைக்கவில்லை. எப்படியோ அந்த அம்மாவை பிறகு நான் அங்கு பார்க்கவில்லை. அடுத்து டி.டி.கே சாலையில் ஒருவர். இவருக்காக ஆண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்திற்கு போன் செய்து அழைத்தபோது, அவர்கள் அலுவலகத்தில் "ஏம்மா நீயே ஒரு ஆட்டோ வைத்து கொண்டு வந்து விட்டுடேன் " என்றார்கள். தனியாக அதுவும் மனநிலை சரியில்லாத ஒரு ஆணை எப்படி பேசி, தூக்கி, எடுத்து ஆட்டோவில் உட்காரவைத்து அழைத்து செல்வது. என்னால் முடியுமா? என்ற கேள்வி எழும்பி, அவர்களிடம் என் நிலைமையை எடுத்து சொன்னேன். சரி அட்ரஸ் கொடுங்கள், முயற்சி செய்யறோம், ஆனால் அழைத்து செல்வோம் என்று உத்திரவாதம் எல்லாம் தரமுடியாது என்றார்கள். அவர்கள் வெகு நாட்கள் அழைத்து செல்லவில்லை தான். அவர் அந்த இடத்திலேயே தான் இருந்தார்.

சில விஷயங்கள் முயன்றும் சரியாக உதவ முடியவில்லையே என்ற குற்ற உணர்வு எழாமல் இல்லை.

மேற்கண்டது போன்ற சக மனிதனை நீங்களும் கண்டிப்பாக நம் தெருக்களில் பார்க்கத்தான் செய்வீர்கள், அவர்களை ஒதுக்கி செல்லாமல், தயவுசெய்து அவர்களை பாதுகாக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தொலைபேசியில் அழைத்து சொல்லுங்கள். சில வருடங்கள் முன்பே மெயிலின் மூலம் எல்லோருக்கும் இதற்கான தொடர்பு தொலைபேசி நம்பர்கள் அனுப்பி இருந்தேன். உங்களின் ஒன்று அல்லது இரண்டு தொலைபேசி அழைப்புகள் ஒரு மனிதனுக்கு மறுவாழ்வு அளிக்க உதவும். தயவு செய்யுங்கள்....

For Men

Anbagam
Ph : 044-2501 5165
http://www.anbaham.org/

Scarf
44 - 2615 3971
44 - 2615 1
073
http://www.scarfindia.org

For Women

18/55, Nelson Manickam Rd
Chennai, Chennai, Tamil Nadu 600094
044 42233666
www.thebanyan.org

இரு தினங்களுக்கு முன் ஒருவரை பார்க்க நேர்ந்தது. இப்படிப்பட்டவர்களை பார்க்காமல் இருக்க போவதும் இல்லை... :((((((((

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்..... மக்கா அம்மணி ய என்ன செய்யறது சென்னை யில் மட்டும் தான் இப்படி மக்கள் இருக்காங்கன்னு அவங்க கூப்பிடற 2 நம்பரை மட்டும் கொடுத்துட்டுட்டாங்க.. நம்ம கவி க்கு அவ்வளவு தான் அறிவு விடுங்க விடுங்க..!!

நீங்க என்ன செய்வீங்களாம், கூகுல் ல "Rehabitation Centre, Chennai" அப்படின்னு டைப் செய்து சென்னை க்கு பதிலா நீங்க எங்க இருக்கீங்களோ அந்த ஊர் பேரை போட்டு தேடுங்க. .உங்க ஊர்ல இருக்க சென்டர் நம்பர் எல்லாம் கிடைக்கும்.. அதுக்கு போனை போடுங்க... சரியா...

பீட்டர்தாத்ஸ் : “Never give succor to the mentally ill; it is a bottomless pit.” - Is it True?