வந்தாகிவிட்டது.. எத்தனை வருட கனவு.. இத்தனை வருடங்கள் கழித்து நிறைவேறும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால் நடந்துவிட்டது. சுதந்திரக்காற்றை சுவாசிக்கலாம், சுதந்திரமாக சிந்திக்கலாம், பேசலாம், சிரிக்கலாம், அழலாம், மனம் சொல்வதை மட்டும் கேட்கலாம்... இந்த சுதந்திரக்காற்று எத்தனை சுகமாக இருக்கிறது.... ஒரு முறை அடிவயிற்றுவரை காற்றை உள்ளிழுத்து சுவாசி்க்கிறாள் சுவாதி. அவள் கையை ஒரு முறை கிள்ளி பார்த்துக்கொள்கிறாள் ..உண்மைதான்....வந்தாகிவிட்டாது.
ஆயிற்று, ஏழு மணிக்கு ரயில், 6.45 க்கு வந்திவிட்டேன். லோயர் பர்த், 2ஆவது ஏசி கோச், லக்கேஜ் அரேன்ஜ் செய்துவிட்டு, டிக்கெட்''டை ஒரு முறை செக் செய்துவிட்டு, செக்கர் வந்தால் டிக்கெட் டை எடுக்க வசதியாக கைப்பையின் சைட் சிப்'பில் வைத்துக்கொண்டேன். கொஞ்சம் ரிலேக்ஸாக பின்னால் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடி... நடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பி பார்க்கிறேன். என்னவோ சொல்ல முடியாத ஒரு பயம் கவ்வுகிறது..... அய்யோ.....ஏன் இது? வேண்டாமே.....கண்விழித்து நேராக உட்காருகிறேன். இல்லை...இனி எதையும் திரும்பி பார்க்கக்கூடாது. இந்த நிமிடம் எனக்கு சொந்தம், இதை மட்டும் யோசிக்கவேண்டும். இதை மட்டும் ரசிக்க வேண்டும்.
என்னவோ என் முகம் ரொம்பவும் இறுக்கமாக இருந்தது. இப்படி ஆகி, ஆக்கப்பட்டு பல வருடங்கள் ஆயிற்று. சிரிக்க வேண்டுமென நினைக்கும் போது எல்லாம் சுற்றி இருப்பவர்களின் வார்த்தைகள் முகத்தை சிரிக்க விடாமல் இறுக்கிவிடும். எங்கே சென்றது என் புன்னகை ? எப்போதும் யாரை பார்த்தாலும் அப்பழுக்கின்றி சிரிக்கும் என் முகம் எங்கே போயிற்று? என் சிரிப்பு அத்தனையும் சுரண்டி எடுத்துவிட்டு, என் முகத்தை மட்டுமல்ல என் மனதையும் இப்படி ஆக்கியது யார்? வெளியில் இருப்பவர்களா இல்லை எனக்குள் இருக்கும் நானா?
இமைகள் உயர்த்தி யார் தன்னுடன் பிரயாணம் செய்கிறார்கள் என்று பார்க்க தோன்றவில்லை. பார்த்து என்ன செய்ய போகிறேன். அவர்கள் ஓவ்வொருவரின் புன்னகையிலும் ஏதோ ஒரு பொய் ஒட்டிக்கொண்டு இருக்கும். உதட்டோர சிரிப்போடு, எங்கே போகிறேன் என்று இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால் மட்டும் என்ன செய்ய போகிறார்கள்?. இத்தனை வருடங்களாக நான் இழந்தவிட்டதை திருப்பி கொடுத்துவிடுவார்களா? இல்லை நீ போகாதே உனக்கு தேவையானதை நாங்கள் செய்கிறோம் என்று சொல்ல போகிறார்களா? அப்படி சொல்லத்தான் இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இல்லை அல்லவா? அப்படி இருக்க ஏன் இவர்களிடம் என்னைப்பற்றி சொல்ல வேண்டும். ஒருவரையும் பார்க்க பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட எத்தனையோ பேர் என்னின் இந்த முடிவிற்கு காரணம். சக மனிதர்களின் போலி சிரிப்பில் இனியும் என்னை ஏமாற்றிக்கொள்ள நான் தயாராக இல்லை. போதும் ..போதும் என்கிற அளவு இந்த பொய்யான பேச்சையும் சிரிப்பையும் புன்னகையையும் பார்த்தாகிவிட்டது.
