மே 5, 2009 உலக ஆஸ்மா தினமாக கொண்டாடப்படுகிறது. இதில் வலியுறுத்தும் மிகமுக்கியமான விஷயம், ஆஸ்மாவினை கட்டுப்படுத்த முடியும். என்பதே.

ஆஸ்மா சுவாசக்குழாயில் ஏற்படும் அடைப்பின் காரணமாக வரும் நோய், சிறுவயதில் எங்கள் வீட்டில் குடியிருந்த பத்ரி யை பார்த்து இருக்கிறேன். எப்போதும் ஒரு குழாயைவாயில் வைத்து ஊதி ஊதி சுவாசத்தை சரி செய்வார். அது எனக்கு அப்போது ஒரு வேடிக்கையாக மட்டுமெ இருந்தது அதன் வலி தெரியாது.

திருமணம் ஆனப்பிறகு "ஆதிஅந்த " த்தை பார்த்து தெரிந்து கொண்டேன். இது குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் தொடர்ந்து வரும் என்றும் சொல்லுவார்கள், ஆதிஅந்தத்திற்கு " அவரின் கணவரின் மூலம் வந்ததாக சொன்னார்கள். இரவும் பகலும் அவர் படும் கஷ்டத்தை பார்த்து இருக்கிறேன். இரவில் மூச்சுவிடமுடியாமல் எழுந்து உட்கார்ந்து இருப்பார்கள், எனக்கு ரொம்பவும் பார்க்கவே பாவமாக இருக்கும். அவர்கள் விடும் மூச்சும் ஒருவித சத்தத்தோடு இருப்பதால் அவர் படும் கஷ்டத்தை நன்றாக அறிய முடியும்.

போன வாரத்தில் தான் ஆதிஅந்ததின் நினைவு நாள் வந்தது. ஆதிஅந்தம் கடைசி காலத்தில் என்னிடத்தில் வந்து இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதாக, அவர்கள் இறந்த பிறகு என் சொந்தங்கள் எனக்கு சொல்லியது மிகவும் கஷ்டமாகவும், மன வேதனையையும் அளித்தது. அழைத்து வந்து இருக்கலாமே என்று இன்றளவும் மனது அடித்துக்கொள்ளும். அவருக்கு போதிய சிகிச்சை கொடுத்து இருந்தால், இன்னுமும் அவர்கள் எங்களுடன் நிறைய ஆண்டுகள் இருக்க செய்து இருக்கலாமே என்று் நினைப்பதுண்டு. அவர்கள் இறந்து போனதும் ஆஸ்மா' நோயின் தீவிரம் தான். அவர் இறந்த போது நாங்கள் அகமதாபாத் நகரில் இருந்ததால், என்னால் செல்ல முடியவில்லை. என் கணவர் மட்டுமே செல்ல முடிந்தது. கடைசியில் அவரை பார்க்காததால் இன்று வரையில் அவர் இறந்துவிட்டதாகவே எனக்கு தோன்றாது.

இன்று உலக ஆஸ்மா தினம் மட்டுமல்லாது, ஆதி அந்தம் நினைவாக ஆஸ்மாவால் பாதிக்க பட்டவர்களுக்காக இந்த பதிவு.

ஆஸ்மாவை பற்றிய விளக்கங்கள் இந்த World Asthma Day (WAD) மிக தெளிவாகவும், விபரமாகவும் ஒவ்வொரு நாட்டவர்களுக்காகவும் தனித்தனியாகவும் கொடுத்து இருக்கிறார்கள்.

ஆஸ்மாவை கட்டுப்படுத்த சில கீரை/மூலிகை உணவுகள் :-

தூதுளை - இந்த கீரையை முற்களை அகற்றி நெய்யில் பொறித்து மிளகு த்தூள் தூவி சுட சாதத்தில் பிசைந்து தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சு கபம், சளி அறவே நீங்கும். பருப்பு போட்டும் கடைந்து சாப்பிடலாம். இந்த கீரை உடம்புக்கு சூடு என்பதால் நெய் சேர்த்து ஆயா எனக்கு கொடுப்பார்கள்.

