ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாமா? அதுவும் நம் குழந்தை ஒன்று இருக்கும் போது? ஆகாயநதி அம்மாக்கள் பதிவில் என்னுடைய கன்னத்தில் முத்தமிட்டால் என்ற பதிவை படித்தபின் குழம்பி போய் கேட்டு இருக்கிறார்.

என்ன சொல்லுவது? சரி அவருக்கு அங்கு பதில் சொல்லுவதை விடவும், தனியாக பதிவு போடுவது சரியென்று பட்டது. பொதுவாக குழந்தை இல்லாதவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் போது எந்த பிரச்சனைகளும் வருவதற்கு வாய்பில்லை என்றே நினைக்கிறேன். ஒரே குழந்தையாக இருக்கும், அந்த குழந்தையின் மேல் தனி கவனம் செலுத்தி வளர்ப்பார்கள்.

நம்மில் பலருக்கு உடனே தோன்றக்கூடிய சந்தேகம், இப்படி எடுத்து வளர்க்கும் போது சொந்தங்கள் ஏதும் சொல்வார்களா? அந்த குழந்தையை தனியாக பிரித்து பார்ப்பார்களோ, அதனால் அந்த குழந்தை மனதளவில் பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் வரும். உண்மையாக இருந்தாலும், குழந்தைகள் இல்லாதவர்கள், அப்படி ஒரு குழந்தையை தத்து எடுக்கும் வளர்க்கும் போது முதுகுக்கு பின்னால் என்ன வேண்டுமானாலும் பேசினாலும் நேரில் கண்டிப்பாக அப்படி எதுவும் யாரும் சட்டென்று சொல்லிவிடவும், நடந்து க்கொள்ளவும் மாட்டார்கள். ஒன்று குழந்தைகள் இல்லாதவர்கள் வருத்தப்படுவார்கள் என்பதும், இரண்டாவது, அந்த குழந்தையால் அவர்களுக்கு கிடைத்திருக்கும் சந்தோஷமும் காரணங்களாக இருக்கும்.

அடுத்து சொந்த பிரச்சனைக்கு வரலாம், நமக்கு முன்னமே ஒரு குழந்தை இருந்து, இரண்டாவதாக ஆதரவற்ற குழந்தையை எடுத்து வளர்க்க முற்படும்போது நாம் யோசிக்க வேண்டியவை

1. சரி சமமாக அந்த குழந்தையை நடத்தும் அளவிற்கு நமக்கும், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்ல எண்ணங்களும், முதிர்ச்சியும் இருக்க வேண்டும். குறிப்பாக நம் பெற்றோருக்கு இருக்க வேண்டும்.

நான் எந்த வீட்டிற்கும் தத்து குழந்தையாக சென்றது இல்லை, ஆனால் அப்பாவும் தாத்தாவும் இறந்த பிறகு என்னை சொந்தங்கள் வீட்டிற்கு அனுப்பி தங்க வைத்தார்கள். அண்ணன் மகளாக, தங்கை மகளாக சென்று தங்கியிருக்கிறேன். குழந்தையாக அங்கே நான் எப்படி நடத்தப்பட்டேன் என்பது இன்னும் பசுமரத்து ஆணி போல் என் நெஞ்சில் இருக்கிறது. அவர்களின் சொந்த குழந்தைகளை போன்று என்னை அவர்கள் நடத்தியது இல்லை.