போதுமான பணம் பேங்கில் இருக்கிறது, ப்ளான் செய்த படி எல்லாம் சரியாக நடக்கிறது. எப்படியும் இரண்டு நாட்களில் போய் சேர்ந்துவிடுவேன். ம்ம்..... எதிர்பார்த்த என் வாழ்க்கையின் ஒரே ஒரு ஆசை இது... ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் ஆசைப்பட்டது முதல் முறையாக நடக்கிறது. இதோ ரயில் புறப்பட்டு விட்டது. இனி யாரும் என்னை தடுக்க முடியாது. என் ஆசை நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில், இறுக்குமான என் முகம் லேசாக தளர்ந்தது. அங்கேயும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? மீண்டும் முகம் இறுகியது. மீண்டும் அப்படிப்பட்ட மனிதர்களை தான் சந்திக்க போகிறேனா? எங்கே சென்றாலும் இவர்கள் நிழலை போன்று துரத்திக்கொண்டு தான் வருவார்களோ?.
"டீ..டீ டீ....காப்பி.காப்பி......." ஒருவர் விற்றுக்கொண்டு சென்றார்...
எங்கேயோ சுற்றிக்கொண்டிருந்த என் மனம் சுற்றுவதை நிறுத்தி, சற்றே இந்த சத்தத்தினை கவனிக்க ஆரம்பித்தது.
பின்னாலேயே...."டின்னர் ஆர்டர் ப்ளீஸ்".மற்றொருவர் சின்ன நோட்டோடு வந்தார்.
"என்ன இருக்கு" ...... நான்
"சப்பாத்தி, ரோட்டி & மீல்ஸ் மேடம், வெஜ் ஆர் நாந்வெஜ்?"
அங்கே போனால் கண்டிப்பாக வெஜ் தான்... ஏன் இப்ப நாந்வெஜ் சாப்பிட்டால் என்ன? ........... ஒன் நாந்வெஜ் மீல்ஸ் ...ப்ளீஸ்! சீட் நம்பர் 32"
எழுதிவிட்டு கடந்து சென்றுவிட்டான்.
படிக்க நிறைய புத்தகங்கள் எடுத்துவந்தேன். அவற்றில் சில வாழ்க்கையின் தத்துவங்கள், தன்னம்பிக்கையை அள்ளித்தரும் புத்தகங்கள். வாழ்க்கையின் தத்துவங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை எடுத்தேன்... என்னவோ அந்த புத்தகத்தை எடுத்தவுடன், எனக்குள் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது. சிரிக்க முடியவில்லை, எல்லோரும் என்னை திரும்பி பார்ப்பார்கள், பைத்தியக்காரி என்று பட்டம் சூட்டுவார்கள். அவரவர் வேலையை தவிர அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதே பலருக்கு இங்கே வேலை. இவர்களுக்கு மத்தியில் எல்லோரையும் போல் நானும் நடிக்க வேண்டும். ஆனால் என் சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. மனதுக்குள் சத்தம் போட்டு சிரித்தேன். என் வாழ்க்கையை கொண்டு இப்படி ஓராயிரம் தத்தவ புத்தகங்கள் என்னால் கூட எழுத முடியும். ம்ம்ம்.... எழுதத்தான் போகிறேன். அவற்றை எல்லாம் விற்று பெரிய பணக்காரி ஆகப்போகிறேன். என் சிரிப்பை என்னால் இன்னமும் அடக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டே இருந்தேன். கண்களில் லேசாக தண்ணீர் வர ஆரம்பித்தது. யாரும் அறியாமல் துடைத்து, சுவாதி போதுமே சிரித்தது..எனக்குள் நானே சொல்லிக்கொண்டு சிரிப்பை அடக்கினேன்.
