எல்லா ஜிம்' களிலும் ஒரு டயட்டீஷியன் இருப்பார், அவர்கள் நினைக்கும் அல்லது நாம் நினைக்கும் அளவிற்கு உடல் எடை குறையவில்லை என்றால், உடனே வந்து உபதேசம் செய்ய ஆரம்பித்துவிடுவார். உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தவுடன் எனக்கு கொடுக்கப்பட்ட இரண்டு புத்தங்கங்கள்

1. எப்படி / என்ன உணவு சாப்பிடவேண்டும், ஒவ்வொரு உணவின் கலோரி அளவு உள்ள புத்தகம்

இதை ஒரு முறை படித்துப்பார்த்துவிட்டு, இது நமக்கு சரிப்பட்டு வராது என்று ஓரமாக வைத்து விட்டேன். முதலில் எடுத்து படித்தவன் என் அன்பு மகன், புரட்டி பார்த்துவிட்டு என்னை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். உன்னை பத்தி தெரியாம உங்க ஜிம் ல என்ன என்னவோ செய்ய சொல்றாங்க போல.. ம்ம்.. ஆமா நீ இந்த டயட் லிஸ்ட் எல்லாம் முழுசா படிச்சியா..? படிச்சி இருக்க மாட்டியே.. அப்படியே படிச்சாலும் உனக்கு புரிஞ்சி இருக்காதே..... ...ஹய்யோ ஹய்யோ!! ஏன்ன்ன்ன்ன்ன் உனக்கு இந்த வேலை...?!! என்னவோ போ.. எப்படியும் இந்த ஜென்மத்துல நீ வெயிட் ரெடியூஸ் பண்ண போறது இல்ல.....

அடுத்து என் வீட்டுக்காரர், இவருக்கு எப்பவும் ஒரு நல்ல பழக்கம், எதை படித்தாலும் முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை படித்துவிடுவது. சோ, இந்த புத்தகம் கையில் கிடைத்தவுடன், படிக்க ஆரம்பித்தவர், நடுவே என்னை திரும்பி பார்த்து நக்கலாக சிரித்தவாறே, இந்த டயட் எல்லாம் நீ செய்தால், ஜிம் க்கு போக வேண்டிய அவசியமே இல்லையே? எடுத்து உள்ள வை! என்றார்.

ம்ஹூம் குடும்பத்தில் நம்மை பார்த்தால் எல்லாருக்குமே நக்கலா போச்சி.. கவனிச்சிக்கிறேன்.. !!

2. தினமும் என்ன சாப்பிடுகிறேன் என்று தேதி போட்டு , நேரம் குறிப்பிட்டு எழுதி டயட்டீஷியனிடம் காண்பிக்கவேண்டும்.

சரி உண்மையாக சத்தியமாக என்ன சாப்பிட்டோமோ அதை எழுத வேண்டும் என்று நானும்

6.30 டீ ஒரு கப்
9.30 இட்லி 3, தேங்காய் சட்னி
1.15 சாதம், அவரைக்காய் சாம்பார்,கருணைகிழங்கு வறுவல்
5.00 டீ ஒரு கப்
7.00 சூப்
8.30 சப்பாத்தி 3 + வெங்காயத்தொக்கு

தண்ணீர் - 3.5 லிட்டர்

இப்படி எழுதிவிட்டு வருவேன், மெனு தினமும் மாறும், நேரமும் மாறும். இதை பார்த்துவிட்டு டயட்டீஷீயன் நீங்க 9.30 லிருந்து 1.15 வரை எதுவுமே நடுவில் சாப்பிடவில்லை அதனால் நடுவே பழச்சாறு, இல்லை சுண்டல், காய்கரி சாலட், இப்படி ஏதாவது சாப்பிடுங்கள், அதே போல் மோர் நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பு எழுதிவிட்டு செல்வார். இதில் அந்த கருணைகிழங்கு, தேங்காய் சட்னி யை சிகப்பு கலரால் சுழித்து, வறுவல், கொழுப்பு மிகுந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்று குறிப்பு இருக்கும்.