சில உதாரணங்கள். சாப்பிட ஏதாவது பலகாரம் வாங்கி வந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு போக த்தான் எனக்கு கொடுப்பார்கள். சில நேரங்களில் அவற்றை மறைத்து வைத்து கொடுப்பதை கூட பார்த்து இருக்கிறேன். சாப்பாடும் அப்படித்தான், தன் குழந்தைகள் விருப்பத்திற்கு செய்வார்கள், என்னை அப்படி கேட்டு செய்ததும் இல்லை, சமமான உணவை கொடுத்ததும் இல்லை. அதை பார்த்து பார்த்து நான் என் எதிர்பார்ப்புகளை அந்த வயதிலேயே குறைத்துக்கொண்டேன். அடுத்து உடைகள், அதுவும் எனக்கென்று ஒரு பட்ஜெட் வைத்து இருப்பார்கள். :) அவர்கள் குழந்தைகளுக்கு அப்படி எதுவும் பட்ஜெட் இருக்காது. என்ன பணம் சொல்லுகிறார்களோ அந்த அளவில் உடைகளை செலக்ட் செய்ய பழக்கிக்கொண்டேன். சில சமயம் உனக்கு இப்போது செய்ய முடியவில்லை என்றும் சொல்லுவார்கள், நானும் சரி பரவாயில்லை என்று சொல்லுவேன். வீட்டு வேலைகளும் எனக்கென்று கொடுத்துவிடுவார்கள். அவர்கள் குழந்தைகளை குழந்தையாக பார்ப்பார்கள், ஆனால் என்னை அப்படி பார்க்க மறந்துவிடுவார்கள். எல்லாவற்றிக்கும் மேல் என்னை ஒரு பாரமாக நினைத்தார்கள், அதற்கு காரணமாக நான் நினைப்பது , அவர்களின் வருமானத்திற்கு நான் அவர்களுக்கு அதிகபடியாக ஒரு ஆள். ஒரு ஆள் வீட்டில் அதிகமானால், சாப்பாடு முதற்கொண்டு எல்லாமே பட்ஜெட் டில் அதிகமாகும், அதனால் ஏற்படும் கஷ்டம், கோபம் அப்படியே என் மேல் வெறுப்பாகவும், கோபமாகவும் திரும்பும். அதனால் என்னுடைய தேவைகள் என்று எதையுமே கேட்காமல் என்னை நானே கட்டுப்படுத்திக்கொள்ளவும், இருப்பதை வைத்தே என் தினப்படி வாழ்க்கையை ஓட்டவும் கற்றுக்கொண்டேன். என் ஆயாவிடம் கூட அப்படித்தான் இருப்பேன்,. நமக்கு அவர்கள் செய்வது பெரிய விஷயம், இதில் என்னுடைய விருப்பம் என்று எதையும் கேட்கக்கூடாது என்று அவர்கள் செய்வதை சரி என்று சொல்ல பழக்கிக்கொண்டேன்.

இப்படி என் இயல்புக்கு அப்பால், மற்றவர்களை கவனித்து என்னை மாற்றிக்கொண்டதால், என்னுடைய விருப்பங்கள் எல்லாமே பின்னுக்கு தள்ளப்பட்டது, அதனால் கிடைக்கும் வெறுமையும், பாதிப்பும் இன்றும் எனக்கு இருக்கிறது என்பதற்கு யார் காரணம் என்று நீங்களே முடிவு செய்து க்கொள்ளலாம்.

குழந்தைகள் எல்லாமே குழந்தைகள் தான், அவர்களை ஒரே மாதிரியாக நம்மால் நடத்தமுடியவில்லை என்றால், அது கண்டிப்பாக அந்த குழந்தையை மனதளவில் பாதிக்கும். அந்த பாதிப்பு பாஸிட்டிவாகவும் மாறலாம், நெகடிவ்வாகவும் மாறலாம்.

2. பெண் குழந்தை என்னும் போது அந்த குழந்தைக்கு படிப்பை தவிர, கல்யாணம், அதற்கு பின் அந்த குழந்தைக்கு செய்ய வேண்டிய எல்லாமே நாம் தான் செய்ய வேண்டும், அதனால், அதன் கணக்கு வழக்குகளை போட்டு பார்த்து , அந்த குழந்தையின் மனநிறைவுக்கு நம்மால் அவற்றை வாழ்நாள் முழுதும் செய்ய முடியுமா என்று யோசித்துக்கொள்ளவேண்டும்.