மனம் எதை எதையோ யோசித்தது. கண்ணை மூடி மனம் சொல்லுவதையும், அது போகின்ற வழியையும் கவனமாக கவனிக்க ஆயத்தமானேன். வேகமாக பறந்தது.....ஏழு கடல் ஏழு மலை தாண்டி..சென்றது.... இதோ...ஆப்பிரிக்க காடுகள்......வந்துவிட்டன..... காடுகளுக்குள் என்னை அழைத்து சென்றது. பச்சை பசேலென்ற அந்த காட்டில், பூக்களை, இலைகளை உரசிவரும் காற்றில் ஏதோ ஒரு சொல்ல முடியாத ஆனால் சுகமான வாசனை என்னை தழுவி சென்றது. லேசாக வழுக்கும் குறுகிய பாதையில் மழை ஓய்ந்த அந்த காலை நேரத்தில் ஈர இலைகள் என் உடலை நனைக்க நான் மட்டும் தனியாக சென்று கொண்டே இருந்தேன்....
நத்தை ஒன்று என் காலடி ஓசையில் பயந்து உடம்பை உள்ளே இழுத்துக்கொண்டது. எனக்கும் இப்படி ஒரு ஷெல் இருந்தால்?, என் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.... ....ஷெல் இருந்தால்.....??!!!! , பிரச்சனை வரும் போது எல்லாம் உள்ளே போயி புகுந்து க்கொண்டு என்னை காப்பாற்றிக்கொள்ளலாம். அதற்கு நான் நத்தையாக இருந்து இருக்கலாம், சுவாதி'யாக இருந்து இருக்க வேண்டாமே.... ...
பாம்பு ஒன்று வேகமாக கடந்து சென்றது...பயமொன்றும் எனக்கில்லை. என்னை பார்த்து பாம்பிற்கும் கண்டிப்பாக பயம் இருக்கும், நான் ஏன் அதைப்பார்த்து பயப்படவேண்டும்.? .....
எங்கே செல்கிறேன் என்று தெரியாத ஒரு நீண்ட பயணம்... அந்த ஒற்றையடி பாதை போயிக்கொண்டே இருக்கிறது. மரங்கள் கடந்து வெறும் பூக்கள் மட்டுமே உள்ள பூமி வருகிறது.."மேலே வானம் !! கீழே பூக்கள். !!" வேறு ஒன்றுமே அங்கு இல்லை. ஆஹா எத்தனை அழகு.!! என் கண்களை கடவுள் இதற்காக தான் படைத்தானோ.... அப்படியே சிலையாக நின்று கண்ணுக்கு எட்டிய அளவு பூக்கக்களின் வண்ணங்களையும், வாசனையும் ரசிக்கிறேன். இந்த பூக்கள் அத்தனையும் இந்த நொடி எனக்கு மட்டுமே சொந்தம்... நினைக்கும் போதே பொங்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை....என் முகமும் அந்த பூக்ககளை போல் மலர்ந்து சிரிக்கிறது.
படப்படவென பறந்து வந்து அமரும் வண்ணத்துப்பூச்சி... ..........பட்டாம்பூச்சி' யா? வண்ணத்துப்பூச்சி'யா?........................... பட்டாம்பூச்சி .................... பட்டாம்பூச்சி........... பட்டாம்பூச்சி' யை பார்த்தவுடன்.. நினைவலைகள் எங்கோ ரிவைண்டு செய்த டேப் ரிக்கார்டர் போல பின்னுக்கு இழுத்து செல்கிறது.. ...... போகாதே...! அங்கே போகாதே... !! இங்கேயே இரு..!! இது தான் சுகம்..சந்தோஷம்.... அங்கே போகாதே.. !! அது வேண்டாம்.. !! ... .அதனிடம் போகாதே..!! உன் கண் எதிரில் இருக்கும் வண்ணத்துப்பூச்சியை பார்த்து ரசி.... ! பார்.. உன் கண் முன்னே எத்தனை வண்ணத்து பூச்சிகள்..?? இவை எல்லாமே அதே போல் தான்... எல்லா வண்ணங்களும் இருக்கிறது... பூவீன் மீது அமர்ந்து அழகாக தேனை உறுஞ்சிகிறது..................