சொன்னார்களே என்று நானும் மோர் நிறைய சேர்த்துக்கொண்டேன், ஆனால் வெண்ணெய் எடுக்கவில்ல. 2-3 நாளில் ஏதோ கொஞ்சம் இறங்கிய எடை கூட ஆரம்பித்தது. எனக்கு இந்த வெண்ணெய் எடுத்து எல்லாம் மோர் செய்ய தெரியவில்லை அதனால் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இதை 3 தினம் சென்று கவனித்த டயட்டீஷியன் நோண்ட ஆரம்பித்தார், நான் நடந்ததை சொன்னவுடன் சரி மோர் வேண்டாம் ஆனால் கண்டிப்பாக நீங்க பழங்கள் நிறைய உணவில் சேர்க்க வேண்டும், அப்புறம் ஒவ்வொரு உணவு இடைவெளிக்கும் 2 மணி நேரம் இருக்கவேண்டும். இடைவெளி அதிகமானால் நீங்கள் அதிகம் சாப்பிட ஆரம்பித்துவிடுவீர்கள் என்று அட்வைஸ்.

எப்படி எழுதினாலும் ஏதாவது ஒரு நொட்டு குறிப்பு எழுதிவிட்டு சென்றார்கள், சரி என்னத்தான் செய்வது, உடற்பயிற்சி சொல்லி தரும் அந்த பெண்ணிடம் "ஏம்மா தெரியாமல் உன்கிட்ட பணம் கொடுத்து ஜிம் ல் சேர்ந்துவிட்டேன் அதுக்காக இப்படியா.. இட்லி க்கு சட்னி தொட்டுக்கொள்ள கூடாதுன்னு எப்படி? காலங்காலமாக அதை த்தானே நாம சாப்பிட்டு வருகிறோம்...?!! இப்படி அநியாயத்துக்கு அதை சாப்பிடதே இதை சாப்பிடாதேன்னா... நான் வீட்டிலேயே பட்னி கிடந்து உடம்பை குறைத்துக்கொள்வேனே.. என்று கடுப்பாக சொல்லிவிட்டு ஒரு நாள் மதியம் பசிக்காமல் சாப்பிட மறந்து போய்விட்டதால்,

from 10 - 4.15 - I didnt feel hungry, so I didnt take any food. என்று எழுதிவிட்டு வந்தேன். அடுத்தநாள் சென்றால், டயட்டீஷியன், பயிற்சியாளர்கள் எல்லாம் எனக்காக வெயிட் செய்து கும்ம ஆரம்பித்தார்கள். இது வரைக்கும் யாருமே இப்படி டயட் ஷீட் எழுதியதில்லை.. நீங்க என்ன இப்படி எல்லாம் எழுதறீங்க.. என்றார்கள்.

பின்ன என்னங்க.. இடைவெளி விட்டா அடுத்தநாள்... இடைவெளி விடக்கூடாதுன்னு ஒரு குறிப்பு எழுதறீங்க. .சரி இடைவெளி இல்லாமல் எழுதுணுமேன்னு இப்படி எழுதினேன்.. அது தான் உண்மை என்றவுடன்.. கடுப்பாக இருந்தாலும் சரி லிக்குவுட் டா வாவது ஏதாவது சாப்பிடுங்கப்பா ன்னு சொல்லி விட்டுட்டாங்க...

அதற்கு பிறகு எதக்கு நமக்கும் அவங்களுக்கும் பிரச்சனை என்று ஒரு ஸ்டேன்டர்ட் மெனு எழுதிவிட்டு வருவது வழக்கமாக்கி கொண்டேன்.

6.30 டீ ஒரு கப்
9.30 நூடுல்ஸ் 1/2 கப்
10.30 வெள்ளரிக்காய் - 2
1.15 சாதம், சாம்பார்,முட்டை
3.00 - காய்கரி சாலட்
5.00 டீ ஒரு கப்
7.00 சூப்
8.30 சப்பாத்தி 3 + தொக்கு
9.00 - பழங்கள்

ம்ம்..ஒரு தொல்லை விட்டது. இப்பவெல்லாம் அந்த டய்ட் டீஷியன் எனக்கு குறிப்புகள் எழுதுவதில்லை அப்படியே எழுதினாலும்..- ஒரே வார்த்தை - Good !! தான்.. ம்ம் எங்க க்கிட்டியேவா?? பணத்தையும் வாங்கிக்கிட்டு இவங்க ஜிம் ல நம்ம செய்யற கொடுமை இருக்கே............ முடியல.... !!

அணில் குட்டி அனிதா : ...... சொல்ல ஒன்னியம் இல்ல.. ..அம்மணிய திருத்தமுடியாது.......!! திருத்த நினைக்கவறங்க எல்லாரும் முட்டைஸ்..!! நான் முட்டையாக விரும்பல.. அப்ப நீங்க??!!

பீட்டர் தாத்ஸ் :
Food is an important part of a balanced diet.