ஒரு திரைபடத்தில் க்ளைமாக்ஸ் காட்சிகள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது இந்த பதிவை எழுதும் வரை வந்து இருக்கிறதே, இது தான் இயக்குனரின் வெற்றி, பார்க்கும் பார்வையாளர்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த தாக்கம் எதிர்மறையாகும் போது சில நேரங்களில் படம் தோல்வி அடைந்தும் விடுகிறது. தோல்விக்கு க்ளைமாக்ஸ் மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. அதுவும் ஒரு காரணம்.

க்ளைமாக்ஸ் ..

1. காட்சி அமைப்புகள் நாம் நினைத்தவாறே அமைந்திருந்தாலும் ஒரு தாக்கம் இருக்கும்
2. காட்சி அமைப்பு இப்படி இருந்திருக்கலாமே என்ற எண்ணத்தை நமக்கு உண்டாக்கியும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.

பூ : தான் விரும்பியவனின் வாழ்க்கை நன்றாக அமையவில்லை என்று தெரிந்ததும், மனம் நொந்து, அடக்கமுடியாமல் "ஓ வென்று அழும் காட்சி....... " அந்த கடைசி சில நிமிடங்களில் அந்த பெண்ணை போலவே, அவன் திருமணத்திற்கு பின் சுகமாக இருக்கிறான் என்ற நம்மின் எதிர்பார்ப்பு பொய்யாகிறது. இந்த பெண்ணும் இனி நிம்மதியாக இருக்க மாட்டாளே ! என்ற தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.......

ஆனந்த தாண்டவம் : அந்த கடைசி கெஞ்சலில் அந்த பெண்ணிற்கு அவன் வாழ்வளித்திருந்தால், அவள் இறந்திருக்க மாட்டாள், கடைசியாக அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க ஏன் எல்லோரும் மறந்து போனார்கள் என்று தொக்கி நிற்கும் கேள்வி...... ஏன் இப்படி அனைவரும் சுயநலமாக இருந்து ஒரு உயிரின் இழப்பிற்கு காரணமானார்கள்......... அதுவும் அந்த பெண்ணை விரும்பியவன்.." சாரி" சொல்லி சென்றது... .....ம்ம்ம்ம்...:((((( இது தான் தாக்கம்...

சேது : இவ்வளவு சோகம், வலி வேண்டாமே என்று இன்றும் நினைக்கவைத்த படம்

பிதாமகன் : இதுவும் அப்படியே, சூர்யாவை சாக அடித்து இருக்க வேண்டாம் ..ஒருவரின் பாசத்தைக்காட்ட மற்றொருவரை சாகத்தான் அடிக்க வேண்டுமா என்ற கேள்வியோடு...

அன்பே சிவம் ; தனி மனிதனின் தியாகமும் அவனின் ஆசாபாசங்கள் அத்தனையும் மறுக்கப்பட்ட, அவனாலேயே மறைக்கப்பட்ட தொடர்கதை... தியாகிகள் எப்போதும் இப்படித்தான் தங்களின் வாழ்க்கையை தொடரவேண்டுமா என்ற கேள்வியோடு...

நந்தா : பாலா;வின் திரைப்படங்களில் மற்றொருமொரு சோகமான க்ளைமாக்ஸ்... ஏன் பாலாவிற்கு யாரும் சந்தோஷமாக வாழ்ந்தால் பிடிக்காதா என்ற கேள்வியுடன் ....

கல்கி : பாலச்சந்தர் அவர்களின் படங்களில் மிகவும் பிடிக்காத படங்களில் ஒன்று இது. என்ன ஒரு மோசமான கதை... க்ளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ள முடியாததற்கு காரணம் நம் கலாசாரம் அல்ல, ஒருவரை இப்படித்தான் தண்டிக்க வேண்டும் என்று எடுத்த முடிவு முட்டாள்தனமானது... அப்படி ஒரு ஆணிடம் இருந்து தான் குழந்தை பெற்று... அவனால் வாழ்க்கையை இழந்த குழந்தை இல்லாத இன்னொரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டுமா? இந்த படத்தில் க்ளைமாக்ஸ் மட்டும் இல்லை எதுவுமே ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லாததால் ஏற்பட்ட தாக்கம்...