நான் சொல்லுவதை மனம் கேட்கவில்லை........மீண்டும் ஓடுகிறது............... வேகமாக பின்னால் நானும் ஓடுகிறேன்.. ...அய்யோ........ நில் செல்லாதே !! ............... .! ... .இங்கேயே நில்....செல்லாதே....... !! இழுத்து பிடிக்கிறேன் மனதை.. மீண்டும் இறுகி போகிறது என் முகம்... ஏன் இப்படி ? சந்தோஷமாக சில நிமிடங்கள் கூட இந்த மனம் விட மறுக்கிறதே ..... ஏன் இப்படி இல்லாத ஒன்றை தேடி ஓடுகிறது. .எதிரில் இருக்கின்ற ஓராயிரம் மலர்களும், அதனை மொய்க்கும் வண்ணத்துப்பூச்சிகளும்.......
"மேடம்.... டின்னர்.... 45 ரூபீஸ்..சேன்ஞ் ப்ளீஸ்....'
சத்தம் என் காதுகளை தொட, ஆப்பிரிக்க காடுகளிலிருந்து ....இதோ இங்கு வந்து குதித்து விட்டேன்.
தட்டை வாங்கிக்கொள்கிறேன்.பணத்தை கொடுக்கும் போது, பசிக்கு நேரத்திற்கு உணவளிக்கும் அவருடைய கண்களை நேராக பார்த்து, புன்னகையோடு.. "தாங்ஸ்...!!"
அவரும் புன்னகைக்கிறார், சென்றுவிட்டார்.
என் சிந்தனை திரும்ப எங்கேயோ செல்லும் முன் சாப்பிட்டுவிடலாம். சாப்பிட ஆரம்பிக்கிறேன். சிக்கன்... கிரேவி..., சிக்கன் கிரேவி....... என் குழந்தைக்கு சிக்கன் பிடிக்குமே... அவனுக்கு கொடுக்காமல் தனியே சாப்பிடுகிறேனே....? எங்கே என் குழந்தை? அவனில்லாம் எப்படி நான் தனியே இருக்கிறேன்? தனியே சாப்பிடுகிறேன்? அவனை விட்டுவிட்டு எப்படி நான் தனியே இங்கே.? அவன் எங்கே? அவனுக்கு சாப்பாடு யார் கொடுப்பார்கள்.?
ரயில் ஏன் இத்தனை வேகமாக போகிறது,... என்னை சுற்றியுள்ளவர்கள் அத்தனை பேரையும் பார்க்கிறேன். எல்லோரும் ருசித்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
எல்லோரையும் பார்த்து, "யாராவது ரயிலை நிறுத்துங்கள், என் குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.... நான் போகவேண்டும். ..நான் திரும்ப போக வேண்டும்...ரயிலை நிறுத்துங்கள்.........." கத்துகிறேன்.... யாரும் நான் கத்துவதை பொருட்படுத்தவில்லை. என்னை கவனிக்க கூட இல்லை. நான் தனியே கத்திக்கொண்டே இருக்கிறேன். "நான் கத்துவது உங்கள் காதில் விழவில்லையா?" ஒரு வேளை நான் கத்துவது அவர்கள் யார் காதிலும் விழவில்லையோ? ஏன் விழவில்லை.? தொண்டையை ஒரு முறை அழுத்தி பார்க்கிறேன். கணைத்துப்பார்க்கிறேன். திரும்பவும் கத்துகிறேன்...
