இப்படிப்பட்ட விஷயங்கங்கள் தங்கள் வீட்டு பெண்களுக்கு நடக்கவே கூடாது என்று ஆண்கள் முடிவுசெய்ய வேண்டும். கணவன் இறந்தபின் பெண்களுக்கு செய்யும் சம்பரதாயம் என்ற பெயரில் பெண்களுக்கு உறவினர்கள் செய்யும் கொடுமைகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

எங்களது வீட்டில் என்னுடைய சித்தியை (அப்பாவின் தம்பி மனைவி) நான் நினைவு தெரிந்து சித்தப்பா இல்லாமல் தான் பார்த்தேன். நான் குழந்தையாக இருக்கும் போதே சித்தப்பா விபத்தில் இறந்து போனார். ஆனால் என்னுடைய ஆயா (சித்தியின் மாமியார்) என் சித்தியை ஒரு அபசகுகனமாக பார்த்தே இல்லை, நடத்தியதே இல்லை. அதனால் எங்களுக்கும் அப்படி ஒரு நினைவு இருந்ததே இல்லை. வீட்டு திருமணங்களில் எல்லாவற்றிலும் என் சித்தியும் பெண், மாப்பிள்ளைக்கு நலங்கு வைப்பார்கள், மற்ற பெண்களுக்கு கொடுக்கப்படும் அத்தனை மரியாதைகளும் அவருக்கும் கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு குடும்ப சூழலில் வளர்ந்து, இப்படிப்பட்ட கொடுமைகளை பார்த்திராத, வெளி உலக நடப்பு தெரியாத எனக்கு இவை எல்லாம் தெரிய ஆரம்பித்தது என்னுடைய குடும்பம் என்று வந்த பிறகே. மருமகளாக இன்னொரு வீட்டுக்கு சென்ற பிறகு, அங்கே கணவனை இழந்த பெண்களுக்கு நடக்கும் சாங்கியங்கள்.. அக்கம் பக்கம் நடக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் இறந்தபோது, தீடீரென்று ஒருநாள் "முகம் பார்க்க வாங்க" என்று அழைத்தார்கள். அப்படி என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது, சரிங்க வரேன் என்று சொன்னேன் போகவில்லை. திரும்பவும் "வந்து காத்திருக்காங்க வாங்க "என்றார்கள். யார் எதுக்காக காத்திருக்காங்க எனக்கு புரியவில்லை. பக்கத்துவிட்டில் கேட்டேன்..உங்களை அழைத்தார்களா? யார் முகத்தை பார்க்கனும்.. அவர்கள் தயக்கத்துடன்..சும்மா பிரியாவோட அம்மாவை பார்த்துவிட்டு வந்துடுங்க' என்றார்கள். போய் தான் பார்ப்போமே என்று போனேன். அவரை ஒரு ரூமில் உட்காரவைத்திருந்தார்கள், எதிரில் ஒரு தட்டில் அட்சதை, குங்குமம், பால் எல்லாம் இருந்தது. எனக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. உடனே ஒரு அம்மா வந்து..போய் அவங்க முகத்தை பார்த்துவிட்டு குங்குமம் வாங்கிக்கோங்கம்மா.. என்றார்கள். அவரை நேருக்கு நேராக பார்க்கும் போது தான் அவரை இப்படி பூவும் பொட்டுமாக நான் பார்ப்பது இது தான் கடைசிமுறை என்றே எனக்கு புரிந்தது. கண்கள் குளமாகி என்னை அவர்கள் பார்த்தபோது அடிவயிற்றில் இருந்து ஒரு சொல்லமுடியாத துயரம், பயம் என்னை கவ்வியதை உணர்ந்தேன். எனக்கு குங்குமம் கொடுத்தார்கள். வாங்கியவுடன் ஓடிவந்து விட்டேன். இன்னொரு முறை இப்ப்டி செய்யவே கூடாது என்ற முடிவுடன் இருந்தேன்.