ஆடாதொடை :- இது மருந்து, ரொம்பவும் கசக்கும். சமைத்து எல்லாம் சாப்பிட முடியாது. கஷாயம் வைத்து தருவார்கள். செய்முறையும் தெரியாது என் அத்தை அவரின் பேரக்குழந்தை ஆஸ்மாவால் அவதி படுகிறான் என்று அடிக்கடி செய்து கொடுப்பார்கள். அதனால் இதை தெரிந்துக்கொண்டேன்.

துளசி : இதை தினமும் சாப்பிட்டு வரலாம்

கற்பூரவல்லி செடி இலைகள் :- இதை பச்சையாகவே துளசியை போல் சாப்பிடமுடியும், கொஞ்சம் காரம் இருக்கும். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவார்களா என்று தெரியாது. இந்த இலைகளை கொண்டு பஜ்ஜி செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். (சாதாரண வாழைக்காய் பஜ்ஜி செய்யும் முறைதான்)

இது தவர்த்து ரொம்பவும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருக்கவேண்டும், தூசி தான் இவர்களுக்கு முதல் எதிரி, அதனால், வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது, நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளும் இவர்களுக்கு அலர்ஜி, புகை, ரொம்பவும் இருட்டான காற்றுவசதி இல்லாத இடம் எல்லாம் உகந்தவை அல்ல. பொதுவாகவே வீட்டில் நல்ல இயற்கை வெளிச்சமும், இயற்கை காற்றும் இருந்தால் யாருக்குமே எந்த நோயும் வராது. கதவு , சன்னல் அப்படி அமைய பெற்ற வீட்டில் இவர்கள் இருப்பது நல்லது. குளிர்ச்சி தரும் உணவுகளை குறைத்து க்கொள்ள வேண்டும். இரவு உணவு விரைவில் சாப்பிட்டு விடவேண்டும். 6.30 -7 மணிக்குள் சாப்பிட்டு விட்டால் நலம். தூங்கும் போது பிரச்சனை இருக்காது. புகைப்பழக்கம் கூடவே கூடாது. சுத்தமாக தலையணை, பெட்ஷீட் போன்றவை உபயோகித்தல் ரொம்பவும் நலம்.

ஆதிஅந்தம் :- ஆதிலட்சுமி அம்மாள் - என்னுடைய மாமியார். அவரை எப்போதும் ஆதிஅந்தம் என்று அழைத்தே பழக்கப்பட்டு விட்டேன். நவீனையும் சில சமயம் அப்படி அழைப்பத்துண்டு. அவருடைய முகச்சாயலும், செயல்களும் சில நேரங்களில் ஆதி அந்தத்தை நினைவு படுத்தும். நல்ல மாமியார், இவரிடம் நிறைய சமையல் குறிப்புகள் நான் கற்றுக்கொண்டேன். (குறிப்புகள் மட்டுமே). சின்ன மருமகள் இவர்களுக்கு ரொம்பவும் செல்ல மருமகள் (அட நாந்தாங்க!!) அவர்களுக்கு தேவையானதை செய்ய நினைத்திருக்கிறேன், செய்திருக்கிறேன். கடைசி காலத்தில் என்னிடம் வந்து இருக்க வேண்டும என்று அவர்கள் நினைத்தது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது. ஆதிஅந்தத்திடம் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் கையில் இருப்பதை வைத்து தன் குடும்பத்தை நடத்தியவர், யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காதவர் (என்னையும் சேர்த்து அவருக்கு 5 மருமகள்கள்) , யாரிடமும் எந்த கெட்ட பெயரையும் வாங்காதவர். இது ரொம்பவும் கஷ்டமான விஷயமல்லவா? யாருமே அவரை குறை சொல்லி நான் பார்த்தது இல்லை. பொதுவாக She is A Good Human Being.

அணில் குட்டி அனிதா :ம்ஹூம் எந்த ஊர்ல நடக்கும் இப்படி மாமியாருக்கு பெட் நேம் வச்சி கூப்பிடறது எல்லாம்... ??!! அம்மணிக்கு இருக்கிற திமிரு யாருக்கும் இருக்காதுடா சாமியோவ்.. என்ன ஒரு பயமில்லாத்தனம் !!.. ம்ம்ம்ம்..... !!! டிஸ்டென்ஸ் மெயின்டெயின் செய்யறது ஈஸ் ஆல்வேஸ் பெட்டர் வித் திஸ் லேடி..!!

பீட்டர் தாத்ஸ் :- Asthma is treatable and well can be controlled