"தயவுசெய்து யாராவது ரயிலை நிறுத்துங்கள்...... என் குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்... ரயிலை நிறுத்துங்கள்...நான் திரும்ப செல்லவேண்டும்...நிறுத்துங்க...ப்ளீஸ்....நிறுத்துங்க.............".எழுந்து ரயிலை நிறுத்தும் சங்கிலியை இழுத்துப்பிடிக்க எட்டுகிறேன்.........அது உயரமாய் இருக்கிறது, எனக்கு எட்டவில்லை......
" நிறுத்துங்க ப்ளீஸ்...யாராவது ரயிலை நிறுத்துங்க.... ப்ளீஸ்..." அழ ஆரம்பிக்கிறேன்...... "
*******************
வீட்டை விட்டு.........
Posted by : கவிதா | Kavitha
on 09:55
Labels:
கதை
Subscribe to:
Post Comments (Atom)
31 - பார்வையிட்டவர்கள்:
கவிதா! உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது.உணர்ச்சிகள்அசட்டுத்தனம்
இல்லாத வார்த்தைகளாய் விழுகிறது.
அடுத்து “ஓவர் மெலோடிராமா”வும் இல்லை.
யாராயோ விட்டு விட்டுப் போகும் உணர்வுகள் ரயிலுடன் பயணிக்கிறாது.
//அம்ம்மாஆஆஆ...!!...அம்மாஆ .......!!....அம்மாஆ..//
எதற்கு இந்த கடைசி கனவு பாரா?
கடைசியில் “சுபம்” போட்டு முடிக்கவேண்டும் என்ற உந்துதல்?கதையை கெடுக்கிறது.
வாழ்த்துக்கள்.
////அம்ம்மாஆஆஆ...!!...அம்மாஆ .......!!....அம்மாஆ..//
எதற்கு இந்த கடைசி கனவு பாரா?
கடைசியில் “சுபம்” போட்டு முடிக்கவேண்டும் என்ற உந்துதல்?கதையை கெடுக்கிறது.//
இது யதார்த்தம்... !! :) குழந்தையை எந்த அம்மாவும் விட்டு விட்டு செல்ல மாட்டாள் செல்ல தயங்குவாள் என்று அழுத்தமாக சொல்ல வேண்டி சொல்லியது.. :)
பொறுமையாக படித்திருக்கிறீர்கள் நன்றி ரவிஷங்கர்.... :)) ..
//யாராயோ// என்பதை ”எவரையோ” என்றும் //பயணிக்கிறாது// ”பயணிக்கிறது” என்றும் வாசிக்கவும்.
ரவிஷங்கர், நீங்கள் சொன்ன வரிகளை எடுத்துவிட்டேன்.. அது இல்லாமலும் அதே அர்த்தத்தை தான் கதை கொடுக்கிறது..
குறிப்பிட்டு சொன்னதற்கு மீண்டும் நன்றி :)
என்ன சொல்ல வந்தேன் என்றால்,
யாரைப் பிரிந்து போகிறாள் என்பதை எங்கும் கோடிட்டுக் காட்டாமல் வாசகர்களின் யூகத்திற்கு விட்டு விட்டு, பிரிந்து போகும் உணர்ச்சிகள்
ரயிலுடன் பயணித்துக்கொண்டே,
போகிறார் போல் இருந்திருக்கலாம் என்பதுதான்.
வாசகி(க)யு(னு)ம் படித்தவுடன் தாக்கம் இருக்கும்.
நன்றி.
நல்லா வந்துருக்கு கவிதா.
தாயின் உணர்வு.
[[. பார்த்து என்ன செய்ய போகிறேன். அவர்கள் ஓவ்வொருவரின் புன்னகையிலும் ஏதோ ஒரு பொய் ஒட்டிக்கொண்டு இருக்கும்]]
உண்மையாகவும் இருக்கலாம் ...