ஆனால் அப்படி யாரும் விட்டுவிடவில்லை, சொந்த மூத்தார் இறந்தபோது அவரின் மனைவிக்கும் இப்படி நடந்தது. இது மட்டுமல்ல என்னென்னவோ நடந்தது. என் கணவர் தான் புடவை வாங்கி போடவேண்டும் என்றார்கள். அதுவரை அமைதியாக அழுதுக்கொண்டு இருந்த அந்த அம்மா என் கணவர் தன் கையால் அந்த புடவையை கொடுத்தவுடனே.. "ஐயோ...நீயும் என்னை இப்படி செய்யறேயேப்பா" என்று கதறியது.. இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. வீட்டிற்கு வந்தவுடன் என் கணவருடன் ஒரே சண்டை.. ஏன் இப்படி செய்தீங்க. அது சாங்கியம் என்றால், யாரிடமாவது கொடுத்து செய்து இருக்கலாம், அந்த வினாடி அந்த அக்கா உங்களை எப்படி மனதார சபித்திருப்பார்கள், இது நமக்கு தேவையா? ஏன் அந்த பெண்ணின் சாபத்தை நீங்கள் வாங்கிக்கொள்கிறீர்கள் என்று கேட்டேன். மிக நிதானமாக-உன் பேச்சு, உன் சிந்தனை,எந்த மண்ணாங்கட்டியும் அங்கிருப்பவர்களுக்கு புரியாது, நான் அவரின் தம்பி, அண்ணிக்கு நான் தான் அதை செய்யவேண்டும் என்று பெரியவர்கள் சொன்ன பிறகு அதை மாற்றி என்னால் பேசமுடியாது பேசவும் கூடாது என்று சொல்லிவிட்டார். என்னால் இதற்கு மேல் என்ன செய்யமுடியும் என்று தெரியவில்லை. என் கணவரின் செயல்களையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை அதற்கான காரணக்காரியங்கள் சொல்லப்படுகின்றன.

இப்படி வழிவழியாக இதை இவர் தான் செய்யவேண்டும், இந்த பெண்கள் இப்படி ப்பட்ட கொடுமைகளை அனுபவித்து தான் ஆகவேண்டும் என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்குமா? என் பிறந்தவீட்டில் என்னுடைய ஆயாவும் தாத்தாவும் எங்கள் வீட்டு பெண்ணிற்கு இப்ப்டி நடக்ககூடாது என்று எங்களையெல்லாம் வளர்த்தது போல் எல்லோர் வீடுகளலும் அப்படி பெண்கள் மனம் நோகாமல் நடத்துவார்களா? சாங்கியம் சம்பரதாயம் எல்லாம் நாம் நடத்துவதுதானே...? அதை நாமே மாற்றி அமைக்கக்கூடாதா?

கணவனை இழந்த பெண்ணை பிணத்திற்கு சமமாக நடத்தும் நம் சம்பிரதாயங்கள் அவசியமா? அந்த பெண்ணுக்கும் உணர்ச்சிகள், மனம், ஆசைகள் என்று எல்லாமே இருக்கிறதே..?!! அதை யாருமே யோசிப்பது இல்லையா? அந்த பெண்ணின் பாதத்தில் நின்று யாராவாது அந்த வேதனையை உணர்ந்து இருக்கிறீர்களா?. பெண்ணிற்க்கு அவளின் பொட்டை அழிப்பது கூட உங்களுக்கு எல்லாம் ஒரு துக்க விழாவா ?? இவை எல்லாம் அவசியம் தானா?
தயவுசெய்து உங்கள் வீட்டிலோ அக்கம் பக்கத்தில்லோ இப்படி நடந்தால் எதிர்த்து குரல் கொடுங்கள்... குரல் எழுப்ப எழுப்பத்தான் நிற்கும்..

அணில்குட்டி அனிதா:- கவீஈஈஈஈஈஈ... கூல்ல்ல்ல்ல்..!!

பீட்டர் தாத்ஸ் : ஆண்களே உங்கள் வீட்டு பெண்கள் எப்படி நடத்தப்படவேண்டும் என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.!!