உதிரிப்பூக்கள் : இப்பவும் எப்பவும் மிகவும் பிடித்த க்ளைமாக்ஸ், தன்னை உணர்ந்து, விஜயன் கதாபாத்திரம் தானே தன் முடிவை தேடிக்கொள்வது. அதை ஊர் சனம் அத்தனையும் நின்று வேடிக்கை பார்ப்பது. இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு ஒரு சல்யூட். "நான் ஒருவன் கெட்டவனாக இருந்ததால் நல்லவர்களான உங்களை எல்லோரையும் இன்று கெட்டவர்களாக்கிவிட்டேன் " என்ற *வசனம் எனக்கு இதில் மிகவும் பிடித்தது. (*வார்த்தைகளில் தவறிருக்கலாம் எப்பவோ பார்த்தப்படம்)

சிந்துபைரவி : குழந்தை இல்லா பெண்ணிற்கு இன்னொரு பெண் தியாகியாகி குழந்தை பெற்றுத்தரும் இயந்திரமாக (மட்டும்) ஆக்கப்பட்ட மற்றுமொருப்படம். இந்த தியாகி என்ற பெண்ணிற்கு ஆசைகள், எதிர்பார்ப்புகள், எதிர்கால வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லையா?...இல்லை இருக்காதா..?. என்னவோ.. புதுமை படைக்கிறேன் என்ற இவரின் படங்களில் பல எரிச்சல்களை எற்படுத்தியவை. இதிலும் அப்படி ஒரு க்ளைமாக்ஸ் ..மேல் சொன்ன கேள்விகளுடன்...

காஞ்சிபுரம் : க்ளைமாக்ஸ்'ஸில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரமும் இறந்துபோவார் என்று நினைத்தேன்.... இப்பவும் அவர் ஏன் இறக்கவில்லை என்ற கேள்வி தொக்கி நிற்கிறது, மகளை கொன்றுவிட்ட பிறகு, மகள் மட்டுமே வாழ்க்கை என்ற அவருக்கு ஏது (அ) எது இனி வாழ்க்கை? இயக்குனர், அதை ஏன் யோசிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துக்கொண்டே இருக்கிறது. இப்படி பைத்தியம் ஆக்கி படத்தை முடிக்க வேண்டுமா?

சிறைச்சாலை : பொய்யான காத்திருப்பு... சுத்தமாக பிடிக்கவில்லை..ஏன் இப்படி? பொய்யான காத்திருப்புகளுக்கு முடிவு இல்லையா... ? ஒருவர் மேல் வைத்திருக்கும் ஆழமான அன்பு நம்மை சிந்திக்க வைக்காமல் செய்துவிடுகிறதா? சிந்திக்க முடியாமல், பைத்தியம் போல் ஆக்கி கொண்டால் மனிதனின் அறிவுக்கு வேலை இல்லாமல் போகுமே... :((. என்னவோ இந்த க்ளைமாக்ஸும் ஏன் இப்படி என்ற கேள்வியோடு நிற்கிறது...

மின்சாரக்கனவு : நிஜமாகவே எதிர்பார்க்காத முடிவு, அரவிந்த்சாமி கதாபாத்திரம் சாமியார் ஆனது.. :)))))))) வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதற்கு உதாரணம் ... ஏன் காதல் தோல்வி இப்படித்தான் முடியவேண்டுமா என்ற கேள்வியோடு...

நான் கடவுள் : படம் இன்னமும் பார்க்கவில்லை.. பார்த்திருந்தால் நிறைய எழுத இருக்குமென்று நினைக்கிறேன்... பாலாவின் படமாயிற்றே.... . ?! :)

பதிவின் க்ளைமாக்ஸ் : இன்னமும் நிறைய நிறைய படங்கள் இருக்கின்றன... நினைவில் என்றும் இருப்பவை போல எழுதும் போது நினைவில் வந்தவை இவை மட்டுமே...

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்..... .அம்மணி க்கு மட்டும் க்ளைமாக்ஸ்'ஸே வர மாட்டேங்குது.... நானும் எதிர் பாத்து எதிர் பாத்து ஏமாந்து போறேன்.... :(((

பீட்டர் தாத்ஸ் :It was a great movie, but I didn't think it was going to end like that,