எங்கே சென்றது என் புன்னகை ? எப்போதும் யாரை பார்த்தாலும் அப்பழுக்கின்றி சிரிக்கும் என் முகம் எங்கே போயிற்று? என் சிரிப்பு அத்தனையும் சுரண்டி எடுத்துவிட்டு, என் முகத்தை மட்டுமல்ல என் மனதையும் இப்படி ஆக்கியது யார்? வெளியில் இருப்பவர்களா இல்லை எனக்குள் இருக்கும் நானா?]]
இந்த நிலை அடிக்கடி எனக்கு நிகழும்
ஆச்சர்யம் என்னவென்றால் - எதிரில் இருப்பவர் நான் நல்லா சிரிக்கிறேன் என்று சொல்லுவார் - அந்த நேரத்திலும் எனக்கு தோன்றும்
முகத்தில் சிரிப்பு காட்டி உள்ளே சிரிக்காமல் இருந்திருப்பேன் போலும்
போன கமெண்டில் விட்டுப் போனது.
நானாக இருந்தால் சில பாராக்களை,வார்த்தைகளை எடுத்து விடுவேன்.
ஏன்?
உரத்தகுரல் உணர்ச்சிகள் மற்றும்
“ஓவர் பில்ட அப்”யதார்த்தம் கூடாது என்பதாக.ஓவர் ஆக்டிங்காக மாறிவிடும். மெல்லிய குரலிலும் சொல்லலாம்.அடுத்து overstreching the emotions.too much of anything is good for nothing என்பதாக.
எவைகளை எடுக்கவேண்டும்? கிழே பார்க்க.
1.//அவரவர் வேலையை .....சிரிப்பை அடக்கினேன்//
2.//பாம்பு அதைப்பார்த்து...... பயப்படவேண்டும்.?//
3.//படப்படவென பறந்து.....மொய்க்கும் வண்ணத்துப்பூச்சிகளும்//
4.//என் சிந்தனை திரும்ப .......சாப்பாடு யார் கொடுப்பார்கள்//
5.// நிறுத்துங்க ப்ளீஸ்..." அழ ஆரம்பிக்கிறேன்...... //
இப்போது பாருங்கள்.நான் “ஏன்”னில் சொன்னதெல்லாம் மறைந்திருக்கும்.
கதையும் சிக்கென இருக்கும்.
இது என் சொந்த ரசனையாகத் தோன்றினாலும் அனுபவத்தில் உணர்வீர்கள்.
முயற்சி செய்து பாருங்கள்.
நன்றி கவிதா.
@ ராஜாராம் - வாழ்த்துக்களுக்கு நன்றி :)
@ ஜம்ஸ்
//ஆச்சர்யம் என்னவென்றால் - எதிரில் இருப்பவர் நான் நல்லா சிரிக்கிறேன் என்று சொல்லுவார் - அந்த நேரத்திலும் எனக்கு தோன்றும்
முகத்தில் சிரிப்பு காட்டி உள்ளே சிரிக்காமல் இருந்திருப்பேன் போலும்//
ம்ம் இதை தான் நான் உதட்டளவு சிரிப்பு.. இதில் பொய் இருக்கிறதா என்பதை விட... நம் மனதளவில் சந்தொஷமாக உணர்ந்து சிரிக்கவில்லை, அதாவது மற்றவர்களுக்காக அந்த சந்தர்ப்பத்தில் சூழ்நிலையில் சிரிக்க வேண்டி சிரிக்கிறோம், நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் சிரிக்கிறோம். :)
//[[. பார்த்து என்ன செய்ய போகிறேன். அவர்கள் ஓவ்வொருவரின் புன்னகையிலும் ஏதோ ஒரு பொய் ஒட்டிக்கொண்டு இருக்கும்]]
உண்மையாகவும் இருக்கலாம் ...//
நீங்கள் மேற்கொண்ட இட்ட பின்னூட்டத்திற்கும் இதற்கும் தொடர்பு உண்டு...