3. அடுத்து சொத்து, நாம் சேர்த்து வைக்கும் நம்முடைய சொத்தை நம் குழந்தைக்கும், வளர்ப்பு குழந்தைக்கும் சரி சமமாக கொடுக்க நம் மனம் இடம் கொடுக்குமா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

4. நம் குழந்தைக்கு, இன்னொரு குழந்தை வளர்ப்பு குழந்தை என்று தெரிய வந்தால், வரும் விளைவுகளை சந்திக்க தயாராகவும், அதனால் வளர்ப்பு குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளை யோசித்து ப்பார்க்கவேண்டும்

5. சொந்த பந்தங்களை பற்றி இந்த விஷயத்தில் கவலைப்படவேண்டியது இல்லை. நாம் எல்லாவற்றிலும் சரியாக இருக்கும் பட்சத்தில், எப்படி அவர்கள் பிரச்சனை செய்தாலும், அவற்றை சரி செய்துவிட நம்மால் முடியும்.

6. நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத ஏற்ற தாழ்வுகளை நாமும், நம் குழந்தையும் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் மற்றொரு குழந்தையை அழைத்து வந்து அந்த குழந்தையை கஷ்டப்பட வைக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை.

இது நேரில் நான் பார்த்த ஒரு விஷயம், நன்றாக போய் கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் அந்த குடும்ப தலைவரின் தவறான சகவாசத்தினால், சொத்து சுகம் இழந்து நடுவீதியில் நிற்க நேரிட்டது, அப்போது அந்த குடும்பத்தலைவி எங்களிடம் சொன்னது, இந்த வளர்ப்பு குழந்தை மட்டும் இல்லை என்றால், எப்படியோ ஒரு வேலை சாப்பிட்டு நான் பிழைத்துக்கொள்வேன். இப்போது இந்த குழந்தை எனக்கு பாரமாக உள்ளது என்றார்கள். இது அவர்கள் சொந்த குழந்தையாக இருந்தால் சொல்லி இருப்பார்களா என்றால் நிச்சயமாக இருக்காது.

ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகள் அவர்களை போலவே சக குழந்தைகளுடன் வளரும் போது அவர்களுக்கு எந்த காம்ளக்ஸும் இருக்காது. ஆனால் இப்படி வெளியில் வரும் போது தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து கஷ்டப்பட்டு கொள்வார்கள், எனக்கு தெரிந்து வெளியிலும் சொல்லமாட்டார்கள். நான் ஒரு முறை தாம்பரத்தில் உள்ள ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு சென்றிருந்தேன். அங்கே வளரும் குழந்தைகள், நன்றாக படித்து மிக பெரிய அளவில், அதிகாரத்திலும், வேலையிலும் இருப்பதை பார்த்தேன். அதிலும் அந்த குழந்தைகளுக்கு அவர்கள் நல்ல இடமாக பார்த்து திருமணம் கூட செய்து வைக்கிறார்கள், எனக்கு அங்கு சென்று அவர்களுடன் நேரம் செலவிட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது, அவர்களுக்கு என்ற வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்.

ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகளை எடுத்து வந்து வளர்த்து, அவர்களும் கஷ்டப்பட்டு நாமும் கஷ்டப்பட்டு, ஒரு நாள் இல்லை ஒரு நாள், சே இந்த குழந்தையை ஏன் தான் தத்து எடுத்தோமோ என்று நாமும், ஏன் தான் இங்கு வந்தோமோ என்று அந்த குழந்தையும் நினைக்கும் படி இல்லாமல் இருந்தால் நலம். எடுத்து வளர்ப்பதை விடவும், தனியாக ஒன்று என்ன நிறைய குழந்தைகளுக்கு பணம் கொடுத்து அவர்களுக்கு உதவலாம், பிறந்தநாள், பண்டிகை நாட்களில் அவர்களுடன் சென்று நேரத்தை செலவிடலாம், செலவிட்டு பாருங்கள் எத்தனை சந்தோஷப்படுகிறார்கள் என்று உங்கள் மனதளவில் உணர்வீர்கள்.

அணில் குட்டி அனிதா : ம்ம்.. என்ன சொல்றீங்க.... வேண்டாம் னு சொல்றீங்களா.. ஏன் கவி.. ஏதோ ஒரு குழந்தைக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சா ..உங்களுக்கு பொறுக்கலையா? ..

பீட்டர் தாத்ஸ் : “Poetry is an orphan of silence. The words never quite equal the experience behind them.”