உதட்டால் மட்டும் சிரித்தால் அதை உணரக்கூடியவளாக சுவாதி கதாபாத்திரம் இருக்கிறது. நீங்கள் சொன்னபடி சிலர் நீங்கள் சிரிப்பதாக எண்ணக்கூடம், உள்ளத்தோடு சிரிக்கிறீர்களா என்பது முக்கியம்.... அதை தான் சுவாதி சொல்லிறாள் :)
@ ரவிஷங்கர், கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.. இப்போது தான் கதை கொஞ்சம் எழுதுகிறேன்.. இனி.. நீங்கள் சொல்லியதை கவனத்தில் வைத்தும் எழுத முயற்சி செய்கிறேன்.
நன்றி :)
அதாவது மற்றவர்களுக்காக அந்த சந்தர்ப்பத்தில் சூழ்நிலையில் சிரிக்க வேண்டி சிரிக்கிறோம், நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் சிரிக்கிறோம்.]]
கிட்டதட்ட சரிதாங்க.
ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை இன்னும் வார்தைகளில் கொண்டு வரத்தெரியவில்லை.
போலியான சிரிப்பு அல்ல அது
உண்மையானது தான்
ஆனாலும் உள்ளுக்குள்ளே ஒரு வெறுமை ஏதோ ஒரு வெறுப்பு அல்லது இழந்துவிட்ட துடிப்பு
இன்னும் இன்னும் ...
தெர்லீங்க ...
என்ன ஆகப் போகிறதோ, எதற்காகப் போகிறாள், எங்கே போகிறாள், எப்படியெல்லாம் போகிறாள், அப்படிப் போனால் என்னவெல்லாம் நடக்கும், எங்கும் மனிதர்கள் தானே இருப்பார்கள், புன்னகை, புத்தகங்கள், பார்வைகள் என பல விசயங்களை அலசிய ஒரு அருமையான கதை.
பிரிதல் அத்தனை எளிதில்லை என தாய்மையின் பாசத்தைக் கொண்டு கதையை கனவு போன்றே முடித்திருப்பது சற்று ஏமாற்றத்தைத் தந்தாலும் எழுதப்பட்ட விதம் மிகவும் அழகாக இருக்கிறது.
மிக்க நன்றி.
அருமையான கவிதையாய் வடித்திருக்கலாம் போன்ற கதை!
நல்ல முயற்சி...குட் ;)
மனஓட்டங்களை அருமையான கதையாக கொண்டு வந்திருக்கிறீர்கள்
நல்லாயிருக்கு...
வேற விமர்சனம் பண்ணத்தெரியல. :)
வித்தியாசமா எழுத முயற்சி செய்திருக்கீங்க
கொஞ்சம் திருத்தி தட்டி இன்னும் நல்லா எழுதுங்க
// நட்புடன் ஜமால் said...
எங்கே சென்றது என் புன்னகை ? எப்போதும் யாரை பார்த்தாலும் அப்பழுக்கின்றி சிரிக்கும் என் முகம் எங்கே போயிற்று? என் சிரிப்பு அத்தனையும் சுரண்டி எடுத்துவிட்டு, என் முகத்தை மட்டுமல்ல என் மனதையும் இப்படி ஆக்கியது யார்? வெளியில் இருப்பவர்களா இல்லை எனக்குள் இருக்கும் நானா?]]
இந்த நிலை அடிக்கடி எனக்கு நிகழும்
ஆச்சர்யம் என்னவென்றால் - எதிரில் இருப்பவர் நான் நல்லா சிரிக்கிறேன் என்று சொல்லுவார் - அந்த நேரத்திலும் எனக்கு தோன்றும்
முகத்தில் சிரிப்பு காட்டி உள்ளே சிரிக்காமல் இருந்திருப்பேன் போலும்//
எனக்கும் அப்படித் தோன்றியிருக்கிறது...
இந்த கதையில் பல இடங்களில் சுவாதிக்கு பதிலாக நிலா என்று படித்தேன்.... இப்படித்தான் நானும் என் உலகத்திலிருந்து தப்பி செல்லவேண்டும் என்று பல சமயங்களில் யோசித்திருக்கிறேன்..
அருமையான எழுத்து நடை... உணர்வுப்பூர்வமாக இருந்தது...
@ இராதாகிருஷ்ணன் - நன்றி :)
@ வெயிலான் - நன்றி :)
@ Choco- அட பாருய்யா!!..புள்ள குட் எல்லாம் சொல்லி இருக்கு.. ம்ம்..!! :) நன்றிப்பா..
@ அமித்தும்மா - :) நன்றிப்பா
@ பீர் - :) நன்றி
@ அபுஅஃப்சர் - நன்றி... திருத்தி தட்ட...முயற்சி செய்யறேன்.. :)
@ நிலா நன்றி, சுவாதியில் உங்களை பார்க்கிறேன்.... தப்பிக்க வழியில்லை.. :))))))
nice but I dont like the ending...:-(itz my opinion oni!!!!
எழுத்துநடை அசத்தலா இருக்கு கவிதா..
@ புனித் - ம்ம்...நன்றி...சரி
எனக்கு தெரிந்து 2 முடிவுகள் தான் இருக்கு...
1. சுவாதி திருப்பி வீட்டுக்கு போயிடறா.( அதை நேரடியாக இங்க நான் சொல்லல..) ஏன்னா இந்த குழந்தை பாசத்தோடு போனால் அவள் நிம்மதியாக இருக்க முடியாது, அப்படி ஒரு நிம்மதியில்லாத வாழ்க்கையை அங்கே போய் தொடரவதற்கு இங்கேயே இருந்துவிட்டு போகலாமே :)
2. குழந்தை மற்றும் அல்ல யாரைப்பற்றியும் கவலைப்படாமல், தன் விருப்பப்படி பயணத்தை தொடர்கிறாள்
இதை தவிர்த்து வேறு இருக்கா? :) சொல்லுப்பா எழுதித்தான் பார்த்துடுவோமே.. புனித்' க்காக.. சோக ஸ்மைலியை மாத்திடலாமே.. :)...சரியா.. ?! :)))
@ முத்து - வாங்க.. ! நன்றிப்பா... .. இந்த பதிவுக்கு எல்லாமே பாராட்டாக வந்து இருக்கு.. சந்தோஷமா இருக்கு.. :)))
அருமை! நல்லாயிருக்கு! நல்லா வந்துயிருக்கு!? என்று சொல்லும்படிக்கு இருக்கும் என்று நம்பி படிக்காமலேயே (!?) பின்னூட்டத்ததை போட்டு விட்டு S ஆகிறேன்!
அன்புடையீர்!
நன்கு எழுதுகிறீர்கள். முயற்சியும் பயிற்சியும் இருப்பின் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வாழ்த்துக்கள்.
@ஜெகநாதன் - :) வாங்க.. ஆமாங்க !! .நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்லி இருக்காங்க.. ஆனாலும் ஒரு தரம் படிச்சி பார்த்துடங்களேன் :)
@லதானந்த் : வாங்க...
//அன்புடையீர்!//
ஏங்க இப்படி... ?! :))) கவிதா ன்னு அட்ரஸ் பண்ணலாமே ?!! :((
//நன்கு எழுதுகிறீர்கள். முயற்சியும் பயிற்சியும் இருப்பின் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வாழ்த்துக்கள்.//
ம்ம்ம்.. வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.. நிச்சயம் முயற்சி செய்யறேன். :)
தொடர் கதையா?? நல்ல ஆரம்பம்!!
@ சதீஷ் - தொடர்கதை இல்லை..!!
நன்றி :)
@ தெகாஜி - பின்னூட்டம் எடுத்ததற்கு நன்றி :)
Post a Comment